சனி, 8 அக்டோபர், 2016

பும்லா பாஸ் – சீன எல்லைப் பயணம்.....


ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 56

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.


கரடு முரடான பாதை...

இதற்கு முந்தைய பகுதியில் ZEMITHONG சென்ற போது கிடைத்த அனுபவங்கள், தவாங்க் நகரிலிருக்கும் போர் நினைவுச்சின்னம், போர் பற்றிய குறும்படம் ஆகியவற்றின் தகவல்களைப் பார்த்தோம். அறைக்கு வந்து அன்றைய தினத்தின் நிகழ்வுகளைச் சிந்தித்தவாறே உறங்கிப்போனோம். விழித்தெழுந்து பயணத்தின் அடுத்த கட்டம் நோக்கி புறப்படத் தயாரானோம்.  எங்கள் அன்றைய தினத்தின் பயணத்திட்டத்தில் முதன்மையான திட்டம் பும்லா பாஸ் எனும் இடத்திற்குச் செல்வது தான். பும்லா பாஸ்! அது எங்கே இருக்கிறது, அங்கே செல்ல என்ன வழி, எத்தனை தூரம் என்பதைப் பற்றி இந்தப் பகுதியில் பார்க்கலாம்!


வளைந்து நெளிந்து போகும் பாதை...

தவாங்க் நகரிலிருந்து மலைப்பகுதிகள் வழியாக சுமார் 40 கிலோமீட்டர் பயணித்து இவ்விடத்தினை அடைய வேண்டும். இந்த இடத்திற்கு நினைத்தவுடன் பயணித்து விட முடியாது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 15200 அடி உயரத்தில் இருக்கிறது இந்த பும்லா பாஸ்! அனைவரும் இங்கே செல்ல அனுமதி இல்லை. இங்கே செல்லும் முன்னர் தவாங்க் நகர மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும். அதற்கு செல்லும் அனைவருடைய அடையாள அட்டையின் நகல் தர வேண்டும். செல்லும் வண்டியின் ஓட்டுனர் அடையாள அட்டை நகலும் தரவேண்டும் என்பதை நினைவில் கொள்க!


மலைப்பாதை – ஒரு தூரப் பார்வை...
  
சரி அப்படி மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று விட்டீர்கள், என்று சந்தோஷமாக பும்லா பாஸ் புறப்பட்டுச் சென்றுவிட முடியாது. இந்த அனுமதி வாங்கியபிறகு தவாங்க் நகரிலிருக்கும் ராணுவ அலுவலகத்தில் இந்த அனுமதி கடிதம் காண்பித்தால் அவர்கள் அதைச் சரி பார்த்து, அவர்களுக்கான நகலை வைத்துக் கொண்டு, அனுமதிக் கடிதத்தில் முத்திரை இட்டுத் தருவார்கள். ராணுவ முத்திரை இட்ட அனுமதிச் சீட்டு இல்லாத யாரையும் பும்லா பாஸ் செல்ல அனுமதிப்பதில்லை! தவாங்க் நகரிலிருந்து புறப்பட்டு சில கிலோமீட்டர் பயணித்தபின்பு ராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதிகள் வந்துவிடும். ஒவ்வொரு பகுதியிலும் பாதுகாப்புச் சோதனைகள், அனுமதிச் சீட்டு முத்திரை ஆகியவற்றை பார்த்த பிறகு உள்ளே அனுமதிப்பார்கள்.


பாதையின் ஓரங்களில் பனி...

இது கொஞ்சம் கடினமான வேலை தான்! இது பற்றி தெரிந்து கொள்ளாமல் பும்லா பாஸ் பார்க்க வேண்டும் எனச் சென்றுவிட்டால் ஏமாற்றம் தான் மிஞ்சும்.  நாங்கள் இங்கே செல்ல வேண்டும் எனத் திட்டமிட்டபோதே தேவையான முன்னேற்பாடுகளையும் செய்ய ஆரம்பித்தோம். நண்பர் ஜார்ஜும் தவாங்க் நகரிலிருந்ததால் எங்களுக்கான ஏற்பாடுகளை அவர் செய்து வைத்திருந்தார். நாங்கள் தங்குமிடத்திலிருந்து புறப்பட்டு போகும் முன்னரே இந்த அனுமதிக் கடிதம் பெற்றுவிட்டதால் பும்லா பாஸ் நோக்கிய பயணத்தினைத் துவங்கினோம். 


ஒரு ஏரி – தூரப் பார்வை...

கடல்மட்டத்திலிருந்து 15200 அடி உயரம் – கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்! இத்தனை உயரத்தில் இருக்கும்போது வருடத்தின் பெரும்பகுதி காலங்களில் பனிபடர்ந்தே காணப்படும் என்பதில் சந்தேகமில்லை. வழியில் சின்னச் சின்னதாய் ஏரிகள் – நாங்கள் சென்ற மார்ச் மாதத்தில் கூட பல ஏரிகள் உறைந்து கிடந்தன. இப்படி இருக்கையில் டிசம்பர் ஜனவரி மாதங்களில் எப்படி இருக்கும் என்பதை யோசித்தால் கொஞ்சம் பயமாகவும் இருக்கிறதல்லவா!  பெரும்பாலான மலைப்பகுதிகள் பனி மூடிக்கிடக்கின்றது. சாலைகள் – தார் சாலைகள் அல்ல! கரடுமுரடான கற்களைக் கொண்டு அமைக்கப்பட்ட சாலைகள் தான். சாலையின் இரண்டு பக்கங்களிலும் பனி உறைந்து கிடக்கின்றது.


காதல் – தாய்நாட்டின் மீதான காதல்...
கடுமையான குளிரிலும் இங்கே பணிபுரிய ஒரு காரணம்

வருடத்தின் எல்லா நாட்களிலும் இங்கே சென்றுவிட முடியாது. குளிர் அதிகமாக இருக்கும் சமயங்களில் சாலைகள் கூட பனியால் மூடி இருக்க, பொது மக்களுக்கு அனுமதி வழங்குவதில்லை. என்றாலும், ராணுவ வீரர்கள் இங்கே தான் இருந்தாக வேண்டும். குளிரோ, பனியோ, வெயிலோ, காற்றோ, மழையோ – இயற்கைச் சீற்றம் எப்படி இருந்தாலும் ராணுவ வீரர்கள், தாய் தேசத்தினைக் காப்பாற்றும் தங்களது கடமையைச் செவ்வனே செய்து வருகிறார்கள். ஆறு அடிக்கும் மேல் பனி உறைந்து கிடக்கும் இடத்தில் அரை மணி நேரம் நின்றாலே நமக்கு உதறுகிறது, ஆக்ஸிஜன் குறைபாடு காரணமாக மூச்சுவிடத் தடுமாறுகிறோம் எனும்போது அங்கேயே தங்கி தேசத்தினைக் காப்பாற்றும் பணியிலும் ஈடுபடும் அவர்களுக்கு நாம் உகந்த மரியாதையைச் செலுத்தவேண்டியது ஒவ்வொரு இந்தியக்குடிமகனின் கடமை அல்லவா.....

பயணிக்கும்போது பார்த்த பல காட்சிகள் மனதை விட்டு அகலாமல் இன்றைக்கும் நினைவில் நிற்கிறது. அதில் ஒரு காட்சி மட்டும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.


உறைந்து கிடக்கும் ஏரியில் தண்ணீர் எடுக்கும் ராணுவ வீரர்...

பயணிக்கும் பாதையில் பல ஏரிகள் இருக்கின்றன. பெரும்பாலான ஏரிகள் பனியில் உறைந்து கிடக்கின்றன. அப்படி உறைந்து கிடக்கும் ஏரி ஒன்றின் மேல் ஒரு ராணுவ வீரர் நடந்து செல்கிறார் – ஆமாம் உறைந்து கிடக்கும் ஏரி மேலே நடந்து செல்கிறார்! எதற்கு என்று பார்த்தால், உறைந்து கிடக்கும் ஏரியின் ஒரு பகுதியில் சிறிய பிளவு – அந்த பிளவின் உள்ளேயிருந்து தண்ணீர் எடுத்து வருகிறார். இருக்கும் தண்ணீர் அனைத்தும் உறைந்து கிடக்க, எதைக் குடிப்பது, மற்ற தேவைகளை எப்படிச் சமாளிப்பது! உறைந்து கிடக்கும் ஏரியின் கீழே இருக்கும் தண்ணீரை எடுத்தால் எவ்வளவு சில்லென்று இருக்கும் - நினைக்கையிலேயே கொஞ்சம் நடுங்குகிறதல்லவா?


மற்றுமொரு நீர் நிலை...

முற்றிலும் கரடு முரடான பாதையில் பயணிப்பது சற்றே கடுமையான விஷயம் தான். இம்மலைப்பகுதிகளில் வாகனத்தினைச் செலுத்துவதும் சுலபமான வேலையல்ல. நமது ஊர்களில் இருக்கும் தார்ச் சாலைகளில் மழை காரணமாகவோ, சரியாக போடாத காரணமாகவோ சின்னச் சின்னக் குழிகளில் விழுந்து எழுந்திருக்கும் போதே நம் வாயிலிருந்து அரசுக்கு எதிரான பல வாக்கியங்கள் வந்து விழும்...... இப்படி இருக்கையில் மொத்த சாலையும் கரடுமுரடாக இருந்தால், அதில் பயணிக்கும்போது எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். ஒரு முறை பயணித்து வந்தால் வண்டியின் பாகங்கள் மட்டுமல்ல, நமது உடலின் பாகங்கள் கூட கொஞ்சம் தன்னிடத்தினை விட்டு நகரலாம்! அத்தனை மேடு பள்ளம். 


அழகிய ஏரியும் அமைதியும்...

இன்னுமொரு விஷயமும் சொல்லி விடுகிறேன். பெரும்பாலான பகுதிகள் ராணுவக் கட்டுப்பாட்டில் இருப்பதால் புகைப்படம் எடுப்பது தடை செய்யப்பட்டு இருக்கிறது. ஒரு சில பகுதிகளில் புகைப்படம் எடுக்கலாம். அப்படி எடுத்த படங்கள் சில இங்கே கொடுத்திருக்கிறேன். தொடர்ந்து பயணித்து சோதனைகளை முடித்து பும்லா பாஸ் அடைந்தோம். அங்கே கிடைத்த அனுபவங்களை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி....

22 கருத்துகள்:

 1. சாதாரணமாக செல்லக் கூடிய இடங்களுக்கே நான் செல்வதில்லை!! அனுமதி பெற்றெல்லாமா? ஆஹா....! ராணுவ வீரர்களின் தியாகம் போற்றுதலுக்குரியது. வணங்குவோம். தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. >>> குளிரோ, பனியோ, வெயிலோ, காற்றோ, மழையோ –
  இயற்கைச் சீற்றம் எப்படி இருந்தாலும் அவற்றைத் தாங்கிக் கொண்டு
  தங்களது கடமையைச் செவ்வனே செய்து தாய் நாட்டினைக் காப்பாற்றும் ராணுவ வீரர்கள் <<<

  மாவீரர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 3. புகைப்படம் அழகா ? புகைப்படத்தை எடுத்த விதம் அழகா ?
  வாழ்த்துகள் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 4. மிகவும் அழகான புகைப்படங்கள் என்றால்... 15200 அடி உயரம் என்னும் போது ஆஹா.. ஆஹா... அருமையான இடம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   நீக்கு
 5. உங்களது பயண அனுபவங்கள் மிக வித்தியாசமாக உள்ளன. எந்த சூழலிலும் நாங்கள் செல்ல முடியாத இடங்களுக்கு நீங்கள் எங்களை அழைத்துச் செல்வதற்கு மனமார்ந்த நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 6. வெப்பதட்பம் சிறிது ஏறினாலோ குறைந்தாலோ நாம் சலித்துக் கொள்கிறோம் ராணுவ வீரர்களின் நிலை பற்றி நினைத்தும் பார்க்க முடிவதில்லை. உங்கள் எழுத்தில் ஒரு எம்பதி தெரிகிறது வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   நீக்கு
 7. நாட்டை காக்கும் ராணுவ வீரர்களுக்கு மட்டுமல்ல. இந்தப் பகுதியில் பயணம் செய்த தங்களுக்கும் துணிச்சல் அதிகமே! அருமையான பயணக் கட்டுரை.கட்டுரை !
  த ம 4

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

   நீக்கு
 8. வாழ்க்கைப் பயணத்தில், பயணமே உங்களின் வாழ்க்கையும் ரசனையுமெனத் தோன்றுகிறது.

  என்ன சற்றுப் பொறாமைதான் ..!

  த ம

  தொடர்கிறேன்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜோசப் விஜூ ஜி!

   நீக்கு
 9. 'நல்லாருக்கு. பாதையின் ஓரத்தில் பனி.. நினைக்கவே நன்றாக இருக்கு. எனக்கு முழுப்பனியில் செல்ல ஆசைதான் (கேனடாவில் -35 டிகிரிலாம் சாதாரணமாம் குளிர்காலத்தில்). நண்பர்கள் சொல்கிறார்கள், ஓரிரண்டு, மிஞ்சிப்போனால் ஒரு வாரம் புதுமையாக இருக்கும். அப்புறம் அவஸ்தைதான் என்று. நல்ல வாய்ப்பை உபயோகப்படுத்தியுள்ளீர்கள்... தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தொடர்ந்து பனிப் பிரதேசத்தில் இருப்பது அவஸ்தையான விஷயம் தான் - அதுவும் பனிப்பொழிவு இருக்கும் இடங்களில் இருப்பது அதிக அவஸ்தை. பாதைகளிலிருந்து பனியை நீக்குவது பெரிய வேலை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 10. காட்சிக்கு அழகாய் இருந்தாலும், அங்கு செல்வதிலேயே இவ்வளவு சிரமங்கள் இருக்கும்போது, அங்குள்ள வீரர்களின் நிலை எப்படி இருக்கும் ! போற்றுவோம் அவர்களை !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இரண்டு மூன்று மாதங்கள் ஒரே பிரிவு வீரர்கள் இருப்பார்கள் - அதிக குளிர் சமயங்களில் இத்தனை நாட்கள் இருப்பதே பெரிய விஷயம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தரமூர்த்தி.

   நீக்கு
 11. ஆஹா! அப்படியே பார்த்துக் கொண்டு மனதில் கற்பனை விரிய வாசித்தோம் வெங்கட் ஜி!!! செல்வதற்கான வாய்ப்புக் கிடைக்குமா என்று தெரியவில்லை அருமையான படங்கள். அங்குள்ள இராணுவ வீரர்களுக்கு ராயல் சல்யூட்...

  கீதா: மேற் சொல்லப்பட்டக் கருத்துடன்.....உங்கள் இந்த 7 மாநிலப் பயணத்திலேயே இதுதான் டாப் (உயரத்திலும் சரி இடங்களிலும் சரி!!) என்ன ஒரு அழகு இல்லையா!! அமைதி!! படங்கள் மனதைக் கட்டிப் போடுகின்றன. இந்த இடம் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும் என்ற ஆவல். குறித்துக் கொண்டுவிட்டேன். ஆனால் இத்தனைப் பனி படர்ந்தப் பிரதேசம் என்பதால் சற்று மூச்சுத் திணறல் ஏற்படும். சிலருக்கு. இது போன்ற இடங்களுக்குச் செல்லும் போது மூச்சை நன்றாக இழுத்துவிட்டுச் செல்ல வேண்டும் என்றும் கையில் பச்சைக் கற்பூரம் வைத்துக் கொண்டால் அதைத் தவிர்க்கலாம். எங்களுக்கு உபயோகமாக இருந்தது. வீரர்களை நினைக்கும் போது பிரமிப்பாகத்தான் இருக்கிறது. இந்த இடங்களில் பொது மக்கள் இருக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன்....தொடர்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பச்சைக் கற்பூரம் வைத்துக் கொள்வது பற்றி இப்போது தான் கேள்விப் படுகிறேன்.. நல்ல குறிப்பு. பயன்படும்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....