வெள்ளி, 16 நவம்பர், 2018

சார் லட்டு… தலைநகரின் விதம் விதமான லட்டு!


”’திங்க’க் கிழமை” பதிவாக இந்தத் திங்களில் நெல்லைத் தமிழன் அவர்களின் லட்டு செய்முறை எங்கள் பிளாகில் வந்தது. லட்டு எனக்கும் பிடித்தமானது தான். அந்தப் பதிவினை படித்த பின்னர், ”தில்லியில் கிடைக்கும் விதம் விதமான லட்டுகளைப் பற்றி ஒரு பதிவே எழுதலாம், விரைவில் எழுதுகிறேன்” என்று சொல்லி இருந்தேன். இதோ எழுதி வெளியிட்டு விட்டேன். அரங்கேற்ற வேளை படத்தில் “சார் லட்டு… சார் லட்டு” என்று தட்டு நிறைய லட்டுடன் வருவாரே ஒருத்தர், அது மாதிரி விதம் விதமாய் லட்டுகளுடன் இதோ வந்து விட்டேன்!


அமரந்த் லட்டு - தண்டுக்கீரை விதைகளில் செய்யப்பட்ட லட்டு


ஆட்டா லட்டு - கோதுமை மாவில் செய்யப்படுவது...

உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? நம்ம ஊர்ல, லட்டு என்றால் பூந்தி லட்டு, மாலாடு, ரவா லாடு என மூன்றோ நான்கோ தான்! ஆனால் இங்கே லட்டு என்ற பெயரில் பல இனிப்புகள் உண்டு. மற்றபடி உருண்டையாக இருக்கும் எள்ளு மற்றும் நிலக்கடலை இனிப்புகளை முறையே எள்ளுருண்டை, கடலை உருண்டை என்று தானே சொல்வோம். இங்கே அவை கூட லட்டு தான் – தில் கா லட்டு, மூம்ஃப்ளி லட்டு என்று தான் அழைப்பார்கள். லட்டு வகைகள் எத்தனை எத்தனை – மோதிசூர் லட்டு, Gகோந்த் லட்டு, Bபேசன் லட்டு, ஆட்டா லட்டு, CHசூர்மா லட்டு, மேவா லட்டு, கஜூர் லட்டு, தேங்காய் லட்டு, ட்ரை ஃப்ரூட்ஸ் லட்டு, கஜூர் எள்ளு லட்டு, ஜோத்பூரி லட்டு, சோண்ட் மேத்தி கா லட்டு, முர்முரா லட்டு, அமரந்த் லட்டு என பல வகை லட்டுகள் இங்கே கிடைக்கின்றன. ஏன் போண்டா போன்ற ஒரு வகை உணவான “ராம் லட்டு” கூட இங்கே கிடைப்பது பற்றி ஏற்கனவே என் பக்கத்தில் எழுதியது நினைவிலிருக்கலாம்!


ராகி மாவில் செய்யப்பட்ட லட்டு 


கடலை மாவு லட்டு

ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையிலும் லட்டு வாங்கி “பாலாஜி” என இங்கே அழைக்கப்படும் ஹனுமனுக்கு படைத்து அனைவருக்கும் விநியோகம் செய்வது இங்கே உள்ளவர்களின் வழக்கம். லட்டு வாங்க முடியாதவர்கள், பூந்தியாவது வாங்கி விநியோகிப்பார்கள். எங்கள் அலுவலக நண்பர் ஒருவர் இந்த பாலாஜி/ஹனுமனின் பக்தர். ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க் கிழமைகளில் லட்டு விநியோகிப்பார் – அதற்காகவே அலுவலகத்தில் ஒரு பாலாஜி ஃபண்ட் கூட வைத்திருந்தோம் – வாரா வாரம் அந்த நிதியிலிருந்து இரண்டு கிலோ லட்டு வாங்கி விநியோகம் - வருடத்தில் ஒரு முறை சுமார் 200 பேருக்கு மேல் ”Bபண்டாரா” என அழைக்கப்படும் உணவு விநியோகம் உண்டு – கண்டிப்பாக அனைவருக்கும் லட்டு உண்டு! சில செவ்வாய்க்கிழமைகளில் லட்டு வாங்கி எடுத்துப் போவது என்னுடைய வேலையாக இருந்தது – வழக்கமாக வாங்கி வருபவர் விடுமுறையில் இருந்தால்!


சாக்லேட் லட்டு....


ட்ரை ஃப்ரூட்ஸ் லட்டு


லட்டு கோபால் என அழைக்கப்படும் தவழும் கிருஷ்ணர்....

சாப்பிடும் லட்டுகளை விடுங்கள். இறைவனைக்கூட இங்கே லட்டு என்று அழைக்கும் வழக்கம் இங்கே உண்டு. மதுராவில் பிறந்த கண்ணனை – “Bபால் கோபால்” [அதாவது குழந்தை கோபால்] என்று அழைப்பதோடு லட்டு கோபால் என்றும் அழைப்பதுண்டு. கிருஷ்ண ஜெயந்தி அன்று “லட்டு கோபால் ஆயாரே….” என பாடல்கள் கூட பாடுவார்கள் இங்கே.  லட்டு கோபால் என்றால் அப்படி ஒரு ஆனந்தம்.  திருமணம் ஆனவர்களுக்கு திருமணப் பரிசாக லட்டு கோபால் சிலைகள் கொடுப்பதைக் கூட இங்கே வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மதுரா, விருந்தாவன், கோகுலம், கோவர்த்தன், பர்சானா என இந்தப் பகுதியில் எங்கே சென்றாலும், கடைகளில் லட்டு கோபாலின் சின்னச் சின்ன சிலைகளும், படங்களும் கிடைக்கும். கூடவே அழகான தொட்டில்களும், அலங்காரப் பொருட்களும்!


கோந்த் லட்டு...


ஜோத்பூரி லட்டு...

ஏற்கனவே சொன்னது போல உருண்டையாக இருந்தாலே லட்டு தான் இங்கே. அது மனிதர்களுக்கானவை மட்டும் அல்ல! மாடுகளுக்கும் கொடுக்கும் ஒரு உணவினை லட்டு என அழைக்கிறார்கள்! நாங்கள் வழக்கமாகச் சென்று வரும் ஒரு Gகோஷாலாவில் வைக்கோல், புல், தீவனம், கோதுமை மாவு என பலவற்றையும் கலந்து உருண்டைகளாக உருட்டி லட்டு என்ற பெயரில் வைத்திருப்பார்கள். 50 ரூபாய், 100 ரூபாய் என கொடுக்கும் பணத்திற்கு ஏற்ப லட்டுகள் தட்டுகளில், கூடைகளில் கிடைக்கும். அவற்றை எடுத்துக் கொண்டு சென்று மாடுகளுக்கு நம் கையாலேயே உண்ணக் கொடுக்கலாம். அவ்வப்போது சென்று மாடுகளுக்கு இந்த லட்டுகளைக் கொடுப்பது எங்கள் வழக்கமாக இருக்கிறது!


கஜூர் [பேரீச்சை ] லட்டு


மேத்தி  லட்டு 

ஹரியானா பகுதிகளில் இருக்கும் ஒரு வழக்கம் – இங்கே விதம் விதமாக இனிப்புகள் செய்வது வழக்கமல்ல. எந்த விழாவாக இருந்தாலும் லட்டு தான் செய்வார்கள் – நாம் செய்வது போல ஒரு கிலோ, இரண்டு கிலோ அல்ல – மூட்டை கணக்கில் தான் இங்கே லாட்டூ [laddoo] செய்வது வழக்கம். ஏக் போரி லட்டு, தோ போரி லட்டு என்று தான் சொல்வார்கள் – அதாவது பயன்படுத்தப்படும் சர்க்கரை தான் கணக்கு – ஒரு மூட்டை சர்க்கரை கொடுத்து லட்டு! யோசிக்கவே பிரமிப்பாக இருக்கிறது அல்லவா! கிராமிய திருமணங்களில் ஒவ்வொரு வீட்டில் எத்தனை நபர் இருக்கிறார்களோ, அத்தனை கிலோ லட்டு விநியோகம் செய்வது ஹரியானா கிராமங்களில் வழக்கமாக இருக்கிறது. எங்கள் அலுவலக நண்பர் வீட்டில் ஐந்து பேர் – ஊரில் எந்தத் திருமணம் என்றாலும் ஐந்து கிலோ லட்டு இவர் வீட்டுக்கு வந்து விடும்!


மேவா லட்டு


மோதிசூர் லட்டு...

நாம் சாப்பிடுவது போல ஒன்றிரண்டு லட்டு சாப்பிடுவதில்லை – ஹரியானாவில் லட்டு விநியோகம் செய்யும் போது “dhardhe!” என்று தான் சொல்வார்கள் – அதாவது அப்படியே தட்டுடன் இலையில் போடுவது/கொட்டுவது! வீட்டில் உள்ள முதியவர்கள் இறந்தால் கிராமம் முழுவதும் லட்டு விநியோகம் செய்வது இங்கே வழக்கமாக வைத்திருக்கிறார்கள். நம் ஊரில் கல்யாணச் சாவு என்று சொல்வார்களே அதே போல ஒரு வழக்கம். இறந்தவர் 70 வயதுக்கு மேலானவராக இருந்தால் கிராமம் முழுக்க கண்டிப்பாக இப்படி லட்டு விநியோகம் உண்டு – கல்யாணம் என்றாலும் கல்யாணச் சாவு என்றாலும் லட்டு விநியோகம்! ஹரியானாவும் லட்டுவும் இணைபிரியாத நண்பர்கள்! இன்னுமொரு விஷயம், குழந்தைகளைக் கொஞ்சும் போது, இவர்கள் “ஹே மேரா லட்டு!” என்று கொஞ்சுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்!


முர்முரா லட்டு

ரபடி லட்டு... 

ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் சாலாசர் மற்றும் மெஹந்திபூர் பாலாஜி [ஹனுமான்] கோவில்களில் சவாமணி பிரசாத் மிகவும் பிரபலம். பொதுவாக சவாமணி பிரசாத் லட்டு தான் 51 கிலோ லட்டு பிரசாதம்! இந்த சவாமணி பற்றி ஏற்கனவே என்னுடைய வலைப்பூவில் எழுதி இருக்கிறேன் – படிக்காதவர்கள் இங்கே படிக்கலாம்! சவாமணி - ஹிந்தி மொழியில் சவா என்றால் ஒன்றே கால்! மன் அல்லது மான்ட் என்றால் 40 கிலோ அளவு. சவா மன் அதாவது சவாமணி என்றால் 50 கிலோ! லட்டு அல்லது சூர்மா, அல்லது பர்ஃபி அல்லது மூன்றும் கலந்து 50 கிலோ [அ] 51 கிலோ பிரசாதமாக பாலாஜிக்கு படைப்பது சவாமணி! ஒவ்வொரு நாளும் சவாமணி பிரசாதத்திற்குக் கொடுக்கும் பக்தர்கள் எண்ணிக்கை நூற்றுக் கணக்கில்! இங்கே நிறைய கடைகள் இருந்தாலும், சஞ்சய் மிஷ்டான் Bபண்டார் என்ற கடை பிரபலம் – ஒவ்வொரு நாளும் சுமார் ஐந்தாயிரம் கிலோ லட்டு இங்கே தயாரிக்கிறார்கள்.

என்ன நண்பர்களே, எங்கள் பிளாக் லட்டு படித்ததும் தோன்றிய லட்டு எண்ணங்களை ஒரு பதிவாக இங்கே பகிர்ந்து கொண்டேன். லட்டு உங்களுக்குப் பிடித்திருந்ததா என்று பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்! முடிந்தால் நானே சில லட்டு வகைகளைச் செய்து செய்முறையும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்! நேரம் கிடைக்கும்போது செய்ய வேண்டும் என நினைத்திருக்கிறேன்!

மீண்டும் வேறு ஒரு பகிர்வுடன் சந்திப்போம்…. சிந்திப்போம்….

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

32 கருத்துகள்:

  1. மகிழ்வான காலை வணக்கம் வெங்கட்ஜி!

    கிட்டு லட்டுவுடன் மீண்டும்!!! ஹா ஹா ஹா (காஃபி வித் கிட்டு விலும் லட்டு வந்த நினைவு! அதான் )

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாலை வணக்கம் கீதா ஜி.

      கிட்டு லட்டுவுடன்... :)))

      காஃபி வித் கிட்டுவில் ராம் லட்டு வந்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  2. குழந்தை லட்டு போல கொழுக் மொழுக் என்று உருண்டு திரண்டு இருப்பதால் லட்டு என்று சொல்கிறார்களோ...ஹா ஹா ஹா ஹாஹா

    கண்ணா லட்டு திங்க ஆசையா என்று ஒரு படம் கூட வந்தது இல்லையோ?!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொழுக் மொழுக் குழந்தைகளை லட்டு என்று அழைப்பது தான் இங்கேயும் வழக்கமாக இருக்கிறது...

      கண்ணா லட்டு திங்க ஆசையா படம் வந்தது. அந்த படம் பார்த்த அனுபவம் பற்றி ஒரு பதிவு எழுதினேன் - 2013-ல்.... நீங்க அந்த பதிவு படிக்கல... உங்களுக்காக அந்தப் பதிவின் சுட்டி கீழே....

      https://venkatnagaraj.blogspot.com/2013/01/blog-post_28.html

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  3. லட்டு லட்டுவா படம் போட்டு லட்டு கொடுத்துட்டீங்க ஜி!!! இனிப்பான பதிவு

    ஒவ்வொரு பகுதி ஃபேமஸ் லட்டுவும் நல்ல தகவல்கள். சில தங்கை வழி கேட்டிருந்தாலும்...

    சவாமணி பார்க்கிறேன். இங்க வந்துருக்கற லட்டுகளில் எது நான் செய்ததில்லை என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன். அந்த ராஜ்கிரா விதைகள் நல்லதாச்சே ...அதன் மாவு கூட ஒரே ஒரு கடையில் சென்னையில் கிடைக்கிரது...அதிலும் செய்து பார்த்துவிட்டேன்..ராஜ்கிரா சிக்கி நட்ஸ் அண்ட் ஸ்பைஸஸில் கிடைக்கிறது...

    இங்கு பங்களூருவில் ராஜ்கிரா நன்றாகவே கிடைக்கிறது ஆனால் இன்னும் வாங்கவில்லை...

    சுவையான பதிவு....லட்டு கொடுத்து உங்களை வித விதமான லட்டு போட வைத்த நெல்லை - எபிக்கு ஒரு பூங்கொத்து!! ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராஜ்கீரா விதைகள் நல்லது தான். மாவாக இங்கே மால்களில் மட்டுமே கிடைக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  4. 5 பேர் என்றால் 5 கிலோவா அப்படினா ஒரு ஆளுக்கு ஒரு கிலோ லட்டு யம்மாடியோவ்....ஆனால் அவர்கள் ஸ்வீடு நல்லாவே சாப்பிடுவாங்களே நமக்குத்தான் பகீர்...ஹா ஹா ஹா ..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சிலர் ஆளொன்றுக்கு இரண்டு கிலோ லட்டு கொடுப்பதும் உண்டு. அலுவலகத்தில் சக ஊழியர் இப்படி லட்டு நிறைய வரும்போது அலுவலகத்திற்கு எடுத்து வந்து பகிர்ந்து கொடுப்பார்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  5. ரபடி லட்டுதான் பார்வைக்கு மிகச் சிறப்பா இருக்கு. பொரி உருண்டை (முர்முரா) வும் நல்லா இருக்கு, பிடித்தமானது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொரி உருண்டையை விட கடலை உருண்டை எனக்கு மிகவும் பிடிக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  6. குட்மார்னிங் வெங்கட். லட்டு மாதிரி சப்ஜெக்ட் கிடைத்தால் விடலாமா? ஹா... ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாலை வணக்கம் ஸ்ரீராம். லட்டு மாதிரி சப்ஜெக்ட்! :))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  8. லட்டு படம் கண்டவுடன் வாங்கி சாப்பிடும் ஆசை பிறக்கிறது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  10. எத்தனை விதமான லட்டுகள்.
    மேத்தி(தனியா லட்டு) லட்டு செய்முறை சொல்லுங்கல் வெங்கட்.
    படங்கள் எல்லாம் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேத்தி லட்டு.... சொல்கிறேன் மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  11. மிக அருமையான லட்டுக்கள்.. ஆனாலும் எனக்கேதும் வாணாம்... இனிப்புப் பிரியர்கள் எடுத்துக் கொள்ளட்டும்:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட உங்களுக்கும் இனிப்பு பிடிக்காதா.... எனக்குப் பிடிக்கும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு
  12. உருண்டையாப் பிடிப்பதெல்லாம்லட்டுவா விட்டில் அவ்வப்போது கடலை மாவில் லட்டு செய்வதுண்டு அதை தமிழில் சொல்லாமல் பேசின் லட்டு என்றுசொல்வதே அதிகம் முன்பெல்லாம் கடலை உருண்டை செய்து மகன்களுக்கு அனுப்புவது உண்டு பொரி உருண்டையும் அவ்வப்போது உண்டு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  13. லட்டுங்கற பெயரே பிடிக்கும். லட்டு பிடிக்காமல் இருக்குமா? இதில் மேத்தி(தனியா) லட்டுவும் ஜோத்பூரி லட்டும் சாக்லேட் லட்டு போன்றவை தெரியாது. கோந்த் லாடு(லட்டு) ராஜஸ்தான், மகாராஷ்டிராவில் வேறே மாதிரி இருக்கும். நிறையச் சாப்பிட்டிருக்கேன். இந்த மெல்லிசு பூந்திகளை ஜீராவில் போட்டு ஊற வைச்சதோடு மாவாவும் சேர்த்து ஒரு லட்டு செய்வாங்க! அது ரொம்பவே பிடிக்கும். இங்கே இருக்கும் மேவா லட்டு இல்லை அது! பூந்தி லட்டுவில் மாவாவும் சேர்த்து! பலருக்கும் அது பத்தித் தெரியலை! :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்குத் தெரியாத சில லட்டு வகைகள் - ஆஹா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

      நீக்கு
  14. இனிமை!! பல வகையான லட்டுகள் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மிடில் கிளாஸ் மாதவி.

      நீக்கு
  15. ஐயோ! இவ்வளவு இனிப்பா? பார்க்கும் பொழுதே திகட்டிவிட்டதெ?காரமாக ஏதாவது போடுங்கள்.
    ரபடி என்பது பாலாடை போன்றதுதானே? அதில் லட்டுவா? செய்முறை ப்லீஸ்.
    என் கடைசி அக்காவின் பேத்திக்கு உங்கள் மகளின் பெயர்தான், ஆனால் லட்டு என்றுதான் அழைப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்க குட்டிக் குஞ்சுலுவை எங்க பையர் "லட்டு" என்றே அழைப்பார். பிறந்த நாள் கேக்கில் கூட "லட்டு" என எழுதிச் செய்தார். (பையரே கேக் எல்லாம் செய்வார்)

      நீக்கு
    2. ஹாஹா.... காரமாக ஏதாவது கொடுத்து விடலாம்.

      லட்டு என்று அழைப்பீர்களா... மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

      நீக்கு
    3. ஆஹா உங்கள் வீட்டு குட்டிக் குஞ்சுலுவும் லட்டு தானா.... மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....