திங்கள், 5 நவம்பர், 2018

காஃபி வித் கிட்டு – சாக்லேட் கேக் - இப்படி நடந்தால்… - மன அழுக்கினை விலக்குவோம் – சுஜாதாவின் மாயா


காஃபி வித் கிட்டு – பகுதி – 11

சாப்பிட வாங்க – சாக்லேட் கேக்:
சமீபத்தில் தமிழகம் வந்தபோது விஸ்தாரா இயக்கும் விமானத்தில் தான் வந்தேன். மாலை 08.00 மணிக்கு விமானம் – பொதுவாகவே தில்லி – சென்னை விமானங்களில், ஏர் இந்தியா, விஸ்தாரா மற்றும் ஜெட் ஏர்வேஸ் விமானங்களில் உணவு வழங்குவார்கள் – மற்றவற்றில் காசு கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். பெரும்பாலும் இந்த உணவு எனக்குப் பிடிப்பதில்லை. இந்த முறை விஸ்தாராவில் கொடுத்த உணவு நன்றாகவே இருந்தது. டெசர்ட் என்ற வகையில் கொடுத்தது தான் சாக்லேட் கேக். ரொம்பவே நன்றாக இருந்தது. சிறிய கப்பில் கொடுத்தார்கள். சாப்பிட்ட பிறகு, விமானப் பணிப்பெண்ணிடம் “வெட்கத்தினை விட்டு” இன்னும் ஒன்று தர முடியுமா எனக் கேட்க நினைத்தேன்! பின் வரிசை பிரயாணி ஒருவரின் குழந்தையைக் கொஞ்சிய விமானப் பணிப்பெண், குழந்தைக்கு ஒரு கேக் அவராகவே தந்தார் – குழந்தையாகவே இருந்திருந்தால் எனக்கும் கிடைத்திருக்குமே என்று தோன்றியது – அப்போதைக்கு மட்டுமாவது, கேக் கிடைப்பதற்காகவாது, நம்மை குழந்தையாக மாற்றிவிடக்கூடாதா இந்தக் கடவுள் என நினைத்தேன்!! சில விஷயங்கள் நமக்குப் பிடித்ததாய் இருக்கும் போது இப்படித்தான் ஏங்குகிறது இந்த பாழ்மனம்…..

பேசியே கொன்ற பயணிகள்:

விஸ்தாரா – சென்னை நோக்கிய பயணத்தில், பேசியே கொன்ற பயணிகள் இருவர் பற்றி பார்க்கலாம். இருவரும் ஏதோ மருந்துகள் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள். தனித்தனியாக இருந்த இருக்கைகள் – எனக்குப் பின்பக்கத்தில் இருந்தவர், அவர் அருகே இருந்தவரை நண்பரின் இருக்கைக்கு அனுப்பி வைத்த பிறகு இருவரும் சேர்ந்து அமர்ந்து கொண்டதில் ஆரம்பித்தது தலைவலி. தலைநகரில் விமானத்தில் அமர்ந்ததிலிருந்து ஆரம்பித்தது அவர்கள் உரையாடல். சென்னையில் விமானம் தரையிறங்கும் வரை நிற்கவில்லை அவர்கள் பேச்சு. இரவு முழுவதும் திருச்சி நோக்கிய பயணம் இருக்கிறது – தூங்குவது முடியாத விஷயம் என விமானத்தில் தூங்க நினைத்த எனக்கு பெருந்தொல்லையாக இருந்தது அவர்கள் பேச்சு. நல்ல விஷயமாக இருந்தாலும் ஏதோ கேட்கலாம் – பெரும்பாலும் அடுத்தவர்களை புண்படுத்தும் விஷயம் தான் பேசினார்கள். பொது இடங்களில் இப்படி பேசி அடுத்தவர்களை துன்புறுத்துவது சரியல்ல என்று எப்போது புரிந்து கொள்வார்களோ…

பாடாவதி உணவகமும் கையூட்டும்:

தில்லியிலிருந்து விமானம் புறப்பட்டதே தாமதம் – திருச்சி செல்ல ஏற்கனவே இரவு தாம்பரத்திலிருந்து மலைக்கோட்டை பிடிக்கத் திட்டம் – முன்பதிவும் செய்திருந்தேன். ஆனால் சென்னையில் தரையிறங்கும்போதே இரவு 11.20. வெளியே வந்து திரிசூலம் இரயில் நிலையம் அருகே வரும்போதே தடதடவெனெக் கடந்தது மலைக்கோட்டை இரயில். முன்பதிவு செய்த டிக்கெட் பணம் கோவிந்தா! சரி எப்படியும் தாம்பரம் வரை தான் மின்சார இரயில்! அங்கிருந்து பேருந்தில் பயணம் என நமக்கு விதித்திருக்கிறது என்றால் என்ன செய்ய முடியும். இரவு நேரம் சென்னை தாம்பரத்தில் இருபது, இருபத்தி ஐந்து தனியார் வாகனங்கள் நின்று கொண்டிருக்கின்றன – கூவிக்கூவி அழைக்கிறார்கள் – திருச்சி, மதுரை, திருவண்ணாமலை, தஞ்சாவூர் என அழைத்து நம்மைக் கைப்பிடித்து இழுக்காத குறை தான்! கூவிக் கொண்டே இருக்கிறார்களே தவிர பேருந்தினை எடுப்பதாகத் தெரியவில்லை.

அரசுப் பேருந்து கிடைக்கிறதா என தனியார் பேருந்துகளைக் கடந்து நடந்தேன். திருச்சி என்ற பதாகையுடன் இருந்த, அரசுப் பேருந்தில் கேட்க, பெரம்பலூர் வரை தான் என்றார் நடத்துனர். இன்னும் நடக்க, ஒரு அரசு குளிரூட்டப்பட்ட பேருந்து கிடைத்தது. திருச்சி வரை கட்டணம் 425/-. உடைமைகளுடன் நடந்ததில் தாகம் எடுத்தது. நல்ல வேளையாக பேருந்திலேயே அம்மா குடிநீர் விற்கிறார்கள். பத்து ரூபாய் கொடுத்து தண்ணீர் வாங்கிக் குடித்ததில் கொஞ்சம் நிம்மதி. பேருந்து சீரான வேகத்தில் இயக்கினார்கள் – ஓட்டுனரும் நடத்துனரும் மாற்றி மாற்றி! வழியெங்கும் நல்ல மழை. மழையாக இருந்தாலும் பேருந்தினை சீராக இயக்கினார்கள் இருவரும். விழுப்புரம் அருகே இருக்கும் பாடாவதி உணவகத்தில் வண்டி நின்றது.

தொடர்ந்து கொண்டிருந்த தூரலிலேயே கீழே இறங்கி இயற்கை உபாதைகளை முடித்துக் கொண்டு, கடையில் ஒரு காப்பி – இருபது ரூபாய்! இரண்டு புதிய பத்து ரூபாய் நாணயங்களைக் கொடுக்க, அந்த இரவு வேளையிலும் சிடுசிடுவென எரிந்து விழுந்தார் காப்பி போடுபவர் – “எல்லாரும் இப்படி காயின் கொடுத்தா என்ன செய்யறது?”  ”ஏன் காயின் வேண்டாமா?” எனக்கேட்க, ”செல்லாதுன்னு யாரும் வாங்க மாட்டேங்கறாங்க, நாங்க வாங்கி என்ன செய்ய?” என்று மீண்டும் சிடுசிடுத்தார். சரி சரி புலம்பலை நிறுத்து, நான் பத்து ரூபாய் நோட்டாகத் தருகிறேன் என திரும்பி வாங்கிக் கொண்டேன். நம் ஊரில் ஏனோ இந்தப் பிரச்சனை தீரவே இல்லை. பத்து ரூபாய் காயின்கள் செல்லாது என்று நினைப்பது இன்னும் முடியவில்லை! காப்பி குடித்துக் கொண்டிருந்தபோது தான் கவனித்தேன் ஒரு விஷயத்தினை….

உள்ளே தனியிடத்தில் அமர்ந்து உணவு சாப்பிட்ட பிறகு வரும் நடத்துனர்/ஓட்டுனர் வெளியே இருக்கும் கடையில் ஒரு சீட்டு தருகிறார் – யாரும் பார்க்காதபடி கொடுத்ததாக நினைப்பு! அதை வாங்கிப் பார்க்கும் கடைக்காரர் – நூறு ரூபாயை மடித்து நடத்துனர்/ஓட்டுனரில் கைகளில் அழுத்துகிறார் [யாரும் பார்க்கவில்லையா எனப் பார்த்தபடியே]. இப்படி பாடாவதி உணவகத்தில் நிறுத்திய பேருந்துகளில் இருக்கும் பயணிகள் ஒரு காப்பி குடித்தாலே இருபது ரூபாய், பராமரிக்கப்படாத கழிவறையில் ஐந்து ரூபாய் என நிச்சயம் ஒவ்வொரு பயணியிடமிருந்து இருபத்தி ஐந்து ரூபாய் கிடைத்து விடும். சாப்பாடு, சிகரெட், பிஸ்கெட்ஸ், தீனி, என நல்ல வியாபாரம் உணவக உரிமையாளருக்கு! அதனால் தான் இந்த 100 ரூபாய் கையூட்டு போலும்!

இந்த வாரத்தின் ரசித்த விளம்பரம்:

Gகdடி டிடர்ஜெண்ட் சோப் உடைய சமீபத்திய விளம்பரம் – மிகவும் நன்றாக இருக்கிறது. மனதில் உள்ள அழுக்கை நீக்குவோம் எனச் சொல்லும் விளம்பரம் – ஹிந்தி புரியாதவர்கள் மன்னிப்பார்களாக…. மொழி தெரியாதவர்களும் படம் பார்த்து தெரிந்து/புரிந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.
இந்த வாரத்தின் நிழற்படம்:

எங்கள் பகுதி விழா ஒன்றில்…. ”இந்த ஃபோட்டோ எடுக்கற மாமா பேரு, தொண்டைக்குழில மாட்டிட்டு இருக்கு…. வெளில வர மாட்டேங்குதே – அவர்கிட்டயே கேட்டுடலாமா?”

இந்த வாரத்தின் குறும்படம்:

இப்படி மட்டும் நடந்தால் எப்படி இருக்கும்? யோசித்துப் பாருங்களேன். ஒன்றரை நிமிட குறும்படத்தில் எத்தனை பெரிய விஷயம் சொல்லி விட்டார் இந்த குறும்பட இயக்குனர்! இந்தக் காணொளி உங்களில் சிலர் பார்த்திருக்கக் கூடும் – இருந்தாலும்…. இன்னும் ஒரு முறை பார்ப்பதில் தவறில்லை!

இதே நாளில் – திரும்பிப் பார்க்கிறேன்:இதே நாளில் 2012-ஆம் ஆண்டு எழுதிய பகிர்வு - மாயா – சுஜாதா.

ஐம்பது பக்கங்களுக்கு மேல் இருக்கும் இந்த கதையில் வாத்தியாரின் முத்திரைகள் ஏராளம். சுவாரசியமான இந்த சிறுகதைத் தொகுப்பில் இன்னும் நான்கு கதைகள் இடம் பெற்றுள்ளன. அவை அஸ்திவாரம், குணம், மந்திரவாதி மற்றும் பொய்கள்.  உங்களுக்கு மாயா கதையின் முடிவு என்னவென்று தெரிந்து கொள்ள எத்தனை ஆவலோ அதே அளவு ஆவல் எனக்கும் ‘பொய்கள்’ கதையின் முடிவு என்ன என்று தெரிந்து கொள்ள – ஆனால் பைண்ட் செய்து வைக்கப்பட்ட அந்த சிறுகதைத் தொகுப்பின் கடைசி பக்கங்களை யாரோ ஸ்வாஹா செய்து விட்டார்கள்!

முழுதும் படிக்க… இங்கே க்ளிக்கலாம்!

என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

42 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி

  வரேன் கேக் எடுத்துக் கொள்ள இப்பத்தான் இங்க காஃபி ஸோ காஃபி வித் கிட்டு! ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் கீதா ஜி!

   இங்கே இன்று காலை காஃபி லேட்!

   எழுந்ததே லேட் என்பதால்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 2. குழந்தையாக ஆகவேண்டாம். குழந்தை மனம் இருந்தால் போதும். வெட்கம் இன்றி கேக் இன்னொன்று கேட்டிருக்கலாம்! ஹா.. ஹா.. ஹா..

  குட்மார்னிங் வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யெஸ்ஸு யெஸ்ஸு.... அதே ஸ்ரீராம்..

   நீங்க கூட நங்கநல்லூர் ஆஞ்சு கோயிலில் புளியோதரை கேட்டீங்களே ஹா ஹா ஹா ஹா

   நானும் அப்படிக் கேட்பதுண்டு அதான்...ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  2. காலை வணக்கம் ஸ்ரீராம்.

   கேட்க முடியாமல் வெட்கம் தடுத்ததே... அதான் பிரச்சனை. குழந்தையாக இருந்தால் அவர்களாகவே கொடுத்திருப்பார்கள்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  3. ஸ்ரீராம் புளியோதரை கேட்ட மாதிரி - ஹாஹா.... நானும் கேட்டிருக்கலாம் - ஆனால் ஏனோ வெட்கம், தயக்கம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 3. பயணங்களில் இப்படியான சில வளவளாக்கள் ரொம்பத்தொல்லை. பகல் பயணத்திலேயே தொல்லை என்றால் இரவுப்பயணத்தில் கேட்கவும் வேண்டுமோ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிறைய முறை அவர்களைத் திரும்பிப் பார்த்து சூசகமாக எனது எரிச்சலை காண்பித்தேன் - ஆனாலும் அவர்களது தொல்லை தீரவில்லை. தூங்க விடாமல் ஒரே பேச்சு. கஷ்டம் தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 4. குறும்படமும், விளம்பரமும் அப்புறம்தான் பார்க்கவேண்டும் வெங்கட். இரவு உணவகங்களில் ஓட்டுன நடத்துனறகள் பணம் வாங்குவது நிற்கவே நிற்காது! நூறு ரூபாய் அல்ல, மேலேயே இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முடிந்த போது காணொளிகள் பாருங்கள் ஸ்ரீராம். நன்றாகவே இருக்கும்.

   இரவு உணவகங்களில் பணம் - நிச்சயம் நிற்காது! மனசாட்சியே இல்லாமல் படுத்துகிறார்கள் அனைவருமே....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 5. அப்போதைய மாயா பதிவில் முதல் பின்னூட்டம் நான்தான்! பொய்கள்? என்ன கதை என்று என் கலெக்ஷனில் தேடமுடிகிறதா என்று பார்க்கிறேன்!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பொய்கள் உங்கள் கலெக்‌ஷனில் இருந்தால் எனக்கும் அனுப்பி வையுங்கள் [சாஃப்ட் காபியாக இருந்தால்!] இணையத்தில் தேடிப் பார்க்க வேண்டும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 6. கேக் ரொம்பவே அழகா இருக்கு...

  இதே கேக் வீட்டில் செய்திருக்கேன்...நல்ல டேஸ்டியா இருக்கும்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கேக் எல்லாம் வீட்டில் செய்ததில்லை. எல்லாம் கடைச் சரக்கு தான் இங்கே....

   சில அருமையான கேக்/பேஸ்ட்ரி கடைகள் வீட்டின் அருகிலேயே இருக்கிறது - பங்க்ளா ஸ்வீட்ஸ் கிளை....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 7. வெங்க்ட்ஜி சென்னையிலும் சில கடைகளில் வாங்குவதில்லை 10 ரூபாய் காயின்கள். பெரிய கடைகள் அக்க்வுன்ட் பெரிதாக வைத்திருப்பவர்கள் மட்டுமே வாங்கிக் கொள்கிறார்க்ள். அது போல பங்களூரிலும் இங்கு நாங்கள் இருக்கும் பகுதியில் 10 ரூபாய் காயின் வாங்குவ்தில்லை. ஆனால் மெஜஸ்டிக்கில் சில கடைகளில் அதாவது பெரிய கடைகளில் வாங்குகிறார்கள். கஸ்டமர்கள் 10 ரூ காயின் வாங்குவதில்லையால் மீதிச் சில்லறையாகக் கொடுத்தால் அதனால் நாங்களும் வாங்குவதில்லை என்று எங்கள் வீட்டருகில் இருக்கும் கடைஆள் சொன்னார். என்னவோ போங்க இந்தப் பிரச்சனை எப்ப தீரும்னு தெரியலை. என்னிடம் 200 ரூபா 10 ரூ காயின்களாக இருக்கு. பேங்க்கிலதான் மாற்றனும்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது ஏனோ நம் ஊரில் இந்த மாதிரி விஷயங்கள் எத்தனை சொன்னாலும் யாருக்கும் புரிவதில்லை. தலைநகரில் இந்தப் பிரச்சனை இல்லை. “சப் சலேகா” என்ற நிலை தான். இத்தனைக்கும் நான் கொடுத்த 10 ரூபாய் 2018 வெளியிட்ட புத்தம் புது நாணயம்.

   நம் ஊரில் செல்லாமல் போய்விடுமோ என்ற பயம் கொஞ்சம் அதிகம் தான்! இங்கே அந்தப் பிரச்சனை இல்லை.

   ஆஹா... உங்க கிட்ட 200 ரூபாய்க்கு 10 ரூபாய் இருக்கா! கவலை வேண்டாம் - என்னிடம் கொடுத்து விடுங்கள்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 8. குறுபடமும், விளம்பரம் இரண்டும் அருமை.
  தீபாவளிக்கு திருவரங்கம் இல்லையா?
  அனைத்தும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தீபாவளி - இந்த முறை எங்களுக்கு பண்டிகை இல்லைம்மா... தலைநகரில் தான் இருக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   நீக்கு
 9. ஒவ்வொரு முறை பயணிக்கும்போதும் புதுப்புது அனுபவங்கள் இந்த 10 ரூபாய் சிக்கல் காஞசிபுரம் மாவட்டத்திலும் இருக்கிற்து. இதற்கு யாரிடம் முறையிட வேண்டும் எனத் தெரிய வில்லை. கலெக்டரிடம் புகார் அனுப்பலாம் என நினைக்கிறேன். பணத்டை அவமதிப்பதற்கு எதிராக ஏதாவது சட்டம் இருக்கும் என நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பத்து ரூபாய் சிக்கல் நம் ஊரில் கொஞ்சம் அதிகம் தான். வங்கிகளில் கொடுக்கலாம். வங்கிகள் வாங்கிக் கொள்ளவில்லை எனில் RBI-ல் புகார் தெரிவிக்கலாம்.

   மக்கள் வாங்கிக் கொள்ள மறுத்தால் ஒன்றும் செய்வதிற்கில்லை. RBI விளம்பரங்கள் தருகின்றன - நாளிதழ்களிலும் செய்திகள் வெளியிடுகின்றன. ஆனாலும் மக்கள் வாங்கிக் கொள்ள மறுக்கிறார்கள் பல இடங்களில்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   நீக்கு
 10. ஒவ்வொரு பயணமும் அனுபவங்களை வாரித்தான் வழங்குகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 11. சில சமயம் மறக்க முடியாத (சிரம) பயண அனுபவம் போல் ஆகி விடும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 12. விளம்பரம் ரொம்ப நல்லாருக்கு. குறும்படம் ஏற்கனவே பார்த்திருக்கிறேன் என்றாலும் மீண்டும் ரசித்தேன் நல்ல கருத்தை ரசிக்கலாமே.

  ஹைவே மோட்டல்களில் நிறையவே அராஜகங்கள் நடக்கின்றன...நானும் இந்த லஞ்சம் நேரடியாகப் பார்த்திருக்கேன். அதனாலதான் ஒவ்வொரு பேருந்தும் ஒரு குறிப்பிட்ட மோட்டலில் மட்டுமே நிறுத்துவார்கள்.

  தலைவர் சுஜாதவின் கதைகள் பற்றி சொல்லணுமா..பயங்கர ஸ்வாரஸ்யமா இருக்கே...மாயா வாசித்ததில்லை. பார்க்கிறேன் ஆனலினில் கிடைக்கிறதா என்று..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நூல் இணையத்தில் தேடினேன். கிடைக்கவில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 13. உங்களின் பழைய பதிவைப் பார்த்துட்டேன் அங்கதான் கதையின் விமர்சனம் பார்த்தேன்..

  சிறுமி ரொம்ப அழகு!

  சாக்கலேட் பன்ட்t (bundt) கேக்கைப் பார்த்ததும் செய்ய வேண்டும் என்ற ஆவல் வந்துவிட்டது ஆனால் சென்னை என்றால் செலவழியும் இங்கு செலவாகாதே....

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செலவழிக்க முடியாத பட்சத்தில் தலைநகர் அனுப்பி வைக்கலாம்! :)))))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 14. அனைவருக்கும் அன்பின் தீபாவளி நல்வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஐயா.

   நீக்கு
 15. >>> கடைக்காரர் – நூறு ரூபாயை மடித்து நடத்துனர்/ஓட்டுனரில் கைகளில் அழுத்துகிறார் [யாரும் பார்க்கவில்லையா எனப் பார்த்தபடியே]...<<<

  ஓசியில் நல்ல சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு
  சாப்பாடு போட்டவனிடமே மாமூல் வாங்கிக் கொண்டு வரும்
  இந்த மர்ம (!) நாடகத்தை இப்போதுதான் நீங்கள் பார்த்திருக்கின்றீர்கள்!..

  ரொம்பவும் கொழந்தைப் புள்ளையாவே இருக்கீங்களே!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓசி சாப்பாடு உண்டு எனத் தெரியும். கையூட்டும் தருவதை இதுவரை பார்த்ததில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஐயா.

   நீக்கு
 16. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

   நீக்கு
 17. குறும்படம் செம அன்றைய மாயாபதிவும் இன்றைய பதிவும் ஒரே ரகம் அபுரி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // இன்றைய பதிவும் ஒரே ரகம் "அபுரி" //

   ஹா... ஹா... ஹா...

   நீக்கு
  2. ஹாஹா..... புரியாத பகிர்வுகள் :) என் லெவல் அவ்வளவு தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
  3. அபுரி இப்போ எல்லாரும் பயன்படுத்தும் வார்த்தை ஆகிவிட்டது.... :)

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 18. கேக் நாவில் நீறூர வைக்கிறது. பஸ் பயணங்களில் இந்த பாடாவதி ஹோட்டல் பிரச்சினை என்றுதான் தீருமோ? நாங்களும் இதே பிரச்சனையை எங்களின் சமீபத்திய மும்பை-ஷிர்டி, ஷிர்டி-மும்பை பயணத்தில் அனுபவித்தேன். காணொளிகளை இனிமேல்தான் பார்க்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பல சமயங்களில் இந்த பிரச்சனை தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 19. பேருந்து பயணத்தில் உணவுக்காக நிறுத்துமிடங்களில் சாரதிக்கும் ஓட்டுனருக்கும் உணவு இலவசம் என்பதும் கொசுறாய் சேர்த்துக்கலாம். எங்கள் ஹோட்டலிலும் இதே நடைமுறை தான். சாரதி, ரைவர், டீம் லீடருகுக்கு என நான்கைந்து சாப்பாடு இலவசமாக போகும், எல்லா ஹோட்டல்களும் இப்படி கொடுக்காது அல்லவா? அதை விட வெஜ் மெனு எனினும் இந்த குறிப்பிட்டவர்கள் நான் வெஜ் கேட்டாலும் கொடுக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....