சனி, 17 நவம்பர், 2018

தமிழ்நாடு மோசமான மாநிலம்….



இரயில் பயணங்களில்…


 
இந்த முறை தமிழகம் வரும்போது விஸ்தாராவில் பயணம். தில்லி திரும்பியது இரயிலில் – திருவரங்கத்திலிருந்து சென்னை வரை பல்லவன்! சென்னையிலிருந்து தில்லி வரை தமிழ்நாடு விரைவு வண்டி! காலை புறப்படும் முன்னர் ஓலா ஆட்டோ பதிவு செய்யலாம் என இருந்தேன். காலையில் வீட்டிலிருந்து புறப்படும் போது ஓலா…. ஓலா பாட்டினை பாடியபடி அலைபேசியை நோண்டினால் ஒரு ஆட்டோவும் உங்கள் பகுதியில் இல்லை போ என்று சொல்லி விட்டது. எப்போதும் கைவசம் இருக்கும் ஆட்டோ ஓட்டுனர்களில் ஒருவரை அழைக்க, அவர் வர இயலாது என்று சொல்லிவிட்டார். நேரம் ஆக ஆக இரத்த அழுத்தம் ஏறிக் கொண்டிருந்தது. அடுத்த ஆட்டோ ஓட்டுனரை அழைக்க, பத்து நிமிடத்தில் வருவதாகச் சொன்னார். இரயில் நிலையம் வந்து சேர்ந்ததும் 100 ரூபாய் கொடுத்து, பாக்கி கொடுப்பார் எனப் பார்க்க, “என்ன பார்க்கறீங்க, நீங்க கொடுத்தது சரியாப் போச்சு!” என்று பதிலாகக் கிடைத்தது – கொஞ்சம் பாலிஷ்டாக! ஓலாவில் காட்டிய தொகை ரூபாய் 39 மட்டும்! 61 ரூபாய் அதிகம் வாங்கினார் ரெகுலர் ஓட்டுனர்! :(

பத்து நிமிடம் தாமதமாகவே வந்தார் பல்லவர்! அதுவும் நாலாவது நடைமேடையில் – பொதுவாக ஒன்றில் தான் வருவார். எனக்கு முன்பதிவு செய்த பெட்டிக்குச் சென்று என் இருக்கையை நோக்கிச் செல்ல, அங்கே ஒரு பெரிய குடும்பமே அமர்ந்திருந்தது! அதில் ஒரு பெண் – “சார் எங்களோட ஒரு டிக்கெட், இரண்டு கோச் தள்ளி இருக்கு – ஜன்னல் சீட் தான் – நீங்க அங்க ஷிஃப்ட் பண்ணிக்க முடியுமா?” – தனியே பயணிப்பதில் இந்த பிரச்சனை உண்டு! எப்போதும் சந்திக்கும் கேள்வி தானே! “சென்னைக்குப் போகிறீர்கள? வழியில் இறங்குகிறீர்களா?” என்று கேட்டுக் கொண்டு அந்தப் பெட்டிக்குச் சென்றேன். புதிய இடத்தில் பயணச்சீட்டு பரிசோதிக்க வந்த பரிசோதகர் இந்த முறை ஒரு பெண். ”அந்தப் பெட்டி பரிசோதகர் கிட்ட சொல்லிடுங்க!” என்று சொல்லி நகர்ந்தார்.

அந்தப் பெட்டி பரிசோதர்கரிடம் சொல்ல வேண்டுமே – உடமைகளைப் பக்கத்து இருக்கையில் இருந்த குடும்பத்தினரிடம் சொல்லி விட்டு பரிசோதகரிடம் சொல்லி வந்தேன். பக்கத்து இருக்கையில் புதுக்கோட்டைக்காரர்! – நம் புதுக்கோட்டை பதிவர்களைத் தெரிந்தவர் – சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தோம். அதற்குள் அரியலூர் வந்திருந்தது. அரியலூரில் ஒரு பெரிய குடும்பம் – எட்டு டிக்கெட் – தனித்தனி இடங்களில் இருக்கைகள்! அவர்கள் குடும்பம் மொத்தமாய் ஒன்றாய் இருக்க, பலரை அங்கும் இங்கும் மாற்றி அமர வைத்தார்கள்! போகப்போவது சில மைல் தூரம் என்றாலும் மாற்றி மாற்றி அமர்ந்து பெட்டியையே அதகளம் செய்தார்கள் – என்ன மனிதர்களோ – தாங்கள் சேர்ந்து இருக்க வேண்டும் என்பதற்காக பெட்டியில் இருந்த பலரையும் தொந்தரவு செய்தார்கள்! ஒரு வழியா எல்லோரும் ஒரே இடத்தில் அமர்ந்தபோது விழுப்புரம் வந்து சேர்ந்திருந்தது வண்டி!

ஒரு வழியாக எல்லோரும் உட்கார்ந்த பிறகு புதுக்கோட்டைக் காரர் பின் இருக்கைக்குச் சென்றிருந்தார்! அங்கிருந்து சில நிமிடங்கள் பேசினார். என் இருக்கைக்கு அருகில் இருந்தவர் தமிழகத்தின் தற்போதைய நிலை பற்றி பேசிக் கொண்டிருந்தார் – இங்கே ஒன்றும் சரியாக இல்லை – இலவசங்களை வாங்கிக் கொண்டு, ஓட்டுக்குக் காசு வாங்கிக் கொண்டு எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் குண்டு சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கிறோம் என்று புலம்பிக் கொண்டு வந்தார். பொதுவாக இரயிலில் பயணிக்கும்போது மட்டுமல்ல, பொதுவெளியில் எனது எண்ணங்களை நான் பகிர்ந்து கொள்வதில்லை! குறிப்பாக அரசியல்! பேசுவதை விட, கேட்பதே அதிகம்! – ராஜா காது கழுதைக் காது! :)

சென்னை எழும்பூர் வந்து, பார்க் வழியே சென்னை சென்ட்ரல் – க்ளோக் ரூமில் உடைமைகளை வைத்து விட்டு மதிய உணவை முடித்துக் கொண்டேன். இரவு வரை நேரம் இருந்ததால், சென்னையில் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம், பால கணேஷ் மற்றும் சில நண்பர்களைச் சந்திப்பதாகத் திட்டம். ஸ்ரீராம் அவர்கள் மூன்று மணிக்கு மேல் தான் சந்திக்க முடியும் என்று சொல்லி இருந்தார். கணேஷிற்கு எத்தனை முறை அழைத்தாலும், இணைப்பு கிடைக்கவில்லை.  வேறு ஒரு நண்பரை அழைத்து, அவரைச் சந்திக்க முடிந்தது. ஸ்ரீராம் அவர்களின் பணி முடியாததால், மூன்று மணிக்குச் சந்திக்க இயலவில்லை. மாலைவரை இரண்டு மூன்று முறை அலைபேசியில் பேசி கடைசியில், அவர் வேலை முடியாததால், சந்திக்க இயலாமல் போனது! நான்கு மணிக்குப் பிறகு சென்னை சென்ட்ரலில் காத்திருப்பு – வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதாயிற்று!

அங்கே அமர்ந்திருந்தபோது தான் இப்பதிவின் தலைப்புக்கான விஷயம் நடந்தது. எத்தனை எத்தனை மனிதர்கள்…. எங்கேயோ பயணித்துக் கொண்டே இருக்கிறார்கள் – ஒவ்வொரு நொடியிலும் பயணம் நடந்து கொண்டே இருக்கிறது. வெவ்வேறு மொழியில் பேசும் மனிதர்கள் அந்த இடத்தில் – உள்ளூர் மொழி தெரிகிறதோ இல்லையோ, சமாளித்துக் கொள்ள முடியும் என்ற தைரியத்தில் பயணிக்கிறார்கள் – மத்தியப் பிரதேசம்/சத்தீஸ்கர் பகுதியிலிருந்து ஒரு குழு – பெரும்பாலானவர்கள் பெண்கள் – வேளாங்கண்ணி மாதாவை தரிசனம் செய்து விட்டு அவர்கள் ஊர் சென்று சேர சென்னை இரயில் நிலையத்தில் காத்திருந்தார்கள் – தமிழ் அவர்களில் யாருக்குமே தெரியாதாம் – ஹிந்தி மற்றும் அவர்களது பழங்குடி மொழி மட்டுமே! ஆங்கிலம் ஒன்றிரண்டு பேருக்குத் தெரிந்திருக்கிறது!

அங்கே அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது பக்கத்து இருக்கையில் ஒருவர் வந்து அமர்ந்தார் – சில நொடிகளிலேயே என்னிடம் பேச ஆரம்பித்தார் – “எங்கே செல்கிறீர்கள்? எத்தனை மணி நேரம் ஆகும் உங்கள் ஊர் போய்ச் சேர, இவ்வளவு கூட்டம் இங்கே வருகிறது, எப்படித்தான் இவர்கள் சமாளிக்கிறார்களோ?” என வரிசையாக பல கேள்விகள் – எங்கள் பிளாக் தளத்திற்கு வரும் கேள்விகளை விட அதிகமான கேள்விகள். ஏதாவது ஒரு கேள்விக்காவது பதில் சொல்லித்தானே ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது! அவர் பேச ஆரம்பித்ததிலிருந்தே, என் மனதுக்குள் ஏதோ ஒரு உணர்வு – எதற்கோ அடிபோடுகிறார் இந்த மனிதர் என்று! நினைத்த மாதிரியே அவர் எண்ணம் வெளிப்பட்டது!

”என்னய்யா ஊர் இது – இவ்வளவு கேவலமான ஊராக இருக்கிறதே – இந்த அளவு மோசமான மாநிலத்தினைப் பார்த்ததில்லை – திருப்பதியிலிருந்து வரும்போது எனது உடைமைகள் திருடு போனது – பெட்டியில் முப்பதாயிரம் ரூபாய் வைத்திருந்தேன் – மாத்திரைகளும் இருந்தது – அனைத்தும் களவு போனது – நிலையத்தில் இருக்கும் அப்பல்லோ முதலுதவி நிலையத்தில் எனக்கு இரத்த அழுத்த மாத்திரை வேண்டும் எனக் கேட்க, தர முடியாது என்று சொல்கிறார்கள் – என்னிடம் இருப்பது 100 ரூபாய் மட்டுமே – நான் மும்பைக்குச் செல்ல வேண்டும் – நாளைக் காலை சென்று சேர்ந்து விடுவேன் – எனது நண்பர் சிங்கப்பூரிலிருந்து வருவார் – அவர் எனக்கு எல்லா உதவியும் செய்வார் – இந்த ஊர் ரொம்பவே மோசம் – மஹா கேவலமான ஊராக இருக்கிறது – எங்கே பார்த்தாலும் அழுக்கு – கும்பல்” என்று புலம்பிக் கொண்டே இருந்தார்!

ஹிந்தியில் பேசிக் கொண்டிருந்தார் – எந்த ஊருக்கு வருகிறோமோ, அந்த ஊரை, மக்களை மட்டம் தட்டிப் பேசுவது சரியானதல்ல – என்று சொன்னேன். அதுவும் பத்து வருடமாகத் திருப்பதி வருகிறாராம்! அதுவும் அவருக்கு நம்பிக்கை இல்லாமல் – நண்பர் இறக்கும் போது சொன்னதற்காகப் போகிறாராம் – நம்ப முடியவில்லை! கொஞ்சம் நஞ்சம் புலம்பல் இல்லை – பயங்கர புலம்பல் – என்ன தான் நேரம் போகிறது என்றாலும் – புலம்பல்களைக் கேட்கவும் ஒரு அளவு இருக்கிறதல்லவா? கண்டு கொள்ளாமல் அலைபேசியை நோண்ட ஆரம்பித்தேன். அடுத்த பக்கத்தில் இருந்தவரிடம் புலம்ப ஆரம்பித்தார் மனிதர்! புலம்பல் தாங்காமல் அங்கிருந்து புறப்பட்டு வேறு இடம் சென்று அமர்ந்தேன். ஆவின் பாலகத்தில் பால் அருந்தச் சென்றால் அங்கே இருந்தார் – கைகளில் ஐந்நூறு ரூபாய் நோட்டு! [100 ரூபாய் மட்டுமே இருக்கிறது என்று சொன்னவரிடம்!]

எப்படியெல்லாம் பேசுகிறார்கள் இந்த மனிதர்கள் – பொய்களைச் சுமந்து கொண்டே இருக்க இவர்களுக்கு எப்படி முடிகிறது – அடுத்தவர்களை, அடுத்த ஊரை இப்படி மட்டமாக பேசிக் கொண்டிருப்பது அவர்களுக்குப் பிடித்திருக்கிறது போலும்! நமக்குப் பிடிக்கவில்லையே – அவர்கள் பேச்சைக் கேட்க! இரவு வரை இப்படியே பலரையும் கவனித்துக் கொண்டிருந்ததில் நேரம் போனது தெரியவில்லை. தமிழ்நாடு விரைவு வண்டி ஐந்தாம் நடைமேடையிலிருந்து புறப்படும் எனத் தகவல் வந்த பிறகு, உடைமைகளை க்ளோக் ரூமிலிருந்து எடுத்துக் கொண்டு அந்த நடைமேடைக்குச் சென்றேன். தமிழ்நாடு விரைவு வண்டியில் சில வருடங்களுக்குப் பிறகு பயணிக்கிறேன் – அந்தப் பயணத்திலும் சில சுவையான அனுபவங்கள்! அவற்றை வேறொரு பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.

பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

32 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி

    தலைப்பு என்னவோ சொல்லுதே

    வரேன் பதிவு வாசித்துவிட்டு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாலை வணக்கம் கீதா ஜி!...

      தலைப்பு - ஹாஹா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  2. அட டிக்கெட் பரிசோதகர் பெண்கள் வந்துவிட்டார்களா!!! சூப்பர்!! நல்லதொரு விஷயம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெண் இரயில் ஓட்டுனர்கள் கூட இருக்கிறார்கள் - அதுவும் நீண்ட தூர இரயில்கள்....

      தில்லி மெட்ரோவில் பல பெண் ஓட்டுனர்கள் உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  3. பெண் பயணச்சீட்டுப் பரிசோதகர்களை நாங்கள் சுமார் பத்து வருடங்களுக்கும் மேலாகப் பார்த்து வருகிறோம். முந்தைய வருடப் பதிவுகளில் ஏதோ ஒன்றில் குறிப்பிட்ட நினைவு. இப்போது அதிகம்! பெண் ரயில் ஓட்டுநர்களும் சென்னை-திருத்தணி, சென்னை-தாம்பரம் வழிப்பாதைகளில் உண்டு. உங்கள் பயண விபரங்கள் சுவாரசியம். நல்லவேளையாக அந்தப் புலம்பல் நபரிடம் பணத்தைக் கொடுத்து ஏமாறாமல் இருந்தீர்களே! இம்மாதிரி சமயங்களில் நாங்களும் வேறிடம் மாறி விடுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புலம்பல் மனிதரிடம் ஏமாறவில்லை. இப்படி பல மனிதர்களை பார்த்தாயிற்று.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  4. ​உங்களை அன்று சந்திக்க முடியாமல் போனது வருத்தம். அடுத்த முறை பார்க்கலாம். குட்மார்னிங் வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாலை வணக்கம்.

      பரவாயில்லை ஸ்ரீராம். அடுத்த முறை பார்க்கலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. புலம்பும் மனிதர்களைச் சந்தித்திருக்கிறீர்களே. எங்கு சாப்பிட்டீர்கள்?

    ஶ்ரீரங்கத்தில்்ஆட்டோ, 50,100 என்று இதன் மடங்கில்தான் வாங்குகிறார்கள். இந்த ஊர்ல இப்படித்தான் சார் என்றும் சொன்னார்கள். மாறுதலுக்கு திருச்சியில் 30,40 என்றெல்லாம் சார்ஜ் செய்தார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாப்பாடு - ஹோட்டலில் தான்! :) ஹாட் சிப்ஸ் மற்றும் அடையார் ஆனந்த பவன்!

      ஸ்ரீரங்கம் ஆட்டோ - கொஞ்சம் அடாவடி தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  6. இது மாதிரி அறியாத நபர்களிடம் பிளேடு போடும் ஆசாமிகள் ஆபத்தானவர்கள்! என் அனுபவத்தில் அடிமடியில் கைவைத்து விடுவார்கள்.. "ஸார்.. ஒரு ஐநூறு ரூபாய் கொடுங்களேன்..." உங்கள் அந்தப் பக்கத்து இருக்காய் ஆசாமி அப்படி ஏமாந்திருப்பாரோ என்னவோ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய பேர் இப்படி உண்டு. தில்லி வந்த புதிது - தமிழகத்திற்கு இரயிலில் வந்தேன். பார்க் ஸ்டேஷனில் மின்சார இரயிலுக்கு சீட்டு வாங்க காத்திருந்தபோது - டிப் டாப் ஆசாமி - ஆங்கிலத்தில் பேசினார் - அதே கதை - பணத்தினை இழந்தேன் - 100 ரூபாய் கொடுத்தால் ஊருக்குச் செல்வேன் என. என்னிடம் இல்லை என்று சொல்லி நகர்ந்தேன். இந்த ஆசாமியை அடுத்து வரும் ஒவ்வொரு முறையும் பார்த்திருக்கிறேன்! :) With the same story of course!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. ​பெண் டிக்கெட் பரிசோதகர்.. அடடே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  8. வித விதமான மனிதர்கள்....நீங்கள் சென்னை வழி சென்ற சமயம் நான் பேக்கிங்கில் இருந்ததால் என்னால் முடியாத நிலையாக இருக்கே என்று ஸ்ரீராமிடம் சொன்னேன்...ஜி...

    அவராலும் உங்களைச் சந்திக்க இயலவில்லை என்று தெரிகிறது....

    மனிதர்கள் பலவிதம். ஒரு நாள் முழுவதையும் சமாளித்துவிட்டீர்கள்...!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் வீடு மாற்றும் படலத்தில் இருப்பீர்கள் என்பதால் தான் உங்களை அழைக்கவில்லை.

      எங்கள் சந்திப்பு நடக்க இன்னும் நேரம் வரவில்லை! :) பார்க்கலாம் வாய்ப்பு கிடைக்கும்போது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  9. பயண அனுபவம்தான் எவ்வளவு!
    புலம்பல் நபர் ஏமாற்றி பண்ம பெற விரும்புகிறார் என்று நினைக்கிறேன்.
    இங்கும் ஒருவர் இப்படி பயணத்தில் பணத்தை தொலைத்து விட்டதாய் ஊருக்கு போக பண்ம வேண்டும் என்று கதைகள் சொல்லிக் கொண்டு. தினம் நடைபயிற்சி செய்பவர்களிடம் யாசித்து கொண்டு இருக்கிறார், டிப்டாபாக உடை அணிந்து கொண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டிப் டாப் ஆசாமிகள் இப்படி நிறைய பேர் இருக்கிறார்கள். ஏதாவது வழியில் பணம் சம்பாதிக்க நினைக்கும் ஆட்கள் எல்லா ஊர்களிலும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  10. புலம்பல் ஆசாமிகளிடம் உண்மைத்தன்மை இருக்காது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  11. சிறப்பான விவரிப்பு எத்தனை விதமான மனிதர்கள்! ஒவ்வொரு அனுபவமும் ஒருபாடம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொரு பயணமும், அனுபவங்களும் நமக்கு பாடம் கற்றுத் தருகின்றன.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

      நீக்கு
  12. பொதுஇடத்தில் புலம்புவது காரியங்கள் சாதிக்கத்தான் இப்படி மனிதர்கள் நிறைய உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  13. தெரியாதவரைவிட தெரிந்தவரே அதிகம் அட்வாண்டேஜ் எடுத்துக் கொள்கிறார்கள் நாம்பேரம் பேச முடிவதில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  14. எல்லாவற்றையும் கடந்து தான்
    ரயில் பயணம் இனிக்கிறது - எப்போதும் போல்!...

    ஆனால்
    முன்பதிவு செய்த பெட்டிக்குள் - ஏறிய பின்
    அங்கே மாறி உட்காருங்கள்... - என்று
    அட்டூழியம் செய்யும் ஆட்களை மட்டும் பிடிப்பதேயில்லை!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாவற்றையும் கடந்து இரயில் பயணம் இனிக்கிறது... உண்மை.

      ஒவ்வொரு முறை தனியே பயணிக்கும்போது இப்படி இடம் மாறி உட்காரச் சொல்பவர்களைக் காண முடிகிறது! எனக்கும் இப்படியான அனுபவங்கள் நிறையவே. பிடிக்கவில்லை என்றாலும் மாற வேண்டியிருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  15. ரூ.39க்கு, ஓட்டுநர் பெற்றது ரூ.100 வேதனைதான். உங்களுடைய ஒவ்வொரு அனுபவமும் ஒரு பாடம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  16. பல அனுபவங்கள் வெங்கட்ஜி உங்களுக்கு. அடிக்கடி பயணம் செய்வதால் அதுவும் தனியாக என்பதால். இப்படிப் பேசி ஏமாற்றும் மனிதர்கள் இருக்கிறார்கள்.

    பெண் டிக்கெட் பரிசோதகர்கள் வந்துவிட்டது மகிழ்வான விஷயம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....