திங்கள், 26 மே, 2014

நைனிதால் – சரியா தால் - கரணம் தப்பினால் மரணம்

ஏரிகள் நகரம் – பகுதி 14

ஏரிகள் நகரம் – பகுதி 01 02 03 04 05 06 07 08 09 10 11 12 13

ஏரிகள் நகரம் தொடரின் பதிமூன்றாம் பகுதியினை முடிக்கும்போது கீழ்க்கண்டவாறு முடித்திருந்தேன்.

அவர்கள் இரண்டு இடங்களைச் சொன்னார்கள் ஒன்று ராணிகேத் எனப்படும் ஒரு மலைவாசஸ்தலம் - நைனிதால் நகரிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு இடம். இரண்டாவது ஜிம் கார்பெட் நைனிதால் நகரிலிருந்து இரண்டரை மணி நேரப் பயணம் 145 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இடம். இந்த இரண்டையும் கேட்டுக்கொண்டு, மால் ரோடில் இருக்கும் ஒரு உணவகத்தில் காலை உணவினை முடித்துக் கொண்டோம். பிறகு எங்கள் ஓட்டுனர் பப்புவும் வந்து சேர எங்கள் பயணத்தினைத் தொடர்ந்தோம். நாங்கள் இரண்டில் தேர்ந்தெடுத்தது ராணிகேத் [அ] ஜிம் கார்பெட் - இரண்டில் எது என்று ஊகம் செய்ய முடிந்தால், பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.

சென்ற பகுதியில் கேட்டிருந்த கேள்விக்கு ஒரு சிலர் ஜிம் கார்பெட் என்றும் ஒரு சிலர் ராணிகேத் என்றும் சொல்லி இருந்தார்கள். ஏற்கனவே நைனிதால் ஒரு மலைவாசஸ்தலம் என்பதால், இன்னுமோர் மலைவாசஸ்தலமான ராணிகேத் செல்வதற்கு பதில் ஜிம் கார்பெட் செல்லலாம் என நான்கு நண்பர்களும் ஒருமித்த முடிவு எடுக்க, காலை உணவான பராட்டா, தயிர், ஊறுகாய், முடித்து ஜிம் கார்பெட் நோக்கி எங்கள் பயணம் தொடங்கியது.நைனிதால் நகரிலிருந்து கிளம்பியதும் மலைப்பாதையில் தொடர்ந்து பயணித்தோம். வழி முழுவதும் மலைப்பாதைக்கு உரிய பல விளம்பரங்கள் எழுதி வைக்கப்பட்டிருந்தன. ஒரு விளம்பரம் எங்கள் கவனத்தினை ரொம்பவே அதிகம் ஈர்த்தது.  அது என்ன என்று தானே கேட்கிறீர்கள். “நீங்கள் வேகத்துடன் திருமணம் செய்து கொண்டிருந்தால் உடனே விவாகரத்து செய்து விடுங்கள்என்பது தான் அந்த விளம்பரம்தேவையான விளம்பரம் தான்! கரணம் தப்பினால் மரணம் என்பதை நாங்கள் வழியில் பார்த்த சரியா தால்எனும் இடத்தில் புரிந்து கொண்டோம்.

சரியா தால்என்பது நைனிதால் நகரினைச் சுற்றி இருக்கும் பல ஏரிகளைப் போன்ற ஒன்று தான். ஹிந்தியில்சரியாஎன்றால் இரும்புக் கம்பிஏனோ இந்த ஏரிக்கும் சரியா எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். ஆனாலும் அப்படி ஒன்றும் பெரிய ஏரி அல்ல. மிகச் சிறிய ஏரி தான்தூரத்திலிருந்து பார்க்கும்போதே மிகச் சிறியதாய் தோன்ற அங்கு முன்னேறாமல் பக்கத்தில் இருக்கும் ஒரு நீர்வீழ்ச்சியினை நோக்கி நடந்தோம். உள்ளே செல்ல அனுமதிக் கட்டணம் நபர் ஒருவருக்கு ஐந்து ரூபாய் மட்டுமே.


Sadiatal Cascade என்று பெயர் எழுதியிருந்த நுழைவு வாயில் உங்களை அங்கே வரவேற்கிறது. ஆங்கிலத்தில் எழுதும்போது Sadiatal என்று எழுதியிருந்தாலும் இதைப் படிக்கும்போது சரியா தால் என்று தான் படிக்கவேண்டும். இப்படி சில தொல்லைகள் ஹிந்தியில் உண்டு – பஞ்சாபிகள் தங்களது பெயரைச் சொல்லும்போது ”விவேக் அரோடா” என்று சொல்வார்கள், ஆனால் ஆங்கிலத்தில் எழுதும்போது Vivek Arora என்று எழுதுவார்கள் – குழப்பம் தான் நமக்கு மிஞ்சும்!
இந்த சரியா தால் சிற்றருவியில், பெரியதாய் பார்க்க ஒன்றுமில்லை என்றாலும் தொடர்ந்து பயணிக்கும் போது கொஞ்சம் ஓய்வு எடுக்க இங்கே நிறுத்தலாம்குற்றாலத்தின் ஐந்தருவிகளைப் பார்த்தவர்களுக்கு இந்த அருவி அப்படி ஒன்றும் சிறப்பாகவோ, மனதுக்கு மகிழ்ச்சியைத் தருவதாகவோ இருக்காது. ஆனாலும், பல சுற்றுலாப் பயணிகளை இங்கே பார்க்க முடிந்தது. நானும் நண்பர்களும் நீர்வீழ்ச்சியை நோக்கி மலைப்பாதையில் நடக்க, பல இளம் ஜோடிகளைப் பார்க்க முடிந்தது.


அதில் ஒரு பெண் ரொம்பவும் தைரியமாக பாறைகள் மேல் நடந்து நீர்வீழ்ச்சியின் அருகே சென்று, தனது துணையாக வந்தவரை புகைப்படம் எடுக்கச் சொல்ல, அவரோ ரொம்பவே அலறிக்கொண்டு இருந்தார் – “அங்கே போகாதே, வழுக்கி விழுந்துடுவே, நான் வரலை…” என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். சிரித்தபடி நாங்கள் முன்னேற, அப்பெண் அந்த ஆணின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தார்!நீர்விழ்ச்சியிலிருந்து வந்த சிலுசிலுப்பும் மரங்களிலிருந்து வந்த காற்றும் ரம்யமாக இருக்க, பாறைகளின் மேல் அமர்ந்து கொண்டு கீழே ஓடும் தண்ணீரை பார்த்துக் கொண்டு, அங்கே ஒரு சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டு கீழே இறங்க ஆயத்தமானோம். பாறைகளில் அமர்ந்திருந்தபோது மலைகளில் இருந்த மரங்களுக்கிடையே எதோ சிக்கிக் கொண்டிருப்பது போல தோன்றவே சற்று அருகே சென்று பார்க்க முடிவு செய்தோம்.மலையில் இருக்கும் ஒற்றையடிப் பாதை வழியே சென்றால் சில மரக் கிளைகளில் ஒரு பேருந்து மாட்டிக் கொண்டிருந்தது. மலைப்பாதை வழியே வரும்போது அந்த பேருந்தினை ஓட்டிய ஓட்டுனர் வேகத்தினை விவாகரத்து செய்யாத காரணத்தால், அவர் மட்டுமன்றி அப்பேருந்தில் பயணம் செய்த பலருக்கும் முடிவினைத் தேடித் தந்திருப்பார் போல! பேருந்து விழுந்து பல நாட்கள்/மாதங்கள் ஆனாலும் அந்தப் பேருந்தினை மரக்கிளைகளிலிருந்து மீட்டெடுத்து எந்த பயனும் இல்லை என்பதாலோ என்னமோ அப்படியே தொங்கிக் கொண்டிருக்கட்டும் என விட்டுவிட்டார்கள் போல!சில மணித்துளிகள் அங்கே இயற்கையை ரசித்து விட்டு, மீண்டும் சாலைக்கு வந்தோம். சாலை ஓரத்தில் இருக்கும் ஒரு சிறிய கடையில், எங்கள்  ஓட்டுனர் பப்பு தேநீர் குடித்துக் கொண்டிருக்க, நாங்களும் ஒரு தேநீரை குடித்து, ஜிம் கார்பெட் நோக்கிய எங்கள் பயணத்தினைத் தொடர்ந்தோம். ஜிம் கார்பெட் செல்லும் வழியில் வந்த ஒரு ஊரின் பெயர் கொஞ்சம் வித்தியாசமாக இருந்ததுகாலாடுங்கீ!மலைப்பாதையில் பார்த்த விளம்பரம், தொங்கிக் கொண்டிருக்கும் பேருந்து ஆகிய இரண்டுமே முழுப் பயணத்திலும் எங்கள் நினைவில் மீண்டும் மீண்டும் வந்து சென்றது என்பது உண்மை. காரணம் எங்கள் ஓட்டுனர் பப்பு வேகத்தினை திருமணம் புரிந்து கொண்டிருந்தார்அதுவும் காதல் கொண்டு மணம் புரிந்தவர் போல நடந்து கொண்டிருந்தார்!

தொடர்ந்து பயணிப்போம்......

நட்புடன்

வெங்கட்
திருவரங்கத்திலிருந்து…..

48 கருத்துகள்:

 1. "வேகத்தை விவாக ரத்து செய்" - புதுமையான வாசகம், ஆனாலும் அதிக பொருள் கொண்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   நீக்கு
  2. எனக்கும் இது தான் உறைத்தது.

   நீக்கு
  3. முதல் முறை பார்க்கும்போதே மனதில் பதிந்து விட்டது.... வழி முழுதும் பல முறை படித்தோம். பயணத்தின் போதும் இது பற்றி பேசினோம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   நீக்கு
 2. விளம்பரம் ஹா... ஹா...

  // வேகத்தினை விவாகரத்து செய்யாத காரணத்தால்... // சரி தான்...

  உங்களின் ஓட்டுனருக்கு பாராட்டுக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 3. வேகம் - புதுமையான சொல்லாடலாக இருந்தது.
  பதிவு - வேகம் குறையாமல் இனிமையாக இருக்கின்றது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   நீக்கு
 4. Vegaththai vivagaraththu seidhu vittu vandhiruppar pola...... Nalla yezhuththu thiramai. Rasiththom.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   நீக்கு
 5. மலைப்பாதையில் பார்த்த விளம்பரம், தொங்கிக் கொண்டிருக்கும் பேருந்து ஆகிய இரண்டுமே முழுப் பயணத்திலும் எங்கள் நினைவில் மீண்டும் மீண்டும் வந்து சென்றது என்பது உண்மை

  திகைக்கவைக்கும் பயணம்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   நீக்கு
 6. ஹைய்யா ஹைய்யா புலி புலி:-)))

  காலா டூங்கி..... கருப்பு ம்லை!!!

  இந்த ர அண்ட் ட கொஞ்சம் தகராறுதான். சண்டிகட், ப்ரதாப்கட் எல்லாம் சண்டிகர் ப்ரதாப்கர்தான்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புலியைத் தேடித் தேடி... :)))

   பல வருடம் இருந்தாலும் இந்த ர ட தகராறு எப்பவும் உண்டு! :) சில வட இந்தியர்களுக்கே இப்பிரச்சனை உண்டு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   நீக்கு
 7. oops........... பொட்டு வச்சுட்டேனே:(

  ம்லை = மலை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பொட்டு வைத்த மலை! :))))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   நீக்கு
 8. வேகத்தை விவாகரத்து செய்யும்போது விவேகம் வருகிறது! சரியா என்பது சரியா இல்லை என்கிறீர்களா!!! :)))) எழுத்துக் குழப்பம் நல்ல தமாஷ்.

  தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   எழுத்துக் குழப்பம் மட்டுமல்ல, ஆண்பால்-பெண்பால் வித்தியாசங்களும் ஹிந்திக்கே உரியது! :))))

   நீக்கு
 9. சடியா ரப்பா என்றால் சரியா தப்பா என்று பொருளா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. RABBA என்பதற்கு கடவுள் என்ற பொருளும் உண்டு அப்பாதுரை! :)))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  2. RABBA என்பதற்கு கடவுள் என்ற பொருளும் உண்டு அப்பாதுரை! :)))

   ரப் நே பனா தீ ஜோடி! :)

   நீக்கு
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

   நீக்கு
 10. இந்த பதிவு ஒரு திகில் பயணமாகிவிட்டதே.
  அந்த பேருந்தை பார்க்கவே பயங்கிரமாக இருக்கிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பயங்கரம் தான்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   நீக்கு
 11. //இப்படி சில தொல்லைகள் ஹிந்தியில் உண்டு//
  Gurgaon என்பதை gudgaon என்று தான் சொல்லவேண்டும். இந்தியில் Gud என்றால் வெல்லம். ஒருவேளை அங்கு முன்பு வெல்லம் தயார் செய்யும் கிராமமாக இருந்திருக்கலாம். அதுபோல் Chopra என்பதை Chopda என்றுதான் சொல்லவேண்டும்.
  ஒரு ஊரின் பெயர் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது – காலாடுங்கீ!
  Jim Corbett அவர்களின் Man eaters of Kumaon படித்திருப்பவர்களுக்கு இந்த ஊர் மிகவும் பரிச்சயமானதாய் இருந்திருக்கும். முடிந்தால் இந்த புத்தகத்தைப் படித்துப்பாருங்கள். தமிழில் இதை ‘குமாவும் புலிகள்’ என்ற பெயரில் மொழி பெயர்க்கப்பட்டது.
  நைனிடால் பய(ண)ம் சுவாரஸ்யமாக இருக்கிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த புத்தகத்தினை ஆங்கிலத்தில் படித்திருக்கிறேன். காலாடுங்கீ மற்றவர்களுக்குத் தெரியாதிருக்கலாம் என்பதால் இப்பதிவில் அப்படி குறித்திருந்தேன்.

   குட்காவ்ன்.... :) வெல்லம் தயாரிப்பு அங்கே இருந்திருக்கலாம்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 12. அந்த பஸ் அங்கே இருப்பதும் மற்றவர்களின் வேகத்தைக் கட்டுப் படுத்தும் என்று நம்புவோம். படங்கள் அருமை. விவரங்களும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

   நீக்கு
 13. படங்களும் பதிவும் அருமை நாகராஜ் ஜி.
  குட்டி அருவிகளாக இருந்தாலும் குற்றாலம் போல் ஜெனநெரிச்சல்
  இல்லாமல் இருக்கிறதே....
  த.ம. 4

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   குற்றாலம் போல இங்கே குளிக்கவும் முடியாது! :(

   நீக்கு
 14. வணக்கம்
  ஐயா
  பயணத்தின் அனுபவும் பற்றி படத்துடன் விளக்கம் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   நீக்கு
 15. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 16. பதில்கள்
  1. தமிழ் மணம் ஐந்தாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 17. இயற்கையின் மடியில் உங்கள் பயணத்தைத் தொடர்ந்து வருகிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   நீக்கு
 18. மலைப்பாதையில் மரங்களுக்கிடையில் சிக்கிய பஸ்! சிலிர்க்கவைத்தது! அருமையான விவரிப்பு! தொடருங்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   நீக்கு
 19. அற்புதமான பயணம் . நாங்களும் கூடவே வந்ததுபோல் உணர்கிறோம், கண்ணனுக்கு குழலுமை தரும் படங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   நீக்கு
 20. அழகான புகைப்படங்களும் உங்களின் வர்ணனையும் சிலுசிலுவென்றிருந்த‌து. இந்த மாதிரி இடங்களை ரசிக்கும்போதே அதன் பின்னணியிலுள்ள‌ ஆபத்தும் அதைத்தொடரும் மரண‌மும் நினைவுக்கு எப்போதும் வருவதை தவிர்க்க முடிவதில்லை!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   நீக்கு
 21. நாங்க பத்ரிநாத் போயிட்டுத் திரும்பும்போதும் ஒரு பேருந்து இப்படித்தான் நுனியில் தொங்கிக் கொண்டிருந்தது. எப்படியோ கஷ்டப்பட்டுப்பயணிகளை மீட்டுவிட்டனர். அதனால் எங்களுக்கு மூன்று மணி நேரம் தாமதம் ஆனது. என்றாலும் மனதில் மகிழ்ச்சியாகவே இருந்தது. அவ்வளவு தொங்கலில் இருந்தது அந்தப் பேருந்து. கீழே விழுந்தால் ஆயிரம் அடிக்குக் கீழே அலக்நந்தாவில் தான் விழணும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   நீக்கு
 22. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....