எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, October 17, 2016

உத்திரப் பிரதேசமும் சுற்றுலாத் தலங்களும்
சாலையோர உணவகத்தில் நிற்கும் உத்திரப் பிரதேச அரசுப் பேருந்துகள்…

உத்திரப் பிரதேசம் – பரப்பளவில் நமது நாட்டின் பெரிய மாநிலமாக இருந்தது – உத்திராகண்ட் அம்மாநிலத்திலிருந்து பிரிக்கப்படும் வரை. இப்போதும் பெரிய மாநிலம் தான். ஆக்ரா, மதுரா, விருந்தாவன், Bபர்சானா, லக்னோ, அலஹாபாத், நைமிசாரண்யம், வாரணாசி என இம்மாநிலத்தின் சுற்றுலாத் தலங்களை சொல்லிக் கொண்டே போகலாம். இம்மாநிலத்தில் சுற்றுலா மூலம் அரசாங்கத்திற்கு வருமானம் ஈட்டக்கூடிய, குறிப்பாக அன்னியச் செலாவணி ஈட்ட நிறையவே வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும், இவ்விடங்கள் இன்னும் பழமையிலேயே மூழ்கிக் கிடக்கின்றன. இந்த இடங்களுக்குச் சென்று வரவோ, இவ்விடங்களில் தங்கவோ போதியவசதிகள் இல்லை.  அதைப் போலவே போதிய விளம்பரங்களும் செய்வதில்லை. 


மரம் வளர்ப்போம் – இல்லை இல்லை…. மரம் வெட்டுவோம்….

நேற்று உத்திரப் பிரதேசத்தில் உள்ள ஷுக்ரதால் என்ற இடத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. சென்னையிலிருந்து நண்பரின் நண்பர் வந்திருந்தார். ஷுக்ரதால் சென்று ஒரு வாரம் இருக்கப் போகிறார்கள். தில்லியிலிருந்து அவர்களை அழைத்துச் சென்று அங்கே விட்டுவர வேண்டும் என நண்பர் போகும்போது என்னையும் அழைத்துக் கொண்டு போயிருந்தார். காலை ஒன்பதரை மணிக்குப் புறப்பட்டோம். தில்லியிலிருந்து சுமார் 170 கிலோ மீட்டர் தொலைவு தான் என்றாலும் போகும்போது மூன்றரை மணி நேரம் ஆனது! திரும்பும் போது எவ்வளவு நேரம் ஆகுமோ?


ஷுக்ரதால் – அக்ஷய் வட்….

உத்திரப் பிரதேசம் என்பதை இங்கே நாங்கள் உல்டா பிரதேசம் என்றே அழைப்பது வழக்கம். எல்லாம் தலைகீழ்! சாலைப் போக்குவரத்து உட்பட! யாருமே இங்கே போக்குவரத்து விதிகளை மதிப்பதில்லை. சாலையில் சென்று கொண்டிருக்கும் போது சந்திப்புகளில் சிவப்பு விளக்கு எரிகிறது என நீங்கள் நின்றால், உங்கள் மீது ஏதாவது வண்டி இடித்து விடும் வாய்ப்பு அதிகம்.  யாரும் சிவப்பு விளக்குகளுக்கு மரியாதை தருவதில்லை. அவரவர்கள் அவரவர் வழியில் போவார்கள் – போக்குவரத்து விதிகளை யாருமே மதிப்பதில்லை! பெரும்பாலான வாகனங்கள் தவறான பாதையிலேயே – அதாவது போவதற்கு இருக்கும் பாதையில் வருவார்கள், வருவதற்கு இருக்கும் பாதையில் போவார்கள்! எப்படி வசதியோ அப்படிச் செலுத்துவதில் பிரசித்தி பெற்றவர்கள் இவர்கள்.


ஷுக்ரதால் – கிருஷ்ணர் முன்பு சுகப் பிரம்ம ரிஷி, பரிக்ஷீத் மஹாராஜா – கூடவே மற்ற ரிஷிகள்…..

யாருமே ஹெல்மெட் அணிவதில்லை – மூட்டை முடிச்சுகளோடு முழு குடும்பமே இரண்டு சக்கர வாகனங்களில் செல்வார்கள். போதிய பேருந்து வசதி இல்லாததால் மூன்று சக்கர ஜூஹாட் வண்டிகளும், நான்கு சக்கர ஜீப்புகளும் தான் இங்கே நிறைய ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் அளவுக்கதிகமான மக்களை ஏற்றிக் கொண்டு காற்றின் வேகத்திற்கு இணையாக பறந்து செல்வார்கள். இதனால் நடக்கும் விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏராளம் – அரசும் கண்டுகொள்வதில்லை. போலீஸ்காரர்களுக்கு ஹஃப்தா என அழைக்கப்படும் வாராவார லஞ்சம் வந்தால் போதும்!


ஷுக்ரதால் – அக்ஷய் வட் கீழே சுகப்பிரம்ம ரிஷியும் பரிக்ஷீத் மஹாராஜாவும்….

தேசிய நெடுஞ்சாலை என்றாலும் குறுகிய சாலைகள் தான் இங்கே. தலைநகரிலிருந்து ஹரித்வார், டேராடூன் செல்லும் பாதை மிகவும் மோசமாகவே இருக்கிறது என்பதால் அதிக நேரம் எடுக்கும். மாற்றங்கள் நிறையவே வேண்டியிருக்கிறது. ஆனாலும் மாற்ற ஒருவரும் முயற்சி எடுப்பதில்லை – சாலைகள் மட்டுமல்ல, வசதிகளும் மிகக் குறைவு. நெடுஞ்சாலைகளில் சாலையோர உணவகங்கள் மிகவும் குறைவு – இருப்பதில் சாப்பிட முடியாது – சாப்பிட்டால் என்ன ஆகும் என்பதற்கு உத்திரவாதம் கிடையாது! ஒரு சில இடங்களில் மட்டுமே உணவகங்கள் இருக்கின்றன – கழிப்பறை வசதிகள் பற்றி சொல்லாமல் இருப்பது விவேகம்! இல்லவே இல்லை என்று சொல்லி விடலாம் – இருப்பவையும் அத்தனை மோசம்!


ஷுக்ரதால் – அக்ஷய் வட்….
மேலே அமர்ந்திருந்த குரங்கார்….
சாப்பிடலாமா வேண்டாமான்னு ஒரு டெஸ்டிங்…..

ஜாதிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மனிதர்கள் இங்கே அதிகம். அவர்களுக்கு இடையே நடக்கும் நிழல் யுத்தங்களும் அதிகம். பாதுகாப்பு வசதிகள், அடிப்படை வசதிகள் என எல்லாவற்றிலும் பின் தங்கியே இருக்கிறது. பெரும்பாலான ஊர்களில் மின்வசதி இருந்தாலும் நாளொன்றுக்கு ஆறு முதல் எட்டு மணி நேரம் தான் மின்சாரம் இருக்கும்! மீதி நேரங்களில் இருட்டு தான்! வசதி படைத்தவர்கள் வீடுகளில் கூட ஜென்ரேட்டர்கள் வைத்திருப்பார்கள். குறைகள் மட்டுமே தான் சொல்ல வேண்டியிருக்கிறது! நிறைகளையும் சொல்ல நினைத்தால் ஒன்றுமே இல்லை என்று தான் வெட்கத்தோடு சொல்ல வேண்டியிருக்கிறது.


ஷுக்ரதால் – அக்ஷய் வட்….
சுயம்புவாக உருவான பிள்ளையார் உருவம்….

சரி ஷுக்ரதால் என்ற ஊரில் என்ன விசேஷம் என்று பார்க்கலாம்! இந்த ஊர் பாகவத சப்தாஹத்திற்கு பிரசித்தி பெற்றது. வருடம் 365 நாட்களும் ஏதோ ஒரு ஊரிலிரிந்து யாராவது ஒருவர் பாகவதம் சொல்லிக் கொண்டிருப்பார். சப்தாஹம் என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வில், பாகவதத்தினை, அதன் பெருமைகளை, அதில் உள்ல சத்விஷயங்களை ஒரு வாரத்தில் சொல்லி முடிப்பார்கள். இங்கே ஏன் சொல்ல வேண்டும் என்பதற்கு சற்றே பின்னோக்கி, சற்றேறக்குறைய 5000 வருடங்கள் [?] பின்னோக்கிச் செல்ல வேண்டும்.


ஷுக்ரதால் – அக்ஷய் வட்….
கிளிகளில் ஒன்று……

சுகப்பிரம்ம ரிஷி பரிக்ஷித் மஹாராஜாவிற்கு இங்கே தான் பாகவதத்தின் அருமை பெருமைகளை எடுத்துரைத்தார். 18000 ஸ்லோகங்கள் அடங்கிய இந்த பாகவதத்தினை ஒரு வார காலம் எடுத்துரைத்த இடம் தான் இந்த ஷுக்ரதால். இங்கே ”அக்ஷய் வட்” என அழைக்கப்படும் மிகப் பெரிய அரச மரம் இருக்கிறது. அந்த மரத்தடியில் தான் சுகப்பிரம்ம ரிஷி பரிக்ஷீத் மஹாராஜாவிற்கு பாகவத சப்தாஹம் சொன்னாராம். இப்போதும் சப்தாஹங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.  இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் இங்கே வந்து பாகவதத்தின் பெருமைகளை கேட்கிறார்கள். சப்தாஹ நிகழ்வுகளை ஏற்பாடு செய்கிறார்கள்.


ஷுக்ரதால் – பிரம்மாண்ட பிள்ளையார்….

மிகப் பெரிய அரச மரம் – நான்கு மிகப் பெரிய கிளைகள், நான்கு வேதங்களைக் குறிப்பதாகவும், மற்ற கிளைகள் உபநிஷத்துகளைக் குறிப்பதாகவும் சொல்வார்கள்.  இப்படி இருக்கும் ஒரு கிளையில் சுயம்புவாக ஒரு பிள்ளையார் உருவமும் இயற்கையிலேயே அமைந்திருக்கிறது.  சுற்றுப்புறத்தில் எங்குமே கிளிகள் கிடையாது என்றாலும், இப்போதும் இந்த அரச மரத்தில் ஒரு ஜோடி கிளி உள்ளது – சுகப் பிரம்ம ரிஷி இந்த கிளிகள் ரூபத்தில் இன்னமும் இங்கே இருப்பதாக நம்பிக்கை. நம்பிக்கை தானே எல்லாம்….


ஷுக்ரதால் – 72 அடி ஆஞ்சினேயர்….

ஷுக்ரதால் பற்றி நிறையவே கதைகள் உண்டு. அதையெல்லாம் பிறிதொரு சமயத்தில், விரைவில் சொல்கிறேன்…. இம்மாதிரி இடங்கள் உத்திரப் பிரதேசம் முழுவதுமே இருக்க, அவற்றைச் சரியான முறையில் பராமரிப்பதும், அத்தலங்கள் பற்றிய விவரங்களை உலகிற்கு சிறப்பான முறையில் எடுத்துச் சொல்வதும் மாநில சுற்றுலாத் துறை செய்ய வேண்டிய வேலை. ஆனால் தாஜ்மஹாலை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதையும் ஒழுங்காய் பராமரிப்பதில்லை என்பதும் சொல்ல வேண்டும். சுற்றிலும் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் இருக்க, பளிங்குக் கற்கள் தங்கள் இயற்கையான வண்ணத்தினை இழந்து பழுப்பேற ஆரம்பித்திருக்கின்றன.


ஷுக்ரதால் – பிச்சை எடுக்கும் முதியவர்….
இப்படி நிறையவே இங்கே….  காவி உடை சாமியார்களும் உண்டு…..

மாநிலத்தில் இருக்கும் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல சரியான சாலைகள், பயணிகள் தங்குமிடங்கள், சுற்றுலாத் தலங்கள் பற்றிய சரியான விளம்பரம், பாதுகாப்பு வசதிகள் என செய்ய வேண்டிய வேலைகள் நிறையவே இருக்கின்றது என்றாலும் சுதந்திரத்திற்குப் பின்னர் வந்த பல்வேறு அரசுகள் இதில் அக்கறை காட்டுவதில்லை. அவர்களுக்கு ஜாதீயச் சண்டைகள் போடுவதற்கும், தங்கள் குடும்பத்திற்கு சொத்து சேர்ப்பதற்கும் தான் நேரம் இருக்கிறது…… நிறைய நாடுகளிலிருந்து இந்த ஊர்களுக்கு மக்கள் வருகிறார்கள் என்றாலும், அவர்களின் எண்ணிக்கையை அதிகமாக்க அரசாங்கமும் உழைக்க வேண்டும். ஆனால் செய்ய முயல்வதில்லை, செய்வதும் இல்லை என்பது தான் சோகம்……


சாலை விளக்கு இல்லை என்றால் என்ன….
நானே விளகாக இருப்பேன் – எனச் சொல்லும் சூரியன்!

ஷுக்ரதாலில் இருந்து தில்லி திரும்பி வரும் போது அதே தொலைவினைக் கடக்க, எங்களுக்கு ஆன நேரம் ஆறு மணி நேரம்! சாலை முழுவதும் உல்டாவாக நிறைய வாகனங்கள் சென்று கொண்டிருக்க, பல இடங்களில் Traffic Jam – அனகோண்டா பாம்பை விட நீண்ட வாகன வரிசை – ஊர்ந்து தான் வர வேண்டியிருந்தது! சாலையில் போக்குவரத்து விதிகள் காற்றில் பறக்க, தடி எடுத்தவன் தண்டல்காரன் என்று அவரவரும் கிடைத்த இடத்தில் வண்டியை ஓட்டி வாகனப் போக்குவரத்தை கதிகலங்க வைத்துக் கொண்டிருந்தார்கள்……

உல்டா பிரதேசம் என்று உத்திரப் பிரதேசம் ஆகுமோ…..  அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்……

மீண்டும் ச[சி]ந்திப்போம்…..

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

28 comments:

 1. பதிவில் அழகிய படங்களுடன் ஷூக்ர தால் பற்றிய விவரங்கள்..

  அருமை.. நிறைய தெரிந்து கொண்டேன்.. வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 2. தமிழ்'நாடே சரியில்லை என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். அதை சொர்க்கம் என்று சொல்லாமல் சொல்லியது உங்கள் உத்திரப்பிரதேசப் பயணம். நைமிசாரண்யத்தில் சில தனியார் தங்குமிடங்கள் இருக்கின்றன (பில்கிரிமேஜ் வருபவர்களுக்கானவை). கோரக்பூரில் ஓரளவு வசதி இருக்கிறது. சுற்றுலாத் தளங்கள் வருமானத்தையும் வேலை வாய்ப்பையும் பெருக்கக்கூடியவை என்ற எண்ணம் மக்கள் மனத்தில் வரவேண்டும். அதுக்குக் கல்வி அறிவும் அவசியம்.

  சாலை உணவகங்களின் நிலையைச் சொன்னபின், என்ன சாப்பிட்டீர்கள் என்று கேட்கக்கூடாது. முதுகுவலி இருந்தால், கடவுள் அருள் இருந்தால், இந்த மாதிரி சாலைப் பயணத்தில் தீர்ந்துவிடும், அல்லது புதிதாக வந்துவிடும்.

  ReplyDelete
  Replies
  1. உத்திரப் பிரதேசம், பீஹார் போன்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது தமிழகம் சொர்க்கமே....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 3. நல்ல புகைப்படங்கள்.

  //உல்டா பிரதேசம் என்று உத்திரப் பிரதேசம் ஆகுமோ….. அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்…//

  எல்லாம் அவன் செயல்!

  ReplyDelete
  Replies
  1. எல்லாம் அவன் செயல்.... அதே தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 4. i have not visited uttar pradesh so far
  is it so bad as decribed by venkat ji
  very sad ...

  ReplyDelete
  Replies
  1. மாநிலத்தின் பெரும்பாலான இடங்கள் மோசம் தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி Nat Chander

   Delete
 5. காசி, மத்ரா, ஆக்ரா, நைமிசாரணியம், லக்னோ, கான்பூர், அயோத்தி, பிரயாகை என்று இங்கேயும் நிறைய இடங்களில் எழுபதுகளின் ஆரம்பத்திலிருந்து சுற்றியாச்சு! அப்போது பார்த்ததற்கு இப்போதும் மாற்றமில்லை என்று தான் சொல்ல வேண்டும். லக்னோவில் எங்கே பார்த்தாலும் யானைச் சிலைகள் பிரம்மாண்டமாய்! மாயாவதியின் ஆட்சியை நினைவூட்டிக் கொண்டு இருக்கிறது! :( ஆட்சியாளர்கள் மக்களை ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை. அயோத்தி சென்ற போது அதை நன்றாக உணரமுடிந்தது! ஆனால் கால்நடைச் செல்வங்களும் சரி, இயற்கை உரங்களும் சரி அபாரமாகக் காணக்கிடைக்கும் என்பதோடு பயிர் விளைச்சலும் அமோகம். அதிலும் பிஹாரில் பார்த்தால் விளைச்சல் மயக்கத்தையே தரும். இத்தனை வசதிகள் இயற்கை ஏற்படுத்திக் கொடுத்திருந்தும் மக்கள் இன்னமும் ஏழைகள் தான்! :( படிப்பில் ஈடுபாடு இல்லை!

  ReplyDelete
  Replies
  1. தண்ணீர் எங்கும் இருக்கிறது. அதனால் விவசாயமும் நன்றாகவே நடக்கிறது. இங்கே நீங்களும் பயணித்திருப்பதால் உங்களுக்கு இது பற்றி தெரிந்திருக்கும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 6. ,ஷூக்ரதால் உத்திரப்பிரதேசம், உல்டாபிரதேசம் மற்றும் வர்ணனைகள் படிக்க ஸ்வாரஸ்யம். அக்ஷயவடக்கிளி, அனுமார்,பிள்ளையார் படங்கள் அழகு. நம் குரங்காரும் அழகியவர். உங்கள் கட்டுரைகள் படிக்க ரஸிக்க விருப்பமானவை எனக்கு. அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா....

   Delete
 7. உங்களுடன் பயணம் வந்தது மனதிற்கு மகழ்ச்சி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 8. பயம்மாயிருக்கு

  ReplyDelete
  Replies
  1. பயம் தான். ஆனாலும் பயணித்து தானே ஆகவேண்டியிருக்கிறது - நாலு இடங்களைப் பார்க்க வேண்டுமென்றால்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சித்ரா!

   Delete
 9. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ப. கந்தசாமி ஐயா.

   Delete
 10. மரம் வளர்ப்போம் – இல்லை இல்லை…. மரம் வெட்டுவோம்….
  ஹாஹாஹா ஸூப்பர் வசனம் ஜி
  பிள்ளையார், ஆஞ்சனேயர் சிலைகள் அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 11. உத்தரப்பிரதேசம் பற்றி வருந்தவைக்கும், ஆச்சர்யப்படவைக்கும் தகவல்கள். மக்களாய்ப் பார்த்து மாறினால்தான் உண்டு போல! மேலே படித்த வருத்த விஷயங்களை மறக்க வைத்தது கீழே பார்த்த மெகா விநாயகர் புகைப்படம். ஆஞ்சநேயரும் ப்ரம்மாண்டம்தான். ஆனால் அவரிடம் ஏதோ ஒன்று மிஸ்ஸிங்!

  ReplyDelete
  Replies
  1. எனக்குத் தெரிந்தவரை உக்ர ஆஞ்சியாகத் தெரிகிறார். அவ்வளவு தான்! :)

   Delete
  2. மெகா சைஸ் விநாயகர் கீழே இன்னுமொரு விநாயகர்.... வெளியே இருந்த அர்ச்சகரும் விநாயகர் தொப்பையோடு! :) ஆஞ்சநேயர், விநாயகர் சிலைகள் புதியதாய் நிர்மாணம் செய்யப்பட்டவை. பழைய கோவில்கள் இல்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
 12. வணக்கம்.

  உங்கள் தளத்திற்கு வருவதும் பதிவுகளைப் படிப்பதும் புகைப்படங்களைப் பார்ப்பதுமே சுற்றுலா சென்று வந்த உணர்வினை ஏற்படுத்துகிறது.

  என்னைப் போன்ற நத்தைகளுக்கு இது பெரிய ஆறுதல்.

  தொடர்கிறேன்.

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜோசப் விஜூ ஜி!

   Delete
 13. வட மாநிலங்கள் பற்றி அறிந்திருந்தாலும் அதுவும் சாதிகள் பார்ப்பது நம் தென்னகத்தை விட மோசம் என்பது தெரிந்திருந்தாலும் இன்னும் பல மோசம் போல உத்தரப்பிரதேசத்தில்! அறியாத விஷயங்களை அறிய முடிந்தது. படங்கள் அழகு! ஆறுதல் சொல்லப்பட்ட விஷயங்களைப் பார்க்கும் போது!

  கீதா: ஜி உபி, பிஹார் மிகவும் மோசம்...உபி யிலிருந்து பிரிக்கப்பட்ட உத்ராஞ்சல் இன்னும் வளரவில்லை. அதுவும் கல்விநிலையங்கள் கூட மிகவும் மோசம் பிஹாரில்...ஊரறிந்த விஷயம்தான். காசி எவ்வளவு நல்ல தலம் ஆனால் மிகவும் மோசமாகப் பராமரிக்கப்படுகிறது. உபி, உத்ராஞ்சல் நல்ல சுற்றுலாத்தலங்களைக் கொண்ட மாநிலங்கள். ஆனால் எந்தவித வளர்சிசியும் இல்லை.

  உங்கள் பதிவிலிருந்து ஷுக்ரதால் தகவல்கள் அறிய முடிந்தது ஜி.

  ReplyDelete
  Replies
  1. உத்திரப் பிரதேசம், பீஹார், ஜார்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பல இடங்கள் பார்க்கத் தகுந்தவை. ஆனால் பிரச்சனையே போதிய வசதி இல்லாதது, மக்கள் தரும் தொல்லைகள் என பெரிய பட்டியல் உண்டு....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....