திங்கள், 31 அக்டோபர், 2016

லூசாடீ நீ!தீபாவளி முடிந்து விட்டது. தீபாவளி நினைவுகள் இன்னும் விட்டு விலகவில்லை. குறிப்பாக இரண்டு நிகழ்வுகள்..... 

தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதில் அத்தனை ஆர்வம் இல்லை. சிறு வயதில் நூறு ரூபாய்க்கு பட்டாசு வாங்கினாலே நிறைய இருக்கும் – அதில் கொஞ்சம் எடுத்து கார்த்திகைக்கு எடுத்து வைத்து விடுவார்கள். மீதியிருப்பதை மூன்று பங்காகப் பிரித்து எனக்கும் சகோதரிகளுக்கும் கொடுப்பார் அம்மா.  அப்போது பட்டாசு நிறைய இல்லையே என ஏக்கம் இருந்தாலும், இப்போது எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கலாம் என்றாலும் வாங்கத் தோன்றவில்லை. மகளுக்காக கொஞ்சம் வாங்கித் தானே ஆக வேண்டும். பட்டாசு வாங்க மகளை அழைத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தேன். திருவரங்கத்தின் வெள்ளை கோபுரம் வழியே நடந்து கொண்டிருந்தேன்.  நான் அன்று அணிந்திருந்த டி-ஷர்ட்டில் ஒரு யானையின் ஓவியம் வரைந்திருக்கும். நான் மகளுடன் பேசியபடியே நடந்து கொண்டிருந்தபோது, பின்னாலிருந்து ஒரு குரல் – அண்ணா.....என்று அழைக்க திரும்பிப் பார்த்தேன். அங்கே எட்டு வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன். பார்க்கும்போதே மனநிலை வளர்ச்சி இல்லாத சிறுவன் என்பது தெரிந்தது. எதற்கு அழைத்தான் என யோசித்தபோது, அவனே அருகில் வந்து, என் டி-ஷர்ட்டில் இருக்கும் யானையைத் தொட்டு, இது என்ன?என்று கேட்டான்.

மகள் சற்றே கலவரத்தோடு பார்த்துக் கொண்டிருக்க, நான் “என்ன கண்ணா, இது என்ன என்று தானே கேட்டாய், இது யானைஎன்று சொல்ல, மீண்டும் கேட்டான் – “எத்தனை யானை?என்று கேட்க, ஒரு யானை என தொடர்ந்து பதிலளித்தேன்.  தொடர்ந்து கேள்வி கேட்டபடியே அவன் நடக்க நானும் பதில் சொல்லியவாறே நடந்து கொண்டிருந்தேன்.  யானையை அச்சிறுவனுக்கு பிடித்திருந்தது போலும்...  சட்டையில் இருந்த யானையைத் தொட்டபடியே சில அடிகள் எங்களோடு நடந்து பிறகு விட்டு விலகினான். நானும் மகளும் அச்சிறுவனைப் பற்றிப் பேசியபடியே நடந்தோம். 

பட்டாசுகள் வாங்கிக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தோம்.  எங்கள் வீடு இருக்கும் சாலையில் ஒரு வீட்டின் வாசலில் சிறுவன் அமர்ந்து கொண்டிருந்தான்.  அந்த சிறுவனுக்கும் மனநிலை சரியில்லை. முன்னரே பல முறை பார்த்திருக்கிறேன். போகும் போதும் வரும்போதும் ஒரு குழந்தைப் புன்னகை புரிவான். யாரைப் பார்த்தாலும் ஒரு சிரிப்பு.  நானும் ஒன்றிரண்டு முறை சிறுவனுக்கு டாட்டா காண்பித்து வந்ததுண்டு. ஆனால் நேற்று அவனைப் பார்த்தபோது மனதுக்குக் கஷ்டமாகி விட்டது. காரணம் சிறுவன் அல்ல... அவன் உடன் பிறந்தவர்கள்.....சிறுவன் வாசல் திண்ணையில் அமர்ந்திருக்க, அவனது சகோதரனும், சகோதரியும் வாசலில் வெடி வெடித்துக் கொண்டிருந்தார்கள். சட்டென்று அச்சிறுவன் பட்டாசு ஒன்றை வாயில் வைத்துவிட, அவனது சகோதரனும், சகோதரியும் அதைப் பார்த்து பட்டாசை வாயிலிருந்து எடுத்துத் தூக்கிப் போட்டார்கள். எத்தனை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.  கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்ல விஷயம் தான். ஆனால் அதற்கு அடுத்த செயல்கள் மனதை மிகவும் பாதித்தன.....

மனநிலை சரியில்லாத அச்சிறுவனை அவனது சகோதரியும், சகோதரனும் அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். குறிப்பாக அவனது சகோதரி ‘பட்டாசு வாயில வைப்பியா, வைப்பியா? என கேட்டுக் கேட்டு அடிக்க, அச்சிறுவன் மனநிலை சரியில்லாதவனா இல்லை அவன் சகோதரி மனநிலை சரியில்லாதவளா என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. சிறுவனுக்கு பட்டாசு, அதில் இருக்கும் மருந்து பற்றியோ, அது தனக்குக் கேடு தரும் என்பதோ தெரியாது.  ஆனால் தெரிந்த அவனது சகோதரி சிறுவனை கவனமாகப் பார்த்துக் கொண்டிருக்கலாம் – அதை விட்டு அவனை அடிப்பதில் என்ன அர்த்தம்.... 

எனக்கு வந்த கோபத்தில், “லூசாடி நீ?என்று கேட்கலாம் என்று தோன்றியது. என்றாலும், அப்படி கேட்காமல், “ஏம்மா அடிக்கற, அடிக்காதேஎன்று சொல்லிவிட்டு வந்தேன். 

இப்படி மனநிலை சரியில்லாதவர்களை வளர்ப்பது கஷ்டமான விஷயம் தான். அதிக அளவு பொறுமை வேண்டும். பல சமயங்களில் பொறுமையைச் சோதிக்கும் அளவிற்குத்தான் மனநிலை சரியில்லாதவர்கள் நடந்து கொள்வார்கள் என்றாலும் பார்த்துக் கொள்பவர்கள் பொறுமையோடு நடக்க வேண்டும்.  சொல்வது எளிது தான் என்றாலும், வேறு வழியில்லையே.....  அதிலும் அவர்களை அடிப்பது எந்த விதத்திலும் சரியில்லையே....

அன்றைய நாள் முழுவதுமே இந்த இரண்டு நிகழ்வுகளுமே மனதை விட்டு நீங்கவில்லை...... ஆண்டவன் இப்படியான மனிதர்களை படைக்க வேண்டாம். இப்படிப் படைப்பதற்கும் அவர்களுடைய பூர்வ ஜென்ம கர்மபலன்கள் காரணம் என்று சொன்னாலும் இப்படி படைக்காமல் இருக்கலாமே....  என்னவோ போங்க!

மீண்டும் ச(சி)ந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்

திருவரங்கத்திலிருந்து......

ஞாயிறு, 30 அக்டோபர், 2016

ரங்கோலியில் ராமாயணக் காட்சிகள்....


சமீபத்தில் தலைநகர் தில்லியில் இரண்டாவது தேசிய கலாச்சார விழா நடந்து முடிந்தது. ஒரு வாரத்திற்கு மேல் நிகழ்ச்சிகள் இருந்தாலும் என்னால் இரண்டு தினங்கள் மட்டுமே நிகழ்ச்சிகளுக்கு சென்று வர முடிந்தது. ஒவ்வொரு நாளும் கலைநிகழ்ச்சிகள் களைகட்டின.  பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் இசையும் நடனமும் கோலாகலமாக இருந்தது. அந்தத் திருவிழா சமயத்தில் நாக்பூரில் இருந்து வந்திருந்த சில கலைஞர்கள் ஒரு கொட்டகையில் ராமாயணக் காட்சிகளை ரங்கோலியில் வரைந்து காட்சி அமைத்திருந்தார்கள். 

அந்தக் காட்சிகளின் ஒரு தொகுப்பு இங்கே இந்த ஞாயிறில் புகைப்படப் பகிர்வாக......


வால்மீகியும் ராமாயணமும்.....


ஒடிந்தது வில்.....


நடந்தது திருமணம்.....


பாதுகையே அரியணையில்.........


காட்டில் ராமனும் சீதையும்.....


கபட சாமியாராக ராவணன்.....


வீழ்ந்தது ஜடாயுவின் சிறகு.....


கூனியின் கூன் நிமிர்ந்தது.....


ராம பக்த ஹனுமான்.....


நட்பா, பக்தியா?....


ராம நாமத்துடன்  மிதக்கும் கற்கள்.....


கடல் கடந்து போர்.....


அழிந்தது இலங்கை - பார்வையிடும் ராவணன்.....


கலைப்பயணத்தில் ஒரு கலைஞர்......

இந்தக் கலைஞர்களை அழைத்து வந்திருந்தது South Central Zone Cultural Centre, Nagpur.  இந்தியாவில் மொத்தம் இப்படி ஏழு Cultural Centres உண்டு.  Ministry of Culture, New Delhi தான் இந்த அமைப்புகளுக்கு தலைமை. தமிழகத்திலிருந்தும் சில கலைஞர்கள் வந்திருந்தார்கள். அவர்களின் நிகழ்ச்சிகளை பார்க்க முடியாத சூழல். சென்றிருந்த ஒரு நாளில் அவர்களை உணவகத்தில் – “நம்ம ஊரு இட்லிஎன்ற உணவகக் கடை ஒன்றில் பார்க்க முடிந்தது. 23-ஆம் தேதி எங்கள் நிகழ்ச்சி, நிச்சயம் பார்க்க வேண்டும்என அழைப்பு விடுத்தார்கள் – நான் 22-ஆம் தேதியே திருச்சி வருவதற்கு முன்பதிவு செய்திருந்தேன்....

அடுத்த முறை தமிழக நிகழ்ச்சிகளையும் பார்க்க வேண்டும்......  இந்த முறை கொல்கத்தாவிலிருந்து உஷா உதூப் வந்திருந்தார் – அவரது இசை நிகழ்ச்சியைக் கண்டு ரசித்தேன் – ஒரே ஒரு குறை – பல மொழிகளில் பாடல்கள் பாடிய அவர் – தமிழில் ஒரே ஒரு பாட்டு பாடினார் – அதாவது தமிழ் திரைப்படத்திலிருந்து ஒரே ஒரு பாட்டு – அது சத்தியமாக தமிழ் பாடல் அல்ல! என்ன பாடல் என்று தானே கேட்கிறீர்கள்...... அந்த பாட்டு......

...
...
...
...
...
...
...
...
...
...

Why this kolaveri…..  இதை தமிழ் பாடல் எனச் சொன்னது தான் எனக்கு கொலவெறி உண்டாக்கியது! சரி விடுங்கள்.....  அடுத்த வருடம் வேறு தமிழ் பாடல் கேட்க வாய்ப்பு கிடைக்கும் என நம்புவோம்.....

இப்போதைக்கு ராமாயணக் காட்சிகளை – ரங்கோலியில் வரையப்பட்ட காட்சிகளை ரசிப்போம்.... அந்தக் கலைஞர்களுக்கு நம் எல்லோர் சார்பிலும் பூங்கொத்து......

நாளை மீண்டும் ச[சி]ந்திப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

திருவரங்கத்திலிருந்து......  

சனி, 29 அக்டோபர், 2016

சார் லட்டு – தித்திக்கும் தீபாவளி


பிரபு நடித்த ஒரு படத்தில் சார் லட்டு சார் லட்டுஎன்று அனைவருக்கும் லட்டு கொடுக்கும் ஒரு காட்சி வரும். எந்த படம், எப்போது வந்தது என்று யாரும் கேட்டு விடாதீர்கள் – நமக்கும் சினிமாவுக்கும் எட்டாத தூரம்!  சார் லட்டு என்று ஒரு மலையாள குறும்படமும் பார்த்திருக்கிறேன்! அதைப் பற்றியெல்லாம் இங்கே பேசப் போவதில்லை. இன்றைக்கு தீபாவளி..... நான் தில்லியிலிருந்து வருவதற்கு முன்னரே வீட்டில் லட்டு செய்திருந்தார்கள் – அதுவும் முதன் முறையாக.....  நான் வரும் வரை காத்திருந்தார்கள் – சாப்பிட்டுப் பார்க்காமல்! நான் சாப்பிட்டு, எப்படி இருக்கிறது என்று சொன்ன பிறகு சாப்பிட எண்ணம்.... :) முதல் முறையாக லட்டு செய்திருக்கிறார்களே – அதனால் இத்தனை முன் ஜாக்கிரதை உணர்வு!  புதிய புதிய முயற்சிகள் செய்யும்போது பல வீடுகளில் இப்படி சோதனை எலிகளாக இருப்பது அந்தந்த வீட்டின் தலைவர்கள் தானே!லட்டு தவிர இன்னுமொரு புதிய முயற்சி – சாதாரண மைசூர் பாக் செய்யாமல் கடலைமாவுடன் பால் பவுடர் சேர்த்து ஒரு புதிய வகை மைசூர் பாக்....  பலகாரங்கள் செய்யும்போது தொடர்ந்து கட்டளைகள் – அதை எடுத்துக் கொடுங்க, முந்திரிப் பருப்பு உடைச்சுக் கொடுங்க, நான் கிளறிக்கிட்டே இருக்கேன், நீங்க மாவுக் கலவையை கொஞ்சம் கொஞ்சமா வாணலியில் கொட்டுங்க என்று தொடர் instructions! செய்து முடித்த பிறகு இதற்கு என்ன பெயர் வைக்கலாம் என ஒரு Mini Discussion – மில்மா மைசூர்பாக், பால் பவுடர் மைசூர் பாக், கோல்டன் மைசூர்பாக் என சில பெயர்களை வைக்கலாம் என அளவளாவினோம்.... என்ன பெயராக இருந்தால் என்ன, நன்றாக இருந்தால் சரி! நன்றாகவே இருந்தது என்பதையும் சொல்லி விடுகிறேன்!  
முள்ளு முறுக்கு அச்சில் தேன்குழல், காராபூந்தி, ஓம்பொடி, கார்ன் ஃப்ளேக்ஸ், பொட்டுக்கடலை, வேர்க்கடலை என எல்லாம் சேர்த்து ஒரு மிக்சர் என கார வகைகள். ரொம்ப நாளா ஒரு ஆசையாம் அம்மணிக்கு! அது உக்காரை செய்யணும்கிற ஆசை தான்....  இந்த வாட்டி அதுவும் செய்துருக்காங்க!  

உக்காரை – அம்மணி முதன்முறையாக முயற்சி செய்த ஒரு பாரம்பரிய இனிப்பு. அது பற்றி அவர் வார்த்தைகளில்....என் அப்பாவுக்கு மிகவும் பிடித்தமானது.

இதை பற்றிய ஒரு சுவையான கதை.... என் அப்பா, அம்மாவின் தலைதீபாவளிக்கு என் பாட்டி (அம்மாவின் அம்மா) மாப்பிள்ளைக்காக செய்து கொடுத்தார்களாம். அன்று முதல் என் அப்பாவுக்கு இந்த இனிப்பு பிடித்தமாகிப் போனது.

என் கணவர் இதுவரை சாப்பிடாத இனிப்பாக இருக்கட்டும் என உக்காரையையும் செய்து கொடுத்தேன். செய்யும் போதே இது எப்படி இருக்கும் எனக் கேட்க, நான் எப்படி செய்து, என்ன வடிவில் வருகிறதோ!! அப்படித் தான் இருக்கும் என்றேன்...:))

கடலைப்பருப்பும், வெல்லமும் சேர்ந்த உக்காரையை என் பாட்டி நினைவாக நானும் செய்துள்ளேன்..

அனைவருக்கும் தித்திக்கும் தீபாவளி வாழ்த்துகள்...

     ஆதி வெங்கட்......
சரி... மீண்டும் என் பதிவுக்கு வருவோம்...இத்தனை சாப்பிட்டால் வயிறு கடாமுடா செய்யும் என்பதற்காக கொஞ்சம் தீபாவளி லேகியம் என அனைத்தும் தீபாவளிக்கு முன்னரே தயாராகி விட்டது..... 

இந்தாங்க! லட்டு, தேன்குழல், மிக்சர், மில்மா மைசூர்பாக், உக்காரை எல்லாம் சாப்பிட்டு, கொஞ்சம் மருந்தும் எடுத்துக்கோங்க! என்ன மருந்து தான் கொஞ்சம் கல்கோனா மாதிரி வந்திருக்கு.....  காலையில வாயில போட்டா சாயங்காலம் வரைக்கும் இருக்கும்! இப்படி எழுதுனேன்னு யாரும் வீட்டுல போட்டுக் கொடுத்துடாதீங்க! அதால அடிச்சா மண்டை உடைஞ்சாலும் உடையலாம்!

அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள். மகிழ்ச்சி பொங்கட்டும்......

மகிழ்ச்சி.....

மீண்டும் ச[சி]ந்திப்போம்.....

நட்புடன்

வெங்கட்
திருவரங்கத்திலிருந்து....வெள்ளி, 28 அக்டோபர், 2016

ஃப்ரூட் சாலட் 181 – நம்ம ஊரு திருச்சி – ரங்கோலி – மரம் நடுவோம்.....


இந்த வார செய்தி:

நல்ல ம(ன)ரம் வாழ்க...அது ஒரு வேப்பமரம். பதினைந்து ஆண்டு காலம் கிடைத்த தண்ணீரை வாங்கிக்கொண்டு நிழலும் நல்ல காற்றும் தந்து திருப்பூரின் ஒரு இடத்தில் வளர்ந்து கொண்டு இருந்தது.

அந்த இடத்தில் ஒரு கட்டிடம் கட்டவேண்டிய தேவை ஏற்பட்டது, கட்டிடம் கட்டுவதற்கு இருந்த ஒரே இடையூறு இந்த வேப்பமரம்தான்.உண்மையைச் சொல்வதானால் அது இடையூறு இல்லை வைத்த இடத்தில் அது பாட்டுக்கு வளர்ந்து தன் கடமையை செய்து வந்தது அந்த இடத்தைவிட்டு அப்புறப்படுத்தவேண்டிய தவிர்க்கமுடியாத சூழ்நிலை.

யாரையாவது கூப்பிட்டு 'வெட்டி எடுத்துட்டு போ' என்று சொன்னால் இரண்டு மணி நேரத்தில் இப்படி ஒரு மரம் இங்கு இருந்தது என்பதற்கான சுவடே இல்லாமல் செதில் செதிலாய், விறகு விறகாக வெட்டி எடுத்துக்கொண்டு போக நுாறு பேர் காத்திருந்தனர். அதுதான் வழக்கமான நடைமுறை என்று பலரும் ஆலோசனை தந்தனர். ஆனால் இடத்தின் மரத்தின் உரிமையாளர் நிர்மலாவிற்கு ஏனோ மனம் அதற்கு உடன்படவில்லை. திருப்பூரை வனமாக மாற்றிவரும் வனத்துக்குள் திருப்பூர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிவராமை தொடர்புகொண்ட போது பலருடன் கலந்துகொண்டு ஒரு ஆலோசனை சொன்னார்.

அந்த ஆலோசனை, மரத்தை அப்படியே வேருடன் பிடுங்கிக் கொண்டு போய் வேறு இடத்தில் நட்டு வளர்ப்பது என்பதாகும். இந்த முயற்சியில் ஐம்பது சதவீதம் மரம் பிழைக்கவும் வழி இருக்கிறது ஐம்பது சதவீதம் மரம் பிழைக்காமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது.
பிழைக்க ஐம்பது சதவீதம் வாய்ப்பு இருக்கிறது அல்லவா அப்படியானால் முயற்சித்துவிடுவோம் என்று நிர்மலா முடிவு எடுத்தார்.

இது போன்ற முயற்சி இதற்கு முன் திருப்பூரில் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை, இருந்தாலும் மரம் வெட்டக்கூடாது என்பதில் நிர்மலா உறுதியாக இருந்ததால் ஒரு குழந்தையை காப்பாற்றும் முனைப்போடு அனைவரும் களமிறங்கினர்.

இதற்காக வனத்திற்குள் திருப்பூர் மகேந்திரன் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.மரத்தை சுற்றி பத்து அடிக்கு குழி வெட்டவேண்டும், ஆனி வேர் அடிபட்டுவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும், மரம் காயப்பட்டுவிடாமல் சாக்கு சுற்றி அதன் மீது இரும்பு சங்கிலி போட்டு கிரேன் மூலம் துாக்கவேண்டும்,துாக்கிய பிறகு அங்கு இருந்து பதினைந்து கிலோமீட்டர் துாரத்தில் உள்ள நிர்மலாவிற்கு சொந்தமான பல்லடம் மகாஆர்கானிக் பண்ணையில் கொண்டுபோய் நடவேண்டும், பொறுமையாகவும் செய்யவேண்டும் அதே நேரம் வேகமாகவும் செய்யவேண்டும்.

இவ்வளவையும் திட்டம் போட்டபிறகு வேப்பமரத்திடம் குனிந்து 'தாயே தவிர்க்கமுடியாமல் உன்னை இடமாற்றம் செய்கிறோம், நீ போகிற இடம் உன் சகாக்கள் நிறைந்த அருமையான இடம் ஆகவே சந்தோஷமாக சம்மதம் கொடுக்கணும்' என்று மானசீகமாக சொல்லி அனுமதி வாங்கிக்கொண்டு வேலையை ஆரம்பித்தனர்.

திட்டமிட்டபடி எல்லாம் நடந்து மண்ணைவிட்டு அலேக்காக துாக்கும் போதும், அதை அடிபடாமல் கிரேனில் இருந்து லாரிக்கு மாற்றம் செய்யும் போதும், ஒரு பெரிய கூட்டமே சுற்றி நின்று கொண்டு சமுதாயத்திற்கு உழைத்த ஒரு பெரிய மனிதரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போவதைப் போல 'பார்த்து பார்த்து' என்றெல்லாம் குரல் கொடுத்தனர்.

லாரி மூலம் வேப்பமரம் பண்ணைக்கு கொண்டு செல்லப்பட்டதும் அங்கே திட்டமிட்டபடி தோண்டி வைக்கப்பட்டிருந்த அகலமான குழியில் மரம் நடப்பட்டது, உரம் கலந்த மண் போட்டு மூடப்பட்டது.மரங்களின் பட்டைகளில் ஈரம் போகாதிருக்க அரிசி சாக்குகள் சுற்றப்பட்டது,வெட்டும் போது தவிர்க்கமுடியாமல் காயம்பட்ட மரத்தின் அனைத்து இடங்களிலும் மருந்து போல பசுஞ்சாணம் வைக்கப்பட்டது,'பிழைச்சு வரணும் தாயி' என்று கும்பிட்டபடி தண்ணீர் விடப்பட்டது.

இந்த மரத்தை இருந்த இடத்திலேயே வெட்டி விற்று இருந்தால் இரண்டாயிரம் ரூபாயோ மூன்றாம் ரூபாயோ கிடைத்திருக்கும் ஆனால் இப்படி மாற்று இடத்தில் நடுவதற்கு எடுத்துக்கொண்ட முயற்சிக்கு முப்பதாயிரம் ரூபாயாகும், 'அவ்வளவு ரூபாய்க்கு மரம் மதிப்பு இல்லையேம்மா'? என்ற போது முப்பதாயிரம் அல்ல அறுபது ஆயிரம் ரூபாய் ஆனாலும் அதை காப்பாற்றியே தீருவேன் என்று சொல்லி பணத்தையும் நேரத்தையும் மட்டுமின்றி யாரும் கொடுக்கமுடியாத மதிப்பையும் மரத்திற்கு கொடுத்த நிர்மலாதான் முதல் சொம்பு தண்ணீரை விட்டார்.

முதல் நாள் இரண்டாம் நாள் மூன்றாம் நாள் எதுவும் தெரியவில்லை, தண்ணீர் விடுவதும் சாணியை மாற்றி அப்புவதும் மட்டும் தொடர்ந்தது.ஐசியுவில் இருக்கும் குழந்தையை பார்ப்பது போல பலரும் மரத்தை சுற்றி சுற்றி வந்து பார்த்து ஏதாவது மாற்றம் தெரிகிறதா என பார்வையிட்டனர்.

நான்காம் நாளும் போய் ஐந்தாம் நாளும் வந்துவிட்டது மாற்றம் தெரியவில்லை பலருக்கும் கண்ணீரே வந்துவிட்டது.சாப்பிடக்கூட பிடிக்கவில்லை.இவ்வளவு பேரின் பாசத்திற்காகவாவது மரம் பிழைத்து விடவேண்டும் என்று பார்த்தவர்கள் வேண்டிக்கொண்டனர்.

வேண்டுதல் வீண் போகவில்லை தீவிர சிகிச்சைக்கு பின் பிழைத்த குழந்தை கண்ணைத்திறந்து கையை அசைத்தால் எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுமோ அவ்வளவு மகிழ்ச்சி ஏழாம் நாளில் ஏற்ப்பட்டது காரணம் அப்பிய சாணத்தை மீறிக்கொண்டு சில வேப்பிலை கொளுந்துகள் மலர்ந்து வளர்ந்து சிரித்தபடி எங்களைப்பாரேன் என்றபடி எட்டிப்பார்த்தன.

கொஞ்ச நேரத்தில் மரம் பிழைத்துவிட்டதற்கு அடையாளமாக ஆங்காங்கே மேலும் சில கொளுந்துகள் துளிர்த்திட பார்த்தவர்கள் அனைவரது கண்களிலும் ஆனந்த கண்ணீர்,நிர்மலாவின் கண்களில் கொஞ்சம் கூடுதலாக...

எல்.முருகராஜ், தினமலர்.....

இந்த வார முகப்புத்தக இற்றை:

அப்பா: ஏண்டா மவனே, உங்கம்மா இன்னிக்கு பேசாம உட்கார்ந்து இருக்கா?

மகன்: அம்மா லிப்ஸ்டிக் கேட்டாங்க, என் காதுல ஃபெவிஸ்டிக்-னு விழுந்துடுச்சுப்பா....  :)

இந்த வார ஓவியம்:

ஓவியம் என்று சொல்வதா இல்லை ரங்கோலி என்று சொல்வதா?  ரங்கோலியில் ராமாயணம் என ஒரு காட்சி பார்த்தேன் தில்லியில். முழு பதிவாக ஞாயிறன்று வெளியிடுகிறேன். இந்த ஃப்ரூட் சாலட் பகுதியில் அதற்கு ஒரு முன்னோட்டமாக இந்தப் படம்.....
இந்த வார காணொளி:

நம்ம ஊரு திருச்சி – திருச்சி பற்றிய ஒரு காணொளி....  பாருங்களேன்!
இந்த வார ரங்கோலி:

தில்லியில் சமீபத்தில் இரண்டாவது தேசிய கலாச்சார விழா நடந்தது. ஒவ்வொரு நாளும், நிகழ்ச்சி நடந்த இடத்தில், ஒரு ரங்கோலி போடுவார்கள்.  நாங்கள் சென்ற ஒரு தினத்தில் போட்ட ரங்கோலி இன்றைய பகிர்வில்.....ராஜா காது கழுதைக் காது:

ரொம்ப வாரமா இந்த பகுதி இணைக்கவில்லை! இந்தப் பகுதிக்கென்றே தனியாக ரசிகர்கள் இருப்பதை தெரிந்து வைத்திருக்கிறேன் – இருந்தாலும் எழுத இயலவில்லை.  இன்று மீண்டும் ராஜா காது கழுதைக் காது!

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் – அங்கே ஒரு இளம்பெண்ணும், ஒரு இளைஞனும் – காதலர்களா, நண்பர்களா இல்லை கணவன் மனைவியா என்பது தெரியாது – தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமுமில்லை – என்ன பேசினார்கள் என்பது மட்டுமே இப்பகுதிக்கு அவசியம்!

இளம்பெண்:  “ஏண்டா இடியட், Data On பண்ணினா, அதை Off பண்றதில்லையா? பாரு மொத்தமும் போயிடுச்சு.......

இளைஞன்:  அய்யோ, கத்தாத....  ஆயிரம் ரூபாய்க்கு Data top up பண்றேன்... போதுமா!

இந்த வார WhatsApp செய்தி:

வாழ்ந்து காட்டுவோம்:

பூமியில் விதைக்கப்பட்ட விதை கூட எதிர்ப்பைச் சமாளித்து முளைத்துக் காட்டுகிறது.

ஒவ்வொரு நாளும் காட்டில் சிங்கத்தால் கொல்லப்படுகின்ற நிலையில் உயிர் வாழும் மான் கூட பிரச்சனைகளை சமாளிக்கின்றது.

பெரிய மீன்களால் ஆகாரத்திற்காக விழுங்கப்படும் நிலையிலிருக்கும் சிறிய மீன்களும் கடலில் புலம்பாமல் வாழ்கின்றன.

மனிதர்களால் எப்பொழுது வேண்டுமானாலும் வெட்டப்படுகின்ற வாழ்க்கையை அனுபவிக்கின்ற மரங்களும் நிமிர்ந்து நிற்கின்றன.

ஒவ்வொரு நாளும் ஆகாரத்திற்காக பல மைல்கள் தூரம் பறந்தாக வேண்டிய பறவைகளும் மனம் சலிப்படையாமல் முயற்சி செய்கின்றன.

சிறியதான உடலையும், பல கஷ்டங்களையும் சமாளிக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கும் எறும்புகள் கூட துவண்டு போகாமல் வாழ்ந்து காட்டுகின்றன.

தண்ணீரே இல்லாத பாலைவனத்தில் உயிர் தரிக்க வேண்டிய நிலையிலிருக்கும் ஒட்டகங்களும், எங்கும் ஓடிப்போகாமல் அதில் வாழ்ந்து காட்டுகின்றன.

ஒரு நாள் மட்டுமே வாழ்க்கை என்ற நிலையிலிருக்கும் பலவகை பூச்சிகளும், அந்த ஒரு நாளில் உருப்படியாக வாழ்கின்றன.

இப்படி பலகோடி உயிரினங்கள் உலகில் வாழ முடியுமென்றால் நம்மால் வாழ முடியாதா?

*எப்படியும் வாழ்ந்தே ஆகவேண்டிய வாழ்க்கை.*
*அதை ஏன் புலம்பிக்கொண்டு வாழ வேண்டும்?*
*அதை ஏன் வெறுத்துக்கொண்டு வாழ வேண்டும்?*
*அதை ஏன் தப்பிக்கப் பார்க்க வேண்டும்?*
*அதை ஏன் அழுதுகொண்டு வாழ வேண்டும்?*
*மகிழ்ச்சியோடும் மன நிறைவோடும் வாழ்ந்து தான் பார்ப்போமே.!*

இது உன் வாழ்க்கை என்றபோது மிச்சம் இருப்பது ஆனந்தத்தை தவிர வேற என்ன இருக்கிறது. ஆகவே, ஆனந்தமாக வாழ்வோம், வாழ்ந்து காட்டுவோம் உலகுக்கு ஒரு சான்றாக.

படித்ததில் பிடித்தது:

டாக்டர்.. எனக்கு என்ன வயசுன்னு தெரியாதது தான் பிரச்சனை டாக்டர்.

மனோதத்துவ மருத்துவர்.. அப்படியா...!?

ஆமா டாக்டர் இப்ப பொண்டாட்டி புள்ள குட்டிகளோட வசதியாயிருந்தாலும் சின்ன வயசுல அப்பா அம்மா இல்லாமலயே வளந்துட்டதால வயசு தெரியல...

இப்ப என்ன உங்க வயசு தெரியனும் அவ்ளோதானே..?

ஆமா டாக்டர்... ஆமா...?

சரி இப்ப நான் கேக்குற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லுங்க கண்டுபிடிச்சிடலாம்... சிஸ்டர் இங்க வாங்க நான் சொல்றத எழுதிக்குங்க...

உங்க பேரென்ன... - ராமநாதன்...

என்ன தொழில் பண்றீங்க... - பைனான்ஸ்...

நைட்டு நல்லா தூங்குவீங்களா...? - கடவுள் புண்ணியத்துல படுத்தவுடனே தூங்கிடுறேன் டாக்டர்...

சந்தோஷம்... தூக்கத்துல கனவுலாம் வருமா...? நெறைய டாக்டர்....

அந்த கனவுல நடிகைகளெல்லாம் வர்றாங்களா...? ஆமா டாக்டர்...

எந்த மாதிரி நடிகைங்க... ரேவதி, அமலா மாதிரியான நடிகைங்க....
சிஸ்டர்... 45ன்னு நோட் பண்ணிக்குங்க... ம்...சரி வேற எந்த நடிகைகளும் வரமாட்டாங்களா...

சிலசமயம் அம்பிகா ராதா மாதிரியான வங்களும் வருவாங்க...

சந்தோஷம்... சிஸ்டர் 48 ன்னு நோட்பண்ணிக்குங்க... ம்... அப்புறம் வேற யாரெல்லாம் வருவாங்க...?

ஷகிலா...

உஹூம்... ஷகிலாலாம் எவர்கிரின்.. அதவெச்செல்லாம் வயச கணிக்க முடியாது... வேற...வேற...?

வேற... சிலசமயம் கனவுல ராதிகா வருவாங்க... திடீர்னு ஸ்ரீப்ரியா க்கூட வருவாங்க...

ம்ம்... சிஸ்டர் 54ன்னு நோட் பண்ணிக்குங்க.. ம்... அப்புறம் ராமநாதன்..
அப்புறம்... அப்புறம்... ம்... என்னைக்காவது நான் ரொம்ப உற்சாகமா இருந்தா அன்னைக்கு கனவுல சிம்ரன் வருவாங்க...

சிஸ்டர் 40 ன்னு நோட் பண்ணிக்குங்க... ம் சொல்லுங்க ராமநாதன்...
ம்ம்... அவ்ளோதான் டாக்டர்...

அவ்ளோதானா... சரி சிஸ்டர் நான் சொன்ன நம்பரை யெல்லாம் சொல்லுங்க... 45,48,54,41..

நாலு ரிசல்ட்டையும் கூட்டி நாலால வகுத்தா வர்ற ரிசல்ட் 47..  மிஸ்டர் ராமநாதன் உங்க வயசு நாற்பத்தேழு...

அட கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டீங்க டாக்டர்...

என்ன கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டேனா...? அப்ப ஏற்கனவே உங்க வயசு தெரியுமா..?

தெரியும் டாக்டர்... பக்கத்து பார்பர் ஷாப்புக்கு முடிவெட்டிக்க வந்தேன், அங்கே ஒரே கூட்டம் ஒருமணிநேரமாகும்னுட்டாங்க திரும்ப வீட்டுக்கு போகவும் மனசில்ல பக்கத்துலயே மனோதத்துவ டாக்டர் நீங்க சும்மா உக்காந்திருந்நீங்களா... அதான் சும்மா ஒரு டைம்பாசுக்கு... ரொம்ப தேங்ஸ் டாக்டர்..!

அடப்பாவி...

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.

திருவரங்கத்திலிருந்து...

வியாழன், 27 அக்டோபர், 2016

தவாங்க் – பிரம்மாண்ட புத்தர் சிலை - அழகிய ஓவியங்கள்.....


ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 61

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.


பிரம்மாண்ட புத்தர் சிலை.....


தவாங்க் மோனாஸ்ட்ரி - வெளிப்புறத் தோற்றம்...

PTSO Lake-ல் சிறிது நேரம் இயற்கையை ரசித்தபடி இருந்த பிறகு தவாங்க் நகர் நோக்கி பயணத்தினைத் தொடர்ந்தோம். தங்குமிடம் செல்வதற்கு முன்பாக தவாங்க் நகரின் புகழ்பெற்ற Monastery பார்க்க வேண்டும் என்பது எங்கள் திட்டம்.  ஓட்டுனர் ஷம்புவும் புத்த மதத்தினைச் சேர்ந்தவர் என்பதால் அங்கே சென்று வர வேண்டும் என்று ஆரம்பத்திலிருந்தே சொல்லிக் கொண்டிருந்தார்.  ஏரியிலிருந்து தவாங்க் Monastery வந்து வாகனத்தினை நிறுத்தி உள்ளே சென்றோம்.  அழகிய தோரண வாயிலைக் கடந்து உள்ளே வந்தோம். 


புத்தர் சிலை – வேறு கோணத்தில்.....


பிரார்த்தனை செய்தபடி நடக்கும் புத்தபிக்கு.....

மிகவும் பழமையான புத்த மதத்தின் வழிபாட்டுத் தலம் இது. இந்தியாவில் இருக்கும் புத்த மத வழிபாட்டுத் தலங்களில் மிகப் பெரியது இது தான். ஆசியாக் கண்டத்தில் இரண்டாவது பெரிய புத்த மத வழிபாட்டுத் தலமும் இது தான். முதலாம் இடத்தில் இருப்பது திபெத்தின் லாசா. கடல் மட்டத்திலிருந்து 3300 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இவ்விடத்தில் சுமார் 700 புத்தபிக்குகளும், 450 லாமாக்களும் வசிக்கிறார்கள். புத்தமதக் கொள்கைகளை பரப்பும் விதமாக பல்வேறு செயல்பாடுகள் இங்கே உண்டு. 17-ஆம் நூற்றாண்டில் Mera Lama Lodre Gyatso என்பவரால் அமைக்கப்பட்டது இந்த Monastery.  எப்படி அமைக்கப்பட்டது என்பதைப் பார்க்கலாமா.....


வெளிப்புறத்தில் பிரார்த்தனை உருளை.....

இப்படி ஒரு Monastery இந்தியாவில் அமைக்கப்பட வேண்டும் என்பது ஐந்தாம் தலாய் லாமாவின் விருப்பம். அந்த விருப்பத்தினை நிறைவேற்ற Mera Lama முடிவு செய்தார். ஆனால் எந்த இடத்தில் இந்த Monastery அமைப்பது என்பதை அவரால் முடிவு செய்ய இயலவில்லை.  பல இடங்களுக்குச் சென்று பார்வையிட்டாலும், இந்த இடத்தில் கட்டலாம் என்று அவரால் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. சரி ஆண்டவன் விட்ட வழி – எங்கே கட்டவேண்டும் என்பதை ஆண்டவனே நமக்கு உணர்த்தட்டும் என முடிவு செய்து ஒரு குகைக்குள் சென்று அமைதியாக பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்.  நீண்ட நேரத்திற்குப் பிறகு குகையிலிருந்து வெளியே வந்து பார்த்தால், வெளியே நிறுத்தி வைத்திருந்த அவர் குதிரை காணாமல் போயிருந்தது!


மோனாஸ்ட்ரி வெளியே நண்பர்களுடன்.....

நாமாக இருந்திருந்தால், ஆஹா, எவனோ குதிரையை ஆட்டையப் போட்டுட்டான் போல இருக்கே, என்று நினைத்திருப்போம்.  Mera Lama இதுவே ஆண்டவன் நமக்குத் தரும் ஒரு வித Signal – குதிரையைத் தேடுவோம் என முடிவு செய்து மலைப்பிரதேசம் முழுவதும் தேடியபடி அலைந்தார். குதிரையும் கிடைத்தது. அவரது குதிரை ஒரு மலை உச்சியில் நின்று கொண்டிருந்தது. குதிரை வழியாக Monastery அமைக்க தகுந்த இடத்தினை கடவுள் நமக்கு காட்டிக் கொடுக்கிறார் என, Mera Lama குதிரை நின்று கொண்டிருந்த அந்த மலை உச்சியை தேர்ந்தெடுக்கிறார்.  Tawang Monastery அங்கேயே அமைகிறது.  Tawang Monastery என்பதற்கு Horse Chosen என்ற அர்த்தமும் உண்டு!


ஒரு ஸ்தூபி.....

Tawang Monastery-க்கு திபெத்திய மொழியில் Gaden Namgyal Lhatse என்ற பெயரும் உண்டு.  இதற்கு அர்த்தம் என்ன தெரியுமா? தேவலோக சுவர்க்கம்..... சுவர்க்கம் எப்படி இருக்கும் என நமக்குத் தெரியாது. என்றாலும் இது தான் சுவர்க்கம் என நாம் சொல்ல முடியுமா.....   அவர்கள் மொழியில் அவர்கள் அழைப்பதையும் நாம் ஏற்றுக் கொள்வோம்! இந்த இடம் புத்த மத குருவாக இருக்கும் தலாய் லாமாக்களின் வாழ்வில் முக்கியமான இடம் பெற்ற ஒன்று.  14-வது தலாய் லாமா திபெத்தில் இருந்து வெளியேறியபோது இந்த இடத்தில் தான் பாதுகாக்கப்பட்டார் என்பதும் செய்தி.
சுவர் ஓவியங்கள்.....

சுற்றியுள்ள கிராமத்து மக்களின் உதவியுடன் இந்த தவாங்க் Monastery மிக அழகாக உருவாக்கப்பட்டது. இயற்கைச் சீற்றங்களிலும் அன்னியப் படையெடுப்புகளிலும் சில பகுதிகள் அழிந்துவிட்டாலும் இன்றைக்கும் அழகாக இருக்கிறது இந்த Monastery. உள்ளே மிகப் பெரிய புத்தர் சிலை இருக்கிறது. Mural என அழைக்கப்படும் சுவர் ஓவியங்கள் கோவிலின் பக்கச் சுவர்களில் அமைத்திருக்கிறார்கள். மிக அழகான ஓவியங்கள் அவை.  ஒவ்வொரு ஓவியத்தினையும் ரசித்து ரசித்து வரைந்திருக்க வேண்டும். ஒவ்வொன்றையும் படம் எடுத்துக் கொண்டோம். 


நான் அழகா இருக்கேனா.....

Monastery-க்கு சுற்றுலாப் பயணிகள் தவிர உள்ளூர் மக்களும் நிறையவே வருகிறார்கள். அப்படி வந்தவர்களின் ஒருவர் சிறு குழந்தையுடன் வந்திருக்க, அக்குழந்தை அழகழாக அலைபேசி மூலம் அம்மா எடுக்கும் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார்.  அக்குழந்தையையும் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டேன்!
சுவர் ஓவியங்கள்.....

ஆனால் சமீப காலமாக இந்த Monastery இயற்கைச் சீற்றங்களினால் அழிந்து விடுமோ என்ற அபாயம் இருந்து வருகிறது.  மலையுச்சியில் அமைந்திருக்கும் இந்த இடத்தில் பல முறை மலைச்சரிவுகள் ஏற்பட்டிருக்கின்றன.  அடிவாரத்தில் அமைந்திருக்கும் ஏரியும், மலைப்பகுதிகளில் அரிப்பு ஏற்படுத்தி ஆட்டம் காட்டிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து பராமரித்தால் மட்டுமே இந்த வழிபாட்டுத் தலத்தினை காப்பாற்ற முடியும் என்று தோன்றுகிறது.
அருங்காட்சியகத்தில் இருந்த சில பொருட்கள்.....
17-ஆம் நூற்றாண்டு சமையல் பாத்திரங்கள்...

இங்கே ஒரு அருமையான அருங்காட்சியகமும் இருக்கிறது. பல வருடங்களாக பயன்படுத்தப்பட்ட பாத்திரங்கள், சிலைகள், புத்தர் விக்கிரகங்கள் என பலவும் இங்கே காட்சிப்படுத்தி வைத்திருக்கிறார்கள். பத்து ரூபாய் கட்டணம் வாங்கிக் கொண்டு நம்மை அனுமதிக்கிறார்கள். புகைப்படக் கருவிகளுக்கு எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை என்பதில் மகிழ்ச்சி!


வித்தியாசமாய் மூன்று முகங்களுடன் ஒரு கூஜா.....

எல்லோருக்காகவும் பிரார்த்தனை செய்து, சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டு தங்குமிடம் நோக்கி பயணித்தோம்.  அன்றைய தினத்தில் பலவித அனுபவங்கள் – அனைத்தையும் ஒரு முறை மனக்கண்ணில் மீண்டும் பார்த்தபடியே அமர்ந்திருக்க, தங்குமிடம் வந்திருந்தது. அடுத்த நாள் தவாங்கிலிருந்து புறப்பட வேண்டும் – வரும்போது கரடு முரடான சாலை வழியாக வந்ததில் உடல் முழுவதும் வலி! கௌஹாத்தி திரும்ப ஹெலிகாப்டரில் செல்வது என்பது எங்கள் திட்டமாக இருந்தது. அது செயல்படுத்தமுடிந்ததா இல்லையா என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன்!

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

திருவரங்கத்திலிருந்து....