சாலைக் காட்சிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாலைக் காட்சிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 15 பிப்ரவரி, 2020

காஃபி வித் கிட்டு – ஆத்மாவின் குரல் - கரோனா - ஹர்யானாவின் இசை - சாண்டா க்ளாஸ் அலைபேசி எண்


காஃபி வித் கிட்டு – பகுதி 54

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

வெற்றியின் வாசல் தேடி வந்தவர்கள் நிச்சயம் ஆயிரம் தோல்விகளிடம் விலாசம் கேட்டு இருப்பார்கள்.  

வியாழன், 19 செப்டம்பர், 2019

இதை மட்டும் செய்யாதீங்க ப்ளீஸ்…


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை சமீபத்தில் படித்த ஒரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

”என்னை ஏன்னு கேட்க ஆளே இல்லை”! – இந்த வாக்கியம் வயதுக்கு ஏற்ப மாறும்… இளமையில் கர்வமாக! முதுமையில் பரிதாபமாக!

சனி, 23 டிசம்பர், 2017

தலைநகரில் தமிழகக் குடிமகன்கள் - நான் செய்தது சரியா தவறா


இவர்கள், அவர்களல்ல!
படம்: இணையத்திலிருந்து....

அலுவலகத்திலிருந்து சமீபத்தில் ஒரு நாள் இரவு எட்டு மணிக்கு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். எங்கள் வீட்டினருகே இருக்கும் ஒரு சாலையில் தொடர்ந்து அரசு நடத்தும் மூன்று சரக்கு/சாராய விற்பனை நிலையங்கள். காலை பத்து மணிக்குத் திறந்தால் இரவு ஒன்பது, ஒன்பதரை மணி வரை தொடர்ந்து திறந்திருக்கும் – எப்போதும் இந்தக் கடையில் மட்டும் நுகர்வோர் கூட்டம் அதிகமாகவே இருக்கும்! வாசலிலேயே சில கடைகள் – காரசாரமாக மிக்ஸர் விற்பவர்கள், ஆம்லேட் விற்பவர்கள் என அனைவருக்கும் இந்த இடம் ஏதோ ஒரு விதத்தில் வாழ்க்கையை ஓட்ட உதவுகிறது. இவை போதாதென்று இக்கடைகளுக்கு அருகிலேயே அசைவ உணவு வகைகள் விற்கும் கடைகளும் உண்டு.

செவ்வாய், 25 ஏப்ரல், 2017

தேரடி வீதியில்... - திருவரங்கம் சித்திரைத் தேர் 2017


வாங்க வாங்க...  தேர் பார்க்க வந்தீங்களா?
நானும் தேர் பார்க்கதான் வந்தேன்... என்ன மொட்டை அடிச்சுட்டாங்க!

சனி, 22 ஏப்ரல், 2017

நடு ரோட்டில் பஸ்கி!


சாலைக்காட்சிகள் - 19


இவர் அவரல்ல....
படம்: இணையத்திலிருந்து...

ஞாயிறு, 4 டிசம்பர், 2016

சாலைக் காட்சிகள் – கழுதை வண்டி இழுக்குமா?


நம் ஊரில் மாட்டு வண்டி பார்த்திருக்கிறோம், குதிரை வண்டி கூட பார்த்திருக்கிறோம். ஆனால் கழுதை வண்டி பார்த்ததுண்டா? கழுதை பொதி சுமக்க மட்டுமே பயன்படும் என்று தான் நம்மில் பலரும் அறிந்திருக்கிறோம். இல்லை கழுதையை வைத்து வண்டி கூட இழுப்பார்கள் என சமீபத்தில் தான் தெரிந்து கொண்டேன். அப்படி சாலையில் பார்த்த சில காட்சிகள் புகைப்படங்களாக, இன்றைய ஞாயிறில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்….

படம்-1
அம்மணி, எவ்வளவு நேரம் பேசிக்கிட்டே நிப்ப, சீக்கிரம் முடி, வூட்டுக்குப் போவலாம்!


படம்-2
மாயமில்ல, மந்திரமில்ல… தானா கொட்டுது பாரு தண்ணி!
ஒரு சந்திப்பில் பார்த்த காட்சி!


படம்-3
நீங்க ரோடு போட்டுட்டா, அது என்ன உங்களுக்கு மட்டும் தான் சொந்தமா… நாங்களும் நடப்போம்ல!


படம்-4
தண்ணீர் சுமந்து வரும் பெண்….  கேமரா பார்த்து முகம் மூடிக்கொண்டார்!


படம்-5
ஆட்டுக்குத் தீனி…  சுமப்பது மனிதன்…..


படம்-6
ஒட்டக சவாரி போலாமா…..


படம்-7
ஐயோ என்ன ஃபோட்டோ புடிக்கிறானே…  நான் என்ன பண்ணுவேன்….


படம்-8
”நீ சுகமா தூங்கிட்டு வருவே….  நான் மட்டும் கஷ்டப்படணும்….
எல்லாம் என் தலைவிதி!” என நினைத்தபடிச் செல்கிறதோ இந்த ஒட்டகம்….


படம்-9
ரயில்வே க்ராஸிங் ஒன்றில் காத்திருந்தபோது….
இழுக்க இழுக்க இன்பம் இறுதி வரை….


படம்-10
ஆட்டு மந்தையும் அதன் உரிமையாளரும்….


படம்-11
இடம் பெயரும் குடும்பம்….. மொத்த உடைமைகளும் மேலே, ஆடு உட்பட!


படம்-12
நீங்க மட்டும் தான் கலர் கலரா ட்ரெஸ் போட்டுக்குவீங்களா…. 
நானும் போடுவேன்ல!


படம்-13
பெட்ரோல் காலியானா, நிப்பாட்ட வேண்டியது தான்…
அதுக்கு தான் கழுதை வண்டி வச்சிருக்கணும் மாப்பு….


படம்-14
மாட்டு மந்தை, ஆட்டு மந்தை பார்த்திருக்கலாம்… ஒட்டக மந்தை….  பாருங்க!


படம்-15
நான் உன் பேச்சு கா…..
சொல்லி வேறு வேறு பக்கம் பார்த்துக் கொண்டிருக்கும் ஒட்டகங்கள்…


படம்-16
”என் கால் முட்டி அளவு கூட இல்லை இந்தப் பொடியன்….
அவன் என்னை வேலை வாங்கறானே…..”
யோசனையில் ஒட்டகம்….


படம்-17
வண்டிகள் காத்திருக்கிறது…
பயணிக்கத்தான் ஆளில்லை!
நீங்க ஒரு ரவுண்டு வரீங்களா?


படம்-18
என்ன தான் பயணம் இனிமையானது என்றாலும் கவனம் தேவை என்பதைச் சொல்லும் காட்சி…..


படம்-19
கழுதை வண்டி…
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்….
முன்னும் பின்னும் கழுதை!


படம்-20
என்னவே என்னைய கூட ஃபோட்டோ பிடிக்கிறயே…. 
கவனித்த லங்கூர் குரங்கு!

என்ன நண்பர்களே, இன்றைய தொகுப்பில் நிறைய படங்கள் பயணித்தபடியே எடுத்தவை. வேறு சில சாலைக்காட்சிகளோடு உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். உங்களுக்குப் பிடித்த படங்கள், படங்கள் பார்த்தபோது உங்களுக்கு என்ன தோன்றியது என்பதை எழுதி அனுப்புங்களேன்….

தொடர்ந்து ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

செவ்வாய், 3 மே, 2016

ஐஸ்க்ரீம் அலப்பறைகள்

படம்: இணையத்திலிருந்து....

ஐஸ்க்ரீம் யாருக்குத் தான் பிடிக்காது? என் நண்பர் ஒருவருக்கு விதம் விதமான ஐஸ்க்ரீம் சாப்பிட விருப்பம் இல்லை. குச்சி ஐஸ் இருந்தால் போதும். ஆனால் அதில் ஒரு கண்டிஷன் கூடவே உண்டு! ஒன்று போதாது! ஒன்றுக்குப் பின் ஒன்றாக குறைந்தது இரண்டு குச்சி ஐஸாவது சாப்பிட வேண்டும்.  அதற்கு மேலும் சாப்பிடலாம் – தவறில்லை என்பது அவரது எண்ணம்.

படம்: இணையத்திலிருந்து....

தில்லியில் Mother Dairy, Vadilal, Amul, Kwality Walls, Nirulas என விதம் விதமாக ஐஸ்க்ரீம்கள் கிடைத்தாலும், தள்ளு வண்டிகளில் வைத்திருக்கும் குல்ஃபிக்கு இருக்கும் வரவேற்பு சற்றே அதிகம்.  வகை வகையான குல்ஃபிக்களை அதன் குப்பிகளில் இருந்து வெளியே எடுத்து குச்சியில் ஒரு Tissue சுற்றி கொடுப்பார் தள்ளுவண்டிக்காரர். இரவு உணவு உண்டபிறகு காலாற ஒரு நடைநடக்கும் பலர்   இந்த குல்ஃபி ஐசை ருசித்தபடியே உலாத்துவதை நீங்கள் பார்க்க முடியும்.

நேற்று திருவரங்கத்தில் இருக்கும் ஒரு அருண் ஐஸ்க்ரீம் பார்லருக்கு சென்றிருந்தேன் – திருவரங்கம் வரும்போதெல்லாம் அங்கே குடும்பத்துடன் செல்வது வழக்கம். அங்கே எங்களுக்கு முன்னதாக ஒரு அம்மாவும் அவரது மகனும் இருந்தார்கள்.

மகன் கையில் ஒரு அரை கிலோ Blackcurrant டப்பி! ஒற்றை ஆளாக அடித்து விளையாடிக் கொண்டிருந்தார்.  நடுவிலே புறையேற அம்மா கையில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலிலிருந்து தண்ணீரை புகட்டி நெஞ்சைத் தடவிக் கொடுக்க, மகன் நடுநடுவே ஐஸ்க்ரீமை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தார். “எதுத்துக்கிட்டு வந்தாலும், நான் உன்னை விட மாட்டேன்!”  என்று அதகளம்!


 படம்: இணையத்திலிருந்து....

நான் கடைக்காரரிடம் எங்களுக்குத் தேவையானவற்றை – ஒரு சண்டே, ஒரு கசாட்டா மற்றும் ஒரு இடாலியன் டிலைட் – சொல்லி வாங்கிக்கொண்டேன்.  அட்டைப் பெட்டிக்குள் இருந்த கசாட்டாவைப் பிரிக்கு முன்னரே இது எப்படி இருக்கும்?என்ற கேள்வியை என்னிடம் எழுப்பினார். பதில் ஏதும் சொல்லாது, அட்டையைப் பிரித்து மகளிடம் தந்தேன்.  கசாட்டாவைப் பார்த்த பின்னர் அந்தப் பெண்மணி “அட இது இப்படி இருக்குமா? நடுநடுவில ஐஸ்க்ரீம் இருக்குமா? என பல கேள்விகளை எழுப்பினார்.  கூடவே மற்ற இரண்டையும் பற்றிய கேள்விகளும் வந்தன. 


அங்கே சத்தமில்லாமல் மகன் ஐஸ்க்ரீமை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தார். அரை கிலோ ஐஸ்க்ரீம் – சிறிய ஸ்பூனில் எடுத்துச் சாப்பிட்டால் கொஞ்சம் நேரம் ஆகத்தானே ஆகும்? அதற்குள் ஐஸ்க்ரீம் உருகி இருந்தது. நடுநடுவே ஸ்பூனிலிருந்து சில சொட்டுகள் சிறுவனின் சட்டையில் விழ, அம்மா அதனை வழித்தெடுத்து மகனின் வாயில் அப்பிக் கொண்டிருந்தார். குழி இல்லாத தட்டை ஸ்பூனால் அதைச் சாப்பிடுவது கடினமாக இருந்தது அச்சிறுவனுக்கு.  சிறுவனின் அம்மாவிடம் அதற்கும் வழி இருந்தது. அப்படியே டப்பாவின் ஓரத்தில் வாயை வைத்து குடித்துவிடடா மகனே என்று சொன்னார். 

மகனும் அப்படியே செய்து முடிக்க, டப்பாவில் கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருந்த கருப்பு மின்சாரத்தை விட்டுவிட மனசில்லை அம்மாவுக்கு! இருக்கவே இருக்கு கையில் தண்ணீர் பாட்டில். அதிலிருந்து ஐஸ்க்ரீம் டப்பாவில் கொஞ்சம் தண்ணீர் விட்டு ஒரு கலக்கு கலக்கி அதையும் மகனுக்கு புகட்டி விட்டார்! கடைசியாக டப்பாவில் சில திராட்சைத் துண்டுகள் டப்பாவின் அடியில் கிடக்க, கையை விட்டு அவற்றை எடுத்து மகனுக்கு ஊட்டி விட்டார். டப்பா சுத்தமாச்சு! ஐஸ்க்ரீமும் வீணாகல!  In fact, ஐஸ்க்ரீம் இருந்த அடையாளமே இல்லாமல் போனது!

பிளாஸ்டிக் டப்பாவையும் அவர் விட்டுவிடவில்லை.  அது அவரின் மஞ்சள் பைக்குள் அடைக்கலமானது! இன்னும் பல நாட்களுக்கு அவர் வீட்டில் அந்த ஐஸ்க்ரீம் டப்பா இருக்கும். ப்ளீஸ் என்னை விட்டு விடேன் என்று கதறினாலும் கதறலாம்!

இந்த அலப்பறைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாலும், நாங்கள் மூவருமே ஐஸ்க்ரீம் சாப்பிட்டு முடித்து வெளியே வந்தோம். அதன் பிறகு தான் அவர்கள் வெளியே வந்தார்கள் – சைக்கிளைத் தள்ளிக் கொண்டு எங்கள் பின்னாலேயே வர – அவர்கள் பேச்சைக் கேட்க முடிந்தது! அடுத்த கடையில் – ஜூஸ் கடை – பார்த்த உடனே அம்மா மகனிடம் கேட்டது “ஜூஸ் சாப்பிடறயா கண்ணு?

“Please give me a break” மகனின் வயிறு அலறியது தேர்தல் பிரச்சாரத்தினையும் மீறிக் கேட்ட உணர்வு!

வேறொரு பதிவுடன் உங்களைச் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
திருவரங்கத்திலிருந்து.....


டிஸ்கி: எங்கே இத்தனை நாட்களாக பதிவுலகம் பக்கம் காணவில்லையே என அன்புடன் விசாரித்த நண்பர்களுக்கும், மனதில் நினைத்துக் கொண்ட நண்பர்களுக்கும் நன்றி.  இனிமேலும் காணாது போக இருக்க வேண்டும்!

சனி, 30 ஜனவரி, 2016

குடிமகனே[ளே].... பெருங்குடிமகனே[ளே].....

படம்: இணையத்திலிருந்து......

சமீபத்திய நீயா நீனா நிகழ்ச்சியில் பெண்கள் மது அருந்துவது குறித்த ஒரு பெண்ணின் பேச்சு வலையுலகிலும், ஊடகங்களிலும் நிறைய சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. அது பற்றி சில பதிவுகளும் வந்திருக்கின்றன.

இந்த நிகழ்ச்சியினை மட்டுமல்ல, பொதுவாகவே நீயா நானா நிகழ்ச்சிகள் பார்ப்பதில்லை – For that matter, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எதுவுமே பார்க்க முடிவதில்லை – நேரப் பற்றாக்குறை மிக முக்கிய காரணம். கிடைக்கும் கொஞ்ச நேரமும் வலைப்பதிவுகள் படிப்பதற்கும், என்னுடைய பதிவுகள் எழுதுவதற்கும் சரியாக இருக்கின்றன. அதனால் அந்நிகழ்ச்சி பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. இப்பதிவில் நாம் பார்க்கப் போவது கடந்த இரண்டு வாரங்களில் தமிழகத்தில் இருக்கும்போது பார்த்த சில சாலைக் காட்சிகளைத் தான் இங்கே பார்க்கப் போகிறோம்.

காட்சி-1புதுகை புதிய பேருந்து நிலையம்

பேருந்து நிலையங்களில் இருக்கும் கழிவறைகள் நிலை பற்றி சொல்லவே வேண்டாம் – சுத்தம் என்றால் கிலோ என்ன விலை என்ற நிலை தான் இந்தியா முழுவதுமே......  காசு வாங்கினாலும், கழிவறைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் எனும் எண்ணம் அவற்றை நிர்வகிக்க குத்தகை எடுத்திருப்போர்களுக்குக் கொஞ்சம் கூட இல்லை. கழிவறைகள் இருக்கும் இடத்திலிருந்து 100 மீட்டர்கள் தூரம் வரை அவற்றின் நாற்றம் வரும் நிலை தான். அங்கே இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்கே பிரம்மப்பிரயத்தனம் செய்ய வேண்டும் – வேறு வழியில்லை என்பதால் தான் அங்கே செல்ல வேண்டியிருக்கிறது. 

அங்கே முகத்தில் கர்ச்சீப் கட்டிக் கொண்டு உள்ளே சென்றபோது பார்த்தால் ஒவ்வொரு இடத்திலும் சாராய பாட்டில்கள்...  மூத்திரம் கழிக்கும்போதே போதை ஏற்றிக்கொள்ளும் குடிமகன்கள் – எப்படித்தான் முடிகிறதோ?  என்னதான் போதைக்கு அடிமையாகிவிட்டாலும் இப்படியா?  ஒரு வேளை இந்த நாற்றத்தினை தவிர்ப்பதற்காகவே குடிக்கிறார்களோ?

தில்லியில் இருக்கும் ஒரு ஹரியானா நண்பர் சொல்வது நினைவுக்கு வருகிறது.....  அந்த நண்பர் எப்போதாவது குடிப்பது வழக்கம்.  அப்படிக் குடித்தால் வீட்டுக்குச் செல்வதற்கு முன்னர் நான்கு பூண்டுப் பற்களை பச்சையாகவே கடித்துத் தின்று விடுவார். பூண்டு வாசனையில் சாராய வாசனை குறைந்து விடும் எனும் நினைப்பு அவருக்கு. அப்படியும் அவர் வீட்டுக்குச் சென்றதும் அவர் மனைவி கண்டு பிடித்துவிடுவாராம். வீட்டுக்குள் நுழைந்ததும் கேட்கும் கேள்வி இன்னிக்கு திரும்பவும் மூத்திரம் குடிச்சுட்டு வந்துட்டியா?

காட்சி-2: திருச்சி மத்தியப் பேருந்து நிலையம்

நேற்று காரைக்குடி வரை செல்ல வேண்டியிருந்தது. அங்கிருந்து திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் வந்து இறங்கினேன்.  அங்கே நடைமேடையில் ஒருவர் வீழ்ந்து கிடந்தார். மடித்துக்  கட்டிய வேட்டி அப்படி ஒன்றும் அழுக்காக இல்லை. நன்றாகவே உடையணிந்து இருந்தார். வீழ்ந்திருந்த அவர், குடிபோதையில் தன் சுயநினைவில்லாது சிறுநீர் கழித்து ஒரு ஓடையாக ஓடிக்கொண்டிருந்தது. அவ்வப்போது உளறிக் கொண்டிருந்ததால் அவர் உயிருடன் இருப்பது மட்டும் தெரிந்தது.

தன் நிலை மறந்து இப்படி விழுந்து கிடக்கும் அளவிற்கு குடிப்பது அவசியமா? அவருடன் சேர்ந்து குடிக்க வந்த நண்பர்கள் அவரை இப்படி நடுவீதியில் விட்டுச் சென்றால் அவர்களது நட்பின் ஆழமா? இப்படி பல குடிமகன்களைக் காண்பதால் யாரும் அவரைப் பற்றி கவலை கொள்வதில்லை. அவரைக் கடக்கும்போது அவரை விட்டு விலகி நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள்.....  மனதிற்குள் நிச்சயம் அம்மனிதரைப் பற்றி கேவலமாக நினைத்துக் கொண்டுதான் கடந்திருப்பார்கள்.

காட்சி-3: திருச்சி டவுன் பஸ் ஒன்றில் பயணிக்கும் போது

நான் அமர்ந்திருந்த இருக்கைக்குப் பின்னிருக்கை. அமர்ந்திருந்தது இரண்டு இளைஞர்கள். தங்களது வீரப் பிரதாபங்களைப் பற்றியும் சொத்து விவரங்களைப் பற்றியும் சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். நடுநடுவே அவர்கள் எங்கெங்கே குடித்தார்கள், எவ்வளவு குடித்தார்கள் என்பது பற்றியும். அதில் ஒருவர் முதன் முதலில் குடிக்க ஆரம்பித்தது பற்றியும் சொன்னார். நானு, புலம்பல் பாண்டியன், அஃப்சல், பீட்டர் என அனைவரும் ரூமில் இருந்தோம். அவங்க மூணு பேரும் தண்ணி அடிக்க, நான் மட்டும் சும்மா இருந்தேன்.

அவங்க மூணு பேரும் என்னை ரொம்பவே கிண்டல் பண்ணாங்க, உடனே கோவம் வந்து, விஸ்கி பாட்டில் எடுத்தேன், மடக் மடக்குன்னு தண்ணி/சோடா எதுவும் கலக்காம ராவா குடிச்சு பாட்டில கீழே வைச்சேன். அதுக்கப்புறம் கொஞ்சம் தண்ணியை மேலாக குடிச்சேன். ஆடிப் போயிட்டாங்க மூணு பேரும்..... இதுக்குத் தான் இத்தனை கிண்டலான்னு தோணிச்சு.  கொஞ்சம் நல்லாவும் இருந்துச்சு. அதிலேருந்து குடிக்க ஆரம்பிச்சிட்டேன்.  இப்பல்லாம் வீட்டுல இருக்கும்போது வீட்டுக்குத் தெரியாம தண்ணி சொம்புல சரக்க மிக்ஸ் பண்ணி குடிச்சுடறேன்! சரி சரி, சத்திரம் பஸ் ஸ்டாண்டுக்கு புலம்பல் பாண்டியன் வரன்னு சொல்லி இருக்கான். அங்கே இறங்கி மூணு பேரும் சரக்கு அடிச்சுட்டு அப்புறமா மத்த வேலையப் பார்க்கலாம்.......

இப்படி நிறைய சாலைக் காட்சிகளை சொல்லிக் கொண்டே போகலாம்....  2015-ஆம் ஆண்டின் கடைசி நாள் – அன்று தில்லி நகரே கோலாகலமாக இருக்கும். இரவு எட்டு மணிக்கு அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். நடந்து வந்து கொண்டிருக்கும்போது என்னை உரசும்படி ஒரு மகிழ்வுந்து வந்து நின்றது. கண்ணாடிக் கதவுகள் கீழிறங்க, மகிழ்வுந்தில் நான்கு பெண்கள் – எனைக் கேட்ட கேள்வி – இங்கே பக்கத்துல Pub எங்கே இருக்கு?

இப்படி ஆணோ, பெண்ணோ மது அருந்துவது அவர்கள் உரிமை என்று சொன்னாலும், தொடர்ந்து மது அருந்தி தன்னை அழித்துக் கொள்வதோடு மட்டுமல்லாது தன்னை நம்பி இருக்கும் குடும்பத்தினரையும் அழித்து விடுகிறார்களே....  எப்போது உணர்ந்து கொள்ளப் போகிறார்களோ? மதுவெனும் அரக்கனை ஆண் அருந்தினாலும், பெண் அருந்தினாலும், அவை ஏற்படுத்தும் பாதிப்பு இருவருக்குமே உண்டு.  இதில் ஆண் என்ன பெண் என்ன?

தொடர்ந்து சந்திப்போம்......

நட்புடன்

வெங்கட்

திருவரங்கத்திலிருந்து......

சனி, 28 நவம்பர், 2015

நடுத் தெருவில் ஒரு ஃபோட்டோ ஷூட்!



சாலைக்காட்சிகள் என்ற தலைப்புடன் சில பதிவுகள் எழுதி இருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்! இத்தலைப்பில் பதிவுகள் எழுதி சில நாட்கள் ஆகிவிட்டன. கடைசியாக எழுதியது - ஓஹோ ஹோ கிக்கு ஏறுதே! எனும் பதிவு தான். இந்த இடைவெளியில் எத்தனையோ காட்சிகளைப் பார்த்திருந்தாலும், பகிர நினைத்தாலும் எழுதும் சந்தர்ப்பம் அமையவில்லை.  இப்போது சில காட்சிகளைத் தொகுத்து உங்களுடன் பகிர்ந்து கொளும் வாய்ப்பு!

காட்சி-1:

நேற்று இரவு அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியபோது மணி 08.30. உள்ளே நுழைந்து முதல் வேலையாக சமையல் – சிம்லா மிர்ச் சாதம் தான் மெனு! செய்து, சுடச்சுட சாப்பிட்டு ஒரு நடை நடக்க, கீழே இறங்கினேன். வீட்டின் அருகே ஒரு கல்யாணம் – [B]பராத் எனும் மாப்பிள்ளை ஊர்வலம் அப்போது தான் புறப்பட்டு போயிருந்தது. பின்னால் சிலர் வாகனங்களில் செல்ல தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

இங்கே ஒரு விஷயமும் சொல்லி ஆக வேண்டும் – தில்லியில் குளிர் ஆரம்பித்து விட்டது. கடும் குளிராக இருந்தாலும், திருமணத்திற்கு வரும் அனைத்து பெண்களும் ஜிகு ஜிகு ஜிகினா உடைகள் அணிந்து சால்வையை பெயருக்கு தொங்க விட்டுக் கொண்டு வருவார்கள் – ஆண்கள் கோட்-சூட்-பூட் என இருக்க, இப்பெண்களுக்கு குளிரே தெரியாது போலும். கூடவே ஆண் பெண் வித்தியாசம் இல்லாது நாத்த மருந்தை [Scent] நன்றாக அடித்துக் கொண்டிருப்பார்கள் – 10 மீட்டர் தொலைவு வரை அந்த வாசம் வரும்!  ஜனவரி மாதம் வரை தினம் தினமும் கல்யாணம் தான்! எனக்கு கூட இரண்டு கல்யாண விழாவிற்கு அழைப்பிதழ் வந்திருக்கு – ராத்திரி ஒன்பது மணிக்கு [b]பராத்! போனா, வீடு திரும்ப இரவு பன்னிரெண்டு அல்லது ஒரு மணி ஆகலாம்.... போகணுமா வேண்டாமான்னு யோசனை!

படம்: இணையத்திலிருந்து.....

அந்தக் குடும்பத்தினருக்கு வருவோம்! – கும்மிருட்டான ஒரு இடத்தில் நின்று கொண்டிருந்தார்கள். வாகனத்திற்கு அருகில், மாறி மாறி நிற்க, ஒருவர் மட்டும் விதம் விதமாய் அவருடைய அலைபேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். வெளிச்சமே இல்லாது, Flash-உம் இல்லாது புகைப்படம் எடுக்க, அந்தப் புகைப்படம் எப்படி வந்திருக்கும் என்பது அவருக்கே வெளிச்சம்! புகைப்படம் எடுத்துக் கொண்டவர்கள் அனைவரும் செய்த இன்னுமொரு விஷயம் – இருந்த ஒரே ஒரு கறுப்பு Cooling Glass-ஐ ஒவ்வொருவாக அணிந்து கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டது தான்! கும்மிருட்டில் கூலிங் கிளாஸ்!

காட்சி-2:

தில்லியின் ஒரு முக்கியமான சாலைச் சந்திப்பு. அதன் அருகே மூன்று காவலர்கள் – ஒருவர் அதிகாரி. அதிகாரி காவலாளிகளிடம் சொல்லிக் கொண்டிருந்ததை சாலையைக் கடக்க நின்று கொண்டிருந்த நான் கேட்க நேர்ந்தது.

ஏதோ ஒரு கொலை, இரண்டு கொலை நடந்தா உடனேயே அதை பெரிய விஷயமா எல்லா டிவிலயும், பேப்பர்லயும் போட்டு நம்மளை கிழி கிழின்னு கிழிச்சுடறானுங்க! வெளிநாட்டுல இப்படியெல்லாம் நடக்காதுன்னு ஒரு உதாரணம் வேற சொல்றாங்க!  ஏய்யா, நம்ம தில்லியோட மக்கள் தொகையை விட அந்த நாட்டோட மக்கள் தொகை குறைவு. அப்படி இருக்கற நாட்டுல நடக்கலன்னு சொன்னா எப்படி....  இங்கே இருக்கற மக்கள் தொகைக்கு இப்படி சில நிகழ்வுகள் நடக்கறது சாதாரணமான விஷயம்! இதைப் போய் பெரிசா பேசறாங்க!  அப்படியே ஒண்ணு ரெண்டு கொலையோ, கற்பழிப்போ நடந்தா இருக்கற கொஞ்சம் காவலர்களை வைத்துக் கொண்டு எப்படி தடுக்கறது?...  நாறப் பொழப்பா இருக்கு!

அவர் சொல்றதுலயும் கொஞ்சம் நியாயம் இருக்கு! காவல் துறையில் நிறைய பேர் அரசியல்வாதிகளோட பாதுகாப்புக்கு போயிட்டா, மீதி இருக்க கோடானு கோடி மக்களுக்கு எப்படி பாதுகாப்பு தர முடியும்! :(

காட்சி-3:



இப்போதெல்லாம் சாலைகளில் நிறைய பேர் தனியாக பேசிக்கொண்டு வருவதைப் பார்க்க முடியும்.  கொஞ்சம் நெருங்கி வரும்போது காதில் ஒரு ஒயர் மாட்டி இருக்கும் – பாக்கெட்டில் அலைபேசி இருக்கும் – அலைபேசி அழைப்பில் இருக்கும் யாருடனோ பேசிக் கொண்டிருப்பார்கள்!  ஒயர் இல்லாவிடில் காதில் நீலப்பல் [Blue Tooth] மாட்டி இருக்கும்! தனியே பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து “பாவம் யார் பெத்த புள்ளையோ, பிராந்து பிடிச்சுடுச்சுன்னுநினைக்கத் தோணும்...... 

இரண்டு நாள் முன்னாடி, சாலையில் நடந்து கொண்டிருந்தேன். எதிரே ஒரு பெரியவர் – ஃப்ரென்ச் தாடி, கோட்-சூட்-பூட் என டிப்-டாப்-ஆக தனியாக நடந்து வந்து கொண்டிருந்தார்.  சற்று தொலைவில் பார்க்கும்போதே பேசிக்கொண்டு வருவது தெரிந்தது. கைகளை ஆட்டி ஆட்டி பேசுவதைப் பார்த்தபோது சரி அலைபேசியில் தான் பேசுகிறார் போல என நினைத்தேன்.  அருகில் வந்தபோது தான் தெரிந்தது காதில் ஒயரோ, நீலப்பல்லோ இல்லை!  பாவம் தனக்குத் தானே பேசிக்கொண்டு வருகிறார்!  என்ன பிரச்சனையோ!

நேற்று மீண்டும் அந்த பெரியவரைப் பார்த்தேன்.  இன்றைக்கும் தனியே பேசிக்கொண்டு நடக்கிறார்!  வீட்டில் இவருடன் பேச ஆளில்லை போலும்! இல்லையெனில் மனைவி பேசிக்கொண்டே இருக்க, இவர் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டிய சூழலோ!  அவருக்கே வெளிச்சம்!

என்ன நண்பர்களே, இன்றைய பதிவினை ரசித்தீர்களா?  சாலைக்காட்சிகள் அவ்வப்போது தொடரும்!

நாளை வேறு ஒரு பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

வியாழன், 1 அக்டோபர், 2015

ஓஹோ ஹோ கிக்கு ஏறுதே!



இரண்டு மூன்று நாட்களாகவே எனக்கு ஒரு ராசி! ஒரே போதை விஷயமாகவே பார்க்கவும், படிக்கவும் கிடைக்கிறது!  அட எனக்கு தான் போதை தலைக்கு ஏறிடுச்சோன்னு நினைச்சுடாதீங்க! போதைக்கும் எனக்கும் ரொம்ப தூரம்!  பாருங்களேன் இந்த ரெண்டு மூணு நாளா தினமும் ஒன்றிரண்டு போதை ஏறிய மனிதர்களை பார்ப்பதும், அவர்கள் செய்யும் விஷயங்களாகவே காணக் கிடைத்தது! அப்படி ரெண்டு மூணு விஷயத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளவே இப்பதிவு! 



பாம்பை கடித்து உண்ண வைத்த போதை!

ஆக்ராவின் ஃபதேஹாபாத் பகுதி.  எப்போதும் சாராய போதையிலேயே இருக்கும் 25 வயது இளைஞர். காலையிலேயே குடிபோதையில் தனது வீட்டு வாசலிலேயே அமர்ந்திருக்க, அவரது கைகளில் பாம்பு தீண்டியிருக்கிறது.  என்னையா கடிக்கற என்று கோபத்துடன், அந்த பாம்பினை உயிருடன் பிடித்து தலைப்பகுதியை கடித்துத் தின்று விட்டார்.  பிறகு வால் பகுதியையும் கடித்து தின்று விட்டாராம்.  பார்த்துக் கொண்டிருந்த அப்பகுதி மக்கள், வீட்டு வேலை செய்யப் போயிருந்த அந்த இளைஞரின் தாயாருக்கு தகவல் அனுப்பியது மட்டுமல்லாது மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்றிருக்கிறார்கள்! – பாம்பை அல்ல என்பதை இங்கே சொல்ல வேண்டியதில்லை!

சிகிச்சைக்காக மருத்துவமனையினர் அனுமதிக்க, மாலை மருத்துவர் வந்து பார்க்கும் போது அவர் அங்கே இல்லை!  அவரைத் தேடிக்கொண்டு சிலர் வெளியே வர, அவரை கண்டுபிடித்த இடம் – வேறேங்கே சாராயக் கடை தான்! – அடுத்த ரவுண்டுக்கு அங்கே போயிருக்கிறார்!

நீராட்டு விழா!



இரண்டு நாட்கள் முன்பு அலுவலகத்திலிருந்து மாலை 07.00 மணிக்கு புறப்பட்டு வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். இரண்டு இந்திய குடிமகன்கள் நாட்டின் அனைத்து அரசியல்வாதிகளையும், மக்களையும் அவருக்குத் தெரிந்த அத்தனை வசை மொழிகளையும் கொண்டு திட்டிக் கொண்டு வந்தார்கள்.  அதில் ஒருவருக்கு போதை ரொம்பவே தலைக்கேறி ஒரு மரத்தின் அருகே கீழே விழுந்து விட்டார்.  அவர் விழுந்தது பாராளுமன்ற கட்டிடத்தின் மிக அருகே.  “நண்பேன்டா!என அவருடன் வந்தவர் விழுந்தவரை சமாளித்து மரத்தின் மேல் சாய்த்து உட்கார வைத்தார்.  கன்னத்தில் ரெண்டு தட்டு தட்டி, வாடா போலாம்.....என்று அழைக்க அவரிடமிருந்து பதிலே இல்லை!

அருகே நின்ற PCR [Police Control Room] வாகனத்தில் இருந்த ஒரு மூத்த காவல் அதிகாரி போதையில் இருந்தவரை கொஞ்சம் அதட்டிப் பார்த்தார். போதை தலைக்கேறியதால் அவருக்கு எதுவும் புரியவில்லை.....  இதுக்கு ஒரே வழி தான் இருக்கு! என பக்கத்தில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து குடிமகனின் தலையில் கொட்ட, நண்பர் தலையைத் தேய்த்து விட்டார்.  காவலதிகாரி தலையில் தண்ணீர் கொட்டக்கொட்ட, நண்பர் தலையைத் தேய்த்து விட்டார்.  சின்னக் குழந்தைகளை குளிப்பாட்டும் போது தட்டிக் குளிப்பாட்டுவது போல நண்பர் தட்டிக் கொடுத்து குளிப்பாட்டிக் கொண்டிருக்க, நடுத்தெருவில் நீராட்டு விழா!

நான் கொஞ்சம் தாச்சிக்கறேன்!



கீரை போண்டா – அட எப்பவும் சாப்பாட்டு நினைவு! ஹீரோ ஹோண்டா வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த ஒரு குடிமகன்....  ரொம்பவும் போதை ஏற வண்டியை ஒரு ஓரமாக தட்டுத் தடுமாறி நிறுத்தினார்.  ஸ்டேண்ட் போட்ட சில நொடிகளில் இடுப்புக்கு மேலே நடைபாதையிலும், கீழே சாலையிலும் இருக்கும்படி விழுந்தார்....  கால்கள் முழுவதும் சாலையில்.....  சாலை – Mother Teresa Crescent.  மாலை வேளைகளில் அவ்வளவாக வெளிச்சம் இருக்காது. வண்டிகள் அதிவேகத்தில் பயணிக்கும் சாலை அது. பெரிய வாகனங்கள் ஏதும் ஓரமாக வந்தால் நிச்சயம் கால்களில் ஏறும் அபாயம் இருந்தது!

சில வாகன ஓட்டிகள் பார்த்துக் கொண்டே போக, சிலர் நிற்க, கால்களைப் பிடித்து நடைபாதையில் சேர்க்க நினைத்தவர்கள் அனைவரையும் குடிமகன் மானாவாரியாக திட்டினார்.  வடிவேலு ஒரு படத்தில் சொல்வது போல Total family damage! அதைக் கேட்ட பின் யாரும் உதவி செய்வார்களா என்ன! குடிகாரன் கிடக்கான்என அனைவரும் நகர்ந்தார்கள்......  அனைவரில் நானும்!

சாலை அணிந்திருந்த மூக்குக் கண்ணாடி!

அதே செவ்வாய் இரவு! இரவு உணவு சாப்பிட்ட பிறகு கொஞ்சம் நடக்கலாம் என வீட்டை விட்டு இறங்கினேன்.  வீட்டின் அருகே இருக்கும் சாலையில் நடந்து கொண்டிருக்க, சாலை ஓரத்தில் ஒரு மனிதர் விழுந்து கிடந்தார்.  பக்கத்திலேயே ஒரு நடைபாதை டீக்கடை. அங்கே சிலர் இருந்தாலும், விழுந்தவரை யாரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை. அவரை நானும் கடந்தேன்.....  தன் சுய நினைவில்லாது விழுந்து கிடக்கிறார். மூக்குக் கண்ணாடி மூக்கை விட்டு விலகி சாலையில் இருந்தது! அவரைப் பார்த்து நிற்க, பக்கத்திலிருந்த ஒரு ஆட்டோ ஓட்டுனர் – “ஆளு செம தண்ணில இருக்கான்.... நீங்க போங்க!என்று சொல்லி என்னை அனுப்பினார்.

நடை முடிந்து திரும்பி வரும் போது மூக்குக் கண்ணாடி சாலையில் இல்லை!

வேறு சில சாலைக்காட்சிகளோடு பிறிதொரு சமயத்தில் சந்திக்கிறேன்.....

நட்புடன்