அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
ஊர் சுத்தி - அடுத்த பயணம் - முன்னுரை என்ற தலைப்பில் கடந்த வெள்ளி அன்று எழுதிய பதிவில் அடுத்த பயணம் குறித்த முன்னோட்டத்தினை வெளியிட்டு இருந்தேன். அந்தப் பதிவிற்குத் தந்த ஆதரவிற்கு நன்றி. அந்தப் பதிவில் சொல்லி இருந்தபடி இதோ அடுத்த பயணத்தொடருடன் உங்கள் அனைவரையும் சந்திக்க வந்துவிட்டேன். நானும் நண்பர் பிரமோத் அவர்களும் நீண்ட நாட்களாகச் செல்ல வேண்டும் என்று நினைத்த ஒரு பயணம் Lahaul Spiti Circuit என்று சொல்லப்படும் பயணம். ஹிமாச்சலப் பிரதேசத்தின் பகுதிகளில் ஒரு Circuit பயணம் - பல முறை யோசித்திருந்தாலும், ஏதோ ஒரு விதத்தில் தடை வரும் - எனக்கு ஒத்து வரும் சமயத்தில் நண்பருக்கு சரியாக இருக்காது. அவர் போகலாம் என நினைக்கும் நாட்கள் எனக்கு ஒத்து வராமல் போகும். இப்படியே இருந்திருக்க, சமீபத்தில் நண்பர் பிரமோத் என்னை அழைத்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது - ஒரு பயணம் போகலாம் என்று சொல்ல, எங்கே என்று நான் கேட்க அவர் சொன்னது இந்த Lahaul Spiti Circuit பயணம்.
மே மாதம் பன்னிரெண்டாம் தேதி புறப்பட்டு மே மாதம் 21/22 தேதி திரும்புவதாக எங்கள் திட்டம் இருந்தது. இந்த Lahaul Spiti Circuit பயணம் என்பது மேலே உள்ள மாதிரி வரைபடத்தில் இருப்பது போல தில்லி/சண்டிகர் நகரிலிருந்து புறப்பட்டு ஷிம்லா, குஃப்ரி, நார்கண்டா, ராம்புர் புஷர், என பயணித்து லாஹௌல் - ஸ்பித்தி வரை சென்று மணாலி அடைந்து அங்கிருந்து குல்லு, சம்பா எனத் தொடர்ந்து பயணித்து சண்டிகர் அடைவது போல ஒரு திட்டம். பெரும்பாலான மாதங்களில் ஸ்பித்தியிலிருந்து மணாலி செல்லும் பாதை பனியால் மூடி இருக்கும் என்றாலும் மே மாதம் பதினைந்து தேதிக்கு மேல் பனி உருகிய பிறகு திறந்து விடுவது வழக்கம். அதனால் எங்கள் திட்டம் மே மாதத்தின் நடுவே வரும்படி அமைத்திருந்தார் நண்பர் பிரமோத். ஜுன் மாதம் என்றால் கோடையின் கொடுமை அதிகம் என்பதோடு மழையும் இருந்தால் மலைப்பாதைகளில் பயணிப்பது கடினம் என்று நாங்கள் மே மாதத்தினை தேர்ந்தெடுத்தோம். வழியில் சில இடங்களில் பசுமை போர்த்திய மலைகள் என்றால் பல இடங்களில் வறண்ட மலைகள் - வெறும் மண்மேடுகள் போல இருப்பதோடு மழை நாட்களில் மலைச்சரிவுகள் ஏற்படும்போது சாலைகள் மொத்தமாக அடித்துச் சென்று விடும் அபாயம் உண்டு. சற்றே சவாலான பயணமாகவே இது இருக்கும்.
பொதுவாக இந்தப் பயணத்தினை இரு சக்கர வாகன ஓட்டிகள் குறிப்பாக என்ஃபீல்ட் பைக் போன்ற வாகனங்கள் வைத்திருப்பவர்கள் மிகவும் விரும்புவார்கள் - நீண்ட பயணம், மலைகள், நதிகள், இயற்கை அழகு, குறைவான மக்கள் தொகை (ஒரு சில இடங்களில் மக்கள் தொகை 30 மட்டும் என பதாகை பார்த்தோம்) என அனைத்தும் இருக்கும் இந்தப் பயணத்திற்காகவே உள்நாட்டின் பல பகுதிகளிலிருந்து பைக் வாகனத்தில் வந்து சேரும் நபர்கள் உண்டு. போலவே வெளிநாடுகளிலிருந்து கூட இந்தப் பயணத்திற்காகவே வரும் நபர்கள் உண்டு. ஒரு சிலர் பல மாதங்களாக சைக்கிளில் பயணிப்பது குறித்து படித்திருக்கிறேன். சற்றே கடுமையான பயணம் தான் - பல இடங்களில் மலைச்சரிவுகள், பனிப்பொழிவு, அதீத வெப்பம் என மாறி மாறி இருப்பதோடு, வருடத்தில் ஆறு மாதங்கள் மட்டுமே இந்தப் பாதையில் பயணிக்க முடியும் என்பதும் ஒரு தகவல். மே மாதம் முதல் அக்டோபர் வரை மட்டுமே பயணிக்க முடியும். அதன் பிறகு இந்தப் பாதையில் பல இடங்களில் தட்பவெப்பம் மோசமாக இருக்கும். பல இடங்களில் -35 டிகிரி வரை - ஆமாம் -35 டிகிரி வரை கூட குளிர், பனி உறைந்து கிடக்கும். கோடை எனப்படும் மே மாதத்தில் கூட சில இடங்களில் -6 வரை குளிர் என்றால் குளிர்காலத்தில் அதீத குளிர் தான்.
நண்பர் பிரமோத் மற்றும் அவருடை நீண்ட கால நண்பர் - கல்லூரி காலத்திலிருந்து தொடரும் நட்பு - கிரிஷ் என்பவரும் திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட, நான் திருச்சியிலிருந்து சென்னை வழி சண்டிகர் வரை பயணித்து அங்கேயிருந்து மூவருமாக பயணத்தினை துவங்குவதாக திட்டம். நான் எனக்கான இரயில் மற்றும் விமானப் பயணத்திற்கு மட்டும் முன்பதிவு செய்ய, நண்பர் பிரமோத் அவர்கள் இருவர்க்குமான விமான பயணத்திற்கான முன்புதிவு செய்தார். கூடவே சண்டிகர் நகரில் தங்குவதற்கான முன்பதிவும் செய்து விட்டார். 12-ஆம் தேதி காலை நான் திருச்சியிலிருந்து சென்னை வரை இரயிலிலும், அங்கிருந்து விமானத்தில் சண்டிகர் வரை பயணிக்க, நண்பர்கள் திருவனந்தபுரத்திலிருந்து சண்டிகர் வரை விமானத்தில் பயணிக்க இருந்தார்கள். முன்பதிவு செய்தபடி எனது பயணம் துவங்க இருந்தது. அலுவலகத்தில் விடுமுறை கிடைப்பது சற்றே கடினம் என்று நினைக்க, பரவாயில்லை சென்று வாருங்கள் என்று சொல்லிவிட்டார் எனது பாஸ்! அவருக்கு நன்றி. வீட்டில் எப்போதுமே பிரச்சனை இல்லை. எங்கே வேண்டுமானாலும் சென்று வாருங்கள் என்று சொல்லிவிடுவார்கள் என்பதால் கவலை இல்லை.
சண்டிகர் வரை விமானப் பயணம் என்றாலும் அதன் பிறகு மலைப்பாதைகளில் பயணிப்பது சவாலான விஷயம். இந்தப் பாதையில் இருக்கும் சில இடங்களுக்கு உள்ளூர் பேருந்துகள் வழி தனியாகவும், நண்பர் பிரமோத் உடனும் பயணித்திருக்கிறேன். உள்ளூர் பேருந்துகள் வழி பயணிப்பதென்றால் நேரம் அதிகம் ஆகும் - சில இடங்களுக்குச் செல்ல பேருந்துகள் கிடையாது. ஜீப் போன்ற வசதிகள் சில இடங்களில் இருந்தாலும் அதுவும் நாம் விரும்பும் நேரத்திற்கெல்லாம் கிடையாது. முன்கூட்டியே சொல்லி வைத்து தான் பயணிக்க முடியும். அதனால் சண்டிகரிலிருந்து பயணித்து Circuit Trip முடித்து சண்டிகர் திரும்பும் வரை ஒரு வாகனத்தினை அமர்த்திக் கொள்ள முடிவெடுத்திருந்தோம். நண்பர் கிரிஷ் (பிரமோதின் நண்பர்) அவர்களுடன் பணிபுரிந்த ஒரு நண்பர் மூலம் அவரது உறவினர் வாகன ஓட்டியாக இருப்பது தெரிய அவரது வாகனத்தினையே பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்திருந்தோம். அதனால் வாகன ஏற்பாடுகள் குறித்த கவலை இல்லை. தங்குமிடங்கள் எங்கேயும் (சண்டிகர் தவிர) முன்பதிவு செய்ய வேண்டாம் என்று முதலிலேயே நினைத்ததால், நேரத்தினை பொறுத்து, மாலை வேளை எந்த இடத்தினை அடைகிறோமோ அங்கேயே தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்றே நினைத்திருந்தோம்.
பயணத்திற்குத் தேவையான உடைகள், பொருட்கள் என அனைத்தும் முதல் நாள் தயார் செய்து விட்டேன். அடுத்த நாள் காலை பயணிக்க வேண்டும். ஒரு பயணம் செய்யப் போகிறோம் என்ற உணர்வு என்னைத் தூங்க விடுவதில்லை. எப்போதுமே இப்படித்தான். அது எந்தப் பயணமாக இருந்தாலும் சுறுசுறுப்பு எங்கிருந்தோ பறந்து வந்து ஒட்டிக்கொள்ளும். புறப்பட வேண்டிய அன்றும் அப்படியே. காலை 04.45 மணிக்கே விழித்துவிட்டேன். முன் தினமே, காலை 06.45 மணிக்கு வரச் சொல்லி ஆட்டோ ஓட்டுநர் முத்துவிடம் சொல்லி வைத்துவிட்டேன். கொஞ்சம் அதிகம் காசு ஆசை கொண்டவர் என்றாலும் சொன்ன நேரத்திற்கு முன்னால் வந்து நின்றுவிடுவார். அன்றைக்கும் அப்படியே வந்து நின்று கொண்டிருந்தார். வீட்டினரிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டாயிற்று. “பயணம் என்றாலே அப்பா மிகமிக மகிழ்வுடன் இருப்பார்….. வீட்டில் இருக்கும் போது தான் உம்மென்று இருப்பார்” என்று வழக்கம் போல இல்லத்தரசி மகளிடம் சொல்லிக்கொண்டு இருந்தார். :) உண்மை தான்… சரியாகவே புரிந்து வைத்திருக்கிறார்….. சும்மாவா 24 வருடமாக என்னைப் பார்த்துக் கொண்டு இருக்கிறாரே… 😃
அம்மா:
அந்தக் காலை நேரத்தில் ஆட்டோவில் பயணித்த போது வெளியில் கண்ட ஒரு காட்சி அம்மாவின் அருமையைச் சொன்னது… முன்பு விளையாடிக் களைத்து வியர்வையுடன் வரும் பிள்ளையின் முகத்தினை தான் புடவை முந்தானையால் துடைத்துவிடும் அம்மாக்கள் உண்டு. ஒரு சில குழந்தைகள் தானாகவே எந்த வித தயக்கமும் இன்றி தன் முகத்தினை அம்மாவின் புடவைத் தலைப்பில் துடைப்பது உண்டு. இப்போது பெரும்பாலான அம்மாக்கள் அணிவது சல்வார் கமீஸ்… பலருக்கு துப்பட்டா இல்லை. அதனால் எப்படி முகம் துடைப்பது? ஒரு சிறுவன் குனிந்து தன் அம்மாவின் கமீஸ் கொண்டு தன் முகத்தினை துடைத்துக் கொண்டிருக்க கைப்பிள்ளையை இடுப்பில் வைத்தபடி மகனுக்கு உதவி செய்தார்… என்றிருந்தாலும் அம்மாக்கள் காட்டும் பாசம் மறைவதில்லை… மாறுவதுமில்லை…
வேறு ஒரு இடம், வேறு ஒரு சூழல்… வேறு ஒரு அம்மா மகனிடம் சொல்லிக் கொண்டு இருந்தார்… அம்மாகிட்ட ஒரு பைசா இல்லை சொல்லிட்டேன். நான் வீட்டுக்கு போறேன். என்னை தொந்தரவு செய்யாதே… நிஜமா சொல்றேன் டா…. ஒரு ரூபா கூட இல்லை. அவர் மகன் எதற்கு கேட்கிறார் என்பது தெரியவில்லை - ஆனால் அம்மா தரமாட்டேன் என்று மறுப்பதற்கு நிச்சயம் சரியான காரணம் நிச்சயம் இருக்கும்.
அம்மா… மறைந்து விட்டாலும் நினைவுகள் மறப்பது இல்லை. ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு விதத்தில் அவளைப் பற்றி பேசிக்கொண்டு தான் இருக்கிறேன். பயணம் குறித்து எழுதும்போதும் அம்மாவின் நினைவு - எங்கே போனாலும் “பார்த்து பத்திரமா போய்ட்டு வா, புறப்படறதுக்கு முன்னாடி வனமாலி சொல்லிட்டு புறப்படு” என்று தான் சொல்லி அனுப்புவார்!
பயணத்தில் தொடர்ந்து கிடைத்த அனுபவங்கள் மற்ற தகவல்கள் என அனைத்தையும் இந்தத் தொடரில் எழுத இருக்கிறேன். ஆதலால் பயணத்தில் தொடந்து இணைந்திருங்கள் நண்பர்களே. பயணம் நல்லது. ஆதலினால் பயணம் செய்வோம்!
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
1 ஜுன் 2026







இனிய பயணம் தொடங்கி விட்டது. தொடர்கிறேன்.
பதிலளிநீக்கு