எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, May 7, 2013

திருவரங்கம் சித்திரைத் தேர் – சில காட்சிகள்


இன்று [07.05.2013] திருவரங்கம் அரங்கநாதன் ஸ்வாமி திருக்கோவிலில் சித்திரைத் தேர் திருவிழா.  இச்சமயத்தில் நான் திருவரங்கத்தில் இருப்பதால், தேர் திருவிழாவினை நேரடியாகக் காண முடியாத வலையுலக நண்பர்களும் கண்டுகளிக்கவே சுடச்சுட இப்பகிர்வு.

கடந்த 29.04.2013 அன்று ஆரம்பித்த இந்தச் சித்திரைத் தேர் திருவிழாவிற்கு இன்னுமொரு பெயர் உண்டு. அது விருப்பன் திருநாள். உல்லூக்கான் படையெடுப்பின் போது திருவரங்கத்தினை விட்டுச் சென்ற நம்பெருமாளும், உபயநாச்சியார்களும் பாதுகாப்பிற்காகப் பல இடங்களுக்குச் சென்று திருமலைக்காடுகளில் மறைத்து வைக்கப்பட்டு விஜயநகர மன்னர்களின் உதவியால் 48 ஆண்டுகளுக்குப் பிறகு கி.பி. 1371-ஆம் ஆண்டு திருவரங்கம் வந்தடைந்தது வரலாறு.விஜயநகரப் பேரரசின் சங்கமசூல மன்னன் இரண்டாம் ஹரிஹரன். அவருடைய புதல்வரான விருப்பண்ண உடையார் பெயரில் கி.பி. 1383-ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட திருவிழா தான் இந்த சித்திரைத் தேர் திருவிழா. அவர் பெயராலேயே விருப்பன் திருநாள் என்றும் வழங்கப்பெறும் இந்தத் திருநாள், இவ்வருடம் இன்று தேருக்குப் பிறகு பதினோறாம் நாளான 09.05.2013 அன்று முடிவடையும்.

எட்டாம் திருநாளான நேற்று நம்பெருமாள் தங்கக் குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகள் நான்கிலும் உலா வந்து வையாளி கண்டருளி கண்ணாடி அறை சேர்ந்த வைபவமும் நடைபெற்றது.

இன்று காலையிலேயே ஆறு மணிக்கு முன்னரே தேர் வைபவம் தொடங்கிற்று. கையில் கேமராவுடன் சென்று வளைத்து வளைத்து பல காட்சிகளை படம் பிடித்து வந்தேன். திருவரங்கம் முழுவதுமே அலையலையாக மக்கள் வெள்ளம் திரண்டு வந்தபடியே இருந்தார்கள். இன்று திருச்சி நகரத்தில் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டதால் மக்களின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே இருந்தது. சுற்றுப்புறத்தில் இருக்கும் அனைத்து கிராமங்களிலிருந்தும் மக்கள் நேற்று மாலையிலிருந்தே வரத் தொடங்கி கிடைக்கும் இடத்தில் தங்கி தேரில் பவனி வரும் நம்பெருமாளைக் கண்ணாரக் கண்டு களிக்க தயாராக இருந்தனர்.

கோவில் யானையான ஆண்டாள் முன்னே வர, ஆண்டாளின் பின்னே தீயணைப்புத் துறையினரின் ஒரு வண்டியும், பெருந்திரளான மக்களை வழிப்படுத்த காவல் துறையினரும், வேத கோஷங்கள் முழங்குபவர்களும், கோலாட்டம் ஆடியபடி, அரங்கனின் பெருமைகளைப் பாடியபடியே வரும் பொதுமக்களும், அவர்களுக்குப் பின்னே வெள்ளைக் குதிரையும், அவர்களுக்குப் பின்னர் சித்திரைத் தேர் அசைந்து அசைந்து ஓடி வந்ததைக் காண முடிந்தது.அடிக்கும் சித்திரை வெயிலில் தேர் இழுப்பவர்களுக்கும், பொதுமக்களுக்கும் வேர்வைக் குளியல். அவர்களுக்கு சேவை செய்ய, நிறைய பேர் பெரிய பதாகைகளைக் கொண்டும், பனையோலை விசிறிகள் கொண்டும் விசிறிக்கொண்டு இருந்தார்கள். தேர் பிடித்து இழுக்கும் மக்களுக்கு தம்மால் ஆன தொண்டு செய்வதில் அவர்களுக்கும் மகிழ்ச்சி. வேர்வைக்குளியலில் இருக்கும் அவர்களுக்கும் தென்றலாய் காற்று வீசுவதில் மகிழ்ச்சி.


தேர் வடம் பிடித்து இழுக்கிறோமோ இல்லையோ, அந்த வடத்தினைப் பிடித்தாலே போதும் என பலர் அதற்கு முண்டியடித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு 98 வயது தாத்தாவும் வடம் பிடித்து விட்டதாக மனம் நிறைவோடு சொன்னார். வீட்டு வாசலில் அவர் நின்று கொண்டிருக்க தேரினைத் திருப்புமுன் அவர் வீட்டு வாயில் வரையில் தேர் வடம் பிடித்து எடுத்துக் கொண்டு வந்ததை அவரும் தொட்டு விட்டாரே!

வரும் வழியெல்லாம் நீர்மோர், பானகம், புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், சாம்பார் சாதம், தயிர்சாதம் என தேர் பார்க்க வந்த மக்களுக்கு பலர் விநியோகம் செய்ததைக் காண முடிந்தது. கூடவே, சாப்பிட்ட பின் இலைகளையும், பாக்கு மட்டை தட்டுகளையும், பிளாஸ்டிக் குப்பிகளையும், ஆங்காங்கே குப்பைக்கூடைகள் வைத்திருந்தாலும் தெருவில் வீசியபடி சென்றனர் மக்கள். சுத்தம் என்பது வீட்டு வரையில் தான் என்பது நம் இந்தியர்களுக்கு பால பாடமாயிற்றே……

ஹனுமார் வேஷம் கட்டிய பலரைப் பார்க்க முடிந்தது. ஹனுமார் வேஷம் போட்டு ராம நாமம் சொல்லியபடியே வீடுவீடாக கையை நீட்டிக் கொண்டிருந்தார்கள்! ஒவ்வொரு மூலையிலும் தேர் திரும்ப கொஞ்சம் பிரயத்தனப் பட வேண்டியிருந்தது. அப்படி ஓர் மூலையில் நான் நின்று படம் பிடித்துக் கொண்டிருந்தபோது பின்னாலிருந்து ஒருவர் எனக்கு ஆணைகள் பிறப்பித்தபடியே இருந்தார் – “நேரா வரும்போது நல்லா Zoom பண்ணி எடுங்க, அப்பதான் பெருமாளை புகைப்படம் பிடிக்க முடியும்!, இந்தாப்பா பலூன் விற்கிறவரே, தள்ளி நில்லு, நீங்க படம் எடுங்க, ம்ம்ம்… அப்படித்தான், என்ன ஒழுங்கா வந்ததா?”. 


கிழக்குச் சித்திரை வீதியில் தொடங்கிய தேர் ஓட்டத்தினை ஆரம்பித்திலிருந்து பார்க்கவில்லை. தெற்குச் சித்திரை வீதி தொடக்கத்திலிருந்து பார்த்து படங்கள் எடுத்தபடியே வந்து பிறகு ரங்கா ரங்கா கோபுரம் வழியே உத்திர வீதி மூலம் வந்து மேற்குச் சித்திரை வீதிக்கு வந்து விட்டேன். தேரின் முன்னேயும் பின்னேயும் மக்கள் கூட்டம் – கால் வைக்க இடமில்லாத அளவுக்குக் கூட்டம். தேருக்கு முன் தெருவிலேயே பலர் தேங்காய் உடைத்தும், சூடம், ஊதுவத்தி ஆகியவற்றைக் கொளுத்தியும், பழங்களை நிவேதனம் செய்தும் கொண்டிருந்தார்கள்.  தெருவிலேயே சூடங்களைக் கொளுத்தி வைப்பதால் தேரின் கூட வரும் மக்கள் காலில் பட்டுச் சுட்டுவிடக் கூடும் அபாயம் இருக்கிறது. அதனால் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் வேப்பிலைகளால் சூடத்தினை அணைத்துக் கொண்டே இருந்தார்! தேரின் பின்னால் வந்த ஒருவர் “செருப்புப் போட்டுக்கொண்டு தேரின் பின்னாலே வரக்கூடாது என என்னைத் திட்டினார்.திருவிழாவினைக் காண வந்திருக்கும் கிராமத்து மக்கள் தங்களது விளைநிலங்களில் விளைந்த தானியங்களையும், பசுமாடு, கன்றுகளையும் நம்பெருமாளுக்குக் காணிக்கையாக கோவில் கொட்டாரத்தில் சேர்க்கிறார்கள். போலவே தேரடியிலும் கோவில் கொடிமரத்திற்கு அருகிலும் பலர் தனது தலையிலேயே தேங்காய்களை உடைத்துக் கொள்வதையும் பார்க்க முடிந்தது.தேரோடிய இன்று நான்கு சித்திரை வீதிகளையும் சுற்றி வந்தால் கைசிக ஏகாதசி அன்று சுற்றி வந்தால் எப்படி மோக்ஷம் கிடைக்குமோ அதே பலன் இன்றும் கிடைக்கும் என இந்நாளிலும் மக்கள் நான்கு சித்திரை வீதிகளையும் சுற்றி வருகிறார்கள்.

காற்றாடிகள், பலூன்கள், சூடம், தேங்காய், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள், பஞ்சு மிட்டாய், என பல வகையான விஷயங்களை விற்கும் வியாபாரிகள் பலரைப் பார்க்க முடிந்தது. சிலரைப் பார்த்தால், இன்று மட்டுமே வியாபாரி ஆனது போலத் தெரிந்தது….சென்ற வருடம் கூட தேர் தனது நிலைக்குத் திரும்ப வெகு நேரம் ஆனதென்றும், இந்த வருடம் மிகச் சீக்கிரமாகவே தேர் நிலைக்குத் திரும்பி விட்டதென்றும் மக்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஒரு வேளை தலைநகரமே திருவரங்கத்திற்கு வந்துவிட்டதாலோ?என்ன நண்பர்களே திருவரங்கம் தேரினை நீங்களும் கண்டு களித்தீர்களா? மீண்டும் வேறொரு பகிர்வில் உங்களைச் சந்திக்கும் வரை…..நட்புடன்வெங்கட்.

திருவரங்கத்திலிருந்து……

46 comments:

 1. ஹைய்யோ!!!!! படங்கள் ஒவ்வொன்னும் அள்ளுதே!!!! ஒரு வருசம் ஸ்ரீரங்கம் ஆசை இன்னும் பெருகிக்கிட்டே போகுது!!!

  தரையெல்லாம் வாழைப்பழமும் தேங்காய் உடைச்ச ஓட்டுச்சில்களுமாக இருந்தால் வெறுங்கால் மக்களுக்கு ஆபத்தில்லையோ:(

  ஒவ்வொரு பகுதியையும் ரசித்து வாசித்தேன்.

  தலைநகரமே..... பெருமாள் தரிசனத்துக்கு நன்றீஸ்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 2. திருவரங்கத்தின் தேரோட்டத்தை நான் மிகவும் ஸந்தோஷமாக இருந்தது.
  கண்டுகளித்தேன். மிகவும் நன்றி. திருவண்ணாமலைத்
  தேர்கள் கண்டு களித்தது ஞாபகத்திற்கு வந்தது. அப்புறம் பார்த்தவைகள் எல்லாம் சிறிய தேர்கள். வாழைப்பழங்களும்,தோல்களும் தெருவில். பயமில்லாத மனிதர்கள்.படங்களெல்லாம் அருமையாக இருக்கிறது. மிகவும் ஸந்தோஷம். அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா....

   Delete
 3. கண்டு ரசித்தேன்... பகிர்வுக்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பாலாஜி.

   Delete
 4. திருவரங்கத்திலிருந்து தேர்திருவிழாவை அழகாய் தொகுத்து வழங்கி விட்டீர்கள், நன்றி.
  இப்படி தேர் வரும் பாதையில் பழங்களை வைத்து, ஊது பத்தியை பொறுத்தி, , சூடனை இப்படியா ஏற்றி வைப்பார்கள்? இப்படி எங்கும் பார்த்தது இல்லை , கூட்டத்தில் கீழே பார்காமல் வாழைபழம் மேல் கால் வைத்தால் அவர்கள் கதி என்னாவது?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 5. நல்ல தரிசனம்... என்னா கூட்டம்... படங்கள் ஒவ்வொன்றும் அட்டகாசம்... மக்களின் அறியாமையையும் அறிய முடிந்தது... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 6. சுடச்சுட அருமையான படங்கள். பகிர்வுக்கு நன்றி, வெங்கட்ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 7. திருவரங்க புகைப்பட ஒளிபரப்பு மிக அருமை.
  அதிலும் தங்கக்குதிரை அரங்கன் மனதை
  அள்ளுகிறார்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

   நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்களது வருகை...... நலம் தானே...

   Delete
 8. நான் ஸ்ரீரங்கத்தில் அதிகம் மிஸ் செய்வது இந்தத் தேர்தான். பள்ளிக்கூட நாட்களில் வருடாவருடம் கோடை விடுமுறையில் ஸ்ரீரங்கம் போய்விடுவோம். பல வருடங்கள் இந்தத் தேர் சேவித்திருக்கிறேன். எல்லாத் தேர்களையும் விட பெரியது.அதனாலேயே நிலைக்கு வர நேரம் ஆகும். எங்கள் பாட்டி வீடு கீழச்சித்திரை வீதியில்தான் இருக்கிறது. இப்போது என் மாமா இருக்கிறார். பாட்டியின் வீட்டு வாசலில் மிகப் பெரிய திண்ணை. வெளியூரிலிருந்து வரும் பாகவதர்கள் இந்த திண்ணையில் இரவு படுத்துக் கொள்வார்கள். அவர்களுக்கு தண்ணீர் சப்ளை பண்ணுவது தான் எங்களுக்கு வேலை!
  கொளுத்தும் வெய்யிலில் பலர் அங்கப் பிரதட்சணம் வீதிகளில் செய்வார்கள்!
  என்ன மடத்தனமான பக்தி என்று தோன்றும்.

  உங்கள் புகைப்படங்கள் பார்த்து ஸ்ரீரங்கத்துக்கே சென்று விட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. அடடா.... உங்களது நினைவுகளை மீட்டு விட்டேன் போலும்.....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா..

   Delete
 9. பாரிஸ் பிள்ளையார் தேர், லண்டன் முருகன் தேர், சிங்கப்பூர் மாரியம்மன் தேர் பார்த்துள்ளேன். ஆனால் இந்தியாவில் எந்தத் தேருமே பார்க்கக் கிட்டவில்லை. காட்சிகள் நிறைவாக இருந்தது.
  எங்கள் ஈழ நல்லூர்க் கந்தசாமி கோவில் தேரை நினைவூட்டியது.
  இவ்வளவு வாழைப்பழம் தெருவில் வீணாவது வருத்தமாக உள்ளது. கற்பூரம் வீதியில் பெண்கள் சேலையுடன் நடமாடுமிடத்தில் கொழுத்துவது தவிர்க்கப்படவேண்டும்.மிகக் கண்டிப்பாக இதை தவிர்க்க அறிவுறுத்தலாம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி யோகன் பாரிஸ்....

   Delete
 10. தலைநகரமே திருவரங்கத்திற்கு வந்துவிட்டதாலோ? என்னவோ
  அருமையான சித்திரைத்தேர் திருவிழா சுடச்சுட தரிசிக்கமுடிந்தது ..பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 11. ஆஹா.. மிக அருமையான தொகுப்பு. அதுவும் சின்னசின்ன தகவல்களைக் கூட விடாமல் நுணுக்கமாய் பார்த்து படங்களால் அசத்தி இருக்கிறீர்கள். வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் சார்... இன்று அலுவலகத்திலிருந்து சீக்கிரமே வந்தாச்சா?

   Delete
 12. கண்கவர் புகைப்படங்கள். கோடையில் வெயிலையும், வேர்வையையும் மறக்கத்தான் எத்தனை வழிகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 13. ஸ்ரீரங்கத்திற்கே சென்று வந்த திருப்தியை ஏற்படுத்தி விட்டீர்கள்.
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   Delete
 14. அருமையான பகிர்வு வெங்கட்.. மதுரையில் இருந்த வரையில், மதுரை சித்திரைத் திருவிழாவையும், அதன் பகுதியான தேர்த் திருவிழாவையும் ஒவ்வொரு வருடமும் தரிசிப்போம்.. தேர் அசைந்து அசைந்து வருவது அழகாக இருக்கும்.. பழைய நினைவுகளில் மூழ்கிவிட்டேன்..நன்றி..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தியானா.....

   பலருக்கு தங்களது பழைய நினைவுகளை மீட்டெடுத்தது இந்தப் பகிர்வு என நினைக்கும்போது மனதில் மகிழ்ச்சி.....

   Delete
 15. படங்கள் அத்தனையும் கண்கவர்.. பார்பதற்கே ஆனந்தமாய் உள்ளது

  எல்லாம் இருந்தும் குப்பைகளை சரமாரியாக அள்ளிவீசும் நம்மக்கள் என்று தான் திருந்துவார்களோ

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனு.

   Delete
 16. படங்களும் பதிவும் மிக அருமை.
  நேராகவே கண்டு களித்தது போல் இருந்தது நாகராஜ் ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா....

   Delete
 17. காணக் கிடைக்காத காட்சிகள்...
  புகைப்படங்கள் மிகவும் அழகு...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேந்திரன்.

   Delete
 18. பிரமாதமான படங்கள். சுவாரசியமான விவரம்.
  அலங்காரம், போலீஸ் பாதுகாப்பு, ஊர் துப்புரவு, பிற ஏற்பாடுகள், அப்புறம் ஒரு நாள் விடுமுறை இதன் மொத்த செலவு எவ்வளவாக இருக்கும் என்ற எண்ணமும் வந்து போனது.

  ReplyDelete
  Replies
  1. மொத்த செலவு எவ்வளவாக இருக்கும்? லட்சங்களில் இருக்கலாம்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   Delete
 19. இப்பதான் வாசிக்க முடிஞ்சது. ரேடியோவில் நேரடி வர்ணனை செய்வாங்க அதுமாதிரி இருந்தது பதிவு. போட்டோஸ் கலக்கல்

  ReplyDelete
  Replies
  1. ரேடியோ வர்ணனை - :)))))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புதுகைத் தென்றல்.

   Delete
 20. ஆஹா மனமெல்லாம் மாலவன் தேர் உலா வரும் இடத்திலேயே சென்றுவிட்டது...சித்திரைத்தேர் பார்த்து வருஷக்கணக்காகிவிட்டது இங்காவது கண்ட மகிழ்ச்சி நன்றி மிக

  ReplyDelete
  Replies
  1. திருவரங்கம் உங்களை இங்கே அழைத்துவிட்டது.... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஷைலஜா.

   Delete
 21. ஒரே ஒரு தடவைதான் பார்த்திருக்கிறேன் தேரை. ஆடி வரும் அழகைச் சொல்லல் வர்ணிக்க முடியாது. இவ்வளவு கூட்டம் அப்போது இல்லை. (1974)
  உறவினர் வீட்டுத் திண்ணையில் பார்க்க முடிந்தது.
  நீங்கள் வர்ணித்த அழகு தேரும் பெருமாளும் வீட்டுக்கே வந்த நிறைவு.நன்றி மா,

  ReplyDelete
  Replies
  1. இத்தனை வருடங்களுக்குப் பிறகு உங்களுக்கு தேர் தரிசனம் என் பதிவு மூலம் - மகிழ்ச்சி...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

   Delete
 22. நாங்களும் கலந்து கொண்டு கண்டு களித்தோம் உங்கள் பதிவுனூடே...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 23. மிகவும் அருமையான பகிர்வு. திருஅரங்கம் தேரை நேரில் பார்த்த மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் மிகபல. Have a nice day with your family.

  விஜய்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....