வெள்ளி, 30 மே, 2014

ஃப்ரூட் சாலட் – 94 – தொடரும் வன்முறை – தண்ணீர் - யானைஇந்த வார செய்தி:உத்திரப் பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த வாரத்தில் மட்டுமே மூன்று மாவட்டங்களில் பெண்களை மானபங்கப்படுத்தியதும், தட்டிக் கேட்ட ஒரு பெண்ணின் தாயை கொடுமையாகக் காயப்படுத்தியதும், ஓர் இடத்தில் காக்க வேண்டிய காவல் துறையே இது போன்ற இழிவான செயல்களில் ஈடுபட்டதும் நடந்திருக்கிறது.

உத்திரப் பிரதேசத்தின் பதௌன் [Badaun] மாவட்டத்தில் இரண்டு பெண்களை கற்பழித்து அவர்களை தூக்கில் தொங்க விட்டிருக்கிறார்கள். இதில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் காவல்துறையைச் சேர்ந்த ஒருவரும் இருக்கிறார் என்பதைப் பார்க்கும்போது பாதிக்கப்பட்டவர்கள் எங்கே சென்று முறையிடுவார்கள் எனத் தோன்றுகிறது.

எடாவா மாவட்டத்தில் நேற்று நடந்த ஒரு சம்பவம் இன்னும் மோசமான விஷயமாக இருக்கிறது. சமீபத்தில் ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்தவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். அந்த வழக்கினை திரும்பப் பெறச் சொல்லி, குற்றம் சாட்டப்பட்டவரின் தந்தை பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயைக் கொடுமையாகத் தாக்கி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

பெண்களைப் போகப் பொருளாக மட்டுமே பார்க்கும் மனநிலை மாறும் வரை, இது போன்ற செயல்களில் ஈடுபடுவர்களுக்கு விரைவான தண்டனை, அதுவும் முன்னுதாரணமான தண்டனை தரப்படும் வரை இது போன்ற இழிவான செயல்கள் தொடரும் என்றே தோன்றுகிறது.

உத்திரப் பிரதேசம், பீஹார் போன்ற மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மிக அதிகம் – அதுவும் வெளி வராத குற்றங்கள் மிக மிக அதிகம். தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை வெட்கப்பட்டும், பயம் கொண்டும் வெளியே சொல்லாத பெண்கள் தான் அதிகம்.

பெண் விடுதலை, முன்னேற்றம் என்று பலமாக குரல் கொடுத்தபடியே இருந்தாலும், இன்னமும் இது போன்ற குற்றங்கள் இந்தியாவின் பல பகுதிகளில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது வருத்தம் தரும் விஷயம்….. 


இந்த வார முகப்புத்தக இற்றை:

உங்களுக்குப் பிடித்தவரின்
தீய குணங்கள்
உங்கள் கண்களுக்குத் தெரியாது!

உங்களுக்குப் பிடிக்காதவரின்
நல்ல குணங்கள்
உங்கள் கண்களுக்குத் தெரியாது!


இந்த வார குறுஞ்செய்தி:

BEST THING TO LEARN FROM WATER:

ADJUST YOURSELF IN EVERY SITUATION AND IN ANY SHAPE BUT MOST IMPORTANTLY ALWAYS FIND OUT YOUR OWN WAY TO FLOW….


சுஜாதாட்ஸ்:

உரைநடையை எளிதாக எழுதுவதற்கு ஒரு கழகம் ஆரம்பித்தால் அதற்கு நான் உடனே ஆயுள் சந்தா அனுப்புவேன். தற்போது தமிழில் கொஞ்சம் தீவிரமாகச் சிந்திப்பவர்கள் மிகச் சிக்கலாக எழுதுகிறார்கள். அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்கு திரும்பத் திரும்பப் படித்து படம் வரைந்து பாகங்களைக் குறிக்க வேண்டியிருக்கிறது. என்னைச் சராசரிக்குச் சற்று மேற்பட்ட வாசகனாகக் கொள்ளலாம். எனக்குப் புரியவில்லை என்றால், புரிவது கஷ்டமாக இருக்கிறது என்றால் இது யார் தவறு?


உதாரணம் சொல்கிறேன்.

“இலக்கியத்தில் நேற்று இல்லாதிருந்தது இன்று இக்கணம் புதிதாக நிகழ்ந்து சாத்தியமாகி உள்ள ஒரு பரிமாண விஸ்தாரம் புகைப்படக்கலை அல்லது தியேட்டரைச் சார்ந்துள்ள எல்லைகளிலிருந்து பிய்த்து எடுக்கப்பட்டதனாலும் விஸ்தாரம் சாத்தியமாகிவிட்ட இக்கணமீதிலிருந்து அது இலக்கியத்தைச் சார்ந்த எல்லையாகிவிடுகிறது.”


-    கணையாழியின் கடைசி பக்கங்களில் சுஜாதா.

ரசித்த பாடல்:

மண் வாசனை படத்திலிருந்து “ஆனந்தத் தேன் சிந்தும் பூஞ்சோலையில்” பாடல் – இந்த வார ரசித்த பாடலாக உங்களுக்கு இசை விருந்தாக…..ரசித்த ஓவியம்:

திருவரங்கம் கோவிலின் யானையாகிய ஆண்டாள் 48 நாள் ஓய்விற்குப் பிறகு மீண்டும் கோவில் பணியில் சேர்ந்தது – செய்தி.

Eric Marette என்பவர் வரைந்த யானை ஓவியம் இந்த வார ரசித்த ஓவியமாக…..

படித்ததில் பிடித்தது:

இங்கிலீஷ் பேப்பர் கிலோ ஒன்பது ரூபாய் தமிழ் பேப்பர் நாலு ரூபாய்என்பதைப் பார்த்ததும் தனது எண்ணத்தை செயலாற்றத் துவங்கினாள் அவள்.
இங்கிலீஷ் பேப்பபரின் இடை இடையே தமிழ் பேப்பரை வைத்துக் கட்டி பேப்பர்காரனுக்குப் போட்டாள்.
"எல்லாம் இங்கிலீஷ் பேப்பர்பா, பார்த்து நல்லா எடை போட்டு எடுத்திட்டுப் போப்பா…!"
"சரிங்கம்மா, மொத்தம் பத்து கிலோகிட்ட வருது, இந்தாங்கம்மா
தொண்ணூறு ரூபாய்" என அவன் கொடுத்து சென்றான்.
ஏதோ சாமர்த்தியமாய் சாதித்ததாய் பூரித்துப் போனாள் அவள்!
மாலை அதே பேப்பர்காரனைப் பார்த்ததும் கொஞ்சம் வெல வெலத்துப் போனாள்
"என்னம்மா இப்படிப் பண்ணிட்டீங்க…? பேப்பருக்கு இடையில"
அவன் பேசப் பேச அவளுக்கு வியர்த்தது!
"இந்த பவுன் செயின் இருந்தது, பவுன் விற்கிற விலைக்கு, இப்படியா அலட்சியமா இருக்கிறது. இந்தாங்கம்மா! என எடுத்து நீட்ட"
அவன் தங்கமாகவும் தான் கிழிந்த பழைய பேப்பருமாக மாறி இருந்ததை அவளால் உணர முடிந்தது!!

என்ன நண்பர்களே, இந்த வார ஃப்ரூட்சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
திருவரங்கத்திலிருந்து…..


திங்கள், 26 மே, 2014

நைனிதால் – சரியா தால் - கரணம் தப்பினால் மரணம்

ஏரிகள் நகரம் – பகுதி 14

ஏரிகள் நகரம் – பகுதி 01 02 03 04 05 06 07 08 09 10 11 12 13

ஏரிகள் நகரம் தொடரின் பதிமூன்றாம் பகுதியினை முடிக்கும்போது கீழ்க்கண்டவாறு முடித்திருந்தேன்.

அவர்கள் இரண்டு இடங்களைச் சொன்னார்கள் ஒன்று ராணிகேத் எனப்படும் ஒரு மலைவாசஸ்தலம் - நைனிதால் நகரிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு இடம். இரண்டாவது ஜிம் கார்பெட் நைனிதால் நகரிலிருந்து இரண்டரை மணி நேரப் பயணம் 145 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இடம். இந்த இரண்டையும் கேட்டுக்கொண்டு, மால் ரோடில் இருக்கும் ஒரு உணவகத்தில் காலை உணவினை முடித்துக் கொண்டோம். பிறகு எங்கள் ஓட்டுனர் பப்புவும் வந்து சேர எங்கள் பயணத்தினைத் தொடர்ந்தோம். நாங்கள் இரண்டில் தேர்ந்தெடுத்தது ராணிகேத் [அ] ஜிம் கார்பெட் - இரண்டில் எது என்று ஊகம் செய்ய முடிந்தால், பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.

சென்ற பகுதியில் கேட்டிருந்த கேள்விக்கு ஒரு சிலர் ஜிம் கார்பெட் என்றும் ஒரு சிலர் ராணிகேத் என்றும் சொல்லி இருந்தார்கள். ஏற்கனவே நைனிதால் ஒரு மலைவாசஸ்தலம் என்பதால், இன்னுமோர் மலைவாசஸ்தலமான ராணிகேத் செல்வதற்கு பதில் ஜிம் கார்பெட் செல்லலாம் என நான்கு நண்பர்களும் ஒருமித்த முடிவு எடுக்க, காலை உணவான பராட்டா, தயிர், ஊறுகாய், முடித்து ஜிம் கார்பெட் நோக்கி எங்கள் பயணம் தொடங்கியது.நைனிதால் நகரிலிருந்து கிளம்பியதும் மலைப்பாதையில் தொடர்ந்து பயணித்தோம். வழி முழுவதும் மலைப்பாதைக்கு உரிய பல விளம்பரங்கள் எழுதி வைக்கப்பட்டிருந்தன. ஒரு விளம்பரம் எங்கள் கவனத்தினை ரொம்பவே அதிகம் ஈர்த்தது.  அது என்ன என்று தானே கேட்கிறீர்கள். “நீங்கள் வேகத்துடன் திருமணம் செய்து கொண்டிருந்தால் உடனே விவாகரத்து செய்து விடுங்கள்என்பது தான் அந்த விளம்பரம்தேவையான விளம்பரம் தான்! கரணம் தப்பினால் மரணம் என்பதை நாங்கள் வழியில் பார்த்த சரியா தால்எனும் இடத்தில் புரிந்து கொண்டோம்.

சரியா தால்என்பது நைனிதால் நகரினைச் சுற்றி இருக்கும் பல ஏரிகளைப் போன்ற ஒன்று தான். ஹிந்தியில்சரியாஎன்றால் இரும்புக் கம்பிஏனோ இந்த ஏரிக்கும் சரியா எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். ஆனாலும் அப்படி ஒன்றும் பெரிய ஏரி அல்ல. மிகச் சிறிய ஏரி தான்தூரத்திலிருந்து பார்க்கும்போதே மிகச் சிறியதாய் தோன்ற அங்கு முன்னேறாமல் பக்கத்தில் இருக்கும் ஒரு நீர்வீழ்ச்சியினை நோக்கி நடந்தோம். உள்ளே செல்ல அனுமதிக் கட்டணம் நபர் ஒருவருக்கு ஐந்து ரூபாய் மட்டுமே.


Sadiatal Cascade என்று பெயர் எழுதியிருந்த நுழைவு வாயில் உங்களை அங்கே வரவேற்கிறது. ஆங்கிலத்தில் எழுதும்போது Sadiatal என்று எழுதியிருந்தாலும் இதைப் படிக்கும்போது சரியா தால் என்று தான் படிக்கவேண்டும். இப்படி சில தொல்லைகள் ஹிந்தியில் உண்டு – பஞ்சாபிகள் தங்களது பெயரைச் சொல்லும்போது ”விவேக் அரோடா” என்று சொல்வார்கள், ஆனால் ஆங்கிலத்தில் எழுதும்போது Vivek Arora என்று எழுதுவார்கள் – குழப்பம் தான் நமக்கு மிஞ்சும்!
இந்த சரியா தால் சிற்றருவியில், பெரியதாய் பார்க்க ஒன்றுமில்லை என்றாலும் தொடர்ந்து பயணிக்கும் போது கொஞ்சம் ஓய்வு எடுக்க இங்கே நிறுத்தலாம்குற்றாலத்தின் ஐந்தருவிகளைப் பார்த்தவர்களுக்கு இந்த அருவி அப்படி ஒன்றும் சிறப்பாகவோ, மனதுக்கு மகிழ்ச்சியைத் தருவதாகவோ இருக்காது. ஆனாலும், பல சுற்றுலாப் பயணிகளை இங்கே பார்க்க முடிந்தது. நானும் நண்பர்களும் நீர்வீழ்ச்சியை நோக்கி மலைப்பாதையில் நடக்க, பல இளம் ஜோடிகளைப் பார்க்க முடிந்தது.


அதில் ஒரு பெண் ரொம்பவும் தைரியமாக பாறைகள் மேல் நடந்து நீர்வீழ்ச்சியின் அருகே சென்று, தனது துணையாக வந்தவரை புகைப்படம் எடுக்கச் சொல்ல, அவரோ ரொம்பவே அலறிக்கொண்டு இருந்தார் – “அங்கே போகாதே, வழுக்கி விழுந்துடுவே, நான் வரலை…” என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். சிரித்தபடி நாங்கள் முன்னேற, அப்பெண் அந்த ஆணின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தார்!நீர்விழ்ச்சியிலிருந்து வந்த சிலுசிலுப்பும் மரங்களிலிருந்து வந்த காற்றும் ரம்யமாக இருக்க, பாறைகளின் மேல் அமர்ந்து கொண்டு கீழே ஓடும் தண்ணீரை பார்த்துக் கொண்டு, அங்கே ஒரு சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டு கீழே இறங்க ஆயத்தமானோம். பாறைகளில் அமர்ந்திருந்தபோது மலைகளில் இருந்த மரங்களுக்கிடையே எதோ சிக்கிக் கொண்டிருப்பது போல தோன்றவே சற்று அருகே சென்று பார்க்க முடிவு செய்தோம்.மலையில் இருக்கும் ஒற்றையடிப் பாதை வழியே சென்றால் சில மரக் கிளைகளில் ஒரு பேருந்து மாட்டிக் கொண்டிருந்தது. மலைப்பாதை வழியே வரும்போது அந்த பேருந்தினை ஓட்டிய ஓட்டுனர் வேகத்தினை விவாகரத்து செய்யாத காரணத்தால், அவர் மட்டுமன்றி அப்பேருந்தில் பயணம் செய்த பலருக்கும் முடிவினைத் தேடித் தந்திருப்பார் போல! பேருந்து விழுந்து பல நாட்கள்/மாதங்கள் ஆனாலும் அந்தப் பேருந்தினை மரக்கிளைகளிலிருந்து மீட்டெடுத்து எந்த பயனும் இல்லை என்பதாலோ என்னமோ அப்படியே தொங்கிக் கொண்டிருக்கட்டும் என விட்டுவிட்டார்கள் போல!சில மணித்துளிகள் அங்கே இயற்கையை ரசித்து விட்டு, மீண்டும் சாலைக்கு வந்தோம். சாலை ஓரத்தில் இருக்கும் ஒரு சிறிய கடையில், எங்கள்  ஓட்டுனர் பப்பு தேநீர் குடித்துக் கொண்டிருக்க, நாங்களும் ஒரு தேநீரை குடித்து, ஜிம் கார்பெட் நோக்கிய எங்கள் பயணத்தினைத் தொடர்ந்தோம். ஜிம் கார்பெட் செல்லும் வழியில் வந்த ஒரு ஊரின் பெயர் கொஞ்சம் வித்தியாசமாக இருந்ததுகாலாடுங்கீ!மலைப்பாதையில் பார்த்த விளம்பரம், தொங்கிக் கொண்டிருக்கும் பேருந்து ஆகிய இரண்டுமே முழுப் பயணத்திலும் எங்கள் நினைவில் மீண்டும் மீண்டும் வந்து சென்றது என்பது உண்மை. காரணம் எங்கள் ஓட்டுனர் பப்பு வேகத்தினை திருமணம் புரிந்து கொண்டிருந்தார்அதுவும் காதல் கொண்டு மணம் புரிந்தவர் போல நடந்து கொண்டிருந்தார்!

தொடர்ந்து பயணிப்போம்......

நட்புடன்

வெங்கட்
திருவரங்கத்திலிருந்து…..

வெள்ளி, 23 மே, 2014

ஃப்ரூட் சாலட் – 93 – ஆசிரியர் பணி – கதை மாந்தர்கள் – என்ன பூ?

இந்த வார செய்தி:

ஆசிரியர் பணி என்பது ஒரு மகத்தான பணி. தன்னிடம் படிக்கும் மாணவர்களுக்கு தேவையான படிப்பினையும், தன்னம்பிக்கையும், அவர்களது வாழ்க்கையில் முன்னேறத் தேவையான தகுதிகளையும் தொடர்ந்து தருபவர்கள் ஆசிரியர்கள். அந்த ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

இன்றைக்கு நாம் பார்க்கப் போகும் ஒரு செய்தியும் ஆசிரியர் பற்றியது தான். ஆனால் இவர் இன்னமும் ஆசிரியர் ஆகவில்லை. ஆசிரியர் பணியில் சேர தொடர்ந்து தகுதித் தேர்வெழுதும் ஒருவர் பற்றிய செய்தியை நாளிதழ் ஒன்றில் படித்தேன். அது என்ன செய்தி என்று பார்க்கலாம்!திண்டுக்கல் அருகே அய்யலூரில் சலூன் கடை வைத்திருக்கும் முருகேசன் என்பவரின் ஐந்தாவது மகன் ரங்கசாமி. தனது நான்காம் வயதில் ஒரு சாலை விபத்தில் இரு கைகளையும் இழந்துவிட்டார். காரைக்குடியில் இருந்த ஒரு ஊனமுற்றொர் பள்ளியில் முதல் வகுப்பிலிருந்து நான்காம் வகுப்பு வரை படித்திருக்கிறார். அப்பள்ளியை நிர்வாகம் மூடிவிட, மீண்டும் தனது சொந்த ஊரில் ஒன்றாவதிலிருந்து படிக்க ஆரம்பித்திருக்கிறார்.

நைந்து போன கைகளை வைத்துக் கொண்டு எப்படி எழுத முடியும் என்று கேட்ட பள்ளியினருக்கு, நைந்து போன கைகளின் மிஞ்சிய பகுதியைப் பயன்படுத்தி எழுதி ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார். முதலில் வாயில் பேனா வைத்தும், கால்களில் பிடித்தும் எழுதிப் பார்த்து அது ஒழுங்காக வராததால், தொடர்ந்து கைகளில் எழுத முயற்சி செய்து, தொடர்ந்து படித்து தற்போது எம்.ஏ., பி.எட் வரை முடித்து விட்டார்.  

அவர் வீட்டிலேயே அவர்தான் முதல் பட்டதாரி, அண்ணன்கள் இருவரும் தந்தையின் தொழிலிலேயே ஈடுபட, சகோதரிகள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. யாரும் பத்தாம் வகுப்பிற்கு மேல் படிக்காதவர்கள்.

முன்னாள் குடியரசுத் தலைவரைச் சந்தித்தது பற்றி அவர் சொன்ன விஷயம்:

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், கடந்த 2010-ம் ஆண்டு கோவைக்கு வந்திருந்தபோது சந்தித்தேன். என்னிடம் சிறிது நேரம் பேசிய அவர் எனது விவரங்களை கேட்டு நீ ஆசிரியர் ஆக முயற்சி செய்; உன்னால் ஏராளமான தன்னம்பிக்கையுடைய மாணவர்களை உருவாக்க முடியும்என்றார்.

அப்போது முதல் நான் பி.எட்., முடித்து ஆசிரியர் பணிக்கு முயற்சி செய்கிறேன். கடந்த 3 முறை நடந்த தகுதித் தேர்வுகளையும் எழுதியுள்ளேன். வெற்றி பெற முடியவில்லை. இந்த முறை மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தேர்வையும் எழுதியுள்ளேன். நிச்சயம் ஒரு நாள் ஆசிரியர் ஆகியே தீருவேன் என்றார்.

ரங்கசாமியின் ஆசிரியர் கனவு பலிக்க அனைவரும் வாழ்த்தலாமே..!

முழுக்கட்டுரை இங்கே……

இந்த வார முகப்புத்தக இற்றை:

வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம் தான்.

கடமையைச் செய்தால் வெற்றி.
கடமைக்குச் செய்தால் தோல்வி!

இந்த வார குறுஞ்செய்தி:


IF YOU STAND FOR A REASON, BE PREPARED TO STAND LIKE A TREE. IF YOU FALL ON THE GROUND, FALL LIKE A SEED THAT GROWS BACK TO FIGHT AGAIN.

சுஜாதாட்ஸ்:

எனக்கு வேண்டிய எழுத்தாளர் ஒருவர் ஒரு பெண் காணாமற்போன உண்மை நிகழ்ச்சியை எனக்கு எழுதியிருந்தார். நான் எழுதும் த்ரில்லர்களை எல்லாம் தூக்கி சாப்பிடும்படியாக வினோதமான நிகழ்ச்சிகள்… நெஞ்சைத் தொடும் நிகழ்ச்சிகள். பயங்கர நிகழ்ச்சிகள். கடைசியில் பெண்ணைக் காணவில்லை. என்னை அபிப்ராயம் கேட்டிருந்தார். கதையாக எழுதுவதில் ஒரு சௌகரியம். இஷ்டப்பட்ட அத்தியாயத்தில் கதாநாயகியை மீட்கலாம்…. நிஜ வாழ்க்கையின் அத்தியாயங்கள் அவ்வளவுச் சுலபமாக இருப்பதில்லை. தேர்ந்த எழுத்தாளர் நண்பர் அவர். விதவிதமான குற்றங்களைப் பற்றி எழுதுகிறவன் நான்….. இருவரும் ஒன்றும் செய்ய முடியாது. காரணம் பெண் நிஜம், போலீஸ் நிஜம்….

-    கணையாழியின் கடைசி பக்கங்கள், ஏப்ரல் 1977.  

ரசித்த பாடல்:

இந்த வார ரசித்த பாடலாக மோகன் மற்றும் நளினி நடித்த நூறாவது நாள் படத்திலிருந்து “விழியிலே மணி விழியின்” எனும் பாடல்….புகைப்படம்:
தற்போது தமிழகத்தின் பல சாலைகளின் ஓரங்களில் இந்தப் படத்தில் இருக்கும் பூ பூத்திருக்கிறது. இந்தப் பூ என்ன பூ என்று சொல்லுங்களேன் பார்க்கலாம்!

படித்ததில் பிடித்தது:

என்னமாய் எழுதியிருக்கிறார் இக்கவிஞர். திருமணமாகி சில வருடங்களுக்குப் பிறகு இதெல்லாம் சாத்தியம் தான்! :)

உன்னருகே நானிருந்து
சொன்ன கதையெல்லாம்
சுவையற்றுப் போனதென்ன
என்னை எதிர்நோக்கி
வீதியின் கோடிவரை
விழிக்கடையில் சிறைப்படுத்தி
நிலைப்படியே நீயாக
நின்றிருப்பாய்.
இன்று? இல்லை!
காரணமோ
ஆணொன்றும் பெண்ணொன்றும்
குழந்தைகள் காரியங்கள்
அடுப்பில் புளிக்குழம்பு…..

-    கி. கஸ்தூரிரங்கன்.

என்ன நண்பர்களே, இந்த வார ஃப்ரூட்சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
திருவரங்கத்திலிருந்து…..