திங்கள், 30 மார்ச், 2015

சுடச்சுட வெல்லமும் கின்னு ஜூஸும்



தேவ் பூமி ஹிமாச்சல் – பகுதி 4

தேவ் பூமி ஹிமாச்சல் – பகுதி 1 2 3

இரண்டு வாரங்களுக்குப் பிறகு இத்தொடரினை பகிர்வதால், சென்ற பகுதியின் கடைசி வரிகள் இங்கே..


பொதுவாகவே ஹரியானா, பஞ்சாப் மாநிலத்தில் உள்ளவர்கள் நல்ல உழைப்பாளிகள். விவசாயம் தான் அவர்களுக்கு முக்கியத் தொழில். அந்த பச்சைப் பசேலெனெ இருக்கும் வயல்வெளிகளைப் பார்த்தபடியே எங்கள் பயணம் தொடர்ந்தது. அடுத்த பகுதியிலும் வழியில் சந்தித்த சில நிகழ்வுகளைப் பார்க்கலாம்! ஏனெனில் நாங்கள் ஹிமாச்சலப் பிரதேசம் போய்ச் சேர்ந்தது மாலை ஏழு மணி அளவில். கிட்டத்தட்ட 12 மணி நேரப் பயணத்தில் கிடைத்த அனுபவங்களை ஒரே பதிவாகச் சொல்லி விட்டால் என்னாவது! :)


 வெல்லம் காய்ச்சும் பணியில் ஒரு விவசாயி

எங்கள் பயணம் தொடர்ந்தது..... சென்ற பகுதியில் சொன்ன மாதிரி வயல்வெளி எங்கும் பச்சைப்பசேல்....  ஆங்காங்கே சில வயல்களில் கரும்பு சாகுபடி முடிந்து அவ்விடத்திலேயே வெல்லம் காய்ச்சி விற்றுக் கொண்டிருந்தார்கள். இரண்டு மூன்று இடங்களில் இப்படிச் சுடச்சுடக் காய்ச்சிய புதிய வெல்லம் பார்த்த பிறகு சாப்பிடாவிட்டால் என்னாவது!  ஓட்டுனர் ஜோதியிடம் வெல்லம் காய்ச்சும் அடுத்த இடம் கண்டவுடன் வண்டியை நிறுத்தச் சொன்னோம். அவருக்கும் வெல்லம் சாப்பிட ஆசை இருந்தது போலும் – நீங்கள் சொல்லத் தான் நானும் காத்திருந்தேன் என்று சொன்னபடி அடுத்த வெல்லம் காய்ச்சும் இடத்தில் வண்டியை நிறுத்தினார்.

 இப்படித்தான் வெல்லம் காய்ச்சணும்!

அப்போது தான் சுடச்சுட வெல்லம் காய்ச்சி ஒரு பெரிய மரத் தாம்பாளத்தில் கொட்டி துண்டு போட்டுக் கொண்டிருந்தார் ஒருவர். அதற்கு முன்னர் காய்ச்சிய வெல்லமும் – அங்கே கூடையில் இருந்தது. கொஞ்சம் எடுத்துச் சாப்பிட்டுப் பார்த்து அதற்குப் பின்னர் தேவையான அளவு வாங்கிக் கொள்ளலாம். நாங்களோ பதினைந்து [ஓட்டுனர் ஜோதியையும் சேர்த்து!] – அனைவரும் கொஞ்சம் கொஞ்சம் ருசித்தாலே ஒரு கிலோ அளவுக்கு வருமே!

 காய்ச்சிய வெல்லம் கொட்ட பயன்படும் பெரிய தாம்பாளம்


பேரம் பேசிய மூதாட்டி!
 

கொஞ்சமாக எடுத்து அனைவரும் பகிர்ந்து ருசித்தோம்.  இப்போது தான் பயணம் தொடங்கி இருப்பதால், அப்போதைக்கு சாப்பிட மட்டும் ஒரு கிலோ வெல்லம் வாங்கிக் கொண்டோம். தில்லி திரும்பும் போதும் இதே வழி தான் என்பதால் வரும்போது எல்லோருடைய வீட்டிற்கும் தேவையான வெல்லம் வாங்க முடிவு செய்தோம். கிலோ 60 ரூபாய் சொல்ல, அங்கே ஒரு மூதாட்டி பேரம் பேசிக் கொண்டிருந்தார் – எல்லாம் அம்பது ரூபாய்க்கு தரலாம்! எத்தனை வருஷமா வெல்லம் வாங்கறேன், எனக்குத் தெரியாதா?என்று கேள்வி :)

 கொட்டி வைத்திருக்கும் கின்னு!

இப்படித்தான் ஜூஸ் பிழியணும் தெரிஞ்சுக்கோங்க!


 ஜூஸ் எடு... கொண்டாடு.....

வெல்லம் வாங்கி ருசித்தபடியே அங்கிருந்து பயணித்தோம். சற்று தொலைவு சென்ற பிறகு பார்த்தால் நெடுஞ்சாலையின் ஓரத்தில் பல இடங்களில் கின்னு [ஆரஞ்சு போலவே இருக்கும்] பழங்களை கொட்டி வைத்து அங்கேயே அதன் சாறு பிழிந்து விற்றுக் கொண்டிருந்தார்கள்.  பதினோரு மணி அளவில் காலை உணவு சாப்பிட்டது – அதன் பிறகு வெல்லம் – இப்போது ஜூஸ். பார்த்தவுடன் ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தினோம். பழங்களை எடுத்து தோல் உரித்து ஜூஸ் போட்டு காலா நமக் [கருப்பு உப்பு] போட்டு கலந்து கொடுத்தார் ஒரு இளைஞர். பெரிய டம்ளரில் ஜூஸ் விலை 20 மட்டும்! அதையும் குடித்து விட்டு எங்கள் பயணம் தொடர்ந்தது.

 குருத்வாராவிற்கு ட்ராக்டரில் பயணிக்கும் காட்சி!

இப்படியே சாப்பிட்டுக் கொண்டே இருந்தால் என்னாவது! ஆனாலும் உணவு எங்களை விடுவதாய் இல்லை! நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது வரும் ஒரு ஊர் ஆனந்த்பூர் சாஹேப் – அங்கே சின்னச் சின்னதாய் நிறைய குருத்வாராக்கள் உண்டு. முக்கியமான குருத்வாரா ஆனந்த்பூர் சாஹேப் எனும் பெயரிலேயே இருக்கிறது.  நாங்கள் சென்ற சமயத்தில் சீக்கிய குருக்களில் ஒருவரின் பிறந்த நாள் என்பதால் பஞ்சாபின் பல பகுதிகளிலிருந்தும் சீக்கியர்களும், மற்ற பஞ்சாபிகளும் ஆனந்த்பூர் சாஹேப் குருத்வாராவிற்கு தங்களது ட்ராக்டர்களில் செல்வது வழக்கம். 

 ஆனந்த்பூர் சாஹேப்-இல் உள்ள ஒரு குருத்வாரா - நெடுஞ்சாலையிலிருந்து எடுத்த படம்!

அப்படிச் செல்லும் அனைவருக்கும், மற்ற பயணிகளுக்கும் நெடுஞ்சாலை எங்கும் சீக்கியர்கள் சுத்தமான உணவு சமைத்து வருவோர் போவோர் எல்லோருக்கும் வழங்கிக் கொண்டிருந்தார்கள்.  சாலையில் வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி கொஞ்சமாவது சாப்பிட்டுச் செல்ல வேண்டும் என வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருந்தார்கள்.


 மும்மரமாய் நடக்கும் உணவு விநியோகம்

அனைவரிடமும் பணிவாக மறுத்தாலும் சிலர் விடுவதில்லை – தேநீரும் பிரட் பக்கோடாவுமாவது எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும் எனச் சொல்ல ஒரு இடத்தில் தேநீரும் பிரட் பக்கோடாவும் சாப்பிட்டோம். இப்படியாக பயணம் முழுவதிலும் விதம் விதமாய் சாப்பிட்டு, இனிமையான அனுபவங்கள் பலவற்றுடன் நாங்கள் செல்ல வேண்டிய இடத்தினைச் சென்றடைந்தோம்.

அங்கே கிடைத்த அனுபவங்கள் என்ன என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாமா?

தொடர்ந்து பயணிப்போம்......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

வெள்ளி, 13 மார்ச், 2015

ஃப்ரூட் சாலட் – 129 – மரம் வளர்ப்போம் – தீக்குச்சி! – பதட்டம் தவிர்ப்போம்



இந்த வார செய்தி:


ராஜஸ்தான் மாநிலத்தின் ராஜ்சமுந்த் மாவட்டம்.  அதில் ஒரு கிராமம் தான் பிப்ளாந்த்ரி.  இப்படி ஒரு பேரைக் கூட நாம் கேள்விப்பட்டிருப்பது சந்தேகம் தான்.  ஆனாலும் சத்தமில்லாமல் ஒரு புரட்சியினைச் செய்து வருகிறார்கள் அக்கிராமத்து மக்கள். பொதுவாகவே ராஜஸ்தான் மாநிலத்தில் ஆண்-பெண் விகிதாசாரம் மிகவும் குறைவு. பெண் சிசுக்கொலை மிகவும் அதிகம்.

சமீபத்தில் கொண்டாடிய மகளிர் தினம் பற்றி அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. ஆனாலும் கடந்த எட்டு வருடங்களாக சிசுக்கொலை தடுப்பிற்கும், பெண்களின் வளர்ச்சிக்கும், கூடவே இயற்கையைக் காப்பதற்கும் சத்தமில்லாது ஒரு சாதனை செய்து வருகிறார்கள்.  கிராமத்தில் ஒவ்வொரு பெண் குழந்தை பிறக்கும் போதும் 111 மரக்கன்றுகளை நட்டு அதை வளர்க்கிறார்கள்.  குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளோடு மரங்களையும் சேர்த்து வளர்க்கிறார்கள்.

அது மட்டுமல்லாது கிராமப் பஞ்சாயத்து பத்தாயிரம் ரூபாயும், ஊர் மக்கள் அனைவருமாகச் சேர்ந்து 21000/- ரூபாயும் போட்டு ஒவ்வொரு பெண் குழந்தை பிறந்த உடன் அக்குழந்தையின் பெயரில் வைப்பு நிதியாக வங்கியில் சேமிக்கிறார்கள். இதனைப் பெற பெண் குழந்தைகள் செய்ய வேண்டியது இது தான் – குழந்தையை வளர்ப்பது போலவே மரங்களையும் வளர்க்க வேண்டும், பெண் சிசுவினை வதம் செய்யக் கூடாது மற்றும் தனது பெண்ணிற்கு 18 வயது ஆகும் வரை அப்பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்ககூடாது. 

பஞ்சாயத்து தலைவர் மாறினாலும், இந்தத் திட்டத்தினை  தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். ஒரு கட்சி ஆட்சியைப் பிடித்தவுடன், மற்ற கட்சி ஆட்சியில் கொண்டு வந்த பல திட்டங்களை முடக்கி விடும் அரசுகள் மத்தியில் இக்கிராமத்து பஞ்சாயத்து இப்படி நல்ல திட்டத்தினை முடக்காமல் இருப்பதற்காகவே இவர்களை பாராட்டலாம்.

கடந்த எட்டு வருடங்களில் கிட்டத்தட்ட மூன்று லட்சம் மரக்கன்றுகளை நட்டு அவற்றை பராமரித்து வருகிறார்களாம்.

பெண் சிசு வதை குறைந்த பிறகு இக்கிராமத்தில் ஆண்-பெண் விகிதாசாரத்திலும் நல்ல முன்னேற்றம். 18 வயதிற்குள் பெண்களை திருமணம் செய்து கொடுப்பதும் குறைந்திருக்கிறது.
 
சத்தமில்லாமல் சாதித்து வரும் இக்கிராம மக்கள் அனைவருக்கும் இந்த வார பூங்கொத்து.

இந்த வார முகப்புத்தக இற்றை:

HURTING SOMEONE CAN BE AS EASY AS THROWING A STONE IN THE SEA. BUT DO YOU HAVE ANY IDEA HOW DEEP THE STONE CAN GO?

இந்த வார குறுஞ்செய்தி:

தோல்வி எனும் தீக்குச்சியை உரசிப்பார்.....  வெற்றி எனும் வெளிச்சத் தீ உனைத் தேடி வரும்.

இந்த வார காணொளி:

இப்படியும் போக்குவரத்தை ஒழுங்கு செய்யலாம் என்று சொல்கிறார்.  எப்படி?  பாருங்களேன்! :)

Post by Gadoo.




படித்ததில் பிடித்தது:

ஓய்வுக்காக காட்டுக்குச் சென்றபோது தனது செல்ல நாயையும் அழைத்துப் போனார் ஒரு அரசர். அவர் வேட்டையில் மும்முரமாக இருக்க, அங்குமிங்குமாக பாய்ந்துபாய்ந்து காட்டின் வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்திக் கொண்டிருந்தது நாய். பல நிமிடங்களுக்குப் பிறகுதான் தான் வழியைத் தவற விட்டுவிட்டதை உணர்ந்தது. அப்போது சற்று தூரத்தில் புலி ஒன்று வருவதைக் கண்டது நாய். அது தன்னை வேட்டையாடத்தான் வருகிறது என்பதையும் உணர்ந்தது.

தப்பிப்பது எப்படி என்று எண்ணியபோது எதிரில் சில எலும்புத் துண்டுகளைக் கண்டது. சட்டென ஒரு காரியம் செய்தது அந்த நாய். புலிக்கு முதுகு காட்டியவண்ணம் எலும்புத் துண்டுகளின் முன் அமர்ந்தது. புலி அருகில் வந்தவுடன், "ஆஹா...புலியின் மாமிசம் என்ன, என்ன சுவை..! இன்னும் ஒரு புலி கிடைத்தால் நன்றாக இருக்குமே" என்றது நாக்கைச் சுழற்றியபடியே தனக்குத்தானே பேசியது.

அதனைக் கேட்ட புலிக்குக் கிலி பிடித்து, 'நல்ல வேளை இந்த மிருகத்திடமிருந்து தப்பினோம்' என்றெண்ணி மெதுவாகப் பதுங்கிப் பின்வாங்கியது. இந்த சம்பவத்தை மரத்தின் மேலமர்ந்து கவனித்துக் கொண்டிருந்த குரங்கு ஒன்று, நாயைக் காட்டிக் கொடுப்பதன் மூலம் புலியிடமிருந்து தனக்குப் பாதுகாப்பு தேடிக் கொள்ளலாம் என்றெண்ணி, புலி சென்ற திசையை நோக்கி விரைந்தது.

அதனைப் பார்த்த நாய் ஏதோ விவகாரம் எனப் புரிந்து கொண்டதோடு இனி புலியிடமிருந்து ஓடித் தப்பமுடியாது என்பதையும் உணர்ந்து கொண்டது. குரங்கு புலியிடம் நாயின் தந்திரத்தைக் கூறியதும் கோபம் கொண்ட புலி, "என்னுடன் வந்து அந்த நாய் என்ன பாடுபடுகிறது என்பதைப் பார்" என்று உறுமிவிட்டு குரங்கினைத் தன் முதுகில் ஏற்றிக் கொண்டு நாய் இருந்த இடம் நோக்கி விரைந்தது.

குரங்கும் புலியும் சேர்ந்து வருவதைக் கண்ட நாய், பழைய இடத்தில் அமர்ந்த படியே அவற்றைப் பார்க்காதது போல பாசாங்கு செய்து கொண்டு, "இன்னொரு புலியைக் கொண்டு வருவதாகச் சொன்ன குரங்கை இன்னும் காணோமே!" என்றது சத்தமாக...

பின் என்ன நடந்திருக்கும் சொல்ல வேண்டியதில்லை, நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்..

இந்த கதையின் மூலம் நாம் தெரிந்து கொள்வது, எந்த சூழ்நிலையிலும் தன்நம்பிக்கையும் முயற்சியையும் விட்டுவிட கூடாது. ஒரு நிகழ்ச்சி நடந்து விட்டால் அதை நினைத்து கவலைப் படுவதாலோ வருத்தப்படுவதாலோ எந்த மாறுதலும் நிகழப் போவதில்லை. அதை நினைத்து கவலைப் படுவதற்கு பதிலாக அடுத்தது என்ன செய்யலாம் என்று யோசித்தால் நடப்பவையாவது நல்லவையாக நடக்கும்.

ஆம்,நண்பர்களே., எந்த சூழ்நிலையிலும் அதிலிருந்து தப்ப தன்னம்பிக்கையும், பதட்டப்படாமல் இருந்தாலே பாதி வெற்றி, நாம் பயப்படாமல் எதிரில் உள்ளவர்களை சமாளித்தால் மீதி வெற்றி...

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

புதன், 11 மார்ச், 2015

பாய்ஸ் பட செந்தில் – தில்லியில்!



பாய்ஸ் படத்தில் நடிகர் செந்தில் நடித்த ஒரு காட்சி வரும் – உங்களுக்கு நினைவிருக்கிறதா? அப்படி நினைவில்லையெனில் உங்களுக்காகவே காணொளி இங்கே.....



எந்த இடத்தில் என்று என்ன பிரசாதம்/உணவு கிடைக்கும் என ஒரு டேட்டாபேஸே வைத்திருப்பார். அதை தனது மூலதனம் என்றும் பெருமையாகச் சொல்வார். அதே போல தில்லியில் ஒருவர் இருக்கிறார்.  இவர் உருவத்தில் செந்திலைப் போல இல்லாமல் ஒல்லியாகத் தான் இருப்பார். ஆனால் டேட்டாபேஸ் மட்டும் செந்திலின் டேட்டாபேஸை விட அதிகமாய் விவரங்கள்! அவர் சொல்வது போல Information is Wealth என்பதில் இவருக்கு அதீத நம்பிக்கை போலும்.

தில்லியின் எந்தப் பகுதியில் எந்த நிகழ்வு – குறிப்பாக தமிழர்கள் நடத்தும் நிகழ்ச்சிகள் நடந்தாலும் அங்கு இவரைப் பார்க்க முடியும். தில்லியில் பல நிகழ்ச்சிகளை தமிழர்கள் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். அவ்வப்போது இந்நிகழ்ச்சிகளுக்கு எனக்கும் அழைப்பு வருவதுண்டு. அதில் பெரும்பாலானவற்றை நான் தவிர்த்து விடுவது வழக்கம் – அலுவலக ஆணிகள் ஒரு காரணம் – இன்னொன்று புதியதாய் ஒரு இடத்திற்குச் செல்வதில், அதுவும் தனியாகச் செல்வதில் இருக்கும் தயக்கம்!


படம்: இணையத்திலிருந்து....

கிட்டத்தட்ட கடந்த இரண்டு மூன்று வாரங்களில் இரண்டு நிகழ்ச்சிகளுக்கு நான் சென்றிருந்தேன். ஒன்று எங்கள் பகுதியிலேயே நடந்த நிகழ்ச்சி. மற்றொன்று ராமகிருஷ்ண புரத்தில் இருக்கும் மலைமந்திரில் நடந்த நிகழ்ச்சி. இரண்டு இடங்களிலும் தலைநகர் செந்திலைப் பார்த்தேன். எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருந்தார் அவர்.  குறிப்பாக சாப்பாட்டு வேளைகளிலும், உணவு வேளைகளிலும்.  பாய்ந்து பாய்ந்து போய் காபி குடிப்பதும், சிற்றுண்டி வகைகளை ஒரு கை பார்ப்பதுமாக இருந்தார்.


படம்: இணையத்திலிருந்து....

எங்கள் பகுதியில் இரண்டு நாட்கள் விழா. புகைப்படங்கள் எடுக்கும் பணியை எனக்கு அளித்திருந்ததால் முழுவதும் அங்கேயே தான் இருந்தேன். அந்த இரண்டு நாட்களும் ஒரு விஷயத்தினை கவனித்தேன் – காலை ஏழு மணியிலிருந்து ஒன்பது மணிக்குள் மட்டும் கிட்டத்தட்ட முப்பது காபி குடித்திருப்பார். யார் காபி அருந்தச் சென்றாலும், அவருடன் இவரும் ஆஜர். For Company sake குடிப்பதாக இருந்தாலும், இத்தனை காபி குடிப்பது அவருக்கு எப்படி சாத்தியமாகிறது என்று புரியவில்லை. சாதாரணமாக இரண்டு மணி நேரத்தில் இரண்டு அல்லது மூன்று காபி குடித்தாலே எதிர்த்துக் கொண்டு வரும்! இவருக்கு ஒன்றும் செய்யாது போலும்!

மாலையில் பஜ்ஜி – அது பாட்டுக்கு பத்து பன்னிரெண்டு என உள்ளே அனுப்பிக் கொண்டே இருக்கிறார்! கூடவே தேநீர் கப் கப்பாக உள்ளே அனுப்புகிறார்! ஒரு வேளை அடைத்துக்கொள்ளாமல் இருக்க குடிப்பாரோ? மதிய உணவு எல்லோருக்கும் போடும்போதும் பார்த்தேன் – பந்தி முடிந்து கடைசியில் தான் எழுந்திருக்கிறார். இத்தனை சாப்பிட அவரால் எப்படி முடிகிறது என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

இவரைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தபோது அங்கே வந்திருந்த இன்னொரு நண்பரும் சொன்னார் – இவரை சாப்பாட்டு விஷயத்தில் அடித்துக்கொள்ளவே முடியாது என்றும், தில்லியில் எல்லா தமிழர்களின் நிகழ்ச்சிகளிலும் இவரைக் கண்டிப்பாக பார்க்க முடியும் என்று சொன்னபோது என்னால் நம்பமுடியவில்லை – ஒரு வேளை அதிகப்படுத்திச் சொல்கிறாரோ என நினைத்தேன். மூன்றாவதாக இன்னொரு நபரும் இவரைப் பற்றிச் சொன்னதும் தான் புரிந்தது இவரிடம் இருக்கும் டேட்டாபேஸ் ரொம்பவே பக்கா என்று.

இப்படி பக்காவாக ஒரு டேட்டாபேஸ் வைத்துக் கொண்டு இருக்கும் இவருக்கு என்றைக்கும் உணவுப் பஞ்சம் இருக்காது என்பது நிச்சயம். அதிலும் சாப்பாட்டு விஷயத்தில் இவ்வளவு ஈடுபாடு இருப்பதால் தான் இவர் இப்படி விவரங்களைச் சேகரித்து ஒவ்வொரு இடமாக சென்று வருகிறார் போலும். 

மலை மந்திர் கோவிலில் நாங்கள் சென்று சேரும் நேரம் தான் காபி பக்கெட்டோடு ஒருவர் வந்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்தாரோ இல்லையோ, நாலு கால் பாய்ச்சலில் இவர் அவர்களை நோக்கி ஓட, அவர்களோ, முதலில் பாட்டுப் பாடுபவர்களுக்குத் தான் என்று சொல்லியபடி அரங்கத்தினை நோக்கி ஓட, இவர் விடாது துரத்த, ஒரே களேபரம். அவர்களைத் தொடர்ந்து சென்று கொண்டே இருந்தார். ஆனாலும் பாட்டு பாடுபவர்களுக்கு கொடுத்து முடித்தபோது வாளி காலி! இவரும் விடாக்கண்டன் கொடாக்கண்டனாக அவர்களைத் தொடர்ந்து சமையலறை வரை சென்று ஒரு காபியை வாங்கி வெற்றிக் களிப்புடன் தான் வந்தார் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

என்னதான் சாப்பாட்டு விஷயத்தில் அதீத ஆர்வம் என்றாலும், ஒரு அளவிற்கு மேல் சாப்பிடுவது நல்லதல்ல என்பது எப்போது அவருக்குப் புரியுமோ?

மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.