வியாழன், 30 ஏப்ரல், 2015

காங்க்டா நகரும் காலைக் காட்சிகளும்தேவ் பூமி ஹிமாச்சல் – பகுதி 12

தேவ் பூமி ஹிமாச்சல் – பகுதி 1 2 3 4 5 6 7 8 9 10 11முந்தைய நாள் முழுவதும் சிறப்பாக பயணம் செய்து சில சிறப்பான அனுபவங்களைப் பெற்று நித்ராதேவியின் மடியில் துயிலுறங்கியது பற்றி சென்ற பதிவுகளில் பார்த்தோம். இங்கே ஒரு விஷயத்தினை உங்களுக்கும் மீண்டும் நினைவு படுத்த நினைக்கிறேன் – நாங்கள் இப்பயணத்தினை மேற்கொண்டது நல்ல குளிர் நாட்களான டிசம்பர் மாத இறுதியில். அதுவும் குளிர் பிரதேசமான ஹிமாச்சலப் பிரதேசத்தில் குளிருக்குக் கேட்கவா வேண்டும்?குளிர் இருந்தாலும், இங்கே கிடைக்கக்கூடிய ரஜாய்எனும் பஞ்சு மெத்தையை உடலுக்கு மூடிக்கொண்டால் குளிர் அவ்வளவாக தெரியாது. உள்ளே நுழைந்து கொள்ளும் வரை தான் குளிர். கொஞ்சம் அதனுள் அடங்கிவிட்டால், வெளியே வர மனமிருக்காது! இருந்தாலும், நல்ல உறக்கத்திற்குப் பிறகு அதிகாலை 05.00 மணிக்கே நான் எழுந்து சுடு தண்ணீரில் குளித்துவிட்டேன். பிறகு மற்றவர்கள் தயாராவதற்குள் அப்படியே காலாற நடந்து வருவோம் என வெளியே வந்தேன்.அந்தக் காலை நேரத்திலும் காங்க்டா நகரில் மக்கள் கொஞ்சம் வெளியே வந்து, கோவிலை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள். காலை நேர தரிசனத்திற்குச் செல்கிறார்கள். விடிகாலையிலேயே குளித்து பக்தியுடன் காங்க்டா நகரில் குடிகொண்டிருக்கும் தேவியை தரிசனம் செய்து பக்தியில் திளைக்கிறார்கள். அன்னையை தரிசிக்கும் முன்னர் அவர்களை தரிசித்து அவர்கள் புண்ணியத்தில் நானும் கொஞ்சம் எடுத்துக் கொண்டேன்! சற்றே நடந்து தங்குமிடத்திற்குத் திரும்பினேன்.அதற்குள் சிலர் தயாராகிக் கொண்டிருக்க, தங்குமிடத்தின் மொட்டை மாடியிலிருந்து காமிராவிற்கு நல்ல தீனி கிடைக்கும் – சில படங்களை எடுக்கலாம் என்ற எண்ணத்தோடு மேலே சென்றேன். ஆஹா என்ன அற்புதமான காட்சிகள் அங்கே காணக் கிடைத்தன! [dh]தௌலா[dh]தார் ரேஞ்ச் என அழைக்கப் படும் மலை ஒரு புறம், மலைகள் முழுவதும் ஆங்காங்கே பனிப்பொழிவு இருக்க, தூரத்திலிருந்து வெள்ளிப் பனிமலையோ இது என்று நினைக்க வைக்கும்படி இருக்க, மற்றொரு புறத்தில் சூரியன் தனது கிரணங்களை வெளிப்படுத்தி மனிதர்களுக்கு அன்றைய காலை வணக்கத்தினைச் சொல்லிக் கொண்டிருந்தான்.
பனி மூடிய மலைச் சிகரங்களை பார்க்கும்போதே மனதிற்குள் அப்படி ஒரு குளிர்ச்சி. அந்தக் குளிர்ச்சியை போக்கியபடி சூரியனின் கதிர்கள். ஆஹா அற்புதமான காட்சி தான். கேமராக் கண்களாலும், நேராகவும் பார்த்து சில காட்சிகளைப் படம் பிடித்தும் காலை நேரத்தினை சுவாரசியமாக ரசித்துக் கொண்டிருந்தேன்.  என்னைப் போலவே ஒரு குரங்காரும் மாடியின் ஒரு சுவர் ஓரத்தில் உட்கார்ந்து இயற்கை அழகினை ரசித்துக் கொண்டிருந்தார்.
பக்கத்தில் இருக்கும் மரம் ஒன்றில் காக்கைகள் அமர்ந்து தங்கள் பங்கிற்கு இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தன. அமைதியான சூழலில் அப்படியே நின்று கொண்டிருந்தே இருக்கலாம் போல தோன்றியது.  அங்கே அருகே இருந்த ஒரு வீட்டில் மாடியில் தாழ்வாரம் போல ஒரு அமைப்பு. [dh]தௌலா[dh]தார் மலையை நோக்கி சில இருக்கைகள். இரண்டு முதியவர்கள் அங்கே அமர்ந்து காலைப் பொழுதினை ரசித்துக் கொண்டிருந்தார்கள் – ஆஹா என்ன ஒரு சுகம்!இன்னுமொரு பக்கத்தில் பார்த்தால் ஒரு முதியவர் ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டு இருக்கிறார். அவரது ஒரு கையில் சிறிய கிண்ணம். அவர் அருகிலேயே அவர் மனைவி நின்று கொண்டிருக்கிறார். அவர் கையில் வைத்திருப்பது ஒரு சிறிய பிரஷ். அதை வைத்து என்னதான் செய்கிறார் – பாருங்களேன் – எத்தனை பாசமாய் அவரது கணவருக்கு தலைச்சாயம் பூசி விடுவதை!இப்படியாக இயற்கை/செயற்கைக் காட்சிகளை கண்டு ரசித்தபடியே நானும் தயாரான சில நண்பர்களும் இருக்க, மற்றவர்கள் அனைவரும் தயாராகிக் கொண்டிருந்தனர்.  நண்பர் மனீஷ் காலை சீக்கிரமாகவே வந்து விடுவதாகச் சொல்லி இருக்கிறார். அவருடன் கோவிலுக்குச் செல்வதாக ஒரு திட்டம். கோவிலுக்குச் சென்று அங்கு கிடைத்த அனுபவங்களை அடுத்த பதிவில் சொல்கிறேனே!

தொடர்ந்து பயணிப்போம்......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

புதன், 29 ஏப்ரல், 2015

முற்பகல் செய்யின்.....


மனதைத் தொட்ட குறும்படம்இணையத்தில் உலவும்போது சில சமயங்களில் குறும்படங்களைத் தேடிப் பார்ப்பது வழக்கம்.  அப்படி பார்த்த ஒரு குறும்படம் இன்றைய பகிர்வாக. இக் குறும்படம் தாய்லாந்து நாட்டின் படமாம். 

மாற்றுத் திறனாளிகளுக்கு பல பிரச்சனைகள். இந்தியாவில் மட்டுமல்ல, மற்ற இடங்களிலும் இப்பிரச்சனைகள் உண்டு போலும். இங்கே ஒரு மாற்றுத் திறனாளி தான் படத்தின் முக்கிய கதாபாத்திரம். ஏழ்மையில் இருந்தாலும் மற்றவர்களுக்கு உதவும் மனம் கொண்ட நல்லவர். அவருக்கு வந்த கஷ்டம், அதிலிருந்து வெளியே வர உதவிய சிறுமி என சிறப்பாக படம் பிடித்திருக்கிறார்கள். 

பார்த்து ரசிக்க....
குறும்படம் எடுத்த இயக்குனர், அதில் பங்கேற்ற உழைப்பாளிகள், நடிகர்கள் அனைவருக்கும் உங்கள் சார்பில் ஒரு பூங்கொத்து!

அடுத்த வாரம் வேறொரு குறும்படம் பற்றி பார்க்கலாம்.

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

செவ்வாய், 28 ஏப்ரல், 2015

சாப்பிட வாங்க: குரங்கு அரிசியும் யோங்க்சா சட்னியும்!யோங்க்சா இரோம்பா
படம்: இணையத்திலிருந்து....

தலைப்பைப் பார்த்தே ஓட்டமா ஓட நினைக்கும் நண்பர்களுக்கு..... 

பயப்படாதீங்க! அது என்ன குரங்கு அரிசி! என நீங்கள் தெரிந்து கொள்வது எப்போது? தைரியமா உள்ளே வாங்க! பதிவினைப் படித்து புதுசா ஒரு விஷயத்தைத் தெரிஞ்சுக்கோங்க! சரியா!

சமீபத்திய வட கிழக்கு மாநிலப் பயணத்தின் போது நாங்கள் முதன் முதலில் சென்ற இடமான மணிப்பூர் தலைநகரான இம்ஃபால் நகரத்தில் எங்கு பார்த்தாலும் ஒரு காய்கறி குமித்து வைத்திருந்தார்கள். அதை வைத்து என்ன செய்வார்கள் என எங்கள் ஓட்டுனரிடம் கேட்க அவர் சொன்னது தான் இந்த குரங்கு அரிசியும் யோங்க்சா சட்னியும்!யோங்க்சா ஷிங்க்ஜூ
படம்: இணையத்திலிருந்து....


இந்த யோங்க்சாக் என்பது பீன்ஸ் வகைகளில் ஒன்று.  இது பெரிய மரத்தில் பட்டை பட்டையாகக் காய்த்துத் தொங்குகிறது. ஒவ்வொன்றும் முழ நீளம் இருக்கிறது! இந்த யோங்க்சாக்-கை அனைத்து மணிப்பூர் வாசிகளும் தினம் தினம் சாப்பிடுவார்கள் போலும் – எங்கே பார்த்தாலும் இந்தக் காய்களை கொத்துக் கொத்தாக வைத்து விற்பனை செய்கிறார்கள். அதை இப்பகுதிப் பெண்கள் ரொம்பவும் கவனித்து வாங்குகிறார்கள் – காரணம் அதில் புழுக்கள் இருக்கலாம்! புழுக்கள் இல்லாது வாங்குவதில் தான் உங்கள் சாமர்த்தியம் இருக்கிறது!

இந்த யோங்க்சா கொண்டு இரண்டு விதமாய் Side dish தயாரிப்பார்களாம். ஒன்று யோங்க்சா இரோம்பா, மற்றொன்று யோங்க்சா ஷிங்க்ஜூ!  என்னடா இது வாயில நுழையாத பெயரா இருக்கேன்னு யோசிக்காதீங்க! கவலையும் படாதீங்க – சாப்பிடும் போது வாயில் நிச்சயமா நுழைஞ்சுடும்! இந்த Side dish வெறும சாப்பிட முடியுமா? கூட Main dish வேணும்ல! அதுதான் குரங்கு அரிசி! குரங்கு அரிசியா?  குரங்கு Mark இல்ல குரங்கு Brand அப்படி எதாவது இருக்குமோன்னு யோசிக்கக் கூடாது!

 குரங்கு அரிசி!
படம்: இணையத்திலிருந்து.....

மணிப்பூரில் கருப்பு வண்ணத்தில் அரிசி கிடைக்கிறது. அதைத் தான் இவர்கள் Monki rice-ன்னு சொல்றாங்க! Monki[ey]-ன்னா குரங்குன்னு உங்களுக்கு நிச்சயம் தெரிஞ்சுருக்குமே! இந்த மோங்கி ரைசும் யோங்க்சா சட்னியும் இருந்தா போதும் – எவ்வளவு வேணும்னாலும் சாப்பிடுவேன் என எங்கள் வாகன ஓட்டுனர் சொன்னார். அது எப்படி தயாரிக்கணும்னு கேட்டேன் – வாங்களேன் உங்களை வீட்டுக்கு அழைச்சுட்டுப் போய் சாப்பிடவே தரேனேஎன்று சொல்ல கொஞ்சம் ஜெர்க் அடித்தேன்! – “இல்லைப் பரவாயில்ல! செய்முறை மட்டும் சொல்லுங்க!”. 

அவர் பாவம் – சமையல் கலைல கொஞ்சம் Weak போல! இல்லை எனக்குத் தெரியாதுன்னு சொல்லிட்டாரு!

மணிப்பூர் வாசிகள் கோடைக் காலம் முழுவதுமே இதை விரும்பிச் சாப்பிடுவார்களாம். குளிர் காலத்தில் கிடைப்பதில்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்! சைவம், அசைவம் என இரண்டுமே தயாரிப்பது உண்டு.

 இது தான் யோங்க்சா.....
இந்தப் படம் நான் எடுத்தது தான்!

இந்த யோங்க்சாவை ஆங்கிலத்தில் Tree Beans என்றும், stinky beans, Smelly beans என்றும் அழைப்பதுண்டு. அதற்கும் காரணம் இருக்கிறது. யோங்க்சா சாப்பிட்டால் நமது சுவாசத்திலும், கழிக்கும் சிறுநீரிலும் ஒரு வித நாற்றம் இருக்குமாம்!  போலவே இரண்டு நாட்கள் வரை பக்கத்தில் ஒரு பய வரமாட்டான்! – ஏன் எனில் அபான வாயு வெளி வந்து கொண்டே இருக்குமாம்!

நல்ல வேளை இந்த குரங்கு அரிசியும் யோங்க்சா சட்னியும் நான் சாப்பிடல! பதினைஞ்சு நாள் பயணத்தில் முதல் நாள் தான் மணிப்பூரில்! அப்போதே இப்படி தொடங்கி இருந்தால் என்னாவது!

நம்ம ஊர்ல இந்த யோங்க்சா கிடைக்குமான்னு தெரியல! அதனால உங்களுக்காகவே இந்த யோங்க்சாக் படம் எடுக்கணும்னு வண்டியை ஒரு கடைத் தெருவில் நிறுத்தி படம் எடுத்துக் கொண்டேன்.  குரங்கு அரிசி நீங்க பார்த்திருப்பீங்க! இருந்தாலும் இணையத்திலிருந்து எடுத்த படம் ஒண்ணும் கொடுத்திருக்கேனே – பார்த்துக்கோங்க!

அடுத்த வாரம் சாப்பிட வாங்க பகுதியில் வேறு ஒரு அனுபவம் பற்றிப் பார்க்கலாம்!

மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

திங்கள், 27 ஏப்ரல், 2015

பயணத்தினால் கிடைத்த நட்பு!தேவ் பூமி ஹிமாச்சல் – பகுதி 11

தேவ் பூமி ஹிமாச்சல் – பகுதி 1 2 3 4 5 6 7 8 9 10

 படம்: இணையத்திலிருந்து....

சென்ற பகுதியில் பார்த்தது போல ஜ்வாலாஜி கோவிலில் ஒரு உன்னதமான அனுபவத்திற்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்டோம். நாங்கள் புறப்படும் போதே நேரம் இரவு 08 மணிக்கு மேலாகி விட்டது. ஜ்வாலாஜி இருக்கும் இடத்திலிருந்து அன்றைய இரவு நாங்கள் தங்க வேண்டிய இடமான காங்க்டா [Kangra] சுமார் 25 கிலோமீட்டர் தொலைவு.  இரவு நேரம் என்பதால் சற்றே மெதுவாகத் தான் பயணம் செய்ய வேண்டியிருந்தது. கூடவே மலைப் பிரதேசம் என்பதால் வேகமாக பயணிக்க இயலாது.

இரவு நாங்கள் அங்கே தங்குவதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்ய, அலுவலக நண்பரின் உறவினரிடம் சொல்லி இருந்தோம். இவர் தான் எங்களின் முதல் நாள் இரவு தங்கிய இடமான சிந்த்பூர்ணியிலும் தங்குமிடம் ஏற்பாடு செய்தவர். நாங்கள் காங்க்டா வரும்வரை தொடர்ந்து அலைபேசியில் அழைத்து எங்கே இருக்கிறோம் என்பதைக் கேட்டுக் கொண்டே இருந்தார். காங்க்டா நகரில் நுழைந்தவுடன் இருக்கும் ஒரு பிரதானமான இடத்தினைச் சொல்லி அங்கே காத்திருப்பதாகவும் சொன்னார்.  ஒரு வழியாக நாங்கள் அந்த இடத்தினை அடைந்தோம்.

அங்கே சேர்ந்தபிறகு அவரை அலைபேசியில் அழைக்க, சில நிமிடங்களுக்குள் தனது வாகனத்தில் வந்து சேர்ந்தார். அவருடைய வாகனத்தினைத் தொடர்ந்து நாங்களும் பயணித்து அவர் ஏற்பாடு செய்திருந்த தங்குமிடத்திற்கு வந்து சேர்ந்தோம். கீழே ஐந்து அறைகள், மேலேயும் தங்கும் அறைகள் என ஒரு இடம் – பெயர் Anmol Guest House.  காங்க்டா தேவி கோவில் இருக்கும் கடை வீதியிலேயே இருக்கிறது. அங்கே சென்று எங்கள் உடைமைகளை வைத்து விட்டு சற்றே இளைப்பாறினோம்.

அதற்குள் அந்த நண்பர், அவர் பெயர் மனிஷ் – இரவு உணவு எங்கே சாப்பிடப் போகலாம் என்று கேட்க ஆரம்பித்தார்.  மதியம் சாப்பிட்டிருந்தாலும், முந்தைய பதிவில் சொன்னது போல, நாலு மணிக்கு சாப்பிட்டிருந்தாலும், பயணத்திற்குப் பிறகு சிலருக்கு பசி இருந்தது. சிலருக்கு பயணத்தின் அலுப்பில் படுத்தால் போதும் போல இருக்கிறது, அதனால் நாங்கள் பழங்கள் சாப்பிட்டு விடுகிறோம் எனச் சொல்ல, சிலர் மட்டும் சாப்பிடப் புறப்பட்டோம் – அப்போது மணி இரவு 09.45 மணிக்கு மேல்!

அப்பப்பா, மனீஷ் உடனேயே அவரது நண்பரின் உணவகத்திற்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு, உணவு சாப்பிட எங்களை அழைத்து வருவதாகச் சொல்லி விட்டார். அப்படி ஒரு கவனிப்பு, ஆட்டமும் ஓட்டமுமாக மனிஷ் எங்களை கவனிக்க, நாங்களும் அவரது அன்பில் திளைத்தோம். மனீஷையும் எங்களுடன் சாப்பிடச் சொல்ல, அவரோ, வீட்டில் மனைவி காத்திருப்பார் [சில மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் ஆனதாம்!] என்று சொல்ல, எங்களுக்காகக் காத்திருக்க வேண்டாம், நீங்கள் புறப்படுங்கள், காலையில் சந்திக்கலாம் என்று வலுக்கட்டாயமாக அனுப்பினோம்.

 படம்: இணையத்திலிருந்து....

நாங்கள் உணவு சாப்பிட்டு முடித்தபிறகு உணவுக்கான தொகையைக் கொடுக்கலாம் எனக் கேட்டபோது, கடை உரிமையாளர், எங்களிடம் வாங்கிக் கொள்ள மறுத்து விட்டார் – மனீஷ் ஏற்கனவே அவரிடம் சொல்லி விட்டாராம் – வாங்கக் கூடாது என! நன்கு உண்ட பிறகு அதற்கான தொகையைக் கொடுக்கவில்லையே என நினைத்த போது மனதுக்குக் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. கடை உரிமையாளருக்கும் நன்றி சொல்லி, நாங்கள் தங்கி இருந்த இடத்திற்கு நடந்தே திரும்பினோம். 

காங்க்டாவில் நாங்கள் தங்கி இருந்த போதும், நாங்கள் பயணித்த போதும், மனீஷ் எங்களுக்குச் செய்த உதவிகள் என்றும் மறக்கமுடியாதவை. தொடர்ந்து அவர் ஓட்டமும் நடையுமாக பல ஏற்பாடுகளை எங்களுக்காக செய்து கொடுத்தார். இத்தனைக்கும் நாங்கள் அவரை முன்னரே பார்த்ததோ, அறிந்ததோ இல்லை. அவரின் உறவினர் எங்களுடன் அலுவலகத்தில் ஒன்றாக பணி புரிந்தவர் [அதுவும் சில வருடங்களுக்கு முன்னர்!].  அவர் சொல்லி விட்டார் என்பதற்காக, அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தார்.

அவரிடம் பேசியபோது ஒரு விஷயத்தினைத் தெரிந்து கொண்டோம். அவரது மனைவியின் ஊர் தலைநகர் தில்லி தானாம். அவ்வப்போது தில்லி வருவேன் என்று சொல்ல, எப்போது தில்லி வந்தாலும் சொல்ல வேண்டும் என்று அன்புக் கட்டளை இட்டோம்! இந்த மாதிரி பயணங்களில் நமக்குக் கிடைக்கும் நட்பு மறக்க முடியாத ஒன்றாக அமைந்து விடுகிறது. 

இரவு உணவினை முடித்துக் கொண்டு விடுதிக்குத் திரும்பி, படுத்துக் கொண்டு, அன்றைய தினத்தில் பார்த்த இடங்கள், கிடைத்த அனுபவங்கள் ஆகியவற்றை நினைத்தபடியே கிடக்க, சிறிது நேரத்திலேயே நித்ரா தேவி என்னை ஆழ்ந்த உறக்கத்திற்கு அழைத்துச் சென்றாள்.......  சரி நான் கொஞ்சம் தூங்கி எழுந்து கொள்கிறேன்! அடுத்த நாள் என்ன இடங்களுக்குச் சென்றோம், என்னென்ன அனுபவங்கள் என அடுத்த பகுதியில் சொல்கிறேன்!

தொடர்ந்து பயணிப்போம்......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.