புதன், 19 அக்டோபர், 2016

கணவனுக்காக ஒரு விரதம் – கர்வா சௌத்


படம்: இணையத்திலிருந்து....

இன்று கர்வா சௌத் – வட இந்தியா முழுவதும் திருமணமான பெண்கள் தங்களது கணவனின் நீண்ட ஆயுளுக்காக இருக்கும் விரதம்.  ஒவ்வொரு திருமணமான பெண்ணும் இந்த விரதம் அனுஷ்டிப்பார்கள் – இதற்காகவே விரதத்திற்கு சில நாட்கள் முன்பிருந்தே முஸ்தீபுகள் ஆரம்பித்து விடும்….  விரதம் ஏன், என்ன செய்வார்கள், என்பது பற்றியெல்லாம் இன்று பார்க்கலாம்…..

திருமணமான பெண்கள் தனது கணவனின் நீண்ட ஆயுளுக்காக நாள் முழுவதும் தண்ணீர் கூட அருந்தாமல் விரதம் இருப்பது வழக்கம்.  அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்னர் சாப்பிட்டால், அதற்குப் பிறகு சந்திர உதயத்திற்குப் பிறகு தான் உணவு – தண்ணீர் என எதுவும் சாப்பிட முடியும். அதற்கு முன்னர் மாலை வேளையில் பூஜையும் உண்டு. நிர்ஜல் – அதாவது தண்ணீர் கூட அருந்தாமல் விரதம் இருப்பது. எதற்காக இந்த விரதம், எப்போது ஆரம்பிக்கப்பட்டது என்று பார்க்கலாம்…..

வீரவதி என்று ஒரு இளவரசி. அவருக்கு ராஜாவுடன் திருமணம் ஆகிறது.  தனது தாய்வீடு வந்திருக்கும் சமயத்தில் தனது கணவனை நினைத்து உண்ணாமல் இருக்கிறார். அவர் படும் கஷ்டத்தினைப் பார்த்த அவரது சகோதரர்கள் வற்புறுத்தி உணவு கொடுக்க, வீரவதியின் கணவர் இறந்து விட்டதாய் செய்தி வருகிறது.  சோகத்துடன் கணவன் ஊர் செல்ல, வழியில் சிவனும் பார்வதியும் காட்சி தந்து கர்வா சௌத் விரதத்தின் பெருமைகளைச் சொல்லி அவர் விரதம் இருக்கிறார். கணவனுக்கும் உயிர் திரும்புகிறது. இப்படித் தான் திருமணமான பெண்கள் தனது கணவனின் நீண்ட ஆயுளுக்காக இந்த விரதத்தினை அனுஷ்டிக்கிறார்கள் என்று ஒரு கதை. அதற்கு முன்னரே இவ்விரதம் இருந்திருக்கலாம் என்றும் சொல்வதுண்டு.


படம்: இணையத்திலிருந்து....

கர்வா எனப்படும் சிறிய மண் பாண்டங்கள், விளக்கு என பலவும் இந்தச் சமயத்தில் விற்பனைக்கு வரும். பூஜா விதிகள் பற்றி இங்கே பார்க்கப் போவதில்லை. ஆனால் இந்த விரதம் சமயத்தில் நடக்கும் விஷயங்களைப் பார்க்கலாம்…..  கணவனின் ஆயுள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் ஒவ்வொரு திருமணமான பெண்ணும் இந்த விரதம் அனுஷ்டிக்கிறார்கள். சூரிய உதயத்திற்கு முன்னர் சாப்பிட்டால் சந்திர உதயம் ஆகும்போது சந்திரனை, ஒரு ஜல்லடை மூலமாக பார்த்து பிறகு தனது கணவனின் முகத்தைப் பார்த்து, கணவன் தண்ணீர் கொடுக்க, அதை அருந்தி விரதத்தை முடிப்பார்கள்.


படம்: இணையத்திலிருந்து....

விரதத்திற்குச் சில நாட்களுக்கு முன்னரே சிவப்பு வண்ண புடவையில் ஜரிகைகள், ஜிகினா வேலைகள் செய்து இருப்பதை ஒவ்வொரு வருடமும் புதிதாய் வாங்கிக் கொள்வார்கள். புடவையே சில சமயங்களில் ஆறாயிரம் ஏழாயிரம் என விலை கொடுத்து வாங்குவார்கள். பெரும்பாலான பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொள்ள புதிய நகைகள், வளையல்கள் வாங்குவதும் உண்டு. கைகளில் – உள்ளங்கை முதல் முட்டி வரை மருதாணியால் அலங்கரித்துக் கொள்வார்கள்.  மருதாணி வைத்துவிடுவதையே தொழிலாகச் செய்பவர்கள் கை ஒன்றிற்கு மருதாணி இட ஐந்நூறு ரூபாய் கூட வாங்குவதுண்டு – கர்வா சௌத் முதல் நாளில் தான் மருதாணி இடுவார்கள்.

முன்பெல்லாம் சாதாரணமாக இருந்த இந்தப் பழக்கம் இப்போது ஃபேஷனாகி விட்டது. அதிக ஆடம்பரமும் செலவுகளும் செய்வது வழக்கமாகி விட்டது. கணவனின் ஆயுளுக்காக என்று சொல்லி ஆயிரக்கணக்கில் செலவு செய்வது வழக்கமாகி இருக்கிறது. மருதாணி மட்டுமல்லாது கர்வா சௌத் விரதத்திற்கு முதல் நாள் அழகு நிலையம் சென்று டெண்டிங் பெயிண்டிங் செய்து கொள்வதும், அதாங்க, ப்ளீச்சிங், பெடிக்யூர், த்ரெடிங் என விதம் விதமாய் செய்து கொள்வதும் வழக்கமாகி இருக்கிறது. இதற்காக ஆகும் செலவுகளைப் பற்றி யோசித்தால் அதிர்ச்சியாக இருக்கிறது.

அலுவலக நண்பர் ஒருவர் நேற்று புலம்பிக் கொண்டிருந்தார் – இந்த வருடம் அவர் மனைவி எடுத்துக் கொண்ட ஜிகினா சேலையின் விலை 10000/-! மற்ற செலவுகள் எல்லாம் சேர்த்து கிட்டத்தட்ட இருபதாயிரம் ஆகிவிட்டது. ஒவ்வொரு வருடமும் இந்த செலவு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்று எனக்கு பயமாக இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருந்தார். ஆகும் செலவுகளால் பல வீடுகளில் கணவனுக்கு ஆயுள் அதிகரிக்கிறதோ இல்லையோ, அதிர்ச்சியும் கவலையும் அதிகரிக்கிறது!

விரதம் அனுஷ்டிக்கும் அனைவரும் இன்று விடுமுறை எடுத்துக் கொள்வார்கள்.  சில வருடங்களாக சில புதிய வழக்கங்களும் தொடங்கி இருக்கிறது. தனது நீண்ட ஆயுளுக்காக மனைவி விரதம் இருப்பதால், சில கணவர்களும், தனது மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் விதமாகவும், மனைவிக்கு தனது ஆதரவைத் தருவதற்காகவும், தாங்களும் விரதம் இருக்கிறார்கள்! இதுவும் நல்லது தான்.  கணவன் மட்டும் நீண்ட ஆயுளுடன் இருந்தால் போதுமா, மனைவியும் நீண்ட ஆயுளுடன் இருந்தால் தானே தொடர்ந்து ஜோடியாக, மகிழ்வுடன் வாழ்க்கையை நடத்த முடியும்!  மேலும் இங்கேயே நீண்ட காலமாக இருக்கும் தமிழ் பெண்மணிகளும் இந்த விரதம் இருக்கத் துவங்கி விட்டார்கள்.

இன்றைக்கு வட இந்தியா முழுவதும், இந்த கர்வா சௌத் பற்றிய பேச்சுகள் தான்……. இந்த கர்வா சௌத் முடிந்து நான்கு நாட்களில் அஹோய் அஷ்டமி…. இது பற்றி சென்ற வருடம் எழுதி இருப்பது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். படிக்காதவர்கள் இங்கே படிக்கலாம்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்…..

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

35 கருத்துகள்:

  1. காரடையான் நோன்பு நினைவிற்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை வெங்கட்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

      நீக்கு
  2. >>> கணவன் மட்டும் நீண்ட ஆயுளுடன் இருந்தால் போதுமா?.. <<<

    மனைவிக்காக கணவனும் விரதம் இருப்பதில் தவறே இல்லை..

    புதிய விவரங்கள் தெரிந்து கொண்டேன்..

    (பதிவின் தலைப்பில் திருத்தம் செய்யவும்..)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      தவறினைச் சுட்டிக் காண்பித்ததற்கு நன்றி. திருத்தி விட்டேன்.

      நீக்கு
  3. தலைப்பில் விதரம் என்று இருக்கிறது.. விரதத்திற்கு பதிலாய் (பங்கமாய்?)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தவறினைச் சுட்டிக் காண்பித்ததற்கு நன்றி. இப்போது திருத்தி விட்டேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பந்து ஜி!

      நீக்கு
  4. இந்தி திரைப்படங்களில் அடிக்கடி இந்த விரதமுறை பற்றி வரும். அப்போதெல்லாம் இது என்ன விரதம் என்று தெரிந்து கொள்வதில் ஆர்வமாய் இருந்தேன். அதற்கான விளக்கம் இன்றே தெரிந்தது.
    பகிர்வுக்கு நன்றி வெங்கட்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய ஹிந்தி திரைப்படங்களில் இந்த விரதம் அனுஷ்டிப்பதைக் காண்பித்து இருக்கிறார்கள்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

      நீக்கு
  5. விரதத்தைப் பற்றித் தெரிந்துகொண்டேன்.

    "பல வீடுகளில் கணவனுக்கு ஆயுள் அதிகரிக்கிறதோ இல்லையோ, அதிர்ச்சியும் கவலையும் அதிகரிக்கிறது!" - எதையுமே பொருளோடு சம்பந்தப் படுத்தி நோக்கத்தைச் சிதறடிப்பதில் நமக்கு நிகர் யாருண்டு. அக்'ஷய திருதி, ஆடித் தள்ளுபடி கதைகள்தான்.

    கணவன் ஆயுளோடு இருந்து, பணம் இல்லைனா என்ன பண்ணறது. இதையும் விரதம் இருப்பவர்கள் மனதில்கொண்டால் நல்லது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  6. #புடவையே சில சமயங்களில் ஆறாயிரம் ஏழாயிரம் என விலை கொடுத்து வாங்குவார்கள்#
    இப்போது புரிந்தது விரதம் இருப்பதன் முக்கிய காரணம் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
  7. இந்த விரதத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு சிறு கதை எழுதி இருந்தேன் அதிலும் நம்பிக்கைகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு இல்லை என்று கூற விழைந்தேன் சுட்டி தருகிறேன் படித்துப் பாருங்களேன் /http://gmbat1649.blogspot.in/2011/10/blog-post_18.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பதிவும் இப்போது தான் படித்தேன். நல்லதொரு கதை. சுட்டி தந்தமைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  8. // இதற்காக ஆகும் செலவுகளைப் பற்றி யோசித்தால் அதிர்ச்சியாக இருக்கிறது.//
    கணவனின் நீண்ட ஆயுளுக்காக ஒரு நாள் உண்ணாநிலை கொள்வது சரிதான். ஆனால் இவ்வாறு செலவு செய்தால் பல நாட்கள் உண்ணா நிலையைக் கொள்ளவேண்டியிருக்குமே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல நாட்கள் உண்ணா நிலை கொள்ள வேண்டியிருக்குமே! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  9. இந்தக் காட்சியை 7 g ரெயின்போ காலனி படத்தில் கூடப் பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிந்தி திரைப்படங்கள் பலவற்றிலும் இந்த விரதம் அனுஷ்டிக்கும் காட்சிகள் வந்திருக்கின்றன.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  10. நம் பக்கம் கார்த்திகை திங்கள்(வாராவாரம்) சோமவாரவிரதம் கண்வனின் ஆயுள் நீடிக்க என்று இருப்பார்கள். முன்னோர்கள் சொன்ன விரத பலனில் உள்ளது.

    வரலட்சுமி விரதமும் அப்படித்தான் காலை இருந்து ஒன்றும் சாப்பிடாமல் பூஜை முடிந்தபின் இரவு உணவு உண்பார்கள்.

    ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக பண்டிகை கொண்டாடுவது இப்போது இல்லையே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாப் பண்டிகைகளிலுமே ஆடம்பரம் தான் முதல் இடம் வகிக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா..

      நீக்கு
  11. இன்று செய்தி தாள் பார்த்து மகன் கேட்டார்...என்ன மா இது happy karwa chauth..னு...தெரியலப்பா...சொன்னேன்....

    இப்போ உங்க பதிவை பார்த்து மகனுக்கும் சொல்லி ..நானும் அறிந்து கொண்டேன்....நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா.... என் பதிவு மூலம் ஒரு புதிய விஷயம் நீங்களும் தெரி்ந்து கொண்டிருப்பது அறிந்து மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம் ஜி!

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  13. ஜல்லடையில் ஏன் பார்க்கிறார்கள் என்று சொல்ல வில்லையே-கூகிளார் அல்லது ரசிகப்பெருமக்கள் யாராவது பகிர்வார்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜல்லடையில் ஏன் பார்க்கிறார்கள் - கேட்டு சொல்கிறேன்! :)

      தங்களது முதல் வருகையோ? மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஸ்வா.

      நீக்கு

  14. அப்ப எனக்கு ஆயுள் கம்மிதான் என் வீட்டம்மா இப்படி விரதம் ஏதும் இருப்பதில்லை... ஹும்ம்ம்ம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... அப்படியெல்லாம் கவலை வேண்டாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  15. "அவர்கள் உண்மைகள்" வலைப்பதிவில் வருத்தப்பட
    வாய்ப்பே இல்லை .ஏனெனில்
    திருமணம் செய்யும்போதே "துன்பத்தையும் இன்பத்தையும் இருவருமே சேர்ந்து வாழ்நாள் முழுவதும் பகிர்ந்து கொள்வோம் என்று எல்லோர் முன்னிலையிலும்
    சொல்லித்தான் இணைந்தீர்கள் .எனவே மனைவி செய்தால் போதாதா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிருஷ்ணமூர்த்தி சித்தப்பா.

      நீக்கு
  16. கர்வா சவுத் பற்றி சுருக்கமாகவும், அழகாகவும் விளக்கி இருக்கிறீர்கள். எங்கள் வீட்டில் கார்த்திகை அன்று இப்படித்தான் காலை முதல், விளக்கேற்றும் வரை எதுவும் சாப்பிட மாட்டோம். கணவன் ஆயுளை நீடிக்க செய்யும் விரதம்தான் இதுவும். சோமை என்னும் ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆனதும் தன் கணவனின் ஆயுள் குறைவு என்று தெரிகிறது. கார்த்திகை மாத சோம வாரத்தன்று கணவன் ஆயுள் நீடிக்க வேண்டுமென்று காலையிலிருந்து மாலை வரை எதுவும் சாப்பிடாமல் சிவ பெருமானை குறித்து தவம் இருந்து அவள் கணவனின் ஆயுளை நீட்டித்துக் கொண்டதாக கதை. அந்த நாள் பௌர்ணமி தினமாக அமைந்து விட்டதால் கார்த்திகை பௌர்ணமியில் காலை முதல் மாலை வரை உபவாசம் இருப்பவர்களுக்கு மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை. நாம் கார்த்திகை பௌர்ணமியில் செய்வதை அவர்கள் ஐப்பசியிலேயே செய்து விடுகிறார்கள் போலிருக்கிறது. அல்லது அவர்களுக்கு கார்த்திகை மாதம் பிறந்து விட்டதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி.

      நீக்கு
  17. பகிர்வு பற்றி தெரிந்து கொண்டோம். எங்கள் ஊரில் இது போன்றவிரதங்கள் எல்லாம் இல்லை!

    கீதா: எனது உறவினர்கள் வடக்கில் இருப்பதால் இது பற்றி அவர்கள் அடிக்கடி சொல்லி தெரியும்... இது நம் காரடையான் நோன்பு போல ஆனால் வித்தியாசமாய் இல்லையா ஜி. ஆனால் நம்மூர் விரத்த்தில் செலவு இல்லை...என்றாலும் எல்லாம் நம்பிக்கைதான்...இப்படிச்க் செலவு என்றால் கணவன் மார்களுக்கு ஹார்ட் அட்டாக்தான்...ஹஹஹ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      விரதத்தில் செலவு - கஷ்டம் தான்.....

      நீக்கு
  18. கணவனுக்காக ஒரு விரதம் – கர்வா சௌத் பற்றிய பகிர்வு சூப்பர்.
    அஹோய் அஷ்டமியைப்பற்றிய பகிர்வும் அருமை.
    நம்பர் திரு.GMB யின் சௌத்வி க சாந்த் ஹோ..... சிறு கதையும் அருமை
    வாழ்த்துக்கள்
    அன்புடன்
    விஜயராகவன்
    தில்லி

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....