West Bengal லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
West Bengal லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 14 மார்ச், 2017

சாப்பிட வாங்க – ராதா வல்லபி


ராதா Bபல்லபி

இந்த வாரம் சாப்பிட வாங்க பகுதியில் ஒரு பெங்காலி உணவு பார்க்கலாலாமா… இந்த உணவின் பெயர் ராதா வல்லபி! ஏதோ பெண் பெயராக இருக்கே என்ற குழப்பத்தில் வந்தவர்களுக்கு ஒரு புன்னகை பரிசு! நான் வல்லபி என எழுதி இருந்தாலும் பெங்காலிகள் இதைப் படிப்பது Bபல்லபி! என்று தான் – அவர்களுக்கு ”வ”, ”வரலாம் வா, வரலாம் வா” என்றாலும் வராது! வ எல்லாமே Bப தான்! வெங்கட் – Bபெங்கட்! மாதிரி வல்லபி – Bபல்லபி! சரி அது என்ன ராதா Bபல்லபின்னு பார்க்கலாமா….

திங்கள், 6 மார்ச், 2017

கொல்கத்தா – பழசும் புதுசும் – எகோ பார்க்!



ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 102

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.


நீர் நிலையில் Cruise பயணம்

கொல்கத்தா என்றதும் எங்கே பார்த்தாலும் இருக்கும் மக்கள் கூட்டமும், அழுக்கும் மட்டுமே என்று நினைத்திருப்பவர்களில் நானும் உண்டு. கொல்கத்தா நகரம் என்றதுமே எல்லா இடங்களிலும் வெற்றிலைச் சாறை துப்பி சிவப்பாக வைத்திருப்பார்கள் என்று சொல்லுவது உண்டு! அந்தச் சிவப்பு பல வருடங்களாக அவர்களுக்குப் பழகிப் போன வண்ணம் என்றும் சொல்லலாம்.  பழைய கொல்கத்தா அழுக்காகவே இருக்க, புதிய கொல்கத்தாவை இழைத்து வைத்திருக்கிறார்கள்.  பல அடுக்கு மாடிக் கட்டிடங்கள், பூங்காக்கள் என அழகாய் இருக்கிறது.  அப்படி ஒரு பூங்காவிற்கு தான் நாங்கள் சென்றிருந்தோம்.

நீர் நிலை.....

அந்தப் பூங்கா Eco Park என அழைக்கப்படும் பூங்கா. சுமார் 480 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பூங்கா 2012-ஆம் ஆண்டு தான் திட்டமிடப்பட்டு அமைத்திருக்கிறார்கள். மிகவும் நன்றாகவே பராமரிக்கிறார்கள். நடைபாதைகள், புல்வெளி, சைக்கிள் பாதைகள், நீர் விளையாட்டுகள் என பல விஷயங்கள் இங்கே உண்டு. குடும்பத்துடன் சைக்கிள் - இரண்டு பேர் அமர்ந்து பெடல் செய்யக்கூடிய Duo சைக்கிள்கள் வைத்திருக்க, அவற்றில் சைக்கிள் ஓட்டும் பல ஜோடிகளைப் பார்க்க முடிந்தது. படகுச் சவாரி, பலூன் சவாரி என நிறைய விஷயங்கள் – பெரும்பாலான குடும்பத்தினர் தங்களது பொழுதைப் போக்க இங்கே வந்து விடுகிறார்கள். 


பூங்காவில் நண்பர்களுடன்....

பூங்காவிற்குச் செல்ல நுழைவுச் சீட்டு உண்டு – 20 ரூபாய் மட்டுமே. காமிராவுக்கு தனியே கட்டணம் கிடையாது! நிறைய பூஞ்செடிகள், புல்வெளிகள் இருக்க, பலரும் செல்வி புள்ளைகளாக – செல்ஃபி எடுத்த வண்ணமே இருக்கிறார்கள்.  திங்கள் கிழமைகள் தவிர மற்ற எல்லா தினமும் மாலை நேரங்களில் [02.30 PM to 08.30 PM on week days and 12.00 Noon to 08.30 on Sundays and Holidays] திறந்திருக்கும் இந்தப் பூங்காவிற்கு பழைய கொல்கத்தாவிலிருந்து நிறைய மக்கள் வந்து போகிறார்கள். நாங்களும் இந்தப் பூங்காவிற்குச் சென்று சிறிது நேரம் அமர்ந்து மக்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்.  எங்கள் பயணத்தின் கடைசி நாள் இன்று தான் என்பதால் – பதினைந்து தினங்களில் பார்த்த இடங்கள், கிடைத்த அனுபவங்கள் ஆகியவற்றை மனதுக்குள் அசைபோட நல்லதொரு வாய்ப்பு.


பூங்காவின் வெளியே நடைபாதைக் கடைகள்....

Toy Train, Ice Skating, Archery, Baby Cycling, Bird Watching, Cruise, Duo Cycling, E-byke, floating pontoon, Laser Bumpi Boat, Paddle Boating, Roller Skates, Water Cycling, Water Zorbing, Speed Boat என பல விஷயங்கள் இங்கே உண்டு.  ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித குஷி தரும் விஷயம். குறிப்பாக குடும்பத்துடன் வருபவர்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என அனைவருக்கும் பிடித்த ஏதாவது ஒரு விளையாட்டு/பொழுதுபோக்கு இங்கே இருப்பதால் பொழுது நன்றாக போகும்.  நுழைவுச் சீட்டு 20 ரூபாய் மட்டுமே என்றாலும், இந்த பொழுது போக்கு அம்சங்களுக்கான கட்டணம் தனி என்பதையும் இங்கே சொல்ல வேண்டும்.


நீர் நிலையில் இப்படி பயணம் செய்யலாம்!

இந்தப் பூங்காவினைச் சுற்றி நிறைய புதிய விஷயங்களை ஆரம்பித்திருக்கிறார்கள்.  குறிப்பாக Floating Musical Fountain, Butterfly garden, Bamboo Garden, Fruits Garden, Food Court, Tea Garden, Mask Garden, Formal Garden மற்றும் Wax Museum  என புதியதாக அமைக்கப்பட்ட விஷயங்கள் ஏராளம். நிறைய கட்டிடங்கள், அகன்ற சாலைகள் என புதிய கொல்கத்தா நன்றாகவே நிர்மாணித்து இருக்கிறார்கள். இவை அனைத்தும் தீதி என அழைக்கப்படும் மம்தா முதலமைச்சராக வந்த பிறகு நடந்த விஷயங்கள்.


தண்ணீருக்குள்ளும் சைக்கிள் ஓட்டலாம்! 

நிறைய நேரம் அங்கே அமர்ந்து கதைகள் பேசி அந்த நாளை இனிமையாகக் கழித்துக் கொண்டிருந்தோம்.  அடுத்த நாள் கொல்கத்தாவிலிருந்து கேரள நண்பர்கள், திருவனந்தபுரத்திற்குப் புறப்பட, நான் மட்டும் தலைநகர் தில்லி புறப்பட வேண்டும். பதினைந்து நாட்கள் பயணம் முடியப்போகிறதே என்ற வருத்தம் இருந்தது.  இனிமையான பயணமாக இருந்தாலும் முடிவுக்கு வந்தாகத்தானே வேண்டும். அடுத்த நாள் புறப்படுவதால், வீடு திரும்பும் கேரள நண்பர்கள் வீட்டிற்கு ஏதாவது இனிப்பு வாங்க வேண்டும் என்று சொல்ல, பெங்காலி நண்பரை அழைத்தேன். 


ஏலேலோ ஐலேசா...  

மேற்கு வங்கம் இனிப்புக்குப் பெயர் போனதாயிற்றே… வங்காளிகள் இனிப்பு இல்லாமல் இருக்கவே மாட்டார்கள். அதிகாலை நேரத்தில் கூட இனிப்பு கொடுத்தால் வேண்டாம் என்று சொல்லாமல் இனிப்பு சாப்பிடுபவர்கள் அவர்கள்.  இனிப்புக்குப் பெயர்போன ஊரிலிருந்து வீடு செல்லும் போது வாங்கிச் செல்லாமல் இருப்பது நல்லதல்லவே! நேராக நண்பர் சொன்ன கடைக்குச் சென்று தேவையான இனிப்பு வகைகளை வாங்கிக் கொண்ட பின்னர் நேரே தங்கி இருக்கும் இடத்திற்கு வந்தோம்.   

தங்கும் விடுதிக்கு அருகே இருந்த உணவகத்தில் இரவு உணவு முடித்துக் கொண்டு, விடுதிக் காப்பாளரிடம் அடுத்த நாள் காலையில் எங்களுக்கு விமானநிலையம் செல்ல வண்டி தேவை என்பதைச் சொல்லி, அறைக்கான வாடகையும் கொடுத்து உறங்கச் சென்றோம். அடுத்த நாள் என்ன நடந்தது என்பதை வரும் பகுதியில் சொல்கிறேன்!

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

புதன், 1 மார்ச், 2017

கொல்கத்தா – அன்னை இல்லம்…..


ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 101

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.



Acharya Jagdish Chandra Bose Botanic Garden சென்று அங்கே இருந்த Great Banyan Tree பார்த்த பிறகு நாங்கள் சென்ற இடம் பற்றிச் சொல்வதற்கு முன்னர் சில விஷயங்கள் பார்ப்போம்….

26 ஆகஸ்ட் 1910 – அல்பேனியா நாட்டிலுள்ள ஸ்கோபியே [Skopje] எனும் இடத்தில் பிறந்தவர் Gonxha Agnes…. பெற்றோர்கள் Nikola and Drane Bojaxhiu. எட்டு வயதிலேயே தந்தையை இழந்த அக்னேஸ் தாயின் அரவணைப்பில் வளர்ந்தார்.  இளம் வயதிலேயே அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனப்பாங்குடன் இருந்தவர் 18-வயதில் தனது நாட்டை விட்டு வெளியேறி அயர்லாந்து சென்றார். அங்கே மூன்று மாதங்கள் இருந்த பிறகு இந்தியா/கொல்கத்தா வந்து சேர்ந்தார். பெண்களுக்கான ஒரு பள்ளியில் கல்வி கற்பித்தார். எந்த பள்ளியில் ஆசிரியராக இருந்தாரோ அப்பள்ளியின் தலைமை ஆசிரியராகவும் ஆனார். 



செப்டம்பர் 10, 1946 அன்று, கொல்கத்தாவிலிருந்து டார்ஜிலிங்க் நகருக்கு ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தபோது அவரது மனதில் ஒரு எழுச்சி, உட்தூண்டல்…. நாம் பிறந்ததன் காரணம் என்ன? நாம் இப்படியே இருந்துவிடக்கூடாது, அனைவருக்கும் பயன் தரக்கூடிய விதத்தில் இருக்க வேண்டும் என ஒரு அமைப்பினைத் துவங்கினார்.  இரண்டு வருடங்கள் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. ஏழை எளியவர்கள், நோயாளிகள், கைவிடப்பட்ட முதியவர்கள் என ஒவ்வொரு நாளும் அடுத்தவர்களுக்கு உதவி செய்வது வழக்கமாயிற்று.



கிட்டத்தட்ட 87 வருடங்கள் உயிர்வாழ்ந்து, அதுவும் அடுத்தவர்களுக்காகவே உயிர்வாழ்ந்து பல சீரிய பணிகளைச் செய்து செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி தன்னுடைய உடல் நீத்தார்….. 



Gonxha Agnes என்ற இயற்பெயரைக் கொண்ட இவரை நாம் வேறு பெயரில் அறிவோம்… அது அன்னை தெரசா….. பூங்காவிலிருந்து புறப்பட்ட நாங்கள் அடுத்ததாய்ச் சென்ற இடம் ஆசார்ய ஜகதீஷ் சந்திர போஸ் சாலையில் அமைந்திருக்கும் அன்னை இல்லம்.  தினமும் காலை பத்து மணி முதல் மாலை ஆறு மணி வரை திறந்திருக்கும் இந்த இல்லத்திற்குச் சென்று அன்னை தெரசாவின் கல்லறை அருகே சில நிமிடங்கள் மௌனமாக அமர்ந்திருந்தோம். அவர் எத்தனை எத்தனை மக்கள் மீது அன்பு செலுத்தி இருக்கிறார் என்று யோசித்துக் கொண்டே இருந்தோம்.



அவர் இருந்த சிறிய அறை, அவர் பயன்படுத்திய பொருட்கள் என அனைத்தையும் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.  அனைத்தையும் நின்று நிதானித்து பார்த்த பிறகு வெளியே வந்தோம்.  ஆங்காங்கே அன்னையின் பொன்மொழிகளை எழுதி வைத்திருக்கிறார்கள். எங்கும் அமைதி. அன்னையின் பொன்மொழிகள் உள்ள புத்தகங்களை – பல மொழிகளில் வெளியிட்டு இலவசமாக விநியோகம் செய்கிறார்கள். கூடவே அன்னை இல்லத்தின் வாசலில் ஒரு தகவல் – அன்னையின் இல்லத்திற்காக காசு கொடுங்கள் என கேட்பவர்களிடம் ஏமாந்து விடாதீர்கள் என்பது தான் அது!

அன்னை தெரசாவின் அறைக்கு வெளியே...

மனதில் ஒரு வித அமைதியுடன் வெளியே வர ஒரு முதிய பெண்மணி வாசலில் நின்று கொண்டிருந்தார்.  குழந்தைகளுக்கு பால் பவுடர் வாங்க வேண்டும், நீங்கள் கொடுக்கும் பணம் அன்னை இல்லத்திற்கு உதவியாக இருக்கும் என்றார். உள்ளே தகவல் பதாகை பார்த்திருந்தாலும் முதியவராக இருக்கிறாரே என்று நண்பர் பத்து ரூபாய் தர, “பால் பவுடர் வாங்க ஐநூறு ரூபாய் தேவை, கொடுக்கலாமே” என்கிறார். நீங்கள் அன்னை இல்லத்தில் உதவியாளரா, உங்களுக்கு அடையாள அட்டை ஏதும் உண்டா? என்று நண்பர் கேட்க, இல்லத்திலிருந்து ஒரு கன்னிகாஸ்திரி சகோதரி வெளியே வர, முதிய பெண்மணி “எஸ்ஸானார்….”!

அன்னை இல்லம் செல்லும் வழி...

எந்த இடமாக இருந்தாலும், ஆண்டவன்/கடவுள்/மதம் என்ற பெயரில் இப்படி யாராவது மனிதர்களின் பக்தியை வைத்து பணம் பறிக்க முயற்சிக்கிறார்கள்.  அது எந்த மதமாக இருந்தாலும்.  இந்தியாவின் பல பகுதிகளில் இருக்கும் வழிபாட்டுத் தலங்களில் இப்படி பார்த்திருக்கிறேன் – அது எந்த மதத்தின் வழிபாட்டுத் தலமாக இருந்தாலும் இப்படியே – இதில் மாற்றமில்லை. இப்படி ஏமாற்றுவதில் இருக்கும் ஒற்றுமை, அனைவரையும் நேசிக்க வேண்டும் என்பதில் அனைத்து மதத்தினரிடம் இருந்துவிட்டால் மதக் கலவரமே இருக்காது! ஆனால்…. 

மனதில் ஒரு வித அமைதியுடன் அன்னையின் வரலாற்றைப் படித்த படியே அன்னை இல்லத்திலிருந்து வெளியேறினோம். அடுத்ததாய் நாங்கள் சென்ற இடம் என்ன இடம் என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

டிஸ்கி:  பதிவு எண் - 1300!  இத்தனை பதிவுகள் எழுத எனக்கு ஆதரவு அளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. 

திங்கள், 27 பிப்ரவரி, 2017

கொல்கத்தா – பிரம்மாண்ட ஆலமரம்…..


ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 100

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.

The Grate Banyan Tree....


பாலம்.....

இந்தியா அருங்காட்சியகம் பார்த்த பிறகு நாங்கள் சென்ற இடம் Acharya Jagdish Chandra Bose Botanic Garden. கொல்கத்தா என்று சொன்னாலும், இந்த பூங்கா இருக்கும் இடம் ஹௌரா பகுதியில் தான் இருக்கிறது.  கொல்கத்தா பகுதியிலிருந்து புதிய தொங்கு பாலம் வழியாக பல சாலைக் காட்சிகளைப் பார்த்தபடியே நாங்கள் பூங்காவிற்குச் சென்ற போது மதிய நேரம்.  வழியில் எங்காவது சாப்பிடலாம் என ஓட்டுனரிடம் சொன்னபோது வண்டியை சாலையோரத்தில் நிறுத்தி ஏதோ ஒரு சாலையோர உணவகத்தில் சாப்பிடச் சொன்னார். பார்க்கும்போதே எங்களுக்கு அந்த இடமும் சூழலும் பிடிக்காமல் போக, எதிர் புறத்தில் இருந்த ஒரு கடையில் கொஞ்சம் நொறுக்குத் தீனி சாப்பிட்டு லஸ்ஸி குடித்து மதிய உணவை முடித்துக் கொண்டோம். 


வழியில் பழுதாகி நின்ற ட்ராம்....



அங்கிருந்து புறப்பட்டு பூங்காவிற்குச் சென்றால் வெளியே வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே நடந்து தான் செல்ல வேண்டும். பூங்கா அமைந்திருப்பது மிகப் பெரிய பரப்பளவில்! கொஞ்சம் நஞ்சமல்ல அதன் பரப்பளவு – 109 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்கா இந்தியாவில் அமைக்கப்பட்ட முதல் பூங்காவும் ஆகும். பல நாடுகளிலிருந்து தருவிக்கப்பட்ட 12000 வகைகளுக்கு மேலான மரங்கள், செடிகள் என இங்கே இருக்கிறது. எங்கு பார்த்தாலும் பச்சைப்பசேலென இருக்கும் இந்த இடத்திற்குள்ளே பல நீர்நிலைகளும் உண்டு. மரங்கள், நீர்நிலைகள் ஆகியவை இருக்கும்போது பறவைகளுக்குப் பஞ்சமா என்ன…. வருடா வருடம் இங்கே வரும் பறவைகள் எண்ணிக்கை அதிகம் தான்.



இத்தனை மரங்களும் நீர்நிலைகளும் இருந்தாலும், இந்தப் பூங்காவிற்கு வரும் பலரும் பார்க்க நினைப்பது இங்கே இருக்கும் பிரம்மாண்டமான ஆலமரத்தினை தான்.  The Great Banyan என அழைக்கப்படும் இந்த ஆலமரத்தின் வயது 250 வருடங்களுக்கு மேல் இருக்கும் என்று சொல்கிறார்கள்.  வயது தவிர, உலகிலேயே பரப்பளவில் மிக அதிக இடத்தினைக் கொண்டது இந்த ஆல மரம் என்றும் சொல்கிறார்கள்.  ஆலமரத்தின் விழுதுகள் பல இடங்களிலும் வேறூன்றி இருந்தாலும் முதல் முதலாக இருந்த தண்டுப் பகுதி இப்போது இல்லை – 1925-ஆம் ஆண்டே அதன் தண்டுப் பகுதி அகற்றப்பட்டு விட்டது.



இரண்டு மிகப்பெரிய புயல்களில் சிக்கிய இந்த மரத்தின் தண்டுப் பகுதியில் பூஞ்சை பிடிக்க அதனால் தான் அதை 1925-ஆம் ஆண்டு அகற்றி இருக்கிறார்கள்.  இப்போது, மண்ணில் புதைந்து மரத்தைத் தாங்கிக் கொண்டிருக்கும் விழுதுகளின் எண்ணிக்கை மட்டுமே 3618! மொத்த மரத்தின் சுற்றளவு மட்டுமே 450 மீட்டர்! அதாவது கிட்டத்தட்ட அரை கிலோமீட்டர் அளவு பரந்து விரிந்திருக்கிறது இந்த ஆலமரம்! Great Banyan என்ற பெயர் பொருத்தமானது தானே!



இந்த மரத்தின் பரப்பளவு கிட்டத்தட்ட 15665 சதுர மீட்டர்! இந்த கணக்கெல்லாம் எடுத்தது 31 மே 2013 – அதாவது நான்கு வருடங்களுக்கு முன்னர்! இந்த நான்கு வருடங்களில் மேலே சொன்ன அளவுகள் அனைத்துமே அதிகமாகி இருக்க நிறையவே வாய்ப்புண்டு.  எவ்வளவு நேரம் நின்று அங்கே அந்த ஆலமரத்தினைப் பார்த்துப் பிரமித்து நின்றிருப்போம் என்று சொல்ல முடியவில்லை. அவ்விடத்தினை விட்டு அகலவே மனதில்லை.  இவ்வளவு பெரிய மரத்தில் எத்தனை பறவைகள் வந்து போகும், ஒவ்வொரு பறவைக்கும் இருக்கும் கதை, எந்தெந்த தேசத்திலிருந்து வந்திருக்கும் என்றெல்லாம் யோசித்துக் கொண்டே அங்கே புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தோம். 



கின்னஸ் புத்தகத்திலும் இந்த ஆலமரத்திற்கு ஒரு இடம் உண்டு என்பதையும் அங்கே தகவல் பலகையில் எழுதிப் போட்டிருக்கிறார்கள். பூங்காவின் மற்ற பகுதிகளில் இருக்கும் நீர்நிலைகள், பல்வேறு மரங்கள் என அனைத்தையும் சுற்றி வந்து பார்க்கிறார்களோ இல்லையோ, இங்கே வரும் அனைவருமே பார்க்க விரும்பும் ஒன்று இந்த Great Banyan Tree தான்.  நாங்கள் சென்றிருந்தபோதும் நிறைய சுற்றுலாப் பயணிகளைப் பார்க்க முடிந்தது.  பூங்காவின் ஊழியர்கள் இந்த மரத்தினை ரொம்பவும் சிரத்தை எடுத்து பாதுகாக்கிறார்கள் என்பதையும் பார்க்க முடிந்தது. 




முழு பூங்காவினையும் சுற்றி வந்ததில் எங்காவது அமர்ந்து கொண்டால் போதும் என்று இருந்தது எங்களுக்கு! ஆனாலும், அமர்வதற்கு சரியான இடம் இல்லை. நீர்நிலைகளுக்கு அருகில் புல் தரைகளும், சில இருக்கைகளும் இருந்தாலும், பெரும்பாலான இடங்களில் காதல் ஜோடிகள் அமர்ந்து கொண்டு மூக்கை மூக்கை உரசிக் கொண்டிருக்க, நாங்கள் – நாங்கள் என்பது இங்கே ஐந்து பேர் – அனைவரும் ஆண்கள் – அங்கே சென்று அமர்ந்தால் சரியாக இருக்காது என்பதால் எங்கும் அமரவில்லை.  ஆலமரத்தின் அருகே அமர்ந்து கொள்ளலாம் என்றால், அங்கே ஏதோ பராமரிப்பு வேலை என எல்லாவற்றையும் தோண்டிப் போட்டிருந்தார்கள்! சரி இவ்வளவு நடந்தாயிற்று, இன்னும் கொஞ்சம் நடந்து வாகனம் நிறுத்துமிடத்திற்கு வந்து வாகனத்திற்குள் அமர்ந்து கொள்ளலாம் என முடிவு செய்து விட்டோம். 



நாங்கள் பூங்காவிலிருந்து புறப்பட்டு அடுத்ததாய் சென்ற இடம், அது என்ன இடம்…. அடுத்த பகுதியில் சொல்கிறேன்……

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

டிஸ்கி: இந்தத் தொடரின் 100-வது பகுதி! இன்னும் சில பதிவுகளில் இத்தொடர் முடியும்!



சனி, 25 பிப்ரவரி, 2017

கொல்கத்தா – இந்தியா அருங்காட்சியகம் – ஒரு பார்வை


ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 99

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.



விக்டோரியா மெமோரியல் பார்த்த பிறகு நாங்கள் சென்றது கொல்கத்தா நகரில் உள்ள பழமையான அருங்காட்சியகம் – இந்தியா அருங்காட்சியகம் என அழைக்கப்படும் இது, மிகவும் பழமையானது – இந்தியாவில் அமைக்கப்பட்ட முதல் அருங்காட்சியகம் – 1814-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.  இன்றைக்கு நாடு முழுவதும் சுமார் 400 அருங்காட்சியகங்கள் இருக்கின்றன என்று பார்க்கும்போது அதற்கு வித்திட்ட முதல் அருங்காட்சியகம் நிச்சயம் அனைவரும் பார்க்க வேண்டிய இடம் என்பது புரியும்.  1814 – அதாவது இன்றைக்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்னரே முதல் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருக்கிறது!



வாசலில் புல்லாங்குழல் வியாபாரி ஒருவர் தனது மனதில் இருக்கும் இசையை குழலின் வழி வெளியேற்றி, கேட்பவர்களை தனது இசையால் மயக்கிக் கொண்டிருந்தார்.  Asiatic Society என்ற அமைப்பினால் தொடங்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில் பல தனிமனிதர்கள் வசம் இருந்த புராதானப் பொருட்கள் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டன. பல வருடங்கள் கழித்து, அரசாங்கமே அருங்காட்சியகத்தினை எடுத்து நடத்த வேண்டும் என்ற வேண்டுகோள் வைக்கப்பட்டு, பல கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு 1 ஏப்ரல் 1878 ஆம் ஆண்டு, சௌரிங்கி பகுதியில் தற்போது இருக்கும் கட்டிடத்தில் இரண்டு விதமான காட்சியகங்களுடன் அரசாங்கத்தின் பொறுப்பில் வந்தது இந்தியா அருங்காட்சியகம்.



அருங்காட்சியகத்தின் உள்ளே சென்று பார்க்க தேவையான கட்டணத்தினைக் கொடுத்து, [கேமராவிற்கு தனிக் கட்டணம் உண்டு!] உள்ளே நுழைந்தோம். பல பிரிவுகளாகத் தடுத்து ஒவ்வொரு பகுதியிலும் தனித்துவமான விஷயங்களை காட்சிப்படுத்தி வைத்திருக்கிறார்கள். புராதனச் சிலைகள், நாணயங்கள், பொருட்கள் என ஒரு அறையில் இருந்தால், வேறு அறையில் பல்வேறு மிருகங்களின் எலும்புக்கூடுகள், அவற்றின் தலைப்பகுதி, பற்கள், நகங்கள் என தனித்தனியே காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். அழிந்து போன டைனசோர் எலும்புக்கூடு ஒன்றும் இங்கே உண்டு. 




அத்தனை பெரிய மிருகங்களின் முழு உருவ எலும்புக்கூடுகளைப் பார்க்கும்போது பிரமிப்பாக இருந்தது.  இத்தனை விஷயங்களை ஒரே இடத்தில் வைத்து பாதுகாப்பது என்பது மிகவும் சவாலான ஒரு விஷயம். அதுவும் அழிவிலிருந்து பாதுகாப்பது தவிர, வரும் பார்வையாளர்களிடமிருந்தும் காப்பாற்றி வைக்க, அங்கிருக்கும் பணியாளர்கள் போராட வேண்டியிருக்கிறது.  தொடாதே என எழுதி வைத்தால், நிச்சயம் தொட்டுப் பார்க்க வேண்டும் என நினைக்கும் மக்கள் நிறையவே உண்டு இங்கே.  செல்ஃபி எடுக்கிறேன் பேர்வழி என எலும்புக்கூடை கட்டிப்பிடிக்க முயற்சி செய்தார் ஒரு இளைஞர்!



பல்வேறு பகுதிகள், பல தலைப்புகளில் சேகரித்து வைக்கப்பட்ட பொருட்கள் என முழு அருங்காட்சியகமும் பார்க்கக் குறைந்தது மூன்று மணி நேரமாவது உங்களுக்குத் தேவை. நின்று நிதானித்துப் பார்க்க வேண்டுமெனில் அரை நாளாவது அவசியமாக இருக்கும்.  எத்தனை எத்தனை சிலைகள், அதில் பல சேதப்படுத்தப்பட்ட நிலையில்.  பார்க்கும்போது நமக்கே கஷ்டமாக இருக்க, அந்தச் சிலைகளை செய்த சிற்பி இன்று பார்த்தால் நிச்சயம் ரத்தக்கண்ணீர் வடிப்பார்.  தலைகள் துண்டிக்கப்பட்டு, கை-கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் இருக்கும் சிலைகளைப் பார்க்கும்போது மனதில் ஒரு வலி உண்டாவதை தடுக்க முடியவில்லை.





எகிப்து நாட்டின் புகழ்பெற்ற “மம்மி” ஒன்றும் இங்கே இருக்கிறது. இந்தியா தவிர வேறு சில நாடுகளின் பொருட்களும் இங்கே சேகரித்து வைத்திருக்கிறார்கள் என்பது சிறப்பு. அனைத்து அறைகளிலும் இப்படியான விஷயங்கள் நிறையவே உண்டு என்பதால் நின்று நிதானித்து ஒவ்வொன்றாக பார்க்க வேண்டியிருக்கும்.  உங்களுடைய விருப்பம் எந்த அறையில் இருக்கிறது என்பதை நுழையும்போதே கேட்டு வைத்துக் கொண்டால் அந்த இடத்திற்கு மட்டும் சென்று நிதானமாகப் பார்க்க முடியும். இல்லை என்றால் எல்லா அறைகளுக்கும் சென்று வரலாம்.




கொல்கத்தா சென்றால் கட்டாயமாகப் பார்க்க வேண்டிய இடங்களில் இந்த இந்தியா அருங்காட்சியகத்தினையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.  அருங்காட்சியகத்தின் பின்னர் அமைந்திருந்த ஒரு உணவகத்தில் தேநீர் அருந்தி மீண்டும் சில அறைகளைச் சுற்றிப் பார்த்த பிறகு நாங்கள் வெளியே வந்தோம்.  அங்கிருந்து எங்கே சென்றோம் என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்!
  
தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

குறிப்பு:  இங்கே சென்றபோது ஒரே ஒரு காமிராவுக்கு மட்டும் டிக்கெட் வாங்கலாம் எனச் சொல்லி, எனது காமிராவில் புகைப்படம் எடுக்காமல் விட்டோம்.  அதனால் நான் இங்கே புகைப்படம் எடுக்கவில்லை என்பதில் வருத்தமுண்டு! நண்பர் எடுத்த புகைப்படங்களில் பல ஒழுங்காக இல்லை! 

செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

கொல்கத்தா – விக்டோரியா நினைவிடம் – இந்திய மக்களின் செலவில்!


ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 98

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.

சற்றே இடைவெளிக்குப் பிறகு பயணத்தொடரின் அடுத்த பகுதிக்கு வருகிறேன்…. அதனால் சென்ற பதிவின் கடைசி சில வரிகள் உங்கள் நினைவூட்டலுக்காக….

பெரும்பாலும் ஆடுகளை மட்டுமே இங்கே பலி கொடுக்கிறார்கள். ஆட்டின் பின்பக்கத்தில் சிலர் ஆட்டைப் பிடித்துக் கொள்ள பெரிய கத்தியால் ஒரே வெட்டு… கழுத்தும் உடலும் தனியாகும். வெட்டிய பிறகு சில நிமிடங்கள் வரை துடிக்கும் உடலைப் பார்க்காமல் வெளியே வருவார்கள் அனைவரும் – ஆடு இறந்தது உறுதியான பிறகு அந்த ஆட்டின் தலை மீது சூடம் வைத்து காளிக்கு ஒரு ஆரத்தி…. அதன் பிறகு ஆட்டின் தலை பூஜாரிக்கு – உடல் பகுதி முழுவதும் பலி கொடுத்தவருக்கு… அதை அவர் கிராமத்து மக்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கிறார். இப்படித்தான் மிருக பலி நடக்கும் என்பதை விவரித்து நண்பர் சொன்னதைக் கேட்டு சில நிமிடங்கள் ஆடிப்போயிருந்தேன் நான்.  கொடுமையான விஷயம்……

எப்போதுமே பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கிறது இந்த காளி Gகாட் கோவில். காலை ஐந்து மணி முதல் மதியம் இரண்டு மணி வரையும், மாலை ஐந்து மணி மணி முதல் இரவு பத்தரை மணி வரையும் கோவில் திறந்திருக்கும். முடிந்த போது பார்த்து வரலாம். 

கோவில், கோவில் பகுதிகளில் இப்படி பல விதக் காட்சிகளைப் பார்த்து அங்கிருந்து புறப்பட்டோம்.  அடுத்ததாய் நாங்கள் சென்ற இடம் என்ன என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்…..

இதோ அடுத்த பகுதிக்கு வந்துவிட்டோம்…..

விக்டோரியா மெமோரியல் ஹால்...

கொல்கத்தா நகர் என்றதுமே பலருக்கும் நினைவுக்கு வருவது ராணி விக்டோரியாவின் நினைவிடம்.  நம்மை இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் ஆண்ட பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தினைச் சேர்ந்த ஒருவரின் நினைவிடமாக இருந்தாலும், இந்த கட்டிடத்தினுள் பல அரிய பொருட்களையும் சேமித்து வைத்திருக்கிறார்கள்.  கொல்கத்தா சென்றால் பார்க்க வேண்டிய இடங்களும் மிகவும் முக்கியமான இடத்தில் இருப்பது இந்த விக்டோரியா மெமோரியல்.  

கம்பீரமாக வீற்றிருக்கும் ராணி....

கட்டிடம் முழுவதுமே மார்பிள் கற்களால் மிகவும் அற்புதமாக வடிவமைக்கப்பட்ட இந்த விக்டோரியா மேமோரியல் ஹால், 1901-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இறந்து போன ராணி விக்டோரியாவின் நினைவாக அமைக்க முடிவு செய்தவர் அப்போதைய வைஸ்ராயாக இருந்த லார்டு கர்சன். 6 ஃபிப்ரவரி 1901 அன்று நடந்த ஒரு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. விக்டோரியா ராணியின் நினைவிடமாக மட்டுமல்லாது இந்தியாவின் பழம்பெருமையையும் பறைசாற்றும் அருங்காட்சியகமாகவும் அமைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டதாம்…. இதில் ஒரு சூட்சுமமும், திட்டமும் உண்டு! அது….

விக்டோரியா மெமோரியல் ஹால் பகுதியில் அமைந்த பூங்காவும் நீர்நிலையும்...

இந்த நினைவிடத்தினைக் கட்ட தேவையான பணத்தினைத் திரட்ட Indian Memorial Fund என்ற ஒன்றை ஏற்படுத்தி மக்களிடமிருந்தே வசூல் வேட்டை நடந்தது. அப்படி வசூலிக்கப்பட்ட தொகை ஒரு கோடியே ஐந்து லட்ச ரூபாய்!  அதாவது 1901-ல் – இன்றைக்கு கிட்டத்தட்ட 116 வருடங்களுக்கு முன்னர்! அதன் இன்றைய மதிப்பு எவ்வளவாக இருக்கும் என்பதை உங்களுடைய கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்!  இங்கிலாந்து ராணிக்கு நினைவிடம் அமைக்க இந்திய மக்களிடமிருந்தே பண வசூல்! அப்போதைய வேல்ஸ் இளவரசரான ஐந்தாம் ஜார்ஜ் அவர்கள் 4 ஜனவரி 1906 அன்று அடிக்கல் நாட்ட, விக்டோரியா மெமோரியல் ஹால் கட்டி முடிக்க கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் ஆனது!  1921-ஆம் ஆண்டில் மக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது….

விக்டோரியா மெமோரியல் ஹால்...
வெளிப்புற மார்பிள் சிற்பங்கள்....

அழகான கட்டிடக் கலை, உள்ளே இருக்கும் பலவித சரித்திரப் புகழ் சொல்லும் பொருட்கள், வித்தியாசமான கலைப் பொருட்கள், பழங்கால புத்தகங்கள் என பார்க்க வேண்டிய நிறைய விஷயங்கள் என கிட்டத்தட்ட 30000 பொருட்கள் இங்கே இடத்தில் உண்டு. கிட்டத்தட்ட 57 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த நினைவிடம் திங்கள் கிழமைகள், அரசு விடுமுறை தினங்கள் தவிர வருடம் முழுவதும் திறந்திருக்கும் இந்த இடத்தின் பணி நேரம் காலை 10 மணி முதல் மாலை ஐந்து மணி வரை.  இங்கே 21 பூங்காக்களும் அமைந்திருக்கின்றன. நினைவிடம் அமைந்திருக்கும் முகவரி 1, Queen’s Way, Kolkata. இங்கே உள்ளே சென்று பார்க்க நுழைவுக்கட்டணமும் உண்டு – இந்தியர்களுக்கு ரூபாய் 20, வெளிநாட்டவர்களுக்கு ஒரு பூஜ்ஜியம் சேர்த்து ரூபாய் 200/-. தவிர கேமராவிற்கும் கட்டணம் உண்டு!

விக்டோரியா மெமோரியல் ஹால்...
வேறு நுழைவாயில்!

விக்டோரியா மெமோரியல் ஹால் முன்னர் நண்பர்களுடன்... 


விக்டோரியா மெமோரியல் ஹால்...
வேறொரு கோணத்தில்....


விக்டோரியா மெமோரியல் ஹால்...
குறுக்கு வெட்டுப் பார்வையாக.....


விக்டோரியா மெமோரியல் ஹால்...
காத்திருக்கும் குதிரை வண்டிகள்....


விக்டோரியா மெமோரியல் ஹால்...
முன்புறத்தில் இருக்கும் இரட்டை சிங்கங்களில் ஒன்று!


விக்டோரியா மெமோரியல் ஹால்...
சுவர் சிற்பங்களில் ஒன்று....

விக்டோரியா மெமோரியல் ஹால்...
மார்பிள் சிற்பங்களில் ஒன்று.....


முழுவதும் பார்க்க நினைப்பவர்கள் அரை நாளாவது இந்த இடத்திற்காக ஒதுக்குவது நல்லது. கொல்கத்தா சென்றால் நிச்சயம் சென்று பார்த்து வரலாம்! விக்டோரியா மெமோரியல் ஹால் வாசலில் நிறைய குதிரை வண்டிகள் நிறுத்தி வைத்திருக்கிறார்கள் – அதில் அமர்ந்து ராஜ பவனி வரலாம் – மனதுக்குள் உங்களை ராஜாவாகவோ, அல்லது ராணியாகவோ நினைத்துக் கொண்டு என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம்! நாங்கள் சென்றபோது நிறைய குதிரைக்காரர்கள் எங்களை சூழ்ந்து கொண்டார்கள் – குதிரை ஒன்று எங்களைப் பார்த்து மிரள, எதற்கு அதைப்படுத்த வேண்டும் என, நாங்கள் எங்கள் வாகனத்தில் பவனி வந்தோம்!

ராணி விக்டோரியா மெமொரியல் ஹால் பார்த்த பிறகு நாங்கள் சென்ற இடம் எது, அங்கே என்ன பார்த்தோம் என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்……

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.