கர்நாடகா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கர்நாடகா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 5 ஜனவரி, 2017

எங்கே எம் அவதார புருஷர்கள்….





புத்தாண்டைக் கொண்டாட வந்த பெங்களூரு பெண்களை, இளைஞர்கள் பலர் ரொம்பவே கஷ்டப்படுத்திய நிகழ்வு பற்றி நாளிதழ்களிலும் இணையத்திலும் படித்தபோது எங்கே சென்று கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு வந்தது. இரவு நேரத்தினை விட்டுவிடுங்கள், பகலிலேயே பெண்கள் சுதந்திரமாய் நடமாட முடிவதில்லை. தில்லியில் அவ்வப்போது நடந்தேறும் பெண்களுக்கு எதிரான அவலங்கள் பார்க்கும்போது மனதுக்கு வேதனையாக இருக்கிறது. பெண்களை போகப் பொருளாக மட்டுமே பார்க்கும் மனோநிலை தான் பெரும்பாலான ஆண்களுக்கு இருக்கிறது. அதிலும் குறிப்பாக வடக்கே பெண்களுக்கு எந்தவித மரியாதையும் மதிப்பும் கிடையாது.

பெண் என்பவள், ஆண்களுக்கு அடிமையாய், நேரத்துக்கு சமைத்துப் போட்டு, ஆண்களுக்கு பணிபுரிந்து, கூப்பிட்டவுடன் படுத்து, சுகம் தந்து, பிள்ளைகள் பெற்றுப் போடும் இயந்திரமாகவே பயன்படுத்துகிறார்கள். இன்னமும் கூட ஹரியானா, உத்திரப்பிரதேசம், பீஹார் போன்ற மாநிலங்களில் பெண்களைக் கொடுமைப்படுத்துவதும், வன்புணர்வு செய்வதும் தொடர்கிறது.

பெண்கள் மாடர்னாக உடை உடுத்துவதால் தான் அவர்களுக்கு இந்த நிலை என கர்னாடக அரசின் உள்துறை அமைச்சரே சொல்லி இருக்கிறார்! பெண்கள் தங்கள் விருப்பப்படி உடை அணிந்து வந்தால் தவறாம்! இந்தக் காலத்தில் பெரும்பாலான இளைஞர்கள் கூடத்தான், பின்பிளவு தெரியும்படி ஜீன்ஸ் அணிகிறார்கள். அவர்களுடைய பின்புறத்தில் யாராவது விஷக் கொடுக்குகள் கொண்ட தேள்களையா போட்டுவிடுகிறார்கள், இல்லை தொந்தரவு செய்கிறார்களா? உடை என்பது அவரவர் விருப்பம்! உடையே இல்லாமலோ, அல்லது Revealing-ஆக வந்தால் தான் பிரச்சனை! அதுவும் கூட அப்பெண்ணின் விருப்பம். அதற்காக அப்படி வரும் பெண்ணை மானபங்கப் படுத்துவது எந்தவிதத்தில் நியாயம்.

சமீபத்தில் காற்றுவெளி இதழில் படித்த கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது.

ராமகாதையில் படித்த
ராவணனை
ஈழப்போரின் போது
மீண்டும் பார்த்தோம்
ஆனால்
எம் இனமக்களை
மீட்டெடுக்கும்
ராமனைக் காணோம்….

துகில் உரியும்
துரியோதனன்களை
தொலைக்காட்சி செய்திகளில்
தினமும் ஒருமுறையேனும்
பார்த்து விடுகிறோம்....
பரந்தாமனாய் நின்று காத்த
கண்ணனையேனோ....
கண்டுகொள்ளவே முடியவில்லை.

எல்லா இடங்களிலும்
எதிர்த்துப் பேச திராணியற்று...
ஒரு கன்னத்தின் வலியைப்
பொறுத்து
மறுகன்னத்தைக் காட்டும்
வலிமையற்றவர்கள்
இருக்கத்தான் செய்கிறார்கள்...
ஆனால்
மூன்றாம் நாளில்
உயிர்த்தெழுந்த
ஏசுபிரானை எங்கும் காணோம்

எங்கே எங்கள்
அவதாரப் புருஷர்கள்

அன்பைப் போதித்தவன்
அகிம்சையால் சாதித்தவன்
வாழ்வின் நெறிமுறைகளை
விதைத்தவன்
தத்துவம் தந்து
தன்னம்பிக்கை ஊட்டி
மானுட வாழ்வை
மாண்புறச் செய்தவன் - என
தரணி போற்றும்
அவதார புருஷர்கள்
எத்தனை எத்தனையோ.......
எங்கே காண்பேன்
இன்னொரு அவதார புருஷன்...

திருமலை சோமு

அவதார புருஷர்கள் அவதரிக்கிறார்களோ இல்லையோ, சக மனிதனை, ஒவ்வொருவரையும் மதிக்கும் – அது ஆணோ, பெண்ணோ, அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு, மனிதர்களாக இருந்தாலே போதும். பெண்களை தொந்தரவு செய்யாமல் இருக்கலாமே…. மதிக்கிறோமோ இல்லையோ, மிதிக்காமல் இருக்கலாமே…… 

மீண்டும் ச[சி]ந்திப்போம்…..

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.