எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, October 20, 2016

சந்தித்ததும் சிந்தித்ததும் – 1200:பதிவர்கள் பார்வையில் எனது வலைப்பூ
2009-ஆம் ஆண்டு துவங்கிய வலைப்பூ பயணம்.  ஏழு ஆண்டுகள் முடிந்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்ததை சில நாட்கள் முன்னர் பகிர்ந்து கொண்டிருந்தேன்.  அப்பதிவிலேயே விரைவில் எனது 1200-வது பதிவு என்றும் சொல்லி இருந்தேன்.  வலையுலகில் இருக்கும் பிரபல பதிவர்கள் போல எனக்கு கதை எழுதவோ, கவிதை எழுதவோ தெரியாது. தமிழில் அத்தனை புலமையும் கிடையாது. கல்லூரி வரை படித்ததில் ஏதோ தமிழ் கொஞ்சமாக தெரிந்திருக்கிறது. எந்த திறமையும் இல்லாத, தமிழ் எழுத, படிக்கத் தெரியும் என்ற ஒரே காரணத்தினை மட்டுமே வைத்துக் கொண்டு எந்த தைரியத்தில் வலைப்பூ எழுத ஆரம்பித்தேன் என்பது எனக்கே புரியாத புதிர்…… 

பதிவுலகில் ஆயிரக்கணக்கில் பதிவுகள் எழுதி இருப்பவர்கள் மத்தியில் 1200-வது பதிவு எழுதி விட்டேன் என்று தம்பட்டம் அடித்துக் கொள்வது அழகா என்றும் என் மனசுக்குப் படுகிறது. இருந்தாலும் பயணங்கள் செல்வதை எழுதி, எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டும் இத்தனை நாட்கள் பதிவுலகில் இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் இதுவே எனது கடைசி பதிவாக இருக்கலாம் என்ற எண்ணம் வந்தபடியே இருக்கிறது! இப்போதும் அதே எண்ணம் தான் – இந்த 1200-வது பதிவே கூட எனது கடைசி பதிவாக இருக்கலாம்……

என் வலைப்பூ பற்றியும், அதில் இருக்கும் நிறை குறைகள் பற்றியும் சில பதிவர்களிடம் கேட்டு அவர்களின் கருத்தினையே எனது பக்கத்தில், 1200-வது வலைப்பதிவாக வெளியிட நினைத்தேன். அதை செயல்படுத்தவும் செய்திருக்கிறேன்.  நான் கேட்டது நான்கு பதிவர்களிடம்….. இனி, எனது வலைப்பூ பற்றி அவர்கள் வார்த்தைகளில்…..  


முதலாவதாக எங்கள் பிளாக் ஸ்ரீராம் அவர்கள் பார்வையில்…..

வணக்கம் வெங்கட்.  நலம்.  நாடுவதும் அதுவே.

முதலில் 1200 வது பதிவுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்.

உங்கள் வலைப்பக்கம் என்று பார்க்கும்போது எல்லோருமே முதலில் சொல்லக் கூடியது உங்கள் பயணப் பதிவு.  உங்கள் பயணங்களே ஒரு மிகப்பெரிய சாதனை.  அதனைப் பதிவில் தொடராக எழுதி வருவது அதைவிட பெருமைக்குரிய விஷயம்.  யாரும் செல்லமுடியாத இடங்களுக்குக் கூட சென்று வந்திருப்பது சிலிர்க்க வைக்கும், பிரமிக்க வைக்கும் விஷயங்கள்.

வெள்ளிகளில் வெளியாகும் ஃப்ரூட் சாலட் பதிவு ஒரு பல்சுவைப்பதிவு.  பெரிய கச்சேரிகளில் கன ராகங்களுக்கு நடுவே துக்கடா என்று பாடகர் பாடும் சங்கதிகள் ஒரு மாறுதலாக அமைந்து மிக்க இனிமையைச் சேர்ப்பது போல...

ராஜா காது கழுதை காது, சிறிய பிரயாணச் சம்பவங்கள் போன்றவை அம்மிணி கொழுக்கட்டை போல சுவை மிகுந்தவை.

உங்கள் புகைப்படக்கலை பற்றிச் சொல்லவில்லை என்றால் எப்படி?  தெளிவான, அழகான, வித்தியாசமான புகைப்படங்களின் அணிவகுப்பு ரசிக்கவைக்கும்.  குழந்தைகளின் புகைப்படங்கள், வித்தியாசமான பொருட்களின் புகைப்படங்கள் இப்படி வரிசைப்படுத்திப் பாராட்டலாம்.

உங்கள் பயண அனுபவங்களுக்கு அடுத்தபடியாக உங்களிடம் பொறாமை கொள்ள வைக்கும் விஷயம் உங்கள் உயரம்!!  சிரிக்காதீர்கள்.  எனக்கு அமிதாப்பிடம் முதல் கவர்ச்சியும் அவர் உயரம்தான்.

மொத்தத்தில் படிக்க கௌரவமான, சுவையான, நெகடிவ் அப்ரோச் எதுவுமில்லாத, வம்புதும்புகளுக்குப் போகாத, அரசியல் இல்லாத சுவாரஸ்யமான தளம் உங்கள் தளம்.

பாராட்டுகள்.  உங்கள் மெயில் கண்டதும் யோசிக்காமல் மனதில் தோன்றியதை எல்லாம் எழுத்தாக்கி விட்டேன்.

அன்புடன்,
ஶ்ரீராம்.

குறைகளையும் சொல்லும்படி கேட்டிருந்தேன்…..  அதற்கு அவர் பதில்…

குறைகளா?  தேடிப் பார்க்கிறேன்.  கண்ணில் பட்டால் சொல்கிறேன்.  நடுநடுவே இடைவெளிகள் விழுவதைச் சொல்லலாம்.  ஆனால் அலுவலகப் பணிகளையும் வைத்துக் கொண்டு இதையும் சமாளிப்பது கஷ்டம் என்று எனக்கே தெரியும்!

*************

அடுத்ததாக, தில்லையகத்து நண்பர்கள் துளசிதரன் மற்றும் கீதா அவர்களிடம் கேட்க, அவர்கள் எழுதித் தந்தது – கீழே….

2013. வலையுலகில் நாங்கள் காலடி எடுத்துவைத்த நேரம். வலையுலகிற்குப் புதியவர்கள். அதே வருடத்திலா இல்லை 2014 ஆம் வருடத்திலா என்று சரியாக நினைவு இல்லை என்றாலும், முதன் முதலில் வெங்கட்ஜி அவர்களின் வலைத்தளத்திற்கு எங்களை வரவழைத்தது ஃப்ரூட் சாலட் எனும் பகுதிதான் என்ற நினைவு. ஃப்ரூட் சாலட் என்றவுடன் ஏதோ உணவுக் குறிப்பு என்று நினைத்தோம். நிறைய ஃப்ரூட் சாலட் என்ற தலைப்புகளைப் பார்த்ததும் ஒரு வேளை வித விதமான ஃப்ரூட் சாலடாக இருக்குமோ என்றும் நினைத்தோம். 

அதன் பிறகு உள்ளே சென்று பார்த்ததும் தான் தெரிந்தது இந்த ஃப்ரூட் சாலட் நாம் சாப்பிடும் ஃப்ரூட் சாலடையும் விட இனிமையான ஒன்று என்றும் ஒவ்வொரு ஃப்ரூட் சாலடும் அருமையான செய்திகளையும், இற்றைகளையும், காணொளிகளையும், இசையையும், சிறிய சிறிய கதைகளையும், பல இளம், வளரும் கலைஞர்களின் ஓவியங்களையும், அவரது செல்லக் குட்டிப்பெண் ரோஷினியின் ஓவியங்களையும் தாங்கி வரும் சுவையான பதிவுகள் என்பதையும் அறிந்தோம். இவற்றில் எது ஃப்ரூட் சாலடின் மேலே அலங்கரிக்க வைக்கும் செர்ரிப் பழத்தின் இடத்தைப் பிடிக்கும் என்பதில் ஒரு போட்டியே வைக்கலாம், அந்த அளவிற்கு அருமையான பதிவாக இருந்து வருகிறது.

வெங்கட்ஜியின் வலைத்தளத்தில், அவர் அனுபவ ரீதியாக மூத்தப் பதிவர் என்பதையும், தலைநகர்வாசி என்பதையும், வலையுலகில் முன்னோடி மட்டுமல்ல பிரபலமானவர் என்பதையும் அறிந்ததும், வலைத்தளத்தை ஆராய்ச்சி செய்த போது பல அருமையான, சுவையான பதிவுகளைப் பார்த்ததும் வலைத்தளத்தை எங்கள் வலைத்தளத்தில் சேர்த்துக் கொண்டு விட்டோம். அதன்பின் வலைத்தளத்தை வலம் வந்த போது பயணக் கட்டுரைகள் கண்களில் பட அவரது பயணங்கள் பிரமிக்க வைத்தன. மிக மிக அழகான, மனதைக் கொள்ளை கொள்ளும் படங்களுடன், குறிப்புகளுடன் அனைவருக்கும் பயன் அளிக்கும் வகையில் சுவாரஸ்யமான பயணக் கட்டுரைகள். தொடக்க காலத்தில் எழுதிய கட்டுரைகளை விட தற்போது எழுதும் கட்டுரைகள் இன்னும் மெருகேறியுள்ளதையும் அறிய முடிகிறது. அழகான தமிழ். ஒயிலான நடை! நாங்கள் அவரது புகைப்படங்களின் ரசிகர்களும் கூட!!!

அவர் அனுபவித்த வட இந்திய உணவுக் குறிப்புகள், தனது ரயில், விமான மற்றும் பேருந்துப் பயணங்களின் போது ஏற்பட்ட கசப்பான, நகைச்சுவையான, ஆதங்கமான பதிவுகள், கவிஞர்களை ஊக்குவிக்கும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு அதற்குக் கவிதைகளை வரவேற்று வெளியிடுதல், தில்லி நிகழ்வுகள், கொண்டாட்டங்கள் பற்றிய பதிவுகள், பல மாநிலங்களின் கலாச்சாரப் பதிவுகள், அவரது சிறுவயது நினைவுகள், அனுபவங்களைப் பற்றிய பதிவுகள், தான் பார்த்ததைப் பகிரும் பதிவுகள், அழகிய நிழற்படங்களைப் பகிர்ந்து கொள்ளும் பதிவுகள், முகநூலில் பகிர்ந்தவை என்று ஒன்றை ஒன்று விஞ்சும் பதிவுகள்! நண்பரின் தளத்திலிருந்து நம் நாட்டின் ஒவ்வொரு மாநிலத்தைப் பற்றியும், குறிப்பாக வட இந்திய மாநிலங்களைப் பற்றிய கலாச்சாரம், மொழி, மக்கள், அவர்களது வாழ்வியல் என்று பல சுவாரஸ்யமான தகவல்களை அறிய முடியும். அவரது சமூக அக்கறையும், நாட்டின் மீதான பற்றும் மற்றும் சமூக அவலங்களின் மீதான தார்மீகக் கோபமும் அவரது பதிவுகளில் ஊடுருவி நிற்பதையும் அறிய முடியும்.

முரண்பாடான கருத்துகள், வேற்றுமைக் கருத்துகள் அல்லது விவாதங்கள் ஏற்படுத்தும் கருத்துகள், எதையும் தாங்கிவராத பதிவுகள் வெளிவரும் வலைத்தளம்.

குறைகள்??? எல்லாமே நிறைகளாக இருக்கும் போது எங்கள் கண்களுக்குக் குறைகள் எதுவுமே தெரியவில்லை. இதன் வழியாக ஒரே ஒரு வேண்டுகோள் மட்டும் வைக்க விழைகிறோம். வலைத்தளத்தில் மின் அஞ்சல் சப்ஸ்கிரிப்ஷன் வைத்தால், நாங்கள் எங்கள் மின் அஞ்சலை அதில் பதிந்து விட்டால், பதிவுகள் வெளியாகும் போது எங்கள் மின் அஞ்சல் பெட்டிக்கு வந்துவிடும். எந்தப் பதிவும் விடுபடாது.

இன்னும் பல சொல்லலாம்! வெங்கட்ஜியின் தளத்தின் ஒவ்வொரு பதிவையும் நாங்கள் மிகவும் ரசித்து வாசிப்பதால் எது மிகச் சிறந்த பதிவு என்று கூற முடியாத நிலை!!! என்பதாலும், அனைவரையும் ஈர்த்திருக்கும் வலைத்தளம் என்பதாலும்,  அனைத்துப் பதிவுகளும் தரமாக இருப்பதாலும்,  சுருக்கமாக, வலைத்தளமே “அக்மார்க்” முத்திரை பதித்தத் தரமமான பதிவுகளைத் தாங்கிவரும் வலைத்தளம்! (இதனை மதுரைத்தமிழன் அவர்களும் தனது தளத்தில் தான் ரசிக்கும் பதிவர்கள் என்ற தொடரில் முதலில் அவர் குறிப்பிட்டிருந்தது வெங்கட்ஜி அவர்களைத்தான் என்பதையும் குறிப்பிடலாம்!) என்று மிகவும் மகிழ்வுடனும், பெருமையுடனும் சொல்லிக் கொள்கிறோம்!

எங்களின் கருத்துகளையும் கேட்டு உட்படுத்தியமைக்கு மிக்க மகிழ்வுடன் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் வெங்கட்ஜி! மனம் நிறைந்த பாராட்டுகளுடன், மேலும் பல படைப்புகள் படைத்துச் சாதனை புரிந்திடவும், பல்லாண்டுகள், உலகமே பேசிடும் வலத்தளமாகவும், எதிர்காலச் சந்ததியினர் இதனைஒரு குறிப்பேடாகப் பயன்படுத்தும் தளமாக அமையவும் மனம் நிறைந்த வாழ்த்துகள்!

துளசிதரன்,   கீதா

**************

மூன்றாவதாக, ஐயா திரு. ஜி.எம். பாலசுப்ரமணியன் அவர்கள் அனுப்பிய மின்னஞ்சல்:

அன்பின் நாகராஜ் வணக்கம் வலைப்பூவில் எழுதுவது பொதுவாக நம் எண்ணங்களைக்கடத்த என்று நினைப்பவன் நான் அதாவது நம் எண்ணங்கள் அது பற்றிய நம் கருத்துகள் நம் கொள்கைகள்  நம் ஈடுபாடுகள் நம் அனுபவங்கள்  என்று என்னவெல்லாமோ எழுதுகிறோம். 

நான்  உங்கள் பதிவுகள் எல்லாவற்றையும் படித்திருக்கிறேன்  என்று சொல்ல இயலாது பொதுவாக உங்கள் பதிவுகளைப் படிக்கும் போதுஅதில் இடப்படும்  அழகான புகைப்படங்களும் நீங்கள் சென்று வரும்  இடங்களைப்பற்றிய தகவல்களுமே நினைவுக்கு வருகிறது. மற்றபடி சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறீர்கள் ஃப்ரூட் சாலட் மாதிரியான பதிவுகள் பல விஷயங்களின் பகிர்வே. நிறையவே பயணிக்கிறீர்கள். அது குறித்த அனுபவங்கள் உங்களை செதுக்குகிறது. 

உங்கள் பதிவுகளில் இருந்து தனிப்பட்ட உங்கள் குணாதிசயங்களைக் கணிப்பது மிகவும் சிரமம்.  உங்களுடையது எனும் எந்தக் கருத்தும்  பதிவுகளில் வெளிவருவதாய்த் தெரியவில்லை அதெல்லாம்  தேவையா என்னும்  கேள்வியும் எழலாம் பதிவுலக நட்புகள் என்றெல்லாம்  பேசப்படுகிறது. நட்புகள் வளரவும்  உணரவும் ஒருவர் பற்றிய அனுமானங்கள்  தேவைப்படுகிறது அதில்லாவிட்டால் எல்லாம் பரிச்சயங்களே . பதிவுகளைப் படிப்பதோடும் மேலோட்டமாகப் பாராட்டிப் பின்னூட்டமிடுவதும்  வழக்கமாகி விட்டது. அதெல்லாம்  தவறு என்றும் சொல்ல மாட்டேன் ஆனால் அவை என் இயல்புக்கு ஒவ்வாதது என்று கூறிக்கொள்ள விரும்புகிறேன்  

எதெதையோ எழுதிக் கொண்டு போகிறேன்  நீங்கள் எதிர்பார்த்தது எது என்றும் தெரியவில்லை.  1200 பதிவுகள் என்பது அசகாய சாதனைதான் என்னால் முடியும் என்று தோன்றவில்லை. மனம்  நிறைந்த பாராட்டுகள்.  பெங்களூர் பக்கம் பயணப்பட மாட்டீர்களா. சந்தித்தால் பேச நிறையவே விஷயங்கள் இருக்கும்  அயர்வு இல்லாமல் எழுதும் உங்களைப் பார்த்து பொறாமைப்படுகிறேன் உங்களால் எப்படி முடிகிறது என்றும்  தோன்றுகிறது என்னால் முடியும்  என்று தோன்றவில்லை. அடுத்த பதிவுக்கான விஷயமே கிடைக்காமல் என்பழைய பதிவுகளிலிருந்தே தேடுகிறேன்   நலமுடன் வாழ்க இன்னும்  நிறையவே உங்கள் எழுத்துகளை ரசிக்கக் காத்துக் கொண்டிருக்கிறேன்

*****************

கடைசியாக, எனது வலைப்பூ பற்றிய அவரது எண்ணங்களை எழுதி அனுப்பும் படி கேட்டது திரு முரளிதரன் அவர்களிடம்…..  அவர் எழுதி அனுப்பிய செய்தி…..

ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான வலைப் பதிவுகள்  தொடங்கப் படுகின்றன. ஓரிரு ஆண்டுகள் தொடர்ந்து எழுதி விட்டு  அதன் பின் எழுத விஷ்யமின்றி மூடிக்கொண்டு முகநூல் பக்கம் பெயர்ந்தவர்கள்  ஏராளம். அவ்வாறல்லாமல், வலைப் பதிவர்களில் மிக சிலரே 1000 பதிவுகளை கடந்திருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் சினிமா விமர்சனங்கள அதிக மாக எழுதுபவர்களாகத்தான் பார்த்திருக்கிறேன். சினிமா அரசியல், மொக்கைக் கவிதைகள் (என்னைப் போல) தவிர்த்து   1000 பதிவுகளை தாண்டுவது சாதாரணமானதல்ல. வெங்கட் நாகராஜ் தேர்ந்த வாசிப்பாளர் மட்டுமல்லாது சிறப்பான ரசனைக்கு சொந்தக்காரர்  என்பதற்கு அவரது பதிவுகளே சாட்சி. முதன்முதலில் நாகராஜ் அவர்களின் பின்னூட்டங்களை  பிரபல வலைப் பதிவர் வீடு திரும்பல் மோகன்குமார் அவர்களின் பின்னூட்டங்ளில்தான் பார்த்திருக்கிறேன். பாலகுமாரன் பற்றி நான் எழுதிய பதிவுக்கு பின்னோட்டமிட்டதன் மூலம் எனக்கு அறிமுகமானார். என் வலைபதிவுக்கு தொடர்ந்து வருகை தருபவர்களில் ஐவரும் ஒருவர்  நானும் தொடர்ந்து அவரது பதிவுகளை வாசித்து வருகிறேன். ஏதோ பதிலுக்குபதில்  வாசிப்புக்காக அல்ல. எளிமையான இயல்பான அலட்டல் இல்லா எழுத்து நடை. அற்புதமான புகைப்படங்கள் என்னை அவர் வலைப் பக்கம் ஈர்த்தது .ஃ புரூட்சாலட் பகுதியில்; பல சுவாரசியமான பல்சுவைப்பதிவுகளைத் தந்தவர்  கவிதை எழுதியதாக நினைவு இல்லை. ஆனால்   அவர் எடுக்கும் ஒவ்வொரு புகைப்படமும் ஒரு கவிதை போலவே இருக்கும். அவ்வளவு சிறப்பான புகைப்படக் கலைஞர்.

பயணக் கட்டுரைகள் எழுதுவதில் தனக்கென ஒரு சிறப்பிடத்தை பெற்றவர் என்பது வலைப்பதிவுலகம் அறிந்த ஒன்று. எப்போது இத்தனை ஊர்களுக்கு பயணம் செய்தார்?.எப்படி இவ்வளவு தகவல்களை நினைவில் வைத்திருக்கிறார்? என்ற ஆச்சர்யம் எனக்கு ஏற்படும். இவரை வலையுலக யுவான்சுவாங் என்று கூட சொல்லலாம். இந்தியாவில் எந்த ஊருக்கு பயணம் செய்தாலும் அவரது பயணக் கட்டுரைகளை படித்து விட்டு பயணம் மேற்கொண்டால் சிறப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை.

இவரை இவரது குடும்பத்தாருடன் 2013 வலைப்பதிவர் சந்திப்பில் சந்தித்தில் மகிழ்ச்சி அடைந்தேன். இவர் இன்னும் பல்லாயிரக் கணக்கான பதிவுகள் எழுதி சாதனை படைக்க மனமாற வாழ்த்துகிறேன்.

அன்புடன்
டி.என்.முரளிதரன்

***********************

அனைத்து நண்பர்களின் கருத்துகளையும் கேட்டு இங்கே வெளியிட ஆசை இருந்தாலும், பதிவு ரொம்பவே நீளமாக இருக்கும் என்பதால் நான்கு பேரிடம் மட்டும் கேட்டேன்.  எனது பதிவுகளை படித்து வரும் மற்ற நண்பர்களும் என் பதிவில் இருக்கும் நிறை குறைகளை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்கள்…….

தொடர்ந்து எழுதும் வாய்ப்பு அமைந்தால், என்னுடைய குறைகளை தவிர்த்து சிறப்பாக, இப்போது எழுதுவதை விடச் சிறப்பாக எழுத முயற்சிக்கிறேன்….

தொடர்ந்த தங்களது ஆதரவிற்கு மனம் நிறைந்த நன்றி…..

மீண்டும் சந்திப்போம்…. பதிவுகள் எழுதுவது பற்றி சிந்திப்போம்….. 

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி. 

60 comments:

 1. வலையுலக யுவான்சுவாங்! முரளி பொருத்தமாகவே பட்டம் வழங்கியுள்ளார்.

  மென்மேலும் உயர வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

  ReplyDelete
  Replies
  1. பதிவுலக யுவான்சுவாங்..... :) கொஞ்சம் வெட்கமாக இருக்கிறது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. முதலில் வாழ்த்துகள்..1200 சாதாரணமானதல்ல..
  உங்கள் சிறப்பு புகைப்படங்கள்...மற்றும் சாதாரண மனிதர்கள் போகமுடியாத,அறியமுடியாத இடங்களையும்,உணவுகளையும் அறிமுகப்படுத்துவது...
  என்னைப்பொறுத்தவரை குறையொன்றும் இல்லை வெங்கட் ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மீரா செல்வக்குமார்.....

   Delete
 3. வலையுலக யுவான் சுவாங் அவர்களே
  தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
  தொடர்ந்து பயனியுங்கள்
  பயணங்களை எல்லாம் எழுத்தாக்குங்கள்
  அழகுப் படங்களை விருந்தாக்குங்கள்
  படிக்கக் காத்திருக்கிறேன்
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 4. வாழ்த்துகள். பதிவுகள் தொடரட்டும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 5. 1200 பதிவுகள் மலைக்கவைக்கும் சாதனைதான். அதிலும் 90 % பயணம் சம்பந்தமாக எழுதுவது சாதாரண விஷயமில்லை. பதிவுகளில் மட்டுமல்லாமல் படங்களிலும் அற்புதம் காட்டுகிறீர்கள். வருங்கால சந்ததிக்கு உங்கள் வலைத்தளம் மிகச் சிறந்த பயண ஆவணமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

  இன்னும் எழுதுங்கள்..! மனம் நிறைந்த வாழ்த்துக்கள்..!

  த ம 4

  ReplyDelete
  Replies
  1. பயணம் பற்றிய கட்டுரைகள் நானூறுக்கும் குறைவு! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில்குமார்.

   Delete
 6. சிறப்பான சுற்றுலாப் பதிவுகளை அழகிய படங்களுடன் வழங்கி வரும் தங்களுக்கு அன்பின் நல்வாழ்த்துகள்..

  இன்னும் பலநூறு பதிவுகளை வழங்கிட எல்லாம் வல்ல இறைவன் துணை புரிவானாக!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 7. Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மிடில்கிளாஸ் மாதவி.

   Delete
 8. இதயம் பேசுகிறது என்ற வார இதழ் மணியன் என்பவரால் நடத்தப்பட்டு வந்தது அதன் ஆசிரியர் இப்படிதான் அழகான பயணக்கட்டுரைகளை எழுதி வந்தார் அவருக்கு அப்புறம் தமிழில் சிறப்பாக பயணக்கட்டுரைகளை எழுதி வருபவர் நீங்கள்தான். பாராட்டுக்கள் வெங்கட்....

  உங்கள் எழுத்துக்கள் யாரையும் காயப்படுத்தாதவைகள் எல்லோரையும் அணைத்து செல்லும் வல்லமை கொண்டவை

  ReplyDelete
  Replies
  1. ரொம்பப் புகழாதீங்க மதுரைத் தமிழன்.... அவர் எங்கே நான் எங்கே..... அவர் பல நாடுகளுக்குச் சென்று வந்தவர். நான் இந்தியாவிலேயே போகாத இடங்கள் நிறைய உண்டு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 9. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி ஜி!

   Delete
 10. வாழ்த்துகள் வெங்கட் ஜி !
  அலுவலக வேலையின் காரணமாக பதிவுகள் போடுவது ,உங்களைப் போலவே எனக்கும் சிரமம் உள்ளதால் உங்களின் நிலையை புரிந்து கொள்ள முடிகிறது !
  பயணப் பதிவுகளை குறைத்துக் கொண்டு ,சின்ன சின்ன பதிவுகளை மட்டுமாவது தொடர வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன் !

  ReplyDelete
  Replies
  1. அலுவலகப் பணிகள், வீட்டுப் பணிகள் செய்து முடித்து வலைப்பூவிலும் எழுதுவது சிரமமாகத் தான் இருக்கிறது. முடிந்த வரை எழுதுவோம்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 11. மிகவும் மகத்தான சாதனைகள் வெங்கட்ஜி.

  மனம் நிறைந்த பாராட்டுகள். நல்வாழ்த்துகள்.

  நான் தங்களையும் தங்கள் வலைத்தளத்தினையும் பற்றி என் மனதில் நினைத்த பல விஷயங்களையே ’ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்’ அவர்களும் சொல்லியுள்ளார்கள் என்பதில் மேலும் எனக்கு மகிழ்ச்சியே. :)

  தங்களின் எழுத்துலகப்பணி மேலும் மேலும் தொடர்ந்து உச்சக்கட்ட இலக்கிணை அடையட்டும்.

  மீண்டும் என் நல்வாழ்த்துகள், வெங்கட் ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 12. உங்களின் பதிவுகள் ஸ்வாரஸ்யமாகவும் ரசிக்கும்படியும் உள்ளது. குறைகள் எதுவும் தெரியவில்லை. இந்த பயணம் மேன்மேலும் தொடர என் வாழ்த்துக்கள் வலையுலக யுவான்சுவாங் அவர்களே!
  சுதா த்வாரகாநாதன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா த்வாரகாநாதன் ஜி!

   Delete
 13. உங்கள் சிறப்பே சிறப்பான படங்களுடன், எளிதான விளக்கங்கள்தாம்.
  அசராத ஊர்சுற்றி அய்யா நீங்கள்- எங்கெல்லாம் போகிறீர்களோ, அங்கெல்லாம் எங்களையும் உங்களுடன் அழைத்துச் செல்வதுபோல எழுதுகிறீர்கள் அல்லவா? அதுதான் எங்கள் பெரும்பேறு! தமிழ்நாட்டின் ஏ.கே.செட்டியார் (“ஊர்சுற்றிப் புராணம்” எழுதியவர், பயணக்கட்டுரைகளுக்குப் புகழ்பெற்ற விகடன் மணியன், மற்றும் வங்க எழுத்தாளர் ராகுல சாங்கிருத்தியாயன் (“வால்கா முதல் கங்கைவரை” எழுதியவர்) போல, உங்கள் எழுத்துகளும் வாசகரை வசீகரிக்கின்றன. நிறைய ஊர் சுற்றி, நிறைய வகைவகையாக உண்டு செரித்து, எங்களுக்கும் அந்தந்த ஊர்ச்சிறப்புகளை அள்ளி அள்ளித் தாருங்கள்..1200 என்ன, ஆயிரம் ஆயிரம் பதிவுகளைப் பின்தொடரக் காத்திருக்கிறோம்! வாழ்த்துகளும் வணக்கங்களும் அய்யா!

  ReplyDelete
  Replies
  1. முடிந்த வரை நானும் எழுதுகிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துநிலவன் ஐயா.....

   Delete
 14. இதுவரை வெளிநாடு சென்றதில்லை என்று ஒரு சிறுகுறை என்னிடம் உண்டு. உங்கள் பதிவுகளைப் படிக்கும்போது இந்தியாவிலேயே இத்தனை இடங்கள் இருக்கின்றனவே, இவற்றையெல்லாம் பார்க்கவே இந்த ஒரு ஜென்மம் போதாது போலிருக்கே என்று நினைத்துக் கொள்வேன். உங்கள் பயணப் பதிவுகள் மிகவும் உற்சாகத்தைக் கொடுக்கின்றன. புகைப்படங்கள் நீங்கள் எழுத்தில் சொல்லாததைச் சொல்லுகின்றன. 1200 பதிவுகள் நிச்சயம் இமாலய சாதனைதான். குடும்பமே பதிவு உலகத்தில். இதைவிடச் சிறப்பு வேறென்ன வேண்டும்? உங்கள் அம்மாவையும் கல்லாட்டம் மூலம் எங்களுக்கு அறிமுகப்படுத்திவிட்டீர்கள். (அவர் பாடியதை எழுதி வைத்துக்கொள்ள வேண்டும் - சின்னக் குழந்தைகளுக்கு பாடலாகச் சொல்லிக்கொடுக்கலாம்)

  மேலும் மேலும் சாதிக்க வாழ்த்துக்கள். அன்பும், ஆசிகளும்!

  ReplyDelete
  Replies
  1. நானும் வெளிநாடு எதற்கும் சென்றதில்லை. அதில் வருத்தமுமில்லை! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா...

   Delete
 15. 1,200 பதிவுகள் கண்டமைக்கு வாழ்த்துகள். பெரும்பாலும் அரிய இடங்களுக்குச் சென்ற முக்கியமான பயணப்பதிவுகள்! உங்கள் நண்பர்களின் விமரிசனமும் அருமை! மீண்டும் வாழ்த்துகள். தொடர்ந்து எழுதி வரவும் பிரார்த்தனைகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.....

   Delete
 16. அரிய சாதனையை அமைதியாகச் செய்துள்ளீர்கள். புகைப்படம் எடுக்கும் விதம், உரிய செய்திகளை இணைக்கும் விதம், ஆங்காங்கே அனுபவங்களைப் பகிரும் நிலை, புகைப்படம் எடுக்க இயலா அல்லது முடியாத நிலையில் தாங்கள் கூறும் காரணம் என பல கோணங்களில் தங்களது பதிவுகளைப் படித்து வருகிறேன். இந்தியாவின் பன்முகப் பரிமாணத்தை தங்களின் பதிவுகள் மூலமாக அறியும் வாய்ப்பு உங்களால்தான் எங்களுக்குக் கிடைத்தது. தங்களது சாதனைகள் தொடர மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 17. புதியதை எழுதுகிறீர்கள். நிறைய பயணித்து தெரியாத இடங்களைப் பற்றி எழுதுகிறீர்கள். தமிழன் அந்த இடங்களுக்குப் பயணித்து அந்த அனுபவங்களை எழுதுவதைப் படிக்க மிக்க மகிழ்ச்சி. வட இந்திய, தில்லி கல்ச்சர் எல்லாம் இல்லாட்டா எப்படித் தெரியும்?

  உங்க இடுகைலதான் (G)கேவர் ஸ்வீட்டைப் பற்றிப் படித்தேன். அந்த வாரம் பெங்களூர் போயிருந்தபோது, கோரமங்கலாவில் இரண்டு இடத்தில் வெளியிலேயே இந்த இனிப்பு தயாரித்துக்கொண்டிருந்தார்கள். நான் போட்டோ வீடியோ எடுத்ததுமட்டுமல்ல, அந்த இனிப்பை வாங்கிக்கொண்டு என் ஹஸ்பண்டிடம் கொடுத்தேன். இதுமாதிரி நிறைய புது விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது.

  உங்க பிளாக்குல ரொம்ப பாசிடிவ்வா நான் நினைக்கிறது - எந்த கான்ட்'ரவர்சிக்கும் நீங்கள் இடம் கொடுப்பதில்லை அல்லது அந்த சப்ஜெக்டைத் தொடுவதில்லை. இது ரொம்பப் பெரிய கன்ட்'ரோல். ஒருவேளை, நீங்கள் கிட்டத்தட்ட வட'நாட்டவரா ஆயிட்டீங்களோ (ரொம்ப வருடம் அங்க இருந்ததனால?) என் கஸின், பிறந்ததிலிருந்து டெல்லிவாலா. தமிழ் பேசினாலும், அவன் அப்ரோச், தமிழர்களைவிட ரொம்ப உயர்ந்ததாக இருக்கும்.

  நெகடிவ்னு பார்த்த (இந்த மாதிரி தொடர்ந்து எழுதும் துளசிதளம் முதற்கொண்டு) - இன்றைக்கு நாங்கள் படிப்பது 6 மாதத்துக்கு முந்தைய உங்கள் பயணத்தை.

  தொடருங்கள். பாரதிராஜா வாய்சில் படியுங்கள் "I like your approach"

  ReplyDelete
  Replies
  1. என் பதிவுகள் மூலம் புதிய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது என்பதில் மகிழ்ச்சி. தொடர்ந்து பயணிப்பதால் சில சமயங்கள் இடைவெளி வந்து விடுகிறது. ஒவ்வொரு பயணமும் பல பதிவிகளாக வருவதாலும் இடைவெளி. விரைவில் எழுத முயற்ச்சிக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 18. அருமையாகச் சொல்லியிருக்கிறார்கள். தொடர நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 19. அடேங்கப்பா! 1200 பதிவுகளா? மலைக்க வைக்கும் சாதனை! சுவையான பயணக்கட்டுரைகள், புகைப்படங்கள், பல் சுவை செய்திகள் என்று இவற்றில் மட்டுமே 1200 என்றால், இன்னும் கதை, கவிதை எழுதத்துவங்கினால் பல்லாயிரமாகப் பெருகும். உங்கள் கதையை எங்கள் பிளாக்கில் வாசித்தேன். நடப்பு வாழ்வியல் பிரச்சினையைக் கருவாக எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள். இன்னும் பல்லாயிரம் பதிவுகள் நீங்கள் தர வேண்டும் என வாழ்த்துகிறேன். பாராட்டுக்கள் வெங்கட்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஞா. கலையரசி ஜி

   Delete
 20. வணக்கம்.

  அண்மைக்காலமாகவே உங்களது பகிர்வுகளைத் தொடர்கிறேன். சக பதிவர்களின் கருத்துக்களை வழிமொழிகிறேன்.

  உங்களது பதிவில் என்னைக் கவர்ந்தது உங்கள் பயணக்கட்டுரைகளும் அதனோடு நீங்கள் இணைக்கும் புகைப்படங்களும்தாம்.

  தங்களது முந்தைய பதிவுகளையும் வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.

  முந்தைய பதிவுகளை வாசிக்க வேண்டும் என்று நான் குறித்துவைத்திருக்கும் பட்டியல் ஒன்றுண்டு.

  நேரம் கிடைக்கும்போது வருகிறேன்.

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஜோசப் விஜூ ஜி.

   Delete
 21. 1200 பதிவுகளை வெளியிடுவது அவ்வளவு சுலபமல்ல. அதை தாங்கள் சாதித்திருக்கிறீர்கள். அதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்! நாங்கள் சொல்ல நினைத்ததை நால்வரும்(ஐவர்) சொல்லிவிட்டார்கள். தங்களது பயணக்கட்டுரைகள் எந்த செலவில்லாமலும் எங்களை பல இடங்களுக்கு அழைத்து சென்றிருக்கின்றன. அதற்கு பாராட்டுகள்! விரைவில் தங்களின் பதிவு 2000 த்தை தொட வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 22. 1200 பதிவுகள் மலைகக வைத்தும் சாதனைதான் ஜி தொடரட்டும் ஜியின் எழுத்துப்பயணம்..... வாழ்த்துகளோடு - கில்லர்ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   Delete
 23. 1200வது பதிவுக்கு வாழ்த்துக்கள் வெங்கட்.
  அலுவலக பணிகளுக்கு இடையே இவ்வளவு பதிவுகள் எழுதுவது சாதனைதான்.
  பயணக்கட்டுரைகள் அங்கு பயணித்த அனுபவம், படங்கள் எல்லாம் அருமையாக பகிர்ந்து கொள்வீர்கள். மின் நூல்களுக்கு வாழ்த்துக்கள்.

  கருத்து சொன்ன நால்வரும் நன்றாக கருத்து சொல்லி இருக்கிறார்கள்.
  முரளிதரன் அளித்த பட்டம் நன்றாக இருக்கிறது.
  மிக பொருத்தம் வலையுலக யுவான்சுவாங்.
  யுவான்சுவாங் எழுதிய வரலாற்று சான்றுகள் இன்று அளவும் பேசபடுவது போல் உங்கள் பயணக் கட்டுரைகள் பேசப்படும்.
  வாழ்க வளமுடன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   Delete
 24. முதலில் 1200ஆவது பதிவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.அழகான புகைப்படங்களே முதலில் எனை ஈர்த்தது....கொஞ்சம் பொறாமையோடு தான் படிப்பேன் உங்களின் பயணக்கட்டுரைகளை..[என்னால் போக முடியவில்லை என்பதால்].வடநாட்டில் பயணிக்கு உணர்வு ஒவ்வொரு முறையும் எனக்கு வரும்....தொடர்ந்து 5000 மாவது பதிவு விரைவில் வர வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. 5000-வது பதிவு :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   Delete
 25. பயணக் கட்டுரைகள்... உங்களின் தனித்துவம் அண்ணா...
  ப்ரூட் சாலட் .... நிறைய விஷயங்களை அறியத் தரும்....

  புகைப்படங்கள் எப்பவும் அழகு....

  தொடர்ந்து எழுதுங்கள்....

  1200 க்கு வாழ்த்துக்கள்.... சாதனைகள் தொடரட்டும்....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பரிவை சே குமார்.

   Delete
 26. 1200 பதிவுகளையும்
  ஒரு சேர ஒரு தொகுப்பாக்கி அனுப்பினால் ஒவ்வொன்றாக நிதானமாக படிக்க எதுவாக இருக்கும்

  ReplyDelete
  Replies
  1. தொகுப்பு - முயற்ச்சிக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கிருஷ்ணமூர்த்தி சித்தப்பா.

   Delete
 27. நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு வணக்கம், தங்களது 1200 - ஆவது பதிவினுக்கு வாழ்த்துகள். உங்கள் ஆக்கங்களை வைத்து நீங்கள் ஒரு ஆசிரியராக இருப்பீர்கள் என்றுதான் நினைத்தேன். ஆனால் ஒரு உயர் அதிகாரியான தங்களுக்கு தமிழின் மீதும், வலைப்பக்கமும் உள்ள அதீத ஆர்வமானது பாராட்ட வேண்டிய அம்சமாகும். அதிலும் நீங்கள் எடுத்த புகைப்படங்கள் யாவும் ஒரு புகைப்படக் கண்காட்சி வைக்கும் அளவுக்கு சிறப்பானவை ஆகும்.

  தங்களை முதன்முதல் திருச்சியில் சந்தித்தபோதும், அதற்குப் பிறகு புதுக்கோட்டை வீதி, ஸ்ரீரங்கம் வலைப்பதிவர்கள் சந்திப்புகள் போதும் தாங்கள் என்மீது காட்டிய அன்பினையும், மகிழ்ச்சியையும் சொல்ல முடியாது. புதுக்கோட்டையிலிருந்து திருச்சிக்கு மதிய வேளையில் பஸ்சில் வந்து கொண்டு இருக்கும்போது, அசதியில் நான் உங்கள் மீது தூங்கி விழுந்தது எனக்கே தெரியாது. நான் கண் விழித்ததும், ’பரவாயில்லை, என்மீது சாய்ந்து கொள்ளூங்கள் ‘ என்று சொன்னவுடன் எனக்கு ஏற்பட்ட கூச்சம் இன்றும் நினைவில் இருக்கிறது.

  தொடர்ந்து எழுதுங்கள். தொடர்கின்றேன். மீண்டும் வாழ்த்துகள். .

  ReplyDelete
  Replies
  1. தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. நட்பில் தொடர்ந்து இணைந்திருப்போம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   Delete
 28. வாழ்த்துக்கள்.
  அப்போ நானும் 1200 பதிவுகள் படித்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அண்ணாச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 29. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நண்டு நொரண்டு. உங்கள் முதல் வருகையோ?

   Delete
 30. முதலில் மனமார்ந்த வாழ்த்துக்கள்! மேலும் மேலும் பதிவுகளின் மூலம் சாதனைகள் படைத்திட!

  மிக்க நன்றி வெங்கட்ஜி! எங்களது கருத்தையும் கேட்டு வெளியிட்டமைக்கு!

  முரளிதரன் அவர்கள் அளித்த பட்டம் தங்களுக்கு வெகு பொருத்தமே எனப்தில் ஐயமில்லை!

  எங்கள் வேண்டுகோளையும் ஏற்று எங்கள் பெட்டிக்கு அஞ்சல் அனுப்புவதற்கு மிக்க நன்றி ஜி!

  மனமார்ந்த வாழ்த்துக்கள்! பாராட்டுகள்!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துகளை இங்கே வெளியிட உதவியதற்கு மிக்க நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....