எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, October 13, 2016

நடிகை மாதுரி திக்ஷீத் பெயரில் ஒரு ஏரி.....

ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 58

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்” என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.


நகுலா ஏரியின் ஒரு பகுதி....


பும்லா பாஸ் அருகே ஒரு குருத்வாரா...

பும்லா பாஸ் – சீன எல்லையில் எங்களுக்குக் கிடைத்த அனுபவங்கள் பற்றி சென்ற பதிவில் சொல்லி இருந்தேன்.  மறக்க முடியாத அனுபவங்கள் அவை. அங்கிருந்து புறப்படுவதற்கு மனதில்லை. ஆனாலும் புறப்பட்டுத்தான் ஆக வேண்டும். ராணுவ எல்லைக்குட்பட்ட இன்னும் சில பகுதிகளைப் பார்த்து விடுவது அன்றைய திட்டத்தில் இருந்தது. அந்த இடங்கள் இரண்டு ஏரிகள் – அழகான இடங்கள்.  கடல் மட்டத்திலிருந்து இத்தனை உயரத்தில் ஏரிகள் என்றால் பார்க்கும்போது எத்தனை அழகாய் இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். உங்கள் வசதிக்காக நான் எடுத்த படங்களும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன் என்றாலும் அந்த இடங்களை உங்கள் கற்பனைக் கண்களாலும் கண்டு ரசியுங்கள்.

நகுலா ஏரி:


நகுலா ஏரி – ஒரு காட்சி....

முதலில் பார்க்கப் போவது நகுலா ஏரி….. 28430 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்திருக்கும் ஏரி. கடல் மட்டத்திலிருந்து 4120 மீட்டர் அதாவது கடல் மட்டத்திலிருந்து 13518 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த ஏரியின் அதிக பட்ச ஆழம் 11.2 மீட்டர்!  பார்க்கும்போது இது தெரிவதில்லை – ஏனெனில் பெரும்பாலான சமயங்களில் பனி உறைந்து இருப்பதால் இதன் ஆழம் தெரிவதில்லை.  நாங்கள் சென்றிருந்தபோதும் பெரும்பாலான பகுதிகளில் நீர் உறைந்து இருந்தது.  சில இடங்களில் மட்டுமே எங்களால் உறையாமல் இருக்கும் நீரைப் பார்க்க முடிந்தது. உறைந்து கிடக்கும் ஏரி, சுற்றிலும் பனி மூடிய சிகரங்கள், மிகவும் அமைதியான சூழல் என மனதுக்கு இதமாய் இருக்கும் இடம் இந்த இடம். ஏரிக்கரையிலேயே அமர்ந்து விடலாம் என்று நிச்சயம் தோன்றியது.


நகுலா ஏரியின் மற்றொரு பகுதி....

மிக அழகான காட்சிகள் விட்டு விலக மனதில்லை என்றாலும் ஏரிக்கரையில் சிறிது நேரம் இருந்து விட்டு அடுத்த ஏரியை நோக்கிப் புறப்பட்டோம்.  பெரும்பாலும் உறைந்து இருக்கும் இந்த ஏரியில் தண்ணீரோடு பார்க்க வேண்டுமென்றால் மே மாதமோ, அல்லது செப்டம்பர்-அக்டோபர் மாதமோ இந்த இடத்திற்குச் செல்ல வேண்டும்.  தண்ணீரோடு பார்ப்பது ஒரு வித அழகு என்றால், ஏரி முழுவதும் பனியாக உறைந்து காட்சியளிப்பதைப் பார்ப்பது வேறு விதத்தில் அழகு!  எது விருப்பம் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்!

மாதுரி ஏரி - Sangestar Tso:


மாதுரி ஏரி – ஒரு காட்சி....

திபெத்திய மொழியில் Tso என்றால் ஏரி என்று அர்த்தம். Sangestar Tso என்று அழைக்கப்பட்டு வந்த ஏரி இன்றைக்கு மாதுரி ஏரியாக பெயர் கொண்டிருக்கிறது. இந்த ஏரி உருவானது எப்படி என்பதைத் தெரிந்து கொள்ள சற்றே பின்னோக்கிச் செல்ல வேண்டியிருக்கிறது.


மாதுரி ஏரி – தூரப்பார்வை....

1973-ஆம் ஆண்டு – அருணாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட ஒரு நிலநடுக்கத்தின் போது மலைச் சரிவு ஏற்பட்டு மரங்களோடு சமவெளி நோக்கி விழுந்தது. மரங்களோடு மண்ணும் சேர்ந்து ஒரு நீர்வீழ்ச்சியின் பாதையை மாற்றி மேய்ச்சல் நிலமாக இருந்த இந்த இடத்தில் ஏரி உருவானது என்று தெரிகிறது. அப்படி விழுந்த மரங்கள் நீருக்குள் இப்போதும் நின்று கொண்டிருக்கிறது – இலைகள் இல்லாமல் வெறும் கட்டைகளாக! நிலநடுக்கத்தால் உண்டான ஒரு நல்ல விஷயம் இந்த ஏரி. காண்பதற்கு வெகு அழகாக இருக்கும் இந்த ஏரியைச் சுற்றி மலைகள், நீர்வீழ்ச்சி என பார்க்கவே ரம்மியமாக இருக்கின்றது. 


மாதுரி ஏரி....


மாதுரி ஏரியின் அருகே மலைப்பிரதேசம்

இந்த ஏரிக்கு ஏன் பெயர் மாற்றம் உண்டானது?  Sangestar Tso என்று அழைக்கப்பட்ட ஏரி இன்று ஏன் மாதுரி ஏரி என்று ஆனது?  அதற்குக் காரணம் சினிமா தான்…. சினிமா மோகம் தான்!  மாதுரி தீக்ஷித் மற்றும் ஷாருக் கான் நடித்த ஒரு படம் கோய்லா…. இந்த ஹிந்தி படத்தின் ஒரு பாடல் காட்சி இந்த Sangestar Tso என்று அழைக்கப்படும் ஏரிப்பகுதியில் படம் பிடித்தார்கள்.  என்ன பாடல் என்று கேட்பவர்களுக்காக பதிலையும் சொல்லிவிடுகிறேன்! அந்த பாடல் தன்ஹாயி தன்ஹாயி…..  பார்க்க விருப்பம் இருந்தால் கீழே காணொளியும் இணைத்திருக்கிறேன். பாருங்கள்!  இங்கே இப்பாடல் படம் பிடித்தபோது மாதுரி தீக்ஷித் Sangestar Tso-வைச் சுற்றி நடனமாடியதிலிருந்து ஏரியின் பெயரையே மாற்றி விட்டார்கள்! என்னே நமது சினிமா மோகம்! சரி பாடல் பார்த்து விடுங்கள் – ஏரியின் அழகை ரசிப்பதற்காகவேனும்!இரண்டாவது நிமிடத்திற்கு மேல் இருப்பது தான் Sangestar Tso அதாவது மாதுரி ஏரி….


மாதுரி ஏரி – ஒரு பறவை....

ஏரியின் அழகினை ரசிப்பது மட்டுமன்றி அங்கே இருந்த சில பறவைகளையும் ரசித்தோம். ஏரியைச் சுற்றி வெகு அழகாய் நடை பாதைகள் அமைத்திருக்கிறார்கள். இந்த இடமும் ராணுவத்தினர் பராமரிப்பில் இருக்கிறது என்பதால் நன்றாகவே வைத்திருக்கிறார்கள்.  ஏரியின் கரையில் ஒரு உணவகமும் உண்டு. அதுவும் ராணுவ வீரர்களே நடத்துகிறார்கள்.  அங்கே சென்று குளிருக்கு இதமாய் தேநீர் அருந்திய பிறகே நாங்கள் ஏரியைச் சுற்றிப் பார்க்கச் சென்றோம்.  ஏரியைச் சுற்றிப் பார்த்து விட்டு சில புகைப்படங்களை எடுத்துக் கொண்ட பிறகு மீண்டும் தேநீர் அருந்தினோம்.  மதிய வேளை என்பதால் உணவும் கிடைக்கும் என்பதை அங்கே இருந்த ராணுவ வீரர் சொல்ல வேண்டாம் என்று சொல்லி விட்டோம். அதற்குக் காரணம் – காலையில் புறப்படும் போதே தங்குமிடத்திலிருந்து எங்களுக்கு மதிய உணவினை கட்டிக் கொடுத்திருந்தார் அங்கே இருந்த சிப்பந்தி.


மாதுரி ஏரி அருகே நண்பர்களோடு....


மாதுரி ஏரி அருகே நண்பர்கள்.....

முதல் நாள் Zemithang சென்றபோது மதிய உணவுக்குக் கஷ்டப்பட்டதைச் சொன்னதால், பும்லா பாஸ் செல்கையில் மதிய உணவினை கட்டிக் கொடுத்து விட்டார். இந்த மாதுரி ஏரிக்கரையில் உணவகம் இருந்தாலும் பெரும்பாலான நேரங்களில் உணவு கிடைப்பது கிடையாது – தேநீர், ப்ரெட் ஆம்லெட், சோளே பட்டூரே போன்றவை தான் கிடைக்கும் என்று சொல்லி விட்டார்.  அவர் சப்பாத்தி, சப்ஜி என அனைத்தையும் கட்டிக் கொடுத்ததால், வண்டியில் வைத்துக் கொண்டு ஏரிக்கரையிலேயே சாப்பிட்டு விட்டோம். சாப்பிட்ட பிறகு மீண்டும் ஒரு முறை தேநீர் அருந்திய பிறகு அடுத்த ஏரியை நோக்கிப் பயணித்தோம்.

அந்த ஏரிக்கரையில் கிடைத்த ஒரு கசப்பான அனுபவம், மற்றும் வேறு சில ஸ்வாரஸ்யமான அனுபவங்களோடு மீண்டும் சந்திப்போம்….

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

26 comments:

 1. எனக்கு மாதுரியையும், அவர் நடனத்தையும் பிடிக்கும். சாஜன் , ஹம் ஆப்கே ஹேன் கோன் போன்ற படங்கள் மற்றும் அதில் உள்ள பாடல், நடனங்கள் ரசிக்கத்தக்கவை!!

  தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. மாதுரியையும் அவர் நடனத்தையும் பலருக்கும் பிடிக்கிறது... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. இப்பதிவில் உங்கள் தயவால் பல ஏரிகளைக் கண் குளிரக் காணும் வாய்ப்பு கிடைத்தது. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 3. பதிவின் படங்களும் பாடல் காட்சியும் அழகு...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 4. இயற்கையின் அழகை அருமையாகக் காட்டியிருக்கிறீர்கள்!!
  ஷாருக் கானும் தானே ஆடியிருக்கிறார்? :-))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மிடில்கிளாஸ் மாதவி.

   Delete
 5. அரிதான பல இடங்களுக்கு உங்களுடன் எங்களையும் அழைத்துச் செல்கிறீர்கள். சுவாரசியமான பயணக் கட்டுரை.
  தொடர்கிறேன்.
  த ம 4

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

   Delete
 6. படங்கள் அட்டகாசம்.. அதுவும் பனிமூடிய பகுதிகளில்... யாருக்குத்தான் அந்த இடத்தைவிட்டுத் திரும்ப மனம் வரும் (பக்கத்திலேயே.. வேளைக்குத் தகுந்தவாறு, மிளகாய் பஜ்ஜியோ, சுடச் சுட சாம்பார் சாதமோ, இட்லி சாம்பாரோ கிடைக்கும் சாத்தியம் உண்டென்றால்.. இரவு தூங்குவதற்கு நல்ல தலையணையும் கம்பளிப்போர்வையும் இருக்குமென்றால்... எதுக்கு திரும்ப நகர்ப்புறப் பக்கம் வரணும்?)

  ReplyDelete
  Replies
  1. மிளகாய் பஜ்ஜி, சுடச்சுட சாம்பார் சாதம், இட்லி சாம்பார் - ஹாஹா நல்ல பட்டியல் - ஆனால் எதுவும் அங்கே கிடைக்காது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 7. மாதுரியைப் பிடிக்கும் என்றாலும் ... இந்த ஏரி மிகவும் அழகு!! ஏரிகள் நிறைந்த ஒர் இடம் எனலாம் போல!!லேக் சிட்டி என்று உதய்ப்பூர் மற்றும் கேரளா சொல்லப்பட்டாலும், கேரளாவை தெய்வத்திண்டே ஸ்வந்த தேசம் என்று சொல்லபடுவதை இப்போது மாற்றிக் கொள்ள வேண்டும்... இந்தப் பகுதி நிஜமாகவே கடவுளின் பிரதேசம்தான். அமைதி, அழகு, இயற்கையின் ஒலி மட்டும் என்று....

  பனி படர்ந்த இப்பகுதியில் நாட்டின் மிது பற்று கொண்டுப் பணியாற்றும் அனைத்து இராணுவ வீரர்களுக்கும் எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!!!

  படங்கள் வெகு அழகு!!! பாராட்ட வார்த்தைகளே இல்லை.. ஸ்ரே ஜகான் ஸே அச்சா ஹிந்துசுதான் ஹமாரா!! உங்களது அடுத்தப் பகுதிக்காகக் காத்திருக்கிறோம் வெங்கட் ஜி!

  ReplyDelete
  Replies
  1. கேரளா தெய்வத்திண்டே ஸ்வந்த தேசம்... :) அதைப் போலவே அழகான் இடங்கள் பல உண்டு. இந்த அருணாச்சலின் சில பகுதிகள் சேர்த்து....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 8. கொடுத்து வைத்தவர் நீங்கள்

  ReplyDelete
  Replies
  1. என்ன கொடுத்து வைத்தேன், யாரிடம் கொடுத்து வைத்தேன் என்பதைத் தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 9. புகைப்படங்கள் வழக்கம் போலவே அழகு காணொளி கண்டேன் ஜி நன்று

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 10. வணக்கம் சகோ..அருமையான ஏரியைப்பார்க்கும் போது கண்கள் அமைதி பெறுவதை உணரமுடிகின்றது..உங்களால் இக்காட்சிகளைக்காணும் வாய்ப்பு கிடைக்கின்றது மிக்க நன்றி.

  ReplyDelete
 11. சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் வருகை. மகிழ்ச்சி.

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

  ReplyDelete
 12. ஏரி அழகு. படங்கள் அற்புதம்.
  மாதிரி ஏரியும் பாடலும் அருமை.
  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.....

   Delete
 13. படங்களும் தகவல்களும் சிறப்பு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 14. படமும் பகிர்வும் அருமை... பாடல் சிலவரி கேட்டேன்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....