அரக்கு பள்ளத்தாக்கு – பகுதி 20
அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில்
“அரக்கு பள்ளத்தாக்கு” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!
கைலாசகிரி மலையுச்சியிலிருந்து கடல்....
ஒற்றைக் கை அம்மன் கோவிலிருந்து
புறப்பட்டு உணவகம் – வேறெங்கு – தஸபல்லா தான்! – மதிய உணவு சாப்பிட்ட பிறகு எங்கள்
அடுத்த இலக்கு நோக்கி பயணித்தோம் – அந்த இடம் – விசாகப்பட்டினம் கடலருகே அமைந்திருக்கும் கைலாச கிரி! 360 அடி மலை உச்சியிலிருந்து கடற்கரை, விசாகப்பட்டினம்
நகரம் ஆகிய இரண்டையும் கழுகுப் பார்வையில் பார்க்க ஒரு சிறப்பான வாய்ப்பு உங்களுக்கு
கிடைக்க இந்த கைலாச கிரி மலைக்குச் செல்லலாம். விசாகப்பட்டினம் வரும் அனைத்து சுற்றுலா
பயணிகள் தவிர, பெரும்பாலான விசாகப்பட்டின நகரவாசிகளும் தங்களது மாலைப் பொழுதுகளை இனிமையாகக்
கழிக்க தேர்ந்தெடுக்கும் இடம் இந்த கைலாச கிரி. அழகிய பூங்கா, சிறுவர்களுக்கான விளையாட்டு
வசதிகள், பாரா கிளைடிங், மலையைச் சுற்றிவர ஒரு சிறு இரயில் வண்டி, என பல விஷயங்கள்
இங்கே மக்களை மகிழ்ச்சிப்படுத்த அமைத்திருக்கிறார்கள். குதிரை சவாரி செய்யவும் இங்கே
வசதிகள் உண்டு.


