ஷிம்லா ஸ்பெஷல் – பகுதி – 15
இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது
ஓரத்தில் “ஷிம்லா ஸ்பெஷல்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில்
ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!
ஷிம்லா இரயில் நிலையம்...
குஃப்ரியிலிருந்து புறப்பட்ட
எங்கள் பயணம், அடுத்ததாக நின்றது ஷிம்லா நகரில் தான். இந்தப் பயணத்தொடர்
ஆரம்பிக்கும் போதே, ஷிம்லாவிற்குச் செல்ல சாலை வழி, ஆகாய வழி மற்றும் இரயில் பாதை
உண்டு என்று சொல்லி இருந்தது நினைவில் இருக்கலாம். கால்காவிலிருந்து ஷிம்லா வரை
குறுகிய பாதை இரயில் இருக்கிறது – நமது தமிழகத்தின் ஊட்டி இரயில் போலவே இங்கேயும்
உண்டு. மிகவும் புராதனமான இரயில் பாதை. ஆங்கிலேயர்கள் காலத்திலேயே அமைக்கப்பட்ட
பாதை – அதில் பயணம் செய்ய இயலவில்லை – நாங்கள் சாலை வழிப் பயணம் – பேருந்தில் தான்
சென்றோம் என்பதால், இரயில் நிலையத்திற்கோ, அல்லது இரயில் பாதையையோ சென்று பார்க்க
வேண்டும் என நினைத்திருந்தோம்.
ஷிம்லா இரயில் நிலையம்...
ஓட்டுனர் ரஞ்சித் சிங்-இடம் எங்கள்
எண்ணத்தைச் சொன்னபோது, கவலை வேண்டாம் – உங்களுக்கு ஒரு அருமையான இடத்திற்கு அருகே
அழைத்துச் செல்கிறேன் – அங்கிருந்து உங்களுக்கு இரயில் நிலையத்தின் நல்ல View
கிடைக்கும் என்று சொன்னார் – அட, பரவாயில்லையே, இதுவும் தெரிந்திருக்கிறதே
இவருக்கு என, அங்கே அழைத்துச் செல்லச் சொன்னோம். அவர் எங்களை அழைத்துச் சென்றது,
இரயில் நிலையம் அருகில் இருந்த ஒரு Foot Over Bridge பகுதிக்கு. எங்களை அங்கே
இறக்கி விட்டு அடுத்த பக்கத்தில் வாகனத்தினை எடுத்துக் கொண்டு வருவதாகச் சொல்லிச்
சென்றார். நாங்கள் சாலையைக் கடக்க அமைந்திருந்த இரும்பு Foot Over Bridge மீது ஏறிச்
சென்றோம்.
மால் ரோடு, ஷிம்லா...
வாவ்…. உண்மை – இரயில் நிலையத்தின்
நல்ல View அங்கிருந்து கிடைத்தது. நானும் நண்பர் பிரமோத்-உம் அந்த பாலத்திலிருந்து
இரயில் நிலையத்தினை நிறைய படங்கள் எடுத்துக் கொண்டோம். நாங்கள் படம் எடுத்துக்
கொண்டிருந்ததை உங்களுக்குச் சொல்லும் போது அந்த இரயில் நிலையம் பற்றிய சில
தகவல்களையும் பார்க்கலாம். Lord Curzon அவர்களால் 1901-ஆம் ஆண்டு திட்டமிட்டு
ஆரம்பிக்கப்பட்டது இந்த இரயில் பாதையும் இரயில் நிலையமும். கால்காவிலிருந்து
சுமார் 96 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஷிம்லாவிற்கான இருப்புப் பாதை – கடல்
மட்டத்திலிருந்து 2150 அடி உயரத்திலிருந்து [கால்கா] – 6811 அடி உயரத்திற்கு
[ஷிம்லா] செல்லும் இரயில் பாதை. 100 வருடங்களுக்கும் மேலே ஆன இந்த இருப்புப் பாதை
UNESCO WORLD HERITAGE SITE!
என்ன ஊர்வலம் தெரியுமா? மாப்பிள்ளை அழைப்பு இல்லை!..
1901-ஆண்டு ஆரம்பித்து 1903-இல்
பணி நிறைவு பெற்றது. 9, நவம்பர் 1903-ஆம் ஆண்டு இந்தப் பாதையில் இரயில்
போக்குவரத்து துவங்கியது! இரண்டு ஆண்டுகளில் இத்தனை சிறப்பான பணி நடந்திருக்கிறது.
பாதையில் இரண்டில் மூன்று பகுதிக்கும் மேல் வளைவுகள் தான் – மொத்தம் 900 இடங்களில்
வளைவுகள்! நேர் பாதை இல்லை! வளைந்து வளைந்து செல்லும் இந்தப் பாதையில் 103
குகைகளும், எண்ணூற்றிற்கும் மேற்பட்ட பாலங்களும் இருக்கின்றன. ஏழு பெட்டிகள் கொண்ட
இந்த இரயில், மணிக்கு 22 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கிறது. கால்காவிலிருந்து
ஷிம்லா வரையான 96 கிலோமீட்டர் தூரம் பயணிக்க சுமார் ஐந்து மணி நேரம் எடுக்கும்.
ஆனால் மிகவும் இரசிக்க முடியும் இந்தப் பயணத்தினை – ஏனெனில் போகும் பாதை அப்படி.
காரின் முன்னும் பின்னும் இறைவியின் படமும் சிலையும்....
ஹிமாலயன் க்வீன், ஷிவாலிக் டீலக்ஸ்
போன்ற ஐந்து இரயில்கள் கால்காவிலிருந்து ஷிம்லாவிற்கும், ஷிம்லாவிலிருந்து
கால்காவிற்கும் பயணிக்கின்றன. குழந்தைகளுடன் பயணிப்பது என்றால் இந்த இரயில் பயணம்
மிகவும் இரசிக்கக் கூடிய விஷயம். இயற்கையை ரசித்தபடியே இந்தப் பாதையில் பயணிப்பது
நன்றாக இருக்கும். இந்த இரயில்களில் பயணிக்க முன்பதிவு செய்யும் வசதி உண்டு. மற்ற
இரயில் பயணங்கள் போல அல்லாமல் ஒரு மாதம் முன்னர் தான் முன்பதிவு செய்ய முடியும் – WWW.IRCTC.COM
தளத்தில் Kalka – Simla தேர்வு செய்தால் இந்த இரயில்களுக்கான முன்பதிவு செய்யும்
வசதிகள் இருக்கின்றன. கட்டணம் – 65 ரூபாய் முதல் 565 ரூபாய் வரை – பயணிக்கும்
வகுப்பினைப் பொறுத்து! சரியாக ஒரு மாதம் இருக்கும் போது முன்பதிவு செய்து கொள்வது
நல்லது!
ஷிம்லா இரயில் நிலையம்...
மலைப்பகுதியில் கிடைக்கும் இலந்தைப் பழம்....
இரயில் நிலையத்தின் படங்களை
எடுத்துக் கொண்டு பாலத்தின் வழி மறுபக்கத்தில் இறங்க, ஓட்டுனர் ரஞ்சித் சிங் அங்கே
எங்களுக்காகக் காத்திருந்தார். வாகனத்தில் ஏறிக் கொண்டு எங்கள் தங்குமிடம் அருகே
இறக்கி விட்டார். எங்கள் உடைமைகளை தங்குமிடத்தின் வரவேற்பு அறையில் இருக்கும் உடைமைகள்
காப்பகத்தில் வைத்து விட்டு மால் ரோடு நோக்கி நடந்தோம். முதல் நாளும் மால் ரோடு
பகுதியில் மாலை நேரத்தில் நிறைய நேரம் நடந்தோம். இரண்டாவது நாளும் மால் ரோடு
பகுதியில் இருக்கும் வேறு சில இடங்களுக்கு சென்று வந்தோம். பழங்கள், காய்கறிகள்
விற்பனை செய்யும், இடம், கீழே இருந்த கிராமங்கள் என நீண்ட தூரம் நடந்து வந்தோம்.
உள்ளூர் மக்களையும், அவர்கள் பழக்க வழக்கங்களையும் பார்த்து ரசித்த பிறகு
தங்குமிடம் திரும்பினோம்.
படத்திலிருந்தே புரிந்திருக்கும் - தண்ணீர் ஏ.டி.எம்....
ஊர்வலத்தில் டோல் வாத்யம்...
அறையில் எங்கள் உடைமைகளை
சரிபார்த்துக் கொண்டு சற்றே ஓய்வு. இரவு 10 மணிக்கு ஷிம்லாவிலிருந்து தில்லி நோக்கிய
பயணம் – ஹிம்சுதா – ஹிமாச்சலப் பிரதேச அரசு வோல்வோ பேருந்தில் முன்பதிவு
செய்திருந்தோம். இரவு உணவினை தங்குமிடத்திலிருந்த ஹல்திராமில் முடித்துக்
கொண்டோம். தங்குமறையைக் காலி செய்து, ஓட்டுனர் ரஞ்சித் சிங் அவர்களை அழைக்க, அவர்
வாகனத்திலேயே பேருந்து நிலையம் வந்து சேர்ந்தோம். சிறிது நேர காத்திருப்பிற்குப்
பிறகு பேருந்து வந்து சேர்ந்தது. பேருந்தி
அமர்ந்து சில நிமிடங்களில் நல்ல உறக்கம். வழி முழுவதும் உறக்கத்திலேயே கழிந்தது.
விடிகாலை தில்லி வந்த பிறகு விழித்து ஒரு ஆட்டோ பிடித்து, வழியில் கேரள நண்பர்களை
கேரளா இல்லத்தில் விட்டுவிட்டு நான் வீடு வந்து சேர்ந்தேன்.
மால் ரோடில் நண்பர்களுடன்...
சிம்லா, குஃப்ரி, நார்கண்டா பயணம்
இனிதே நிறைவுற்றது! பயணம் நல்லது. ஆதலினால் பயணம் செய்வீர்! சமீபத்தில் சென்ற
அனைத்து பயணங்கள் பற்றியும் உங்களுடன் பகிர்ந்து கொண்டுவிட்டேன். கடந்த மே மாதம்
தமிழகம் வந்திருந்த போது இரண்டு நாட்கள் புதுச்சேரி சென்று வந்தேன் – கல்லூரி தோழர்களின்
சந்திப்பு – ஆனால் அப்பயணம் பற்றிய கட்டுரைகள் தொடராக எழுதப் போவதில்லை!
முடிந்தால் ஒன்றிரண்டு பதிவுகளில் எழுதுகிறேன். வேறு பயணம் செல்ல வாய்ப்பு இதுவரை
அமைய வில்லை. கடைசியாக சென்ற பயணம் சென்ற நவம்பர் மாதம் [2017]. அடுத்த நவம்பரே
வந்து விட்டது! பயணம் வாய்க்கவில்லை! அதனால் நீங்களும் என் தொடர் பயணக்கட்டுரைகளிலிருந்து
தப்பினீர்கள்! வேறு பயணம் செய்தால், அந்த அனுபவங்களை, முடியும் போது பகிர்ந்து
கொள்வேன்!
மீண்டும் ச[சி]ந்திப்போம்…
நட்புடன்
வெங்கட்
புது தில்லி.

