எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, October 10, 2016

ராவண், வயது 45 – புலாவ் மட்டர் பனீர் – ரொஸ்குல்லா!

ராவண், வயது 45:


ராவண் - தகனத்திற்கு தயாராகும் பொம்மை

தலைநகர் தில்லியில் நவ்ராத்ரி களைகட்டி இருக்கிறது. சென்ற வாரம் முழுவதும் அலுவலகம் இருந்ததால் எங்கும் வெளியே செல்ல இயலவில்லை. சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் வந்திருந்த அழைப்புகளை மதித்து சில நிகழ்ச்சிகளுக்கும் நண்பர்களின் வீடுகளுக்கும் சென்று வரவேண்டி இருந்தது. சனிக்கிழமை செல்ல வேண்டிய இடம் தலைநகரின் ஆர்.கே.புரம் பகுதி. இப்பகுதிக்கு இன்னும் மெட்ரோ வசதி இல்லை. இப்போது தான் தயார் ஆகிக் கொண்டிருக்கிறது. இங்கே பேருந்தில் தான் செல்ல வேண்டியிருக்கிறது.

சென்னையில் மின் தொடர்வண்டிகளுக்கு சீசன் டிக்கெட்டுகள்/பஸ் பாஸ் இருப்பது போல தில்லியிலும் DTC பேருந்துகளுக்கு மாதாந்திர பாஸ் உண்டு. பயன்படுத்துவது குறைவு என்பதால் இந்த மாதாந்திர பாஸ் வாங்கிக் கொள்வதில்லை. இந்த மாதாந்திர பாஸ் தவிர தினம் தினம் வாங்கிக் கொள்ளும் பாஸ் வசதியும் உண்டு. 40 ரூபாய் கொடுத்து பாஸ் வாங்கிக் கொண்டால், அன்றைய நாள் முழுவதும் குளிரூட்டப்படாத அனைத்து DTC பேருந்துகளிலும் செல்ல முடியும். 50 ரூபாய்க்கு பாஸ் வாங்கிக் கொண்டால் குளிரூட்டப்பட்ட பேருந்துகள் உட்பட அனைத்து DTC பேருந்துகளிலும் ஒரு நாள் முழுவதும் பயணிக்கலாம்.

இது ஒரு நல்ல வசதி. ஒரே நாளில் நிறைய இடங்களுக்குப் பயணிக்கும் போது இது மாதிரி 50 ரூபாய் பாஸ் வாங்கிக் கொள்வது வழக்கம். நாள் முழுவதும், எங்கும், எத்தனை முறை வேண்டுமானாலும் DTC பேருந்துகளில் பயணிக்கலாம். இதை வாங்கும்போது நடத்துனர் அந்த பாஸில் நமது பெயரையும், வயதையும் எழுதிக் கொடுப்பதோடு, அன்றைய தேதியும் எழுதித் தருவார். எனது முழுப் பெயரைச் சொன்னால் இடம் பற்றாது! கூடவே “வெங்காயராமன்என எழுதி விடும் அபாயம் உண்டு! அதனால் பின் பகுதியான “ராமன்மட்டும் சொல்வது வழக்கம்.

அதிலும் RAMAN என்பதை இங்கே ரமன் என்று தான் படிப்பார்கள், ஹிந்தியில் எழுதும்போதும் रमन  என்று எழுதிவிடுவார்கள். அதனால் ராமன் என்று அழுத்திச் சொல்வது வழக்கம்.  சனிக்கிழமை அன்று அப்படி பேரைச் சொல்கையில் அந்த நடத்துனர் என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டு சீட்டில் பெயர் எழுதிக் கொடுத்தார்! பார்த்ததற்கான காரணம் சீட்டைப் பார்த்தபோது தான் விளங்கிற்று! அவர் எழுதி இருந்தது – ராவண் வயது 45! சீசனுக்குத் தகுந்தாற் போல பெயர் கேட்டிருக்கிறது போலும்.  பெயர் எழுதியதோடு விட்டால் நல்லது!.... விஜயதசமி அன்று இங்கே நடக்கும் ராவண் பொம்மையை தகனம் செய்வது போல கொளுத்தி விடாமல் இருந்தால் சரி!

புலாவ் - மட்டர் பனீர் - ரொஸ்குல்லா!


துர்க்கா தேவி - ஆர்.கே.புரம் தக்‌ஷின்  காளிபாரி பந்தலில்....

தலைநகர் முழுவதுமே பல இடங்களில் பெங்காலிகள் இருக்கிறார்கள். அப்படி இருப்பவர்கள் அவர்களது வீடுகளின் அருகே இருக்கும் திடலில் அல்லது சாலையில் நவ்ராத்ரி சமயங்களில் பெரிய பெரிய பந்தல்கள் போட்டு துர்கா பூஜா கொண்டாடுவது வழக்கம். இந்த பந்தல்கள் வெகுவும் அழகாக அலங்கரிக்கப்பட்டு, எந்தப் பந்தல் அழகாய் அமைந்திருக்கிறது என்பதைப் பார்த்து, ஒவ்வொரு வருடமும் பரிசும் வழங்குவார்கள். லட்சக் கணக்கில் செலவு செய்து பந்தல் அமைத்து, பூஜைகள் நடத்தி, வருபவர்கள் அனைவருக்கும் உணவும் தருவார்கள்.

எங்கள் பகுதியில் இருக்கும் ஒரு வங்காளி நண்பர் ஞாயிறன்று பூஜைக்கும், மதிய உணவு சாப்பிடவும் கட்டாயம் வர வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார். ஞாயிறு அன்று வேறு வேலை இருக்கிறது, மாலையில் வருகிறேன் என்று அலைபேசி மூலம் சொன்னபோது, பெங்கட்ஜி! வரலைன்னா லொடாய் ஆகிவிடும்என்று ஹிந்தியை பெங்காலியில் பேசி கோபித்துக் கொண்டார். அவர் சொன்னது இது தான் – ‘வெங்கட்ஜி வரலைன்னா லடாய் அதாவது சண்டை ஆகிவிடும்!

சரி எதற்கு லொடாய் என மதியம் ஒரு மணிக்கு கோல்மார்க்கெட் சர்பஜொனின் துர்கா பூஜா சமிதிஅமைத்திருந்த துர்கா பூஜா பந்தலுக்குச் சென்றேன். துர்கா, பிள்ளையார், கார்த்திக் மூர்த்திகளை படம் எடுத்துக் கொண்டு சில நிமிடங்கள் அமர்ந்திருந்த பிறகு உணவு உண்ண அழைத்துச் சென்றார் நண்பர். கையில் எடுத்தால் உடைந்து விடும் தெர்மோகோல் தட்டுகள் – இதைக் கையாள்வது சவாலான விஷயம்! கொஞ்சம் கவனம் தவறினால் உடைந்து விடும் – தட்டொன்றில் புலாவ், மட்டர் பனீர், ஆலு-பர்மல் ட்ரை சப்ஜி மற்றும் பழப்பச்சடி போட, தட்டில் இருந்த partitions முடிந்து விட்டது. இந்த நான்கைத் தவிர கீர் என அழைக்கப்படும் பாயசமும், ரொஸ்குல்லாவும் இருந்தது.

கீர்-ஐ புலாவ் கூடவே போட்டு இரண்டையும் கலக்கச் செய்தார் உணவு பரிமாறியவர். எங்கே புலாவ் மேலேயே ரொஸ்குல்லாவையும் அதன் ஜீராவுடன் சேர்த்து போட்டுவிடுவாரோ என்ற பயத்துடன், சாப்பிட்ட பிறகு வாங்கிக் கொள்கிறேன் எனச் சொல்வதற்குள் அதையும் புலாவ் அருகிலேயே போட்டுவிட்டார்! எல்லாம் சேர்ந்து புலாவ் இனிப்பாக மாறி இருந்தது! மட்டர் பனீரும் அத்தனை காரம் இல்லாமல் இருக்க துர்கா பூஜா சாப்பாடு இனிப்பு மயமாக இருந்தது! ஒரு மாதிரி டெட்லி காம்பினேஷன்!

இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவது மிகவும் கடினமான வேலை. பலர் உழைப்பு இதில் இருக்கிறது. ஒவ்வொரு செயலையும் கவனித்து செய்ய வேண்டியிருக்கும். உணவு விஷயத்தில் தான் பல சமயம் பிரச்சனை உண்டாகும். அத்தனையும் சமாளிக்க வேண்டியிருக்கும் – ரொஸ்குல்லாவை தனியாக ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொடுத்தால் நல்லது என்பதைச் சொன்னால் நிகழ்ச்சி நடத்துபவர்களை குறை சொல்வது போல இருக்கும் என்பதால் அங்கே சொல்லவில்லை – பிறிதொரு நாளில், அடுத்த துர்கா பூஜை வருவதற்குள் இது போன்ற குறைகளைச் சொன்னால், அடுத்த வருடம் சரி செய்து கொள்ள வசதியாக இருக்கும்!

நவ்ராத்ரி அனுபவங்கள் தொடரலாம்.......

நாளை மீண்டும் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.26 comments:

 1. வணக்கம்.

  வட இந்தியாவில் இப்பூஜை நாட்கள் மிகச் சிறப்பாய்க் கொண்டாடப்படும் என்று அறிவேன்.

  இராவண வதம் பற்றிச் செய்திகளில் படித்ததுண்டு.

  “டெட்லி காம்பினேஷன்” இல் எப்படி இதைச் சாப்பிட்டிருப்பீர்கள் என்று ஒரு கணம் நினைத்தேன். :)

  த ம 2.

  நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜோசப் விஜூ ஜி....

   Delete
 2. சுவாரசிய அனுபவங்கள்... இப்படியெல்லாம் நடக்காவிட்டால் நினைத்துப்பார்க்க நமக்கு வேலையே இருக்காதே...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி ஜி.....

   Delete
 3. பரவாயில்லை டெல்லியில் தனியாளாக இருந்தாலும் எல்லா விழாக்களிலும் கலந்து கொள்கிறீர்கள். அதை பற்றி அற்புதமாக பதிவும் எழுதிவிடுகிறீர்கள். அருமை.
  ஆனாலும், ராவண் வயது 45 கொஞ்சம் கஷ்டம்தான்.
  த ம 3

  ReplyDelete
  Replies
  1. நேரம் கிடைக்கும்போது இப்படிச் சில விழாக்களுக்குச் செல்ல முடிகிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

   Delete
 4. 'சுவை'யான அனுபவங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 5. வெங்கட்'ராமன் வெங்கட்'ராவண் ஆனதை ரசித்தோம். பெங்காலிகளின் துர்க்கா பூஜை - நல்லா இருந்துச்சு. பொதுவா அன்னதானம் (பிரசாதம்) செய்பவர்களின் டெடிகேஷன் புரிந்துகொள்ளமுடிந்தது. உங்களுக்கும் ஒரு நாள் (வேளை?) சமையல் பிரச்சனை தீர்ந்தது.

  ReplyDelete
  Replies
  1. ஒரு வேளை சமையல் பிரச்சனை தீர்ந்தது! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 6. #50 ரூபாய்க்கு பாஸ் வாங்கிக் கொண்டால் குளிரூட்டப்பட்ட பேருந்துகள் #
  சென்னையில் கூட இந்த சலுகை இல்லை :)

  ReplyDelete
  Replies
  1. தில்லியில் இது ஒரு நல்ல வசதி. பலமுறை இந்த வசதியைப் பயன்படுத்தி இருக்கிறேன் - சில சிக்கல்கள் இருந்தாலும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 7. திருச்சி குடி இருப்பில் பெங்காலிகளால் துர்கா பூஜை சிறப்பாகக் கொண்டாடப்படும் எனக்கு பல வங்காள நண்பர்கள் உண்டு கலை நிகழ்ச்சிகளும் இருக்கும் ஓஅது அந்தக் காலம் . ராவண்ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 8. தங்களுக்கும் ஆயுதபூஜை வாழ்த்துகள் ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 9. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 10. சுவராஸ்யமான அனுபவம் அண்ணா...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 11. ஆமாம், நீள‌நீளமான பெயரை வைத்துக்கொண்டு இங்கு என் ஆத்துக்காரரும், பொண்ணும் படும்பாடு இருக்கிறதே :))

  அதுவும் சரிதான், இவ்வளவையும் செய்யும்போது ஒருசில குறைகள் இருக்கத்தானே செய்யும். மறக்காம இருக்கத்தான் இவையெல்லாம் !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தரமூர்த்தி.

   Delete
 12. ராவண் 45 அஹஹஹஹஹ்ஹஹ் இங்காவது பரவாயில்லை ஜி அமெரிக்காவில் நம்மூர் பெயர் எல்லாம் படும் பாடு....பத்மநாபன் - Paddy - இப்படி....வடநாட்டவர்கள் நம்மூர் பெயரை உச்சரிப்பது என்பது தனிமயம்...அதுவும் ஒவ்வொரு மாநிலத்தவரும் அவரவர் மொழியின் அக்சென்டில்...

  நல்ல "இனிய சுவை"யான அனுபவம்தான் உங்களுக்கு ஜி!!!

  அங்கு துர்கா பூஜை மிகவும் பிரசித்தம். அதுவும் பெங்காலிகள் அதை மிகச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள்.

  கீதா: வடநாட்டவர்கள் விரதம் இருந்து நம் ஊரைப் போல் 9 சிறு பெண் குழந்தைகளை அழைத்து, பூரி, கருப்புக் கொண்டைக்க்டலை சப்ஜி, ரவா ஹல்வா (கேசரி என்று நினைக்கின்றேன்) செய்து கொடுத்து என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சுவைத்தோம் பதிவை!!...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் கீதா ஜி! பல வீடுகளில் இப்படி பெண் குழந்தைகளை அழைத்து மரியாதை செய்வார்கள். அது பற்றி விரைவில் எழுதுகிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 13. உங்க பேரு ராவண்-ஆ! எம் பேரு பதம்! வயது - சொல்ல மாட்டேனே!

  என்னப்பா! நம்ம தாதா இனிக்க இனிக்க சாப்பாடு போட்டா - சாவடிக்கும் கலவைங்கிறீங்க!

  (பின்னூட்டம் கொஞ்சம் பின்ன்ன்ன்ன்ன்னூட்டம்! மன்னிக்கவும்.)

  ReplyDelete
  Replies
  1. உங்க வயது எனக்குத் தெரியுமே! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.....

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....