திங்கள், 31 டிசம்பர், 2012

மேகத்தினைத் துரத்தியவன் – சுஜாதா





இந்த நாவல் 1979-ஆம் ஆண்டு மாலைமதி மாத இதழுக்காக தலைவர் சுஜாதாவால் எழுதப்பட்டது. இந்த விறுவிறுப்பான நாவலை சமீபத்தில் படித்தேன். விசா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்ட இந்தப் புத்தகத்தினை எடுத்துப் படிக்க ஆரம்பித்த பிறகு படித்து முடிக்காமல் கீழே வைக்க முடியவில்லை. கதை என்ன என்று பார்ப்போம்....

அன்பழகன் – நண்பர்களுக்குச் சுருக்கமாய் கன்”. வயது கட்டிளம் காளை ஆகிய 18! வேலை என்று ஒன்றும் கிடையாது. அம்மா அப்பா, கூடப் பிறந்தவர்கள் என யாரும் இல்லை. தற்போது இருப்பது தூரத்து ஒன்று விட்ட சித்தப்பா வீட்டில். வேலை என்று ஒன்றும் இல்லாததால், சித்தப்பா வீட்டில் சமையலுக்கு காய்கறி வாங்கி வருவது, சுத்தம் செய்து நறுக்கிக் கொடுப்பது, சுற்று வேலைகள் செய்வது, கடைகண்ணிகளுக்குச் சென்று பொருட்கள் வாங்கி வருவது எல்லாமே அன்பான அன்பு தான். மொத்தத்தில் சம்பளமில்லா வேலைக்காரன்.

சித்தப்பா விநாயகம் பணி புரிவது ஒரு கூட்டுறவு வங்கியில், சித்தி தனம் அரசாங்க அலுவலகத்தில். தன்னுடைய சொந்த செலவுகளுக்கு – அதான் சிகரெட் பிடிப்பது போன்றவற்றிற்கு பொருட்கள் வாங்கும்போது கமிஷன் அடிப்பது தான் வழி. ஒவ்வொரு மாதமும் 100-150 ரூபாய் சம்பாதிக்க பிரம்மபிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கிறது.  அப்படி இருக்கும் சமயத்தில் சுலபமாய் பணம் சம்பாதிக்க வழி சொல்லித்தருவதாய் புதிய கேரக்டர் அறிமுகம். அது – மாணிக்கம். சொல்லித் தரும் வழி சித்தப்பா பணி புரியும் வங்கியில் கொள்ளை அடிப்பது.

மாணிக்கம் அன்பழகனிற்கு போதையை அறிமுகம் செய்து வைத்து, கூடவே கொஞ்சம் பணமும் கொடுத்து வங்கியில் இருக்கும் பாதுகாப்பு வசதிகளைப் பற்றி கொஞ்சம் கொஞ்சமாய் தெரிந்து கொள்கிறார். பாதுகாப்பு வசதிகள் பற்றித் தெரிந்த பிறகு அதை மீறி எப்படி கொள்ளை அடிப்பது என திட்டம் தீட்டுகிறார்கள். நடுவே புதியதாய் சித்தியின் தங்கை ரத்னா என்றொரு கேரக்டரும் விறுவிறுப்பாக உள்ளே நுழைகிறார்.

விநாயகம் வைத்திருக்கும் சாவிக்கொத்திலிருந்து சாவிகளை சோப்பில் அச்சு எடுப்பது, வங்கியில் இருக்கும் அபாய சங்கினை ஒலிக்காமல் தடுப்பது எப்படி என்று தெரிந்து தகவல் சொல்வது என எல்லா திட்டங்களிலும் அன்பழகனின் பங்கு முக்கியமாக இருக்கிறது. பிறகு ஒரு நன்னாளில் திட்டமிட்டபடியே, மாணிக்கமும், அன்பழகனும் வங்கியைக் கொள்ளை அடிக்கிறார்கள். அதன் பிறகு தான் திருப்பமே. 


கொள்ளை அடித்துக் கொண்டு வெளியேறும்போது அங்கே ஒரு ஜீப் வருவது தெரிய, அங்கிருந்து பணப்பெட்டியுடன் மோட்டார் சைக்கிளில் தப்பிக்கிறார்கள். ஆனாலும் துரத்திச்சென்று அவர்களைப் பிடித்து விசாரிக்க, பணப்பெட்டியை ஆற்றில் வீசி விடுகிறான் மாணிக்கம். விசாரணைக்காக ஜீப்பில் வந்த போலீஸ்காரர்களோடு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப் படுகிறார்கள். வங்கியில் கொள்ளையடித்தது இவர்கள் தான் என கைது செய்யப்படுகிறார்கள்.

வங்கிக் கொள்ளை வழக்கு நீதிமன்றத்திற்கு வர, அதில் மாணிக்கம் மேல் எந்த தவறும் இல்லை என்று சாமர்த்தியமாக வாதாடி அதே சமயம் எல்லா குற்றமும் புரிந்தது அன்பழகன் மட்டுமே என்று நிரூபிக்கப்படுகிறது.  வழக்கறிஞர் யாரென்று கேட்டால், நம்ம வசந்த் தான்!  இப்போது தான் திருப்பமே. இப்படி செய்த தவறை சாமார்த்தியமாக வழக்காடி ஒருவர் மீது மட்டுமே சுமத்தியது சரியில்லை என்று ரத்னா வசந்த்-இடம் முறையிட ரத்னாவுக்காக இந்த வழக்கினை மேல் முறையீடு செய்ய முடிவு செய்கிறார் –வசந்த்.

அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை மிகவும் விறுவிறுப்பாகச் சொல்லி இருக்கிறார் தலைவர் சுஜாதா. ஆரம்பத்திலிருந்தே இந்த திருட்டில் மாணிக்கம்-அன்பழகன் தவிர வேறு ஒருவரும் முக்கிய பங்கு வகித்திருக்க வேண்டும் என்ற கோணத்தில் முன்னேறுகிறது.  அந்த மூன்றாவது நபர் யார், அவருக்கு அன்பழகன் மேல் என்ன வெறுப்பு என்பதெல்லாம் தான் கதையின் போக்கில் மாற்றத்தினையே கொண்டு வருகிறது.

அந்த நபர் யார், எதனால் வெறுப்பு என்பதைத் தெரிந்து கொள்ள நீங்கள் செய்ய வேண்டியது இது தான் – மேகத்தினைத் துரத்தியவன்ஐ நீங்களும் துரத்துங்கள் – அட படியுங்கள் எனச் சொல்ல வந்தேன். 

மாலைமதியில் வெளி வந்த இந்த நாவலை சில பதிப்பகங்கள் வெளியிட்டு இருக்கின்றன.  நான் படித்தது விசா பப்ளிகேஷன்ஸ் வெளியீடு – இரண்டாம் பதிப்பு – விலை 35/-. 

மீண்டும் வேறு “படித்ததில் பிடித்ததுபதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

ஞாயிறு, 30 டிசம்பர், 2012

சரியான நேரத்தில் எடுத்த புகைப்படங்கள்



புகைப்படங்கள் எடுக்கும் போது சில புகைப்படங்கள் அதிஅற்புதமாக அமைந்து விடுகிறது. அப்படி எடுத்த உலக அளவில் பாராட்டுப் பெற்ற சில புகைப்படங்களை இன்று பார்க்கலாம்.


நான் கொஞ்சம் சோம்பேறி... ஒழுங்கு மரியாதையா நீங்களே உள்ள வந்துடுங்க!

நாங்களும் குடும்பத்தோட வாக்கிங் போவோம்ல!


எப்படி தப்பிக்க முடியும்னு பார்துடறோம்.


என் வழி....  தனி வழி....


நீயா... நானா?
 

என்னை மீறி யாரும் உள்உள்ளே வர முடியாது.


கண்ணாலேயே கொன்றிடுவேன்.


என்ன சுவை... என்ன சுவை....


இப்படி எல்லாம் என்னை பயமுறுத்தாதீங்க.



நான் ஒரு ஞானி...
பனிப்பொழிவு என்னை என்ன செய்யும்?

மின்னஞ்சலில் எனக்கு அனுப்பிய நண்பருக்கு நன்றி.

என்ன நண்பர்களே புகைப்படங்களை ரசித்தீர்களா?

மீண்டும் அடுத்த வாரம் வேறு சில புகைப்படங்களுடன் உங்களைச் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

வெள்ளி, 28 டிசம்பர், 2012

ஃப்ரூட் சாலட் – 27 – புத்தகத்தின் வயது 169 - பெண் குழந்தை


இந்த வார செய்தி:



சில வருடங்கள் முன் வெளிவந்த புத்தகம் கிடைக்கிறது என்றாலே நமக்கு மகிழ்ச்சி. அதுவே 169 வருடம் பழைய புத்தகம் ஒன்று இருக்கிற செய்தி தெரிந்தால்...  திருப்பதியில் இருக்கும் டாக்டர் கே.வி. ராகவாச்சார்யா என்பவரிடம் 1843-ஆம் வருடம் கைகளால் செய்யப்பட்ட தாளில் இந்தியன் இங்க் கொண்டு பதிப்பித்த “நானய்யாஎன்பவர் எழுதிய மஹாபாரதாபுத்தகத்தின் முதல் பிரதி இருக்கிறதாம்.

இவரிடம் இருக்கும் புத்தகத்தில் ஆந்திர மஹாபாரதத்தின் ஆதி பர்வாஎனும் அழைக்கப்படும் முதல் பகுதி இருக்கிறது. இத்தனை வருடங்கள் ஆனாலும் எழுத்துகள் தெளிவாக இருக்கின்றனவாம். புத்தகத்தினை வெளியிட்டவர்கள் பூம்பாவை ச்ருங்காரம்  மற்றும் அப்பாஸ்வாமி.  வெளியிட்ட பதிப்பகம் சைதாபுரம் உமாபதி கல்வி களஞ்சியம்.  இந்தப் புத்தகம் வெளியிட்ட போது வர்த்தமான தாரங்கினி எனும் சென்னை நாளிதழில் விளம்பரம் கூட வெளியிட்டிருக்கிறார்கள். புத்தகத்தின் ஒரு பிரதியை வைத்திருக்கும் டாக்டர் ராகவாச்சார்யா, அப்போதைய பார்க் டவுன் பகுதியிலிருந்த ஹிதயத்துல்லா புத்தகக் கடையில் வாங்கியதைப் பதிவு செய்கிறார்.

நிச்சயம் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு புத்தகம் தான்.

[செய்தி: தி ஹிந்து வலைப்பக்கத்திலிருந்து]

இந்த வார முகப்புத்தக இற்றை:



ஒரு தம்பதியினர் கல்யாண நாள் அன்று வினோதமான ஒரு முடிவு எடுத்தார்கள். அடுத்த நாள் காலை அவர்களது அறையை யாராவது தட்டினால் கதவைத் திறக்கக் கூடாது என்பது அவர்கள் எடுத்த முடிவு. காலை கணவனின் பெற்றோர்கள் வந்து கதவைத் தட்ட, கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு கதவைத் திறக்கவில்லை. கணவனின் பெற்றோர்களும் சென்று விட்டனர்.  சிறிது நேரத்தில் மனைவியின் பெற்றோர்கள் கதவைத் தட்டி அழைக்க, கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். மனைவியின் கண்களிலிருந்து கண்ணீர். என்னால் கதவைத் திறக்காது இருக்க முடியாது. ஏற்கனவே அவர்களை நான் பறிகொடுத்த உணர்வு எனச் சொல்லி கதவைத் திறந்து விட்டார்.

அவர்களுக்கும் குழந்தைகள் பிறந்தார்கள். முதலில் ஆண் பிறகு பெண். பெண் குழந்தை பிறந்த போது கணவருக்கு மகிழ்ச்சி. சந்தோஷத்தில் பெரிய விழாவே கொண்டாடினார். வியந்த நண்பர்களிடம் சொன்னார் காரணத்தினை – ‘இவள் தான் எனக்காகக் கதவைத் திறக்கப் போகிறவள்!

இந்த வார குறுஞ்செய்தி


WHEN THE MIRROR OF LIFE GETS DIRTY WITH THE FOG OF REALITY, TRY WIPING IT OUT WITH YOUR FAITH.  YOU CAN SEE THE CLEAR REFLECTION OF YOUR DREAMS.  

ரசித்த புகைப்படம்: 



துளி கூட கவலையில்லாத நிலை! இந்த நிலை எல்லோருக்கும் அமைந்து விட்டால் சுகம் தான். 
  
ராஜா காது கழுதை காது

தலைநகர் தில்லியில் கல்லூரிப் பெண்ணிற்கு நடந்த கொடுமையான விஷயம் பற்றி தில்லியில் பலர் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். பலர் அதை அரசியலாக்கவும், அதன் மூலம் பலன் பெறவும் பயன்படுத்துகிறார்கள். பேருந்து ஒன்றில் ஒரு மூத்த பெண்மணி கூறியது இங்கே.

‘இவனுக்கெல்லாம் தூக்குத் தண்டனை கொடுக்கக் கூடாது. குடுத்தா உடனே துன்பம் போயிடும். இரண்டு கைகளையும், கால்களையும் வெட்டி, பிறகு கண்களையும் பறித்துக் கொண்டு அப்படியே விடவேண்டும். வாழ்நாள் முழுவதும் துன்பம் அனுபவிப்பான். அது மற்றவர்களுக்கும் பாடமாக அமையும்.”’

ரசித்த காணொளி:

சமீபத்தில் ஹம் ஏக் ஹே சதா கே லியே!எனும் காணொளியைப் பார்த்தேன். இந்தியாவின் பல பிரபலங்கள் பங்கு பெறும் இந்தக் காணொளி நன்றாக இருக்கிறது. நிச்சயம் ரசிக்க முடியும். இதோ இந்த வாரத்தின் ரசித்த காணொளியாய் உங்களுக்காக! சற்றே நீளமாக இருந்தாலும் பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்று.



படித்ததில் பிடித்தது:



மை!

ஒரு சமயம் எழுத்தாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போது கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், ‘எழுத்தாளர்கள் தங்கள் பேனாவை எப்படிப்பட்ட ‘மை தொட்டு எழுதுகிறார்கள் தெரியுமா? சிலர் பெருமையில் எழுதுகிறார்கள். வேறு சிலர் பொறாமையில் எழுதுகிறார்கள். சிலர் தற்பெருமையைத் தொட்டு எழுதுகிறார்கள். ஆனால் தொடக்கூடாத மை மடைமை, கயமை, பொய்மை, வேற்றுமை.

நன்மை தரக்கூடிய செம்மை, நேர்மை, புதுமை ஆகியவற்றைத் தொட்டு வாசகர்களின் மனதைத் தொடும்படியாக எழுத வேண்டும்.

எழுத்தாளர்கள் நீக்க வேண்டிய மைகள் – வறுமை, ஏழ்மை, கல்லாமை, மடைமை, அறியாமை. இந்த நோக்கத்தையே எழுத்தாளர்கள் கடமையாகவும் உரிமையாகவும் கொள்ள வேண்டும்என்று குறிப்பிட்டார்.

இடம், பொருள், ஏவல் அறிந்து அதற்கேற்றபடி பேசுவதில் கலைவாணர் வல்லவர் என்பதை இந்த உரையின் மூலம் அறியலாம்.

22.12.2012 - தினமணி, சிறுவர்மணி.

மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


வியாழன், 27 டிசம்பர், 2012

'தண்ணென்று ஒரு காதல்..' - கவிதை

 
 
 
 
மையல் கொண்டவன் மனதில் தான் 
 
மையம் கொண்டிருந்ததறிந்துண்
 
மையில் மகிழ்ந்து போன மயில்

தண்ணென்றிருக்கும் நீரையள்ளி
 
தன் நெஞ்சறிய அவன் மீதிறைத்து 

என்னென்னவோ என்றெழுந்த 

எண்ணங்களைப் பகிர்ந்தாள். 

 
 
சென்ற திங்களன்று எனது பக்கத்தில் கவிதை எழுதுங்க... என்ற பதிவில் மேலுள்ள படத்தினை வெளியிட்டு அதற்கேற்ப கவிதை எழுதும்படி கேட்டிருந்தேன்.  பின்னூட்டத்தில் சில கவிதைகள் வந்திருந்தன. இன்று திரு கே.பி. ஜனா அவர்கள் தனது தளத்தில் மேலுள்ள கவிதையை வெளியிட்டு இருக்கிறார். இங்கே எனது பக்கத்திலும் அந்தக் கவிதையை வெளியிடுவதில் மகிழ்ச்சி. 
 
மீண்டும் சந்திப்போம்....
 
நட்புடன்
 
வெங்கட்.
கோவையிலிருந்து....