சனி, 15 அக்டோபர், 2016

தமிழனும் மலையாளியும்.....


ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 59

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்” என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.


அடுத்ததாய் பார்க்கப் போகும் ஏரி....

மாதுரி ஏரியின் காட்சிகளையும், அதன் அழகினைப் பற்றியும் சென்ற பகுதியில் பார்த்தோம். சென்ற பகுதியின் முடிவில் ஒரு கசப்பான அனுபவம் கிடைத்தது பற்றியும் சொல்லி இருந்தேன். அந்த கசப்பான அனுபவம்....

மாதுரி ஏரியிலிருந்து நாங்கள் புறப்படப் போகும் சமயத்தில் அங்கே வேறு ஒரு வாகனம் வந்தது. அது ஒரு அரசு வாகனம். அந்த வாகனத்திலிருந்து சிலர் இறங்கி வந்தார்கள்.  அதில் ஒருவர் மலையாளி – அருணாச்சலப் பிரதேசத்தில் காவல் துறையில் உயர் பதவியில் இருப்பவர் அவர்.  எங்களுடன் வந்திருந்தவர்களில் ஒருவரும் அருணாச்சலப் பிரதேச அரசு அலுவலகத்தில் பணிபுரிபவர் என்பதை முன்னரே சொல்லி இருக்கிறேன். அவருக்கு அந்த காவல் அதிகாரியைப் பார்த்ததும் தெரிந்து விட்டது.  மேலும் நண்பர்கள் மலையாள மொழியில் பேசிக் கொண்டிருக்கவே அந்த அதிகாரியும் அவர்களோடு பேச ஆரம்பித்தார் – மலையாள மொழியில் தான் என்பதில் சந்தேகம் எதற்கு....

நட்புடன் பேசிக் கொண்டிருந்தார்கள். பரஸ்பர அறிமுகங்கள் செய்து கொண்டோம். அப்போது ஒவ்வொருவரும் எங்கிருந்து வருகிறோம், எந்த அலுவலகத்தில் பணிபுரிகிறோம் என்பதை எல்லாம் கேட்டுக் கொண்டோம்.  அவர்களது பயணம் பற்றியும் சொல்லி, எங்கள் பயணம் எப்படி இருக்கிறது என்பதையும் கேட்டார் அந்த அதிகாரி.  பேச்சின் போது நானும் அவரிடம் தில்லியில் பணி புரிகிறேன் என்றும், தமிழகத்தினைச் சேர்ந்தவன் என்றும் சொல்ல, உடனே அவர், தன்னுடன் வந்திருந்த மற்றொருவரைக் காண்பித்து அவரும் தமிழகத்தினைச் சேர்ந்தவர் தான் – என்னுடைய நண்பர் என்று சொல்லி அறிமுகம் செய்து வைத்தார். அந்த நண்பரும் அதிகாரிதான்.

இத்தனை நேரமும் உரையாடல் நல்ல விதத்திலேயே போய்க் கொண்டிருந்தது.  தமிழ் அதிகாரி நான் எந்த ஊர், எந்த அலுவலகத்தில் வேலை பார்க்கிறேன் என்பதை கேட்க, நானும் சொன்னேன்.  அடுத்த கேள்வி – “எந்த போஸ்ட்-ல இருக்கீங்க?” எந்த சர்விஸ்? IAS-ஆ, IPS-ஆ, இல்ல வேற எந்த சர்விஸ்? என்று வரிசையாகக் கேள்விகள்.  நான் என்னுடைய அலுவலகத்தினைச் சொன்ன பிறகு இத்தனை கேள்விகள். அதுவும் தேவையில்லாத கேள்விகள்.

பொதுவாகவே தமிழர்களுக்கு ஒரு குணம்.  என்ன வேலை பார்க்கிறார்கள், எந்த பதவியில் இருக்கிறார்கள், அவருக்கு எவ்வளவு சம்பளம் என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.  மனிதனை மனிதனாகப் பார்க்கத் தெரிவதில்லை.  தன்னை விட உயர் பதவியில் இருந்தால் வேறு மாதிரி பழகுவார்கள், இல்லை என்றால் பழகும் விதமே மாறிவிடும். இவரும் அப்படியே.  மலையாள அதிகாரி தொடர்ந்து நண்பர்களோடு மகிழ்ச்சியாக அரட்டை அடித்துக் கொண்டிருக்க, இங்கே இந்த தமிழரோ என்னிடம் நேர்காணல் நடத்திக்கொண்டிருக்கிறார் – நல்ல வேளை நான் என்ன படித்தேன் என்று கேட்கவில்லை. பதில் தெரிந்த பிறகு எங்களிடமிருந்து விலகிச் சென்றார் – விடை பெற்றுக் கொள்ளாமல், ஏதோ ஒரு தொலைதூர மாநிலத்தில், சக தமிழரைச் சந்தித்த மகிழ்ச்சி அவரிடம் இல்லை. 

பக்கத்தில் அந்த மலையாள அதிகாரி ஒவ்வொருவரிடமும், கேரளத்தில் எங்கே வீடு, கேரளம் வந்தால் சந்திக்கலாம் என்றும் பேசிக் கொண்டிருக்க, இவர் இப்படி கேள்வி கேட்டது கொஞ்சம் கடுப்பாகவே இருந்தது.

தமிழகத்திற்கு வரும்போதும் இப்படி பலரைச் சந்திப்பதுண்டு.  இது நமது மக்களுக்கே உரிய குணம் என நினைக்கிறேன். நெய்வேலியில் ஒரு மூத்தவர் இருக்கிறார். எப்போது பார்த்தாலும், எவ்வளவு சம்பளம் வாங்கற என்று தான் கேட்பார் – ஒரு முறை “மாசத்துக்கு ஒரு லட்ச ரூபா வருமா?” என்று கேட்டார் – கேட்டது 90-களின் கடைசியில்! :) அவரோ அதிகம் படிக்காதவர், வெளியிடங்களுக்குச் சென்று பழகாதவர்… கேட்பதில் தவறில்லை.  இத்தனை படித்து, பெரிய பதவியில் இருக்கும்போதும், அடுத்தவர்களின் பதவி என்ன, என்ன சம்பளம் என்று கேட்பதெல்லாம் தவறு என்பது அவருக்குத் தெரியவில்லையே…..

பக்கத்தில் இதைக் கேட்டுக் கொண்டிருந்த மலையாள நண்பர்களும் அந்த அதிகாரி என்னிடம் பேசாமல் நகர்ந்து சென்றதைப் பார்த்தபிறகு அவர்களுடைய பேச்சுகளில் என்னையும் சேர்த்துக் கொண்டார்கள்! அந்த மலையாள அதிகாரி ஒவ்வொருவரிடமும் கைகொடுத்து, “சந்தித்ததில் மகிழ்ச்சி” என்பதையும் பகிர்ந்து கொண்ட பிறகு தான் எங்களிடமிருந்து விலகினார்.  வெளியிடங்களில் சென்றிருக்கும்போது இப்படி இருப்பது நல்லதா, இல்லை அந்த தமிழர் மாதிரி இருப்பது நல்லதா என்பதை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.


ஏரிக்கரையில் பார்த்த வாகனம்....
மலைப்பகுதிகளில் இந்த வாகனத்தில் பயணிக்கலாம்!

அந்த சம்பவத்தின் பிறகு அமைதியாக பயணத்தினைத் தொடர்ந்தோம்.  அடுத்ததாய் நாங்கள் சென்றதும் ஓரு ஏரிக்கு தான்! நாங்களெல்லாம் குளிரில் நடுங்கியபடி, குளிர்கால உடையோடு இருக்க, அங்கே பார்த்த ஒருவர் முண்டா பனியனோடு ஏரிக்கரையில் அமர்ந்திருந்தார் – தனது குடும்பத்தினரோடு……  அங்கே என்ன பார்த்தோம், அவரிடம் என்ன பேசினோம் என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன்…..

மீண்டும் ச[சி]ந்திப்போம்!

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

38 கருத்துகள்:

 1. ம்ம்ம்.... இப்படியும் இருக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. அடிமட்டத்திலிருந்து வந்தவர்கள் கூட முன்னர் இருந்த நிலையை மறந்து விட்டு தற்போதைய அந்தஸ்து பார்த்து பழகுவது என்ன பண்பாடோ தெரிய வில்லை.தமிழனுக்கு அதிகமாக இந்த மனநிலை இருப்பது வெட்கத்துக்குரியது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை தான்.... பல சமயம் வெட்கப்பட வைக்கும் விஷயம் இது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன் ஜி!

   நீக்கு
 3. இத்துடன் விட்டு விட்டீர்களே சார்! நம்ம ஆட்களிடம் இருக்கும் இன்னொரு பிறவிக்குணம் பற்றியும் சொல்ல வேண்டுமே! எந்த ஊர் என கேட்டு அது தமக்கு தெரிந்த இடமாயிருந்தால் அப்புறம் இன்ன ஜாதி, குலம் கோத்திரம் என அராய்ந்து பிச்சி உதறி விடுவார்களே! இதிலிருந்தே தெரியவில்லையா? மலையாளிகள் உயரத்தில் இருக்க நம்மாட்கள் செல்லுமிடமெல்லாம் அவனிடம் மாட்டிக்கொண்டு விழிக்கும் அடிப்படை காரணமும் இது தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல வேளை அவர் ஜாதி, குலம், கோத்திரம் வரை செல்லவில்லை. வேலை பற்றி கேட்டதும் நகர்ந்து விட்டார்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.

   நீக்கு
 4. நான் முதன் முதலில் பாம்பே சென்றிருந்தபோது மாதுங்கா அருகே ஒரு திறந்த மேனியுடன் பூணூல் அணிந்த ( பார்த்தால் தமிழர் என்று நன்கு தெரிந்தது)ஒருவரிடம் முகவரியைக்காட்டி வழி கேட்டேன் அவர் மாலும் நஹி என்று இந்தியில் கூறிச் சென்றார் இப்படியும் சிலர்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தலைநகர் தில்லியிலும் இப்படியான அனுபவங்கள் எனக்கும் கிடைத்திருக்கிறது. இப்போதும் கிடைக்கிறது! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   நீக்கு
 5. very much true venkat
  tamils have this nasty habit of enquring in a wrong way
  of late they hurt the software engineers who work in india
  asking them WHY YOUR CO HAS NOT SENT YOU TO U.S ...
  DID YOU NOT QUALIFY TO GO ABROAD....etc

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை தான். கேட்கக் கூடாத கேள்விகள் நிறையவே....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி Nat Chander.

   நீக்கு
 6. உண்மைதான் ஜி மலையாளிக்கும், தமிழருக்கும் உள்ள வேறுபாட்டை அழகாக விளக்கி விட்டீர்கள்
  அவர்கள் மலையாளம் வாழ்க என்று சொல்வதில்லை ஆனால் மலையாளத்தை வாழ வைப்பார்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.....

   நீக்கு
 7. தமிழர்களுக்கும் மலையாளிகளுக்கும் நிச்சயம் வேறுபாடு உண்டு. நான் 23 வருடங்களுக்கு மேலாம தமிழகத்தைவிட்டு வெளியில் இருக்கிறேன். இருவருடனும் பழகியிருக்கிறேன். (two races).

  மலையாளி, அடுத்தவனை மலையாளியாகத்தான் பார்ப்பான். என்ன மதம், ஜாதி போன்றவற்றைப் பெரிதுபடுத்துவதில்லை. தன்னை ஒற்றியிருந்தால் (கேதலிக்காகவோ, அல்லது நாயராகவோ...... ) இன்னும் கொஞ்சம் அட்டாச்'மென்ட். ஆனால், எல்லோரும் மலையாளத்தில்தான் பேசிக்கொள்வார்கள். அவர்களுக்குள்ளேயே சிறிது சிறிது சச்சரவுகள் இருந்தாலும், மலையாளி என்ற 'நிலையிலேயே இருப்பார்கள். எந்தக் காரணத்தைக்கொண்டும் அவர்களது ஒற்றுமை குலையாது. உதவி செய்ய அஞ்சமாட்டார்கள். செலவு என்றெல்லாம் எண்ணமாட்டார்கள். மலையாளி என்ற வட்டம்தான் அவர்களைப் பிணைக்கும். தவறு, அ'நியாயம் என்றெல்லாம் 'நீதிபதிகள்போல் சிந்திக்காமல் அடுத்த மலையாளிக்கு உதவத் தானாகவே முன்வருவார்கள். கம்பெனியில் ஒரு விஷயம் தெரிந்தால் (அது எவ்வளவு ரகசியமாக இருந்தபோதிலும்) உடனே அடுத்த மலையாளிகளிடம் பகிர்ந்துகொள்வார்கள். மலையாளிகளுக்கு எதிரானவர் யார் என்று கண்கொத்திப்பாம்பைப்போல் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

  தமிழர்கள், தானே ஒரு நீதிபதியாகப் பெரும்பாலும் நினைத்துக்கொள்வார்கள். அடுத்தவர்களுக்கு உதவுவது இரண்டாம்பட்சம்தான். இன்னொரு தமிழனைப் பார்த்தால், முதலில் அவர்கள் எந்தப் பகுதி, எந்த ஜாதி, எந்த மதம் என்றெல்லாம் ஆராய்ச்சி செய்வார்கள். அதையொற்றித்தான் அவர்களது நெருக்கமும் பழக்கமும் இருக்கும். அடுத்தவன் சம்பளம் என்ன, அதிகாரம் என்ன, எப்படி நெருங்கலாம், எப்படி உபயோகப்படுத்திக்கொள்ளலாம் என்றெல்லாம் முதலிலேயே ஆராய்ச்சி செய்வார்கள். ஒரே ஊர் என்றாலும், எந்தத் தெரு, யாருக்கு உறவு என்ற வரையில் அவர்களது ஆராய்ச்சி இருக்கும். இது தமிழனின் குணம்.

  பணியில், தமிழன் அடிமையாவதற்குத் தயங்கமாட்டான். தன் மேனேஜர் அடிமைப்படுத்தினாலும் பொறுத்துக்கொள்வான். முடிந்தமட்டும் ஜால்ரா போடுவான். மலையாளிகள், ஓரளவு சுய கௌரவம் உள்ளவர்கள். நியாயம், ரூல்ஸ் பேசக்கூடியவர்கள். வெறும் அடிமைகளாக அவர்களை நடத்துவது இயலாது. அவர்களிடத்தில் நட்பு ஒன்றுதான் நன்கு செல்லுபடியாகும்.

  ஒரு பிரச்சனைக்குத் தமிழர்களால் ஒன்று சேரவே முடியாது. மலையாளிகளால் ஒன்று சேராமல் இருக்கவே முடியாது.

  நான் சொல்லும் கருத்தில் சந்தேகம் இருந்தால், கில்லர்ஜி என்ன எழுதுகிறார் என்று பாருங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பர் திரு. நெல்லைத்தமிழன் அவர்களுக்கு...
   மிகவும் அருமையாக கணித்து வைத்து இருக்கின்றீர்கள் நான் தங்களுக்காகவே இதனைக் குறித்து தனியாக பதிவு எழுத வேண்டும் என்று நினைககிறேன் நன்றி

   நீக்கு
  2. விரிவான கருத்துரைக்கு நன்றி. அவர்களுக்கு இருக்கும் ஒற்றுமை - அதிலும் தங்களுக்கு எதிராக யாராவது வந்துவிட்டால் இருக்கும் ஒற்றுமை நம்மிடையே இல்லை. பலமுறை இந்த விஷயம் கண்டதுண்டு, உணர்ந்ததுண்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
  3. உங்கள் பதிவினை எதிர்பார்த்து நானும் காத்திருக்கிறேன்.

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
  4. நானும் நண்பர் நெல்லைத் தமிழனின் கருத்தோடு ஒத்துப்போகிறேன். வளைகுடா நாட்டில் வசிப்பதால் அலுவலகம் முழுவதும் மலையாளி நண்பர்களைப் பார்க்க முடியும். பெரும்பாலும் அவர்களிடத்தில் ஒற்றுமையைக் காண முடியும், வார இறுதியில் குடும்பமாகவோ அல்லது பேச்சிலர்களாகவோ ஒன்றுகூடி இருப்பார்கள். அவர்களிடத்தில் பிடித்த விஷயமென்னவென்றால் ஒரு மலையாளி தனக்கு முன் பின் தெரியாத இன்னொரு மலையாளியைப் பார்த்தால் அவர்களின் தாய்மொழியிலேயே பேசுவார்கள், ஆனால் படித்த இரு தமிழர்கள் சந்தித்தால் நிலைமையே தலைகீழ் - ஆங்கிலம் அதிகமாகவும், தமிழில் பேசக் கூச்சப்படுவார்கள், பல முறை இதுபோன்று பார்த்துள்ளேன்.

   நீக்கு
  5. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருள்மொழிவர்மன்.....

   நீக்கு
  6. மிகவும் சரியான வரிகள்! நெல்லைத் தமிழன். கில்லர்ஜி, சே குமார் எல்லோரும் அவர்களது பதிவுகளில் இது போன்ற அனுபவங்களை அவ்வப்போது சொல்லி வருகிறார்கள்.

   மலையாளிகள் எங்கு சென்றாலும் ஏற்றத் தாழ்வு பார்ப்பதில்லை. அவர்களது கல்யாணங்களிலேயே அது தெரிந்துவிடும். பழகுவது உட்பட. கேரளத்தில் மந்திரியாக இருந்தாலும் யாரும் குனிவதில்லை. பணக்காரன், ஏழை என்பதெல்லாம் அவ்வளவாகத் தெரிவதே இல்லை. ஆனால் தமிழ்நாட்டில், கொஞ்சம் பதவி பெரிது என்றால் கூழைக் கும்பிடு....கீழே என்றால் தள்ளி வைத்தல்... அந்தஸ்து மிகவுமே பார்க்கிறார்கள்.

   நீக்கு
  7. அவர்களுக்கு இருக்கும் மொழிப்பற்று, மாநிலப் பற்று நம்மிடம் இல்லை என்பது தான் சோகம்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு
 8. ஏண்டா சந்தித்தோம் என்றாகி விட்டதா :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படி இல்லை. ஆதங்கம். பதவி பெரியதாக இருந்தாலும் எண்ணம் சிறியதாக இருக்கிறதே என்று.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   நீக்கு
 9. நல்ல அனுபவ பகிர்வு. ஏரிக்கரையில் அமர்ந்து இருந்தவரிடம் பேசியதை கேட்க தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   நீக்கு
 10. மலையாளியைப் போலத் தமிழனுக்கு இனவுணர்வு கிடையாது. நீங்கள் பெரிய பதவியில் இருந்தால், உங்களைப் பயன்படுக் கொள்ள நினைத்தே அந்தக் கேள்விகள்! சுயநலம் தான். மலையாளிகள் சந்தித்தால் மலையாளத்தில் தான் பேசுவார்கள். நம்மாள் எப்போதுமே ஆங்கிலம் அல்லது ஹிந்தி தான். உங்கள் ஆதங்கத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி வெங்கட்! முந்தைய பகுதிகளை வாசிக்க வேண்டும். நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுயநலம் .... இருக்கலாம்!

   மற்ற பகுதிகளையும் முடிந்த போது படியுங்கள்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஞா. கலையரசி ஜி!

   நீக்கு
 11. சிலர் அப்படித்தான் விட்டுத்தள்ளுங்கள்! தொடர்கிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   நீக்கு
 12. சிலர் இப்படித்தான் இருப்பார்கள்... அது தமிழருக்கே உரிய புத்தி.
  இங்குகூட மலையாளி ஒருவரை ஒருவர் சந்தித்தால் மலையாளத்தில் பேசுவார்கள்... நம்ம ஆளு ஆங்கிலத்தில் ஆரம்பிப்பான்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம்ம ஆளு ஆங்கிலத்தில் ஆரம்பிப்பான்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   நீக்கு
 13. பெரும்பாலும் தமிழர்களின் குணம் அப்படிதான் இருக்கிறது.
  த ம 6

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில்குமார்.

   நீக்கு
 14. // கேள்வி – “எந்த போஸ்ட்-ல இருக்கீங்க?” எந்த சர்விஸ்? IAS-ஆ, IPS-ஆ, இல்ல வேற எந்த சர்விஸ்? என்று வரிசையாகக் கேள்விகள்.//

  என்னங்க, கற்பனைக்குதிரையை தட்டிவிடுவதற்கு அருமையான வாய்ப்பு கிடைச்சிருக்கு. நழுவவிட்டுடீங்களே! அடுத்த தடவைக்கு இப்பவே யோசிச்சு வச்சுக்குங்க!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கற்பனைக் குதிரையை தட்டிவிட ஒரு வாய்ப்பு! :))))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பக்கிரிசாமி ஜி!

   நீக்கு
 15. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ப.கந்தசாமி ஐயா.

   நீக்கு
 16. மலயாளிகளின் முன் இப்படித் தமிழர் ஒருவர் நடந்து கொள்வது எவ்வளவு அவமானமாக இருக்கும். உங்களுக்கும் அவர்களின் முன்பு ஒரு மாதிரியாக இருந்திருக்கும். அவர்கள் மலையாளப் படங்களில் சில டயலாக்குகள் வைப்பது இதைச் சொல்லிக் காடுவது போல இருக்கும்...தமிழர்கள் தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்கின்றார்கள் என்று சொல்லலாம்.

  கீதா: துளசி அடிப்படையில் கேரளத்துக்காரர். என்றாலும் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்ததால் தமிழ்ப்பற்று அதிகம். எனவே இரு கலாச்சாரம் கலந்தவர். எனக்கும் அப்படியேதான். என்றாலும் அவரது வீட்டிற்குச் செல்லும் போது துளசியைத் தவிர அவரது வீட்டினர் தமிழர்களை என் முன்னேயே விமர்சிப்பார்கள். மனதிற்கு மிகவும் வருத்தமாகத்தான் இருக்கும். துளசியும் வருத்தப்படுவார். நாமும் எதுவும் பேச முடியாது. ஏனென்றால் அவர்கள் சொல்லுவதில் சில நியாயமற்றதாக இருந்தாலும், பல சரியானதாகத்தான் இருக்கும். நம்மிடம் ஒற்றுமை இல்லை என்பது நன்றாகத் தெரிகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழர்கள் தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்கின்றார்கள்.... உண்மை தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....