எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, July 25, 2017

அரக்கு உங்களை வரவேற்கிறது – பத்மாபுரம் தோட்டம்


அரக்கு பள்ளத்தாக்கு – பகுதி 10

அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “அரக்கு பள்ளத்தாக்கு” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!


பூமழை பொழிந்தது...
அரக்கு பள்ளத்தாக்கில்....


அரக்கு இரயில் நிலையம் - அறிவிப்புப்பலகை
அரக்கு பள்ளத்தாக்கில்....

நான்கு மணி நேர இரயில் பயணம் முடிந்து நாங்கள் அரக்கு இரயில் நிலையத்தினை அடைந்தபோது காலை மணி 11.00. அரக்கு நிலையம் எங்கள் அனைவரையும் வரவேற்றது – சில்லென்ற காற்றுடன்! இரயில் நிலையத்தின் வெளியே மரங்கள் அடர்ந்திருக்க அவற்றில் இருந்த சிகப்புப் பூக்கள் எங்கள் மீது மழைபோல் பொழிந்தன! ஆஹா என்ன வரவேற்பு என்று மேலே பார்க்க, குரங்கார் உட்கார்ந்து கொண்டு மரக் கிளைகளை ஆட்டிக் கொண்டிருந்தார்! பூமாரி பொழிந்த குரங்காருக்கு நன்றி சொல்லி எங்கள் வழிகாட்டி என்ன சொல்லப் போகிறார் என்பதைக் கேட்கக் காத்திருந்தோம். இரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்து கூட்டமாய் நிற்க, இரயிலில் எங்களுடன் வந்த ஆந்திரப் பிரதேச சுற்றுலா நிறுவனத்தின் ஊழியர்கள் சிலரும் இருந்தார்கள்.
 

ஆங்காங்கே இப்படி தடைகள்....  எதற்கு?
அரக்கு பள்ளத்தாக்கில்....


சிற்பியின் கைவண்ணத்தில்.....
அரக்கு பள்ளத்தாக்கில்....

இரயிலில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் செய்பவர்களும், ஒரு நாள் சுற்றுப் பயணம் செய்பவர்களும் கலந்து இருந்ததால், இரண்டு நாள் பயணிகளைத் தனியாகவும், ஒரு நாள் பயணிகளைத் தனியாகவும் நிற்க வேண்டினார் வழிகாட்டி.  ஒரு நாள் பயணத்தில் இருப்பவர்கள் செல்ல இரண்டு பேருந்துகளும், இரண்டு நாள் பயணத்திட்டத்தில் இருப்பவர்கள் செல்ல ஒரு பேருந்தும் வந்து சேர்ந்தது. 2 X 2 பேருந்துகள் – AC வசதி இல்லை என்றாலும் நன்றாகவே இருந்தது. இரயிலில் என்ன முன்பதிவு எண்ணோ, அதே வரிசையில் பேருந்திலும் அமர்ந்து கொள்ளலாம் என்று சொன்னார் வழிகாட்டி. இரயில் நிலையத்தின் வெளியே இருந்த சாலையில் ஆங்காங்கே சில திடீர் செக்போஸ்ட்! மூங்கில் கழிகளை வைத்து சாலையை மறித்து நின்று கொண்டிருந்தவர்கள் அனைவரும் பெண்கள்! எதற்கு இந்த செக் போஸ்ட் என்பதை பிறகு சொல்கிறேன்.


பத்மாபுரம் தோட்டம் - நுழைவாயில்...
அரக்கு பள்ளத்தாக்கில்....


ஓய்வெடுக்க கூரை வேய்ந்த அமைப்பு...
அரக்கு பள்ளத்தாக்கில்....

பேருந்தில் நாங்கள் அனைவரும் ஏறிக்கொண்ட பிறகு எங்களை முதலில் அழைத்துச் சென்ற இடம் பத்மாபுரம் தோட்டம் – Padmapuram Botanical Garden! சுமார் 26 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தத் தோட்டம் அமைக்கப்பட்டது 1942-ஆம் ஆண்டு. இரண்டாம் உலகப் போரில் பங்குபெற்ற வீரர்களுக்குத் தேவையான காய்-கனிகளை கொடுப்பதற்காக அமைக்கப்பட்ட தோட்டம் என்று சொல்கிறார் எங்களுடன் வந்த வழிகாட்டி. பிறகு தோட்டக்கலைத் துறை வசம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிகிறது. பல வித மரங்கள், பூச்செடிகள், அழகிய சிலைகள், மர வீடுகள் என மிகச் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பூங்காவில் காணும் இடமெல்லாம் வித்தியாசமான பூக்கள்.  சில சிற்பங்களும் இடம் பெறுகின்றன.


லிச்சி மரம்....
அரக்கு பள்ளத்தாக்கில்....


நெடிதுயர்ந்த புற்று ஒன்று...
அரக்கு பள்ளத்தாக்கில்....

லிச்சி மரம், மாமரம், பலா மரம், மூங்கில்கள் என பலவும் இங்கே உண்டு. லிச்சி பழங்கள் மிகவும் சக்தி கொண்டவை. வடக்கில் நிறைய கிடைக்கும் இப்பழங்கள் இப்போது தமிழகத்திலும் சில மால்களில் கிடைக்கிறது. வடக்கே மட்டுமே பார்த்திருக்கும் இந்த லிச்சி பழத்தின் மரத்தினை இந்த பத்மாபுரம் தோட்டத்தில் பார்த்தபோது மகிழ்ச்சி. ஆனால் நாங்கள் பார்த்தபோது காய்வாடாகவே இருந்ததால் அத்தனை ருசியாக இல்லை! மாமரங்களில் இருந்த காய்கள் “வா வா” என அழைத்தாலும் பார்த்துக் கொண்டே இருக்கும் ஊழியர் முறைப்பது போலத் தோன்றவே மரத்தில் ஏறி பறிக்க முயலவில்லை! சில மரக் கிளைகள் தாழ்வாக இருக்க, அவற்றில் ஏறிவிடலாமா என்ற யோசனையும் தோன்றியது! நெய்வேலி வாழ்வில் மரம் ஏறிய பிறகு தலைநகரில் அப்படிச் செய்ய வாய்ப்பு கிடைப்பதில்லை! இழந்தவற்றில் இன்னும் ஒன்று!


மரவீடு ஒன்று....
அரக்கு பள்ளத்தாக்கில்....


பூ ஒன்று - பெயர் தெரிந்தால் பகிர்ந்து கொள்ளலாமே....
அரக்கு பள்ளத்தாக்கில்....


பூத்துக் குலுங்குது..... என்ன பூவோ!
அரக்கு பள்ளத்தாக்கில்....

மரங்களையும், பூச்செடிகளையும், அவற்றில் உள்ள பூக்களின் வாசத்தினையும் பிடித்துக் கொண்டே பூங்காவினைச் சுற்றி வந்தால் பரவசம் அடையலாம்! சில பெரிய மரங்களில் தரையிலிருந்து 10 அடிக்கு மேல் அழகிய மர வீடு அமைத்திருக்கிறார்கள். இந்த வீடுகளில் தங்கும் வசதியும் உண்டு. முன்பதிவு செய்து கொண்டு இங்கே தங்கலாம் என்றாலும் மேலே ஏறிப் பார்க்கலாம் என்றால் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே அனுமதி என்று சொன்னார் அங்கே இருந்த ஊழியர் ஒருவர்! எனக்கு ஒரு ஆசை உண்டு – இதுவரை நிறைவேறாத ஆசை. இப்படி மர வீடு ஒன்றில் ஒரு நாளாவது/இரவாது இருக்க வேண்டும் என்பது தான் அந்த ஆசை. விஜயவாடாவில் இருக்கும் பவானிபுரம் தீவிலும் இப்படி மர வீடுகள் இருந்தாலும் தங்கவில்லை. கேரளத்திலும் இப்படிப் பார்த்ததுண்டு. விரைவில் இப்படி ஒரு பயணம் மேற்கொண்டு, மர வீட்டில் தங்க வேண்டும்!


”உங்க கேமராவில நான் ஒரு ஃபோட்டோ எடுக்கவா?...”
என்று கேட்ட சிறுவன்!
அரக்கு பள்ளத்தாக்கில்....


இன்னுமொரு பெயர் தெரியா பூ...
அரக்கு பள்ளத்தாக்கில்....

மர வீடுகளைத் தவிர, இங்கே குழந்தைகளுக்கான குட்டி இரயிலும் உண்டு. அதில் ஏறிக்கொண்டு தோட்டத்தினைச் சுற்றி வரலாம்! என்றாலும் அந்த இரயில் நாங்கள் சென்றபோது ரிப்பேர்! தோட்டத்தினை இன்னும் சிறப்பாக பராமரிக்க வேண்டும் என்ற எண்ணம், தோட்டத்தினைப் பராமரிக்கும் தோட்டக்கலைத் துறைக்கு வந்தால் நல்லது. எல்லா சுற்றுலாத் தளங்களைப் போலவே இங்கேயும் ஒரு பாடாவதி கழிப்பிடம் உண்டு! ஐந்து ரூபாய் வாங்கிக்கொண்டு தான் உள்ளே விடுகிறார் வழியில் நிற்கும் மூதாட்டி – கொஞ்சம் பராமரித்தால் நல்லது என்பதை அவருக்கு யார் புரியவைப்பது!  இப்படி மரங்களையும் செடி கொடிகளையும் பார்த்துக் கொண்டே தோட்டத்தின் வாயிலுக்கு வந்து சேர்ந்திருந்தோம்.


தோட்டத்தில் ஒரு மரம்.....
அரக்கு பள்ளத்தாக்கில்....


இயற்கையின் எழிலில்......
அரக்கு பள்ளத்தாக்கில்.... 


சீசா விளையாடுகிறார்களோ?...
அரக்கு பள்ளத்தாக்கில்....

தோட்டத்தின் வாயிலுக்கு வந்தால் ஏதோ எரிகிற வாசம்… சாலையோரக் கடைகளில் ஒன்றரை அடி மூங்கில் குழாய்களை நெருப்பில் வைத்து எரித்துக் கொண்டிருந்தார்கள். அவற்றில் எதை வைத்து எரிக்கிறார்கள்…. அடுத்த பகுதியில் சொல்கிறேன்!

தொடர்ந்து பயணிப்போம்!

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.


38 comments:

 1. அழகிய இடம். சிறப்பான படங்கள். எவ்வளவு பெரிய புற்று!

  மூங்கில் கழி செக்போஸ்ட் எதற்கு என்று சொல்லவில்லையே? வசூலா? தம இன்னும் இணைக்கப்படவில்லை. பின்னர் வந்து வாக்களிக்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. மூங்கில் கழி செக்போஸ்ட் எதற்கு? அடுத்த பகுதியில் அதற்கான விளக்கம் வரும்!

   த.ம. இணைத்து விட்டார்கள் இப்போது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
  2. உடனேயே வந்து காலையிலேயே வாக்களித்து விட்டேன்!

   Delete
  3. தங்களது மீள் வருகைக்கும் தமிழ் மணம் வாக்கிற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. ஆகா
  படங்களும் பயணமும் அருமை ஐயா
  தம 1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 3. அழகான படங்கள். பூக்களும் மரங்களும் சிற்பங்களும் சற்று விசித்திரமாகவே இருக்கின்றன. 'சீசா' சிற்பத்தில் இருக்கும் உருவத்துக்கு கொம்புகள் உள்ளனவே? சாத்தான்?

  ReplyDelete
  Replies
  1. சீசா சிற்பத்தில் இருக்கும் உருவத்துக்கு கொம்புகள் - சாத்தான்? இருக்கலாம்! அரக்கர்கள் என எனக்குத் தோன்றியது! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   Delete
  2. அரக்கர்கள் தான் சரி. (எனக்கு தோன்றக்கூட இல்லை பாருங்கள்!)

   அதனால் தான் அரக்கோ?

   Delete
  3. அரக்கர்கள் என்பதால் அரக்கோ? தெரியவில்லை!

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   Delete
 4. லிச்சி மரம் இப்போதான் பார்க்கிறேன். தொடர் இப்போதான் சூடுபிடிச்சிருக்கு. தடுப்பு போட்டு பெண்கள் காசு வசூலிக்கின்றார்களா? திருப்பதி போகும் வழியில் இது ரெகுலர் காட்சியாயிற்றே. த ம

  ReplyDelete
  Replies
  1. லிச்சி மரம் நம் பக்கத்தில் இல்லையே! வடக்கில் நிறைய உண்டு.

   சாலைத் தடுப்பு - அதற்கான விடை அடுத்த பகுதியில்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 5. புகைப்படங்களும் விவரிப்பும் அருமை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மிடில்கிளாஸ் மாதவி.

   Delete
 6. இரண்டு பூக்களும் மிக அழகு ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 7. அரக்குப் பள்ளத்தாக்கு சரியான சரக்குப் பள்ளத்தாக்கு!
  சீசா விளையாடுவது சைத்தான் கா பச்சே! அரக்கர் பள்ளத்தாக்குத்தான் அரக்குப் பள்ளத்தாக்கு ஆயிற்றோ?

  ReplyDelete
  Replies
  1. அரக்கர் - அரக்கு! தெரியலையே.... இருந்தாலும் இருக்கலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 8. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

   Delete
 9. படங்கள் எல்லாம் அருமை.

  கழிப்பிடத்தை காசு வேண்டுமென்றால் அதிகமாய் வாங்கி கொண்டு நன்கு பராமரித்தால் பயணம் இனிமையாக இருக்கும். பயணங்களில் இந்த வசதி இல்லையென்றால் கஷ்டம்.

  ReplyDelete
  Replies
  1. புரிந்து கொள்வதில்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   Delete
 10. பெயர்தான் அரக்கு பள்ளத்தாக்கு ,பராக்கு பார்க்க நிறைய காட்சிகள் இருக்கே :)

  ReplyDelete
  Replies
  1. பராக்கு பார்க்க நிறையவே காட்சிகள் உண்டு! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 11. அருமையான படங்கள்..தகவல்கள். உங்கள் சுற்றுலாவுடன் சுற்றுகிறோம் தொடர்கிறோம்..

  கீதா: ஜி நாங்கள் சென்றிருந்த போது பெண்கள் இப்படிச் செக் போஸ்ட் எதுவும் வைக்கவில்லையே. ஊரினுள்ளும் சரி..போராகேவ்ஸ்.ரயில் நிலையத்திலிருந்து ஊருக்குள் செல்ல பெரிய இறக்கம் இருக்குமே...வளைந்து...

  அரக்கு ரயில் நிலையத்தில் ப்ளாட்ஃபார்மே இல்லை...(போரா வுக்கு அடுத்த ஸ்டாப்பிங்க்..அரக்கு ரயில் நிலையத்த்ல்..)

  நாங்கள் சென்றிருந்த போது லிச்சி மரம் இருந்தது ஆனால் பழங்கள் அவ்வளவு இல்லை...இப்போது சென்னையிலும் கிடைக்கிறதே...லிச்சி சாப்பிட்டதுண்டு..பலவிதப் பூக்கள் நானும் எடுத்துள்ளேன்...பூங்காவையும்...

  ஜி மரவீடுகள் சின்னாரிலும் உண்டு. முடிந்தால் சின்னாருக்கும் சென்று வாருங்கள் மிக மிக அழகான இடம். உடுமலைப் பேட்டையிலிருந்து 30 கிமீ தூரத்தில் கேரளத்து எல்லையில் பாதி தமிழ், பாதி மளையாளம் என்று அருமையான இடம்...நீர்வீழ்ச்சி...ஆற்றங்கரையில் உள்ள மர வீட்டில் தங்குவதில் ஒரு அட்வாண்டேஜ். ஆற்றங்கரை வழியாகக் கரையோரம் ரிவர் ட்ரெயில் வாக் உண்டு. அப்படி நடந்து விட்டு மாலை மர வீட்டில் ஏறிவிடலாம். சாப்பாடும் அவர்கள் கொடுத்துவிடுவார்கள். ஆறு ஓடும் சலசலப்பு இனிமையாக இருக்கும். இரவில் லக் இருந்தால் விலங்குகள் வருவதையும் பார்க்கலாம். மறுநாள் காலை உணவு அளித்துவிடுவார்கள். ஆற்றங்கரையில் குளித்து விட்டு அங்கேயே பாறையில் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு மீண்டும் கரை வழியாக நடந்து வந்துவிடலாம் அதெ போன்று அங்கு ஆதிவாசிகளின் வீட்டில் தங்கவும் செய்யலாம்..நம்முடன் மூன்று நான்கு பேர் தண்ணீர் குடங்கள் தூக்கிக் கொண்டு வருவார்கள். அவர்களே நமக்குச் சமைத்தும் போடுவார்கள். சிம்பிள் சாப்பாடு. கட்டன் சாயா தருவார்கள். மறுநாள் காலை மீண்டும் நம்மை கீழே அழைத்து வந்துவிடுவார்கள். வழியில் ஆறு உண்டு. 5/ 6 கிமீ மலையில் நடக்க வேண்டும். நல்ல அனுபவம்...இப்போது ஒரு வேளை இன்னும் வசதிகள் கூடியிருக்கலாம்...நாங்கள் சென்றது ஒரு சில வருடங்களுக்கு முன்னால்...மூன்று நாள் ட்ரிப்பாக. அங்கு பெரிய நீர்வீழ்ச்கி முன்னார் போகும் வழியில் அடுத்த 4 வது ஸ்டாப்பிங்கில் இருக்கிறது. 1/2 மணி நேரப் பயணம். அம்முறை நீர் வீச்ச்சிக்குச் செல்ல வில்லை.

  தங்கள் பயணத்தைத் தொடர்கிறோம் வெங்கட்ஜி...


  ReplyDelete
  Replies
  1. சின்னார் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு மிக்க நன்றி. முடிந்தால் சென்று வர வேண்டும் - குடும்பத்துடன். பார்க்கலாம் எப்போது முடிகிறது என.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 12. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி.

   Delete
 13. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 14. அரக்கர்கள் சிலைபோல இருக்கே.... அதுதான் அரக்கு வேலின்னு சொல்ல்றாங்களோ?

  கட்டாயம் ஒருமுறை போய் வரணும் என்ற ஆவலைத் தூண்டி விட்டுட்டீங்க!

  அந்த பூக்கள் சில லில்லி வகைகள் போலத்தான் இருக்கு. பர்ப்பிள்பூ என்னன்னு தெரியலையே...

  ReplyDelete
  Replies
  1. பர்ப்பிள் பூ - தெரியவில்லை. தகவல் பலகை எதுவும் இருப்பதில்லை!

   முடிந்தால் ஒரு முறை வைசாக் பக்கம் சென்று வாருங்கள்! ஆந்திராவில் நிறைய நரசிம்ம க்ஷேத்திரங்கள் உண்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 15. நாங்கள் அரக்கு வாலிக்குப் போனபோது செய்திகள் சொல்ல யாரும் இருக்கவில்லை. நாங்கள் இதெல்லாம் பார்க்கவில்லை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

   Delete
 16. படங்கள் அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி!
  லிச்சி மரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. மேலதிகத் தகவலுக்கு நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 17. அழகிய இடங்கள். மரவீடும் அழகு.

  தங்காலை கடற்கரையில் மரவீட்டில் இருநாட்கள் தங்கி மகிழ்ந்தாள்

  கித்துல்கல என்ற இடத்தில் காட்டு சூழல்களில் நீர்வீழ்ச்சியுடன் மரவீட்டில் இரவு தங்கி பறவைகள் வண்டுகள் இசையுடன் களித்து வந்தோம்.மிகவும் அருமையான இடம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....