திங்கள், 29 ஜூன், 2026

Lahaul Spiti Circuit Trip - ஷூட்டிங் ஸ்டோன்ஸ் - உழைப்பாளிகள் - மதிய உணவு - பகுதி பன்னிரெண்டு - வெங்கட் நாகராஜ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******




எங்களது பயணத் திட்டம் - வரைபடமாக...

இந்தப் பயணத் தொடரின் முந்தைய பகுதிகளுக்கு நீங்கள் அனைவரும் தந்த வரவேற்பிற்கும், கருத்துரைகளுக்கும் மனம் நிறைந்த நன்றி. தொடரின் சென்ற பகுதியில் சராஹனிலிருந்து புறப்பட்டு பயணிக்கும்போது ஓட்டுநர் சொன்ன அதிர்ச்சியான தகவல் குறித்தும், பார்த்த இடங்கள் குறித்தும் எழுதி இருந்தேன். இந்தப் பகுதியில் தொடர்ந்து நாம் பார்க்க இருப்பது அன்றைய தினத்தின் பயணம் குறித்தும், வழியில் கிடைத்த அனுபவங்கள் குறித்தும் தான். பொதுவாகவே மலைப்பகுதிகளில் பயணிப்பது என்பது ஒரு த்ரில்லிங்கான அனுபவம் தான். தெற்கே இருக்கும் சிறு மலைகளில் பயணிக்க சரியான சாலைகள் இருக்கும் - என்னதான் கொண்டையூசி வளைவுகள் கொண்ட பாதைகள் என்றாலும் பாதை நன்றாக இருப்பதோடு, பக்கவாட்டில் தடுப்புகளும் இருக்கும். நாமாக ஆபத்தைத் தேடிக்கொள்ளும் விதத்தில் பாதையில் வாகனங்களை இயக்குவதால் மட்டுமே பிரச்சனைகள் வரும்.  மழைக்காலங்களில் மலைச்சரிவுகள் ஏற்படுவதுண்டு என்றாலும் அதிக அளவில் பிரச்சனைகள் இருப்பதில்லை. ஆனால் வடக்கில் அப்படி அல்ல - குறிப்பாக உத்திராகண்ட் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசத்தில் மலையின் பாங்கு அப்படி. இங்கே இருப்பதைப் போல பெரிய பெரிய பாறைகள் கொண்ட மலை அல்ல! நிறைய இடங்களில் மண் மேடுகள் போலவே காட்சி அளிக்கும். ஆனால் உள்ளுக்குள் பாறைகளும் இருக்கும். 





எந்த நேரத்திலும் மேலிருந்து மண்ணும், கற்களும் கீழே விழத் தயாராக இருக்கிறேன் என்று சொல்வது போலவே இருக்கும்.  எப்போது மேலேயிருந்து கற்கள் விழும் என்று சொல்ல முடியாது. பல பயணங்களில் ஓட்டுநர்கள் மலையைப் பார்த்தபடியே வாகனத்தினைச் செலுத்துவதை நான் பார்த்ததுண்டு. அதற்குக் காரணம் சாலையைக் கவனிப்பதோடு, மலையையும் கவனித்துக் கொண்டிருந்தால் தான் மேலிருந்து கற்கள் உருண்டு வருகிறதா என்பதையும் பார்க்க வேண்டியிருப்பது தான்.  நண்பர் பிஷ்ட் ஒரு பயணத்தில் இப்படிச் சென்று கொண்டிருந்தபோது மேலியிருந்து விழுந்த சற்றே பெரிய கல் ஒன்று சரியாக வாகனத்தின் முன்புறம் விழ, முன்பக்கக் கண்ணாடி முழுவதும் சிறுசிறு துண்டுகளாக உடைந்தது - நல்ல வேளையாக அவை சிதறாமல் அப்படியே இருக்க, வாகனத்தினை ஒரு ஓரமாக நிறுத்தி அந்தக் கண்ணாடிப் பகுதியை உடைத்து ஓரமாகப் போட்டுவிட்டு, கண்ணாடி இல்லாமலேயே அடுத்த ஊர் வரை ஓட்டி வந்து அங்கே ஒரு நாள் தங்கி அதை மாற்றிக் கொண்டு வந்தார்.  எதற்காக இங்கே அதைச் சொல்கிறேன் என்றால் இப்படியான ஆபத்துகள் எப்போதும் இங்கே உண்டு என்பதை உணர்த்துவதற்காகவே. 






சாலைகளை என்னதான் தொடர்ந்து செப்பனிட்டு, பராமரித்துக் கொண்டே இருந்தாலும், மலைச்சரிவுகள் தினம் தினம் நடந்தால் என்ன செய்ய முடியும்? ஆனாலும் Border Roads Organisation எனும் அரசு அமைப்பும், GREF என்கிற அரசு அமைப்பும் தொடர்ந்து இந்த மலைப்பகுதிகளில் பணிபுரிந்த வண்ணமே இருக்கின்றன.  அவர்களது சிப்பாய்கள் சாலைகளில் ஆங்காங்கே நின்று மலைச்சரிவுகள், பாதைகளில் ஏற்படும் சிதைவுகள் ஆகியவற்றைக் கண்காணித்துக் கொண்டே இருக்கிறார்கள்.  ஏதேனும் பெரிய நிகழ்வுகள் ஏற்பட்டால் அவர்களிடம் இருக்கும் Walkie Talkie வழியாக அதிகாரிகளுக்குத் தகவல் அளிப்பதோடு, சாலையில் வரும் வாகன ஓட்டிகளையும் எச்சரிக்கிறார்கள்.  அந்த மலைப்பகுதியில் யாருமே இல்லாமல் ஓரமாக, உயரமான இடத்தில்  நின்று கற்கள் விழும்போது வாகனங்களை நிறுத்தி, எல்லாம் சரியாக இருக்கிறது, பயணிக்க ஆபத்தில்லை எனும்போது மீண்டும் வாகனங்களைச் செலுத்த அனுமதி அளிப்பது என பல வேலைகள் அவர்கள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.  பகல் முழுக்க இப்படி கால் கடுக்க நின்று, உட்கார்ந்து கொண்டு அந்த வெட்ட வெளியில், மலைப்பகுதியில் தன்னந்தனியாக நின்று Shooting Stones எனப்படும் பறக்கும் கற்களைப் பார்க்கும் வேலை - நம்மால் ஒரு நாள் கூட செய்யமுடியாது! ஆனால் அவர்களுக்கு இது தான் வேலை - சுலபம் என்று நினைக்கக் கூடாது - ஒரு மணி நேரம் அந்த இடத்தில் நின்று பார்த்தால் தான் அந்த வேலையின் கொடுமையான தன்மை நமக்கு விளங்கும்.



அவர்கள் மட்டுமல்லாது, இருக்கும் சாலைகளில் விழும் கற்கள், மண் போன்றவற்றை தொடர்ந்து அப்புறப்படுத்தும் உழைப்பாளிகள் என பலர் இருப்பதால் தான் இந்த மலைப்பகுதிகளில் பலராலும் பயணிக்க முடிகிறது. எந்த நேரத்திலும் இந்தப் பகுதிகளில் மலைகளில் பயணிக்கும்போது சில சிக்கல்கள் வரத்தான் செய்கின்றன. ஆனாலும் இந்தப் பயணங்களை மேற்கொள்ளாமல் இருக்க முடியாதே. இத்தனை ஆபத்துகள் நிறைந்திருந்தாலும் அங்கேயும் மக்கள் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே. அங்கே இருப்பதோடு மட்டுமல்லாது எத்தனை ஆலயங்கள், புத்த மடாலயங்களைக் கட்டி அங்கேயே எத்தனை குளிர், பனிப்பொழிவு மற்றும் மழை இருந்தாலும் தங்களது வாழ்நாளை அங்கேயே கழித்து விடுகிறார்களே! எப்போதாவது பயணிக்கும் நமக்கு அந்தப் பகுதி ஆபத்து நிறைந்ததாகத் தெரிந்தாலும் அந்த ஆபத்துகளை அவர்கள் சமாளித்துக் கொண்டு தானே இருக்கிறார்கள்.  நாங்கள் பயணித்து முடிந்து வீடு திரும்பிய பிறகு, அந்தப் பகுதியில் ஏற்பட்ட விபத்துகள் - மலைச்சரிவு, பெரிய இரும்புப் பாலங்கள் வண்டியோடு கீழே ஆற்றில் விழுந்தது போன்றவற்றை குறித்த சில காணொளிகள் பார்க்க முடிந்தது. இல்லத்தரசியும் மகளும் கூட இப்படியான பாதைகளிலா பயணித்தீர்கள் என்று கொஞ்சம் கவலையையும் வெளிப்படுத்தினார்கள். 



நாங்கள் அன்றைய தினம் (14-05-2026) சராஹனிலிருந்து நாகோ அல்லது தபோ என்கிற இடம் வரைக்கும் பயணிக்கலாம் என்றிருந்தோம்.  சராஹனிலிருந்து நாகோ வரையான தூரம் சுமார் 180 கிலோ மீட்டர்.  அவ்வளவு தானே வண்டியை ஒரு அழுத்து அழுத்தினால் மூன்று, மூன்றரை மணி நேரத்தில் சென்று சேர்ந்து விடலாம் என்று சிலர் நினைக்கக்கூடும்.  அப்படி முடியாது. முற்றிலும் மலைப்பிரதேசம் என்பதால் பல இடங்களில் மணிக்கு இருபது இருப்பத்து ஐந்து கிலோ மீட்டர் வேகம் கூடத் தொட முடியாது. அதனால் நின்று நிதானித்து தான் பயணிக்க வேண்டியிருக்கும். அது மட்டுமல்லாது மேலே இருந்து கற்கள் வேறு பல இடங்களில் விழுந்து கொண்டிருக்க, வேகம் விவேகமல்ல என்ற கொள்கையுடனேயே எங்கள் வாகன ஓட்டி வாகனத்தினைச் செலுத்துக் கொண்டிருந்தார்.  எங்கே பார்த்தாலும் மலைகள், மலைகள், மலைகளைத் தவிர வேறொன்றுமில்லை.  இயற்கை இந்த மலைகளில் விளையாடி இருக்கும் விளையாட்டை, ஏற்படுத்திய உருமாற்றங்களை, பார்த்துக் கொண்டே, சில இடங்களில் படங்களும், சில இடங்களில் காணொளிகளும் எடுத்துக் கொண்டே தான் பயணித்துக் கொண்டிருந்தோம்.  



மலைகளில் ஏறுவதும், இறங்குவதும் என தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தது. மலைகளில் ஏறும்போது சிரமங்கள் இருந்தாலும், கீழே இறங்கும்போது சுலபமாகத் தெரிந்தாலும் எப்போது என்ன நடக்குமோ என்ற எண்ணம் அவ்வப்போது வந்த வண்ணமே இருந்தது.  பல இடங்களில் பாதையின் ஒரு பக்கம் மலைகள் என்றால் மறு பக்கம் அதல பாதாளம் - கீழே ஓடும் நதி என்று தான் இருக்கும்.  அதிலும் பள்ளமாக இருக்கும் பக்கம் தடுப்புகள் ஏதும் இல்லை என்பதால் அந்த ஓரத்தில் சென்றால் ஆபத்து - அதைப் போலவே மலையின் ஓரத்தில் சென்றாலும் எங்கே எந்த கூர்மையான முனை இடித்து விடுமோ என்று அதிலிருந்தும் சற்று விலகியே வாகனத்தினைச் செலுத்த வேண்டியிருக்கும். அதைத் தவிர எதிர்புறத்திலிருந்தோ, பின்னாலிருந்தோ வரும் வாகனத்திற்கு வழி விடுவதும் இந்தப் பகுதிகளில் மிகவும் கடினமான விஷயம்.  இடம் பார்த்து, எங்கே கொஞ்சம் அதிக இடம் இருக்கிறதோ, அடுத்த வண்டிக்கு Pass தரமுடியுமோ அங்கே தான் மற்ற வண்டியை நம்மைத் தாண்டிச் செல்ல அனுமதிக்க முடியும்.  அதனால் பல இடங்களில் நின்று நின்றே செல்ல வேண்டியிருக்கும். 


இப்படியான பாதைகளில் தொடர்ந்து பயணித்து நாங்கள் எங்கள் வாகனத்தினை நிறுத்திய இடம் ஸ்பெல்லொ என்கிற இடம். தொடர்ந்து பயணித்ததில் பல இடங்களின் பெயர்கள் வித்தியாசமாக இருந்தன.  தராலி, சுறு, காஃபூர், சோரா, நிகுல் சாரி, தரண்டா டாங்க், சுங்கரா, அகடே, வாங்க்டூ, கா, கீ, பூ - இப்படி பல ஊர்கள்.  இவற்றை எல்லாம் பார்க்கும்போது நமக்கு கொஞ்சம் புன்சிரிப்பு வந்தாலும், இந்த இடங்களுக்கான பெயர்களுக்கும் நிச்சயம் ஒரு காரணம் இருக்கக்கூடும்.  உள்ளூர் மக்களிடம் கேட்டால் அந்தப் பெயருக்கான காரணங்களை நமக்குச் சொல்லக் கூடும்.  நாங்கள் சென்று சேர்ந்த அந்த சிற்றூரின் பெயர் கூட ஸ்பெல்லோ என்று சொல்லி இருக்கிறேனே…  அப்படியான சிற்றூரில் ஒரு சாலையோர உணவகத்தில் வண்டியை நிறுத்தி அங்கே உணவு வேண்டும் என்று சொல்ல, அவர்கள் தாலி சிஸ்டம் தான் என்று சொல்லி எங்கள் அனைவருக்கும் உணவு அளித்தார்.  ஒரு தட்டில் இரண்டு மூன்று ஃபுல்கா ரொட்டி, கடி, ராஜ்மா, சாதம் மற்றும் ஊறுகாய்.  பார்க்க சிம்பிளாக இருந்தாலும் சுவை வீட்டு உணவு போலவே இருந்தது.  விலையும் அத்தனை அதிகம் இல்லை. ஃபுல்கா ரொட்டி, சாதம் போன்றவற்றிற்கு அளவில்லை. ஆனாலும் நம்மால் அதிகமாக சாப்பிடமுடியாது.  தேவையான அளவு மட்டும் தானே சாப்பிடமுடியும்.  அப்படி உணவருந்திய பிறகு அதற்கான கட்டணத்தையும் (500 ரூபாய்) கொடுத்து, அவர்களுக்கு நன்றி சொல்லி அங்கிருந்து புறப்பட்டோம்.  அங்கேயிருந்து எங்கே சென்றோம், என்ன பார்த்தோம் போன்ற தகவல்களை அடுத்த பகுதியில் எழுதுகிறேன். அதுவரை பயணத்தில் இணைந்திருங்கள் நண்பர்களே.  


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

29 ஜூன் 2026


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....