வியாழன், 15 மே, 2014

தெனாலிராமன் – வெல்லட்டும்….டும்..


படம்: இணையத்திலிருந்து....

தில்லியில் இருந்தபோதே திரையுலக மறுபிரவேசமாக வடிவேலு அவர்கள் நடித்த தெனாலிராமன் படத்தின் விமர்சனங்களை வலையுலகத் தோழர்கள் எழுதியதைப் படித்தபோதுவடிவேலுவிற்காக பார்க்க நினைத்திருக்கிறேன்என பின்னூட்டத்தில் எழுதியிருந்தேன். திருச்சி வந்தவுடனே வீட்டிலும் தெனாலிராமன் படத்திற்குச் செல்ல வேண்டும் எனச் சொல்லவே கடந்த 4-ஆம் தேதி ஞாயிறன்று திருச்சி நகரின் பழைய திரையரங்குகளில் ஒன்றான ஊர்வசி திரையரங்கில் மாலைக் காட்சியாக தெனாலிராமன் படத்தினைப் பார்த்தேன்/தோம்.

மாலை 06.30 மணிக்குதான் காட்சி என்றாலும் ஐந்து மணிக்கே சென்றுவிட, 06.00 மணிக்கு தான் நுழைவுச் சீட்டுகள் தருவோம் எனச் சொல்லவே கொஞ்சமாக அப்படியே நடந்து பக்கத்தில் உள்ள நாகநாதர் கோவிலுக்குச் சென்றோம். வவ்வால்கள் நிறையவே குடியிருப்பதால் இருக்கும் ஒரு வித நாற்றத்தின் தாக்கத்தோடு கோவிலைச் சுற்றி வந்தோம். நாகநாத ஸ்வாமியிடம் இது போன்ற கோவில்களை பராமரிக்கும் பணியை விரைவில் நடத்திக்கொள்ள ஏதும் வழி செய்து கொள்ளக்கூடாதா என்ற கேள்வியைக் கேட்டு, “கொஞ்சம் கவனித்துக்கொள்ளேன்என்று சொல்லி சற்று நேரம் அமர்ந்திருந்து விட்டு வெளியே வந்தோம்.

மீண்டும் திரையரங்கு பக்கம் வர, ஊர்வசியின் படிக்கட்டுகளில் மக்கள் அனைவரும் பந்தியில் சாப்பாடு கிடைப்பதற்கு முன் அமர்ந்திருப்பது போல அமர்ந்திருந்தார்கள். திடீரென திரையரங்கின் ஊழியர் ஒருவர்டிக்கெட் 100 ரூபாய், 80 ரூபாய்எல்லாத்துக்கும் ஒரே லைன்! வீட்டுக்கு ஒருத்தர் லைன்ல நில்லுங்க போதும்என்று சொல்ல அனைவரும் முண்டியடித்து வரிசையில் நின்றார்கள். கூட்டத்தோடு கூட்டமாக நானும் நிற்க மூன்று நுழைவுச்சீட்டுகளை வாங்கிக் கொண்டேன்.

நுழைவுச்சீட்டு கொடுத்த பெண்மணி, “லேடீஸ் கூட இருக்காங்களா?” என்று கேட்க, கேள்வியின் நோக்கம் புரியவில்லை….  மனைவியும், மகளும் இருக்கிறார்கள் எனச் சொல்ல, 1-8 இருக்கைகளில் 6-8 இருக்கைகளுக்கான நுழைவுச் சீட்டுகளைத் தந்தார். கேள்வியின் நோக்கம் உள்ளே சென்றவுடன் புரிந்தது. படம் ஆரம்பித்ததோ இல்லையோ, அதற்குள் உள்ளே இருந்த மக்களின் அரவை இயந்திரம் தனது வேலையைத் தொடங்கிவிட்டது.

படம் பார்க்கும் இரண்டு மணி நேரம் கூட வாய்க்கு வேலை கொடுக்காது இருக்க முடியவில்லைஒன்று பேசுகிறார்கள் இல்லையெனில் நொறுக்குத் தீனி சாப்பிடுகிறார்கள். இதில் முன்னே அமர்ந்திருப்பவரைகொஞ்சம் குனிந்து உட்காருங்க!” என்றோ, “தலையை ஆட்டாம உட்காருங்க!” என்று அடுத்தவர்களைத் தொந்தரவு செய்து கொண்டிருந்தார்கள்கூடவே தனது பின்னே இருக்கும் நபர்களுக்கு திரையை மறைத்தபடி இருந்தார்கள்!

படமும் ஆரம்பித்ததுதெனாலிராமன் படம் ஆங்காங்கே கொஞ்சம் புலிகேசியை நினைவுக்கு கொண்டுவந்தாலும், ரசிக்க முடிந்தது. பல காட்சிகள் நன்றாக இருந்தன. சில பாடல்கள், குறிப்பாக கதாநாயகி அறிமுகப் பாடல் தேவையில்லாத ஒன்று எனத் தோன்றியது. வடிவேலு இரண்டு வேடங்களில் நடித்தாலும் தெனாலிராமன் பாத்திரத்தினை விட மன்னர் பாத்திரம் தான் எனக்கு பிடித்திருந்தது.

வில்லன் கதாபாத்திரங்களில் வழக்கம் போல ராதாரவி தனது திறமையைக் காட்டினாலும், மந்திரிகளில் படம் இயக்குவதையே மறந்துவிட்ட மனோ பாலா தனக்குக் கிடைத்த பாத்திரத்தினைச் சிறப்பாக செய்திருந்தார். ராஜேஷ், தேவதர்ஷினி என ஒரு பெரிய பட்டாளமே இருக்க பலரது திறமைகள் முழுமையாகப் பயன்படுத்தப் படாது முழுக்க முழுக்க வடிவேலுவினை மட்டுமே நம்பி திரைப்படம் எடுக்கப்பட்டது போலத் தோன்றியது

இதற்கிடையே திரைப்படத்தில் இடைவேளை - நொறுக்குத் தீனி கடைகளில் மொத்த கூட்டமும் வந்துவிட அங்கே பலத்த போட்டி நடந்து கொண்டிருந்தது. நுழைவுச் சீட்டுகளை சரிபார்த்த பெண்மணியே கடையை நடத்திக் கொண்டிருந்தார்.  எல்லா பொருட்களின் விலையும் இரண்டு மடங்கு மூன்று மடங்கு என புலம்பிக்கொண்டாலும் மக்களால் அவற்றை வாங்காமல் இருக்க முடியவில்லை. மற்ற திரையரங்குகளின் நிலை போலவே இந்த ஊர்வசி திரையரங்கிலும் படம் பார்ப்பவர்களுக்கான வசதிகள் மிகவும் குறைவு. சுத்தம் சுகாதாரம் என்பதில் எந்தவித கவனமும் செலுத்துவதில்லை என்பது கண்கூடு…..

என் இருக்கைக்குப் பின் இருக்கையில் கணவன்மனைவி, இரண்டு வயது மதிக்கத்தக்க சிறுவன் ஆகியோர் இருந்தனர்அச்சிறுவன் திரையரங்கிற்கு வந்ததிலிருந்தே என் இருக்கையை எட்டி உதைத்தும், என் தலையை தட்டியபடியும் இருந்தான்செம வால். பல முறை பின்னால் திரும்பிப் பார்த்தாலும், அச்சிறுவனின் தாயோ தந்தையோ குழந்தையை தடுக்க முயற்சியே செய்யவில்லை! நடுநடுவே என் மகளின் கையிலும் அடிக்க வேறு வழியில்லாது அவர்களிடம் குழந்தையை ஒழுங்காகப் பார்த்துக் கொள்ளச் சொன்னேன்.

ஒருவழியாக பல்வேறு இடைஞ்சல்களுக்கு இடையே ஒரு திரைப்படம் பார்த்து முடித்தேன்/தோம்இருபத்தி மூன்று வருட தில்லி வாழ்க்கையில் தமிழ் திரைப்படங்கள் பார்ப்பதற்கு அத்தனை வசதிகள் இல்லை. ஒரு சில திரையரங்குகளில் தமிழ் திரைப்படங்கள் திரையிட்டாலும் அதற்கெனெ நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியிருப்பதும், ஒரு திரைப்படத்திற்கென  ரொம்பவே மெனக்கெட பிடிக்காது போனதற்கு ஒரு காரணம்!

கிட்டத்தட்ட பன்னிரெண்டு வருடங்களுக்குப் பிறகு திருச்சியில் ஒரு திரைப்படம் பார்க்கிறேன்பன்னிரெண்டு வருடங்களுக்கு முன் மனைவியும் நானும் இங்கே பார்த்த படம் மாதவன் நடித்தரன்”! மாரீஸ் காம்பிளக்ஸில் இருந்த ஏதோ ஒரு திரையரங்கு…. சென்னை மதுரை போன்ற நகரங்களில் இருப்பது போல நல்ல திரையரங்குகள் இல்லாததும் திருச்சி நகருக்கு ஒரு குறைதான்!

மூன்று வருடங்களுக்குப் பிறகு திரையுலகில் மறு பிரவேசம் செய்திருக்கும் வடிவேலுவின் அடுத்த படங்கள் வெல்லட்டும்….டும்என்று  வாழ்த்துவோம்……

மீண்டும் சந்திப்போம்….

வெங்கட்

திருவரங்கத்திலிருந்து…..

16 கருத்துகள்:

 1. உங்களைப்போலவே நானும் வடிவேலுவிற்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா...

   நீக்கு
 2. படம் எப்படி இருந்தாலும் வடிவேலுவின் மறு பிரவேசம்தான் வரவேற்கத்தக்கது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. நல்லவேளையாத் தியேட்டருக்குப் போய்ப் படம் பார்க்கணும்னு எல்லாம் ஆசை வைச்சுக்கலை. பிழைச்சோம். :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 4. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   நீக்கு
 5. வடிவேலுவிற்காக நிச்சயம் பார்க்கலாம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 6. அடுத்தடுத்த படங்களில் சுதாரித்துக் கொள்வார்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 7. திரைப்படம் பார்த்த அனுபவத்தை சுவைபட வழக்கம்போல் தங்கள் பாணியில் சொல்லியிருக்கிறீர்கள். இரசித்தேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 8. வேண்டாத அரசியல் சாக்கடையில் காலை விட்டுட்டார்:(

  இனி நல்ல காலம் வரட்டும் என்று வாழ்த்துகின்றோம். வடிவேலு காமெடி நம்ம கோபாலுக்கு ஹல்வா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அரசியல் சாக்கடை..... :((((

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....