வெள்ளி, 12 ஜூன், 2026

அறம் - ஜெயமோகன் - வாசிப்பனுபவம் - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


அறம் - ஜெயமோகன்



இவரின் எழுத்தை நான் வாசிப்பது இதுவே முதல்முறை! சமீபத்தில் கூட மறைந்த தன் தந்தையின் நினைவாக அவர் விரும்பி வாசித்த எழுத்தாளரின் நூல்களை உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் கொடுக்க எண்ணி மும்பையிலிருக்கும் அன்புத்தோழி ஒருவர், இவரின் நூல்களின் பட்டியலும் அதற்கு நான் எழுதிய வாசிப்பனுபவங்களையும் அனுப்பச் சொல்லி தோழி மெசேஜ் செய்திருந்தார்! அந்த மெசேஜை நான் பார்த்த போது மிகவும் சங்கடமாக உணர்ந்தேன்!


ஏனென்றால் அப்போது தான் எனக்குத் தெரிய வந்தது நான் இவரின் எழுத்துக்களை இதுவரை வாசித்ததில்லையே என்று! பரந்து விரிந்த உலகில் வாசிக்கவும், ரசிக்கவும், வாழ்வியலை கற்றுணர்ந்து கொள்ளவும் எத்தனையோ எழுத்தாளர்களின் எழுத்துக்கள் இங்கே உள்ளன! நாம் தான் அவற்றை தேடலுடன் நாடிச் செல்ல வேண்டும்! ஒரு புத்தக வாசிப்பில் நம் வாழ்வையே மாற்றும் சக்தி எழுத்துக்கு மட்டுமே உண்டு!



அன்பு சூழ் உலகில் நேற்றைய பொழுதில் சர்ப்ரைஸாக தற்சமயம் என்னுடன் வகுப்பில் பயிலும் அன்புத்தோழியிடமிருந்து கூரியர் வந்தது! அவரின் அன்புப் பரிசுகள் சிலவற்றுடன் வாசிப்பில்  என்னை  புத்தம்புது உலகுக்குள் அழைத்துச் செல்லும் விதமாக அவரின் பரிந்துரையில் மூன்று புத்தகங்களும் அனுப்பியிருந்தார்! மூன்றுமே எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் எழுத்தில் வடிவமைக்கப்பட்ட புத்தகங்கள்! 


தோழியிடமிருந்து வந்த புத்தகங்களில் நேற்று இரவு நான் வாசித்த புத்தகம் தான் அறம்! மிகக் குறைவான பக்கங்களிலேயே மனதை கசங்கிய காகிதமாக கசக்கிப் போட்ட புத்தகம் அறம்! ஒவ்வொரு நாளும் வாழ்வியல் பாடங்களை சகமனிதரோடு நாம் பழகும் விதத்தை என்று இறைவன் வடிவமைத்துக் கொண்டே தான் இருக்கிறார்! அவற்றிலிருந்து நாம் பெறும் அனுபவப் பாடங்களே அறம்!


‘ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பது போல அக்காலத்து எழுத்தாளர்களின் வாழ்வை பறைசாற்றும் விதமாக எழுத்தாளர் ஒருவரின் வறுமை போர்த்திய தேய்ந்து போன வாழ்வை வெளிச்சம் போட்டுக் காட்டியது அறம்! ராயல்டிங்கிறது எல்லாம் கெட்ட வார்த்தைகள் என்று நினைத்த காலங்களும் உண்டு எனவும் இப்போது டாக்டருக்கு கொடுப்பதற்காகவே ராயல்டி தரப்படுகிறது என்றும் தன் நிலையை அப்பாவியாக வெளிப்படுத்துவது அறம்!


எல்லாவற்றுக்குமே ஒரு எல்லை அல்லது முற்றுப்புள்ளி என்பது உண்டு! ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதேனும் ஒரு காலகட்டத்தில் நம் இயலாமையின் இறுதிப்புள்ளி என்பது வரும் போது நாம் என்ன செய்கிறோம் என்பது நமக்கு தெரிவதே இல்லை! அப்படிப்பட்ட ஒரு நிலையிலும் மனிதனின் மாண்பை காப்பதே அறம்! நம்மை நெறிபடுத்திக் கொண்டு பக்குவப்பட்ட மனிதனாக வாழ்வதே அறம்!


மனிதனாகப் பிறந்தவன் எல்லா நேரத்திலும் இயல்பாகவும் அன்போடும் வாழ்வது என்பது இங்கு கடினம்! தன் வாழ்வின் நிலைக்கும் கட்டாயத்துக்கும் ஏற்ப அவன் தன்னை மாற்றிக் கொள்ளும் போது சற்றே பிறழ்ந்தாலும் நெறி தவறிப் போய்விடுகிறான்! ஒவ்வொரு நாளும் நதியின் போக்கைப் போல் நாமும் இதமாக பயணித்து, செல்லும் பாதையை சேதப்படுத்தாமல் மனிதத்தன்மையை காப்பதே அறம்!


நேற்று இரவு இந்தப் புத்தகத்தை வாசித்து முடித்த பின் உறக்கம் வரும் வரையில் மனதில் சுழன்று கொண்டே என்னுள்ளே ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது அறம் என்று சொல்வேன்! உங்களுக்கும்  இதை வாசிக்க வாய்ப்பு கிடைக்குமானால் மிகவும் மகிழ்வேன்!


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

12 ஜுன் 2026


3 கருத்துகள்:

  1. நல்ல புத்தகம்.  கமல் பரிந்துரையில் நான் இதை வாங்கிப் படித்தேன்.  இதிலிருந்து ஒரு கதையை மிக சமீபத்தில் எங்கள் தளத்தின் சனிக்கிழமை பதிவிலும் பகிர்ந்திருந்தேன்.  இதில் இன்னும் நான் பகிர்ந்த கதை, யானை டாக்டர் போன்ற கதைகளும் பிரசித்தம். 

    அதே சமயம் இவரின் விஷ்ணுபுரம் புத்தகத்தை படிக்க ஓடவில்லை.  வாங்கி பதின்மூன்று  வருடங்கள் ஆகின்றன.  பத்து பக்கம் தாண்டவில்லை!

    பதிலளிநீக்கு
  2. We distribute this book to our close circle in memory of my father. Thanks 😊

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....