செவ்வாய், 15 டிசம்பர், 2009

கண்ணீர் திரையிட்ட மகாநதி


சென்ற செவ்வாய்க் கிழமை அலுவலகம் முடிந்து வீடு திரும்பியபோது என் இல்லத்தரசி "கே" டி.வியில் கமல்ஹாசன், சுகன்யா, கொச்சின் ஹனீபா மற்றும் பூர்ணம் விஸ்வநாதன் நடித்த மகாநதி திரைப்படத்தை பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு சாதாரண கிராமத்து விவசாயி எப்படியெல்லாம் ஏமாற்றப்பட்டு தனது குடும்பம், சொத்து, நிம்மதி என்று எல்லாவற்றையும் இழக்கிறார் என்பதை படம்பிடித்துக் காட்டிய தேசிய விருது பெற்ற ஒரு நல்ல படம்.

நிறைய முறை இந்த படத்தை பார்த்திருந்தாலும் திரும்பவும் பார்க்க ஏனோ வெறுப்பு ஏற்படவில்லை. கடைசி 15 நிமிடங்கள் பார்த்துக் கொண்டிருந்த போது இந்த படத்தை முதன் முதலாக பார்த்த நினைவுகள் எனது மனதில் வந்து அலைமோதியது.

அந்த படம் வெளியானபோது நான் தில்லி வந்து மூன்று வருடங்கள் ஆகியிருந்தது. சில சமயங்களில் தில்லி தமிழ் சங்கம் அருகில் உள்ள "சங்கம்" திரை அரங்கில் தமிழ்ப் படங்கள் திரையிடுவார்கள். அது தவிர TYCA [Tamil Youth Cultural Association] என்ற ஒரு அமைப்பு மாதம் ஒரு முறை அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை Pahar Ganj பகுதியில் உள்ள மகாராஷ்டிரா ரங்கராயன் அரங்கில் தமிழ்ப் படங்கள் திரையிடுவார்கள். மற்ற எந்த திரை அரங்குகளிலும் தமிழ்ப் படங்கள் திரையிடப்படுவதில்லை. அந்த அமைப்பின் உறுப்பினர் என்றால் கட்டணம் 25 ரூபாய் இல்லையெனில் அதிகம் [சரியாக நினைவில்லை].

மகாநதி திரைப்படம் அந்த அரங்கினில் திரையிடப்பட்டது. எனது அண்ணனால் [தாய் வழி உறவினர்] அவரது அலுவலகத்திலிருந்து வர இயலாததால், நானும் எனது அண்ணியும் படம் பார்க்கச் சென்றோம். படம் பார்த்து கனத்த மனதுடன் படத்தில் உள்ள நிகழ்வுகளை நினைத்தபடி வெளியே வந்து ஆட்டோவில் கரோல் பாக் சென்றோம். எனது அண்ணி ஆட்டோவில் வரும்போது சினிமாவின் தாக்கத்தினால் அழுது கொண்டே வந்தார். அவரை எப்படி சமாதானப்படுத்துவது என்று எனக்கு புரியவில்லை. ஆட்டோ ஓட்டுனர் வேறு திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டேயிருந்தார். வீட்டிற்கு சென்ற பிறகும் அவரது அழுகை நின்றபாடில்லை. அண்ணனும் எவ்வளவோ சொல்லியும் அரை மணி நேரம் கழித்தே அவரது அழுகை நின்றது.

என்னதான் இது ஒரு சினிமாதானே என்றிருந்தாலும் நமது மனம் அதில் ஒன்றிவிட்டால் என்னவோ இது நிஜமாகவே நடந்த ஒரு நிகழ்ச்சி போல ஏனோ வருந்துகிறோம். நமது மனதில் இந்த நிகழ்ச்சிகள் அத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால் நிஜமாகவே இந்த படத்தில் காட்டப்பட்ட நிகழ்ச்சிகள் நடக்கும் போது பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எந்த விதமான உதவியும் சமூகத்திலிருந்து கிடைப்பதில்லை. மாறாக அவர்கள் மேலும் காயப்படுத்தப் படுகிறார்கள்.

இங்கே ஒரு விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். இவர்களைப் போன்றவர்களுக்காக உழைக்கும் ஒரு நல்ல உள்ளம் சுனிதா கிருஷ்ணன். இவரை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் இங்கு செல்லவும்.

7 கருத்துகள்:

 1. உண்மைதான் நாகராஜ்...
  சுட்டி கொடுத்தமைக்கு நன்றி!!

  பதிலளிநீக்கு
 2. நல்ல பதிவு.. சினிமா பார்த்து அழுததை மட்டும் சொல்லி நிற்காமல் விடியலுக்கான முகவரியையும் காட்டியதற்கு நன்றி

  பதிலளிநீக்கு
 3. அருமையான பதிப்பு. எனக்கும் படம் பார்த்த பிறகு மிகவும் துக்கமாக இருந்தது. ஏன் இப்படி நல்ல மனிதர்களை சமூகம் வாழ விடுவதில்லை என மிகவும் கோவம் வந்தது. நல்ல அருமையான கமலின் படைப்புகளில் இதுவும் ஒன்று.

  பதிலளிநீக்கு
 4. Yes,there have been innumerable such instances we come accross in our daily life, some are reported many influencial violators escape the clutches of law!! Unless deterrent punishments,as prevailing in Arabian countries, are awarded, there is little we can do to correct the malady.My heart bleeds for those helpless women and children who have been abused by "animals in the garb of human beings"
  Mandaveli Natarajan.

  பதிலளிநீக்கு
 5. ஆடோவிலும் வீட்டிலும் அண்ணி அழுதது அன்று embarassing-ஆக இருந்தாலும் இப்போது நினைத்தால் சிரிப்பாக இருக்கும். அப்படி தானே?

  சுனிதா கிருஷ்ணன் பற்றி தெரிய படுத்தியமைக்கு மிக்க நன்றி. அவர் செய்வது நல்ல சேவை

  பதிலளிநீக்கு
 6. காணொளியும் பார்த்து வந்தேன். வாழ்வியல் சோகங்கள். அதுதான் திரும்பப் பாக்கத் தோன்ற மாட்டேன் என்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்வியல் சோகங்கள்.... திரும்பப் பார்க்க வாய்ப்பு கிடைத்தால் கூட பார்ப்பதில்லை. கடந்து சென்றுவிடுவேன்.

   சுட்டி பார்த்து இங்கே வந்து படித்து, கருத்துரைத்தமைக்கு நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....