எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, July 15, 2017

ஆயிரத்து ஒன்று ஸ்ரீசக்ர மேரு – ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோவில்


அரக்கு பள்ளத்தாக்கு – பகுதி 6

அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “அரக்கு பள்ளத்தாக்கு” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!


ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன்.....

ஸ்ரீமுகலிங்கம் எனும் அருமையான, புராதனமான கோவிலுக்கு அழைத்துச் சென்ற ஸ்ரீகாகுளம் அலுவலக ந[ண்]பர், அங்கிருந்து புறப்படும்போது ஸ்ரீகாககுளத்தில் இருக்கும் இடத்திற்குச் சென்று அங்கிருந்து விசாகப்பட்டினம் செல்லலாம் என்று சொல்ல அதற்கும் சரி என்றே சொன்னோம். எப்படியும் அந்த அலுவலக ந[ண்]பரை ஸ்ரீகாகுளத்தில் இறக்கி விட வேண்டும் [அவரது பைக் நாங்கள் மதியம் சாப்பிட்ட உணவகத்தில் நிறுத்தி இருக்கிறதே!] அதனால் நாங்கள் அவர் சொன்ன இடத்திற்கும் சென்று பிறகு விசாகப்பட்டினம் நோக்கிய பயணத்தினைத் தொடரலாம் என்று சொல்ல, எங்கள் வாகனம் அவர் வழிகாட்டலில் ஸ்ரீகாகுளத்திலுள்ள ஒரு இடத்திற்குச் சென்றது.  அந்த இடம்…..மஹா மேரு.....
ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் கோவில்.....

ஸ்ரீ தேவி ராஜராஜேஸ்வரி ஆஸ்ரமம், குஞ்சால கூர்மய்ய பேடா, ஸ்ரீகாகுளம் எனும் இடத்தில் இருக்கும் ஸ்ரீராஜராஜேஸ்வரி கோவில். அங்கே என்ன சிறப்பு என்று கேட்க, வந்து பாருங்கள் தெரியும் என்று சொன்னார் அந்த ந[ண்]பர்! முன்பு பார்த்த கோவில்கள் புராதனமான கோவில் என்றால், இப்போது பார்க்கப் போவது சமீபத்திய கோவில்! சமீபத்திய கோவில் என்று பார்க்கும்போதே தெரிகிறது – வழவழ தரைகளும் அலங்காரங்களும் கோவில் புதியது என்பதைச் சொல்லாமல் சொல்கிறது.  இங்கே என்ன சிறப்பு என்பதைப் பார்க்க நாங்களும் அக்கோவிலுக்குச் சென்றோம். ஸ்ரீகாகுளம் நெடுஞ்சாலையிலிருந்து சற்றே ஒதுங்கி, சாதாரண மண்பாதையில் சென்றால் கோவில் தெரிந்தது.


பூஜை செய்யும் பக்தைகள்....
ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் கோவில்.....

இங்கே ராஜராஜேஸ்வரி கோவில் அமைந்திருக்கிறது. 1001 ஸ்ரீசக்ர மேரு என அழைக்கப்படும் மஹா மேரு இங்கே ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு பெரிய மண்டபத்தின் நடுவே மிகப்பெரிய அளவில் ஸ்ரீசக்ரத்தின் மீது மஹா மேரு அமைந்திருக்க அதன் நான்கு புறங்களில் வரிசை வரிசையாக 1000 மஹாமேரு சிறிய அளவில் அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த 1000 மஹாமேருவும் நடுவே உள்ள பெரிய அளவு மஹாமேருவுடன் செம்புக் கம்பிகளால் இணைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொன்றும் செம்புக் கம்பிகளால் இணைக்கப்பட்டதால் ஒரு மேருவுக்குச் செய்யும் பூஜையானது 1001 மஹாமேருவிற்குச் செய்யப்படும் பூஜைக்குச் சமமானது என்பது தான் இதன் தாத்பர்யம்.


சமீபத்திய பூஜை ஒன்றின் போது...
ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் கோவில்.....

ஸ்ரீசக்ர மஹிமை

அபிராமி அந்தாதியிலிருந்து ஒரு பாடல்….

வெளி நின்ற நின் திருமேனியைப் பார்த்து, என் விழியும் நெஞ்சும்
களி நின்ற வெள்ளம் கரை கண்டதில்லை, கருத்தினுள்ளே
தெளி நின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ?
ஒளி நின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.

பொருள்: ஒளி பொருந்திய நிலையான ஒன்பது முக்கோணங்களில் வீற்று இருப்பவளே! வடிவம் எடுத்த உன் திருமேனியைக் கண்டதும் என் கண்ணும், கருத்தும் கரை காணா இன்பம் அடைந்தது! எனக்குள் தெளிவான மெய்ஞானம் பெருகுகின்றது. என்னே உன் திருவுள்ளம்!

ஸ்ரீசக்ர மஹிமை பற்றி மேலும் தெரிந்து கொள்ள நினைத்தால், மறைந்த பதிவர் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களின் இந்தப் பதிவில் பார்க்கலாம்…. அவர் மறைந்தாலும் அவர் எழுத்தும், பதிவுகளும் மறையாது அல்லவா….


சமீபத்திய பூஜை - மேலும் ஒரு படம்
ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் கோவில்.....

மண்டபத்தில் பல வண்ண ஓவியங்கள், சிற்பங்கள் என அழகாய் அமைத்திருக்கிறார்கள். கூடவே பராமரிப்பும் ரொம்பவே நன்றாக இருக்கிறது. எங்கும் சுத்தம். பளிச்சென்று வைத்து இருக்கிறார்கள். நாங்கள் சென்ற நேரம் கோவில் மூடுவதற்கான நேரம் என்பதால் அதிக நேரம் நின்று ஓவியங்களைப் பார்க்க இயலவில்லை.  எப்படியும் புகைப்படங்கள் எடுக்க அனுமதி இல்லை என்று சொல்லிவிட்டதால் கொஞ்சம் வேகமாகவே அங்கிருந்த காட்சிகளை மனக்கண்ணில் பதிந்து கொண்டேன்.  கோவிலுக்கு எங்களை அழைத்துச் சென்ற ந[ண்]பர் அங்கே அவ்வப்போது வந்து சேவை செய்பவராம். அதனால் கோவிலின் முக்கிய பூஜாரியிடம் எங்களை அறிமுகம் செய்து வைக்க, அவர் சிறிது நேரம் எங்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.பூஜை முடிந்த பிறகு....
ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் கோவில்.....

ஆயிரத்து ஒன்று மஹாமேருவைத் தொடர்ந்து வளாகத்தில் ஆயிரத்து ஒன்று சிவலிங்கம் அமைக்கும் பணியும் நடந்து கொண்டிருப்பதைச் சொன்னார். நாங்கள் சென்ற போது 108 சிவலிங்கங்கள் ஒரு பெரிய சிவலிங்கம் வடிவில் அமைக்கப்பட்டு இருப்பதைப் பார்க்க முடிந்தது. கோவிலுக்கு நன்கொடை ஏதும் தருவதென்றால் தரலாம் என்பதையும் சொல்ல ஒரு சிறு தொகையை நண்பர் கொடுக்க ரசீதும் தரப்பட்டது. பூஜாரி நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்த சமயத்தில் நான் தியானத்தில் ஆழ்ந்திருந்தேன் – கண்களை திறந்தபடியே! பெரும்பாலும் கோவில்களுக்குச் செல்லும் நேரத்தில் எனக்கென்று எதையும் வேண்டுவதில்லை – “எனக்கு என்ன நல்லது என்று ஆண்டவனுக்குத் தெரியாதா என்ன?”


இந்தப் பயணத்தில் எங்களுக்கு வழிகாட்டியாக வந்த ந[ண்]பர்.....

நண்பரின் அலைபேசி எண் அங்கே கொடுத்திருந்ததால், சமீபத்தில் நடந்த ஒரு பூஜையின் போது எடுத்த புகைப்படங்கள் WhatsApp மூலமாக அனுப்பி வைத்திருந்தார்கள்.  அந்தப் படங்களில் சில இப்பதிவில் சேர்த்திருக்கிறேன்.  விழா சமயத்தில் அவர்கள் புகைப்படம் எடுக்கலாம், ஆனால் வரும் பக்தர்கள் எடுக்கக் கூடாது என்று சொல்வது ஏன் என்று எனக்குப் புரியவில்லை! உங்களுக்குப் புரிகிறதா! பொதுவாகவே சில சட்ட திட்டங்கள் ஏன் எதற்கு என்பது நமக்குப் புரியாமலேயே இருக்கிறது! அது கோவிலாக இருந்தாலும் சரி, அரசியலாக இருந்தாலும் சரி!

அன்றைய நாளில் மதியம் முதல் எங்களுடனேயே இருந்து, எங்களுக்கு நல்ல அனுபவங்களைப் பெற உதவியாக இருந்த ந[ண்]பருக்கு எங்களது நன்றியைச் சொல்லி, உணவகத்தில் அவரை இறக்கி விட்டபிறகு விசாகப்பட்டினம் நோக்கி எங்கள் பயணத்தினைத் தொடர்ந்தோம். அங்கே சென்ற பிறகு இரவு உணவு எங்கே சாப்பிட்டோம் என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன்.

தொடர்ந்து பயணிப்போம்!

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.


24 comments:

 1. வெங்கட் ஜி! அருமையான படங்கள், தகவல்கள். உங்கள் பயண எழுத்துகளுடன் நாங்களும் பயணிக்கிறோம்...!!

  கீதா: இக்கோயிலைப் பற்றி அறிந்திருக்கவில்லை ஜி! இப்போதுதான் உங்கள் பதிவின் மூலம் அறிகிறேன். எனவே எங்கள் லிஸ்டில் இருக்கவில்லை....தகவலுக்கும் மிக்க நன்றி ஜி..

  //விழா சமயத்தில் அவர்கள் புகைப்படம் எடுக்கலாம், ஆனால் வரும் பக்தர்கள் எடுக்கக் கூடாது என்று சொல்வது ஏன் என்று எனக்குப் புரியவில்லை! உங்களுக்குப் புரிகிறதா!//
  ம்ஹூம்! புரியவில்லையே ஜி!! ஹஹஹ எனக்கும் இப்படி ஏற்பட்டதுண்டு. ஒரு கோயிலுக்குச் சென்ற போது படம் எடுக்கக் கூடாது என்றார்கள். ஆனால் இணையத்தில் அக்கோயிலின் படங்கள் அதுவும் உள்ளே உள்ள கடவுளர்களின் படங்கள் இருக்கின்றன...இது எப்படி என்று தெரியவில்லை. நான் அந்த குருக்களிடம் கேட்கவும் செய்தேன். அதற்கு அவர்கள் அப்படி வந்திருக்காது...நாங்களாகக் கொடுத்ததனால் வந்திருக்கலாம் என்றார். இது எப்படி இருக்கு??!!

  // பொதுவாகவே சில சட்ட திட்டங்கள் ஏன் எதற்கு என்பது நமக்குப் புரியாமலேயே இருக்கிறது! அது கோவிலாக இருந்தாலும் சரி, அரசியலாக இருந்தாலும் சரி!// ஆம் வெங்கட் ஜி! சரிதான். ஒரு சிலருக்கு ஒரு சட்டம், நம்மைப் போன்ற சாதாரண மக்களுக்கு ஒரு சட்டம் போலும். பல கோயில்களில், சுற்றுலா இடங்களில் படம் எடுக்க அனுமதி இல்லை ஆனால் இணையத்தில் இருக்கும்...எப்படி என்றுதான் தெரியவில்லை...அருமை ஜி தொடர்கிறோம்

  ReplyDelete
  Replies
  1. பல கோவில்களில்/அருங்காட்சியங்களில் இப்படித்தான்... அவர்களுக்கு மட்டுமே புரியும் சட்டங்கள்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 2. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. எழுத்தில் மிகச் சிறப்பாகவே
  சொல்லிப்போனாலும் படம் தரும்
  விளக்கம் அலாதிதான்

  மறக்காது நான் மிகவும்
  விரும்பித் தொடர்ந்த பதிவரின்
  இணைப்பையும் இணைத்த விதம்
  மனம் கவர்ந்தது

  ஆவலுடன் தொடர்கிறோம்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 4. >>> விழா சமயத்தில் அவர்கள் புகைப்படம் எடுக்கலாம், ஆனால் வரும் பக்தர்கள் எடுக்கக் கூடாது என்று சொல்வது ஏன் என்று எனக்குப் புரியவில்லை! உங்களுக்குப் புரிகிறதா!..<<<

  திருமலையிலும் இப்படித்தான்..
  சாதாரணமானவர்களிடம் கேமரா, செல்போன் இவற்றையெல்லாம் பறிமுதல் செய்து கொள்கிறார்கள்.. ஆனால் பிரபலங்கள் வந்தால் கொடிமரம் தாண்டியும் படங்களை எடுத்து வெளியிடுகின்றார்கள்..

  இந்த மாதிரி கிறுக்குத் தனம் பல இடங்களில் இருக்கின்றது..

  ReplyDelete
  Replies
  1. கிறுக்குத்தனம்.... - அதே தான்! அதை நாம் சொன்னால் கோபம் வரும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 5. அன்னை இராஜராஜேஸ்வரி எங்கள் குல தெய்வம். படங்களும் பகிர்வும் வெகு அருமை. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 6. துரை ஜி சொல்வது போல் அதிகாரம் இருந்தால் செல்லும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 7. அருமையான படங்களுடன் பயனுள்ள தகவல்கள் ...வாழ்த்துக்கள் வெங்கட் ஜி !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பிரசாத்.

   Delete
 8. மதுரைப் பயணத்தில் ஒரு கோவிலில் கருவறையை ஃபோட்டொ எடுக்க விரும்பினேன் குருக்கள் கூடாது என்றார் ஏன் என்று கேட்டதற்கு உங்கள் தாயின் கருவறையை படமெடுப்பீர்களா என்னும் தொனியில் ஏதோ சொன்னார் சிதம்பரத்தில் வீதி உலா வரும் தேரைக்கூட படம் எடுக்கக் கூடாதாம் ஒன்னுமே புரியலே கேட்டால் நம்மிடம்தான் தவறு போல் சொல்வார்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

   Delete
 9. சிறப்பு... மிகச் சிறப்பு...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 10. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 11. என்னைப் பொறுத்தவரையில் கோவில்களின் உள்ளே புகைப்படம் எடுப்பது கட்டுப்படுத்தப்பட வேண்டிய ஒன்றே! உண்மையான புகைப்பட ஈடுபாடுடைய உங்களைப் போன்ற புகைப்பட வல்லுநர்கள் மட்டுமே அனுமதிக்கப் பட வேண்டும். உரிய கட்டணம் வசூலிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம். கைப்பேசியில் புகைப்படம் எடுக்க கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது. அனுமதித்தால் பகவானும் அர்ச்சகரும் செல்பிக்கு போஸ் கொடுத்தே அயர்ந்து விடுவார்கள்.

  ReplyDelete
  Replies
  1. போஸ் கொடுத்தே அயர்ந்து விடுவார்கள்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 12. 1001 மகாமேரு அரிய கோவில்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....