அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
இந்தப் பயணத் தொடரின் முந்தைய பகுதிகளுக்கு நீங்கள் அனைவரும் தந்த வரவேற்பிற்கும், கருத்துரைகளுக்கும் மனம் நிறைந்த நன்றி.
சென்ற பகுதியில் ஷிம்லா நகர் குறித்தும் அங்கே இருக்கும் லிஃப்ட் வசதி குறித்தும் உங்களுடன் பகிர்ந்திருந்தேன். அதன் தொடர்ச்சியாக இன்றைய பதிவில் ஷிம்லாவிலிருந்து தொடர்ந்த பயணம், மதிய உணவு, எங்கே சென்றோம் என்ற தகவல்களை எல்லாம் பார்க்கலாம். ஷிம்லா நகரிலிருந்து சுமார் 16 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பது குஃப்ரி எனும் சிற்றூர். அங்கே சில பிரபல சுற்றுலாத் தலங்கள் உண்டு. ஒரு சில வியூ பாயிண்ட்ஸ், சிறு மிருகக் காட்சி சாலை, கடை வீதிகள், சிறுவர்களுக்கான தீம் பார்க்குகள் என இருப்பதோடு, யாக் மீது அமர்ந்து படம் எடுத்துக் கொள்ள வசதிகளும் உண்டு. நானும் நண்பர் பிரமோத்-உம் ஏற்கனவே இந்த குஃப்ரிக்கு வந்திருக்கிறோம். நண்பர் கிரிஷ் பார்த்ததில்லை என்பதால் நேராக குஃப்ரி வந்து சேர்ந்தோம். அங்கே சாலையோரத்தில் வண்டியை நிறுத்தி ஓட்டுனர் ஷிம்பு யாரிடமோ அலைபேசியில் பேசினார். என்ன விஷயம் என்று கேட்டால் வண்டியை நிறுத்த சரியான இடம் பார்க்கிறேன் என்றார். சில சமயங்களில் இப்படித்தான் என்ன செய்கிறார் என்று புரியாமல் இருந்தது. அது பயணம் முழுவதும் தொடர்ந்தது :)
குதிரைகள் அல்லது ஜிப்சிகளில் மஹாசு பீக் என்கிற இடத்திற்கு அழைத்துச் சென்று அங்கிருந்து மலைச்சிகரங்களைப் பார்த்து வர ஏற்பாடு செய்வார்கள். இங்கே எப்போதுமே நிறைய கூட்டம் இருக்கும். இங்கே இருக்கும் குதிரைக் காரர்கள், ஜிப்சி ஒட்டுனர்கள் என அனைவருமே பணம் பறிப்பதிலேயே குறியாக இருப்பார்கள். அதிக அளவில் அவர்கள் இருந்தாலும் ஒரு ஒழுங்கு முறை இல்லை. அதிலும் சுத்தம் சுத்தமாக இருக்காது - குதிரைகள் செல்லும் பாதையில் கால் வைக்கவே ஒப்பாது. சற்று தொலைவு தான் பாதை என்றாலும் இந்த இரண்டு வசதிகளும் - குதிரை - ஜீப் - வேண்டாம் என்று நடக்கலாம் என யோசித்தால் இந்த சகதி நிறைந்த பாதை பயமுறுத்தும். பாதையைப் பார்த்ததும், கிரிஷ் சொன்னார் - “எந்தொரு சளி, பகுளம்! அய்யே!”. சரி குதிரையில் போகலாமா என்று கேட்க, மேலே என்ன பார்க்க முடியும் என்று வினவ, பனிச்சிகரங்கள் தான் என்றதும் வேறு இடங்களில் நாம் பனிச்சிகரங்கள் பார்க்க முடியும், இந்தக் கூட்டத்தில் வேண்டாம் என்று சொல்லி விட்டார். நாங்கள் இந்த விஷயங்களைப் பேசிக் கொண்டிருக்க ஓட்டுநர் இன்னமும் தனது வாகனத்தை எங்கே நிறுத்துவது என்று பார்த்துக் கொண்டிருந்தார்.
குஃப்ரி போன்ற இடங்கள் மட்டுமல்லாது ஹிமாச்சலப் பிரதேசத்தின் பல சுற்றுலாத் தலங்களில் இருக்கும் பிரதான பிரச்சனை வாகன நிறுத்தங்கள். சாலைகள் குறுகியவை என்பதால் சாலை ஓரங்களில் ஒரு வாகனம் நிறுத்தினாலே போக்குவரத்து நெரிசல் உண்டாகும். அதனால் ஆங்காங்கே சின்னச் சின்ன இடங்களில் வாகன நிறுத்தங்கள் - காசு கொடுத்தால் இடம் கிடைக்கும்! - இருக்கும். அவற்றில் வாகனம் நிறுத்த இடம் கிடைப்பது கடினம். அதனால் பயணிகளை இறக்கி விட்டு வெகு தொலைவிற்குச் சென்று தான் வாகனங்களை நிறுத்துவார்கள். அதற்கு ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்த ஷிம்புவிடம், இங்கே ஒன்றும் பார்க்கப் போவதில்லை, தொடர்ந்து பயணிப்போம் என்று சொல்ல, அங்கிருந்து புறப்பட்டோம். இதற்கடுத்து நார்க்கண்டா தான் செல்ல வேண்டும் - பயணத்திற்கான திட்டமிடும் சமயத்தில் ஷிம்லா, குஃப்ரி ஆகிய இரண்டு இடங்களையும் பார்த்துக் கொண்டு மாலைக்குள் நார்க்கண்டா சென்று தங்குவதாகவே எங்கள் திட்டம் இருந்தது. ஆனால் ஷிம்லா மற்றும் குஃப்ரியில் அதிக நேரம் எடுத்துக் கொள்ளவில்லை என்பதால் எங்களிடம் நேரம் இருந்தது. ஆகவே தொடர்ந்து நார்க்கண்டா நோக்கி பயணிக்கும் போது திட்டத்தில் மாறுதல்களைச் செய்யலாம் என்று நானும் பிரமோத்-உம் யோசித்தோம்.
குஃப்ரி தாண்டிய பிறகு அடுத்த சற்றே பெரிய நகரம் என்றால் அது நார்க்கண்டா. குஃப்ரியிலிருந்து சுமார் ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது நார்க்கண்டா. நார்க்கண்டா நகரம் ஆப்பிள்களுக்கு பெயர் போனது. நிறைய ஆப்பிள் தோட்டங்கள் இருப்பதோடு, அங்கே நிறைய Cold Storage வசதிகளும் இருக்கிறது. ஹிமாச்சலப் பிரதேசத்தில் விளையும் ஆப்பிள்களில் பெரும்பகுதி இங்கே வரை கொண்டு வரப்பட்டு Cold Storage-ல் வைத்து அங்கேயிருந்து தான் எல்லா இடங்களுக்கும் வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கிறார்கள். சாலையில் பயணிக்கும் போது பல மலைச்சிகரங்களில் செயற்கையாக வெள்ளை நிறத்தில் வலை போன்ற ஒரு துணியால் ஆப்பிள் மரங்களை போர்த்திப் போர்த்தி வைத்திருப்பார்கள். இப்படிப் போர்த்தி வைப்பது பறவைகளிலிருந்து பாதுகாக்க என்று தோன்றுகிறது. தொடர்ந்து பயணித்துக் கொண்டிருந்தோம். மதிய நேரம் வர, வயிறு என்னைக் கொஞ்சம் கவனிக்கிறாயா என்று கேட்க ஆரம்பித்தது. சரி எங்கேயாவது நல்ல ஹோட்டல் இருந்தால் வண்டியை நிறுத்த வேண்டும் என்று ஷிம்புவிடம் சொன்னோம். அவர் அதற்கு, டாபா-வாக இருந்தால் பரவாயில்லையா, இங்கே இருக்கும் உணவகங்களை விட டாபா நல்லது என்று சொன்னார்.
சரி, இந்தப் பாதையில் நீங்கள் நிறையவே பயணித்திருப்பீர்கள், அதனால் உங்களுக்கு நல்ல உணவகம் தெரிந்திருக்கும், பார்த்து நிறுத்துங்கள் என்று சொன்ன போது அவர் சொன்ன பதில் - “நான் இந்தப் பாதையில் இதுவரை பயணித்ததில்லை!” என்பது தான்! என்ன என்று விசாரிக்க, இந்த ரூட் எனக்குப் பிடிக்காது - மணாலி வழி ஸ்பித்தி சென்று அதே வழியில் திரும்புவது தான் எனக்கு வழக்கம். இப்படி நான் வந்ததே இல்லை என்றார். சரி இந்த மாதிரி சர்க்யூர் பயணம் செல்ல யாரேனும் விரும்பினால் எங்களுடன் வந்த இந்தப் பயணம் உங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் என்று சொல்லி மேலும் பயணித்தோம். அவருக்குப் பிடிக்காமலேயே இந்த வழி வருகிறார் என்று தெரிந்ததிலிருந்து மனதோரத்தில் அந்த எண்ணம் எனக்கு நிலைத்திருந்தது. அது எந்த விதத்தில் எங்கள் பயணத்தினை பாதிக்கும் என்றும் யோசனை தொடங்கியது. அது ஒரு புறம் இருக்க, காட்சிகளை ரசித்தபடி பயணித்துக் கொண்டிருந்தோம். நார்க்கண்டா நகர் அருகே நாங்கள் சென்றபோது மதியம் 12.30 மணிக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும் நார்க்கண்டாவைக் கடந்து தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருந்தோம். பிறகு வாகனத்தினை ஒரு சாலையோர டாபாவில் நிறுத்தினார் ஷிம்பு.
ஹிமாச்சலப் பிரதேசத்தினை பொறுத்தவரை மதிய உணவு என்று சொன்னால் பெரும்பாலும் ராஜ்மா சாவல் என்று அழைக்கக்கூடிய ராஜ்மா எனும் Kidney Beans கொண்டு தயாரிக்கப்படும் சப்ஜியுடன் சாதம் கலந்து சாப்பிடுவது தான் வழக்கம். பெரிய பெரியதாக இருக்கும் இந்த ராஜ்மா ஹிமாச்சலப் பிரதேசத்தின் பிரபல உணவாக இருக்கிறது. எங்கே சென்றாலும், எங்கள் ஸ்பெஷல் உணவான ராஜ்மா சாவல் சாப்பிடுங்கள் என்று சொல்வார்கள். இல்லை என்றால் கடி சாவல் என்று அழைக்கப்படும் சாதமும் மோர்க்குழம்பு போன்ற ஒரு வஸ்துவும் கலந்த சாதம். காலையில் ரொட்டி, மதியம் ராஜ்மா சாவல் மற்றும் இரவில் ரொட்டி, தால், சப்ஜி - இப்படித்தான் அவர்களது உணவு வழக்கம் இருக்கிறது. அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சம் மாற்றங்கள் இருந்தாலும், ஷிம்புவைப் போன்ற சிலர் அதில் மாற்றம் செய்ய விரும்புவதே இல்லை என்று தோன்றியது எனக்கு. அதே வழக்கத்தினை தொடர்ந்து நாங்களும் அந்த மதிய நேரத்தில் ராஜ்மா சாவல் சாப்பிட அந்த உணவகத்தின் வெளியே இருந்த இடத்தில் அமர்ந்து கொண்டோம்.
Disposable தட்டுகளில் சுடச்சுட ராஜ்மா சாவல் வந்து சேர்ந்தது. நின்று நிதானித்து அந்த மதிய நேர உணவை, நல்ல பசிக்கு சுவை தெரியாது என்று சொல்வார்கள் - ஆனாலும் எங்களுக்கு அந்த நேரத்தில் ராஜ்மா சாவல் சுவையாகவே தெரிந்தது. பொறுமையாக நாங்கள் அனைவரும் தேவையானதை வாங்கிச் சாப்பிட்டோம். பயணங்களில் தொடர்ந்து ஓடி ஓடி இடங்களைப் பார்ப்பது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. நின்று நிதானித்து பார்க்க வேண்டும் - அத்தனை இடங்களுக்கும் செல்லாவிட்டாலும் பரவாயில்லை - பார்க்கும் இடம் குறைவென்றாலும், நின்று நிதானித்துப் பார்க்க வேண்டும் - ஓடக் கூடாது என்பதே எனது எண்ணமாக இருக்கிறது. தினம் தினம் தான் வாழ்க்கையில் ஓடிக்கொண்டே இருக்கிறோமே - எதற்காக இந்த ஓட்டம் என்ற எண்ணமே இல்லாமல் ஓடுகிறோமே, இப்படியான பயணத்திலும் எதற்கு ஓட்டம் என்று எனக்குத் தோன்றும். மதிய உணவினைத் தொடர்ந்து, நான்கு பேருக்கான உணவுக்கான தொகையாகச் சொன்ன 580 ரூபாயைத் தந்தபின்னர், அந்தக் கடையில் கொஞ்சம் நேரம் அமர்ந்திருந்தோம். பிறகு எங்கள் பயணத்தினைத் தொடர்ந்தோம். நார்க்கண்டாவில் தங்குவதான திட்டம் மாறியது என்று சொல்லி இருந்தேன். எங்கே பயணித்தோம், அன்றைய இலக்காக நாங்கள் முடிவு செய்த இடம் எது, போன்ற தகவல்களை அடுத்த பகுதியில் சொல்கிறேன். அதுவரை பயணத்தில் இணைந்திருங்கள் நண்பர்களே.
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
15 ஜூன் 2026

.jpeg)
.jpeg)
.jpeg)







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....