ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

மூன்றிலிருந்து நான்கு!



தலைப்பினைப் படித்தவுடன் ”என்ன வெங்கட், இதுவரைக்கும் சொல்லவே இல்ல!” என்று என்னிடம் செல்லமாய் சண்டை பிடிக்க நினைப்பவர்களுக்கு, நான் சொல்ல ஆசைப்படுவதெல்லாம் ஒன்றே ஒன்று தான் – “இந்த வார படங்களை ரசியுங்கள்!”

என்னிடம் சண்டை பிடிக்கப் போகிறீர்களா இல்லை வாழ்த்து சொல்லப் போகிறீர்களா என்பதை பிறகு பார்த்துக் கொள்ளலாம்!

































என்ன நண்பர்களே படங்களில் உள்ள குட்டிக் குழந்தைகளை பார்த்து மகிழ்ச்சிதானே....  சரி இப்ப விஷயத்துக்கு வரேன்!  நீங்க பதிவின் தலைப்பைப் பார்த்து குழப்பமடைந்திருந்தால் நான் பொறுப்பல்ல! 

இன்று செப்டம்பர் 30. கடந்த 2009-ஆம் வருடம் இதே நாளில் தான் என் வலைப்பயணத்தினைத் தொடங்கினேன்.  இன்று மூன்று ஆண்டுகள் முடிந்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன்.  அதைத்தான் சொல்ல வந்தேன் – நீங்க வேறே என்னமோ யோசிச்சிட்டீங்களே!

மீண்டும் வேறு சில புகைப்படங்களோடு அடுத்த ஞாயிறன்று சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

ஃப்ரூட் சாலட் – 14 – உலக இன்னிசை தினம் – டிப்ஸ் மஹாத்மியம்!


[பட உதவி: கூகிள்]



இந்த வார செய்தி:  

அக்டோபர் இரண்டாம் தேதிகாந்தி பிறந்த தினம்.  இந்த நாள் இன்னோரு விஷயத்திற்காகவும் பிரபலம்.  அன்று தான் உலக இன்னிசை தினம்.  இந்த வருடம் இந்த தினத்தில் உலகம் முழுவதும் இந்தியாவின் புராதன இசைக்கருவியான வீணை பல பிரபல இசைக்கலைஞர்களால் வாசிக்கப்பட இருக்கிறது.

பெங்களூரில் உள்ள National Institute of Advanced Studies-ல் வயலின் மேஸ்ட்ரோ எல். சுப்ரமணியன் அவர்கள் இந்த நிகழ்ச்சியை ஆரம்பித்து வைக்க, சென்னை, ஹைதை, மும்பை, மைசூர், புது தில்லி, திருவனந்தபுரம், மெல்போர்ன், சிட்னி, நியூ ஜெர்சி, சான் ஃப்ரான்சிஸ்கோ, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், ஓஸ்லோ, டென்மார்க் மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் வீணை வாசித்து இந்நாளைக்  கொண்டாட இருக்கிறார்கள்

சென்னையில் அக்டோபர் 2 முதல் 11-ஆம் தேதி வரை ஸ்ரீகிருஷ்ண கான சபாவில்வீணா மஹோத்சவமாகக் கொண்டாட இருக்கிறார்கள்.  இசைப் பிரியர்களுக்கு இது நிச்சயம் நல்ல விருந்தாக இருக்கும்.


இந்த வார முகப்புத்தக இற்றை:



[பட உதவி: கூகிள்]


பேசாத வார்த்தையை விட...
பார்க்காத கண்களை விட...
நினைத்துக் கொண்டிருக்கும்
இதயத்துக்கு வலி அதிகம்!

இந்த வார குறுஞ்செய்தி:

You can make more friends in two months by becoming interested in other people than you can in two years by trying to get other people interested in you – Dale Carnegie.

நடந்தது என்ன: 



[பட உதவி: கூகிள்]

இன்று 28, செப்டம்பர்.  இதே நாளில் தான் 1928-ஆம் வருடம் லண்டனின் செயிண்ட் மேரி மருத்துவமனையில் அலெக்ஸாண்டர் ஃப்ளெம்மிங் பென்சிலின் மருந்தினைக் கண்டுபிடித்தார்.  நவீன மருத்துவத்தில் மிகப்பெரிய மாற்றத்தினை உண்டாக்கிய இந்த மருந்தைக் கண்டுபிடித்தது சென்ற நூற்றாண்டின் முக்கிய கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது.     

ராஜா காது கழுதைக் காது: 

திருச்சி சத்திரம் பேருந்தின் எதிரே இருக்கும் வசந்த பவன் உணவகத்தில் ஆனியன் ஊத்தப்பம் சொல்லி விட்டுக் காத்திருந்தபோது கேட்டடிப்ஸ் மஹாத்மியம்”!



டிப்ஸ் எவ்வளவு கொடுக்கணும்னு தெரியுமா?  நீ சாப்பிடறத பொறுத்துதான் கொடுக்கணும்.  50 ரூபாய்க்கு சாப்பிட்டா அவருக்கு வேலை கம்மி.  200 ரூபாய்க்கு மேலே சாப்பிட்டா கொஞ்சம் வேலை ஜாஸ்தி.  அதுனால, 50 ரூபாய்க்கு உனக்கு பில் வந்தா, 2 ரூபாய் டிப்ஸ் கொடு, 100 ரூபாய்லேர்ந்து 200 ரூபாய் வரைக்கும் உன் பில் வந்தா 5 ரூபாய் கொடு, 200 ரூபாய்க்கு மேலேன்னா, போனா போகுதுன்னு 10 ரூபாய் கொடு!” - சொன்னது ஒரு பதினெட்டு வயது இளைஞன்!


இந்த வாரக் காணொளி: 

இந்தக் காணொளி எனது மின்னஞ்சலுக்கு வந்ததுஉங்கள் குடும்பத்தினரோடு கண்டுகளியுங்கள் என்ற விண்ணப்பத்தோடு!  நீங்களும் பார்த்து ரசிக்கலாம்! :)

இந்த காணொளியைக் காண இங்கே செல்லுங்கள்!

மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை



நட்புடன்




வெங்கட்.

புது தில்லி.

டிஸ்கி: தொடரும் நண்பர்கள் டாஷ்போர்டில் அப்டேட் ஆகாத எனது இதற்கு முந்தைய பதிவு - 

பிரம்மஹத்தி தோஷம் போக்கும் மத்யார்ஜுனேஸ்வரர்


புதன், 26 செப்டம்பர், 2012

பிரம்மஹத்தி தோஷம் போக்கும் மத்யார்ஜுனேஸ்வரர்



[கோவிலின் ராஜகோபுரம்]

திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்கள் பழமையான கோவில்களுக்குப் பெயர் போனவை.  திருச்சிகோவை நெடுஞ்சாலையில் உள்ள பேட்டவாய்த்தலை என்ற இடத்தினருகில் உள்ள தேவஸ்தானம் என்ற இடத்திலும் இப்படி ஒரு பழமையான கோவில் இருக்கிறது. பேட்டவாய்த்தலை கிராமத்தில் பசுமையான தோட்டங்களும், பச்சை மரங்களும், வயல்வெளிகளும் நிறைந்த இடத்தில் அருள்மிகு பாலாம்பிகை சமேத ஸ்ரீ மத்யார்ஜுனேஸ்வரர் குடிகொண்டிருக்கும் கோவில் இருக்கிறது.


[பச்சை நிறமே பச்சை நிறமே.... - வயல்வெளி]

ஒரு காலத்தில் வற்றாத நதியாக இருந்த காவிரி நதி பாயும் சோழநாட்டின் திருச்சி மாவட்டத்திலிருந்து கோவை செல்லும் நெடுஞ்சாலையில் திருச்சிக்கு மேற்கே சுமார் முப்பது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இத்திருக்கோவில், சோழ மன்னர் பரம்பரையில் வந்த மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்டது என்று கல்வெட்டுகள் மூலம் தெரிகிறது.


[உய்யகொண்டான் கால்வாய்]


மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் பொங்கி வந்த காவேரி நதியின் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தவும், “சோழ வளநாடு சோறுடைத்துஎன்ற தொல்புகழை நிலைநாட்டவும் உய்யகொண்டான் என்னும் வாய்க்கலை வெட்டுவித்து, அவ்வாய்க்காலின் உற்பத்தி ஸ்தானத்தில் முன்யோசனையோடும் பக்தியுடனும் கட்டப்பட்டது தான் இந்த பேட்டவாய்த்தலை கோவில். கோவில் இருக்குமிடத்தைதேவஸ்தானம்என்றும் அழைக்கிறார்கள்.   கோவில் கட்டியது மட்டுமல்லாது இக்கோவில் பராமரிப்புக்கென பல நிலங்களை தானமாக அளித்திருக்கிறார் என்றும் அவையெல்லாமே இப்போது குத்தகைக்கு விடப்பட்டு அதிலிருந்து சொற்ப வருமானமே வருகிறது என்கிறார்கள்.

ஐந்து நிலைகளைக் கொண்ட இராஜகோபுரம் உள்ள இக்கோவிலில் சுவாமி கிழக்கு நோக்கியும் அம்மன் தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கிறார்கள்.  சுற்றுப்  பிரகாரத்தில், நர்த்தன விநாயகர், கன்னிமூல கணபதி, தட்சிணாமூர்த்தி, சுப்ரமணியர், கெஜலட்சுமி, துர்க்கா தேவி போன்ற சன்னதிகளும் உள்ளன.  கோவிலின் தல விருட்சம் வன்னி மரம்.


[வன்னி மரம்]


மழைக்காலத்தில் சுவாமி சன்னதியின் தரையிலுள்ள ஊற்றுகள் வழியாக நிலத்தடி நீர் மேலே வந்து நிரம்புவதால் திருவானைக்கால் ஜலகண்டேஸ்வரர் என்று எண்ணும்படியாக இருக்குமாம்.  பிரம்மஹத்தி தோஷம் காரணமாக குழந்தை பாக்கியம் இல்லாத மன்னனுக்கு, இக்கோவில் கட்டி முடித்த பின் குழந்தை பாக்கியம் உண்டாயிற்றாம்.  அதை நினைவு படுத்தும் வகையில் இங்குள்ள மண்டபத்தில் ஒரு தூணில் பிரம்ம ஹத்தி உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. 


[கோவில் விளம்பரப் பலகை]

பெண்களின் கர்ப்பப்பை கோளாறுகள் நீங்குவதற்கும் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளுக்கும் இக்கோவில் அம்பாள் அருள்மிகு பாலாம்பிகைக்கு விரதம் இருந்து வழிபட்டால் பாதிப்பில் இருந்து விடுபட வழிபிறக்கும் என நம்புகிறார்கள்.  இக்கோவில் பற்றி அவள் விகடன், சக்தி விகடன் போன்ற இதழ்களிலும், தினத்தந்தி நாளிதழிலும் செய்திகள் வெளிவந்ததை கோவிலில் ஒட்டி வைத்திருந்தனர். கோவிலுக்கென்று ஒரு தேர் இருந்தது என்பது வெளியிலிருந்த இரண்டு சக்கரங்கள் கொண்டதோர் உருவத்திலிருந்து புரிகிறது.




[நாணல் புதர்]


அமைதி குடிகொண்டிருக்கும் இக்கோவிலுக்குச் செல்லும் வழியில் நாணல் புதர்கள் மண்டிக்கிடக்கின்றன.  கிராமத்து மக்களுக்கு வழியோரம் தான் கழிப்பறைகள் போல.  கிராமத்திலுள்ள வீடுகளுக்கு அரசாங்கமோ, உதவி நிறுவனங்களோ கழிவறைகள் கட்டிக்கொடுத்து அதன் சுத்தம் மற்றும் சுகாதாரத்தினையும் சொல்லிக் கொடுத்தால் நன்றாயிருக்கும்.




[நாளைய பாரதம் - 1]



[நாளைய பாரதம் - 2]

நான் சென்றது சுதந்திர தினம் அன்று என்பதால் கோவில் உள்ளே இருக்கும் சிறுவர் பள்ளியில் கொடியேற்றி கொண்டாடிவிட்டு வெளியே விளையாடிக்கொண்டிருந்தார்கள் சில மாணவிகள்.  புகைப்படங்கள் எடுப்பதைப்பார்த்துஅண்ணே எங்களையும்ஃபோட்டாபுடிங்கண்ணேஎனக் கேட்கவே, அவர்கள் அனைவரையும் எடுத்தேன்.  பிறகு இரண்டிரண்டு பேராக  எடுக்கவும் கோரிக்கை! அதனையும் நிறைவேற்றி  வெளியே வந்தோம்.  வழியில் உள்ள ஒரு கால்வாய் பாலத்தில் சில சிறுவர்களும் உட்கார்ந்திருக்க, அவர்களையும் புகைப்படங்கள் எடுத்துக் காண்பித்து விட்டு ஊரை விட்டு வந்தோம்.



[புதிய ஆஞ்சனேயர்....]


ஊரின் வெளியே இப்போது 45 அடியில் ஒரு பெரிய ஆஞ்சனேயர் சிலை நிர்மாணித்து வருகிறார் ஒருவர்.  இன்னும் சில மாதங்களில் திருச்சியிலிருந்து கோவை செல்லும்போது அபயஹஸ்தத்தோடு அருள்பாலிக்கும் ஆஞ்சனேயரை நீங்கள் காண முடியும்.   கோவில் அமைப்பதோடு கிராமத்திற்கென கழிப்பறைகளும் கட்டிக்கொடுத்தால் நன்றாக இருக்குமே என்ற நல்லெண்ணத்தினையும் அவர் மனதில் விதைத்து வந்தோம்.

திருச்சி வரும்போது நேரமிருந்தால் அருள்மிகு பாலாம்பிகை உடனுறை ஸ்ரீ மத்யார்ஜுனேஸ்வரர் கோவிலுக்கும் சென்று வாருங்களேன்.

மீண்டும் வேறொரு பதிவில் சந்திப்போம். அது வரை

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.