எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, October 4, 2016

நவராத்ரி கொலு – ஆண்களுக்கெதிரான திட்டமிட்ட சதி!


நவராத்ரி கொலு ஆரம்பித்து விட்டது. இந்த வருடமும் நவராத்ரி கொண்டாட்டங்கள் மும்மரமாக ஆரம்பித்து விட்டது. நமது ஊரில் கொலு என்றால், வட இந்தியாவில் ராம் லீலா, கிழக்கே பெங்கால் பகுதிகளில் துர்க்கா பூஜா என்று இந்தியா முழுவதுமே கோலாகலமான கொண்டாட்டங்கள்.  தில்லியில் அனைத்து பகுதிகளிலும் ராம் லீலா, ராவண் தகனம், துர்க்கா பூஜை ஆகியவை மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நேரம் இது. தலைநகர் தில்லியில் வசிக்கும் பெரும்பாலான தமிழர்களின் வீடுகளில் கொலு வைப்பது இன்னமும் தொடர்கிறது.

ராம் லீலா, துர்க்கா பூஜை ஆகிய எல்லாவற்றிற்கும் ஒவ்வொரு வருடமும் நண்பர்களிடமிருந்து எனக்கு பிரத்யேக அழைப்பு வந்துவிடுகிறது. ஆனால் கொலுவுக்கு..... :( 

இதைப் பற்றிச் சொல்வதற்கு முன்னர் எனது மனைவி அவரது ஃபேஸ்புக்கில் கடந்த மூன்று நாட்களில் எழுதி இருக்கும் இற்றைகளை தொகுத்து இங்கே தருகிறேன்.......

நவராத்திரி ஸ்பெஷல்!

சிறுவயதிலிருந்து கொலு வைக்க எனக்கு ஆசை. ஆனால் அம்மா வீட்டில் வழக்கம் இல்லை. புகுந்த வீட்டில் வழிவழியாக கொலு வைக்கும் வழக்கம் இருந்தும் இரண்டு தலைமுறைகளாகத் தொடரவில்லை.

மகள் பிறந்து வளர ஆரம்பித்த நிலையில் தில்லியில் பல வீடுகளுக்கு தாம்பூலம் வாங்கிக் கொள்ளச் செல்வோம். பத்து நாளும் களைகட்டி விடும். இரவு சமையலை மாலை என்னவர் வருவதற்குள் முடித்து விட்டு குளித்து தயாராகி விடுவோம். என்னவர் வந்ததும் அவருக்கு குடிக்கவும், சாப்பிடவும் கொடுத்து விட்டு, அவரை துணைக்கு அழைத்துக் கொண்டு நட்பு வட்டத்தில் அழைப்பு விடுத்த வீடுகளுக்கு சென்று வெற்றிலை தாம்பூலம் வாங்கி வருவோம்.

ஒவ்வொரு வீடும் வேறு வேறு பகுதிகளில் இருக்க, ரிக்‌ஷாவில் சென்று வருவோம். தினமும் நான்கைந்து வீடுகளுக்கு சென்று வந்தால் இரவு பத்து மணியாகி விடும். மகள் இப்படி செல்லும் வீடுகளில் சந்தன, குங்குமத்தை தானே எடுத்து வைத்துக் கொள்ளவும், தனக்கு தரும் தாம்பூலத்தை தானே சுமந்து வரவும், தினம் ஒரு பாவாடை சட்டையும், அலங்காரம் செய்து கொள்ளவும் ஆசைப்படுவாள்.

போகும் இடமெல்லாம் அழகான பொம்மைகளை பார்த்து வந்த மகள், நாமளும் வைக்கலாம் என்று சொல்லவும், என் மாமியாரிடம் கேட்டேன். அவரும் நமக்கு வழக்கம் உண்டு. பெண் குழந்தை இருந்தாலே வைக்கலாம் என்று சொல்வார்கள். வழக்கமும் இருப்பதால் தாராளமாக அடுத்த வருடத்திலிருந்து துவங்கு என்று சொன்னார். சொன்னது 2010ல்.

நாங்கள் தில்லியிலேயே வேறு பகுதிக்கு மாறவும், அப்புதியப் பகுதியில் யாரையும் தெரியாது. யாரும் கூப்பிடப் போவதில்லை என்று நினைத்தேன். ஆனால், என்னவருடைய நண்பர்கள் சிலர் அங்கேயும் இருக்க, தினமும் ஒரு வீட்டில் லலிதா சகஸ்ரநாம பாராயணம் இருப்பதாகச் சொல்லி நட்பு வட்டத்தில் அழைத்துச் சென்றார்கள். தில்லியின் சூழ்நிலைக்குத் தகுந்தாற் போல் சுடிதாரில் சுற்றிக் கொண்டிருந்த எனக்கு , தினமும் ஒரு புடவையாக கட்டிக் கொள்ளும் வாய்ப்பு நவராத்ரி சமயத்தில் கிடைத்தது. லலிதா சகஸ்ரநாமம், பாட்டுகள் என்று முடித்து விட்டு தாம்பூலம் வாங்கி வருவோம்.

தில்லியில் தீபாவளி சமயத்தில் சாலையோரக் கடைகளில் பொம்மைகள், அவர்கள் தீபாவளியன்று செய்யும் லஷ்மி பூஜைக்காகவும், ஷோகேஸில் வைப்பதற்கு ஏற்றதாகவும் வைத்து விற்பார்கள். நம்ம ஊர் சுவாமி செட்கள் இருக்காது. அடுத்த வருடம் கொலு துவங்குவதற்கு முன்னேற்பாடாக கிடைக்கும் பொம்மைகளை வாங்கிக் கொள்ளலாம் என்று கொஞ்சம் வாங்கிக் கொண்டேன். வருடா வருடம் தில்லியின் பிரகதி மைதானத்தில் நடக்கும் சர்வதேச பொருட்காட்சியிலும் ஒன்றிரண்டு வாங்கி வைத்தேன். என் பெரிய மாமியாரும் ஊரிலிருந்து ஏறக்குறைய ஒன்றரை அடி உயரமுள்ள மரப்பாச்சி பொம்மைகளை கொடுத்து விட்டார்கள்.

ஆனால், அடுத்த வருடம் நான் திருவரங்கம் வந்து விட்டேன். இங்கும் சமய சந்தர்ப்பம் ஒத்து வராததால், கொலு வைக்கும் எண்ணம் தீவிரமாக இல்லை. சென்ற வருடம் புதிய வீட்டிற்கு வந்ததும் கூடம் எனப்படும் ஹால் நீளமாகவும், விஸ்தாரமாக இருக்கவும், மகள் மீண்டும் கொலு வைக்கச் சொன்னாள். பதிவர் கீதா சாம்பசிவம் மாமி வீட்டு கொலுவுக்கு சென்ற போது இந்த கதையைச் சொல்லி கொண்டிருந்தேன். மாமி உடனே இந்த வருடமே துவங்கி விடு. கடைசி மூன்று நாள் வைக்கலாம். ஒத்திப் போடாதே என்றார். ஆனால் பொம்மையே இல்லையே என்றேன்.

ஒரு பிள்ளையாரை வாங்கி வீட்டில் இருப்பதை வைத்து ஆரம்பித்து விடு என்றார். அந்த வார்த்தைகள் தைரியத்தையும், உந்துதலையும் தர, மறுநாளே பிள்ளையாரை வாங்கி மூன்று படி கட்டி வைத்து விட்டேன். கடவுள் அருளால் இந்த வருடம் பொம்மைகள் என்னவர் வாங்கி வர, ஸ்டாண்டும் வாங்கி ஐந்து படிகளில் வைத்து விட்டேன். இதை தொடர்ந்து செய்து வர கடவுள் அருள்புரிய வேண்டும். ஒவ்வொரு நாளும் சுண்டல் செய்து, [இரண்டாம் நாள் சுண்டல் கொஞ்சம் படுத்த அதை வேறு விதமாய் சமாளித்தது தனிக்கதை!] குடியிருப்பில் இருக்கும் தோழிகளை அழைத்து கொடுத்து சிறப்பாகச் சென்று கொண்டிருக்கிறது எங்கள் இந்த வருட கொலு!

ஆதி வெங்கட்.
திருவரங்கத்திலிருந்து.....

சரி நம்ம கதைக்கு வருவோம்.... தில்லியில் மனைவியும் மகளும் இருந்தவரை, எனது நண்பர்களுடைய வீடுகளுக்கு அவர்களை அழைத்துச் செல்வது எனக்கு நவராத்ரி முழுவதும் இருக்கும் பணி. சில வருடங்கள் 40 வீடுகளுக்கு மேலாக அழைப்பு வந்துவிட ஒன்பது நாளில் இத்தனை வீடுகளுக்கும் சென்று வருவதுண்டு! அதுவும் மாலை 06.30 மணிக்கு மேல் தான் அலுவலகத்திலிருந்து வீடு திரும்புவேன். அதற்குப் பிறகு அவர்களை அழைத்துக் கொண்டு செல்வது பெரிய வேலை. அவர்களுக்கு தாம்பூலம், பழங்கள் கூட ஏதாவது வைத்துக் கொடுப்பார்கள். அதையெல்லாம் சுமந்து வருவதும் என் வேலை!

மனைவியும் மகளும் இங்கிருந்து சென்ற பிறகு, இதுவரை அழைத்துக் கொண்டிருந்த நண்பர்கள் ஒருவருமே எனக்கு அழைப்பு விடுப்பதில்லை! இந்த வருடம் கூட, நவராத்ரியில் முதல் மூன்று தினங்கள் முடிந்து விட்ட நிலையில், இதுவரை ஒரு அழைப்பு கூட வரவில்லை – சரிய்யா, தாம்பூலம் தரவேண்டாம், பழங்கள், கிஃப்ட் என பெண்களுக்குத் தரும் எதுவுமே ஆண்களுக்குத் தரவேண்டாம்.....  கூப்பிட்டு கொஞ்சம் சுண்டல் கூடவா தரக்கூடாது....  சரி அதுவும் தரவேண்டாம், கொலு பொம்மைகளைப் பார்க்கவாது கூப்பிடலாம் இல்லையா! கொலு பொம்மையை ஆண்கள் ரசிக்க மாட்டார்களா? இது என்ன ஓரவஞ்சனை! சரியான போங்கு ஆட்டமா இல்ல இருக்கு!

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா!

இன்னும் ஆறு நாள் இருக்கு, இந்த வருட நவராத்ரியில! குறைஞ்சது ஆறு வீட்டிலிருந்தாவது [நாளுக்கு ஒரு வீடு!] அழைப்பு வரலைன்னா, நவராத்ரி முடியும் சமயத்தில் பெங்காலியாக மாறிவிடலாம்னு ஒரு எண்ணம்! எல்லா வருஷமும் துர்க்கா பூஜைக்கு நமக்கு ஸ்பெஷல் அழைப்பு – துர்க்கா பூஜா பந்தல்கள் அமைக்கும் நிறைய நண்பர்களிடம் இருந்து வந்த வண்ணமே இருக்கே! பெங்காலியா மாறி, பெங்காலி மொழியில் பதிவுகள் எழுதப் போறேன் பாருங்க!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


52 comments:

 1. :) :) உங்க ஆதங்கம் புரிகிறது!! :) :)

  ReplyDelete
  Replies
  1. ஆஹா... உங்களுக்குப் புரிந்ததில் மிக்க மகிழ்ச்சி....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஹி.

   Delete
 2. நான் கொலுவுக்குப் போகிறேன் வெங்கட்... எஸ்கார்ட் உத்தியோகம்!

  ReplyDelete
  Replies
  1. ஹஹ்ஹஹஹ்ஹ ஆல் த பெஸ்ட்!!!

   கீதா

   Delete
  2. எஸ்கார்ட் உத்யோகம்! புருஷ லக்ஷணம்! :)))

   நல்லது தொடருங்கள்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 3. எனக்கு மூன்று அழைப்புக்கள் அதில் ஒன்று நான் கட்டாயம் வர வேண்டும் என்ற அழைப்பு அதனால் அந்த ஒன்றுகு மட்டும் செல்லுகிறேன் இங்கே சுண்டல் மட்டுமில்லை நல்ல சாப்பாடும் உண்டு இதில் என்ன கொடுமை என்றால் அங்கு பாடும்பாட்டுகளையும் நான் கண்டிப்பாக கேட்டு கைதட்டனும் சங்கீதத்தில் நான் மிகவும் ஞான சூன்யம் அதுதான் பிரச்சனை அதுமட்டுமல்ல அவர்கள் பாடும் போது கவனித்து பாட்டு முடிஞ்சிடுச்சுன்னு கைதட்ட ஆரம்பிக்கும் போது அவர்கள் மீண்டும் ஆரம்பிப்பார்கள் எப்ப முடியும் என்பதில் கன்பீயூசன்...ஹூம்ம்ம்ம் சரியான சமயத்தில் கைதட்டாமல் இருந்துவிட்டால் வீட்டிற்கு வந்ததும் எங்க வீட்டம்மா பூரிக்கட்டையால் தட்டு தட்தி ராகம் பாடிவிடுவார்கள் ஹும்ம்ம்ம்ம்ம்ம்

  ReplyDelete
  Replies
  1. அவர்களோடு போகும்போது இப்படிச் சில தொல்லைகளும் இருக்கத்தான் செய்கிறது! நம்மள வேற பாட்டு பாடச் சொல்லுவாங்க! அது நினைச்சா கொஞ்சம் உதறல் தான்! ச ரி க ம ப த நீ, சாணி பாட்டி பிள்ளை பெத்தா ந்னு கத்தற ஆளு நானு! '

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
  2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
  3. ஹஹஹ வெங்கட் ஜி புதுசா இருக்கே ச ரி க ம ப த நீ சாணி பாட்டி பிள்ளை பெத்தா...ஹஹஹஹ் சிரித்து சிரித்து முடியலை...பழைய பதிவுகள் மிஸ் ஆனதைப் பார்த்து வருகையில் இது கண்ணில் தென்பட்டது!!!!.

   கீதா

   Delete
  4. இப்போது இப்படி பாடினால் என் மகள் சிரி சிரி என சிரிக்கிறார்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 4. கொலுவுக்கு அழைப்பு வரவில்லையா
  ஆகா

  ReplyDelete
  Replies
  1. பதிவு எழுதிய பிறகு இரண்டு மூன்று அழைப்புகள் வந்திருக்கின்றன!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 5. நவராத்திரிக்குச் செல்வது, கொலுவைப் பார்ப்பது என்பது மனதிற்கு நிறைவைத் தரும். அந்த சுகத்தை நான் அனுபவித்துள்ளேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 6. கூப்பிட்டுக் கொஞ்சம் சுண்டல் கூடவா தரக்கூடாது!?..

  தம்பி.. சரவணா!.. வச்சிக்கிட்டா வஞ்சகம்!?..
  சுண்டல் செய்யத் தெரியாமத் தானே நான் தடுமாறிக்கிட்டு இருக்கேன்!..)

  அழகிய கொலுவுடன் பதிவு அருமை..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 7. நியாயமான ஆதங்கம்.. உங்கள் பதிவு பார்த்தபிறகு உங்களுக்கு மட்டுமல்ல.. உங்களைப் போலத் தனித்திருக்கும் ஆண்கள் அனைவருக்குமே நிறைய அழைப்பு வரும் என்று தோன்றுகிறது..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி ஜி!

   Delete
 8. Dear Venkat
  Nice Blog abour Navrathri. Pl visit our house and have dinner on any of the days. But we don't have any Kolu.
  Vijay

  ReplyDelete
  Replies
  1. தங்களது அன்பிற்கு நன்றி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

   Delete
 9. விடுங்கள் வெங்கட்ஜி, எல்லா விஷயத்திலும் பெண்களை பின்னுக்கு தள்ளிவைத்த ஆணினம் விழாக்களில் மட்டும்தான் முன்னிறுத்துகிறது. அதுமட்டுமல்ல பெண்கள் இருந்தால்தான் விழாவே களைகட்டும். அழகு மேலிடும். இந்த ஒன்றிலாவது அவர்கள் முன்னணியில் இருந்துவிட்டுப் போகட்டுமே..!
  த ம 4

  ReplyDelete
  Replies
  1. அனைத்திலும் முன்னணி பெற வேண்டும் என்பது எனது ஆசை.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில்குமார்.

   Delete
 10. ஹிஹிஹி, நாங்கல்லாம் ஆண்களுக்குனு தனியாச் சுண்டல் மட்டும் கொடுத்துடுவோம். ஆனால் இங்கே ஶ்ரீரங்கத்தில் அப்படி யாரும் இல்லை! :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 11. சிறு வயது நினைவுகள் வந்து விட்டது ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 12. ஆம்! வெங்கட்ஜி ! நான் அடிக்கடி சொல்லுவதுண்டு. ஆண்களுக்கு மட்டும் என்ன ஓர வஞ்சனை. அதுவும் பெண்களை அவர்கள் அழைத்துக் கொண்டு செல்ல வேண்டும்...(நான் எப்போதுமே தனிதான்!!) கலெக்ஷன் கனமாக அதிகமாக இருந்தால் அவர்கள் தூக்கிக் கொண்டு வர வேண்டும். வண்டி ஓட்டுபவர்கள் வண்டி ஓட்டிக் கொண்டு செல்ல வேண்டும் அதுவும் இங்கு சென்னை போக்குவரத்தில்...நிச்சயமாக நவராத்திரி வந்தால் பாவம் ஆண்கள். அதனால் நான் அழைத்தேன் என்றால் ஆண்களுக்கும் கிஃப்ட் கொடுத்ததுண்டு. (இப்போதெல்லாம் கொலு வைப்பதில்லை!!!) நோட்பாட், பென், என்று...

  உங்கள் ஆதங்கம் மிகவும் நியாயமானது!!! கொலுஃபோட்டோ அருமை. இம்முறை நான் சென்ற கொலுவில் ஒரு வித்தியாசமான பொம்மை! படம் எடுத்துள்ளேன். இன்னும் நிறைய ரவுன்ட்ஸ் இருக்கிறது. மொத்தமாகப் படம் எடுத்துவிட்டு கொலு முடிந்ததும் பதிவு!!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. தங்களின் புரிதலுக்கு நன்றி!

   இம்முறை நண்பர்களின் வீட்டிற்கு இன்னும் செல்லவில்லை. சனி/ஞாயிறு சென்றால் படம் எடுத்தால் பகிர்ந்து கொள்வேன். நீங்கள் எடுத்த படங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 13. இதுக்குத்தான் 'கொலு'வே கேள்விப்படாத ஊரில் இருக்கவேண்டும் :)

  ReplyDelete
  Replies
  1. உங்க ஊருக்கு ஒரு டிக்கெட் எடுத்துட வேண்டியது தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுநதரமூர்த்தி.

   Delete
 14. திருச்சியில் குடி இருப்பில் இருந்தபோது ரெகுலராகக் கொலு வைக்கும் வழக்கமிருந்தது ஒரு நாள் இன்னின்னார் என்று அழைப்பு வைத்து எல்லோர் வீட்டுக்கும் போவதும் அவர்கள் வருவதும் நடக்கும் பெங்களூருவில் இப்போது வீட்டில் கொலு இல்லை. ஆனால் மனைவி பல இடங்களுக்கு தினமும் அழைப்பின் பேரில் செல்கிறார் உண்மைதான் கொலு ஆண்களுக்கு எதிரான சதியே

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 15. திரு வெங்கட்ஜி , அவர்களின் உள்ளக்குமுறல்களை ஆதங்கத்தோடு சொல்லியிருக்கிறார். எனது இளமைப் பருவத்தில், பள்ளி நாட்களில் , எனது இரு இளைய சகோதரிகளுடன் கொலுவுக்கு தவறாது செல்லுவேன், அப்போதும் இதே நிலைதான். வீட்டுக்கு வந்தவுடன் பலவித சுண்டல்களை சகோதரிகள் எங்களுக்கு பகிர்ந்து கொடுப்பார்கள். இதிலே, ஆண்கள் ஒதுக்கப் படுவதில்லை. பெண்களை, ஆணுக்கு சரிநிகர் சமானமாக,அதற்க்கு மேலே அவர்களை தெய்வமாக மதிக்க கற்றுக்கொடுக்க ஏற்பட்ட நல்லதொரு ஏற்பாடாக நம் முன்னோர்கள் நமக்கு கொலு வைத்தல் போன்றவைகளை நமக்கு அளித்திருக்கிறார்கள் . நம் இல்லத்தரசிகள் செல்லும் கொலுவுக்கு அவர்களுடன் துணை செல்வோம், அதில் பேரின்பம் காண்போம், பெண்மை வெல்க என்று கூத்தாடுவோம். வாழ்க தமிழ், வாழ்க இவ்வையகம்.


  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நடராஜன் சித்தப்பா...

   Delete
 16. ஹா ஹா ஹா! உங்கள் ஆதங்கம் புரிகிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

   Delete
 17. சுண்டல் கூடவா தரலை! கஷ்டம்தான் ஜி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 18. கொலு போடோக்களை வைத்து ஒரு பதிவைத் தேற்றலாம்னு ,கேமராவோடு இருக்கிற உங்களை யாரும் ஏன் கண்டுக்க மாட்டேங்கிறாங்க :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 19. அருமை. சுவாரசியமான அனுபவப் பகிர்வு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிகரம் பாரதி.

   Delete
 20. ஆதங்கம் புரிகிறது அண்ணா...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 21. என்ன வெறும் சுண்டல்னு நிறுத்திட்டீங்க. வேற எதுவும் பண்ணமாட்டாங்களா? கொக்குக்கு ஒரே மதி ன்ற மாதிரி, நமக்கு சுண்டல்லதான் கவனம். பெண்களுக்கு 'அவுஹ எப்படிப் பண்ணியிருக்காக, மத்தவங்க என்ன டிரெஸ்.. ' - இதில்தான் கவனம் என்று எழுதலாம்.. எதுக்கு வம்பு...

  ReplyDelete
  Replies
  1. அவங்களோட இந்த மாதிரி விஷயங்களையெல்லாம் அவங்க தான் எழுதணும்! நாம எழுதுனா தப்பாயிடும்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 22. கோவை டு டெல்லி பிளாக்குல வரவேண்டியதை இங்க போட்டு, அவங்களுக்கு ஒரு பதிவு போடும் வாய்ப்பைப் பணாலாக்கிட்டீங்களே...

  ReplyDelete
  Replies
  1. இப்போதெல்லாம் பதிவுகள் எழுதுவதே இல்லை. மூன்று மாதம் முன்பு எழுதிய பதிவுடன் நிற்கிறது அவர்கள் வலைப்பூ! அதனால் இங்கே பயன்படுத்தினேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 23. ஆதங்கமும் ஒரு சுவாரஸ்யம் என்பதை நிரூபிக்கும் பதிவு!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஷைலஜா ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....