திங்கள், 3 அக்டோபர், 2016

தவாங் போர் நினைவுச் சின்னம் – போர் குறித்த குறும்படம்

ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 55

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.


கரடு முரடான பாதை..

ZAMITHONG-ல் வசிக்கும் தமிழ்க்குடும்பத்தினைப் பார்த்து, அந்த ராணுவ வீரரிடம் சில நிமிடங்கள் பேசிய பிறகு, மலையாள ராணுவ வீரர்களுக்கும் நன்றி சொல்லி எங்கள் வாகனத்தினை நோக்கி நகர்ந்தோம். எங்களுக்கு முன்னரே ஓட்டுனர் ஷம்பு சென்று வாகனத்தினை தயாராக வைத்திருந்தார்.  காலையில் வந்த வழியிலேயே மீண்டும் தவாங் நோக்கிய பயணத்தினைத் தொடங்கினோம்.  முந்தைய பகுதிகளில் சொன்னது போல கரடு முரடான பாதையில் பயணம் – ஒரே மகிழ்ச்சி, பாதையின் பக்கங்களில் இருந்த நீர்வீழ்ச்சிகளும் ஆறும் தான்.  மலைப்பகுதி என்பதால் பயணமும் சிறப்பாகவே பயணித்துக் கொண்டிருந்தோம். 


பூட்டான் செல்லும் பாதைப் பிரிவு..

நாங்கள் பயணித்த பாதையில் ஒரு இடத்தில் இன்னுமொரு பாதை பிரியும் இடம். அந்த மற்ற பாதையில் பயணித்தால் அண்டை நாடான பூடானுக்குச் சென்று விட முடியும்.  பூட்டான் என்று பெயரிட்ட அந்த பதாகை அருகே வரும்போது அப்படியே வண்டியை பூட்டான் எல்லைக்குத் திருப்பலாமா என்று எண்ணினார் நண்பர் சுரேஷ்.  சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் பூட்டான் செல்லும் சாலை/எல்லை! போய் வரலாம் என்று முடிவு செய்துவிடலாம் எனதான் நானும் நினைத்தேன். மற்ற நண்பர்களுக்கு மாலைக்குள் தவாங் சென்று வேறு ஒரு இடம் பார்க்க வேண்டும்.


ஒரு மூதாட்டி..

சரி போகத்தான் முடியவில்லை, அங்கே ஒரு புகைப்படமாவது எடுத்துக் கொள்கிறேன் என சுரேஷ் சொல்ல, வண்டியை நிறுத்தி அங்கே ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டார் சுரேஷ்! அவரைப் பார்த்தவுடன் சசியும் புகைப்படம் எடுத்துக் கொள்ள, பிறகு பயணம் தொடர்ந்தது.


கடையின் பெயர்ப்பலகை..

வழியில் தேநீர் குடிக்க வேறொரு சிறு கிராமத்தில் வண்டியை நிறுத்தினார் ஓட்டுனர் ஷம்பு. லும்லா எனும் இடம் அது! கடையின் பெயர்ப்பலகையைப் பாருங்களேன்! வாயிலில் ஒரு திரைச்சீலைத் தொங்கிக் கொண்டிருக்க அதைத் தள்ளிக்கொண்டு உள்ளே போனால் ஒரு சிறு அறை – நான்கு ஐந்து மேஜைகள், பத்துப் பன்னிரெண்டு நாற்காலிகள் – அந்த அறையின் மற்றொரு கதவு வழியே உள்ளே நுழைந்தால் சமையலறை. அங்கே தான் தேநீர் மற்றும் உணவுத் தயாரிப்பு – உணவு பெரும்பாலும் மோமோஸ்! எங்களுக்குத் தேநீர் மட்டும் போதும் என்று சொல்ல, அதுவும் black tea மட்டும் போதும் என்று சொல்ல பத்து நிமிடங்கள் ஆகும் என்றார் கடையை நிர்வாகிக்கும் பெண்.


கடை வாயிலில் நண்பர்கள் மற்றும் ஓட்டுனரோடு..

கடையை விட்டு வெளியே வந்து கொஞ்சம் நேரம் வேடிக்கைப் பார்த்தோம் – வித்தியாசமான மனிதர்கள், வித்தியாசமான உடை என அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்ததில் நேரம் போனது தெரியவில்லை – அந்த மனிதர்களும் எங்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்! யாரிடமும் பேச்சுக் கொடுக்கவில்லை. அவர்கள் பார்வையில் நட்பு தெரியவில்லை – எங்கிருந்து வந்தார்களோ என்று யோசிக்கும் பார்வை! அதனால் பேசவில்லை! அதற்குள் பத்து நிமிடங்கள் ஆகியிருக்க மீண்டும் திரைச்சீலையை விலக்கி கடைக்குள் சென்றோம்.


போர் நினைவுச் சின்னம்..

Black Tea தயாராக இருக்க, அதைக் குடித்து விட்டு, காசு கொடுத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டோம் – ஒரு தேநீரின் விலை பத்து ரூபாய் மட்டும்!  தொடர்ந்து பயணித்து நாங்கள் வந்து சேர்ந்த இடம் தவாங். அறைக்குச் செல்வதற்கு முன்னர் வேறு ஒரு இடமும் சென்று பார்த்துவிட்டுச் செல்வது தான் திட்டம். அந்த இடம் தவாங் நகரில் இருக்கும் போர் நினைவுச்சின்னம். உள்ளூர் வாசிகள் இந்த நினைவுச் சின்னத்தினை Namgyal Chortan என அழைக்கிறார்கள். சுமார் நாற்பது அடி உயரம் கொண்ட இந்த நினைவு சின்னத்திற்கு வந்து சேர்ந்தோம்.


நினைவுச் சின்னம் முன்னர் நண்பர்களோடு...
ஓட்டுனர் ஷம்பு எடுத்த புகைப்படம்

1962 சீனப் போரில் இறந்து போன 2420 இந்திய வீரர்களுக்கான நினைவுச் சின்னம் இது. வீரர்களின் பெயர்களை, பளிங்குக் கற்களில் பொறித்து வைத்திருக்கிறார்கள். வாயிலில் ஒரு பீரங்கி நிற்கிறது. இந்த இடத்திலும் பிரார்த்தனை உருளைகள் உண்டு! நினைவுச் சின்னத்தில் ராணுவ வீரர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், பொருட்கள் ஆகியவற்றை காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். இது தவிர பக்கத்திலேயே இருக்கும் அரங்கில் மாலை நேரங்களில் Sound and Light Show நடக்கும். நாங்கள் சென்றது மாலை நேரம் என்பதால், சற்றே காத்திருந்து Sound and Light Showவும் பார்த்து விட்டே செல்ல முடிவு செய்தோம்.


இப்பாதை போலவே ராணுவ வீரர்களின் வாழ்வும் கரடுமுரடானது..

31 நாட்கள் நடந்த சீனப்போர் பற்றிய குறும்படம் பார்க்கும்போது ராணுவ வீரர்கள் செய்த தியாகங்களும், அவர்கள் பட்ட கஷ்டங்களும் மனதினை ஏதோ செய்தது. எத்தனை தியாகங்கள் செய்திருக்கிறார்கள் இந்த ராணுவ வீரர்கள்.  போர் என்பது எத்தனை எத்தனை கொடிய நிகழ்வு என்பது இது போன்ற குறும்படங்கள் பார்க்கும்போது தான் ஓரளவு புரியும்.  நாட்டை அன்னிய தேசங்களிலிருந்து பாதுகாப்பாக வைக்க போர் தேவையாக இருக்கிறது என்றாலும் அதன் பின்னே இருக்கும் இழப்புகளை மொத்த தேசமும் உணர்ந்து கொள்ள வேண்டும். எல்லைப் பகுதியில் இல்லாதவர்கள் இந்த இழப்புகளை அவ்வளவாக புரிந்து கொள்வதில்லை என்பது தான் சோகம்.


தெளிவாக ஓடும் ஆறு....

அந்தக் குறும்படத்தினைப் பார்த்து நெஞ்சில் சோகத்தோடும், உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செய்தும், அவர்கள் குடும்பத்தினர் பற்றிய நினைவுகளோடும் வெளியே வந்தோம். ஒவ்வொரு இந்தியரும் பார்க்க வேண்டிய குறும்படம் இது. ராணுவ வீரர்களின் தியாகங்களைச் சொல்லும் இது போன்ற குறும்படங்களை பள்ளிகளிலும் வெளியிடலாம் – திரைப்பட அரங்குகளிலும் பல்வேறு போர்கால நிகழ்வுகளை வெளியிட்டால் மக்களுக்கு நமது ராணுவ வீரர்களின் தியாகங்கள் ஓரளவுக்காவது புரியும். தங்கள் வீடுகளின், இருப்பிடத்தின் வசதியான சூழல்களில் இருந்துகொண்டு ராணுவத்தினர் பற்றியும், அவர்கள் செயல்பற்றியும் பேசுவது எளிது. அவர்கள் இடத்தில் இருந்து பார்த்தால் தான் அவர்களின் கஷ்டங்கள் புரியும்.....


வாயிலில் இருந்த ஆயுதம்..

இந்த நினைவுகளோடு அனைவருமே அமைதியாக அங்கிருந்து வெளியே வந்து எங்கள் தங்குமிடம் நோக்கிப் புறப்பட்டோம். தங்குமிடம் வந்த பிறகு கொஞ்சம் ஓய்வு! ஒரு குளியல்! பிறகு இரவு உணவு. வழக்கம்போல கொஞ்சம் அரிசி சாதம், தால், மிக்ஸ் வெஜிடபிள், சப்பாத்தி என நான் முடித்துக் கொள்ள, நண்பர்கள் அசைவ உணவுகளை ஒரு கை பார்த்தார்கள். அதன் பின்னர் தங்குமிடத்தின் வெளியே கொஞ்சம் நடந்தோம். பிறகு உள்ளே வந்து அன்றைய பயணத்தினால் உண்டான அலுப்பைப் போக்க நல்ல உறக்கம்! அடுத்த நாள் பயணம் பற்றிய எண்ணங்களோடு நல்ல உறக்கம்.  அடுத்த நாள் செல்லப் போகும் இடமும் ஒரு ஸ்வாரஸ்யமான இடம் தான். அங்கே செல்ல நீங்களும் காத்திருங்கள்!

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி....

16 கருத்துகள்:

  1. ராணுவ வீரர்களின் வாழ்க்கையைப் போலவே பாதை கரடுமுரடானது என்ற புகைப்படத்திற்கான செய்தி நெகிழ வைத்தது. தேநீர்க்கடையில் நீங்கள் அனைவரும் நிற்பதைப் பார்த்தால் அனைவரும் பயந்துபோயிருப்பார்கள்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... ஏதோ புள்ளப் பிடிக்கறவங்க மாதிரி இருக்கோம் போல! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  2. >>> ராணுவ வீரர்களின் வாழ்க்கையைப் போலவே பாதை கரடுமுரடானது..<<<

    மனம் நெகிழ்ந்தது.. உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களுக்கு அஞ்சலி!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  3. இந்தப் பாதை போல ராணுவ வீரர்களின் வாழ்க்கையும் கரடுமுரடானது... உண்மைதான் அண்ணா... அவர்களைப் பற்றி நாம் அதிகம் தெரிந்து கொள்வதில்லை... எல்லைப் பிரச்சினை என்று வரும்போது மட்டும் அவர்களைக் கண்டு கொள்வோம்...

    தொடருங்கள்... தொடர்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு
  4. ராணுவ வீரர்களின் வாழ்வும் கரடுமுரடானது - நல்ல வரிகள். பொதுவாகவே நமக்கு, நம்முடைய நல்வாழ்வுக்கு உழைப்பவர்களைப் பற்றிய பட்டறிவு குறைவு. காலையில் தோசை, சட்னி சாப்பிட்டால், அதற்கான அரிசி விளைவிக்கும் விவசாயியும் (எங்கோ விளைவிக்கிறார்கள். அதை யார் யாரோ முனைந்து நம்மிடம் கொண்டுவந்து சேர்க்கிறார்கள்), அதற்குச் சம்பந்தமே இல்லாத இடத்திலிருந்து வரும் தேங்காய், மிளகாய், கடுகு, எண்ணெய் போன்றவைகளை விளைவிக்கிறவர்களையும், அதைக் கொண்டுசேர்ப்பவர்களையும் நன்றியுடன் எண்ணுபவர்கள் குறைவு. நம் நிம்மதியான வாழ்க்கையை நமக்கு உறுதி செய்பவர்கள் எல்லைப்புற வீரர்கள். Many times, many become unsung heros. (விவசாயிகளையும் உள்ளடக்கி)

    "எல்லைப் பகுதியில் இல்லாதவர்கள் இந்த இழப்புகளை அவ்வளவாக புரிந்து கொள்வதில்லை" - சரியான நேரத்தில் எழுதியுள்ளீர்கள். சில நாட்களின் முன் நடந்த இந்திய ராணுவ நடவடிக்கை காரணமாக, போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், பல எல்லைப் புற கிராமங்களிலிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாகப் பாதுகாப்பான இடத்தை நோக்கி நகர்வதைப் படித்தோம். வாழ்விடத்திலிருந்து குறைந்த காலத்துக்கோ அல்லது நிரந்தரமாகவோ கிளம்பிச்செல்வது எவ்வளவு கொடுமையான, கடுமையான நிகழ்வு.

    'நிறைய பேரால், வெறும் காகிதப் பணத்தைத்தான் சம்பாதிக்க இயலும். அதை அர்த்தமுள்ளதாக ஆக்குவதற்கு ஏகப்பட்டபேர் தேவை. அவர்களுக்கு எங்கள் நன்றியும், பாராட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் சிறப்பான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      ராணுவ வீரர்களையும், அவர்களின் கஷ்டங்களையும், தியாகங்களையும் ஒருவருமே புரிந்து கொள்வதில்லை என்பது தான் சோகம்.

      நீக்கு
  5. ராணுவ வீரர்களுக்கு வணக்கங்கள்.
    அவர்களின் தியாகம் எல்லோருக்கும் தெரியவேண்டும் என்பது உண்மை.
    எவ்வளவு கஷ்டங்களை தாங்கி கொண்டு நாம் நாட்டை பாதுகாக்கிறார்கள்! .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  6. எல்லைப் பகுதிகளில் வாழும் மக்களுக்குத்தான் போரின் கொடுமையும் தெரியும்நாமெல்லாம் ஆர்ம் சேர் க்ரிடிக்ஸ்தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  7. விரிவான தகவல்கள் அழகிய படங்களோடு அருமை ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  8. பதிவு நிறைய தகவல்களைச் சொல்லுகின்றது. ராணுவ வீரர்களின் வாழ்வும் கரடுமுரடானது என்பதை எல்லோரும் அறிய வேண்டும் என்று நீங்கள் சொல்லியிருக்கும் கருத்த்குஅள் பரிந்துரைகள் அனைத்தும் நல்ல கருத்துகள். பள்ளிகளில் எல்லாம் போட்டுக் காட்டினால் மாணவ மாணவிகளின் மனதில் பதியும் என்பது உறுதி. நல்லதொரு தகவல். போர் என்பது எந்த நாட்டிற்கும் இழப்புகதான் ஜி. பல ரீதிகளிலும். குரிப்பாக ராணுவ வீரர்கள!

    பூட்டான் செல்லும் பாதை அட! அதுவும் 30ம்கிமீ தான் !! நல்ல வாய்ப்பு எல்லை வரை சென்ரிருக்கலாமோ...

    நல்ல பயணம் ஜி தகவல்களும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூட்டான் எல்லைக்குச் செல்லவில்லை என்றாலும், இப்பயணத்தில் சீன எல்லைக்கும், பங்க்ளாதேஷ் எல்லைக்கும் சென்று வந்தோம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....