திங்கள், 20 ஏப்ரல், 2015

தண்ணீர் எரியுமா – ஜ்வாலா ஜி!தேவ் பூமி ஹிமாச்சல் – பகுதி 10

தேவ் பூமி ஹிமாச்சல் – பகுதி 1 2 3 4 5 6 7 8 9

 தங்க கோபுரம் - ஜ்வாலாஜி கோவில்

தொடர்ந்து பயணித்து நாங்கள் சேர்ந்த இடம் ஹிமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் இருக்கும் ஜ்வாலாஜி. சக்தி பீடங்களில் ஜ்வாலாஜியும் ஒன்று. சக்தி பீடங்கள் உருவான விதம் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். இத் தொடரின் முந்தைய பகுதி ஒன்றிலும் சக்தி பீடங்கள் பற்றிப் பார்த்தோம்.  சதி தேவியின் உடல் பகுதிகள் வீழ்ந்த 51 இடங்களில் கட்டப்பட்ட கோவில்கள் தான் சக்தி பீடங்கள். ஜ்வாலாஜி என அழைக்கப்படும் ஜ்வாலாமுகியும் ஒரு சக்தி பீடம் தான். இங்கே சதி தேவியின் நாக்கு விழுந்ததாக நம்புகிறார்கள். நாங்கள் பயணித்து ஜ்வாலாஜி கோவில் இருக்கும் பகுதிக்கு வந்து சேர்ந்தபோது மாலை நேரமாகி விட்டது. சற்றே மலைப்பாங்கான பகுதி – அடிவாரத்தில் பேருந்து நிறுத்தி விட்டு, நடந்து தான் செல்ல முடியும். அப்படி ஒன்றும் அதிக தொலைவில்லை – ஒரு கிலோ மீட்டர் தொலைவு தான் இருக்கும். எல்லோ கோவில்களில் இருப்பதைப் போலவே இக்கோவிலுக்குச் செல்லும் பாதையின் இருமருங்கிலும் நிறைய கடைகள். தேவிக்குச் சமர்பிக்கத் தேவையான பொருட்களை சிலர் விற்க, பலர் அலங்காரப் பொருட்களை விற்கும் கடைகள் வைத்திருந்தார்கள்.

கடைகளைப் பார்த்தபடியே கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தோம். பிரசாதக் கடைகள் அனைத்திலும் வாசலில் ஒரு நபர் நின்று கொண்டு கோவிலுக்கு வருபவர்களை தூண்டில் போட்டு இழுத்துக் கொண்டிருந்தார்கள். காலணிகளை இங்கே வைத்து விட்டு தேவிக்குச் சமர்ப்பணம் செய்ய வேண்டிய பொருட்களை வாங்கிக் கொண்டு செல்லுங்கள் என பலரும் அழைத்துக் கொண்டிருந்தார்கள்.  பக்தர்களின் வருகை குறைந்திருந்த காரணமோ என்னவோ, பலத்த போட்டி இருந்தது.


அதிலும் நாங்கள் பதினான்கு பேர் என்பதால் நல்ல வியாபாரம் நடக்கும் என நினைத்தார்களோ என்னமோ?  நடக்கும் அனைத்து விஷயங்களையும் பார்த்தபடியே மேலே நடந்தோம். கோவில் படிகளுக்குச் சற்று முன்னர் இருந்த கடையொன்றில் காலணிகளை வைத்து விட்டு அர்ச்சனைத் தட்டுகளை வாங்கிக் கொண்டு மேலே நடந்தோம்.  கோவில் வளாகத்திற்குச் சென்றபோது நடை சார்த்தி இருந்தது தெரிந்தது.

வட இந்தியாவில் பெரும்பாலான கோவில்களில் மாலை நேரத்தில் ஆரத்திஎன்று அழைக்கப்படும் நிகழ்வு ஒன்று நடக்கும். ஆறரை அல்லது ஏழு மணிக்கு கோவிலில் இருக்கும் அனைத்து இறைவன்/இறைவிகளுக்கும் கற்பூர ஆரத்தியும், பூஜைகளும் சிறப்பாக நடைபெறும். அதற்காக அரை மணி நேரத்திற்கு முன்பாகவே நடை சாற்றப்பட்டு தயார் செய்வது வழக்கம். நாங்களும் சென்றது அந்நேரத்தில் என்பதால், கோவில் திறக்கும் வரை அங்கே அமர்ந்திருந்தோம். 

அனைவரும் பேசிக் கொண்டிருக்க, எங்கள் குழுவில் இருந்த பெண்கள் லலிதா சஹஸ்ரநாம பாராயணம் செய்ய ஆரம்பித்தார்கள்.  கோவிலில் இருந்த பலரும் லௌகீக விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்ததை நிறுத்தினார்கள்.  இப்படி பேசிக் கொண்டிருப்பதால், கோவிலுக்கு வந்த பின்னும், பலரும் தேடும் அமைதி கிடைப்பதில்லை! பாராயணம் முடிப்பதற்கும் கோவில் கதவுகள் திறந்து ஆரத்தி தொடங்குவதற்கும் சரியாக இருந்தது.

இங்கே தேவி அக்னி ரூபத்தில் இருக்கிறார்.  பாறைகளுக்கு இடை இடையே ஒன்பது இடங்களில் ஜ்வாலையாக தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு ஜ்வாலையையும் மஹாகாளி, அன்னபூர்ணி, சண்டிதேவி, சரஸ்வதி, துர்க்கா தேவி, லக்ஷ்மி என வணங்குகிறார்கள்.  பாறைகளுக்கு வெளியே வெள்ளியில் கவசம் போட்டிருக்க உள்ளே நீல ரூபத்தில் எரிந்து கொண்டிருப்பது மஹாகாளியின் ரூபம். அதன் கீழே ஜோதிஸ்வரூபமாய் அன்னபூர்ணி. பக்கத்தில் இன்னொரு ஜ்வாலா, சண்டி தேவி. பக்கத்தில் மா ஹிங்க்லாஜ் தேவி [சர்வ வ்யாதிகளுக்கும் நிவாரணம் தருபவள்], விந்த்யாவாசினி, மஹாலக்ஷ்மி, சரஸ்வதி, நவதுர்க்கா என ஒவ்வொரு ஜ்வாலையிலும் தேவி ப்ரத்யக்ஷமாக குடியிருப்பதாக ஐதீகம்.


அனைத்து தேவிகளையும் இங்கே ஜோதி ரூபமாக வழிபடுகிறார்கள். பாறைகளுக்கு நடுவிலிருந்து வரும் ஜ்வாலை எங்கிருந்து வருகிறது, அதற்கு என்ன காரணம் என சிலர் சோதித்துப் பார்த்தாலும் அதற்கான காரணம் தெரியவில்லை. ONGC நிறுவனம் கூட சில சோதனைகளை மேற்கொண்டு காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்கிறார்கள்.

அக்னி ரூபமாக தேவியை தரிசித்து விட்டு சில படிகள் மேலே சென்றால் அங்கே பாபா கோரக்நாத் கோவிலும் இருக்கிறது. இங்கேயும் பாறைகளில் அக்னி பிழம்புகள்.  ஒரு சிறிய குடத்தில் தண்ணீர் எடுத்து அந்த அக்னிப் பிழம்புகளை மூட, சிறிது நேரத்தில் குடத்திலிருக்கும் தண்ணீரும் கொழுந்து விட்டு எரிகிறது. அதை அணைத்து விட்டு, அதே தண்ணீரை நம் மேல் தெளித்து, அதையே நமக்கு தீர்த்தமாகவும் அளிக்கிறார்கள்.

இன்னுமொரு சிறிய குகையில் பாறைகளுக்கு இடையே நீரோட்டம். ஒரு சிலரே அங்கே நின்று தரிசனம் செய்ய முடியும் என்பதால் நான்கு ஐந்து பேர்களை மட்டுமே அனுமதிக்கிறார்கள். அவர்கள் வெளியே வந்தபிறகு அடுத்த ஐந்து பேர். எங்களில் ஒருவர் ரொம்பவும் குனிந்து பார்க்க, அங்கே இருந்தவர் நகர்ந்து கொள்ள மறுபடி மறுபடி சொல்கிறார். ரொம்பவும் அருகில் சென்றால் முகத்தில் அக்னி பட்டு விடும் அபாயம் உண்டு என்று சொல்ல, அதை எங்களால் நம்ப முடியவில்லை.  ஆனாலும், அந்த நீரோட்டத்தில் அக்னி ஜ்வாலையை காண்பிக்க, இரண்டு, இரண்டரை அடி உயரத்திற்கு அக்னி ஜ்வாலை எழுகிறது. அதன் பிறகு தான் அவர் சொன்னதன் காரணமும் புரிந்தது.

இப்படியாக ஜ்வாலா ரூபமாக இருக்கும் தேவியினைத் தரிசனம் செய்த பிறகு வெளியே வரும்போது நன்கு இருட்டி விட்டது. கோவிலுக்குள் புகைப்படங்கள் எடுக்கத் தடை என்பதால் படங்கள் எடுக்க இயலவில்லை. வெளியே வரும்போது சில படங்கள் எடுத்தேன். இக்கோவில் பற்றிய நிறைய செய்திகளும் கதைகளும் உண்டு. முகலாயப் பேரரசர் அக்பர் அவர்கள் இக்கோவிலுக்கு தங்கத்தில் Chattra [குடை] கொடுத்ததாகவும் மஹாராஜா ரஞ்சித் சிங் அவர்கள் கோவில் கோபுரத்திற்கு தங்கத்தில் தகடுகள் பொருத்தியதாகவும் செய்திகள் உண்டு.  

நமக்கு மேற்பட்ட ஒரு சக்தி இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளும் இடம் இது. அக்னி ரூபமாக தேவி இருப்பதாகச் சொன்னாலும், மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி இருப்பதை நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது. கோவிலின் உள்ளே இருக்கும் போது கண்டிப்பாக Positive அதிர்வலைகளை உணர்ந்து கொள்ள முடிகிறது. அனைவரும் சென்று பார்க்க வேண்டிய ஒரு இடமும் கூட.

சக்தி பீடங்களில் ஒன்றான ஜ்வாலா தேவியின் அருள் அனைவருக்கும் கிடைக்க பிரார்த்தனை செய்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம். இந்தியாவில் இருக்கும் பிரச்சனைகளில் ஒன்றான கழிப்பறை வசதிகள் இவ்விடத்திலும் உண்டு. அதுவும் குளிர் தேசத்தில் இப்படி வசதிகள் இல்லாதிருப்பது அங்கே வரும் அனைவருக்கும் கடினமான ஒரு சோதனை! கழிப்பறை என உள்ளே ஒரு இடத்தினைக் காண்பிக்க, நான் அங்கே சென்று “நான் இந்த விளையாட்டுக்கு வரலைஎன்று திரும்பி ஓடி வர வேண்டியிருந்தது!

ஒரு உன்னதமான அனுபவத்திற்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்டோம். அங்கிருந்து நாங்கள் சென்ற இடம் என்ன, அங்கே கிடைத்த அனுபவங்கள் ஆகியவற்றை அடுத்த பதிவில் பார்க்கலாம்!

தொடர்ந்து பயணிப்போம்......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி. 

42 கருத்துகள்:

 1. ஜ்வாலையே சக்தி
  வித்தியாசமான கோயில்தான் ஐயா
  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 2. பதில்கள்
  1. தமிழ் மணத்தில் இணைத்து முதலாம் வாக்களித்தமைக்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 3. வித்தியாசமான ஜ்வாலை கோயில் வியக்க வைக்கிறது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 4. தங்களோடு நானும் அக்னி ஸ்வரூப தேவிகளை தரிசித்துக்கொண்டேன்.

  இந்த ஆரத்திதான் நம்மூர் கோவில்களில் நடக்கும் சாயரக்ஷை பூஜை:-)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆரத்தி காலையிலும் உண்டு டீச்சர். கோவில் திறந்து காலை ஒரு முறை மாலை ஒரு முறை ஆரத்தி உண்டு. ஒவ்வொரு கடவுளருக்கும் தனித்தனி ஆரத்தி பாட்டும் பாடுவார்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   நீக்கு
 5. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   நீக்கு
 6. ம்ம்ம்ஹிஹிஹி, கமென்ட் கொடுத்தேன். காக்காய் கொண்டு போச்சு போலிருக்கு! இதே போல் நேபாளத்தின் முக்திநாத் கோயிலிலும் ஒரு ஜ்வாலாமுகி கோயில் உண்டு. முக்திநாதர் சந்நிதிக்கு வெளியே வந்து சற்று வலப்புறமாகப் போனால் ஒரு குறுகிய பாதை வழியாக அந்தக் கோயிலுக்குச் செல்ல வேண்டும். பாறைக்கு அடியில் நிரந்தரமாக எரிந்து கொண்டிருக்கும் ஜோதி ஸ்வரூபம். காதை வைத்துக் கேட்டால் தண்ணீர் எங்கிருந்தோ பாய்ந்து வரும் சப்தம் கேட்கும். பார்க்கும்போது நீல நிற ஜ்வாலை தெரியும்.

  ஹிமாசல் பிரதேசத்தில் எங்குமே சுற்றியது இல்லை. இந்தக் கோயில் பற்றிக் கேள்விப் பட்டிருக்கேன். பார்த்தது இல்லை. அருமையான தரிசனத்திற்கு நன்றி. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த காக்கா தொல்லை தாங்க முடியல! :)))))

   உத்திராகண்ட் மாநிலத்தில் டேராடூன் அருகிலும் ஒரு ஜ்வாலாமுகி உண்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   நீக்கு
 7. நல்ல பதிவு. சில விஷயங்களுக்கு விடை கிடைப்பதில்லை. அப்படி ஒன்றுதான் இந்த ஜூவாலை தேவி தரிசனம். ஒ.என்.ஜி.யால் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. இதே போல்தான் மெக்காவின் ஜம் ஜம் கிணறும் அறிவியலுக்கு எட்டாத அற்புதமாகத்தான் இருக்கிறது. இதைத்தான் இறைசக்தி என்று சொல்கிறார்களோ தெரியவில்லை.

  தங்கள் வலைதளத்திற்கு முதல் முறையாக விஜயம் செய்துள்ளேன் இனி தொடர்கிறேன்.

  தமிழ்மணம் 5

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது முதல் வருகை..... மிக்க மகிழ்ச்சி செந்தில்குமார். தொடர்ந்து சந்திப்போம்....

   சில விஷயங்கள் மனித சக்திக்கு அப்பாற்பட்டவை தான்.

   நீக்கு
 8. சுற்றுளாத் தளங்களில் முக்கியமாக கழிப்பறை வசதிகள் இருக்கிறதா என்பதை விட அவை எந்த விதத்தில் இருக்கினறன என்பதை அரசும் கவனிக்க வேண்டும். பல மைல் தொலைவில் இருந்து வருபவர்களுக்கு அந்த வசதிகூட இல்லையென்றால் எப்படி?
  பாறைகளின் நடுவே நீரோட்டம் மற்றும் அக்னிப் பிழம்பகள் காண ஆவலைத் தூண்டுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.

   நீக்கு
 9. தங்களுக்கு கிடைத்த உன்னதமான அனுபவத்தை நாங்களும் மானசீகமாக அனுபவிக்க உதவியமைக்கு நன்றி! தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 10. சிறப்பான பல தகவல்கள். பயணம் தொடரட்டும். பகிர்வுக்கு நன்றிகள் ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி

   நீக்கு
 11. நல்ல தரிசனம். நல்ல தகவல்கள். ஜ்வாலாமுகி என்று ஒரு ஹிந்திப்படம் கேள்விப் பட்டிருக்கிறேன்!! :))))))

  தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 12. ஜ்வாலா தேவி தரிசனம் அருமை! விரிவான தகவல்களுடன் பகிர்வு சிறப்பு! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   நீக்கு
 13. வணக்கம்
  ஐயா
  சிலவிடயங்கள்வியக்கவைக்கிறது.. பகிர்வுக்கு நன்றித.ம 7
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   நீக்கு
 14. தகவல்கள் அருமை நானும் பயணிக்கின்றேன் நண்பரே...
  தமிழ் மணம் 8

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 15. சக்தி பீடங்களில் ஒன்றான ஜ்வாலா தேவியின் அருள் அனைவருக்கும் கிடைக்க பிரார்த்தனை செய்ததற்கு நன்றி. அடுத்த பயணம் எங்கே என்று,,,,,,,,
  புகைப்டங்கள் அத்துனையும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலசந்திரன் ஜி!

   நீக்கு
 16. அனுபவம் புதுமை
  அன்பரிடம் கண்டேன்!
  சிறப்பின் சிகரம்!
  தம 9
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புதுவை வேலு.

   நீக்கு
 17. ஜ்வாலாதேவியைப் பற்றி தங்கள் பதிவின்மூலமாக அறிந்தேன். ஒவ்வொரு பயணத்தின்போதும் புதிய அனுபவங்களையும், புதிய செய்திகளையும் எங்களால் பெறமுடிகிறது. இறையருளால் தங்களது பயணங்கள் தொடர வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 18. // நமக்கு மேற்பட்ட ஒரு சக்தி இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளும் இடம் இது. அக்னி ரூபமாக தேவி இருப்பதாகச் சொன்னாலும், மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி இருப்பதை நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது. கோவிலின் உள்ளே இருக்கும் போது கண்டிப்பாக Positive அதிர்வலைகளை உணர்ந்து கொள்ள முடிகிறது. அனைவரும் சென்று பார்க்க வேண்டிய ஒரு இடமும் கூட.//

  ஜ்வாலாஜி கோவில் பற்றிய இந்த செய்தியும், உங்கள் அனுபவமும் படிக்கும் போதே ஒரு திகைப்பை உண்டு பண்ணுகிறது.

  த.ம.10

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   நீக்கு
 19. வணக்கம் சகோதரரே.!

  அரிய சிறப்பான தகவல்கள். இங்கெல்லாம் எப்போது சென்று தரிசிக்க போகிறோம். என்ற ஆவலை தூண்டியது தங்கள் பதிவு. அன்னையின் அருள் இருந்தால் கிடைக்கட்டும். தங்களது பதிவின் மூலம் படிக்கும் வாய்ப்பை பெற்றமைக்கு, அன்னைக்கும், தங்களுக்கும் நன்றி.

  தொடர்ந்த பயணங்களை எழுதவும் . தொடர்ந்து நாங்களும் பயணிக்கிறோம். பகிர்வுக்கு நன்றி.

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   நீக்கு
 20. கோயில் பற்றி அறிந்திருந்தாலும் சென்றதில்லை. அருமையான தகவல்கள்....சென்று பார்க்க வேண்டும் போல் உள்ளது...வாய்ப்பு அமைந்தால்...பகிர்வுக்கு மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு
 21. தேவியின் நாக்கு அக்னி ஸ்வரூபத்தில்! கூட்டிக் கழிச்சுப்பார்த்தால் கணக்கு சரியாத்தான் இருக்கு :-)

  பதிலளிநீக்கு
 22. கூட்டிக் கழிச்சுப் பார்த்தால்! :))))

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....