வெள்ளி, 31 மே, 2013

ஃப்ரூட் சாலட் – 48 – நேஹா – இதயம் – படுபாவி!இந்த வார செய்தி:

நேஹா மெஹந்திரத்தா – 18 வயது பெண் – சமீபத்தில் வெளியான CBSE Class XII தேர்வில் 50.26 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். 95 சதவீதத்திற்கும் மேல் பலர் மதிப்பெண் பெறும் இந்நாட்களில் இந்த தேர்ச்சி என்ன பெரிய விஷயம் என நினைக்கிறீர்களா! மேலே படியுங்கள்.

நேஹாவிற்கு ஒரு வினோதமான சுவாசம் சம்பந்தமான பிரச்சனை – ஆங்கிலத்தில் இதை Old Pulmonary Koch’s disease with bronchitis, bronchial hyper-reactivity with type II respiratory failure எனச் சொல்கிறார்கள். இந்தப் பிரச்சனை இருப்பவர்களுக்கு இயற்கையாக பிராண வாயு கிடைப்பதில்லை – செயற்கையாக அவர்களுக்கு பிராண வாயுவை ஒரு உபகரணம் மூலம் கிடைக்கச் செய்தால் தான் அவர்களால் சீராக சுவாசிக்க முடியுமாம்.

செயற்கையாக பிராண வாயு இருந்தும் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேல் தேர்வு எழுத முடியாது.  உடலில் ஏற்படும் பலவீனம் அவர்களை ரொம்பவே படுத்தும் எனவும், அதன் காரணமாக தேர்வில் ரொம்பவும் சிரமப்பட்டு 60 சதவீத கேள்விகளையே அவரால் எழுத முடிந்தது எனச் சொல்கிறார் நேஹா. படிப்பதில் ஆர்வமும் மனோ பலமும் கொண்ட காரணத்தினாலேயே இவர் விடா முயற்சியுடன் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்கிறார்.

இவரது தேர்ச்சிக்கு இவரை மட்டுமே பாராட்டுவதும் சரியல்ல – இவரது தந்தை ஒரு ஆட்டோ ஓட்டுனர் – நான்கு பேர் கொண்ட குடும்பத்தின் தலைவர். தனது மகளின் நிலை கண்டு தளர்ந்து விடாது தொடர்ந்து உழைத்து தனது மகளுக்குத் தேவையான உபகரணத்தினை வாங்கி தனது வீட்டிலே வைத்திருக்கிறார். உபகரணத்தின் விலை – 38000/-. ஒவ்வொரு முறையும் பிராணவாயு சிலிண்டர் நிரப்ப இவருக்கு ஆகும் செலவு 180/- ரூபாய். ஆகவே தொடர்ந்து செலவு செய்ய வேண்டியிருக்கிறது.

நேஹா பத்தாம் வகுப்பு படிக்கும்போது ஆரம்பித்த பிரச்சனை – பல்வேறு மருத்துவமனைகள் – பல்வேறு மருத்துவர்கள் என தொடரும் சிகிச்சை – இப்போது வாழ்நாள் முழுதும் இப்படி செயற்கையாக பிராணவாயு கிடைத்தால் தான் உயிர் வாழ முடியும் எனும் நிலை – இருந்தாலும் மனோபலத்துடன் மேலும் படிக்க ஆசைப்படுகிறார் இவர். மேலும் படித்து ஒரு ஆசிரியராகவோ அல்லது காவல்துறையிலோ பணி புரியவேண்டுமென்ற உத்வேகம் இருக்கிறது இவரிடம்.

இவரது மனோபலத்தினையும் இவரது தந்தையின் விடாமுயற்சியையும் நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும்......
    
இந்த வார முகப்புத்தக இற்றை:

மூன்று விஷயங்கள் நமக்கு வேண்டும் – உணர்வதற்கான இதயம், சிந்தனைத் திறனுள்ள மூளை மற்றும் வேலை செய்யக்கூடிய கைகள் – ஸ்வாமி விவேகானந்தர்.

இந்த வார குறுஞ்செய்தி

மன அழுத்தத்தினையும், கவலைகளையும் சேர்த்து வைக்கும் கூடையல்ல உங்கள் இதயம்!  மகிழ்ச்சியை சேமித்து வைக்கும் தங்க பெட்டகம் உங்கள் இதயம்.... உங்கள் இதயத்தினை என்றும் சந்தோஷமாகவே வைத்திருங்கள்....

ரசித்த T-SHIRT வாசகம்

திருவரங்கத்தில் ஒரு கடையில் இருக்கும்போது சமீபத்தில் கல்யாணம் ஆன தம்பதிகள் – பையனுக்கு இருபத்தியோரு வயதிருக்கலாம் – அவர் அணிந்திருந்த T-SHIRT-ல் இருந்த வாசகம் – “I DON’T NEED GOOGLE, MY WIFE KNOWS EVERYTHING அதை உண்மையாக்கவோ என்னமோ எல்லாவற்றிற்கும் மனைவியைக் கேட்டுக் கொண்டிருந்தார்!

ராஜா காது கழுதை காது:

திருவரங்கத்தில் “ரங்கா ரங்காகோபுரத்தினை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு மூதாட்டி வந்து யாசகம் கேட்டார் – எப்போதும் இருக்கும் மக்கள் கடலில் நின்று தத்தளித்தபடியே புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்ததால் அவரைக் கவனிக்காது இருந்தேன். இரண்டு முறை யாசகம் கேட்டபிறகு ஒன்றும் தராததால் புகைப்படம் எடுப்பதிலேயே முனைப்போடு இருந்த என்னைப் பார்த்து அவர் சொல்லிச் சென்றது – “பாவி, பாவி, படுபாவி!

ரசித்த காணொளி:

இந்தக் காணொளியைப் பாருங்களேன் – நீங்களும் நிச்சயம் உங்கள் குழந்தைப் பருவத்திற்குச் செல்வீர்கள்!என்ன நண்பர்களே இந்த ஃப்ரூட் சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

டிஸ்கி: ஏனோ என்னுடைய சென்ற இரு பதிவுகளுமே என்னைத் தொடர்பவர்களின் டாஷ்போர்டில் அப்டேட் ஆகவில்லை! இருபதிவுகளின் சுட்டி கீழே.

வியாழன், 30 மே, 2013

தில்லியில் திருப்பதி

[தலைநகரிலிருந்து பகுதி – 21]
கோவில் ஒரு தோற்றம்திருமலா திருப்பதி தேவஸ்தானம் தலைநகர் தில்லியில், கடந்த பல வருடங்களாக கல்யாண உற்சவம் நடத்துவது வழக்கம். இந்த வருடம் கூட வரும் ஜுன் மாதம் ஒன்றாம் தேதி தில்லியில் உள்ள வேங்கடேஸ்வரா கல்லூரியில் மாலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே திருப்பதி ஏழுமலையானின் உற்சவ மூர்த்திகளை தரிசனம் செய்ய முடிந்த தில்லிவாசிகளின் சௌகரியத்திற்காக தில்லியிலேயே ஏழுமலையானுக்கு ஒரு கோவில் கட்ட சில வருடங்களுக்கு முன் திருமலா திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது.திரு நிர்மல் சேதியா எனும் பக்தர் இக்கோவிலுக்காக இடத்தினையும் பொருளுதவியையும் செய்ய, செய்த முடிவினை செயல்படுத்தி 1.17 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு இடத்தில் கோவிலும் மற்ற வசதிகளும் கிட்டத்தட்ட 11.5 கோடி ரூபாய் செலவில் இப்போது தயாராகி இருக்கிறது.  கோவில் கட்டப்பட்டிருக்கும் இடம் ஜே-ப்ளாக், உத்யான் மார்க் [மந்திர் மார்க் அருகே], கோல் மார்க்கெட், புது தில்லி.
சயனாதி வாசத்தில் ஸ்ரீ வேங்கடேச பெருமாள்

தாயார்
ஆண்டாள்

கருடாழ்வார்
 
வேங்கடேச பெருமாள் [பாலாஜி], தாயார் மற்றும் ஆண்டாளுக்கு தனி சன்னதிகளும், பெருமாளுக்கு நேர் எதிரே பெரிய திருவடி என அழைக்கப்படும் அவரது வாகனமான கருடாழ்வாருக்கு தனி சன்னதியும் அமைத்து மிகச் சிறப்பாக கோவில் கட்டி, நேற்றைய தினம் [29.05.2013] மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது. 25-ஆம் தேதி முதல் மஹாகும்பாபிஷேகத்திற்கு முன்பான நிகழ்ச்சிகள் ஆரம்பித்து நேற்றைய தினம் மிகச் சிறப்பாக நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது.ராஜகோபுரம்


திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து வந்திருந்த ஆகம சாஸ்திர நிபுணர்கள் பலரும் சேர்ந்து கும்பாபிஷேக நிகழ்வுகளை நடத்தி வைத்தார்கள். கோவில் மட்டுமல்லாது தியானமந்திரம்எனப் பெயரிடப்பட்ட ஒரு மிகப் பெரிய தியானமண்டபமும் இங்கே கட்டப்பட்டிருக்கிறது. திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் தகவல் மையம், ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விஷயங்களைச் சொல்லும் நூலகம், திருமலா திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட புத்தகங்கள் விற்பனை நிலையம், இளைஞர்களுக்கு பாரம்பரிய நடனம் மற்றும் சங்கீதம் கற்றுத்தரும் வசதிகள் என அனைத்து வசதிகளும் இந்த தியான மண்டபத்தின் முதல் மாடியில் அமைக்க இருக்கிறார்கள். இரண்டாவது மாடியில் தியானம் செய்ய வசதிகள் இருக்கும்.உற்சவ மூர்த்திகள்


வேங்கடேச பெருமாள் சன்னதியில் ஸ்வாமி சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கு முன்னர் ஜலாதி வாசம், தான்யாதி வாசம், [ச்]சாயாதி வாசம், க்ஷீராதி வாசம், சயனாதி வாசம் என அனைத்து நிகழ்ச்சிகளையும் யாஹங்களையும் ஆகம முறைப்படி நடத்தினார்கள்.கும்பத்திற்கு அபிஷேகம்


கும்பாபிஷேகம் அன்று திருமலா திருப்பதி தேவஸ்தான செயல் அலுவர் திரு எல்.வி. சுப்ரமணியம் மற்றும் திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திரு Kanumuri Bapi Raju அவர்களும் கலந்து கொண்டனர். ஆயிரம் பேருக்கு மேல் இந்தக் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு வேங்கடேச பெருமாளின் ஆசியைப் பெற்றனர். தில்லியில் வசிக்கும் பலருக்கு இந்தக் கோவில் பற்றிய விஷயம் இன்னும் தெரியாததாலோ என்னமோ கும்பாபிஷேகம் அன்று திரளான மக்கள் வரவில்லை. எனினும், வரும் நாட்களில் இக்கோவில் மக்கள் வருகை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.திருப்பதி என்றதுமே நம் எல்லோருக்கும் அங்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை ஒரு வித பயத்தையும், வரும் பக்தர்களின் அதீத எண்ணிக்கையின் காரணமாக ஒரு நிமிடம் கூட ஆண்டவனைக் கண்ணாரக் காண முடியவில்லையே எனும் ஏக்கத்தினையும் அளிக்கும். திருப்பதியில் பக்தர்கள் எழுப்பும் கோவிந்தா கோஷத்திற்கு இணையாக “ஜருகண்டிகோஷமும் கேட்கிறதோ என எனக்குத் தோன்றும். சிறு வயதில் பல முறை சென்றிருந்தாலும், கல்லூரி காலத்திற்குப் பிறகு இது வரை செல்ல முடியாததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்!  இப்போது தில்லியிலேயே திருப்பதி பாலாஜியை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது! அதுவும் எனது இல்லத்திலிருந்து பத்து நிமிட நடையில் ஆலயம் அமைந்திருப்பதால் தினமுமே அலுவலகத்திற்குச் செல்லும் வழியில் ஆண்டவனை தரிசிக்க செல்ல ஒரு வாய்ப்பு கிட்டியிருக்கிறது. ஒருவேளை இதற்காகவே தான் திருப்பதி செல்ல வாய்ப்பு எனக்கு அமையாமல் போய்விட்டதோ!தில்லி வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் லக்ஷ்மி நாராயண் மந்திர் எனப்படும் பிர்லா மந்திர் வருவது வழக்கம். இனி அவர்கள் இக்கோவிலின் வெகு அருகிலேயே இருக்கும் இந்த வேங்கடேச பெருமாள் கோவிலுக்கும் சென்று அவரது அருளுக்குப் பாத்திரர் ஆகப்போவது நிச்சயம்.மீண்டும் தலைநகர் பற்றிய வேறு ஒரு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை....நட்புடன்வெங்கட்.

புது தில்லி.

இதற்கு முந்தைய பதிவு - அபரஞ்சி பொன்னும் ரங்கராட்டினமும். இப்பதிவினைப் படிக்காதவர்கள் படிக்கலாமே!