திங்கள், 2 மார்ச், 2015

காணாமல் போன நெடுஞ்சாலை



தேவ் பூமி ஹிமாச்சல் – பகுதி 2

தேவ் பூமி ஹிமாச்சல் – பகுதி 1

 கண்ணா மூச்சி ரே.... ரே....  விளையாடும் சூரியன்

தில்லியின் எல்லையைத் தொட்டு தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்க ஆரம்பித்தோம். அங்கே தேசிய நெடுஞ்சாலையைக் காணவில்லை! டிசம்பர் மாதத்தின் 25-ஆம் நாள். பொதுவாகவே இந்நாட்களில் குளிரும் பனிமூட்டமும் கொஞ்சம் அதிகம் தான். சூரிய உதயமே பல நாட்களில் எட்டு மணிக்கு மேல் தான் – அதுவும் அவருக்கு மனதிருந்தால், கொஞ்சம் வெளியே வந்துவிட்டு மீண்டும் போய், கண்ணாமூச்சி விளையாடுவார்!

 பனி மூட்டத்தில் நெடுஞ்சாலை.....

எங்கெங்கும் பனிமூட்டம் – மேகக்கூட்டங்கள் தரையில் இறங்கிவிட்டதோ என்று எண்ணும் அளவிற்கு பனிமூட்டம் – Visibility மூன்று முதல் நான்கு மீட்டர் அளவு தான். சாலையெங்கும் மேகம் பரவிக்கிடக்க, மிதமான வேகத்தில் தான் பயணம் செய்ய வேண்டியிருந்தது. இவ்வேகத்திலேயே தான் நாங்கள் முதலில் செல்ல வேண்டிய சிந்தபூர்ணி வரை செல்ல முடியும் என்று தோன்றியது. தலைநகரிலிருந்து கிட்டத்தட்ட 425 கிலோமீட்டர் தொலைவு! எப்படியும் மாலை ஆறு மணிக்குள் சென்றுவிடலாம் என நினைத்திருந்தோம் – பனிமூட்டத்தினால் கொஞ்சம் தாமதமாகலாம் எனத் தோன்றுகிறது!

 எங்கள் சாரதி.....  
ஜோதி என்கிற நாகஜோதி...

தொடர்ந்து ஒரு வித எச்சரிக்கையுடனேயே வாகனத்தினைச் செலுத்தினார் எங்கள் ஓட்டுனர் ஜோதி என்கிற நாகஜோதி! பெயரிலிருந்தே தெரிந்திருக்குமே – ஆமாம் அவர் ஒரு தமிழர் – நாங்கள் வண்டி எடுத்ததும் தில்லி வாழ் தமிழர் ஒருவரிடம் தான். அதனால் நான் முன் இருக்கையில் அவருடன் அமர்ந்து தமிழில் உரையாடியபடியே, சில புகைப்படங்களையும் எடுத்தபடியே பயணித்தேன். எச்சரிக்கையுடனேயே வாகனத்தினைச் செலுத்த வேண்டிய சூழலில் அதிகம் அவரையும் தொந்தரவு செய்வது நல்லதல்லவே!

 இக்குளிரில் BODY கட்டிமுடிக்காத லாரியை ஓட்டுவது எவ்வளவு கடினம்....  தலைக்கு மேல் மட்டும் ஒரு மறைப்பு - மற்ற எல்லாம் திறந்த மயம் தான்....

தில்லியிலிருந்து ஹிமாச்சலப் பிரதேசம் செல்லும்போது ஹரியானா, பஞ்சாப் என்ற இரு மாநிலங்களைக் கடந்து செல்ல வேண்டியிருக்கும் என்பதால் இரு மாநிலங்களுக்கான சாலை வரிகளையும் கட்ட வேண்டும். ஹிமாச்சலுக்கான கட்டணத்தினை இணையம் மூலமாக முன்னரே செலுத்தியதால், தில்லியைக் கடந்தவுடன் ஹரியானாவிற்கான கட்டணத்தினைச் செலுத்தி எங்கள் பயணத்தினைத் தொடர்ந்தோம்.

 முகமூடிகள்.....  குளிருக்கு இதமாக!

ஹரியானா மக்கள் குளிர் காலத்தில் ஒரு பெரிய கம்பளிப் போர்வை அல்லது லோஹி என அழைக்கப்படும் உல்லன் போர்வைகளால் தங்களைச் சுற்றிக் கொள்வது வழக்கம். சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் தலை முதல் கால் வரை மூடியபடிச் செல்லும் பலரை நெடுஞ்சாலைகளில் பார்க்க முடிந்தது! அத்தனை குளிரிலும் பால் வியாபாரிகள் நான்கு பால் பாத்திரங்களை வண்டியின் இரு புறங்களிலும் தொங்கவிட்டு பயணித்துக் கொண்டிருந்தார்கள். வேலை செய்வது முக்கியமாயிற்றே!

 நாலு கேன் பால் எடுத்துச் செல்லும் ஹரியானா இளைஞர்....

இப்படி பயணித்துக் கொண்டிருந்ததில் எங்கள் குழுவினர் அனைவருக்கும் மகிழ்ச்சி. சிலருக்கு காலையில் எழுந்து இப்படி பயணம் செய்வது கஷ்டம்.  வண்டியில் ஏறியவுடன் தூங்க ஆரம்பித்து விடுவார்கள்.  ஆனால், நாங்கள் அனைவரும் என்னதான் அதிகாலையில் எழுந்து விட்டாலும், குடும்பமாக பயணிப்பது போல அனைவரும் மகிழ்ச்சியுடன் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்துகொண்டும், கதைகள் பேசிக்கொண்டும் இனிமையாக பயணத்தினை தொடங்கி இருந்தோம். 

 நெடுஞ்சாலையில் பேருந்திற்குக் காத்திருக்கும் பயணிகள்.....

காலையில் பெருமாள் கோவிலில் சுடச்சுட ஆளுக்கு ஒரு தொன்னை மட்டுமே பொங்கல் சாப்பிட்டதால் [ஒரு தொன்னை தொந்தி பெருத்த எனக்கு எம்மாத்திரம்!!] வயிறு, ஹலோ, என்னைக் கொஞ்சம் கவனியேன்!என்று சொல்ல ஆரம்பித்தது! நாங்களும் தில்லி எல்லையைத் தாண்டி சோனிபத், பானிபத் கடந்து கர்னால் எல்லையைத் தொட்டிருந்தோம். சுமார் 130 கிலோ மீட்டர் மூன்று மணி நேரத்தில் வந்து சேர்ந்திருக்கிறோம்.

பொதுவாகவே வட இந்திய நெடுஞ்சாலைகளில் சாலை உணவகங்கள் அத்தனை சுகமானதாக இருப்பதில்லை. வெகுசில இடங்களில் மட்டுமே நல்ல உணவகங்கள் இருக்கின்றன.  அப்படி இந்தப் பயணத்தில் கர்னால் நகரத்தினை விட்டால், பெரும்தொலைவிற்கு நல்ல உணவகங்கள் இல்லை என்பதால், கர்னாலிலேயே சாப்பிட முடிவு செய்தோம். ஓட்டுனர் ஜோதியிடம் சொல்ல, அவரும் இங்கேயே சாப்பிடலாம், அப்புறம் பஞ்சாபில் தான் சாப்பிட முடியும் என்று ஒரு சாலையோர உணவகத்தில் வண்டியை நிறுத்தினார். 

அங்கே என்ன சாப்பிட்டோம், தொடர்ந்த பயணத்தில் சந்தித்த விஷயங்கள் என்ன என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாமா!

   

தொடர்ந்து பயணிப்போம்......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

46 கருத்துகள்:

  1. பதிவைப் பார்த்தபோதே குளிர ஆரம்பித்துவிட்டது. நேரில் அவ்விடங்களைப் பார்த்ததுபோன்ற உணர்வு. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  2. கடுங்குளிர் நினைத்தாலே நடுங்குகிறது. ஒரு முறை டிசம்பர் மாதத்தில் டெல்லியில் பட்ட அவஸ்தை ஞாபகத்திற்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகுந்த உடைகள் இருந்துவிட்டால் குளிரை சமாளித்து விடலாம்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

      நீக்கு
  3. வணக்கம்
    ஐயா.
    தங்களின் பயண அனுபவத்தை மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள்..நாங்களும் பயணித்தது போல ஒரு உணர்வு பகிர்வுக்கு நன்றி. த.ம 3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  5. இன்னும் இங்கே - குவைத்தில் குளிர் குறையவில்லை..
    கடுங்குளிரை நினைத்தாலே நடுங்குகின்றது உடம்பு..
    இருந்தாலும் - கம்பளியைப் போர்த்திக் கொண்டு நாங்களும் கூடவே வருவோம்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ...

      நீக்கு
  6. பயண அனுபவம் மிக அருமை.
    படங்கள் எல்லாம் பனித்திரை மூடினாலும் தெளிவாக தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா......

      நீக்கு
  7. சுவாரசியமான அனுபவம். படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமா ரவி....

      நீக்கு
  8. பயண அனுபவங்கள் சுவாரஸ்யமாக இருக்கிறது ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மணிமாறன்.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

      நீக்கு
  11. ‘ஹரியானா மக்கள் குளிர் காலத்தில்ஒரு பெரிய கம்பளிப் போர்வை அல்லது லோகி என அழைக்கப்படும் உல்லன் போர்வைகளால் தங்களை சுற்றிக்கொள்வார்கள் என்பதை படித்தபோது, தில்லியில் நான் இருந்தபோது ஒரு ஜனவரி மாதத்தில் ஜனக்புரியில் இருந்து குர்காவ்ம் சென்றபோது சூட் அணிந்து மேலே ஒரு சால்வையைப் போர்த்திக்கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றது நினைவுக்கு வருகிறது. படங்களைப் பார்க்கும்போது பயணிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. வாழ்த்துக்கள்! தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் நினைவுகளைத் தூண்டி விட்டது நினைத்து மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  12. பனிக்குள்ளும் படங்கள் அருமையாக எடுத்துள்ளீர்கள். குறிப்பாக சாரதியின் portrait மிக நன்றி.

    தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  13. இரு மாநில சாலை வரியா? ஐயோ!

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மொத்தம் மூன்று மாநில சாலை வரி - ஹரியானா, பஞ்சாப் மற்றும் ஹிமாச்சலம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  14. சிறப்பான முறையில் பயண அனுபவங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  15. படமே காட்டுகிறது எவ்வளவு குளிர் என்பதை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  16. காணாமற்போன நெடுஞ்சாலை பற்றி ஏதும் கூறவில்லையே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பனியில் காண வில்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

      நீக்கு
  17. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

      நீக்கு
  18. பால் வண்டிகள் அங்கும் நம்மூர் போலத்தான் இருக்கின்றது
    படங்கள் ஒவ்வொன்றும் அருமை ஐயா
    நன்றி
    தம 11

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  19. படங்கள் அத்தனையும் அருமை. தொடர்கிறேன்.
    இங்க இருக்கிற குளிர் அந்தப் பானியைப் பார்ததும் கூடிவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

      நீக்கு
  20. சூப்பரான புகைப்படங்கள்! அருமையான பயண விவரணம்...நாங்களும் உங்களுடனே பயணிக்கின்றோம்....சாப்பாட்டிற்கு வண்டி நின்றுள்ளதால்....ஒரு ப்ரேக்?!!!! அடுத்த பதிவு என்ன சாப்டீர்கள் என்று....ஆர்வமாக இருக்கின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை உணவில் என்ன? சொல்கிறேன்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு
  21. வணக்கம் சகோதரரே!

    தொடர்ந்து பயணிக்கிறோம். பனி மூடிய படங்கள் என்றாலும் தெளிவாக உள்ளது. பதிவை படிக்கும் போதே குளிரை உணர முடிகிறது. மேலும் சென்ற விபரங்கள் காண ஆவலுடன் காத்திருக்கிறேன். பகிர்ந்தமைக்கு நன்றி!

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  22. தொடர்ந்த பயணத்தில் சந்தித்த விஷயங்கள் என்ன என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாமா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிமாச்சலப் பிரதேச பயணம் பற்றிய அனைத்து பதிவுகளையும் படித்தமைக்கு நன்றி வேதா. இலங்காதிலகம் ஜி!

      நீக்கு
  23. சோனிபத் அருகில் இருக்கும் (சாலையின் இடதுபக்கம்) ஹவேலி நன்றாக வசதிகளுடன் இருக்கு. தில்லி சண்டிகர் பயணங்களில் இந்த ஹவேலியில்தான் சாப்பாடு நமக்கு.

    ரெஸ்ட் ரூம் சூப்பர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது நிறைய இடங்களில் ஹவேலி திறந்து விட்டார்கள் - புது ஹவேலி, பழைய ஹவேலி, புத்தம்புது ஹவேலி என பெயரில் மற்றும் மாற்றம். நன்றாகவே இருக்கிறது இவையும். திரும்பி வரும் வழியில் ஹவேலி தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....