திங்கள், 31 ஜனவரி, 2011

[G]கூமர் நடனம்



சில மாதங்களுக்கு முன் ”கத்புத்லி” என்ற இடுகையில் ராஜஸ்தானிய நடனமான ”[G]கூமர் நடனம்” பற்றி பின்னர் எழுதுகிறேன் என்று எழுதியிருந்தேன். அதற்கு இப்போது தான் வேளை வந்திருக்கிறது! [”சோம்பேறித்தனம் என்று சொல்லாமல் இப்படி ஒரு சமாளிப்பு தேவையா?” என்று யாரோ முணுமுணுப்பது கேட்கிறது!]

”[G]கூமர் நடனம்” என்பது ராஜஸ்தானிய பெண்களால் அவர்கள் ஊரில் நடக்கும் திருவிழா, கண்காட்சி போன்ற இடங்களில் ஆடப்படும் ஒரு வகை நடனம். இதை ஆடும் பெண்கள், பல சுருக்கங்கள் வைத்து, கண்ணாடி வேலைப்பாடு செய்த நீண்ட பாவாடையும் சட்டையும் [Ghagra-Choli] போட்டுக் கொண்டுச் சுற்றிச் சுற்றி ஆடுவார்கள். தாளத்திற்கு ஏற்ப அவர்கள் அப்படி ஆடும்போது அவர்கள் காட்டும் வேகம் சில சமயங்களில் சுழல் காற்றைப் போல இருக்கும். YOUTUBE-ல் கிடைத்த ஒரு [G]கூமர் நடனத்தின் காணொளி கீழே.


எந்த நிகழ்ச்சியில் நடனம் ஆடுகிறார்களோ அதற்கு ஏற்றார்ப் போல அவர்களது கால்கள் இடும் தாளங்களும் மாறுபடும். கைகளைச் சுற்றியும், நடுநடுவே கை கொட்டியும், தலையின் மேலே மூன்று-நான்கு மண்பானைகளை வைத்தவாறும் ஆடும் இந்த ஆட்டம் மாலையில் ஆரம்பித்து சில சமயங்களில் நடுநிசி வரை கூட நடக்குமாம்! சமயங்களில் தரையில் இரு குவளையை வைத்து அதன் மேல் இரு கால்களை வைத்து நின்றபடி கூட ஆடுகின்றனர்.

அவர்களுடைய ஆட்டம் காண்பவர்களையும் ஆடத்தூண்டும் விதமாக இருக்கும். சில விழாக்களில் நான் இந்த நடனத்தினைக் கண்டு களித்திருக்கிறேன். ஒரு ஜெய்ப்பூர் பயணத்தின் போது மாலை வேளையில் நடந்த இந்த நடனத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு வெளி நாட்டைச் சேர்ந்தவரும் அவர் மனைவியும் இதில் ரொம்பவே மெய்மறந்து அவர்களுடன் ஆட ஆரம்பித்து விட்டனர்.

அந்த வெளிநாட்டுத் தம்பதி ராஜஸ்தானிய நடனக் கலைஞர்களின் ஒவ்வொரு நடன அசைவுகளையும் தொடர முயல, உற்சாகத்தில் கலைஞர்கள் இன்னும் கடினமான நடன அசைவுகளைத் தர, அதையும் இவர்கள் தொடர என உற்சாகமான ஒரு போட்டி நடந்தேறியது. குழுமியிருந்த அத்தனை பேரும் இந்த போட்டி நடனத்தினை ரசித்தனர்.

அந்த நடனத்தினை நான் எடுத்த காணொளி உங்களுக்காய் கீழே. மாலை வேளை, மற்றும் குறைந்த வெளிச்சம் என்பதால், காணொளியில் அவ்வளவாக வெளிச்சம் இல்லை! நீங்கள் நிச்சயம் இந்த நடனத்தினைப் பார்த்து ரசிப்பீர்கள் என நினைக்கிறேன்.


மீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திக்கிறேன்.

வியாழன், 27 ஜனவரி, 2011

மறக்க முடியுமா இந்த கல்லூரி சுற்றுலாவை ஆயுசுக்கும்?



நெய்வேலி ஜவஹர் அறிவியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது இரண்டு சுற்றுலாக்கள் சென்றோம்.  முதலாவது சுற்றுலா திருச்சிக்கும், இரண்டாவது சுற்றுலா பொள்ளாச்சி, ஆழியார் அணை, குரங்கு நீர்வீழ்ச்சி, திருமூர்த்தி ஹில்ஸ், பழனி போன்ற இடங்களுக்கும்.

முதலாவதை விட இரண்டாவது மறக்க முடியாத விதத்தில் அமைந்தது.  எங்களது கணிதத்துறை பேராசிரியர் திரு தங்கராஜ் அவர்களின் திருமணம் பொள்ளாச்சியில் நடக்க ஏற்பாடாகியிருந்தது.  அங்கு செல்லும் போது அருகில் உள்ள மற்ற இடங்களையும் பார்க்க ஒரு சுற்றுலா ஏற்பாடு செய்து, நெய்வேலியில் தனியார் பேருந்துகள் இல்லாததால், பாண்டிச்சேரியில் இருந்து பேருந்து எடுத்துச் சென்றோம்

முதல் மூன்று நாட்கள் தொந்தரவு ஏதுமின்றி பாட்டு, கூத்து, கும்மாளம் என அருமையாக கழிந்தது.  பழனி வழியாக நெய்வேலி திரும்பிக் கொண்டிருந்தபோதுதான் தெரிந்தது சதாம் ஹுசைன் குவைத்தை தன்னகப்படுத்தியதன் காரணமாக தமிழகமெங்கும் பெட்ரோல், டீசல் கடுமையான தட்டுப்பாடு என்று.

பழனி அருகே ஒட்டன்சத்திரத்தின் அருகில் வரும்போது எங்கள் பேருந்தின் ஓட்டுனர் டீசல் அங்கேயே வாங்கிக் கொள்ளலாம் என்று சொல்லி மலைப்பாம்பு கிடப்பதைப் போன்ற வண்டிகளின் வரிசையில் நிறுத்தியபோது இரவு பன்னிரண்டு மணி.  நீண்டு நெளிந்து சென்ற வரிசையில் எங்கள் பேருந்து இருந்தது பெட்ரோல் நிலையத்திலிருந்து சுமார் இருபது கிலோ மீட்டருக்கு அப்பால்.  பேருந்து நின்று கொண்டிருந்த இடமோ ஆள் அரவமில்லாத அத்வான காடு போல இருந்தது.  பேருந்து முழுவதும் பத்து மாணவர்களும், முப்பது மாணவிகளும்.  கண்களில் பயம் தெரியாமல் இருந்தாலும் நெஞ்சு முழுக்க திக்..திக்..திக்

அங்கே திருட்டுத்தனமாக பதுக்கல் டீசல் வியாபாரமும் கன ஜோராக நடந்து கொண்டிருந்தது.  தோழர் ஒருவர் பதுக்கல் காரர்களுடன் தனியாக டீசல் வாங்கச் சென்று, டீசல் கிடைக்காமல், ”தலை தப்பியது தம்புரான் புண்ணியம்என சாகசமாக தப்பி வந்தது தனிக் கதை

பிறகு மண்ணெண்ணையும் என்ஜின் ஆயிலும் கலந்து டீசலுக்கு பதிலாக ஊற்றி கரும்புகையை கிளப்பியபடி ஒருவழியாக நான்காம் நாள் இரவு நெய்வேலி வந்து சேர்ந்தோம்.

எல்லா நண்பர்களும் மிகவும் சோர்ந்து விட்டதால் அனைவரையும்  அவரவர் வீட்டில் இறக்கி  விட்டுவிட்டு,  நான் மட்டுமே அப் பேருந்திலேயே பாண்டி சென்று கணக்கை முடித்த போது இரவு இரண்டு மணி.   

பின்னர் பாண்டிச்சேரியிலிருந்து கடலூர் செல்லும் பேருந்தில் அமர்ந்து பயணச்சீட்டு வாங்கியபின் (கைப்பையில் நிறைய பணத்துடன்) அசதியில் நன்றாக தூங்கி விட்டேன்.  பேருந்திலிருந்த பயணிகளை கடலூர் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்ட பிறகு பஸ் டிப்போவில் பேருந்தினை விட்டு விட்டுச் சென்றுவிட்டார்கள் போலிருக்கிறது நடத்துனரும் ஓட்டுனரும்நான் பேருந்தினுள் ஒரு மூலையில்  அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது தெரியாமல்.  நான்கு மணி சுமாருக்கு ஏதோ சத்தம் கேட்டு விழித்தால் நான் இருந்த  பேருந்தினை சுத்தம் செய்து கொண்டிருந்தார் ஒருவர்

தமிழ்த் திரைப்படங்களில் ஹீரோ-ஹீரோயின்கள் கேட்பது போலநான் எங்கே இருக்கேன்? எனக் கேட்டதற்கு, அந்த சுத்தம் செய்து கொண்டிருந்த தொழிலாளி சொன்னது இன்னும் காதில் ரீங்காரித்துக் கொண்டிருக்கிறது.  “என்னதான் பாண்டிச்சேரியில தண்ணி விலை குறைவா இருந்தாலும் இப்படியா தம்பி தண்ணி அடிக்கிறது?  இதிலே நான் எங்க இருக்கேன்னு கேள்வி வேற! சீக்கிரம் இறங்குய்யா, வண்டி எடுக்க நேரமாச்சு"--ன்னு சத்தமாகச்  சொன்னார்”.


[இந்த புகைப்படம் 2009-ல் குரங்கு நீர்வீழ்ச்சி சென்ற போது எடுத்தது] 

"சரி இன்னிக்கி நாம முழிச்ச நேரம் சரியில்லே போல" என்று மனதில் வருந்திக்கொண்டே வெளியே வந்து ஒரு சோடா வாங்கி, அதில் ஒரு சொட்டைக் கூட  குடிக்காமல் அதாலேயே   முகம் கழுவிக்கொண்டு நெய்வேலி பேருந்து பிடித்து, கண்ணை அகல விரித்துப் பிடித்தபடியே  வீடு வந்தபோது நன்றாக விடிந்து விட்டிருந்தது.


இருபது வருடங்கள் ஆனாலும், இப்போதும் அப்பயணம் நினைவில் நிற்கிறது