வெள்ளி, 18 டிசம்பர், 2009

அடிக்குது குளிரு...


தலை நகர் தில்லியில் குளிர் ஆரம்பித்து விட்டது. இரவு நேரத்தில் எட்டு டிகிரியும் பகலில் இருபது முதல் இருபத்து நான்கு டிகிரியும் உள்ளது. மாத கடைசியிலும் ஜனவரி மாதத்திலும் இன்னும் அதிகமாகி விடும். ஆனாலும் இங்கு ஒன்றும் பனி மழையோ நடுக்கும் குளிரோ இப்போது இல்லை. பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பெல்லாம் கூட தில்லியில் இரண்டு மூன்று டிகிரி வரை இரவு நேரங்களில் இருந்தது உண்டு. பகலிலேயே கூட ஒன்பது டிகிரி குளிரில் இருந்திருக்கிறோம்.

இங்கே குளிர் வந்து விட்டதை தெரிந்து கொள்ள சிரமப்படத் தேவையில்லை. குளிர் வந்தாலும் வராவிட்டாலும் இங்குள்ளவர்கள் தீபாவளி முடிந்த அடுத்த நாளில் இருந்து ஸ்வெட்டர் அணிய ஆரம்பித்து விடுகிறார்கள் - அதிலிருந்தே குளிர் வரப்போவதை/ வந்து விட்டதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். குளிருதோ இல்லையோ ஸ்வெட்டரை கழற்றுவதே இல்லை. தீபாவளிக்கு அடுத்த நாள் ஸ்வெட்டரை போட்டுக்கிட்டா February/March மாசம் வர ஹோலி பண்டிகைக்கு அடுத்த நாள் தான் கழட்டுவேன்னு அடம் பிடிக்கிறார்கள். ஏதோ அண்டார்டிகா-ல இருக்கற மாதிரி ஒரு நினைப்பு அவர்களுக்கு. அவங்க நம்ம பக்கத்தில் வந்தாலே நமக்கு வேர்க்குது.

ஆளாளுக்கு ஒரு ஸ்வெட்டர், அதுக்கு மேல ஒரு கோட், டை கட்டிக்கிட்டு இருக்காங்க. கோட்-சூட் போட்டுக்கிட்டு சைக்கிளிலோ, நடந்தோ போறாங்க! இங்கே வந்த புதுசுல இது தெரியாததால, கோட்-சூட்டோட யாரை பார்த்தாலும் ஏதோ பெரிய ஆள் போலன்னு நினைப்பேன். ஒரு நாள் பஸ்சுக்கு லேட்-ஆச்சுன்னு ஆட்டோவில் போகலாம்னு என் நண்பர் ஆட்டோ பக்கத்தில் நின்றிருந்த கோட் ஆசாமியிடம் ஆட்டோ வருமா என கேட்க, எனக்கு ஒரே பயம் - என்னடா இது ஒரு பெரிய ஆள்கிட்ட போய் ஆட்டோ வருமான்னு கேட்கிறாரே என்று. பிறகு பார்த்தால், அதே ஆள் பேரம் பேசி ஐம்பது ரூபாய்க்கு சவாரி வந்தார்!.

நடந்து போகும்போது கையும் வாயும் சும்மா இருக்காது. கோட் பாக்கெட்டில் இருந்து வேர்க்கடலையை எடுத்து வாய்ல போட்டுக்கிட்டு தோலை ரோட்டில் போட்டு விட்டு செல்கிறார்கள். வேர்க்கடலை தோல்/குப்பை இல்லாத ஒரு பஸ் கூட, இந்த நாட்களில் நீங்க பார்க்க முடியாது.

இது இல்லாம, குளிர் கால ஸ்பெஷல் ஆக நிறைய கிடைக்கிறது - சிக்கி [கடலை கேக் ], ரேவ்டி [எள்ளும் வெல்லமும் கலந்த ஒரு தின்பண்டம் - சிறிய தட்டையான வடிவத்தில்]. தமிழ் நாட்டில அவிச்ச வேர்க்கடலை கிடைக்கும். ஆனா இங்க அதுக்கு பதிலா அவிச்ச சக்கரை வள்ளி கிழங்கு!, முட்டை, கேரட் ஹல்வா -இப்படி வகை வகையான குளிர் கால தின்பண்டங்களை சொல்லலாம்.

குளிர் காலம் தான் இங்கே கல்யாண காலம். நம்ம ஊர் மாதிரி எல்லா மாசங்களிலும் கல்யாணம் செய்வதில்லை. பெரும்பாலான கல்யாணங்கள் குளிர் மாதங்களில் தான் நடக்கிறது. மாப்பிள்ளை ரூபாய் நோட்டு மாலை போட்டு குதிரை மேல் உட்கார்ந்து, பெண் வீட்டார் ஏற்பாடு செய்துள்ள கல்யாண மண்டபத்திற்கு செல்கிறார். பெண்கள் ஜிகுஜிகுன்னு உடை அணிந்து, குளிரை பயமுறுத்துவது போல, ஒரு ஷால்-ஐ மடித்து கையில் போட்டுக்கொண்டு குதிரை பின்னால் டான்ஸ் ஆடியபடி செல்கிறார்கள்! குதிரை பயந்து நடுங்கியபடி செல்கிறது. நம்ம ஊர் மாதிரி காலை நேர கல்யாணம் கிடையாது, இரவில் நடக்கிறது. நிறைய சம்பிரதாயங்கள் - அதை பற்றி தனியே ஒரு பதிவே போடலாம்.

குளிர் வந்த உடனே கம்பளி, ஸ்வெட்டர், மற்ற குளிர் கால உடைகளை எடுத்து தூசி தட்டி, வெய்யிலில் காய வைத்து வைக்கணும். குளிர் காலம் முடிந்து திரும்ப எல்லாத்தையும் Dry கிளீனிங் கொடுத்து திவான் [பாக்ஸ் டைப் கட்டில்] உள்ள பத்திர படுத்தணும். இப்படி நிறைய வேலை எல்லோருக்கும். மூணு மாச குளிர் கால கூத்துக்கு எத்தனை வேலை! தாங்க முடியலடா சாமி.

5 கருத்துகள்:

 1. ஒரு டிசம்பர்ல அங்கே வந்திட்டு.. ஜில்லுனு ஆயிருச்சு.. நல்ல வேளை கெஸ்ட் ஹவுஸ்ல ஹீட்டர் இருந்ததால பிழைச்சேன்.. ஆனா அது குளிரே இல்லன்னு என் மப்ளர் தலையில அடிச்சு சத்தியம் பண்ணார் அங்கே..

  பதிலளிநீக்கு
 2. டெல்லி குளிரு அம்மாடி போர்வையும் வாங்கவில்லை. மனைவி ஊரில் இல்லை. ரஜாய் வாங்க வேண்டும். நினைவூட்டியதற்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 3. செம சிரிப்பா எழுதி இருக்கீங்க. இதே மாதிரி காமெடியா நிறைய தடவை எழுதவும்

  பதிலளிநீக்கு
 4. வணக்கம்

  இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்
  அறிமுகப்படுத்தியவர்-கும்மாச்சி


  பார்வையிட முகவரி இதோ- வலைச்சரம்


  -நன்றி-

  -அன்புடன்-

  -ரூபன்-

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....