செவ்வாய், 24 நவம்பர், 2009

நிறுத்து உன் தாண்டவத்தை!
தமிழகத்தில் உள்ள சலூன்களில் கட்டிங், ஷேவிங், ஹேர் டை போன்ற ஒரு சில வசதிகளே உண்டு. பணி நிமித்தமாக தில்லி வந்த உடனே கட்டிங் செய்ய வேண்டிய அவசியம் எனக்கு ஏற்படவில்லை. இரண்டு மாதங்களுக்குப் பின் ஒரு சனிக்கிழமை காலை ஹேர் கட்டிங்குக்காக டில்லியில் உள்ள ஒரு சலூனுக்கு சென்றிருந்தேன். அங்கே முடி திருத்துபவர் ஒருவரே இருந்தார். நான்கைந்து பேர் எனக்கு முன்பே காத்திருந்தனர்.

என்னுடைய முறை வந்ததும், அந்த பணியாளர் என்னிடம் "கட்டிங்?" என்று கேட்க, தலையை ஆட்டியபடி என் தலையை அவர் வசம் ஒப்படைத்தேன். தலையில் குளிர்ந்த தண்ணீர் பீச்சி அடித்து கத்திரிக்கோல் மற்றும் சீப்பு வைத்து, பாட்டு பாடியபடி ஒரு ஆனந்த நடனம் ஆடினார்.

ஒரு வழியாக ஹேர் கட்டிங் முடித்த பிறகு என்னிடம் "ஷேவிங்?" என்று கேட்க நான் வேண்டாம் என தலையை ஆட்டினேன். அதன் பிறகு ஹிந்தியில் ஏதேதோ கேட்டு கொண்டு இருக்க நான் எல்லாவற்றிற்கும் வேண்டாம் என தலையை ஆட்டி பதில் அளித்தபடி இருந்தேன். கடைசியில் "மாலிஷ்?" என்று கேட்க சரி எல்லாவற்றிற்கும் வேண்டாம் என சொல்ல வேண்டாமே என்ற நல்லெண்ணத்தில் "கர்லோ" [செய்] என்று கூறி உட்கார்ந்தேன். எனக்கோ மாலிஷ் என்றால் என்ன என்றே தெரியாது.

அதன் பிறகு நடந்ததுதான் இக்கட்டுரையின் ஹைலைட். என்னுடைய தலையில் இரண்டு கை அளவு கடுகு எண்ணெய் விட்டு நன்றாக தடவி, பிறகு இரண்டு கைகளை சேர்த்து மெதுவாக அடிக்க ஆரம்பித்தார். தலையை பிடித்து விட்டு ஏதேதோ செய்ய ஆரம்பித்து கோபம் கொண்ட சிவபெருமான் போல கைகளால் ருத்ர தாண்டவமே ஆடி விட்டார். தப்பிக்கவும் முடியாமல் கத்தவும் முடியாமல் ஒரு பத்து நிமிடம் இந்த தாண்டவத்தை பொருத்துக்கொண்டிருந்துவிட்டு அதன் மேலும் அடி நிற்காமல் போகவே வலி தாங்க முடியாமல் "போதுமடா சாமி! நிறுத்து உன் தாண்டவத்தை!" என்று தமிழில் கூறிவிட்டு அங்கிருந்து தப்பித்தேன் பிழைத்தேன் என ஓடினேன்.

கட்டிங்கிற்கும் என்னை அடித்ததற்கும் 1991 வருடம் அவர் வாங்கிய கூலி அதிகமில்லை ஜென்டில்மென் ஜஸ்ட் ஐம்பது ரூபாய்!

திங்கள், 23 நவம்பர், 2009

மூலி [முள்ளங்கி] பராட்டா
ஒரு பதிவில் ஆலு [உருளைக்கிழங்கு] பராட்டா எப்படி செய்வது என்பதை பற்றி கொடுத்து இருந்தேன். அது இங்கே.

இப்போ மூலி [முள்ளங்கி] பராட்டா செய்வது எப்படி என்று பார்க்கலாமா?

தேவையான பொருள்கள்:

கோதுமை மாவு: மூன்று கப்.
முள்ளங்கி - தோல் சீவி துருவியது: ஒரு கப்.
இஞ்சி - தோல் சீவி துருவியது - இரண்டு ஸ்பூன்.
கொத்தமல்லி பொடியாக நறுக்கியது - சிறிதளவு.
மிளகாப்பொடி: அரை ஸ்பூன்.
தனியாப்பொடி: ஒரு ஸ்பூன்.
மஞ்சள் பொடி: ஒரு சிட்டிகை.
கரம் மசாலா: அரை ஸ்பூன்.
உப்பு: தேவையான அளவு.
எண்ணெய்/நெய்: தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவில் தண்ணீர் மற்றும் சிறிது நெய் அல்லது எண்ணெய் விட்டு சப்பாத்திக்கு பிசைவது போல நன்றாக பிசைந்து வைத்துக்கொள்ளவும்.

துருவிய முள்ளங்கியை நன்றாக பிழியவும். பிழிந்த சாற்றினை கொட்டி விடவும். முள்ளங்கியில் தண்ணீர் அதிகம் இருந்தால் பராட்டா நன்றாக இட வராது. சில பேருக்கு நெஞ்சு கரிக்கலாம். பிழிந்த முள்ளங்கி துருவலில், இஞ்சி துருவல், நறுக்கிய கொத்தமல்லி மற்றும் மிளகாய், தனியா, மஞ்சள், கரம் மசாலா பொடிகளையும் தேவையான அளவு உப்பையும் போட்டு நன்றாகக் கலந்து கொள்ளவும். இந்த கலவையை சிறு உருண்டைகளாக [ஒரு சிறிய எலுமிச்சை அளவு] உருட்டி வைத்துக்கொள்ளவும்.

பிசைந்து வைத்த கோதுமை மாவினையும் சப்பாத்திக்கு செய்வது போல உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும். ஒரு உருண்டை கோதுமை மாவினை எடுத்து குழவியால் பூரி அளவில் இடவும். அதன் மேல் ஒரு முள்ளங்கி உருண்டையை வைத்து அதனை சப்பாத்தி மாவினால் மூடவும் [கொழுக்கட்டையில் பூரணம் வைத்து மூடுவது போல]. பின்னர் அந்த மூடிய உருண்டையை சப்பாத்திக்கல்லில் வைத்து குழவியால் உள்ளே உள்ள Stuffing வெளியே வராத படி மெதுவாக இடவும்.

இப்படி செய்த பராட்டாவை சூடான தோசைக்கல்லில் போட்டு நெய் அல்லது எண்ணெய் விட்டு வேக வைக்கவும். ஒரு பக்கம் நன்கு வெந்ததும் திருப்பிப்போட்டு மறுபடியும் நெய் அல்லது எண்ணெய் விடவும். பொன்னிறமாக வந்ததும் தோசைக்கல்லில் இருந்து எடுக்கவும்.

இந்த முள்ளங்கி பராட்டாவிற்கு - காய்கறி ஊறுகாய் மற்றும் தயிர் நல்ல சைடு டிஷ்.

செஞ்சு பார்த்து அசத்துங்க.

என்ன இந்த வாரம் உங்கள் மெனு லிஸ்டில் மூலி [முள்ளங்கி] பராட்டாவும் உண்டு தானே?

செவ்வாய், 17 நவம்பர், 2009

வாழ்க தமிழ்!

வேலை கிடைத்து நான் டில்லிக்கு வந்த போது இந்தியன் வங்கியில் பணி புரிந்த நண்பர் ஒருவருடன் தங்கி இருந்தேன். அந்த அறைக்கு நண்பரின் வங்கியில் பணி புரிந்த பல தோழர்கள் வந்து செல்வர். அதில் ஒருவர் சுரேஷ். நான் வருவதற்கு ஆறு வருடங்களுக்கு முன்பே தில்லி வந்தவர் என்றாலும் அவருக்கு ஹிந்தியில் பத்து-பதினைந்து வார்த்தைகளும் சில வாக்கியங்களுமே தெரியும். அதை வைத்தே சமாளித்து வந்தார்.

நாங்கள் தமிழர்களின் மெஸ் நிறைந்த கரோல் பாக் பகுதியில் இருந்ததால் சமைத்து சாப்பிட தேவைப்படவில்லை. தினமும் எல்லோரும் சேர்ந்து சென்று எதாவது ஒரு உணவகத்திலோ, "டாபா" என்று அழைக்கப்படும் தந்தூரி ஹோட்டலிலோ சாப்பிடுவது வழக்கம். அதற்க்கும் ஒரு மெனு வைத்திருந்தோம். காலையில் ராமானுஜம் மெஸ், மதியம்/இரவு உணவு "அமராவதி ரெஸ்டாரன்ட்" அல்லது "வைஷ்ணவ டாபா".

இப்படி ஓடிக்கொண்டிருந்த வாழ்க்கையில் திடீரென நண்பர் சுரேஷுக்கு ஓர் ஞானோதயம். " நாமே சமைத்தால் என்ன? " உடனே இந்த யோசனையை அமல் படுத்த கடைக்குச் சென்று தேவையான மளிகை பொருள்கள், பாத்திரங்கள், கேஸ் அடுப்பு என்று அதற்கு தேவையானவைகளை வாங்கி வந்து ஒரே வாரத்தில் சமைக்க ஆரம்பித்தோம். வேலைகளை எல்லோரும் பகிர்ந்து கொண்டு செய்ததால் சிரமம் தெரியாமல் இருந்தது.

நண்பர் சுரேஷுக்கு எங்களை விட ஹிந்தி அதிகம்[!] தெரியும் என்பதால் தேவையான பொருள்கள் மற்றும் காய்கறி வாங்கி வரும் வேலையை அவருக்கு கொடுத்தோம்.

ஒரு நாள் காய்கறி கடையில் அவர் வெண்டைக்காயை [ஹிந்தியில் "பிண்டி"] காண்பித்து கத்திரிக்காய் [ஹிந்தியில் "பேங்கன்"] என்ன விலை என்று ஹிந்தியில் கேட்டு இருக்கிறார். அதை கேட்டுக் கொண்டிருந்த பக்கத்துக் கடை காய்கறிகாரர் "சார் நானும் தமிழ் தான்! உங்களுக்கு என்ன காய்கறி வேணும்னாலும் என்கிட்டே வாங்குங்க!" என்று சொல்ல, சுரேஷும் அதன் பின்னர் அவரிடமே காய்கறிகள் வாங்கி வந்தார்.

வேறொரு நாள் அவருடன் நன்றாக ஹிந்தி பேச தெரிந்த மற்றொரு நண்பரும் காய்கறி வாங்க செல்ல நேரிட அப்போதுதான் எங்களுக்கு இவ்வளவு நாட்களாக நண்பர் சுரேஷ் எப்படி ஏமாந்து கொண்டு இருக்கிறார் என்பது தெரிய வந்தது. தமிழ் கறிகாய்காரரிடம் எல்லா கறிகாய்களும் பக்கத்து கடையை விட இரண்டு-மூன்று ரூபாய் அதிகம். ஒரு வேளை தமிழில் பேசுவதால் அதற்கும் சேர்த்து நண்பரிடம் அதிகமாக கறந்திருப்பாரோ?.

வெள்ளி, 13 நவம்பர், 2009

ஆலு [உருளைக்கிழங்கு] பரோட்டாசென்ற பதிவான "Paranthe Waali Gali" பதிவில் சொன்னது போல இந்த பதிவில் ஆலு [உருளைக்கிழங்கு] பரோட்டா எப்படி செய்வது என்பதை பற்றி கொடுத்துள்ளேன். செய்து பார்த்து சாப்பிட்டு பின்னூட்டம் செய்ய வேண்டுகிறேன்.

தேவையான பொருள்கள்:

கோதுமை மாவு: மூன்று கப்.
உருளைக்கிழங்கு: ஆறு [வேகவைத்தது].
மிளகாப்பொடி: அரை ஸ்பூன்.
தனியாப்பொடி: ஒரு ஸ்பூன்.
மஞ்சள் பொடி: ஒரு சிட்டிகை.
கரம் மசாலா: அரை ஸ்பூன்.
உப்பு: தேவையான அளவு.
எண்ணெய்/நெய்: தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவினை தண்ணீர் விட்டு சப்பாத்திக்கு பிசைவது போல நன்றாக பிசைந்து அதில் நெய் அல்லது எண்ணெய் சிறிது விட்டு பிசைந்து வைத்துக்கொள்ளவும்.

வேக வைத்த உருளைக்கிழங்கை தோலினை உரித்த பின் நன்றாக மசித்து அதில் மிளகாய், தனியா, மஞ்சள், கரம் மசாலா பொடிகளையும் தேவையான அளவு உப்பையும் போட்டு நன்றாகக் கலந்து கொள்ளவும். இந்த கலவையை சிறு உருண்டைகளாக [ஒரு சிறிய எலுமிச்சை அளவு] உருட்டி வைத்துக்கொள்ளவும்.

பிசைந்து வைத்த கோதுமை மாவினையும் சப்பாத்திக்கு செய்வது போல உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும். ஒரு உருண்டை கோதுமை மாவினை எடுத்து குழவியால் பூரி அளவில் இடவும். அதன் மேல் ஒரு உருளைக்கிழங்கு உருண்டையை வைத்து அதனை சப்பாத்தி மாவினால் மூடவும் [கொழுக்கட்டையில் பூரணம் வைத்து மூடுவது போல]. பின்னர் அந்த மூடிய உருண்டையை சப்பாத்திக்கல்லில் வைத்து குழவியால் மெதுவாக இடவும். சிறிது பொறுமையாக செய்தால் உள்ளே உள்ள Stuffing வெளியே வராது. இல்லையெனில் ஒரு சப்பாத்தி இட்டு அதன் மேல் உருளைக்கிழங்கு கலவையை ஸ்ப்ரெட் செய்யவும். பிறகு மேலும் ஒரு சப்பாத்தி இட்டு அதன் ஸ்ப்ரெட் செய்த சப்பாத்தி மேல் போட்டு மெதுவாக குழவியால் இடவும்.

இப்படி செய்த பரோட்டாவை சூடான தோசைக்கல்லில் போட்டு நெய் அல்லது எண்ணெய் விட்டு வேக வைக்கவும். ஒரு பக்கம் நன்கு வெந்ததும் திருப்பிப்போட்டு மறுபடியும் நெய் அல்லது எண்ணெய் விடவும். பொன்னிறமாக வந்ததும் தோசைக்கல்லில் இருந்து எடுக்கவும். இந்த ஆலு பரோட்டாவுடன் ஊறுகாய் மற்றும் தயிர் வைத்து சுடச்சுட சாப்பிட, "ஆஹா என்ன ஆனந்தம்!"

செவ்வாய், 10 நவம்பர், 2009

Paranthe Waali Galiபழைய தில்லி என்பதும் நினைவுக்கு வரும் இடங்கள் முகலாய பேரரசர் ஷாஜகானால் கட்டுவிக்கப்பட்ட லால் கிலாவும்[1638-1648], ஜும்மா மஸ்ஜிதும் [1656] தான். இந்த வரலாற்றுப் புகழ் மிக்க இடங்களுக்கு அருகில் உள்ள இடம் சாந்த்னி சௌக். இது முகலாய சாம்ராஜ்யத்தின் மிகப்பெரிய வியாபார ஸ்தலங்களில் ஒன்று. தற்போதும் இங்குள்ள துணி மற்றும் நகைக்கடைகள் மிகவும் பிரபலம்.

இந்த இடத்தில் உள்ள ஒரு பிரபலமான தெருவின் பெயர் தான் "Paranthe Waali Gali". 1870-களில் இங்கு இருபதிற்கும் மேற்பட்ட பரோட்டா கடைகள் ஆரம்பிக்கப்பட்டன. தமிழகம் மற்றும் கேரளாவில் கிடைக்கும் புரோட்டா போல மைதாவில் செய்யப்படுவது அல்ல இது. இது கோதுமை மாவில் செய்யப்படுவது. இந்த சுத்தமான சைவ உணவகங்களில் உருளை, முள்ளங்கி, கேரட், முந்திரி, பனீர், சீஸ், புதினா, கீரை போன்ற முப்பதிற்கும் மேற்பட்ட வித விதமான பரோட்டா வகைகள் கிடைக்கின்றன.

பரோட்டாவிற்கு தொட்டுக்கொள்ள காய்கறி ஊறுகாய், புதினா சட்னி, ஸ்வீட் சட்னி,தயிர் போன்ற பல வகை சைடு டிஷும் உண்டு. நெய் சொட்டச் சொட்ட இங்கு கிடைக்கும் சூடான பரோட்டா மக்களின் நாசியை கவர்ந்து இழுக்கும். ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, வாஜ்பாய் போன்ற பல பிரபலங்கள் உணவு அருந்திய இடம் இது.

ஆனால் ஒரு சிறிய சந்தில் இருக்கும் இந்த உணவகங்களுக்கு தற்போது அவ்வளவாக ஆதரவு கொடுப்பவர்கள் இல்லை. இத்தனை காலத்திற்குப் பிறகு தற்போது இங்கு இருப்பது மூன்று நான்கு கடைகள் மட்டுமே.

இங்கு கடை வைத்திருந்த பலர் தற்போது தில்லியின் மற்ற பகுதிகளில் கடைகளை திறந்து இந்த சுவை மிகுந்த உணவினை மக்களுக்கு அளித்து வருகிறார்கள். ஆனாலும் அந்த பழைய "Paranthe Waali Gali"-யில் உள்ள சிறிய கடைகளில் சாப்பிடும் ஆனந்தம் கிடைப்பதில்லை.

அடுத்த பதிவுகளில் சில வித பரோட்டா செய்வது எப்படி என எழுதலாம் [கல்யாணத்திற்கு முன் தில்லியில் தனியாக இருந்த போது ஐயாவின் நளபாகம் தான்!] என இருக்கிறேன். ருசியான ஆலு பரோட்டா பதிவில் சந்திக்கும் வரை.... மேலுள்ள படத்தைப் பார்த்துக்கொண்டு திருப்தி பட வேண்டியது தான்.

வெள்ளி, 6 நவம்பர், 2009

அந்த இரண்டு ருபாய்

"என்னது அரை கிலோ வெள்ளரிக்காய் பன்னிரண்டு ரூபாயா? பத்து ரூபாய்க்கு கொடுப்பா! " என்று வேலு காய்கறிக் கடைக்காரனிடம் பேரம் பேச, அவன் அதெல்லாம் கட்டுப்படியாகாதுன்னு சொல்ல, பரவாயில்லை அம்மாவிடம் சொல்லி கேட்டு வாங்கிக்கொள்ளலாம் என்று அதிகமான ரெண்டு ரூபாயை தன் கைக் காசை போட்டு வாங்கி வந்தான்.

பெரிய பொறுப்பில் உள்ள அரசு அதிகாரி வனஜாவிடம் கார் டிரைவராக இருப்பவன் வேலு. அவனின் குறைந்த சம்பளத்தில் ஐந்து வயிறுகள் சாப்பிட வேண்டிய கஷ்ட ஜீவனம். ஆனாலும் நேர்மையுடன் வேலை செய்து வந்தான்.

வனஜாவின் கணவரும் அரசு அதிகாரிதான். இருவரது மாத சம்பளமும் சேர்த்தால் மாதத்திற்கு ஒரு லட்சம் வரும். அலுவலகம் சென்று வர அரசு செலவில் இரண்டு வாகனங்கள் . செலவு என்று பார்த்தால் ரொம்ப கம்மி. ஆடம்பரமானவைகளுக்கு மட்டுமே.

வனஜா வேலுவை அனுப்பித்தான் தனக்குத் தேவையான எல்லா பொருள்களையும் வாங்கி வரச் சொல்வாள். அவனிடம் எல்லா வேலைகளையும் வாங்கி வேலைக்காரன் வைத்துக் கொள்ளாமல் பணத்தை மிச்சப்படுதுவாள்.

வீடு திரும்பிய வேலு "மேடம் வெள்ளரி அரை கிலோ பன்னிரண்டு ரூபாய்க்குத்தான் கிடைச்சுது " என்று சொல்ல வனஜாவோ "அதெல்லாம் எனக்கு தெரியாது அரை கிலோ பத்து ரூபாய் தான், அதனால கடைக்காரனிடமே திருப்பி கொடுத்துடு! " என்றதுமில்லாமல் கொடுத்தனுப்பிய பத்து ரூபாயையும் திரும்ப கேட்டாள்.

" பரவாயில்லைங்க மேடம் அதை நானே வீட்டுக்கு எடுத்துக்கிட்டு போறேன்" என்று சொன்ன வேலுவிடம் ---

"சரி அதிலிருந்து ரெண்டு வெள்ளரி கொடு "ஸாலாட்" செய்ய தேவை" என்று வனஜா கேட்டு வாங்கிக்கொள்ள--

" பணக்கார்கள் எப்படி மேலும் மேலும் பணம் சேர்த்துக்கொண்டே போகிறார்கள் என்று இப்போதுதான் புரிஞ்சது!" -- தனக்குள் சொல்லிக்கொண்டான் வேலு.


-- வெங்கட் நாகராஜ்

[சர்வேசன்500 – நச்னு ஒரு கதை 2009 – போட்டிக்காக எழுதிய கதை]

http://surveysan.blogspot.com/2009/09/500-2009.html

செவ்வாய், 3 நவம்பர், 2009

கொய்யா மரம்நெடு நாட்களாக கல்லூரி நண்பர் ஒருவர் அவரது வீட்டிற்கு வரும்படி அழைத்துக் கொண்டிருந்தார். ஏனோ சந்தர்ப்பம் சரியாக அமைய வில்லை. திடீரென ஒரு நாள் அவரைக் காண அவரது இல்லத்திற்கு சென்றேன்.

அழகான ஒரு வீதி. வீதியின் இரு புறங்களிலும் வரிசையாக தனித்தனி வீடுகள். அவரது இல்லத்தினை கண்டுபிடித்து செல்வது ஒன்றும் கஷ்டமாக இல்லை. அமைதியான சூழலில் மரம், செடி கொடிகள் நிறைந்த ரம்மியமான ஒரு தோட்டம். தோட்டத்தின் நடுவினில் இருந்தது அவரது வீடு.

வீட்டின் வெளியே இருந்த கதவினை திறந்து உள்ளே சென்று அழைப்புமணியை ஒலித்தேன். அவரது குரல் மட்டும் வந்தது. திண்ணையில் காத்திருந்தேன். வாசலில் ஒரு பெரிய கொய்யா மரம் தன்னுடைய கிளைகளை படர விட்டு நிறைய பழங்களை தாங்கியபடி நின்று இருந்தது. நானும் மரங்களில் இருக்கும் பறவைகளின் "கீ கீ" குரல்களில் லயித்து இருந்தேன்.

திரும்ப அவரது குரல் மட்டும் கேட்டது. வீட்டில் இருந்து குரல் வராமல் எங்கோ ஆகாயத்தில் இருந்து வருவது போலத் தோன்றவே, மேலே பார்த்தால், பை நிறைய கொய்யா பழங்களுடன் மரத்தில் இருந்து இறங்கி வந்து கொண்டு இருந்தார் அந்த கல்லூரித் தோழி. அதிர்ச்சியுடன் பார்த்த என்னை அவர் மரத்தில் இருந்து இறங்கியதும் கேட்ட கேள்வி "ஏன் பொண்ணுங்க மரம் ஏறக்கூடாதோ?".

அந்த பெண் இன்று கல்யாணம் முடித்து இரண்டு குழந்தைகளுக்குத் தாய். எனக்குத் தெரிந்து மரம் ஏறத் தெரிந்த ஒரே பெண் அவர் தான் என நினைக்கிறேன்.