வெள்ளி, 5 ஜூன், 2026

Lahaul Spiti Circuit Trip - பகுதி மூன்று - சென்னையிலிருந்து சண்டிகர் வரை - வெங்கட் நாகராஜ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******





படம்: இணையத்திலிருந்து...

இந்தப் பயணத் தொடரின் முதலாம் பகுதிக்கும், இரண்டாம் பகுதிக்கும் நீங்கள் அனைவரும் தந்த வரவேற்பிற்கும், கருத்துரைகளுக்கும் மனம் நிறைந்த நன்றி.  திருச்சியிலிருந்து புறப்பட்டு, சென்னை விமான நிலையம் வரும் வரை கிடைத்த அனுபவங்களை முந்தைய பகுதியில் எழுதி இருந்தேன். இந்தப் பகுதியில் சென்னையிலிருந்து சண்டிகர் வரை சென்றபோது கிடைத்த அனுபவங்கள், நண்பர்களுடனான சந்திப்பு போன்ற மற்ற விஷயங்களைப் பார்க்கலாம் வாருங்கள். 



படம்: இணையத்திலிருந்து...

சற்றேறக்குறைய ஏழு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு விமானப் பயணம். திருச்சியிலிருந்து சென்னை வரை இரயிலிலும் சென்னையிலிருந்து சண்டிகர் வரை விமானப் பயணம் என்று திட்டமிருந்தது. நண்பர் பிரமோத் மற்றும் அவருடைய மற்றோர் நண்பர் கிரிஷ் இருவரும் காலை திருவனந்தபுரத்திலிருந்து பெங்களூரு வழி சண்டிகர் வரை விமானப் பயணம் (இடையே பெங்களூரில் விமானம் மாற வேண்டும்) புறப்பட்டு இருந்தார்கள்.  எனக்கு சண்டிகர் வரை ஒரே விமானம் தான் என்பதால் கவலையில்லை. நடுவில் வேறோரு விமான நிலையத்தில் விமானம் மாற வேண்டும் என்றால் கொஞ்சம் சல்லியம் தான் - மீண்டுமொரு முறை பாதுகாப்பு சோதனைகள் என்று தொல்லை தருவார்கள். அவர்கள் செய்வது நல்ல விஷயம் என்றாலும் இந்த முறைகளில் முடிந்தால் ஏதேனும் மாற்றம் செய்யலாம். 



படம்: இணையத்திலிருந்து...

விமான நிலையத்தில் உள்ளே நுழைவதற்கு முன் போர்டிங் பாஸ் மற்றும் அலுவலக அடையாள அட்டையை காண்பிக்க, அதைப் பார்த்த CISF காவலர், தனக்கு கடவுச் சீட்டு எடுக்கத் தேவையான ஆதாரங்கள் குறித்த அவருடைய சந்தேகங்களைத் தீர்த்து வைக்க கேள்விகளைக் கேட்டார். ஆஹா! இது என்ன சோதனை. எங்கே வந்தாலும் வேலை நம்மை விடாது போல இருக்கிறதே என்று நினைத்தவாறு அவரின் கேள்விகளுக்கு பதில் அளித்தேன்.  எப்போதுமே இந்த ஜவான்களை சந்திக்கும் போது “ஜெய் ஹிந்த் ஜனாப்” என்று முகமன் கூறுவது தான் எனது வழக்கம். அதில் அவர்களுக்கும் மகிழ்ச்சி நமக்கும் மகிழ்ச்சி. 



படம்: இணையத்திலிருந்து...

ஏற்கனவே Web Check In செய்திருந்தேன் என்றாலும் முதுகுச் சுமையை விமானத்தில் ஏற்ற Baggage Drop செய்து விட்டு அவர்கள் கொடுத்த Boarding Pass Print Out பெற்றுக்கொண்டேன். பாதுகாப்பு பரிசோதனைகளை முடித்துக் கொண்டு காத்திருக்கும் பகுதிக்கு வந்து சேர்ந்தேன். வீட்டிலிருந்து புறப்படும் போது இல்லத்தரசி கொடுத்துவிட்ட மிளகாய் பொடி தடவிய இட்லியை, இரயில் பயணத்தில் காலை 9 மணிக்கு சாப்பிட்டது. அதன் பிறகு ஒன்றும் சாப்பிடவில்லை. வயிறு பசித்தது. விமான நிலையத்தில் சாப்பிடவேண்டும் என்றால் பணம் கொடுத்தாலும் நல்ல உணவு, அதாவது சுவையான உணவு கிடைக்காது. கொடுக்கும் பணம் மட்டுமே அதிகமாக இருக்கும். விமான நிலையத்தில் கொஞ்சம் சுற்றி வந்தேன். பார்த்த உணவு வகைகள் ஒன்றும் சொல்லிக் கொள்ளும் விதத்தில் இல்லை. இட்லி வகைகள் என்ற பெயரில் விதம் விதமாக இட்லியைக் கொலை செய்திருந்தார்கள்.  



படம்: இணையத்திலிருந்து...

03.00 மணிக்கு Boarding ஆரம்பிக்க வேண்டும். ஆனால் நாங்கள் பயணிக்க வேண்டிய விமானம் வரவில்லை. அரை மணி நேரம் தாமதம். அதற்குள் நண்பர்கள் சண்டிகர் சென்று சேர்ந்து விட்டனர். ஒரு வழியாக விமானம் வர, Boarding ஆரம்பித்தது. எனது இருக்கை ஜன்னல் ஓரம் அல்ல. Aisle seat தான். பக்கத்தில் ஒரு மூத்த தம்பதி. கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து இருந்தார் அந்தப் பெண்மணி. நான் உட்காரும் போது அவர் கால் என் மீது படுகிறது - ஆனால் அவரோ அதை குறித்து எந்தக் கவலையும் இல்லாது இருந்தார். ஒரு வேளை அவர் கால் என் மீது பட நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ? :) சிலர் இப்படித்தான். தனது சௌகரியம் மட்டுமே இவர்களுக்கு முக்கியம். அடுத்தவர்கள் எக்கேடு கெட்டுப் போனால் நமக்கென்ற என்ற மனோபாவம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.


முதியவர் Vlogger போலும். தொடர்ந்து அலைபேசி வழி காணொளி எடுத்ததோடு Voice Over ஆக, எடுக்கும் காணொளி குறித்து பேசிக்கொண்டும் இருந்தார். நீங்கள் என்ன Vlogger ஆ என்று கேட்க நினைத்தேன். கேட்கவில்லை. சில நிமிடங்களில் விமானம் புறப்பட்டது. பக்கத்து Aisle காலியாக இருக்க, அந்த மூத்த பெண் சௌகரியமாக உட்கார்ந்து கொள்ளட்டும், நாமும் சௌகரியமாக அமர்வோம் என்று இடத்தை மாற்றிக் கொண்டேன். இருவருக்கும் நிம்மதி.


உணவு: 


பொதுவாக Indigo விமானத்தில் உணவு தருவதில்லை. காசு கொடுத்து தான் வாங்க வேண்டும். ஆனால் என்னுடையது Corporate Booking என்பதால் உணவு உண்டு. ஆனால் பெரிதாக ஒன்றும் கிடைக்காது. இந்தப் பயணத்தில் கிடைத்த உணவு - ஒரு Parabola (நான் ஒரு கணிதப் பட்டதாரி என்று தெரிய வேண்டாமா?) வடிவ Bun, நடுவே Slice செய்து, உள்ளே இரண்டு உருளைக்கிழங்கு போண்டா வைத்து இருப்பதைத் தந்தார். சில்லென்று இருந்தது! சூடெல்லாம் செய்யத் தேவையில்லை என்று நினைத்தார்களோ என்னமோ? கூடவே வட இந்திய நொறுக்கு ஒன்றிரண்டு பாக்கெட்டுகள் - Gur Para, குளிர்பானம் ஒன்று என ஏதோ. அவற்றை அப்படியே கைப்பைக்குள் வைத்துவிட்டு Bun மட்டும் சுவைத்தேன். ஓகே ரகம் தான். பசியின் காரணமாக சுவை பெரிதாக கவனிக்கப்படவில்லை என்றும் சொல்லலாம். 



படம்: இணையத்திலிருந்து...

ஒரு வழியாக தாமதமாகப் புறப்பட்டு அரை மணி நேர தாமதமாக சண்டிகர் நகரின் விமான நிலையம் ஆன “ஷஹீத் பகத் சிங் சர்வதேச விமான நிலையம்” தரையிறங்கிய போது மாலை 07.30. கிட்டத்தட்ட பன்னிரெண்டு மணி நேரத்தில் (இரயில் மற்றும் விமானப் பயணம், காத்திருந்த நேரம் என எல்லாம் சேர்த்து) திருச்சியிலிருந்து சண்டிகர் வந்து சேர்ந்தேன். இது ஒரு சிவில் மற்றும் இந்திய விமானப் படையின் தளம் ஆகிய இரண்டும் சேர்ந்த விமான நிலையம். ஆகையால் இங்கே நிழற்படங்கள் மற்றும் காணொளிகள் எடுக்கக் கூடாது என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.  ஆனால் நாங்கள் சொல்பேச்சுக் கேட்கும் ரகமில்லை என்று சொல்வது போல பலர் நிழற்படங்களும் காணொளிகளும் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.  விமானத்திலிருந்து வெளியே வந்து எனது Belt வழியாக வந்த Trekking Bag ஐ எடுத்துப் பார்த்தால் தூக்கும்போது ஒரு பக்க Strap ஐ பிய்த்து இருக்கிறார்கள்! Trekking Bag தூக்குவதற்கு அதற்கான இடத்தில் மட்டுமே பிடித்துத் தூக்க வேண்டும். ஆனால் பொதுவாக Baggage Handling என்பது நம் ஊரில் ரொம்பவே மோசமாகவே இருக்கிறது. ஒரு முறை எனது சூட்கேஸ் ட்ராலியும் உடைந்தே வந்தது!



படம்: இணையத்திலிருந்து...

வெளியே வந்து ஊபர் மூலம் ஒரு வாகனத்தினை அமர்த்திக்கொண்டு நாங்கள் தங்க ஏற்பாடு செய்திருந்த JB Residency எனும் தங்குமிடத்திற்கு (விமான நிலையம் அருகே, ஷிம்லா செல்லும் பாதையில் Zirakpur எனும் இடத்தில் இருக்கிறது இந்த தங்குமிடம்) சென்று சேர்ந்தேன். ஏற்கனவே வந்து சேர்ந்திருந்த நண்பர் பிரமோத் மற்றும் கிரிஷ், என்னை வரவேற்க அறையிலிருந்து கீழே வந்தார்கள். சற்றே இடைவெளிக்குப் பிறகு சந்திக்கும் நண்பர்கள் நெஞ்சாரத் தழுவிக் கொண்டோம்.  சில நிமிட விசாரிப்புகளுக்குப் பிறகு அறைக்குச் சென்று சேர்ந்தோம்.  தொடர்ந்து பயணத்தில் கிடைத்த அனுபவங்களை வரும் பகுதிகளில் எழுதுகிறேன். அதுவரை பயணத்தில் இணைந்திருங்கள் நண்பர்களே. பயணம் நல்லது. ஆதலினால் பயணம் செய்வீர்!


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

5 ஜுன் 2026

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....