எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, October 18, 2016

PTSO LAKE - கையிலே இருப்பதென்ன…....


ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 60

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்” என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.


அழகிய ஏரி.... பெயர் தான் சோ சோ!!
PTSO LAKE!

மாதுரி ஏரியில் தமிழ் மற்றும் மலையாள அதிகாரிகளைச் சந்தித்த அனுபவம் பற்றி சென்ற பகுதியில் சொல்லி இருந்தேன். அந்த அனுபவம் தந்த பாடம் பற்றி யோசித்தபடியே அடுத்த ஏரி நோக்கிய பயணத்தினைத் தொடர்ந்தோம். அடுத்ததாய் பார்த்த ஏரியின் பெயர் சோ ஏரி! அதாவது PTSO LAKE!


PTSO LAKE!


PTSO LAKE நோக்கி நடக்கும் நண்பர் ஒருவர்!

தவாங்க் நகரிலிருந்து சீன எல்லையை நோக்கிப் பயணிக்கும் போது 16 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பது இந்த ஏரி.  என்றாலும் நாங்கள் போகும்போது இந்த ஏரிகளைப் பார்க்காமல் நேராக எல்லைப் பகுதிக்குச் சென்று திரும்பி வரும் வழியில் தான் ஏரிகளைப் பார்க்கச் சென்றோம். அப்படி பார்த்த ஏரிகளில் மூன்றாவதாகப் பார்த்தது தான் இந்த PTSO LAKE!.  மற்ற ஏரிகளில் பனி உறைந்து கிடக்க, இந்த ஏரியில் அத்தனை பனி இல்லை. பெரும்பாலும் தண்ணீரே இருந்தது. ஆனால் தொட முடியாத அளவிற்குச் சில்லென்று இருந்தது.


PTSO LAKE!


PTSO LAKE! – மேடையிலிருந்து இயற்கையை ரசிக்க வசதி…

இப்பகுதியை பராமரிக்கும் இந்திய ராணுவத்தினர் ஏரியைச் சுற்றி நடைபாதைகளும், சின்னச் சின்னதாய் மேடைகளும் அமைத்திருக்கிறார்கள். வரும் பயணிகள் அந்த மேடைகளில் இருக்கும் இருக்கைகளில் அமர்ந்து இயற்கைக் காட்சிகளை ரசிக்கும் விதமாக அமைத்திருக்கிறார்கள்.  ஏரி, சுற்றிலும் பைன் மரக் காடுகள், மலைகள் என வெகு அழகான காட்சிகள் அங்கே. சாலையிலிருந்து இறங்கி பாதைகள் வழியே நடந்து ஏரிக்கரையை நோக்கிச் சென்றோம்.


ஏரியை அடுத்த மலைப்பகுதி!


நண்பருடன் ஏரிக்கருகே!

நாங்கள் சென்றது மார்ச் மாதம் என்றாலும் குளிர் அதிகமாகவே இருந்தது. ஏரியிலிருந்து சில்லென்று காற்று வீசிக் கொண்டிருக்க, எலும்புகளை ஊடுருவிச் சென்று ஒரு நடுக்கத்தை ஏற்படுத்தியது. இத்தனைக்கும் குளிர்கால உடைகளை தான் அணிந்திருந்தோம்.  புகைப்படங்களை எடுக்கும்போது கைகளில் கையுறைகள் அணிந்து கொண்டு தான் எடுக்க வேண்டியிருந்தது. அப்படி நாங்கள் இருக்கையில் ஏரிக் கரையில் ஒரு அருணாச்சலப் பிரதேச மனிதர் தனது குடும்பத்தினருடன் அமர்ந்திருந்ததைப் பார்த்தோம். அவர் ஒரு Shorts மற்றும் முண்டா பனியனில் அமர்ந்திருந்தார்! பக்கத்திலேயே அவருடைய மனைவியும் குழந்தைகளும்!


PTSO LAKE!


PTSO LAKE! 

அவராகவே எங்களிடம் பேச்சுக் கொடுத்தார். எங்கிருந்து வருகிறோம், இந்தியாவின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள், எங்கே பணி புரிகிறோம் என்றெல்லாம் பொதுவான கேள்விகள். கூடவே தன்னைப் பற்றியும் சொன்னார். அவர் ஒரு ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இந்தியாவின் பல பகுதிகளில் பணி புரிந்திருக்கிறார் – லே, லடாக், எல்லைப் பகுதிகள் உட்பட. பதினைந்து வருடங்கள் பணி புரிந்த பிறகு ஓய்வு பெற்று திரும்பி விட்டாராம். இப்போது குடும்பத்துடன் தனது சமயத்தினைச் செலவு செய்வதில் அவருக்கு மகிழ்ச்சி.


PTSO LAKE!

பொறுமையாக பேச்சு தவாங்க், அங்கே இருக்கும் குளிர், பார்க்க வேண்டிய இடங்கள் என திரும்பியது. எங்களைப் பார்த்து கொஞ்சம் கிண்டலாகவே ”நீங்கள் குளிருக்காக இத்தனை உடைகளை அணிந்து இருக்கிறீர்கள், என்னைப் பாருங்கள் எப்படி இருக்கிறேன்” என்று சொன்னார்.  நாங்களும் சிரித்தபடியே, உங்களுக்குப் பழகி இருக்கும் என்று சொன்னாலும், சொல்லாமல் விட்டது வேறொன்று! அது, இப்படி இருப்பதற்குக் காரணம் அவர் கையில் இருந்த கோப்பையும் அக்கோப்பையில் இருந்த மதுவும் என்பது தான்!


PTSO LAKE!

குடும்பத்துடன் ஏரிக்கரையில் அமர்ந்து கொண்டு, மனைவி வீட்டில் இருந்து சமைத்து எடுத்துக் கொண்டு வந்த உணவை, மது அருந்தியபடியே சாப்பிட்டுக் கொண்டிருந்தார் அவர். அவருடன் இருந்த குழந்தைகளின் முகத்தில் அப்படி ஒரு வெட்கம், புன்னகை….. அவர் மனைவியோ கருமமே கண்ணாயினராய் கணவனுக்கும் குழந்தைகளுக்கும் வேண்டியதை கொடுத்துக் கொண்டிருந்தார். நாங்களும் அவரிடம் பேச்சுக் கொடுக்க வில்லை, அவரும் பேசவில்லை.  குழந்தைகளைப் புகைப்படம் எடுக்கலாம் என நினைத்தாலும் எடுக்கவில்லை.


PTSO LAKE!

தொடர்ந்து இந்த சோ ஏரி பற்றி அவர் சொன்ன விஷயம் – குளிர் காலத்தில் இந்த ஏரியும் முற்றிலும் உரைந்திருக்கும் என்றும், இங்கே பனிச் சறுக்கு விளையாட்டில் ஈடுபடுவார்கள் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார். ஆஹா…. பனிச்சறுக்கு கூட இங்கே உண்டா என நண்பர்கள் ஆவலுடன் விசாரித்துக் கொண்டிருந்தார்கள். ராணுவப் பகுதி என்பதால் இதற்கு பொது மக்கள் அனுமதி பெற்று வர வேண்டும் என்பதையும் நினைவு படுத்தினார். ஏரியின் இயற்கை அழகை ரசித்தபடியே நாங்களும் சிறிது நேரம் அங்கே இருந்தோம். 


குளிரடிக்குதே…  தொப்பியைப் போடுடே…..

சரி உங்கள் மதுவை ரசித்து, உங்கள் குடும்பத்தினரோடு குதூகலமாக இருங்கள் என்று அவரிடம் சொல்லி, விடைபெற்றோம். ஏரிக்கரையில் சற்று நேரம் இருந்ததே ரொம்பவும் பிடித்திருந்தது. அந்த இனிய நினைவுகளோடு தவாங்க் நோக்கிய எங்களது பயணத்தினைத் தொடர்ந்தோம். தவாங்க் நகரில் அன்றைய தினம் என்ன பார்த்தோம் என்பதைப் பற்றி அடுத்த பகுதியில் சொல்கிறேன்.  இப்போதைக்கு ஏரியின் அழகை நீங்களும் படங்கள் மூலமாக ரசித்துக் கொண்டிருங்கள்…..

மீண்டும் ச[சி]ந்திப்போம்!

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

24 comments:

 1. முதல் படம் முதல் ரகம்தான் !பார்க்கும் போதே உடம்பு ஜில்லிடுகிறதே :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 2. குளிர் கால ஏரி என்றால் சும்மாவா!?..
  படங்களைப் பார்க்கும் போதே அகமும் புறமும் சில்லென்றிருக்கின்றது..

  வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 3. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம் ஜி!

   Delete
 4. உறைந்து போகும் ஏரிகள்! பார்க்க ஆசையாகத்தான் இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 5. ஏரியின் புகைப்படங்கள் அனைத்தும் மிக அழகு வெங்கட்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   Delete
 6. ஏரியின் அழகினை ரசித்தேன். குளிருக்கான மருந்தை நீங்களும் பயன்படுத்தலாம் போலுள்ளது?

  ReplyDelete
  Replies
  1. குளிருக்கான மருந்து - எனக்கு பழக்கமில்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 7. இராணுவவீரர் காரியத்தில் கண்ணாக இருக்கின்றார்
  புகைப்படங்கள் ஸூப்பர் ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 8. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 9. அருமையான இடம் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது. பகிர்வுக்கு நன்றிகள்!
  த ம 7

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

   Delete
 10. இயற்கையை நீங்கள் ரசித்து எழுதி இருக்கிறீர்கள் நன்றாகத் தெரிகிறதுஎவ்வளவுதான் படித்துப் புரிந்து கொண்டாலும் நேரில் அனுபவிப்பது போல் வருமா வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 11. ஏரியின் அழகு அற்புதம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.....

   Delete
 12. படங்கள் அழகு! உங்களுடன் ஏரியின் அழகையும் ரசித்தோம்...துளசி : எனக்கு சாதாரண குளிரே கஷ்டம் இந்தக் குளிரை எல்லாம் பொறுத்துக் கொள்வேனா தெரியவில்லை....பார்க்க ஆசைதான்..

  கீதா: ஐயோ செமையா இருக்கு ஜி! உறையும் ஏரியைப் பார்க்க வேண்டும்..ஏற்கனவே மணாலியில் நீர் உறைந்திருப்பதைப் பார்த்திருந்தாலும்....பனியில் விளையாடியிருந்தாலும் ...இந்தப் பகுதியும் பார்க்க வேண்டும்...தொடர்கின்றோம்

  ReplyDelete
 13. இந்தப் பகுதியில் பனி விளையாட்டுகள் இல்லை..... ஆனாலும் பார்க்க வேண்டிய இடம்.

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....