வெள்ளி, 9 நவம்பர், 2018

கொலு பொம்மைக் கடையில் ஒரு மாலை…
நவராத்திரி சமயத்தில் திருவரங்கம் சென்றிருந்ததை முன்னரே எழுதி இருக்கிறேன். இந்த முறை எங்களுக்குப் பண்டிகைகள் கிடையாது என்பது இந்தப் பயணம் திட்டமிட்ட பிறகே தெரிந்தது – உறவினர் இறந்து போகப்போகிறார் என்பது நமக்குத் தெரியுமா என்ன! விமானத்தில் பயணம் செய்ய முன்பதிவு செய்த பிறகு என்னதான் Refundable Ticket என்றாலும் பயணச்சீட்டு கட்டணத்தில் பத்து சதவீதம் கூட திரும்பிக் கிடைப்பதில்லை. சரி முன்பதிவு செய்த படியே பயணத்தினைத் தொடரலாம் என தொடர்ந்து விட்டேன். நவராத்ரிக்கு முன்னதாகவே மகளும் மனைவியும் சில பொம்மைகளைப் பார்த்து வைத்திருந்தார்கள் – வாங்க வேண்டும் என! நான் திருச்சி வந்த பிறகு வாங்கிக் கொள்ளலாம் எனக் காத்திருந்தார்கள். கொலு ஆரம்பிப்பதற்கு இரண்டு நாட்கள் முன்னர் திருவரங்கம் ராஜகோபுரம் அருகே இருக்கும் கடை ஒன்றிற்குச் சென்றோம்.அழகழகான பொம்மைகள் – தசாவதார செட், கல்யாண செட், அஷ்டலக்ஷ்மி செட், கிருஷ்ண லீலை செட், நவ நரசிம்மர் செட் என பல பொம்மைகள் – எல்லாமே அழகு என்றாலும் எல்லாவற்றையும் வாங்க முடிவதில்லை – பராமரிப்பதும் கடினமான வேலை அல்லவா? பொம்மைகளைப் பார்த்துக் கொண்டிருந்தோம். பொம்மைக் கடையில் கடைக்காரரின் குடும்பத்தினர் அனைவருமே இருந்தார்கள். எல்லோருமா சேர்ந்து வியாபாரம் பார்த்தால் தானே கொஞ்சம் காசு சம்பாதிக்க முடியும். கடைக்காரரின் மனைவி தான் விலை சொல்லிக் கொண்டிருந்தார். ஒவ்வொரு பொம்மையும் எடுத்துப் பார்த்து, அதைப் பற்றிப் பேசி, விலை கேட்டுக் கொண்டிருந்தோம். நாங்கள் எடுத்துக் கொண்டிருந்த அதே வேளையில், வேறு சிலரும் அங்கே இருந்தார்கள்.மூன்று பேர் கொண்ட குடும்பம் ஒன்று – பொம்மைகளை விலை பேசி முடிவு செய்த பிறகு காசு எடுக்க பக்கத்து ATM நோக்கிச் சென்றனர். அப்போது தான் கடைக்காரர் வந்து சேர்ந்தார். எவ்வளவு விலை சொன்னார்கள் என்று கேட்ட கடைக்காரர், தனது மனைவியைக் கடிந்து கொண்டார் – அடக்க விலைக்கும் குறைவாக இப்படி விற்றால், இந்த இடத்திற்கு வாடகை எப்படிக் கொடுக்க முடியும், போக்குவரத்து செலவு எங்கிருந்து தருவது, இப்படி குறைவான விலை சொல்லிட்டியே என்று திட்டிக் கொண்டிருந்தார். அவரது மகனையும் திட்டிக் கொண்டிருந்த போது பணம் எடுக்கச் சென்றவர் திரும்பி வந்தார். விலை தப்பா சொல்லிட்டாங்கம்மா, இந்த விலை எங்களுக்குக் கட்டுப்படியாகாது, மன்னிச்சுக்கோங்க என்று சொல்ல, அந்தப் பெண் வாக்குவாதத்தில் இறங்கினார்.மாற்றி மாற்றி வாக்குவாதம் – வேணும்னா 100, 150 ரூபாய் மேலே கொடுக்க முடியும் அவ்வளவு தான் என்று வாடிக்கையாளர்கள் கறாராக இருக்க, வியாபாரி “சரிம்மா, எனக்கு நீங்க காசே கொடுக்க வேண்டாம், என்னோட வீட்டுக்காரம்மா படிக்காதவங்க, தப்பா சொல்லிட்டாங்க, விலை கட்டாது!” என்று சொல்ல, அவரோ, சரி ஆட்டோவில் எடுத்து வைங்க, நாங்க காசு கொடுக்காமலே எடுத்துக்கறோம் என்று சொன்னார். எவ்வளவு சொன்னாலும் கேட்காமல் “எங்களுக்கு நேர விரயம் உங்களால!” என்று மீண்டும் மீண்டும் வாதிட்டுக் கொண்டிருந்தார்.  இந்த இடத்தில் தான் விதி விளையாடியது. கவனித்துக் கொண்டிருந்த நான் சும்மா இருந்திருக்கலாம், ”ஏம்மா அவங்க தான் ஏதோ தப்பா சொல்லிட்டாங்கன்னு சொல்றாங்களே, பார்த்து பேசி ஒரு முடிவுக்கு வாங்க, நஷ்டத்துக்கு எப்படி விப்பாங்க?” என்று கேட்டுவிட்டேன்.என்னிடமும் சிறிது வாக்குவாதம் - ஆங்கிலத்தில் பேசிக் கொண்டே இருந்தார் – நானும் ஆங்கிலத்தில் பேசி வியாபாரியின் பக்கத்திற்காக வாதிட்டேன். கொஞ்சம் சம்பாஷணைக்குப் பிறகு “Its between us, you don’t interfere! I have lost so much of time due to this!”.  “உனக்கு இது தேவையா?” மொமெண்ட் எனக்கு! சில சமயங்களில் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடிவதில்லை எனக்கு! பாவமாக இருக்கிறதே என கடைக்காரருக்கு உதவிக்குப் போக, இப்படி ஒரு பேச்சு கேட்க வேண்டியதாயிற்று. ”எங்களால இவ்வளவு தான் கொடுக்க முடியும், நீங்க ஃப்ரீயா தரேன்னு சொல்றீங்க, கொடுங்க” என்று கேட்டுக் கொண்டிருந்தார். கடைசியாக அவர்கள் மூவரும் வேற்று மொழியில் [எனக்குத் தெரிந்த மொழிதான்!] தங்களுக்குள் பேசிக்கொண்டே சென்று விட்டார்கள் – ”நாளைக்கு கொலு வைக்கணும், இன்னும் எப்ப பொம்மை வாங்கி, எப்ப எடுக்கறது?” என்று பொதுவாக பேசிக்கொண்டு கடைக்காரரையும் என்னையும் திட்டிக்கொண்டே நகர்ந்தார்கள்.அவர்கள் சென்ற பிறகு கடைக்காரரின் மனைவி இன்னுமொரு சோகக் கதையைச் சொன்னார் – அதுவும் இந்த நிகழ்வுக்கு அரை மணி நேரம் முன்னர் நடந்ததாம். ஒரு பெண்மணி வந்து பொம்மைகளை விலைக் கேட்டுக் கொண்டிருந்தாராம். அதே சமயத்தில் வேறு சிலரும் கடைக்கு வர, ஒவ்வொருவராக பதில் சொல்லிக் கொண்டிருந்திருக்கிறார் கடைப்பெண்மணி. உள்ளே சென்று பொம்மைகளை எடுத்து வருவதற்குள் முதலாவது பெண்மணி, இரண்டு செட் பொம்மைகளை [மொத்தம் நான்கு பொம்மைகளாம்!] தன் பையில் போட்டுக்கொண்டு போய் விட்டார்களாம். அவர்கள் சென்ற பிறகு தான் பார்த்திருக்கிறார்கள் – வரிசையாக வைத்திருந்த நான்கு செட் பொம்மைகளில் இரண்டினைக் காணவில்லை என்பது – கிட்டத்தட்ட 900 ரூபாய் அடக்க விலை! 900 ரூபாய் நஷ்டம்.”இப்படித் திருடியாவது கொலு வைக்க வேண்டுமா?” என்ற அந்த கடைக்காரப் பெண்மணியின் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை! இப்படியும் சில மனிதர்கள்….. என்ன சொல்ல.  அது சரி, நீங்க என்ன பொம்மை வாங்கினீங்க என்று தான் கேட்கிறீர்கள்… நாங்கள் வாங்கிய பொம்மைகள் [படங்கள் - ஆதி வெங்கட்] தான் இந்தப் பதிவில் பகிர்ந்திருக்கிறேன் – சிவன் பார்வதி, காளிங்க நர்த்தனம் மற்றும் பசு, கிருஷ்ணர் மற்றும் யசோதா ஒருங்கே இருக்கும் பொம்மை.  நான்காவதாக இருக்கும் ஆண்டாள் – ரங்கமன்னார் சிலை கடையில் பார்வைக்கு வைத்திருந்த பொம்மைகளில் ஒன்று [நாங்கள் வாங்காதது – ஏற்கனவே இருப்பதால்!] நிறைய பொம்மைகள் வாங்க ஆசை இருந்தாலும், வாங்காமல் விட்டேன் – சரி அடுத்த வருடம் வாங்கிக்கலாம்…..ஒவ்வொரு நாளும் விதம் விதமான மனிதர்களைச் சந்திக்கிறோம். ஒவ்வொரு நாளும் புதுப் புதுப் பாடங்களை நமக்குத் தருகிறது இந்த வாழ்க்கை. அந்த கடைப் பெண்மணியின் “இப்படியாவது கொலு வைக்க வேணுமா?” என்ற கேள்விக்கு விடை தேடிக் கொண்டிருக்கிறேன். சரியாகத் தானே கேள்வி கேட்கிறார் அவர்….

மீண்டும் வேறு ஒரு பகிர்வுடன் சந்திப்போம்…. சிந்திப்போம்….

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

30 கருத்துகள்:

 1. குட்மார்னிங் வெங்கட். பொம்மைப் படங்கள் நன்றாய் இருக்கின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் 🙏 ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. திருடி எடுத்துக்கொண்டுபோய் எப்படி மனசாட்சி உறுத்தாமல் கொலுவில் வைப்பார்கள்? ஒருவேளை பரிசு கொடுக்கவோ? எப்படி மனம் வருகிறதோ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஸ்ரீராம்...பாண்டிச்சேரியில் இருந்தப்பா அங்கு ஒரு கோயிலில் மண்டபத்தில் கொலு பொம்மை ஷோ நடக்கும். நிறைய கடைகள் இருக்கும்...அப்போது நல்ல பழக்கமுள்ள பெண்மணி ஒருவருக்காக அவருடன் சென்றேன்...ஒரு கடையில் கைலாய செட் பார்த்து எனுடன் வந்தவர் கேட்க அந்த செட் ஒன்றுதான் இருக்கு மற்றவர் அதை ஆர்டர் செய்துவிட்டார் என்று சொன்னார் கடைக்காரர். அந்த வேறு ஒருவர் நிறைய பொம்மைகள் வாங்கிக் கொண்டிருந்தார்....அப்போது இந்தக் கைலாய செட் எங்கள் பொம்மைகளுடன் வந்துவிட்டது என்பது வீடு வந்த பிறகுதான் தெரிந்தது.....உடனே நான் அதைக் கொண்டு கொடுத்துவிட்டு வந்துவிடலாம் என்று சொல்ல....என்னுடன் வந்த பக்கத்துவீட்டவர் நல்லவர்தான் ஆனாலும் அவர் சொன்னது....பாருங்க நான் வாங்க நினைச்சு ஒரே ஒரு செட்தான் இருந்துச்சு அவங்க முதல்ல கேட்டு எடுத்துக்கிட்டாங்க ஆனா நமக்கு வரணும்னு இருந்திருக்கு வந்திருச்சுனு....

   என்னால் அதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அவரிடம் விளக்கினேன் இது கடவுள் சித்தம் என்றெல்லாம் என்னால் ஏற்க முடியாது இதுவும் நாம் ஏமாற்றியது போல ஆகும் வாங்கியவரின் மனமும் வேதனைப்படும். அவர் அங்குதான் இருப்பார் இல்லை என்றாலும் மீண்டும் கடைக்காரரிடம் வருவார் எனவே நாம் கொண்டு கொடுத்துவிடுவோம் என்று சொல்லி கொண்டு கொடுத்துவிட்டோம்...அங்கேயேதான் நாலு கடை தள்ளி வாங்கியவர் இருந்தார்....அவரையும் அழைத்து பையை செக் செய்யச் சொல்லி பில்லையும் செக் செய்யச் சொன்ன போது அதில் அந்த செட் போடவில்லை...வாங்கியவர் எப்படி அதை விட்டார் பில்லை செக் செய்யாமல் என்று தெரியவில்லை...ஒரு வேளை நிறைய பொம்மைகள் வாங்கியதாலோ என்னவோ..

   நம்மவர் உடனே அப்ப இதுக்கு நான் விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறேன் என்றார் அந்தப் பெண்மணியிடம்....அதற்கு அப்பெண்மணி நீங்க பாக்க சின்னவங்களா இருக்கீங்க கைலாயமலைக்குச் செல்லவும் முடியும் ஆனால் எங்கள் வீட்டில் கைலாயம் செல்ல நினைத்து இப்ப செல்ல முடியாமல் வீட்டில் இருக்கும் என் மாமனாருக்காக இதை வாங்க நினைத்தேன் என்று சொன்னதும் என் மனம் ரொம்பவெ நெகிழ்ந்துவிட்டது..நம்ம பெண்மணியிடம் பேசி அவருக்குக் கொடுத்துவிடச் சொல்ல...அரை மனதுடன் திருப்பித் தந்துவிட்டு வேறு கடைகளில் அப்பொம்மை இருக்கா என்று பார்த்துவிட்டு கிடைக்காமல் வந்தோம்...

   கீதா

   கீதா

   நீக்கு
  2. அதான் எனக்கும் புரியவில்லை. அப்படி ஒரு கொலு அவசியமில்லையே.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  3. ஆஹா உங்கள் அனுபவம் நன்று. சரியான விதத்தில் நடப்பது என்றைக்கும் நல்லது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 3. கவர் போட்டோவில் பாலத்தின் மீதிருந்து நீங்கள் படம் எடுப்பதை ஸ்டேஷனில் நிற்கும் மூவர் நிமிர்ந்து உங்களையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா... இருக்கலாம்.

   படம் வெளியிடும்போது எனக்கும் இப்படித் தோன்றியது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 4. பொம்மை விற்பவர் சோக கதை மனதை கஷ்டப்படுத்துகிறது.
  இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்படியும் சில மனிதர்கள்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 5. பொம்மைகள் மிக அழகு வெங்கட்ஜி.. நீங்கள் வாங்கிய பொம்மைகள் எல்லாமே செம அழகு...ஆண்டாள் ராஜமன்னார் வித்தியாசமாய்...!க்யூட்! சிவ பார்வதியும்....அப்புறம் காளிங்க நர்த்தனர் எல்லாமே முகம் அழகா வந்திருக்கு...கலைஞர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆண்டாள் ரங்கமன்னார் பொம்மை எனக்கும் பிடித்த பொம்மை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 6. பொம்மை விற்பவரிடம் ஏன் இப்படிச் சிலர் விவாதம் செய்கிறார்களோ...நாம் விலை குறைத்துக் கேட்கலாம் தவறில்லை....இருந்தாலும் அவர்கள் ஒரு லெவலுக்கு மேல் குறைக்க முடியாது என்று சொன்னால், நமக்குக் கட்டுப்படி ஆகவில்லை என்றால் திரும்பிவிடலாம்...ஒரு சிலர் இப்படித்தான் வெங்கட்ஜி....

  பாவம் அவர்கள் சோகம்...இப்படித் திருடிக் கொண்டு போவார்களா? படித்தவர்கள்தானே...ஒருவரை ஏமாற்றித் திருடினால் அது நமக்கு பின்வினை வரும் என்பது கூட இவர்களுக்குத் தெரியாதோ...இப்படியெல்லாம் மனிதர்கள்..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை. இப்படியான மனிதர்களிடம் பேரம் பேசுபவர்கள் மால்களில் அதிக விலை கொடுத்து பேச்சே இல்லாமல் வாங்கி வருவார்கள்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 7. படங்கள் அருமை
  திருடி கொலு வைப்பது வேதனை அல்லவா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வேதனை தான்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 8. சிலரைத் திருத்த முடியாது. விட்டுவிடுவோம். கொலு பொம்மைகள் அருமை. இளமைக்காலத்தில் நான் பார்த்த கொலு பொம்மைகளில் ஒரு finishing இருக்கும். இயற்கைத்தன்மை இருக்கும். உயிர்கூட இருப்பதைப் போலிருக்கும். ஆனால் தற்போது காணப்படுகின்ற கொலு பொம்மைகளில் வண்ண மயம்தான் வெளிப்படுகிறதே தவிர அந்த உணர்வுகளோ, நேர்த்தியோ காணப்படுவதில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பொம்மைகள் அழகு முன் போல் இல்லை என்பது உண்மை. நம் ஊர் பொம்மைகள் பரவாயில்லை. வட.நாட்டு பொம்மைகளில் ஃபினிஷிங் நன்றாக இருப்பதே இல்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 9. பதில்கள்
  1. தனித்தனியாக பொம்மை விலை நினைவில் இல்லை. மூன்றும் சேர்த்து ஆயிரம் ரூபாய் கொடுத்த நினைவு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜன் ஜி.

   நீக்கு
 10. திருடி கொலு வைப்பது அவசியம்தானா ? படங்கள் அருமை ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவசியம் இல்லை....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 11. பொம்மை படங்களும், நீங்கள் வாங்கிய பொம்மைகளும் அழகாக இருக்கின்றன.

  இப்படி எல்லாம் மனிதர்கள், விவாதம்...திருடுதல் என்று...மனசாட்சி இல்லையோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.

   நீக்கு
 12. ஒரு அனுபவம் பொம்மை வாங்கப் போவது. இப்படியும்மனிதர்களா. ஏழை உழைப்பாளியை ஏமாற்றூவார்களா.
  மயிலையில் நாங்களும் பேரம் பேசுவோம். முடிந்தால் வாங்கலாம் இல்லாவிட்டால் விட்டுவிட வேண்டியதுதான்.
  உங்கள் வீட்டுப் பொம்மைகள் அனைத்துமே அழகுதான்.
  களையாக இருக்கின்றன. வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விலை கட்டுப்படி ஆகாது என்றால் வேறு இடத்தில் பார்ப்பதே சரி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   நீக்கு
 13. பேரம் பேசுவது நியாயமாக இருக்கணும் இல்லையா! ஒரு சிலர் பேப்பர் மெஷ் பொம்மைகளையே அதிக விலைக்கு விற்கும்போது இந்த வருஷம் மண் பொம்மைகள் விலை அப்படி ஒண்ணும் ஜாஸ்தியாத் தெரியலை! நாங்க இனி அதிகம் சேர்த்தால் பாதுகாப்பது கஷ்டம் என்பதால் வாங்குவதில்லை. மற்றபடி பொம்மைகள் அதுவும் மண் பொம்மைகள் அதிகம் விலை நு எல்லாம் சொல்ல முடியாது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நியாயமான பேரம் நல்லது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....