அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு கதம்பம் பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. முகநூலில் எழுதிய இற்றைகளின் தொகுப்பு ஒன்று - அங்கே வாசிக்காதவர்களின் வசதிக்காகவும், எனது சேமிப்பிற்காகவும் இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன்.
இதற்கு முன்னர் வெளியிட்ட Lahaul Spiti Circuit Trip - பகுதி ஐந்து பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
ஆரி - மகளின் கைவண்ணம் - 3 ஜூன் 2026 :
இணைய வழியில் அவள் கற்றுக் கொண்ட ஆரி வேலைப்பாடில் பிளவுஸில் கைகளுக்கு, பின்கழுத்துக்கு என்று முழுவதுமாக வடிவமைத்திருக்கிறாள்!❤️ ❤️
******
அம்மா - 09 ஜூன் 2026 :
அவள் இவ்வுலகை விட்டு மறைந்து 22 வருடங்கள் அதிவேகமாக கடந்து சென்று விட்ட மாயமென்ன! அம்மா என்றால் கடின உழைப்பு, சுறுசுறுப்பு, மனோ தைர்யம், தியாகம் என்று அவளைப் பற்றி நிறைய சொல்லலாம்! என்னவோ ஒரு அவசரம் அவளுக்கு இவ்வுலகை விட்டு சிறகடித்து பறந்து செல்வதற்கு! எங்கேயோ சந்தோஷமா இரும்மா! நான் எதையும் ஏற்றுக் கொண்டு வாழப் பழகி ரொம்ப வருஷமாச்சு! 🙏 🙏
******
பரீட்சை - 09 ஜூன் 2026 :
சமஸ்கிருத மொழியை ஆன்லைனில் கற்கத் துவங்கி இரண்டு வருடங்களாகி விட்டது! இதுவரை நான்கு நிலைகளை நல்லமுறையில் தேர்ச்சி பெற்று கடந்து வந்திருக்கிறேன்! படிக்கும் போது நன்றாக இருக்கிறது ஆனால் பரீட்சை என்று வந்துவிட்டால் ஏனோ பதட்டமும், கவலையும் என்னைத் தொற்றிக் கொள்கிறது…:) இரண்டு யூனிட் டெஸ்ட்டுகள், ஃபைனல் எக்ஸாம் என்று ஆறு மாதத்தில் மாற்றி மாற்றி தேர்வு களேபரத்தில் மாட்டிக் கொண்டு விடுகிறேன்..🙂 ஞாயிறன்று இறுதித் தேர்வு எழுதி விட்ட ஆயாசத்தில் தான் இப்போது பதிவிடுகிறேன்..🙂
******
நாராயணீயம் - 09 ஜூன் 2026 :
மேல்பத்தூர் நாராயண பட்டத்ரி அவர்கள் இயற்றிய 1036 ஸ்லோகங்கள் கொண்ட தொகுப்பே ஸ்ரீமந் நாராயணீயம் என்று அழைக்கப்படுகிறது! கிபி16ஆம் நூற்றாண்டில் அவதரித்த நாராயண பட்டத்ரி அவர்கள் தன் குருவிடம் இருந்த தீராத வாதநோயை அவரிடமிருந்து தன் யோக நிலையின் மூலம் பெற்றார்! வாதநோயுடன் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்த அவர் பகவான் கிருஷ்ணனின் மேல் கொண்ட பக்தியில் குருவாயூரப்பன் சன்னிதியில் பாடல்களை இயற்றினார் என்றும் தன் நோயிலிருந்து முற்றிலும் மீண்டார் என்றும் அறியப்படுகிறது!
இத்தனை சிறப்பு வாய்ந்த நாராயணீயத்தை ஆன்லைன் மூலம் கற்றுக் கொள்ள எனக்கு வாய்ப்பு அமைந்திருக்கிறது! இதற்காக நான் நெடுநாட்களாக ஆவலுடன் காத்திருந்தேன் என்று தான் சொல்லணும்! இறைவனின் அருளால் எல்லாம் நல்லதாக நடக்கணும்!
******
பக்குவம் - 09 ஜூன் 2026 :
ஒரு காலைநேர பரபரப்பில்!
எத்தனையோ வேலை நெருக்கடிகளுக்கு நடுவில்!
ஒரு வேலைக்கு இரண்டு வேலையாக செய்யவேண்டிய சூழலில்!
சட்டென்று நிமிடப் பொழுதில்
அதை தூக்கி குப்பையில்
எறிந்து விட்டு செல்லாமல்!
அந்த செயலை நின்று நிதானத்துடன்
கையாளவும் செயல்படவும்
சந்தர்ப்பங்கள் வந்துவிடுகிறது!
அதையே இந்த உலகில்
பக்குவம் என்று சொல்கிறார்கள்…:)
********
இன்றைய கதம்பம் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
திருவரங்கம்
11 ஜுன் 2026






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....