வியாழன், 1 நவம்பர், 2018

ஷிம்லா ஸ்பெஷல் – ஷிம்லா இரயில் நிலையம் – மால் ரோட் – பயணத்தின் முடிவு…ஷிம்லா ஸ்பெஷல் – பகுதி – 15

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ஷிம்லா ஸ்பெஷல்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


ஷிம்லா இரயில் நிலையம்...

குஃப்ரியிலிருந்து புறப்பட்ட எங்கள் பயணம், அடுத்ததாக நின்றது ஷிம்லா நகரில் தான். இந்தப் பயணத்தொடர் ஆரம்பிக்கும் போதே, ஷிம்லாவிற்குச் செல்ல சாலை வழி, ஆகாய வழி மற்றும் இரயில் பாதை உண்டு என்று சொல்லி இருந்தது நினைவில் இருக்கலாம். கால்காவிலிருந்து ஷிம்லா வரை குறுகிய பாதை இரயில் இருக்கிறது – நமது தமிழகத்தின் ஊட்டி இரயில் போலவே இங்கேயும் உண்டு. மிகவும் புராதனமான இரயில் பாதை. ஆங்கிலேயர்கள் காலத்திலேயே அமைக்கப்பட்ட பாதை – அதில் பயணம் செய்ய இயலவில்லை – நாங்கள் சாலை வழிப் பயணம் – பேருந்தில் தான் சென்றோம் என்பதால், இரயில் நிலையத்திற்கோ, அல்லது இரயில் பாதையையோ சென்று பார்க்க வேண்டும் என நினைத்திருந்தோம்.


ஷிம்லா இரயில் நிலையம்...

ஓட்டுனர் ரஞ்சித் சிங்-இடம் எங்கள் எண்ணத்தைச் சொன்னபோது, கவலை வேண்டாம் – உங்களுக்கு ஒரு அருமையான இடத்திற்கு அருகே அழைத்துச் செல்கிறேன் – அங்கிருந்து உங்களுக்கு இரயில் நிலையத்தின் நல்ல View கிடைக்கும் என்று சொன்னார் – அட, பரவாயில்லையே, இதுவும் தெரிந்திருக்கிறதே இவருக்கு என, அங்கே அழைத்துச் செல்லச் சொன்னோம். அவர் எங்களை அழைத்துச் சென்றது, இரயில் நிலையம் அருகில் இருந்த ஒரு Foot Over Bridge பகுதிக்கு. எங்களை அங்கே இறக்கி விட்டு அடுத்த பக்கத்தில் வாகனத்தினை எடுத்துக் கொண்டு வருவதாகச் சொல்லிச் சென்றார். நாங்கள் சாலையைக் கடக்க அமைந்திருந்த இரும்பு Foot Over Bridge மீது ஏறிச் சென்றோம்.


மால் ரோடு, ஷிம்லா...

வாவ்…. உண்மை – இரயில் நிலையத்தின் நல்ல View அங்கிருந்து கிடைத்தது. நானும் நண்பர் பிரமோத்-உம் அந்த பாலத்திலிருந்து இரயில் நிலையத்தினை நிறைய படங்கள் எடுத்துக் கொண்டோம். நாங்கள் படம் எடுத்துக் கொண்டிருந்ததை உங்களுக்குச் சொல்லும் போது அந்த இரயில் நிலையம் பற்றிய சில தகவல்களையும் பார்க்கலாம். Lord Curzon அவர்களால் 1901-ஆம் ஆண்டு திட்டமிட்டு ஆரம்பிக்கப்பட்டது இந்த இரயில் பாதையும் இரயில் நிலையமும். கால்காவிலிருந்து சுமார் 96 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஷிம்லாவிற்கான இருப்புப் பாதை – கடல் மட்டத்திலிருந்து 2150 அடி உயரத்திலிருந்து [கால்கா] – 6811 அடி உயரத்திற்கு [ஷிம்லா] செல்லும் இரயில் பாதை. 100 வருடங்களுக்கும் மேலே ஆன இந்த இருப்புப் பாதை UNESCO WORLD HERITAGE SITE!


என்ன ஊர்வலம் தெரியுமா? மாப்பிள்ளை அழைப்பு இல்லை!..

1901-ஆண்டு ஆரம்பித்து 1903-இல் பணி நிறைவு பெற்றது. 9, நவம்பர் 1903-ஆம் ஆண்டு இந்தப் பாதையில் இரயில் போக்குவரத்து துவங்கியது! இரண்டு ஆண்டுகளில் இத்தனை சிறப்பான பணி நடந்திருக்கிறது. பாதையில் இரண்டில் மூன்று பகுதிக்கும் மேல் வளைவுகள் தான் – மொத்தம் 900 இடங்களில் வளைவுகள்! நேர் பாதை இல்லை! வளைந்து வளைந்து செல்லும் இந்தப் பாதையில் 103 குகைகளும், எண்ணூற்றிற்கும் மேற்பட்ட பாலங்களும் இருக்கின்றன. ஏழு பெட்டிகள் கொண்ட இந்த இரயில், மணிக்கு 22 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கிறது. கால்காவிலிருந்து ஷிம்லா வரையான 96 கிலோமீட்டர் தூரம் பயணிக்க சுமார் ஐந்து மணி நேரம் எடுக்கும். ஆனால் மிகவும் இரசிக்க முடியும் இந்தப் பயணத்தினை – ஏனெனில் போகும் பாதை அப்படி.


காரின் முன்னும் பின்னும் இறைவியின் படமும் சிலையும்....

ஹிமாலயன் க்வீன், ஷிவாலிக் டீலக்ஸ் போன்ற ஐந்து இரயில்கள் கால்காவிலிருந்து ஷிம்லாவிற்கும், ஷிம்லாவிலிருந்து கால்காவிற்கும் பயணிக்கின்றன. குழந்தைகளுடன் பயணிப்பது என்றால் இந்த இரயில் பயணம் மிகவும் இரசிக்கக் கூடிய விஷயம். இயற்கையை ரசித்தபடியே இந்தப் பாதையில் பயணிப்பது நன்றாக இருக்கும். இந்த இரயில்களில் பயணிக்க முன்பதிவு செய்யும் வசதி உண்டு. மற்ற இரயில் பயணங்கள் போல அல்லாமல் ஒரு மாதம் முன்னர் தான் முன்பதிவு செய்ய முடியும் – WWW.IRCTC.COM தளத்தில் Kalka – Simla தேர்வு செய்தால் இந்த இரயில்களுக்கான முன்பதிவு செய்யும் வசதிகள் இருக்கின்றன. கட்டணம் – 65 ரூபாய் முதல் 565 ரூபாய் வரை – பயணிக்கும் வகுப்பினைப் பொறுத்து! சரியாக ஒரு மாதம் இருக்கும் போது முன்பதிவு செய்து கொள்வது நல்லது!


ஷிம்லா இரயில் நிலையம்...


மலைப்பகுதியில் கிடைக்கும் இலந்தைப் பழம்....

இரயில் நிலையத்தின் படங்களை எடுத்துக் கொண்டு பாலத்தின் வழி மறுபக்கத்தில் இறங்க, ஓட்டுனர் ரஞ்சித் சிங் அங்கே எங்களுக்காகக் காத்திருந்தார். வாகனத்தில் ஏறிக் கொண்டு எங்கள் தங்குமிடம் அருகே இறக்கி விட்டார். எங்கள் உடைமைகளை தங்குமிடத்தின் வரவேற்பு அறையில் இருக்கும் உடைமைகள் காப்பகத்தில் வைத்து விட்டு மால் ரோடு நோக்கி நடந்தோம். முதல் நாளும் மால் ரோடு பகுதியில் மாலை நேரத்தில் நிறைய நேரம் நடந்தோம். இரண்டாவது நாளும் மால் ரோடு பகுதியில் இருக்கும் வேறு சில இடங்களுக்கு சென்று வந்தோம். பழங்கள், காய்கறிகள் விற்பனை செய்யும், இடம், கீழே இருந்த கிராமங்கள் என நீண்ட தூரம் நடந்து வந்தோம். உள்ளூர் மக்களையும், அவர்கள் பழக்க வழக்கங்களையும் பார்த்து ரசித்த பிறகு தங்குமிடம் திரும்பினோம்.


படத்திலிருந்தே புரிந்திருக்கும் - தண்ணீர் ஏ.டி.எம்....


ஊர்வலத்தில் டோல் வாத்யம்...

அறையில் எங்கள் உடைமைகளை சரிபார்த்துக் கொண்டு சற்றே ஓய்வு. இரவு 10 மணிக்கு ஷிம்லாவிலிருந்து தில்லி நோக்கிய பயணம் – ஹிம்சுதா – ஹிமாச்சலப் பிரதேச அரசு வோல்வோ பேருந்தில் முன்பதிவு செய்திருந்தோம். இரவு உணவினை தங்குமிடத்திலிருந்த ஹல்திராமில் முடித்துக் கொண்டோம். தங்குமறையைக் காலி செய்து, ஓட்டுனர் ரஞ்சித் சிங் அவர்களை அழைக்க, அவர் வாகனத்திலேயே பேருந்து நிலையம் வந்து சேர்ந்தோம். சிறிது நேர காத்திருப்பிற்குப் பிறகு பேருந்து வந்து சேர்ந்தது.  பேருந்தி அமர்ந்து சில நிமிடங்களில் நல்ல உறக்கம். வழி முழுவதும் உறக்கத்திலேயே கழிந்தது. விடிகாலை தில்லி வந்த பிறகு விழித்து ஒரு ஆட்டோ பிடித்து, வழியில் கேரள நண்பர்களை கேரளா இல்லத்தில் விட்டுவிட்டு நான் வீடு வந்து சேர்ந்தேன்.


மால் ரோடில் நண்பர்களுடன்...

சிம்லா, குஃப்ரி, நார்கண்டா பயணம் இனிதே நிறைவுற்றது! பயணம் நல்லது. ஆதலினால் பயணம் செய்வீர்! சமீபத்தில் சென்ற அனைத்து பயணங்கள் பற்றியும் உங்களுடன் பகிர்ந்து கொண்டுவிட்டேன். கடந்த மே மாதம் தமிழகம் வந்திருந்த போது இரண்டு நாட்கள் புதுச்சேரி சென்று வந்தேன் – கல்லூரி தோழர்களின் சந்திப்பு – ஆனால் அப்பயணம் பற்றிய கட்டுரைகள் தொடராக எழுதப் போவதில்லை! முடிந்தால் ஒன்றிரண்டு பதிவுகளில் எழுதுகிறேன். வேறு பயணம் செல்ல வாய்ப்பு இதுவரை அமைய வில்லை. கடைசியாக சென்ற பயணம் சென்ற நவம்பர் மாதம் [2017]. அடுத்த நவம்பரே வந்து விட்டது! பயணம் வாய்க்கவில்லை! அதனால் நீங்களும் என் தொடர் பயணக்கட்டுரைகளிலிருந்து தப்பினீர்கள்! வேறு பயணம் செய்தால், அந்த அனுபவங்களை, முடியும் போது பகிர்ந்து கொள்வேன்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

36 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. வணக்கம் கீதாஜி......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி!

   நீக்கு
 2. இனிய காலை வணக்கம் வெங்கட். பல பதிவுகளூக்கூ வர முடியவில்லை.
  இப்பொழுது பயணம் பூர்த்தியாகிவிட்டது போலிருக்கிறது. ஷிம்லாவின் ,ரயில் நிலையமும்
  மால் ரோடும் குளிருக்கு நடுவில் கலகலப்பாக இருக்கின்றன. எங்களையும் அழைத்துப் போனதுக்கு மிக நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வல்லிம்மா....

   என்னாலும் முன்பு போல பதிவுகள் பக்கம் வர இயலவில்லை. பெரிய இடைவெளி வந்தது போன்று இருக்கிறது! பயணம், பணிச்சுமை என அனைத்தும் சேர்ந்து கொண்டது. இன்று தான் பதிவுலகம் பக்கம் வருகிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   நீக்கு
 3. சிம்லா ரயில் நிலையம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. ஏனோ தெரியலை...இந்த படம் புதிர் போட்டியிலும் இருந்ததே...இந்தப் படத்தைப் பார்க்கும் போதெல்லாம் பல நினைவுகள் எழுந்து மகிழ்சி வரும்...அதே சமயம் மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா என்ற எண்ணமும் வரும்..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஷிம்லா செல்ல உங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கட்டும்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 4. குட்மார்னிங் வெங்கட். அந்த ரயில் நிலையத்தின் சிறப்புகளை படிக்க சுவாரஸ்யமாய் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. அந்த ஊர் இலந்தை கோயா சைஸில் இருக்கிறதே.. க்ளோசப் ஷாட் என்பதால் அவ்வளவு பெரிதாயத் தெரிகிறதோ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கொய்யா அளவிற்கு இருக்காது - சிறு எலுமிச்சை அளவிற்கு இருக்கும் ஸ்ரீராம். க்ளோஸப் என்பதால் இப்படி தெரிகிறது உங்களுக்கு. நம் ஊர் இலந்தைப் பழத்தினை விட பெரிதாகவே இருக்கும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  2. ஹாஹா.... சில சமயம் இப்படி தட்டச்சுப் பிழைகள்/ஆட்டோ கரெக்ட் தொல்லைகள் வந்து விடுகின்றன....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 6. பணம் போலவே நாம் முன்னரே தண்ணீர் சேமித்து அங்கு கொடுத்து வைத்திருந்தால்தான் இந்த ஏ டி எம்மில் தண்ணீர் எடுக்க முடியுமா? ஹா.. ஹா.. ஹா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா.... நல்ல கேள்வி.

   காசு கொடுத்தால் தண்ணீர் கிடைக்கும். இப்படியான கருவிகள் இப்போது தில்லியிலும் வந்து விட்டன....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 7. அப்போ ரஞ்சீத்சிங்குக்கு பணம் கொடுக்கவே இல்லையா? அதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லையே... ஹா.. ஹா.. ஹா... அப்புறம் அந்தக் கார் ஊர்வலம் என்ன? இறைவன் படத்தோடு?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா... கொடுக்காமலா... அவருக்கு உரிய தொகையைக் கொடுத்த பின்னர் தான் தலைநகர் திரும்பினோம்.

   இறைவன் படத்தினை வைத்துக் கொண்டு ஊர்வலம் - தேவி கோவில் செல்பவர்கள் இப்படிச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் அங்கே.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 8. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 9. சிம்லா ரயில் நிலையத்தின் சிறப்பை அறிந்தேன்... அடுத்த பயணம் விரைவில் தொடரட்டும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடுத்த பயணம் - திட்டம் ஒன்று இருக்கிறது - பார்க்கலாம் போக முடியுமா என!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 10. பயணங்கள் இன்னும் தொடர வாழ்த்துகள் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதுவரை சென்றிராத ஒரு மாநிலத்திற்குப் பயணம் செல்லும் திட்டம் இருக்கிறது - பார்க்கலாம்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 11. ஷிம்லா பற்றிய முந்தைய பதிவுகளைப் படிக்கலை! நேரம் வாய்க்கும்போது படிக்கணும். அதுக்குள் முடிஞ்சுடுத்து போல! இந்த ரயில் நிலையம் போல ஊட்டியில் அரவங்காடு ரயில் நிலையம் நாங்க இருந்த குடியிருப்பில் இருந்து பார்த்தால் தெரியும். பாதை வளைந்து செல்வதும், ரயில் வருவதும் நிற்பதும் அங்கே வீட்டு வாசலில் நின்று கொண்டு பார்க்கலாம். நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களையும் அங்கே இருந்தே பார்த்துக் கண்டு பிடிக்கலாம். அங்கேயே இருந்து மேலே ஏறியும் குடியிருப்புக்கு வந்துடலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முடிந்த போது முந்தைய பதிவுகளும் படிக்கலாம்...

   ஊட்டி நினைவுகளை மீட்டெடுத்திருக்கிறது இந்தப் பதிவு - மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 12. எப்போதோ ச்டெட்ய்த பயணங்களைப் பற்றிகுறிப்பு எடுத்துக் கொண்டு எழுதுகிறிர்களா இல்லை புகைப்படங்களால் வரு நினைவுகளா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எப்போதோ செய்த என்று இருந்திருக்க வேண்டும்

   நீக்கு
  2. உங்கள் வழக்கமான கேள்வி இது! நான் ஒவ்வொரு முறையும் பதில் எழுதி இருக்கிறேன்! :))))

   நிறைய விஷயங்கள் நினைவிலிருக்கும். குறிப்புகளும் எடுத்து வைத்துக் கொள்வேன். படங்களும் பல சமயம் உதவியாக இருக்கும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
  3. தட்டச்சுப் பிழைகள் சில சமயங்களில் தவிர்க்க முடிவதில்லை! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 13. அருமை. எங்களுக்கும் சிம்லா நினைவுகளை மீட்டுத் தந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா... நீங்கள் இரண்டு மூன்று முறை சென்று விட்டீர்கள் என நினைக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   நீக்கு
 14. அருமை..

  இந்த ரயில் பற்றி travel xp சேனல் ல அடிக்கடி வரும்..பார்த்து இருக்கோம்..

  அட சிம்லா பயணம் முடிந்தவிட்டதா..

  விரைவில் மீண்டும் ஒரு பயணம் அமைய வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் இந்த இரயில் நிலையம் ரொம்பவே பிரசித்தம்.

   அடுத்த பயணம் - பார்க்கலாம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி.

   நீக்கு
 15. புகைப்படங்கள் அழகு!
  மீண்டும் பயணங்கள் தொட‌ர மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   நீக்கு
 16. தண்ணீருக்கான ஏ டி எம் ... பிற்காலத்தில் இதற்கும் ஒரு ஆளுக்கு இவ்வளவு தான் என்று கட்டுப் பாடு வருமோ ?
  படங்கள் கட்டுரை இரண்டுமே சூப்பர்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தண்ணீர் தட்டுப்பாடு - வந்தால் இப்படியும் ஆகலாம்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....