ஜல்லிக்கட்டு....
படம்: இணையத்திலிருந்து....
ஒட்டகம்
பார்த்திருக்கிறீர்களா? பாலைவன/வறண்ட பகுதிகளில்
ஒட்டகங்கள் வாழ்கின்றன என்பதை நீங்கள் படித்திருப்பீர்கள். நேரடியாக பார்த்திருக்காவிட்டாலும், புகைப்படங்களில்,
காணொளிகளில் பார்த்திருக்க முடியும். ஒரு சராசரி
ஒட்டகத்தின் உயரம் – முதுகில் இருக்கும் திமில் பகுதியில் 7 முதல் 8 அடி வரை கூட இருக்கும். கால்கள் மட்டுமே ஐந்தடிக்கு மேல் இருக்கும் இந்த
ஒட்டகங்களை இந்தியாவின் ராஜஸ்தான், குஜராத் பகுதிகளில் நிறையவே பார்க்க முடியும். இத்தனை உயரமாக இருக்கும் ஒட்டகங்களை மிருக வதை செய்து
கீழே அமரவைத்து, அதன் மேல் போட்டிருக்கும் இருக்கைகளில் மனிதர்கள் அமர வைத்து ஒரு ரவுண்ட்
வருவது இப்பகுதிகளில் மிகவும் பிரபலம்!
ஒவ்வொரு
முறை கீழே அமர்ந்து எழும் போதும் பிரம்மப் பிரயத்தனம் செய்து தான் அந்த ஒட்டகம் எழுந்திருக்கிறது!
அதுவாக உட்கார்ந்தால் பரவாயில்லை, மனிதர்களை அமர வைப்பதற்காக ஒவ்வொரு நாளும் பல முறை
இப்படி தொடர்ந்து கீழே அமர்வதும், மனிதர்கள் மேலே அமர்ந்ததும் அதை எழ வைத்து, ஐம்பது
அடி நடக்க வைத்து, மேலே அமர்ந்த மனிதர்கள் இறங்குவதற்கு வசதியாக மீண்டும் கீழே அமர வைப்பதும்
தொடர்ந்து நடக்கும் ஒரு செயல். சராசரியாக ஒவ்வொரு
ஒட்டகமும் ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான முறை கீழே அமர்ந்து மேலே எழுந்திருக்க வேண்டும்.
“உட்டக்,
பைட்டக்” என்று ஒரு உடற்பயிற்சி – அதாங்க, கீழே அமர்ந்து மீண்டும் எழுவது – பள்ளிகளில்
மாணவர்களுக்கு முன்பெல்லாம் இந்தத் தோப்புக்கரணம் தண்டனையாக தருவதுண்டு! பத்து முறை
உட்கார்ந்து எழுந்திருப்பதற்குள் தாவு தீர்ந்து விடும்! நூறு முறை செய்வதென்றால் எப்படி
இருக்கும்! அதுவும் ஒட்டகம் போன்று இத்தனை உயரமாக இருக்கும் ஒரு விலங்கினை மனிதன் தன்
இஷ்டப்படி உட்கார வைத்து எழுப்பி விடுவது எவ்வளவு கடினமாக இருக்கும் அந்த ஒட்டகத்திற்கு!
இப்படி உட்கார வைக்க ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள் – அந்த வார்த்தை – “ஜூ.....”
ஜூ….
ஜூ… என்று சொல்லிச் சொல்லி அந்த ஒட்டகம் தனது கால்களை நான்காக மடித்து மனிதர்கள் அதன்
மீது கால் தூக்கிப் போட்டு உட்கார ஏதுவாய் இருக்கும் வரை ஜூ ஜூ எனச் சொல்லியபடியே இருக்கிறார்கள்!
ஜூவில் [ஆங்கில Zoo] தான் மிருகங்களை அடைத்துக் கொடுமைப் படுத்துகிறார்கள் என்றால்
இங்கேயும் ஜூ…. ஜூ…..
உட்கார
இத்தனை அவதிப்படுத்துவது போலவே ஒட்டகத்தினைக் கட்டுப்படுத்த ஒரு கயிறு உண்டு – நம்
ஊர் காளைகளுக்கு மூக்கணாங்கயிறு போல ஒட்டகத்திற்கும் மூக்கணாங்கயிறு! எனக்குத் தெரிந்து
மூக்கு துவாரம் வழியே கயிறு மட்டும் தான் மாட்டுக்கு உண்டு. இங்கே ஒட்டகத்திற்கு அந்த
மூக்குத் துவாரத்திற்கு அருகே ஒரு கூர்மையான, தடிமனான இரும்புக் கம்பி அடித்து அதில்
கயிறு மாட்டுவார்கள்! எவ்வளவு வலி இருக்கும்
அந்த ஒட்டகத்திற்கு! எப்படி இருக்கும் என்று கேட்பவர்களுக்காகவே க்ளோஸ்-அப்-ல் எடுத்து
இருப்பதை இங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறேன்….
சமீபத்திய
பயணம் ஒன்றில் எடுத்த ஒட்டகம் படங்கள் – இந்த ஞாயிறில் இதோ உங்களுக்காக! பார்க்கும்போது
அவை படும் கஷ்டம் உங்களுக்கும் புரியும் என்பதற்காகவே இந்த படங்கள்! இந்தக் கஷ்டங்கள்
தவிர, சமீப காலமாக இறைச்சி உண்பவர்கள், ஒட்டகங்களையும் விட்டுவைக்கவில்லை. ஒட்டகத்தின்
இறைச்சியையும் சாப்பிடுகிறார்களாம்! ஒரு ஒட்டகத்தின் எடை சுமாராக 650 கிலோ வரை இருக்குமாம்.
அப்புறம் என்ன, ஒரு ஒட்டகத்தினை அடித்து இறைச்சி எடுத்தால் ஒரு ஊரே சாப்பிடலாம் என
சாப்பிடுகிறார்கள் போலும்…..
இப்படி
எல்லா மிருகங்களையும் வதை செய்யும்போது அதை எல்லாம் பற்றி கேட்காதவர்கள், ஜல்லிக்கட்டு
சமயத்தில் மாடுகளை வதைக்கிறார்கள் என்று பேசுவதை என்னவென்று சொல்வது! இதோ நான் எடுத்த
சில படங்கள்…..
மூக்கணாங்கயிறுக்காக குத்தப்பட்ட கம்பி....
பார்க்கும்போதே நம் மனதுக்குள்ளும் வலி....
இத்தனை உயரமான ஒட்டகத்தினை.....
இப்படி உட்கார வைப்பது வதை இல்லையா?
”என்ன
நண்பர்களே, இந்த வாரத்தின் படங்களை ரசித்தீர்களா?” என்று கேட்கப் போவதில்லை…. அவதிப்பட்டு
அமர்ந்திருக்கும் ஒட்டகத்தினை ரசிக்கவா முடியும்! இல்லை இப்படி அந்த ஒட்டகத்தினைக்
கேட்கவா முடியும்! கேட்டால், இன்னுமொரு முறை எழுந்து பின்னங்கால்களால் ஓங்கி உதைத்தாலும்
உதைக்கும்…..
அடுத்த
ஞாயிறன்று வேறு புகைப்படங்களை பகிர்ந்து கொள்கிறேன்…
மீண்டும்
ச[சி]ந்திப்போம்….
நட்புடன்
வெங்கட்
புது
தில்லி.
