வியாழன், 31 டிசம்பர், 2009

என்றும் இருபத்தி எட்டுதில்லி வந்த முதல் நாள் என்னை அலுவலகத்திலிருந்து கரோல் பாக் அழைத்துச் சென்றவர் பத்மா. பத்தொன்பது வருடங்கள் கழிந்திருந்தாலும், அன்று எப்படி இருந்தாரோ அப்படியே இன்றளவும் இருக்கிறார். என் மேல் அபரிமிதமான அன்பை பொழிந்து பாசத்தைக் கொட்டும் ஒரு நல்ல உள்ளம்.

பக்த மார்க்கண்டேயனுக்கு வயது எப்படி என்றும் பதினாறோ, அது போலவே பத்மாவிற்கு இடுப்பளவு என்றும் இருபத்தி எட்டு. அவரது உடலில் எந்த மாற்றமும் இல்லை. அவர் கல்லூரியில் படித்த காலத்தில் தைத்த உடைகள் இன்றும் அவருக்கு கச்சிதமாக பொருந்துகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! எங்கள் அலுவலகத்தில் அவரைப் பார்த்தால் பொறாமைப் படாதவர்களே கிடையாது!.

நான் அவரை விட சிறியவனாக இருந்தும், அன்று பென்சில் போல இருந்தவன், இன்று தொப்பையும் தொந்தியுமாக காணப்படுகிறேன். அவரோ "அன்று பார்த்த கண்ணுக்கு அழிவில்லாமல் அப்படியே இருக்கிறார்". இத்தனைக்கும் இந்த கால கட்டத்தில் பத்மாவிற்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தையும் பிறந்து, அக்குழந்தையே இன்று எட்டாம் வகுப்பில் படிக்கிறது! . பொதுவாக கல்யாணம் ஆனவர்கள் சந்தோஷத்தில் குண்டாகி விடுவார்கள் என்று சொல்வது போல் இல்லாமல், இப்போதும் அப்படியே இருக்கிறார்.

மற்றவர்கள் பொறாமைப்படும்படியாக இருப்பவர் "உடம்பெல்லாம் அப்படியே இருந்து என்ன பண்றது? தலயிலே இருந்த முடியெல்லாம் கொட்டி 'சொட்டையாகி' விட்டதே!" என்று ஒரேயடியாக கவலைப்படும் பத்மா என்று எங்களால் செல்லமாக அழைக்கப்படும் பத்மநாபன் அண்ணாச்சியை என்னத்தைச் சொல்லி தேற்றுவது?

அதனால் தான் என்னுடைய முந்தைய பதிவான மஞ்சள் மகிமை-க்கு அவர் பின்னூட்டம் இப்படி போட்டுள்ளார்!

"அண்ணாச்சி! இந்த Fevicol - ஐ தலையில் தேய்க்க முடியுமான்னு ஒண்ணு கேட்டு சொல்லுதேளா! நமக்கும் தலையில முடி முளைச்ச மாதிரி ஆச்சுல்லா!"

புதன், 30 டிசம்பர், 2009

கர்நாடகா மெஸ்

வேலை கிடைத்து தில்லி வந்து மூன்று வருடங்களுக்குப் பிறகு கரோல் பாக் பகுதியியிலிருந்து தில்ஷாத் கார்டன் பகுதிக்கு நாங்கள் நான்கு நண்பர்களாக சேர்ந்து குடி பெயர்ந்தோம். நிறைய எண்ணிக்கையில் மலையாளிகள் இருந்தாலும் தமிழர்கள் அவ்வளவாக இல்லாத பகுதி இது. வெளியே சாப்பிட வேண்டும் என்றால் தாபா மட்டும் தான். அங்கு தந்தூரி ரொட்டி மற்றும் சப்ஜிதான் கிடைக்கும்.

எங்களுக்கு ஏற்கனவே சமைத்து பழக்கம் இருந்ததால் ஒரு சிலிண்டரும் காஸ் அடுப்பும் வைத்து சமைத்து அனைவரும் சாப்பிட்டு வந்தோம். சிலிண்டர் தீர்ந்து விட்டால் மீண்டும் வரும் வரை "கோவிந்த்" தாபா ஜிந்தாபாத் தான்.

ஓரிரண்டு நாட்களில் சிலிண்டர் வந்த பிறகு திரும்பவும் நள பாகம் ஆரம்பம். வாழ்க்கை இப்படியே ஓடிக்கொண்டிருந்திருந்தால்தான் நன்றாக இருந்திருக்குமே! ஒரு நாள் நண்பர் ஒருவர் எங்களது வீடு இருந்த பகுதியில் ஒரு கர்நாடகா குடும்பம் இருப்பதாகவும் அவர்கள் தேவைப்படுவர்களுக்கு முன்கூட்டியே தெரிவித்தால் சமைத்துக்கொடுப்பார்கள் எனவும் தெரிவித்தார். இந்த விஷயம் தெரிந்த பத்து நாட்களுக்குள் சொல்லி வைத்த மாதிரி எங்கள் வீட்டில் காஸ் சிலிண்டர் தீர்ந்து விடவே அந்தக் கன்னட பெண்மணியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நான்கு பேருக்கு சாப்பாடு தேவை என்று சொன்னோம். அவரும் எங்களை அவர்கள் வீட்டிற்கு வந்து சாப்பிட அழைத்தார்.

இரவு எட்டுமணிக்கு மேல் அவரது வீட்டிற்கு சென்று கதவைத் தட்டிவிட்டுக் காத்திருந்தோம். கதவைத் திறந்து உள்ளே அழைத்த வீட்டின் தலைவர் எங்களை சோபாவில் உட்கார வைத்து சிறிது காத்திருக்கச் சொன்னார். பிறகு அந்த பெண் வந்து எங்களுக்கு சுடச்சுட சாதம், பொரியல், சாம்பார் என ஒவ்வொன்றாக பரிமாற நாங்கள் நால்வரும் குஷியாக சாப்பிட ஆரம்பித்தோம்.

குனிந்த தலை நிமிராமல் புதிய மணப்பெண் போல நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்க திடீரென "உர் உர்" என்ற உறுமல் சத்தம். நிமிர்ந்து பார்த்தால், மேஜை மீது தன் முன்னிரண்டு கால்களையும் வைத்து, எங்கள் முகத்தின் அருகே நாக்கைத் தொங்க போட்டபடி ஒரு பெரிய நாய் எங்களை முறைத்துக் கொண்டு இருந்தது. பயத்தில் எங்கள் நால்வருக்கும் நாக்கு வெளியே தள்ளியது.

உள்ளிருந்து வந்த பெண்மணியிடம் " இந்த நாயை கட்டி போடுங்கள்!" என நாங்கள் கோரஸாகச் சொல்ல, அவரோ " இந்த டைகர் ஒன்னும் பண்ண மாட்டான் பயப்படாதீங்க!" என்று எங்களிடம் சொல்லிவிட்டு, நாயைப் பார்த்து " டைகர் உட்காரு," என்று சொல்ல, அது எங்கள் அருகிலேயே சோபாவில் உட்கார்ந்து கொண்டது. அதன் பிறகு எங்களுக்கு சாப்பாடு எங்கே இறங்கும்?. சாம்பார் சாதத்துடன் சாப்பாட்டை முடித்துக்கொண்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று எடுத்தோம் ஓட்டம்.

அதன் பிறகு அந்த கன்னட குடும்பம் இருக்கும் தெருப் பக்கம் கூட நாங்கள் தலை வைத்துப் படுத்ததில்லை. சிலிண்டர் தீர்ந்தால் தந்தூரி ரொட்டி தான். இதற்குத்தான் ஆங்கிலத்தில் "BE A ROMAN WHEN YOU ARE IN ROME" என்று சொன்னார்களோ?

வியாழன், 24 டிசம்பர், 2009

அணு அளவும் பயமில்லை?

விஜய் டிவியில் அணு அளவும் பயமில்லை சீசன்-2 வந்து கொண்டிருக்கிறது. முதல் சீசனில் அனுஹாசன் ஹோஸ்ட் செய்த இந்த நிகழ்ச்சி இப்பொழுது லக்ஷ்மி ராயினால் [தமிழ் அங்கங்கே எட்டிப்பார்க்கும் ஆங்கிலத்தில்] ஹோஸ்ட் செய்யப்படுகிறது. இது போன்ற நிகழ்ச்சி தமிழுக்குப் புதிது என்றாலும், இதற்கு இந்தியாவில் முன்னோடி "கலர்ஸ்" ஹிந்தி சேனலில் வரும் "கத்ரோன் கே கிலாடி" [ஆபத்துகளுடன் விளையாடுபவர்]. இந்த ஹிந்தி நிகழ்ச்சி பிரபல ஹிந்தி நடிகர் அக்ஷய் குமாரினால் நடத்தப்படுகிறது.

டி.வி.யில் வரும் பெரும்பாலான சீரியல்கள் வெறும் அழுகாச்சி ரகம் தான் . இல்லையெனில் யாரை எப்படி கவுக்கலாம், எப்படி மத்தவங்களை ஒழிக்கலாம் என்பதையெல்லாம் காட்டும்படியாகத்தான் இருக்கு. என்னதான் இந்த "அணு அளவும் பயமில்லை" நிகழ்ச்சி மற்ற சீரியல்களில் இருந்து மாறுபட்டு இருந்தாலும் "ரியாலிட்டி ஷோ" என்று சொல்லும் அளவுக்கு இதில் ரியாலிட்டி இருப்பதாக தோன்றவில்லை.

தமிழ்நாட்டிலும் சரி இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் சரி எவ்வளவோ மக்கள் தினம் தினம் தங்களது வாழ்க்கையில் பல ஆபத்தான பணிகளில் சர்வ சாதாரணமாக ஈடுபடுகின்றனர். பலருக்கு தங்களது வயிற்று பிழைப்புக்காக என்றால் வேறு சிலருக்கோ அப்போதைய சந்தர்ப்பங்களினால்.

தமிழகத்தில் இருப்பவர்களில் பலர் கழைக்கூத்தாடிகளை பார்த்திருக்கலாம். இரண்டு பக்கத்திலும் குச்சி நடப்பட்டு, குறுக்கே கட்டப்பட்ட ஒரு மெல்லிய கயிற்றின் மேல் கையில் ஒரு நீண்ட குச்சியை பிடித்துக்கொண்டு சர்வ சாதாரணமாக நடப்பார் ஒரு சிறிய சிறுமி. டி.வி நிகழ்ச்சியில் காட்டப்படுவது போல கீழே எந்த விதமான பாதுகாப்பு வலையோ/ மெத்தையோ கிடையாது. கயிற்றின் மேலே நடக்கும் சிறுமியின் கண்களில் பயமோ, தடுமாற்றமோ இருப்பதில்லை. வயிற்று பிழைப்பு அவர்களை இப்படி நடக்க வைக்கிறது.

குற்றாலம் மலைப் பகுதிகளில் பலர் தேன் எடுப்பதற்காகவும் தங்களின் தினசரி உணவினை சேகரிக்கவும் மலைச்சரிவுகளில் எந்த விதமான பிடிமானமும் இன்றி ஏறி இறங்குகின்றனர். குற்றாலம்/பாபநாசம் அருவிகளில் குளிக்க வந்து, பொங்குமாங்கடலில் தடுமாறியோ அல்லது தற்கொலைக்கு முயன்றோ விழுந்துவிடும் பயணிகளை காப்பாற்ற அல்லது உடலை மீட்க மலை உச்சியில் இருந்து அனாயாசமாக தண்ணீருக்குள் குதிப்பவரை பார்க்கிறோம் . குதிக்கும் போது அவர்களுக்கு பயமாக இருக்காதா? "பயமா? அப்படின்னா...?" என்று நம்மிடமே திருப்பிக் கேட்கிறார்கள் அவரைப் போன்றவர்கள்.மேலே உள்ளது ஒரு பெண் இரண்டு ரயில் பெட்டிகளின் நடுவில் உள்ள connector -இல் உட்கார்ந்து பயணம் செய்பவரின் படம். அவரது முகத்தில் பயக் களை கொஞ்சமாவது இருக்கிறதா? இல்லையே!. அவரை பொறுத்தவரை இது ஒரு சாதாரணமான, தினமும் நடக்கும் ஒரு நிகழ்வு.

சீரியல் எடுத்து லட்சங்களில் பணத்தை அள்ள இவர்களுக்கு இப்படியெல்லாம் ஒரு வழி. தங்களுக்கு கிடைக்கும் வருமானத்தில் ஒரு சிறிய பகுதியையாவது இவர்களைப் போன்ற ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்ய பயன்படுத்தினால் தாங்கள் போகிற வழிக்கு புண்ணியம் தேடிக்கொண்டவர்களாக இருப்பார்கள். செய்வார்களா?

திங்கள், 21 டிசம்பர், 2009

மஞ்சள் மகிமை
Pedilite நிறுவனம் தனது Fevicol Adhesives - களுக்கு பல நல்ல விளம்பரங்களைத் தருகின்றனர். சில நாட்களாக வந்து கொண்டு இருக்கும் ஒரு விளம்பரம்... நாடகத்தில் ஆண் வேடம் தரித்து நடிக்கும் ஒரு சிறிய பெண் மீசை வைத்துக்கொள்ள Fevicol-ஐ பயன்படுத்தி விடுகிறார். நாடகம் முடிந்த பின்னர் மீசையை எடுக்க முடியாமல் வாழ் நாள் முழுவதும் மீசையுடன் இருப்பது போல காட்டி இருப்பார்கள். இது வரை பார்க்காமல் இருந்தால் மேலே உள்ள சுட்டியை கிளிக்கினால் பார்க்கலாம். இந்த விளம்பரம் பார்த்த பிறகு எனக்கு தோன்றிய எண்ணங்களை பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.

இது ஏதோ விளம்பரத்திற்க்காக எடுத்த படம் என்றாலும் வட இந்தியாவில் நிறைய பெண்கள் அரும்பு மீசையுடன் திரிவதை பார்க்கலாம். திங்கள் கிழமை காலை பார்த்தால் மீசை இருக்காது. வெள்ளிக்கிழமை வரை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து மீண்டும் மீசையுடன் இருக்கிறார்கள். பெரும்பாலான வட இந்திய ஆண்கள் தினமும் தாடியை மழிக்கும்போது மீசையையும் சேர்த்தே எடுத்துவிடுவதால் எப்போதுமே பளிச்சென இருக்கிறார்கள்.

தமிழ் நாட்டில் சில பெண்கள் மஞ்சள் பூசிய முகத்தோடு பளிச்சென இருக்கிறார்கள். மஞ்சள் பூசி குளிப்பதன் மகிமைகளை எனது தாய் கூற கேட்டிருக்கிறேன். என்னுடைய சிறிய வயது சகோதரிகளுக்கு சொல்வார்கள், "நீ குளிக்கும் போது மஞ்சள் பூசி குளித்தால் உனக்கு முகத்தில் முடி வளராது, அழகா இருப்பே!" என்று. எனக்கு தெரிந்து பல பெண்கள் மஞ்சள் பூசி குளித்து முகத்தில் முடியில்லாமல் நன்றாக இருந்திருக்கிறார்கள். இப்போதெல்லாம் பெண்கள் மஞ்சள் பூசிக்கொள்கிறார்களா என்பதே தெரியவில்லை.

டெல்லியிலோ அது போன்ற பழக்கமே இல்லை. பெரும்பாலான பெண்கள் மீசையுடன் இருப்பதால், வாரத்தில் ஒரு முறையாவது Beauty Parlour சென்று ப்ளீச்சிங், த்ரடிங் என்று பல விதத்தில் முகத்தில் உள்ள தேவையற்ற முடியை அகற்றுகிறார்கள். வீணாக அம்பது, நூறு என்று செலவழித்து மீண்டும் ஒரே வாரத்தில் தாடி, மீசை என வந்து அவர்களைப் பார்த்து பல் இளிக்கிறது. மருத்துவ ரீதியாக இது harmone problem என்று மனதை சமாதானம் செய்து கொள்கிறார்கள்.

என்னுடைய நாலு வயது பெண்ணை குளிப்பாட்டும்போது அவளிடம் மஞ்சள் பூசி குளித்தால் முகத்தில் முடி வளராது என்று சொன்னேன். உடனே தாடியுடன் இருந்த என்னை பார்த்து கேட்கிறாள், "ஏம்பா, உங்கம்மா உனக்கு மஞ்சள் தேச்சி குளிப்பாட்டலையா? உன் மூஞ்சி எல்லாம் முடியா இருக்கே!" என்று. என்னத்த சொல்ல?

வெள்ளி, 18 டிசம்பர், 2009

அடிக்குது குளிரு...


தலை நகர் தில்லியில் குளிர் ஆரம்பித்து விட்டது. இரவு நேரத்தில் எட்டு டிகிரியும் பகலில் இருபது முதல் இருபத்து நான்கு டிகிரியும் உள்ளது. மாத கடைசியிலும் ஜனவரி மாதத்திலும் இன்னும் அதிகமாகி விடும். ஆனாலும் இங்கு ஒன்றும் பனி மழையோ நடுக்கும் குளிரோ இப்போது இல்லை. பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பெல்லாம் கூட தில்லியில் இரண்டு மூன்று டிகிரி வரை இரவு நேரங்களில் இருந்தது உண்டு. பகலிலேயே கூட ஒன்பது டிகிரி குளிரில் இருந்திருக்கிறோம்.

இங்கே குளிர் வந்து விட்டதை தெரிந்து கொள்ள சிரமப்படத் தேவையில்லை. குளிர் வந்தாலும் வராவிட்டாலும் இங்குள்ளவர்கள் தீபாவளி முடிந்த அடுத்த நாளில் இருந்து ஸ்வெட்டர் அணிய ஆரம்பித்து விடுகிறார்கள் - அதிலிருந்தே குளிர் வரப்போவதை/ வந்து விட்டதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். குளிருதோ இல்லையோ ஸ்வெட்டரை கழற்றுவதே இல்லை. தீபாவளிக்கு அடுத்த நாள் ஸ்வெட்டரை போட்டுக்கிட்டா February/March மாசம் வர ஹோலி பண்டிகைக்கு அடுத்த நாள் தான் கழட்டுவேன்னு அடம் பிடிக்கிறார்கள். ஏதோ அண்டார்டிகா-ல இருக்கற மாதிரி ஒரு நினைப்பு அவர்களுக்கு. அவங்க நம்ம பக்கத்தில் வந்தாலே நமக்கு வேர்க்குது.

ஆளாளுக்கு ஒரு ஸ்வெட்டர், அதுக்கு மேல ஒரு கோட், டை கட்டிக்கிட்டு இருக்காங்க. கோட்-சூட் போட்டுக்கிட்டு சைக்கிளிலோ, நடந்தோ போறாங்க! இங்கே வந்த புதுசுல இது தெரியாததால, கோட்-சூட்டோட யாரை பார்த்தாலும் ஏதோ பெரிய ஆள் போலன்னு நினைப்பேன். ஒரு நாள் பஸ்சுக்கு லேட்-ஆச்சுன்னு ஆட்டோவில் போகலாம்னு என் நண்பர் ஆட்டோ பக்கத்தில் நின்றிருந்த கோட் ஆசாமியிடம் ஆட்டோ வருமா என கேட்க, எனக்கு ஒரே பயம் - என்னடா இது ஒரு பெரிய ஆள்கிட்ட போய் ஆட்டோ வருமான்னு கேட்கிறாரே என்று. பிறகு பார்த்தால், அதே ஆள் பேரம் பேசி ஐம்பது ரூபாய்க்கு சவாரி வந்தார்!.

நடந்து போகும்போது கையும் வாயும் சும்மா இருக்காது. கோட் பாக்கெட்டில் இருந்து வேர்க்கடலையை எடுத்து வாய்ல போட்டுக்கிட்டு தோலை ரோட்டில் போட்டு விட்டு செல்கிறார்கள். வேர்க்கடலை தோல்/குப்பை இல்லாத ஒரு பஸ் கூட, இந்த நாட்களில் நீங்க பார்க்க முடியாது.

இது இல்லாம, குளிர் கால ஸ்பெஷல் ஆக நிறைய கிடைக்கிறது - சிக்கி [கடலை கேக் ], ரேவ்டி [எள்ளும் வெல்லமும் கலந்த ஒரு தின்பண்டம் - சிறிய தட்டையான வடிவத்தில்]. தமிழ் நாட்டில அவிச்ச வேர்க்கடலை கிடைக்கும். ஆனா இங்க அதுக்கு பதிலா அவிச்ச சக்கரை வள்ளி கிழங்கு!, முட்டை, கேரட் ஹல்வா -இப்படி வகை வகையான குளிர் கால தின்பண்டங்களை சொல்லலாம்.

குளிர் காலம் தான் இங்கே கல்யாண காலம். நம்ம ஊர் மாதிரி எல்லா மாசங்களிலும் கல்யாணம் செய்வதில்லை. பெரும்பாலான கல்யாணங்கள் குளிர் மாதங்களில் தான் நடக்கிறது. மாப்பிள்ளை ரூபாய் நோட்டு மாலை போட்டு குதிரை மேல் உட்கார்ந்து, பெண் வீட்டார் ஏற்பாடு செய்துள்ள கல்யாண மண்டபத்திற்கு செல்கிறார். பெண்கள் ஜிகுஜிகுன்னு உடை அணிந்து, குளிரை பயமுறுத்துவது போல, ஒரு ஷால்-ஐ மடித்து கையில் போட்டுக்கொண்டு குதிரை பின்னால் டான்ஸ் ஆடியபடி செல்கிறார்கள்! குதிரை பயந்து நடுங்கியபடி செல்கிறது. நம்ம ஊர் மாதிரி காலை நேர கல்யாணம் கிடையாது, இரவில் நடக்கிறது. நிறைய சம்பிரதாயங்கள் - அதை பற்றி தனியே ஒரு பதிவே போடலாம்.

குளிர் வந்த உடனே கம்பளி, ஸ்வெட்டர், மற்ற குளிர் கால உடைகளை எடுத்து தூசி தட்டி, வெய்யிலில் காய வைத்து வைக்கணும். குளிர் காலம் முடிந்து திரும்ப எல்லாத்தையும் Dry கிளீனிங் கொடுத்து திவான் [பாக்ஸ் டைப் கட்டில்] உள்ள பத்திர படுத்தணும். இப்படி நிறைய வேலை எல்லோருக்கும். மூணு மாச குளிர் கால கூத்துக்கு எத்தனை வேலை! தாங்க முடியலடா சாமி.

செவ்வாய், 15 டிசம்பர், 2009

கண்ணீர் திரையிட்ட மகாநதி


சென்ற செவ்வாய்க் கிழமை அலுவலகம் முடிந்து வீடு திரும்பியபோது என் இல்லத்தரசி "கே" டி.வியில் கமல்ஹாசன், சுகன்யா, கொச்சின் ஹனீபா மற்றும் பூர்ணம் விஸ்வநாதன் நடித்த மகாநதி திரைப்படத்தை பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு சாதாரண கிராமத்து விவசாயி எப்படியெல்லாம் ஏமாற்றப்பட்டு தனது குடும்பம், சொத்து, நிம்மதி என்று எல்லாவற்றையும் இழக்கிறார் என்பதை படம்பிடித்துக் காட்டிய தேசிய விருது பெற்ற ஒரு நல்ல படம்.

நிறைய முறை இந்த படத்தை பார்த்திருந்தாலும் திரும்பவும் பார்க்க ஏனோ வெறுப்பு ஏற்படவில்லை. கடைசி 15 நிமிடங்கள் பார்த்துக் கொண்டிருந்த போது இந்த படத்தை முதன் முதலாக பார்த்த நினைவுகள் எனது மனதில் வந்து அலைமோதியது.

அந்த படம் வெளியானபோது நான் தில்லி வந்து மூன்று வருடங்கள் ஆகியிருந்தது. சில சமயங்களில் தில்லி தமிழ் சங்கம் அருகில் உள்ள "சங்கம்" திரை அரங்கில் தமிழ்ப் படங்கள் திரையிடுவார்கள். அது தவிர TYCA [Tamil Youth Cultural Association] என்ற ஒரு அமைப்பு மாதம் ஒரு முறை அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை Pahar Ganj பகுதியில் உள்ள மகாராஷ்டிரா ரங்கராயன் அரங்கில் தமிழ்ப் படங்கள் திரையிடுவார்கள். மற்ற எந்த திரை அரங்குகளிலும் தமிழ்ப் படங்கள் திரையிடப்படுவதில்லை. அந்த அமைப்பின் உறுப்பினர் என்றால் கட்டணம் 25 ரூபாய் இல்லையெனில் அதிகம் [சரியாக நினைவில்லை].

மகாநதி திரைப்படம் அந்த அரங்கினில் திரையிடப்பட்டது. எனது அண்ணனால் [தாய் வழி உறவினர்] அவரது அலுவலகத்திலிருந்து வர இயலாததால், நானும் எனது அண்ணியும் படம் பார்க்கச் சென்றோம். படம் பார்த்து கனத்த மனதுடன் படத்தில் உள்ள நிகழ்வுகளை நினைத்தபடி வெளியே வந்து ஆட்டோவில் கரோல் பாக் சென்றோம். எனது அண்ணி ஆட்டோவில் வரும்போது சினிமாவின் தாக்கத்தினால் அழுது கொண்டே வந்தார். அவரை எப்படி சமாதானப்படுத்துவது என்று எனக்கு புரியவில்லை. ஆட்டோ ஓட்டுனர் வேறு திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டேயிருந்தார். வீட்டிற்கு சென்ற பிறகும் அவரது அழுகை நின்றபாடில்லை. அண்ணனும் எவ்வளவோ சொல்லியும் அரை மணி நேரம் கழித்தே அவரது அழுகை நின்றது.

என்னதான் இது ஒரு சினிமாதானே என்றிருந்தாலும் நமது மனம் அதில் ஒன்றிவிட்டால் என்னவோ இது நிஜமாகவே நடந்த ஒரு நிகழ்ச்சி போல ஏனோ வருந்துகிறோம். நமது மனதில் இந்த நிகழ்ச்சிகள் அத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால் நிஜமாகவே இந்த படத்தில் காட்டப்பட்ட நிகழ்ச்சிகள் நடக்கும் போது பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எந்த விதமான உதவியும் சமூகத்திலிருந்து கிடைப்பதில்லை. மாறாக அவர்கள் மேலும் காயப்படுத்தப் படுகிறார்கள்.

இங்கே ஒரு விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். இவர்களைப் போன்றவர்களுக்காக உழைக்கும் ஒரு நல்ல உள்ளம் சுனிதா கிருஷ்ணன். இவரை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் இங்கு செல்லவும்.

வெள்ளி, 11 டிசம்பர், 2009

பிடிச்ச பத்து, பிடிக்காத பத்து

பிடிச்ச பத்து, பிடிக்காத பத்து பதிவு நெறைய வலைபூக்களில் வந்து கொண்டு இருக்கு. இப்போ இந்த வம்பிலே என்னையும் இழுத்து விட்டு வேடிக்கை பாக்கிறார் நம்ப மோகன். சரி என்னதான் இது, ஒரு கை பாத்துடுவோம்னு நானும் இறங்கிட்டேன்.


இந்தப் பதிவோட விதிகள்-னு சிலத கொடுத்து இருக்காங்க - ரூல்னாலே அததான் நாம மதிக்கிறதே இல்லையே!:

1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும். (நானே தமிழ்நாட்டுலே இல்லையே! என்ன பண்ணலாம்?)

2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம் [சரி சரி!]

3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். [புதுசா யாரையும் பிரபலம் ஆக்கவுட மாட்டீங்களோ!]

4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம். [எனக்கு கேள்வி கேட்கத்தான் தெரியும்]

5. இந்த லிஸ்டில் நீங்க சொல்றவரு இப்ப உயிரோட இருக்கணும் [அச்சச்சோ!]


1.அரசியல்வாதி

பிடித்தவர்: ரொம்ப யோசிச்சா கூட ஒருத்தரும் தெரியலையே? என்ன பண்றது. choice-ல விட்டுடட்டா?

பிடிக்காதவர்: ஒருத்தருமே பிடிக்காதே அதனால இதுக்கு வேற தனியா பதில் எதுக்கு!.

2. நடிகர்

பிடித்தவர்:

சிவக்குமார்
கமல்ஹாசன் [For his multi-facetted திறமை]


பிடிக்காதவர்: சிம்பு, சிபிராஜ்.

3. நடிகை

பிடித்தவர்: ரேவதி, சுஹாசினி

பிடிக்காதவர்: நமிதா, நயன்தாரா [இதிலென்ன சந்தேக பார்வை?]

4. இயக்குனர்:

பிடித்தவர் :

பாலச்சந்தர்,ஷங்கர், கே.எஸ். ரவிக்குமார்

பிடிக்காதவர்: எஸ். ஜே. சூர்யா

5. தொழிலதிபர்

பிடித்தவர்: நாராயண மூர்த்தி, லக்ஷ்மி நாராயண் மிட்டல், விஜய் மல்லையா, ரத்தன் டாட்டா.

பிடிக்காதவர்: அனில் அம்பானி

6. எழுத்தாளர்

பிடித்தவர்: பாலகுமாரன், ஜெயகாந்தன் - உயிரோடு இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லா விட்டால் கல்கி, சுஜாதா.

பிடிக்காதவர்: யாரும் இல்லை.

7. இசையமைப்பாளர்

பிடித்தவர்: விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர். ரகுமான்.

பிடிக்காதவர்: சிற்பி.

8. காமெடியன்:

பிடித்தவர் : விவேக், வடிவேலு . உயிரோடு இல்லாதவர்களில் : நாகேஷ்

பிடிக்காதவர் : எஸ். எஸ். சந்திரன்.

9. பதிவர்

பிடித்தவர் :

ரேகா ராகவன், ரவிப்ரகாஷ், விக்னேஸ்வரி, மற்றும் பலர்.

பிடிக்காதவர் : யாரும் இல்லை.

10. பழமொழி (saying)

பிடித்தது: Never Say Die!.

பிடிக்காதது: புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது

நான் கூப்பிடும் பதிவர்கள்:

நிலாமதி
கிருபா நந்தினி

வியாழன், 10 டிசம்பர், 2009

மௌனத்தின் பரிபாஷைகள்
குழந்தை பிறந்து வளர வளர கொஞ்சம் கொஞ்சமாய் அது பேசுவதை கேட்டு எவ்வளவு ஆனந்தம் அடைகின்றனர் அக்குழந்தையின் பெற்றோர்?. ம்மா..., ப்பா... என்று அந்த குழந்தை மழலை சிந்துவதைக் கேட்டுப் பூரித்து போகின்றனர்.

ஆனால் பிறவியிலேயே பேச முடியாமல் பிறக்கின்ற குழந்தைகளும், பிறந்து பின்னர் பேசும் திறமை இழந்தவர்களும் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று நாமெல்லாம் நினைக்கிறோம். எனினும் வேறொரு கோணத்தில் இதை பார்த்தால் அவர்களெல்லாம் எவ்வளவோ பரவாயில்லை எனத் தோன்றுகிறது.

வளர்ந்து நாம் பேசும்போது ஒரு சிலருக்கு ஆனந்தத்தையும் சிலருக்கு கஷ்டத்தையும் தரும்படி நமது வாயில் இருந்து வார்த்தைகள் விழுகின்றன. சொல்லும் சொல்லால் எத்தனையோ பேருடைய மனதை நோகடிக்கிறோம். அது தெரிந்தாலும் நமக்கு மனதில் கிஞ்சித்தாவது சலனம் ஏற்படுவதில்லை. மாறாக ஒரு அல்ப சந்தோஷம் - அடுத்தவனை புண்படுத்தினோம் என்று!

எனது அலுவலகத்தின் அருகில் உள்ள இந்தியா கேட் திடலில் வாரம் ஒரு முறை சில பேச முடியாத நண்பர்கள் ஒன்றாகக் கூடி ஒரு வட்டமாக அமர்ந்து அவர்களது சங்கேத பாஷையில் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். அவர்களுக்குள் நடக்கும் பரிபாஷை நம் போல வாயால் பேசுபவர்களுக்கு புரியாது எனினும் அவர்களது சைகைகளில் இருந்து எனக்கு தோன்றியது "என்ன ஒரு சந்தோஷம் அவர்களின் முகத்தில்? வாய் பேச முடிந்த நாமெல்லாம் இப்படி கூடினால் யாரையாவது நோகடித்துப் பேசி சந்தோஷம் அடைவோம் - ஆனால் இவர்களால் ஒரு வார்த்தை கூட பேச முடியாது எனினும் அடுத்தவரை காயப்படுத்தாமல் எவ்வளவு சந்தோஷமாக சம்பாஷணை செய்து கொண்டு இருக்கிறார்கள்?" என்று.

இதை தான் ஆங்கிலத்தில் "SILENCE IS GOLDEN" என்று சொல்கிறார்களோ?

வெள்ளி, 4 டிசம்பர், 2009

அலை பேசிகள் ஓய்வதில்லை
செய்தி-1: அக்டோபர் மாத இறுதி வரை இந்தியாவில் உள்ள அலைபேசி இணைப்புகள் எண்ணிக்கை 488.80 மில்லியன். நவம்பர் மாதம் மட்டுமே மேலும் பத்து மில்லியன் இணைப்புகள் கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்ற கணிப்பு உள்ளது.

செய்தி-2: 2010 ஜனவரி மாதம் முதல் இப்போது உள்ள பத்து இலக்க அலைபேசி எண்களில் மேலும் ஒரு இலக்கத்தை [9] முன்னாலே சேர்க்க இருக்கிறார்கள். (பத்தோட பதினொண்ணு அத்தோட இது ஒண்ணு - என்பது இது தானோ?)

இந்த அலைபேசி என்ற ஒன்று வந்தாலும் வந்தது, பல சமயங்களில் இதன் பலன்களை விட பாதகங்களே அதிகமாக உள்ளன. அதில் சிலவற்றை வரிசைப்படுத்தி பார்க்கலாம்.

1.ஒருவித தொந்தரவும் இல்லாமல் தனிமையிலே இருக்க ஒரே வழி உங்கள் அலைபேசியை அணைத்து வைப்பதுதான். இது ஒரு சில சமயங்களில் உங்களுக்கு வரவேண்டிய முக்கியமான அழைப்புகளை தடுக்கும் - உதாரணமாக உங்கள் மனைவி ஏதேனும் அவசரம் எனில் உங்களை அழைக்க முடியாது. [ஒரு சில சமயங்களில் வராமல் இருந்தாலும் நல்லது தான் என்பது வேறு விஷயம்!]

2.முன்பெல்லாம் நமக்கு குறைந்தது 100 தொலைபேசி எண்களாவது நினைவில் இருக்கும். இப்போதெல்லாம் 10 எண்கள் கூட நினைவில் இருப்பது இல்லை. அதான் அலைபேசியின் மெமரி-யில் இருக்கே எதுக்கு நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற மெத்தனம். [சில சமயங்களில் மனைவியின் அலைபேசி எண்ணே நினைவுக்கு வருவதில்லை! அதற்கு தனியாக திட்டும் வாங்குகிறோம்!]

3.தில்லி, மும்பை , சென்னை போன்ற மாநகரங்களில் வாகனம் செலுத்திக்கொண்டே அலைபேசியில் பேசுவதால் ஏற்படுகின்ற விபத்துக்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருக்கிறது. தினமும் ஒரு சிலராவது இந்த விபத்துகளில் மடிகிறார்கள். இதற்கு ஒரு முடிவுதான் என்ன?

4.நேற்று கீழ் வீட்டில் வசிக்கும் ஒரு கிருத்துவ பெரியவர் இறந்து விட்டார். அவரது உடல் அடக்கத்திற்கு சென்றிருந்தேன். அடக்கத்திற்கு முன் பாதிரியார் முன்னர் எல்லோரும் அமைதியாக இறந்தவரின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கொண்டு இருந்தனர். அந்த நேரம் பார்த்து ஒருவரின் அலைபேசி திடீரென அலறியது - ஒரு டண்டணக்கா பஞ்சாபி பாடல் மெட்டில். எவருக்கும் நேரம் காலமே தெரிவதில்லை. இது போன்ற இடங்களுக்கு வரும் போதாவது அலை பேசியை அணைத்துவிடலாம் அல்லது வைப்ரேடர் மோடில் வைக்கலாமே!

5.மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் போது பலரும் செவிட்டு மெஷின் போல காதில் ஒரு ஒயரை மாட்டிக்கொண்டு தனியாக பேசுகிறார்கள். அதுவும் இந்த நீலப்பல்லு [அதாங்க இந்த Bluetooth - Bluetooth-றான்களே அதுதான்] வந்ததில் இருந்து இன்னும் தொல்லை தாங்க முடியல! அன்னிக்கு இப்படித்தான் என் பக்கத்தில் இருந்த ஒருத்தன் என்னைப் பார்த்து பேசிட்டு இருக்கான் - "நான் சரியான பைத்தியம் தெரியுமா? அலைபேசியை பையில் வச்சுக்கிட்டு வீடெல்லாம் தேடினேன் கிடைக்கவில்லை" என்று. பயத்தோடு அவனை பார்த்துட்டு இருந்தேன் - அப்புறம் அவன் தன் தலை முடியை ஒதுக்கிவிடும் போது பார்த்தா - நீலபல்லு என்னை பார்த்து இளிக்குது - நீதாண்டா பைத்தியம்னு!

6.இப்போ அலைபேசியில பாட்டு கேட்கிற வசதி இருக்கறதால பொது இடங்களில் கூட சத்தமாக பாட்டு கேட்கிறார்கள். அடுத்தவர்களுக்கு தொல்லையாக இருக்கும் என நினைப்பதில்லை. அதுவும் எல்லாமே குத்துப் பாட்டு!

7.சில நண்பர்களை பார்த்தா என்னவோ இந்த அலைபேசி இல்லன்னா உயிரே போன மாதிரி பேசுவாங்க - இந்த வசதி இல்லாதபோது என்ன செய்தார்கள் என்று நினைப்பதே இல்லை.

பின் குறிப்பு: இத்தனை எழுதினாலும் எங்கிட்டேயும் இரண்டு அலைபேசி இருக்கு! தொல்லை தாங்கவில்லை ஆனாலும் வச்சிட்டு இருக்கேன் - இதுக்கு என்ன சொல்றீங்க?

செவ்வாய், 1 டிசம்பர், 2009

கங்கைக் கரை திடல்இந்தியா ஒலிம்பிக் போட்டிகளில் 1952 -இல் பங்கெடுக்க ஆரம்பித்து இது வரை ஐந்தே ஐந்து பதக்கங்களே பெற்றுள்ளது. இந்திய ஹாக்கி டீம் எட்டு பதக்கங்களை வென்றிருந்தாலும் தனிப்பட்ட முறையில் வெறும் ஐந்து பதக்கங்களையே வென்று உள்ளோம். 100 கோடிக்கும் மேலே மக்கள்தொகை இருந்தும் நமது பதக்க எண்ணிக்கை நூற்றில் பாதி கூட இல்லை என்பது வருத்தப்பட வேண்டிய விஷயம்.

ஆனால் நமது நாட்டில் திறமைகளுக்கு பஞ்சம் இருப்பதாக தோன்றவில்லை. இன்றும் கிராமங்களில் பல திறமைசாலி இளைஞர்கள் உள்ளனர். அவர்களுக்கு நல்ல விதத்தில் பயிற்சி கொடுப்பதற்கோ, அவர்களது திறமையை மேம்படுத்தவோ நமது அரசாங்கமோ தனியார் அமைப்புகளோ முன் வருவதில்லை. அரசாங்கம் திட்டமிடும் பல யோசனைகள் வெறும் காகிதத்திலேயே மடிந்து விடுகின்றன. திட்டத்தில் ஒதுக்கிய பணமோ அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகளின் சாமர்த்தியத்தால் அவர்களின் சட்டைப்பைகளுக்குள் தஞ்சமடைகின்றன.

தனியார் நிறுவனங்களோ கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளுக்கே ஸ்பான்சர் செய்கின்றனர். தடகள போட்டி வீரர்கள் எந்த வித உதவியும் இல்லாமல் சில காலம் தமது முயற்சியால் முன்னேற முயன்றாலும், பண முடக்கம் காரணமாகவும் சரியான வழிகாட்டல் இல்லாத காரணத்தினாலும் அவர்களால் மேலும் முன்னேற முடியாத நிலை.

ஒரு முறை ஹரித்வார் சென்றிருந்தபோது கங்கைக்கரையிலே நிறைய சிறுவர்கள் விளையாடிக்கொண்டு இருந்ததை பார்க்க நேரிட்டது. அந்த சிறுவர்கள் ஈரமான அரை டிராயருடன் கரையிலே காத்திருக்கிறார்கள். ஒரு பக்தர் கங்கையிலே காசினை தூக்கி எறிந்தால் போதும், இந்த சிறுவர்கள் பிரவாகமாக ஓடும் கங்கையிலே பாய்ந்து அந்த காசை எடுத்து விடுகிறார்கள். அப்படி ஒரு அபாரமான நீச்சல் திறமை. அவ்வளவு வேகமாக ஓடும் கங்கை நதியிலே மிகத்திறமையாக நீச்சல் அடிப்பது மட்டுமின்றி கங்கைப் படுகைக்கு அந்த நாணயம் போகும் முன்னரே எடுத்து விடுகிறார்கள். அவர்களின் நீச்சல் திறமையை என்னவென்று சொல்வது! அந்தத் திறமையை வல்லுனர்களைக் கொண்டு சரியான முறையில் மேம்படுத்தினோமானால் நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்டு தங்கம் வெல்லும் வீரர்களை உருவாக்குவது சாத்தியமே!

இவர்கள் இப்படியென்றால் வேறு சில சிறுவர்களையும் இங்கு காண முடிகிறது. அவர்கள் கங்கை நதிக்குக் குறுக்கே கட்டி இருக்கும் சிறு பாலங்களின் மேலே ஒரு நீண்ட கயிற்றினை கையில் வைத்துக்கொண்டு நிற்கிறார்கள். கயிற்றின் ஒரு முனையில் ஒரு சிறிய பாத்திரம் அல்லது கூடை கட்டப்பட்டுள்ளது. அவர்களது கண்கள் கரையிலேயே பதிந்து உள்ளது. எந்த ஒரு யாத்திரிகரும் தேங்காய் [மட்டைத்தேங்காய்] மற்றும் பொருள்களை கங்கைக்கு சமர்ப்பித்தால் போதும், அது போட்ட நேரத்தையும் இடத்தையும் கணக்கு வைத்து தங்கள் கையில் உள்ள கயிற்றினை லாவகமாக வீசி அடுத்த நிமிடமே அந்த மட்டைத்தேங்காயை கூடையில் எடுத்து விடுகிறார்கள். அவர்களது குறி தப்புவதே கிடையாது.

சந்தேகமே இல்லை, நல்ல முறையில் இவர்களுக்கு வில் வித்தை போட்டிகளில் பயிற்சி அளிக்கப்பட்டால் இவர்கள் நிச்சயமாக பதக்கங்கள் வெல்வார்கள்!

பி.கு: இந்த சிறுவர்களால் எடுக்கப்பட்ட அதே தேங்காய் காய வைக்கப்பட்டு கரையில் உள்ள கடையில் வந்து சேர்ந்து அடுத்த யாத்ரியிடம் விற்கப்படுவது தனி கதை!

செவ்வாய், 24 நவம்பர், 2009

நிறுத்து உன் தாண்டவத்தை!
தமிழகத்தில் உள்ள சலூன்களில் கட்டிங், ஷேவிங், ஹேர் டை போன்ற ஒரு சில வசதிகளே உண்டு. பணி நிமித்தமாக தில்லி வந்த உடனே கட்டிங் செய்ய வேண்டிய அவசியம் எனக்கு ஏற்படவில்லை. இரண்டு மாதங்களுக்குப் பின் ஒரு சனிக்கிழமை காலை ஹேர் கட்டிங்குக்காக டில்லியில் உள்ள ஒரு சலூனுக்கு சென்றிருந்தேன். அங்கே முடி திருத்துபவர் ஒருவரே இருந்தார். நான்கைந்து பேர் எனக்கு முன்பே காத்திருந்தனர்.

என்னுடைய முறை வந்ததும், அந்த பணியாளர் என்னிடம் "கட்டிங்?" என்று கேட்க, தலையை ஆட்டியபடி என் தலையை அவர் வசம் ஒப்படைத்தேன். தலையில் குளிர்ந்த தண்ணீர் பீச்சி அடித்து கத்திரிக்கோல் மற்றும் சீப்பு வைத்து, பாட்டு பாடியபடி ஒரு ஆனந்த நடனம் ஆடினார்.

ஒரு வழியாக ஹேர் கட்டிங் முடித்த பிறகு என்னிடம் "ஷேவிங்?" என்று கேட்க நான் வேண்டாம் என தலையை ஆட்டினேன். அதன் பிறகு ஹிந்தியில் ஏதேதோ கேட்டு கொண்டு இருக்க நான் எல்லாவற்றிற்கும் வேண்டாம் என தலையை ஆட்டி பதில் அளித்தபடி இருந்தேன். கடைசியில் "மாலிஷ்?" என்று கேட்க சரி எல்லாவற்றிற்கும் வேண்டாம் என சொல்ல வேண்டாமே என்ற நல்லெண்ணத்தில் "கர்லோ" [செய்] என்று கூறி உட்கார்ந்தேன். எனக்கோ மாலிஷ் என்றால் என்ன என்றே தெரியாது.

அதன் பிறகு நடந்ததுதான் இக்கட்டுரையின் ஹைலைட். என்னுடைய தலையில் இரண்டு கை அளவு கடுகு எண்ணெய் விட்டு நன்றாக தடவி, பிறகு இரண்டு கைகளை சேர்த்து மெதுவாக அடிக்க ஆரம்பித்தார். தலையை பிடித்து விட்டு ஏதேதோ செய்ய ஆரம்பித்து கோபம் கொண்ட சிவபெருமான் போல கைகளால் ருத்ர தாண்டவமே ஆடி விட்டார். தப்பிக்கவும் முடியாமல் கத்தவும் முடியாமல் ஒரு பத்து நிமிடம் இந்த தாண்டவத்தை பொருத்துக்கொண்டிருந்துவிட்டு அதன் மேலும் அடி நிற்காமல் போகவே வலி தாங்க முடியாமல் "போதுமடா சாமி! நிறுத்து உன் தாண்டவத்தை!" என்று தமிழில் கூறிவிட்டு அங்கிருந்து தப்பித்தேன் பிழைத்தேன் என ஓடினேன்.

கட்டிங்கிற்கும் என்னை அடித்ததற்கும் 1991 வருடம் அவர் வாங்கிய கூலி அதிகமில்லை ஜென்டில்மென் ஜஸ்ட் ஐம்பது ரூபாய்!

திங்கள், 23 நவம்பர், 2009

மூலி [முள்ளங்கி] பராட்டா
ஒரு பதிவில் ஆலு [உருளைக்கிழங்கு] பராட்டா எப்படி செய்வது என்பதை பற்றி கொடுத்து இருந்தேன். அது இங்கே.

இப்போ மூலி [முள்ளங்கி] பராட்டா செய்வது எப்படி என்று பார்க்கலாமா?

தேவையான பொருள்கள்:

கோதுமை மாவு: மூன்று கப்.
முள்ளங்கி - தோல் சீவி துருவியது: ஒரு கப்.
இஞ்சி - தோல் சீவி துருவியது - இரண்டு ஸ்பூன்.
கொத்தமல்லி பொடியாக நறுக்கியது - சிறிதளவு.
மிளகாப்பொடி: அரை ஸ்பூன்.
தனியாப்பொடி: ஒரு ஸ்பூன்.
மஞ்சள் பொடி: ஒரு சிட்டிகை.
கரம் மசாலா: அரை ஸ்பூன்.
உப்பு: தேவையான அளவு.
எண்ணெய்/நெய்: தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவில் தண்ணீர் மற்றும் சிறிது நெய் அல்லது எண்ணெய் விட்டு சப்பாத்திக்கு பிசைவது போல நன்றாக பிசைந்து வைத்துக்கொள்ளவும்.

துருவிய முள்ளங்கியை நன்றாக பிழியவும். பிழிந்த சாற்றினை கொட்டி விடவும். முள்ளங்கியில் தண்ணீர் அதிகம் இருந்தால் பராட்டா நன்றாக இட வராது. சில பேருக்கு நெஞ்சு கரிக்கலாம். பிழிந்த முள்ளங்கி துருவலில், இஞ்சி துருவல், நறுக்கிய கொத்தமல்லி மற்றும் மிளகாய், தனியா, மஞ்சள், கரம் மசாலா பொடிகளையும் தேவையான அளவு உப்பையும் போட்டு நன்றாகக் கலந்து கொள்ளவும். இந்த கலவையை சிறு உருண்டைகளாக [ஒரு சிறிய எலுமிச்சை அளவு] உருட்டி வைத்துக்கொள்ளவும்.

பிசைந்து வைத்த கோதுமை மாவினையும் சப்பாத்திக்கு செய்வது போல உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும். ஒரு உருண்டை கோதுமை மாவினை எடுத்து குழவியால் பூரி அளவில் இடவும். அதன் மேல் ஒரு முள்ளங்கி உருண்டையை வைத்து அதனை சப்பாத்தி மாவினால் மூடவும் [கொழுக்கட்டையில் பூரணம் வைத்து மூடுவது போல]. பின்னர் அந்த மூடிய உருண்டையை சப்பாத்திக்கல்லில் வைத்து குழவியால் உள்ளே உள்ள Stuffing வெளியே வராத படி மெதுவாக இடவும்.

இப்படி செய்த பராட்டாவை சூடான தோசைக்கல்லில் போட்டு நெய் அல்லது எண்ணெய் விட்டு வேக வைக்கவும். ஒரு பக்கம் நன்கு வெந்ததும் திருப்பிப்போட்டு மறுபடியும் நெய் அல்லது எண்ணெய் விடவும். பொன்னிறமாக வந்ததும் தோசைக்கல்லில் இருந்து எடுக்கவும்.

இந்த முள்ளங்கி பராட்டாவிற்கு - காய்கறி ஊறுகாய் மற்றும் தயிர் நல்ல சைடு டிஷ்.

செஞ்சு பார்த்து அசத்துங்க.

என்ன இந்த வாரம் உங்கள் மெனு லிஸ்டில் மூலி [முள்ளங்கி] பராட்டாவும் உண்டு தானே?

செவ்வாய், 17 நவம்பர், 2009

வாழ்க தமிழ்!

வேலை கிடைத்து நான் டில்லிக்கு வந்த போது இந்தியன் வங்கியில் பணி புரிந்த நண்பர் ஒருவருடன் தங்கி இருந்தேன். அந்த அறைக்கு நண்பரின் வங்கியில் பணி புரிந்த பல தோழர்கள் வந்து செல்வர். அதில் ஒருவர் சுரேஷ். நான் வருவதற்கு ஆறு வருடங்களுக்கு முன்பே தில்லி வந்தவர் என்றாலும் அவருக்கு ஹிந்தியில் பத்து-பதினைந்து வார்த்தைகளும் சில வாக்கியங்களுமே தெரியும். அதை வைத்தே சமாளித்து வந்தார்.

நாங்கள் தமிழர்களின் மெஸ் நிறைந்த கரோல் பாக் பகுதியில் இருந்ததால் சமைத்து சாப்பிட தேவைப்படவில்லை. தினமும் எல்லோரும் சேர்ந்து சென்று எதாவது ஒரு உணவகத்திலோ, "டாபா" என்று அழைக்கப்படும் தந்தூரி ஹோட்டலிலோ சாப்பிடுவது வழக்கம். அதற்க்கும் ஒரு மெனு வைத்திருந்தோம். காலையில் ராமானுஜம் மெஸ், மதியம்/இரவு உணவு "அமராவதி ரெஸ்டாரன்ட்" அல்லது "வைஷ்ணவ டாபா".

இப்படி ஓடிக்கொண்டிருந்த வாழ்க்கையில் திடீரென நண்பர் சுரேஷுக்கு ஓர் ஞானோதயம். " நாமே சமைத்தால் என்ன? " உடனே இந்த யோசனையை அமல் படுத்த கடைக்குச் சென்று தேவையான மளிகை பொருள்கள், பாத்திரங்கள், கேஸ் அடுப்பு என்று அதற்கு தேவையானவைகளை வாங்கி வந்து ஒரே வாரத்தில் சமைக்க ஆரம்பித்தோம். வேலைகளை எல்லோரும் பகிர்ந்து கொண்டு செய்ததால் சிரமம் தெரியாமல் இருந்தது.

நண்பர் சுரேஷுக்கு எங்களை விட ஹிந்தி அதிகம்[!] தெரியும் என்பதால் தேவையான பொருள்கள் மற்றும் காய்கறி வாங்கி வரும் வேலையை அவருக்கு கொடுத்தோம்.

ஒரு நாள் காய்கறி கடையில் அவர் வெண்டைக்காயை [ஹிந்தியில் "பிண்டி"] காண்பித்து கத்திரிக்காய் [ஹிந்தியில் "பேங்கன்"] என்ன விலை என்று ஹிந்தியில் கேட்டு இருக்கிறார். அதை கேட்டுக் கொண்டிருந்த பக்கத்துக் கடை காய்கறிகாரர் "சார் நானும் தமிழ் தான்! உங்களுக்கு என்ன காய்கறி வேணும்னாலும் என்கிட்டே வாங்குங்க!" என்று சொல்ல, சுரேஷும் அதன் பின்னர் அவரிடமே காய்கறிகள் வாங்கி வந்தார்.

வேறொரு நாள் அவருடன் நன்றாக ஹிந்தி பேச தெரிந்த மற்றொரு நண்பரும் காய்கறி வாங்க செல்ல நேரிட அப்போதுதான் எங்களுக்கு இவ்வளவு நாட்களாக நண்பர் சுரேஷ் எப்படி ஏமாந்து கொண்டு இருக்கிறார் என்பது தெரிய வந்தது. தமிழ் கறிகாய்காரரிடம் எல்லா கறிகாய்களும் பக்கத்து கடையை விட இரண்டு-மூன்று ரூபாய் அதிகம். ஒரு வேளை தமிழில் பேசுவதால் அதற்கும் சேர்த்து நண்பரிடம் அதிகமாக கறந்திருப்பாரோ?.

வெள்ளி, 13 நவம்பர், 2009

ஆலு [உருளைக்கிழங்கு] பரோட்டாசென்ற பதிவான "Paranthe Waali Gali" பதிவில் சொன்னது போல இந்த பதிவில் ஆலு [உருளைக்கிழங்கு] பரோட்டா எப்படி செய்வது என்பதை பற்றி கொடுத்துள்ளேன். செய்து பார்த்து சாப்பிட்டு பின்னூட்டம் செய்ய வேண்டுகிறேன்.

தேவையான பொருள்கள்:

கோதுமை மாவு: மூன்று கப்.
உருளைக்கிழங்கு: ஆறு [வேகவைத்தது].
மிளகாப்பொடி: அரை ஸ்பூன்.
தனியாப்பொடி: ஒரு ஸ்பூன்.
மஞ்சள் பொடி: ஒரு சிட்டிகை.
கரம் மசாலா: அரை ஸ்பூன்.
உப்பு: தேவையான அளவு.
எண்ணெய்/நெய்: தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவினை தண்ணீர் விட்டு சப்பாத்திக்கு பிசைவது போல நன்றாக பிசைந்து அதில் நெய் அல்லது எண்ணெய் சிறிது விட்டு பிசைந்து வைத்துக்கொள்ளவும்.

வேக வைத்த உருளைக்கிழங்கை தோலினை உரித்த பின் நன்றாக மசித்து அதில் மிளகாய், தனியா, மஞ்சள், கரம் மசாலா பொடிகளையும் தேவையான அளவு உப்பையும் போட்டு நன்றாகக் கலந்து கொள்ளவும். இந்த கலவையை சிறு உருண்டைகளாக [ஒரு சிறிய எலுமிச்சை அளவு] உருட்டி வைத்துக்கொள்ளவும்.

பிசைந்து வைத்த கோதுமை மாவினையும் சப்பாத்திக்கு செய்வது போல உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும். ஒரு உருண்டை கோதுமை மாவினை எடுத்து குழவியால் பூரி அளவில் இடவும். அதன் மேல் ஒரு உருளைக்கிழங்கு உருண்டையை வைத்து அதனை சப்பாத்தி மாவினால் மூடவும் [கொழுக்கட்டையில் பூரணம் வைத்து மூடுவது போல]. பின்னர் அந்த மூடிய உருண்டையை சப்பாத்திக்கல்லில் வைத்து குழவியால் மெதுவாக இடவும். சிறிது பொறுமையாக செய்தால் உள்ளே உள்ள Stuffing வெளியே வராது. இல்லையெனில் ஒரு சப்பாத்தி இட்டு அதன் மேல் உருளைக்கிழங்கு கலவையை ஸ்ப்ரெட் செய்யவும். பிறகு மேலும் ஒரு சப்பாத்தி இட்டு அதன் ஸ்ப்ரெட் செய்த சப்பாத்தி மேல் போட்டு மெதுவாக குழவியால் இடவும்.

இப்படி செய்த பரோட்டாவை சூடான தோசைக்கல்லில் போட்டு நெய் அல்லது எண்ணெய் விட்டு வேக வைக்கவும். ஒரு பக்கம் நன்கு வெந்ததும் திருப்பிப்போட்டு மறுபடியும் நெய் அல்லது எண்ணெய் விடவும். பொன்னிறமாக வந்ததும் தோசைக்கல்லில் இருந்து எடுக்கவும். இந்த ஆலு பரோட்டாவுடன் ஊறுகாய் மற்றும் தயிர் வைத்து சுடச்சுட சாப்பிட, "ஆஹா என்ன ஆனந்தம்!"

செவ்வாய், 10 நவம்பர், 2009

Paranthe Waali Galiபழைய தில்லி என்பதும் நினைவுக்கு வரும் இடங்கள் முகலாய பேரரசர் ஷாஜகானால் கட்டுவிக்கப்பட்ட லால் கிலாவும்[1638-1648], ஜும்மா மஸ்ஜிதும் [1656] தான். இந்த வரலாற்றுப் புகழ் மிக்க இடங்களுக்கு அருகில் உள்ள இடம் சாந்த்னி சௌக். இது முகலாய சாம்ராஜ்யத்தின் மிகப்பெரிய வியாபார ஸ்தலங்களில் ஒன்று. தற்போதும் இங்குள்ள துணி மற்றும் நகைக்கடைகள் மிகவும் பிரபலம்.

இந்த இடத்தில் உள்ள ஒரு பிரபலமான தெருவின் பெயர் தான் "Paranthe Waali Gali". 1870-களில் இங்கு இருபதிற்கும் மேற்பட்ட பரோட்டா கடைகள் ஆரம்பிக்கப்பட்டன. தமிழகம் மற்றும் கேரளாவில் கிடைக்கும் புரோட்டா போல மைதாவில் செய்யப்படுவது அல்ல இது. இது கோதுமை மாவில் செய்யப்படுவது. இந்த சுத்தமான சைவ உணவகங்களில் உருளை, முள்ளங்கி, கேரட், முந்திரி, பனீர், சீஸ், புதினா, கீரை போன்ற முப்பதிற்கும் மேற்பட்ட வித விதமான பரோட்டா வகைகள் கிடைக்கின்றன.

பரோட்டாவிற்கு தொட்டுக்கொள்ள காய்கறி ஊறுகாய், புதினா சட்னி, ஸ்வீட் சட்னி,தயிர் போன்ற பல வகை சைடு டிஷும் உண்டு. நெய் சொட்டச் சொட்ட இங்கு கிடைக்கும் சூடான பரோட்டா மக்களின் நாசியை கவர்ந்து இழுக்கும். ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, வாஜ்பாய் போன்ற பல பிரபலங்கள் உணவு அருந்திய இடம் இது.

ஆனால் ஒரு சிறிய சந்தில் இருக்கும் இந்த உணவகங்களுக்கு தற்போது அவ்வளவாக ஆதரவு கொடுப்பவர்கள் இல்லை. இத்தனை காலத்திற்குப் பிறகு தற்போது இங்கு இருப்பது மூன்று நான்கு கடைகள் மட்டுமே.

இங்கு கடை வைத்திருந்த பலர் தற்போது தில்லியின் மற்ற பகுதிகளில் கடைகளை திறந்து இந்த சுவை மிகுந்த உணவினை மக்களுக்கு அளித்து வருகிறார்கள். ஆனாலும் அந்த பழைய "Paranthe Waali Gali"-யில் உள்ள சிறிய கடைகளில் சாப்பிடும் ஆனந்தம் கிடைப்பதில்லை.

அடுத்த பதிவுகளில் சில வித பரோட்டா செய்வது எப்படி என எழுதலாம் [கல்யாணத்திற்கு முன் தில்லியில் தனியாக இருந்த போது ஐயாவின் நளபாகம் தான்!] என இருக்கிறேன். ருசியான ஆலு பரோட்டா பதிவில் சந்திக்கும் வரை.... மேலுள்ள படத்தைப் பார்த்துக்கொண்டு திருப்தி பட வேண்டியது தான்.

வெள்ளி, 6 நவம்பர், 2009

அந்த இரண்டு ருபாய்

"என்னது அரை கிலோ வெள்ளரிக்காய் பன்னிரண்டு ரூபாயா? பத்து ரூபாய்க்கு கொடுப்பா! " என்று வேலு காய்கறிக் கடைக்காரனிடம் பேரம் பேச, அவன் அதெல்லாம் கட்டுப்படியாகாதுன்னு சொல்ல, பரவாயில்லை அம்மாவிடம் சொல்லி கேட்டு வாங்கிக்கொள்ளலாம் என்று அதிகமான ரெண்டு ரூபாயை தன் கைக் காசை போட்டு வாங்கி வந்தான்.

பெரிய பொறுப்பில் உள்ள அரசு அதிகாரி வனஜாவிடம் கார் டிரைவராக இருப்பவன் வேலு. அவனின் குறைந்த சம்பளத்தில் ஐந்து வயிறுகள் சாப்பிட வேண்டிய கஷ்ட ஜீவனம். ஆனாலும் நேர்மையுடன் வேலை செய்து வந்தான்.

வனஜாவின் கணவரும் அரசு அதிகாரிதான். இருவரது மாத சம்பளமும் சேர்த்தால் மாதத்திற்கு ஒரு லட்சம் வரும். அலுவலகம் சென்று வர அரசு செலவில் இரண்டு வாகனங்கள் . செலவு என்று பார்த்தால் ரொம்ப கம்மி. ஆடம்பரமானவைகளுக்கு மட்டுமே.

வனஜா வேலுவை அனுப்பித்தான் தனக்குத் தேவையான எல்லா பொருள்களையும் வாங்கி வரச் சொல்வாள். அவனிடம் எல்லா வேலைகளையும் வாங்கி வேலைக்காரன் வைத்துக் கொள்ளாமல் பணத்தை மிச்சப்படுதுவாள்.

வீடு திரும்பிய வேலு "மேடம் வெள்ளரி அரை கிலோ பன்னிரண்டு ரூபாய்க்குத்தான் கிடைச்சுது " என்று சொல்ல வனஜாவோ "அதெல்லாம் எனக்கு தெரியாது அரை கிலோ பத்து ரூபாய் தான், அதனால கடைக்காரனிடமே திருப்பி கொடுத்துடு! " என்றதுமில்லாமல் கொடுத்தனுப்பிய பத்து ரூபாயையும் திரும்ப கேட்டாள்.

" பரவாயில்லைங்க மேடம் அதை நானே வீட்டுக்கு எடுத்துக்கிட்டு போறேன்" என்று சொன்ன வேலுவிடம் ---

"சரி அதிலிருந்து ரெண்டு வெள்ளரி கொடு "ஸாலாட்" செய்ய தேவை" என்று வனஜா கேட்டு வாங்கிக்கொள்ள--

" பணக்கார்கள் எப்படி மேலும் மேலும் பணம் சேர்த்துக்கொண்டே போகிறார்கள் என்று இப்போதுதான் புரிஞ்சது!" -- தனக்குள் சொல்லிக்கொண்டான் வேலு.


-- வெங்கட் நாகராஜ்

[சர்வேசன்500 – நச்னு ஒரு கதை 2009 – போட்டிக்காக எழுதிய கதை]

http://surveysan.blogspot.com/2009/09/500-2009.html

செவ்வாய், 3 நவம்பர், 2009

கொய்யா மரம்நெடு நாட்களாக கல்லூரி நண்பர் ஒருவர் அவரது வீட்டிற்கு வரும்படி அழைத்துக் கொண்டிருந்தார். ஏனோ சந்தர்ப்பம் சரியாக அமைய வில்லை. திடீரென ஒரு நாள் அவரைக் காண அவரது இல்லத்திற்கு சென்றேன்.

அழகான ஒரு வீதி. வீதியின் இரு புறங்களிலும் வரிசையாக தனித்தனி வீடுகள். அவரது இல்லத்தினை கண்டுபிடித்து செல்வது ஒன்றும் கஷ்டமாக இல்லை. அமைதியான சூழலில் மரம், செடி கொடிகள் நிறைந்த ரம்மியமான ஒரு தோட்டம். தோட்டத்தின் நடுவினில் இருந்தது அவரது வீடு.

வீட்டின் வெளியே இருந்த கதவினை திறந்து உள்ளே சென்று அழைப்புமணியை ஒலித்தேன். அவரது குரல் மட்டும் வந்தது. திண்ணையில் காத்திருந்தேன். வாசலில் ஒரு பெரிய கொய்யா மரம் தன்னுடைய கிளைகளை படர விட்டு நிறைய பழங்களை தாங்கியபடி நின்று இருந்தது. நானும் மரங்களில் இருக்கும் பறவைகளின் "கீ கீ" குரல்களில் லயித்து இருந்தேன்.

திரும்ப அவரது குரல் மட்டும் கேட்டது. வீட்டில் இருந்து குரல் வராமல் எங்கோ ஆகாயத்தில் இருந்து வருவது போலத் தோன்றவே, மேலே பார்த்தால், பை நிறைய கொய்யா பழங்களுடன் மரத்தில் இருந்து இறங்கி வந்து கொண்டு இருந்தார் அந்த கல்லூரித் தோழி. அதிர்ச்சியுடன் பார்த்த என்னை அவர் மரத்தில் இருந்து இறங்கியதும் கேட்ட கேள்வி "ஏன் பொண்ணுங்க மரம் ஏறக்கூடாதோ?".

அந்த பெண் இன்று கல்யாணம் முடித்து இரண்டு குழந்தைகளுக்குத் தாய். எனக்குத் தெரிந்து மரம் ஏறத் தெரிந்த ஒரே பெண் அவர் தான் என நினைக்கிறேன்.

புதன், 28 அக்டோபர், 2009

குரங்கின் மாத சம்பளம் ஆறாயிரமா...!!


அன்று அரசு அதிகாரிகளின் முக்கியமான கூட்டம் நடந்து கொண்டிருந்தது. எல்லா அலுவலகங்களிருந்தும் வந்திருந்த பெரிய அதிகாரிகள் தங்களது கட்டிடங்களில் குரங்கு தொல்லை அதிகமாக இருப்பதைப்பற்றி பேசினார்கள். குரங்குகள் பல அலுவலர்களுடைய உணவினைப்பிடுங்கி சாப்பிடுவது பற்றியும், கைப்பையினை பறித்து பொருள்களை எல்லாம் கொட்டி சேதப்படுத்தும் தொல்லையிலிருந்து தப்பிக்க எல்லா ஜன்னல்களுக்கும் கம்பி வலை பொருத்தியதையும் தாங்கள் எடுத்த மற்ற முயற்சிகள் பற்றியும் சொன்னார்கள். ஆனாலும் குரங்குகள் தொல்லை நிற்காததால் வேறு என்ன செய்யலாம் என்று முடிவு செய்ய பலரின் கருத்தையும் கேட்டனர்.

ஒருவர் குரங்குகளைப் பிடிக்க ஆட்களை நியமித்து, பிடித்த குரங்குளை அருகில் உள்ள காடுகளில் விடலாம் என்றார். வேறொருவர் குரங்குகளுக்கு விஷம் கொடுத்துவிடலாம் என்று சொல்ல, மற்றவர்கள் அதில் உள்ள பிரச்சனைகளை எடுத்து சொல்ல இந்த யோசனைகள் கைவிடப்பட்டது. பலவித யோசனைகளுக்குப்பிறகு பத்திரிக்கைகளில் ஒரு விளம்பரம் கொடுத்து தங்களுடைய திட்டத்துடன் வரும்படி சொல்வது எனவும், இதற்கு ஒரு நேர்முகத்தேர்வு வைக்கவும் முடிவு செய்தார்கள்.

குறிப்பிட்ட நாளும் வந்தது. நிறைய பேர் தங்களது புதிய திட்டங்களுடன் வந்திருந்தனர். அவர்களில் ஒருவன் மிகவும் சாதரணமான உடை அணிந்து, தன்னுடன் ஒரு லங்கூர் வகை குரங்கினை அழைத்து வந்திருந்தான். மற்ற எல்லோரும் தங்களது யோசனைகளையும் அதற்கு எவ்வளவு பணம் அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்க்கிறார்கள் என்றும் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். எல்லாமே பல லட்சங்கள் செலவாகும் திட்டங்கள்.

கடைசியாக லங்கூர் மனிதனிடம் அரசு அதிகாரிகள் "உன்னுடைய திட்டம் என்ன? என்று கேட்க. அவன் குரங்குளை பயமுறுத்தியே தன்னால் துரத்த முடியும்!" என்று கூறினான். ஒரு கட்டிடத்தில் குரங்குகள் வராமல் பார்த்துக்கொள்ள மாதம் ஆறாயிரம் ரூபாய் தந்தால் போதும் எனவும் சொன்னான். அது எப்படி உன்னால் முடியும் எனக் கேட்க, சாதாரண குரங்குகளுக்கு லங்கூர் வகை குரங்கினை கண்டால் பயம், ஆகவே அதை பயமுறுத்தி துரத்தினால் அவைகள் அந்த இடத்தினை விட்டு வேறிடத்திற்கு சென்று விடும் என கூறினான். இந்த ஏற்பாடு நன்றாகவும் செலவு குறைவாக ஆகும் என்பதாலும் அந்த லங்கூர் வகை குரங்கினை தற்காலிக பணியாளராக அமர்த்துவது என முடிவு செய்தனர். ஒவ்வொரு கட்டிடத்திற்கும் ஒரு லங்கூர் இப்போது பணியாளராக அமர்த்தப்பட்டுள்ளது. மாத சம்பளம் - ஒவ்வொரு கட்டிடத்திலிருந்தும் ருபாய் ஆறாயிரம். இது கடைநிலை ஊழியராக உள்ள தற்காலிக பணியாளரின் சம்பளத்தை விட அதிகம். அவர்களுக்கு மாதம் நாலாயிரம் தான்!!

இந்த ஏற்பாடு நடந்து ஒரு வருடத்திற்கும் மேலாகியும் குரங்குகள் தொல்லை இப்போதும் குறைந்தபாடில்லை . குரங்குகள் லங்கூர் மனிதனிடம் ஒப்பந்தம் செய்து விட்டதோ என்னமோ - நீ துரத்துற மாதிரி துரத்து நாங்க ஓடற மாதிரி ஓடறோம். நாங்க மொத்தமா ஓடிட்டா உனக்கும் வேலை போயிடும் அப்புறம் உன் சாப்பாட்டுக்கு எங்கே போவே? .

புதன், 21 அக்டோபர், 2009

குரங்கு கடித்தால் என்ன செய்ய வேண்டும்?
குரங்கு உங்களை கடித்து விட்டால் வேறு வழியில்லை மருத்துவம் செய்து கொண்டுதான் ஆக வேண்டும். வேறு யாரையாவது கடித்திருந்தால் அவரிடமிருந்து பத்து பதினைந்து அடியாவது தள்ளி இருப்பது உசிதம்.


முதலில் கடிவாயை [கடி பட்ட இடத்தை] தண்ணீர் மற்றும் சோப் போட்டு நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். கடிபட்ட இடத்தில் மஞ்சள் பொடி ஆயின்மென்ட் போன்ற எதையும் போடக்கூடாது. அப்படி போடுவதினால் கிருமிகள் கடிவாயிலேயே சிறை செய்யப்பட்டு உங்களுக்கு தொல்லை தரக்கூடும். ரத்தம் நிறைய வராமல் இருக்கும் பட்சத்தில் கட்டு போடாமல் இருப்பது நலம். இந்த முதலுதவியை செய்து கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு விரைவில் சென்று மருத்துவரை நாடுவது மிகவும் முக்கியம்.


இந்த பதிவு எழுத காரணம் எனது அலுவலக நண்பர் திரு விஜயராகவன். அவர் சரியான நேரத்துக்கு அலுவலகம் வந்து போவார். ஒரு நாள் காலை எட்டே முக்கால் மணிக்கு பேருந்தில் இருந்து இறங்கி ஒரு சிகரெட் பிடித்தபடியே நடந்து வந்திருக்கிறார். அருகே உள்ள மரத்தில் ஒரு குரங்கு தன் சுற்றம் சூழ அளவளாவிக்கொண்டு இருந்திருக்கிறது. நண்பரும் சிகரெட்டை அனுபவித்துக்கொண்டே அந்த மரத்தின் பக்கத்தில் நடக்க, நெருப்பைக்கண்ட அந்த தாய்க் குரங்கு தாவி வந்து நண்பரின் தொடைப்பகுதியிலிருந்து அரை கிலோ சதையை எடுத்த மாதிரி கடித்துவிட்டு ஓட, வலியில் நண்பரும் அலறியபடிசாலையில் ஓட ஒரே களேபரம். விஷயம் தெரிந்து நானும் சக நண்பரும் விஜயராகவனுக்கு முதலுதவி அளித்து டாக்டர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு அவருக்கு ஒரு ஊசி போட்டு சில மருந்துகளும் கொடுத்தார்கள். மாதத்திற்கு ஒரு ஊசிவீதம் ஆறு மாதத்திற்கு போட வேண்டும் என்றும் மருத்துவர் கூறினார்.


இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, நண்பரை பார்க்கும்போதெல்லாம் அவரை கலாய்ப்பதே எங்களுக்கு வேலை. அவருக்குக் "குரங்காட்டி" என்ற நாமகரணமும் செய்து, குரங்கை பற்றியே ஏதாவது கேள்வி கேட்டு அவரை மடக்கிக் கொண்டிருப்போம். அவரும் எங்கே குரங்கினை பார்த்தாலும் " ஆஞ்சநேயா! நீ கடிக்கற அளவுக்கு நான் உன்னை என்ன பண்ணிட்டேன்? " என்று கேட்டுக்கொண்டு இருக்கிறார்.


இந்த பதிவினை எழுத காரணமாக இருந்த நண்பர் விஜயராகவனுக்கும் அவரைக் கடித்த திருவாளர் குரங்கிற்கும் எனது நன்றி.

செவ்வாய், 20 அக்டோபர், 2009

தில்லி நகரின் தனியார் பேருந்துகள்

புது தில்லியில் ஓடும் தனியார் பேருந்துகள் தவறான பல காரணங்களுக்காக மிகவும் பிரபலம். Blue Lines/Red Lines/Whilte Lines போன்ற பல பெயர்களில் இயங்கும் இப்பேருந்துகள் நாளிதழ்களால் Killer Lines என்றே அழைக்கப்படுகின்றன. இந்த ஆண்டு இப்பேருந்துகளால் மரணம் அடைந்தோர் பலர். ஒவ்வொரு ஆண்டும் இந்த எண்ணிக்கை கூடுகிறதே தவிர குறைவதில்லை.

ஓட்டுனரும் நடத்துனரும் பயணிகளிடம் நடந்து கொள்ளும் விதமே சரியாக இருப்பதில்லை. சுத்தம் செய்யப்படாத இந்த பேருந்துகளில் நீங்கள் அழுக்காகாமல் பயணம் செய்ய முடியாது.


கல்யாணம் ஆன புதிதில் தில்லி வந்த என் மனைவி இப்பேருந்துகளை பார்த்ததும் சொன்னது - "என்னங்கய்யா பஸ் இது. எங்க ஊருக்கு வந்து பாருங்க, அங்க இருப்பது தான் பஸ், இதெல்லாம் குப்பை லாரி!". இதனால் என் மனைவியுடன் வெளியே செல்ல வேண்டிய அவசியம் வரும்போதெல்லாம் எனக்கு ஆட்டோவில் போக வேண்டிய கட்டாயம்.


அவர் சொல்வதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. அவ்வளவு குப்பை. இங்குள்ளவர்கள் குளிர் காலம் வந்தால் போதும், கிலோ கிலோவாக வேர்கடலை சாப்பிடுகிறார்கள். பேருந்தில் உள்ளேயே வேர்கடலையின் தோலை உடைத்து அங்கேயே கீழே போடுகிறார்கள். சுத்தம் என்பது சுத்தமாக இல்லாத ஒரு இடம் இது. இதையெல்லாம் பார்க்கும் போது தமிழகத்தில் உள்ள சுத்தமான/அழகான பேருந்துகள், மற்றும் காலையில் குளித்து, சுத்தமாக இருக்கும் பணியாளர்கள் நினைவில் வந்து போகிறார்கள்.


எந்த ஒரு நடத்துனரும் விசில் வைத்து இருப்பதில்லை. பேருந்தில் கையால் ஒரு தட்டு தட்டினால் வண்டி நிற்கும். இரண்டு தட்டு தட்டினால் வண்டி ஓடும். வண்டி Stand-ல் வந்து நின்றவுடன் வண்டி செல்லும் இடங்களுடைய பெயர்களை வரிசையாக கத்துகிறார்கள்.


ஒரு முறை ITO என்கிற இடத்தில் பேருந்துக்காக நின்று கொண்டு இருந்தேன். ஒரு வண்டி வந்து நிற்க, அதில் உள்ள நடத்துனர் "நாய்டா, நாய்டா" என்று என்னைப்பார்த்து கத்த நான் பயந்து போய் சுற்றிலும் பார்த்தேன். ஆனால் ஒரு நாயையும் [!] காணாமல், குழப்பத்துடன் நின்றேன். பிறகு தான் புரிந்தது, அவன் கூறுவது NOIDA [New Okhla Industrial Development Authority] என்ற இடத்திற்கு அந்த பஸ் செல்கிறது என்பது.

வியாழன், 15 அக்டோபர், 2009

எதிர் வீட்டு தேவதை

கதிருக்கு இரவு உணவுக்கு பிறகு தன் வீட்டு மொட்டை மாடியில் உலாத்துவது மிகவும் பிடித்தமான விஷயம். எப்போதும் போல அன்றும் பத்து மணிக்கு மாடிக்கு சென்று உலவ ஆரம்பித்தான். அவனுடைய வீடு நூறு அடி ரோடின் ஒரு பக்கத்தில் இருந்தது. எதிர் பக்க வீட்டின் மாடியில் நீண்ட கூந்தலை உலர்த்தியபடி இருட்டில் ஒரு அழகிய உருவம் தெரிவதை பார்த்ததும் அவனுக்கு எப்படியாவது அவளை பார்த்துவிட வேண்டும் என்று மனசு குறுகுறுத்தது. சிறிது நேரம் கழித்து அந்த உருவம் கீழே இறங்கி சென்று விட ஏமாற்றத்துடன் கீழிறங்கிய அவன் அவள் நினைவாகவே தூக்கம் வராமல் கட்டிலில் புரண்டு கொண்டிருந்தான்.

அடுத்த நாளும் மொட்டை மாடிக்கு அவன் சென்று காத்திருந்தான். எதிர்பார்த்தபடியே இன்றும் அந்த எதிர் வீட்டு தேவதை வந்துவிட்டு சிறிது நேரம் கழித்து சென்றது.

இதே காட்சி மேலும் பதினைந்து நாட்களுக்கு தொடர்ந்தது.


கதிருக்கு அந்த கூந்தல் அழகியின் மேல் காதல் வர எப்படியாவது அந்த அழகியைப் பார்த்து தன்னுடைய காதலை வெளிப்படுத்திவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் அன்று இரவு யாருக்கும் தெரியாமல் எதிர் வீட்டு மொட்டை மாடிக்கு சென்று ஒரு மறைவிடத்தில் காத்திருந்தான்.

அப்போது அங்கே வந்த சர்தார் சத்னாம் சிங் தன் தலைப்பாகையை [பகடி] கழற்றி அவனுடைய நீண்ட கூந்தலை உதறியபடி நடக்க ஆரம்பித்தான். அதைப் பார்த்த கதிர் மயங்கி விழாத குறைதான். எப்படியோ தட்டுத் தடுமாறி வீடு வந்து சேர்ந்தான்.


இப்போதெல்லாம் எந்த பெண்ணையும் ஒரு தடவைக்கு இரு தடவை பார்த்த பிறகே அவர்களிடம் பேசவே ஆரம்பிக்கிறான் அவன்.

செவ்வாய், 13 அக்டோபர், 2009

தேங்காய் முற்றியதா, இளசா என்று பார்ப்பது எப்படி?

தில்லியில் உள்ள தமிழர்களின் குழந்தைகளின் தமிழ் பேசும் அழகே அழகு. ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் போன்ற எல்லா பாஷையும் கலந்து பேசுவார்கள். அவர்கள் பேசுவதை கேட்கும் போது ஏதோ ஒரு புரியாத மொழி கேட்பது போல் இருக்கும். தமிழ் தொலைக்காட்சிகளில் தற்போது உள்ள தொகுப்பாளர்கள்/தொகுப்பாளினிகள் பேசுவதைக் காட்டிலும் சற்று அதிகமாகவே தமிழ் புலமையோடு பேசுகிறார்கள் தில்லி வாழ் தமிழ் குழந்தைகள்.

ஒரு முறை நண்பர் வீட்டுக்கு சென்று இருந்தேன். அங்கு சில தமிழ் குழந்தைகள் விளையாடிக் கொண்டு இருந்தனர். அவர்களுக்குள் நடக்கும் விவாதம் எல்லாமே பல மொழிகள் கலந்த ஒரு பாஷையில் இருந்தது. ஒரு சிறுவன் அப்போது தேங்காய் முற்றியதா, இளசா என்று பார்ப்பது எப்படி என்பது பற்றி விளக்கிக் கொண்டு இருந்தான். விவரம் கீழே:

"நாரியலை எடுத்து அதை உங்கிளியால் தட்டி பார்க்கணும். தட்டும் போது நல்ல ஆவாஜ் வந்தால் அது பக்கா தேங்காய், வரலைன்னா அது கச்சா தேங்கா!" .

என்ன ஒன்றும் விளங்க வில்லையா? விஷயம் இது தான். "தேங்காயை எடுத்து விரலால் தட்டி பார்த்து நல்ல சத்தம் வந்தால் அது முற்றிய காய். இல்லையெனில் அது இளசு!" என்பதைத் தான் அந்த தில்லி தமிழ்ச் சிறுவன் அப்படி சொல்லிக் கொண்டு இருந்தான்.

அப்பாடா ஒரு வழியா தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தம் வந்து விட்டது!

வெள்ளி, 9 அக்டோபர், 2009

கரோல் பாக் - கல்யாண்புரி

நண்பர் வி.எஸ். தில்லி வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. தனக்கு ஹிந்தி பேசதான் தெரியாது ஆனால் சுலபமாக படித்து விடுவேன் என்று எங்களிடம் பெருமையாக சொல்லி இருந்தார். அதனால் எங்கு வேண்டுமானாலும் என்னால் தனியாக போக முடியும் என்றும் எங்களிடம் தற்பெருமையாக சொல்லுவார்.

ஓர் நாள் அலுவலகம் முடிந்து நாங்கள் எல்லோரும் வீடு வந்து நண்பருக்காக காத்திருந்தோம். இரவு 09.00 மணி ஆகியும் வந்து சேரவில்லை. நாங்கள் கவலையுடன் காத்திருக்க இரவு 10.30 மணி அளவில் வி.எஸ். வந்து சேர்ந்தார். எல்லோரும் விசாரிக்க ஏதோ சொல்லி சமாளித்துக்கொண்டு இருந்தார். சரி பரவாயில்லை சாப்பிடுவோம் என்று சொல்லி சாப்பாடு முடித்து அவரை மீண்டும் வம்புக்கு இழுத்தோம், என்ன தான் நடந்தது சொல்லுங்கள் என்று. ஒருவாறு அவர் சொன்னது இது தான். தான் அலுவலகத்தில் இருந்து வெளியே வரும்போது எதிரில் ஒரு பேருந்து "க" என்று ஆரம்பிக்கும் அறிவிப்பு பலகையோடு வர அவசரமாக பேருந்து கரோல் பாக் போகிறது என்று ஏறி அமர்ந்து கொண்டு விட்டாராம். அரை மணி நேரம் ஆகியும் கரோல் பாக் வரும் எந்த அறிகுறியும் தெரியவில்லை. திடீரென பேருந்து யமுனை நதியை தாண்டி போய்க்கொண்டிருக்க, பதறியபடி அருகில் இருந்தவரிடம் விசாரித்து இருக்கிறார். அவர் அந்த பேருந்து கல்யாண்புரி செல்கிறது என்று சொல்ல, சத்தம் இல்லாமல் கல்யாண்புரி வரை சென்று அதே பேருந்தில் அலுவலகம் திரும்ப வந்து, வேறு பேருந்து பிடித்து கரோல் பாக் வந்து சேர்ந்து இருக்கிறார்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நண்பர் வி.எஸ். யாரிடமும் தனது ஹிந்தி புலமை பற்றி வாயை திறப்பதே இல்லை.வியாழன், 8 அக்டோபர், 2009

பிரட் பக்கோடா

அதிகாலை மூன்று மணி. Calling Bell ஓசை. தூக்கக்கலக்கத்துடன் கதவினை திறந்தேன். கலங்கிய கண்களுடன் வாசலில் ஒரு சிறுவன். உள்ளே அழைத்து என்ன என்று கேட்ட போது தான் எனக்கு அச்சிறுவன் யார் என்பது நினைவுக்கு வந்தது. தனது தந்தை திடீரென மார்பு வலி வந்து இறந்து விட்டதாகவும் வீட்டிலே அவனையும் அவனது தாயையும் தவிர வேறு ஒருவரும் இல்லை எனவும் அழுது கொண்டே கூறினான். உடனே நான் அவனுடன் அவர்களது வீட்டிற்கு சென்று மற்ற நண்பர்களை அழைத்து ஆக வேண்டிய ஏற்பாடுகளை செய்தோம். இறந்து போனவருக்கு சுமார் 58 வயது. காலை ஒன்பது மணி வாக்கில் இறந்து போனவரின் தாயாரை தில்லியில் உள்ள அவரது இன்னொரு மகனின் வீட்டில் இருந்து அழைத்து வந்தார்கள். வந்த உடன் நேராக மகனின் உடல் மீது விழுந்து கதறி அழுதது எல்லோருக்கும் வருத்தமாகவும் பதற்றமாகவும் இருந்தது. எமன் என்னுடைய உயிரை எடுத்து இருக்கலாமே, நான் இருந்து என்ன செய்ய போகிறேன் என்றெல்லாம் புலம்பியபடி இருந்தார். அவரை யாராலும் ஆசுவாசப்படுத்த முடியவில்லை. சுமார் இரண்டு மணிக்கு தகனத்துக்காக உடலை அப்புறப்படுத்த முடிவு செய்தபோது அப்படி ஒரு ஓலத்துடன் தனது மகனின் உடலின் மீது விழுந்து கட்டி அணைத்துக்கொண்டு தன்னையும் சேர்த்து எரித்துவிடும்படி எங்கள் எல்லோரையும் கட்டாயப்படுத்திக்கொண்டு இருந்தார். மிகுந்த சிரமத்துடன் அவரை ஒருவாறு தேற்றி, ஆக வேண்டிய வேலைகளை முடித்தோம். எல்லா வேலைகளையும் முடித்து விட்டு எனது வீடு சென்று குளித்து விட்டு அன்று சாயங்காலமே அடுத்த நாள் காரியத்துக்கு தேவையான பொருள்களை வாங்கி கொண்டு அவரது வீட்டிற்க்கு நானும் நண்பர் நரேஷும் சென்றோம்.

பாட்டி உட்கார்ந்து பம்மி ஸ்வீட்சில் வாங்கிய Bread பக்கோடாவை சாப்பிட்டு கொண்டு இருந்தார். "வாடா! பக்கோடா சாப்பிடு. உப்பு தான் கொஞ்சம் ஜாஸ்தி!" என்று எங்களிடம் சொன்னார்.

புதன், 30 செப்டம்பர், 2009

குரங்கு நீர்வீழ்ச்சியும் நண்பர் நடராஜனும்

நெய்வேலி ஜவஹர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கணிதம் படித்து கொண்டிருந்த போது மாணவ மாணவிகள் எல்லோரும் சுற்றுலா சென்றிருந்தோம். நான்கு நாட்கள் சுற்றுலா. பல இடங்களுக்கு சென்று வந்தோம். பசுமையான சில நினைவுகள். பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் வழியில் ஆனைமலை பகுதியில் ஆழியார் அணைக்கட்டில் இருந்து ஐந்து கி.மீ தொலைவில் உள்ள குரங்கு நீர் வீழ்ச்சி. நிர்வீழ்ச்சியில் இருந்து மூலிகை செடிகளில் தவழ்ந்து நல் மணத்துடனும் வேகமாகவும் இடைவிடாமலும் வரும் தண்ணீரில் ஆனந்தமான ஒரு குளியல். குளிர்ந்த தண்ணீர் மேலே பட்டவுடன் Vibrator Mode-ல் உள்ள செல் போன் போல உடம்பில் ஒரு நடுக்கம். நண்பர்கள் எல்லோரும் குளித்து விட்டு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தோம். நிறைய குரங்குகளுடன் நாங்களும்! இயற்கையை அனுபவித்து இருந்த வேளையில், நண்பர் நடராஜன் கவனிக்காமல் பாசியில் காலை வைக்க, வழுக்கி விழுந்தார். நாங்களும் மற்ற மாணவிகளும் அலற, நண்பர் நடராஜனோ சமாளித்து, "டேய் மச்சி, இந்த போஸில் என்னை ஒரு போட்டோ எடுங்கடா!" என்று மீசையில் மண்ணே ஓட்டவில்லை [நண்பருக்கு அப்போது மீசையே முளைக்கவில்லை!] என்பது போல படுத்துக் கொண்டு ஒரு போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார். ஆனால் பின்[!] விளைவு அப்படி ஒரு மோசமாக இருந்தது. இரவில் மெதுவாக எங்களிடம் வந்து தேங்காய் எண்ணை இருக்கா? என்று வினவியது மட்டும் இல்லாமல், அடுத்த இரண்டு நாட்களும் பேருந்தில் உட்காராமல் நின்று கொண்டே பயணம் செய்தார்.