எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, July 12, 2017

கதை சொல்லு பொன்னம்மா – நிலாமகளின் சுழல்

கதை கேட்டுத் தூங்கிய இரவுகளும், கதைகளால் விழிப்படைந்த பகல்களும்….

”கதை சொல்வது மற்றும் கேட்பதன் ஆதிருசியை உணர்ந்தது அவரவர் தாயின் அரவணைப்போடான தூங்கச் செய்யும் தருணங்களன்றி வேறென்ன? சிலருக்குப் பாட்டி, சிலருக்கு அத்தை, சிலருக்கு அப்பா…. எனக் கதை சொல்லும் உறவுமுறை வேண்டுமானால் சமயங்களில் மாறுபடலாம். ஆனால் கதை கேட்டுக் கேட்டுத் தூங்கிய ஆழ்மனசில் கதையின் மேலான ஈர்ப்பு நிரந்தரமாகிவிடுகிறது. ஆக நம்மில் பலருக்கு சிறுபிராயத்தில் அருகில் படுத்து, முதுகைத் தட்டி, தலையைக் கோதி, கால்களை வருடி, தூக்கத் துணையாகும் உறவொன்று நீங்காமல் நிலைத்திருக்கும் மனசின் ஆழத்தில், வாழ்தலில் நிறைந்துள்ள நல்லது கெட்டதுகளை தான் சொல்லும் கதையும் பொதிந்து கூறித் தூங்கச் செய்த அவ்வுறவின் உயிர்ப்பு நாம் வாழும் வரை வரும் இரவுகளில் வருடிச் செல்லும் நம்மை……”


-     இப்படி தனது முன்னுரையில் சொல்லும் நிலாமகள் நமக்குச் சொல்லும் கதைகளின் தொகுப்பு – “சுழல்”.  தொகுப்பில் உள்ளவை மொத்தம் 18 கதைகள். சில கதைகளின் தலைப்புகள் கவித்துவமாய் – “துளிர்களை விஞ்சும் சருகுகள், ஓசைகளற்ற உலகம், நேசத்தின் சீமாட்டி!” அத்தனையும் நல்ல விஷயங்களை நமக்குச் சொல்லிச் செல்லும் கதைகள். பெரும்பாலான கதைகள், நான் வளர்ந்த நெய்வேலி மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் நடந்தவையாக இருப்பதால் எனக்குக் கொஞ்சம் ஈர்ப்பு அதிகமாகவே இருந்தது. கதாசிரியர் நிலாமகளும் எங்கள் ஊர் நெய்வேலியில் வசிப்பவராயிற்றே!தொகுப்பில் உள்ள கதைகளில் சிலவற்றிலிருந்து எனக்குப் பிடித்த வரிகள் மட்டும் இங்கே ஒரு அறிமுகமாக….

அன்பெனும் பிடியுள் அகப்படும் இறையே….. என்ற தலைப்பில் முதலாம் கதை – ”எல்லா உயிர்களையும் அன்பு செய் அப்படீங்கறதும் ஒரு விதிதானே… எல்லாம் கடந்து உள்நோக்கி தியானிக்கறப்ப கடவுளும் நானும் வேறல்ல….  ஒண்ணே தான்னு புரிஞ்சுடுதே. எனக்குள்ளிருக்கிற கடவுள் தன்மையை கௌரவிக்க, பிற உயிர்களுக்கு என்னாலான அர்ப்பணிப்பை செய்யறது தானே எனக்கான கடமையா, இந்த உடல் தாங்கின உயிருக்கு இருக்கு முடியும்!”….

பவழமல்லி – உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளாராகக் களமிறங்கும் சங்கரி சந்திக்கும் விஷயங்கள் பற்றிய கதை – அளவான ஆறு வெள்ளை இதழ்களுடன் குட்டியான பவழச்சிவப்புக் காம்புகளுடன் இரவிலிருந்து சுற்று வட்டாரத்தில் தன் சுகந்த மணத்தைப் பரப்பிக் கிடக்கும் பூக்களை வலிக்காமல் எடுத்துக் கூடை நிரம்பும் வரை பேசிக்கொண்டே பொறுக்குவாள் – “எல்லா உயிர்களிடத்தும் கற்க நல்ல விஷயங்கள் இருக்கின்றன” என்று அப்பா சிறுவயது முதல் சொல்வார். வலிய சென்று பிறருக்கு உதவி செய்ய உன்னிடமிருந்து தான் கற்றேனோ…! வாசமில்லா மலர்களைக் கூட சூடித்திரியும் பெண்ணினம், மணமும் அழகுமிருந்தும் கடவுளுக்கானதென ஒதுக்கியது ஏனோ தெரியவில்லை!” – நெய்வேலியில் இருந்த வரை தோட்டத்துச் செடிகளுடனும், மரங்களுடனும் இப்படிப் பேசித்திரிந்தது நினைவுக்கு வந்தது!

யயாதியின் மகள் – பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்ளக்கூடாது என்பதை விளக்கும் அழகான சிறுகதை.  மருத்துவர் சொல்வதாகச் சொல்லும் இந்த வரிகள் மிகவும் பொருத்தமானவை – “நம்ம தோட்டத்துல முளைச்சதுக்காக மட்டும் செடி நம்முடையதாயிடுமா? இருக்குற மண்ணோட வாகு, கிடைக்கிற சூரிய ஒளியளவு இப்படிப் பலதும் சம்பந்தப்பட்டது அதோட வளர்ச்சி. நம்மாலானது தண்ணி ஊத்தி, உரம் போட்டு பூச்சி வராம, ஆடுமாடு திங்காம பாதுகாத்து வெச்சுக்கறதுதான். பூக்கறதும் நிலைக்கறதும் நம்ம கையில இருக்கா? பெத்த புள்ளைங்க செடியவிட மேல் இல்லையா? ஆடம்பரமாயிருக்க காசுபணம் வேணும். அன்பாயிருக்க, மனசிருந்தா போதும்!”

விருந்தாளித் தாம்பூலம் – நெய்வேலி வாழ் மக்களுக்கு ஒரு இயல்பு – தன் வீட்டுக்கு வருபவர்களுக்கு, தோட்டத்தில் விளையும், மா, பலா, எலுமிச்சை, புளி என எதையாவது கட்டிக் கொடுத்து அனுப்புவது! நெய்வேலியில் நாங்கள் இருந்தவரை வீட்டுக்கு வரும் உறவினர்களுக்கு இப்படி எதையாவது துணிப்பையில் போட்டுக் கொடுத்துவிடாமல் இருக்கமாட்டார் அம்மா – அதுவும் புளியை பக்குவப்படுத்தி, எலுமிச்சை ஊருகாய் போட்டு, பலாக்காயிலிருந்து சுளைகளை எடுத்து என கொடுத்து விடுவார். இப்படி வீட்டுக்கு வருபவர்களுக்குக் கொடுப்பதை ”விருந்தாளித் தாம்பூலம்” என்ற கதையில் அழகாய் விவரிக்கிறார் நிலாமகள்!  கூடுதல் தகவலாக ஒரு விஷயம். சில வருடங்கள் முன்னர் நெய்வேலிக்குச் சென்று அவரைச் சந்தித்தபோது எனக்கும் விருந்தாளித் தாம்பூலம் கிடைத்தது!

கடைசி பாடம் – நெய்வேலியில் சுரங்கம் தோண்டத்துவங்கியதிலிருந்தே ஒன்றாய் பணிபுரிந்தவர்களில் ஒருவர் இறக்கும்போது நடக்கும் விஷயமும், அதிலிருந்து மற்றவர் பெற்ற பாடமும் தான் கதை…. “ஆரம்பத்தில் தொண்ணூறு ரூபாய் சம்பளத்தில் குடும்பம் நடத்த பட்ட சிரமங்கள்….  நிச்சயம் இறந்தவரின் ஆத்மாவை இந்த ஆடம்பரம் அமைதிப்படுத்தியிருக்காது! இருந்தவரை சிக்கனமாக வாழ்ந்தவன். “சொத்து வைத்தாலும், இல்லாவிட்டாலும், பிள்ளைகளுக்கு கடன் வைக்காமல் போகணும்யா” – இந்த அனுபவத்தில் தனக்குக் கிடைத்த பாடத்தை உடனே தன் மகனுக்குக் கடிதம் எழுதுகிறார் நண்பர்!

பெண்ணால் முடியும் – ”பெரும் புயலிலும் வேரோடு விரைத்து நிற்கும் பெருமரங்கள் சாய்வதுண்டு. வளைந்து கொடுக்கும் நாணல்கள் சேதமின்றி வாழ்வதுமுண்டு. வாழ்க்கையை உருவாக்குவதும், நிறைவைத் தருவதும் எது என்பது சூழ்நிலைக்கும் வாழ்கிற சமூகத்துக்கும் ஏற்ப மாறுபடுகிறது. அவ்வளவே. கண்ணீரைப் புறங்கையால் அழுத்தித் துடைத்து சுயபச்சாதாபத்துக்கும் சேர்த்து அணைகட்டினேன்… என் தலையை அழுத்திய நிறைவேறா ஆசைகள், கனவுகள் ஆகிய முட்களடங்கிய கிரீடம் விடுத்துப் போகும் பாதையில் பூக்களைச் சேகரித்துச் சூடிக்கொள்ள முனைவேன்!” – மறப்புத் தீயிட்டு எத்தனை முறை கொளுத்தினாலும் மறுபடியும் உயிர்த்தெழும் ஃபீனிக்ஸ் பறவையாய் அவலம் நிறைந்த பழைய நினைவுகளிலிருந்து மீள நினைக்கும் ஒரு பெண்ணின் கதை…..

இங்கே எடுத்துக் காட்டிய கதைகள் போலவே ஒவ்வொரு கதையிலும் ஒரு சிறப்பு உண்டு.  அத்தனை கதைகளும் நல்ல கதைகள். அவள் விகடன், குமுதம் சினேகிதி, கோவை ஞானியின் பெண் எழுத்தாளர்களுக்கான சிறுகதைத் தொகுப்புகள், நெய்வேலி புத்தகக் கண்காட்சித் தொகுப்புகள் ஆகியவற்றில் வெளியானவை. புத்தகம் பற்றிய மேலதிக விவரங்கள் கீழே…

அலமேலு பதிப்பகம், 50, எல்லைக்கல் தெரு, குறிஞ்சிப்பாடி – 607 302. விலை  - ரூபாய் 90 மட்டும்.  ஆசிரியரின் வலைப்பூ - பறத்தல்-பறத்தல் நிமித்தம்.


நாளை மீண்டும் சந்திப்போம்…..

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

22 comments:

 1. நன்றி ஐயா
  அவசியம் வாங்கிப் படிப்பேன்
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 2. //”எல்லா உயிர்களையும் அன்பு செய் அப்படீங்கறதும் ஒரு விதிதானே… எல்லாம் கடந்து உள்நோக்கி தியானிக்கறப்ப கடவுளும் நானும் வேறல்ல….//

  //“எல்லா உயிர்களிடத்தும் கற்க நல்ல விஷயங்கள் இருக்கின்றன” //

  ஆடம்பரமாயிருக்க காசுபணம் வேணும். அன்பாயிருக்க, மனசிருந்தா போதும்!”//

  //வாழ்க்கையை உருவாக்குவதும், நிறைவைத் தருவதும் எது என்பது சூழ்நிலைக்கும் வாழ்கிற சமூகத்துக்கும் ஏற்ப மாறுபடுகிறது. அவ்வளவே. //

  நிலாமகள் கதைகள் அருமை. கதைகளில் பிடித்த வரிகள் பகிர்வு அருமை வெங்கட், அதில் எனக்கு பிடித்த வரிகளை இங்கு பகிர்ந்து இருக்கிறேன்.
  வாழ்த்துக்கள் நிலாமகளுக்கு.
  உங்களுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்குப் பிடித்த வரிகளை பகிர்ந்து கொண்டது பிடித்திருந்தது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 3. கதை சொல்லு பொன்னம்மா...

  நல்லதொரு விமர்சனம்.. வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 4. யயாதியின் மகள் - மிகவும் அருமை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 5. அறிமுகத்துக்க்கு நன்றிண்ணே

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
 6. எழுதியவருக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 7. நல்ல விமர்சனம் வெங்கட்ஜி....பகிர்வுக்கு மிக்க நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 8. ​நல்லதொரு அறிமுகம். புத்தகாசிரியருக்கும் பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 9. ஒரு அருமையான நூலை
  மிக மிக அருமையாக அறிமுகப்படுத்தியது
  மனம் கவர்ந்தது

  மிகக் குறிப்பாய் எடுத்துக்காட்டாய்
  சொல்லிச் சென்ற வரிகள்
  ஆசிரியரின் சொற்திறனையும்
  அன்பின் ஆழத்தையும் புரிந்து கொள்ளும்
  விதமாய் இருக்கிறது

  பகிர்வுக்கும் தொடரவும்
  நல்வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 10. மகிழ்வும் நன்றியும் சகோ...

  புத்துயிர்த்தேன்... இக்காலையில் .

  வந்து வாழ்த்திய நட்புகளுக்கு மனம் கனிந்த நன்றிகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.....

   Delete
 11. பதிவைப் படிக்க ஆரம்பித்ததுமிது வெங்கட்டின் நடை அல்லவே எறு தோன்றியது அத்ன்பி அறிந்தேன் நிலாமகள் கதைத் தொகுப்பின் முன்னுரை என்று ஆசிரியைக்கு பாராட்டுகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....