திங்கள், 30 நவம்பர், 2015

ஐஸ்க்ரீம் வேணும் – அடம் பிடித்த பெரியவர் – வீட்டு உண[ர்]வு

பஞ்ச் துவாரகா - பயணக் கட்டுரை பகுதி 25

முந்தைய பகுதிகள் – 1 2 3 4 5 6 7 8 9 10 11  12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24

படம்: இணையத்திலிருந்து.....

ஷாம்லாஜியிலிருந்து புறப்பட்ட நாங்கள் அடுத்ததாக நிறுத்திய இடம் நெடுஞ்சாலையில் இருந்த [G]கிரிராஜ் உணவகத்தில் தான். நல்ல பசி என்பதால் உள்ளே நுழைந்து கேட்ட முதல் கேள்வியே உடனடியாக சாப்பிட என்ன கிடைக்கும் என்பது தான். அதற்கு கிடைத்த பதில் – எல்லாமே கிடைக்கும் – ஆனால் பதினைந்து இருபது நிமிடம் ஆகும்! நல்ல பதில்! வேறு வழியில்லை காத்திருக்கத் தான் வேண்டும்.....



உணவகத்தினை நிர்வகிப்பது ஒரு கணவன் – மனைவி. இருவரும் போட்டி போட்டுக்கொண்டு தங்களது உணவகத்தினை அழகு படுத்தியிருக்கிறார்கள். சுவர் எங்கும் துவாரகாநாதனின் படங்கள், இயற்கைக் காட்சிகள் என பல ஓவியங்கள் அழகழகாய் மாட்டி வைத்திருந்தார்கள். அவர்களிடம் அனுமதி கேட்டு படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என நினைத்தபடியே ஓவியங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.  எங்களைப் போலவே வேறு ஒரு குடும்பத்தினரும் அங்கே காத்துக்கொண்டிருந்தார்கள்.



ஒரு இளைஞர், அவர் மனைவி, சிறு குழந்தை மற்றும் இளைஞரின் அப்பா-அம்மா ஆகியோர் தான்.  அவர்கள் எங்களுக்கு முன்னரே வந்துவிட்ட படியால் அவர்கள் கேட்டிருந்த உணவு சுடச்சுட வந்து சேர்ந்தது. பெரியவர் ஒவ்வொன்றையும் ரசித்து ருசித்து சாப்பிட்டு அதற்கான கருத்துகளையும் சொல்லிக் கொண்டிருந்தார். பிடிக்காத சிலவற்றை ஒதுக்கி, பிடித்தவற்றை சாப்பிட்டு அதுவும் மீதமாக, உணவகம் வைத்திருந்த பெண்மணியை அழைத்து அதை வீட்டுக்கு எடுத்துப் போக தனியாக கட்டிக் கொடுக்கவும் சொன்னார். பெரியவரின் மனைவி, “அதெல்லாம் வேண்டாங்க! என்று சொல்ல, பெரியவரோ விடாப்பிடியாக “அவ கிடக்கா! நீ கட்டிக் கொண்டாம்மா!என்று அடுத்த உணவை ருசிக்க ஆரம்பித்தார். 



அதற்குள் எங்களுக்கான உணவும் வந்து சேர்ந்தது. நாங்கள் கேட்டிருந்த சப்பாத்தி, பராந்தா, ஆலு-சிம்லா மிர்ச் சப்ஜி, சற்றே இனிப்பான [dh]தால், ராய்த்தா, குஜராத்தி பாப்பட்[d] [அப்பளம்], ஊறுகாய் என அனைத்தும் மிகவும் ருசியாக இருந்தது.  வீட்டு உணவு சாப்பிடும் உணர்வு தான் எங்களுக்கு! ஓட்டல் நடத்தும் தம்பதியே முன்னின்று சமையல் வேலைகளைப் பார்வையிட்டு தயாரிக்கிறார்கள் என்பதால் தரத்திலும் குறைவில்லை. இருந்த பசிக்கு, ருசியும் கைகொடுக்கவே கிடுகிடுவென சப்பாத்திகள், பராந்தாக்களும் உள்ளே விரைவாக இறங்கிக் கொண்டிருந்தன.   நாங்கள் இங்கே வாய்க்கும் கைக்கும் சண்டை போட்டுக் கொண்டிருக்க, பெரியவர் அங்கே தனது விளையாட்டுகளை தொடர்ந்து கொண்டிருந்தார்.



சாப்பிட்டு முடித்ததும் ஐஸ்க்ரீம் சாப்பிட்டே ஆக வேண்டும் என குழந்தை போல அவர் அடம் பிடிக்க, பயணத்தின் போது வேண்டாம், ஒத்துக்காதுஎன அவரது மனைவி, மகன், மருமகள் என அனைவரும் எடுத்துச் சொல்ல, வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் – உடம்புக்கு ஒத்துக்காது என எல்லாத்தையும் தள்ளிக் கொண்டே இருந்து என்ன செய்யப் போகிறேன்! நீங்க என்ன சொல்றீங்க?என உணவகத்தின் உரிமையாளரையும் தனது கட்சிக்கு இழுத்துக் கொண்டிருந்தார்.  ஜெயித்தது பெரியவர் தான்!



உணவினை ரசித்து ருசித்து நாங்கள் சாப்பிட்ட பிறகு, எங்களுக்கான உணவிற்கு ரசீது கொண்டு வந்தார் அந்தப் பெண்மணி. “சாப்பாடு பிடித்திருந்ததா? ஏதேனும் குறை உண்டா?என்று அன்பான விசாரிப்பு அவரிடமிருந்து. வீட்டில் சாப்பிட்ட உணர்வு எங்களுக்கு என்று அவரைப் பாராட்டினோம்.  கணவன் – மனைவி இருவருமே தங்கள் வேலைகளை விட்டு, இப்படி உணவகம் வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார்களாம்.  அவர்கள் மேலும் சிறந்த நிலைக்கு வர வாழ்த்தினோம்.  அப்படியே ஓவியங்களையும் படம் எடுத்துக் கொள்ள அனுமதி கேட்டேன் [பதிவுக்கு புகைப்படம் தேவையாயிற்றே! வலைப்பதிவர் காரியத்தில் கண்ணா இருக்கணும்!]



நானகு பேர் சாப்பிட்டதற்கான செலவும் அதிகமில்லை.  ஆளுக்கு நூறு ரூபாய்க்குள் தான்! பல சமயங்களில் உணவுக்காகவே செலவு அதிகம் செய்ய வேண்டியிருக்கும். அத்தனை செலவு செய்தும் நன்கு சாப்பிட்ட திருப்தி இருக்காது.  ஏதோ தானோ எனச் சமைத்து பரிமாறிய உணவும் ஏனோ தானோ என்று தானே இருக்கும்! இந்த உணவகத்தில் வீட்டில் சாப்பிட்ட உணர்வு – கூடவே அவ்வப்போது நம்மிடம் வந்து இன்னும் ஏதேனும் வேண்டுமா என்று பாசத்தோடு கேட்கக் கூடியவரும் இருந்துவிட்டால் நன்றாகத் தானே இருக்கும்!

நண்பர் வீட்டில் இருந்த கார்வண்ணன்....

நாங்களும் சாப்பிட்டு ஓட்டுனர் [ch]சிராக்-உம் சாப்பிட்டு முடித்த பிறகு எங்கள் பயணம் தொடர்ந்தது. சாலைகள் நன்றாக இருந்தால் பயணம் இனிக்கும் என்றாலும், பயணம் இலக்கை அடையத்தானே வேண்டும். அஹமதாபாத் நகருக்கு வந்து சேர்ந்து நேராக நண்பரின் வீட்டுக்கு போய்ச் சேர்ந்தோம்.  நண்பர் அலுவகத்திலிருந்து வந்து சேர்ந்த பிறகு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அதன் பிறகு அவருடன் நகர் வலம் செல்ல வேண்டும்.  நகரில் என்ன பார்த்தோம், வேறு என்ன செய்தோம் என்ற விவரங்களை அடுத்த பகுதியில் சொல்லட்டா!

நாளை வேறொரு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

ஞாயிறு, 29 நவம்பர், 2015

மாலினி அவஸ்தி – கிராமியப் பாடலும் நடனமும்





சமீபத்தில் திருமதி மாலினி அவஸ்தி அவர்களின் நாட்டுப்புற பாடல்கள் நிகழ்ச்சியை நேரடியாகக் கேட்டு ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. உத்திரப் பிரதேசத்தின் தலைநகர் லக்னோவைச் சேர்ந்தவர் மாலினி. அவத்[dh] எனும் மொழியில் பல பாடல்களை பாடிக்கொண்டே ஆடுவார். அவத்[dh] மொழியும் ஹிந்தி மொழி போலவே இருந்தாலும், சற்றே வித்தியாசங்கள் உண்டு. போலவே [b]புண்டேல்கண்ட், [b]போஜ்புரி போன்ற மொழிகளிலும் பாடக்கூடியவர்.  தும்ரி, கஜ்ரி என விதம் விதமான பாடல்களால் கேட்பவர்கள் அனைவரையும் மகிழச் செய்யும் வித்தை தெரிந்தவர். 



பாடுவது மட்டுமன்றி பாடியபடியே சின்னச்சின்னதாய் சில நடன நடைகளும் உண்டு.  நமது கிராமியப் பாடல்களைப் போலவே வடக்கில் பல கிராமியப் பாடல்கள் அழிந்து வருகிறது. கிராமியப் பாடல்கள் பலவற்றில் ஆங்காங்கே விரசம் இருந்தாலும், கேட்பவர்கள் வெட்கப்படும் அளவிற்கு இருக்காது. இன்றைக்கும் வட இந்தியாவின் சில கிராமங்களில் பாடப்பட்டு வந்தாலும், பலர் அதற்கு வேறு ஒரு வண்ணம் கொடுத்து மிட்நைட் மசாலாவைப் போல ஆக்கிவிட்டார்கள். 



கஜ்ரி எனும் வகைப்பாடல்கள் மழைக்காலங்களில் பாடப்படும் பாடல். கருமேகம் சூழ்ந்து வரும்போதே கிராமங்களில் இருக்கும் ஆண்களும் பெண்களும் மாஞ்சோலைகளுக்கு ஓடுவார்களாம். மழை பெய்ய ஆரம்பிக்கும் போது ஆடலும் பாடலும் என சந்தோஷமாக இருப்பார்களாம். இன்றைக்கு கிராமிய வாழ்க்கையை விட்டு நகரங்களின் அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் வாழும் நாமும் மழை வந்தால் ஓடுகிறோம், பலகணியில் உலர்த்தியிருக்கும் துணிகளை எடுப்பதற்கும், கதவுகளையும் ஜன்னல்களையும் மூடுவதற்கும்!

ஒரு கஜ்ரி பாடலைக் கேட்கலாமா?




பணி நிமித்தம் வெளியூருக்கோ, வெளி நாட்டுக்கோ சென்று விட்ட தனது கணவனைப் பற்றி பாடும் பாடல், அவர் எப்படி ரயில் [g]காடியில் ஏறிப் புறப்பட்டார் என்றெல்லாம் சொல்லி, ரயில் [g]காடி என்று திரும்பி வரும், தனது ஆசைக்கணவனை மீண்டும் அதில் அழைத்து வரும் என்றெல்லாம் ஏக்கத்துடன் படும் பாடல் பற்றி பாடும் போது அங்கு வந்திருக்கும் குழந்தைகளை அழைத்து ரயில் வண்டியைப் போலவே அங்கு ஓடிக்கொண்டே பாட்டு பாடி அனைவரையும் மகிழ்விக்கும் திறமை அவருக்கு இருக்கிறது.



ரயிலில் புறப்பட்டுப் போன ஆசைக் கணவனைப் பற்றிய பாடல் கேட்கலாம் வாங்க!


  

தசரத மஹாராஜாவின் அரண்மனை – ராமர் ஜனனம் நடக்கிறது. அந்த சமயத்தில் பிரசவத்திற்கு உதவி செய்ய வந்த தாதி தனக்கு என்ன வேண்டும் எனக் கேட்பதாக ஒரு பாடல் பாடினார் – மன்னனிடம் தைரியமாக தனக்கு என்ன வேண்டும் என்று கேட்க அந்தக் காலத்தில் உரிமை இருந்திருக்கிறது – இந்தக் காலத்தில் எப்படி இருக்கிறது என்பதை நான் சொல்லித் தான் தெரிந்து கொள்ள வேண்டுமா என்ன!

ராமரின் ஜனனம் பற்றிய பாடல் கேட்கலாம் வாருங்கள்! 




[ch]ச்சட் பூஜா சமயத்தில் பாடப்படும் பாடல்கள் பல உண்டு. அதிலிருந்தும் ஒரு பாடல் பாடினார். இப்படி பல பாடல்களைக் கேட்டு ரசிக்க வாய்ப்பு கிடைத்தது. ஒரு மணி நேரத்திற்கு மேல் பல கிராமிய பாடல்களின் இசை மழையில் நனைந்து வந்தோம்.  அந்த நேரத்தில் எடுத்த சில படங்களை இந்த ஞாயிறில் உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.  பாடல் காட்சிகளும் யூட்யூபிலிருந்து உங்களுக்காகவே சேர்த்திருக்கிறேன். 

ச்சட் பூஜா பாடல் ஒன்று இதோ உங்களுக்காக!



பாடலின் மொழி உங்களுக்குப் புரியவில்லை என்றாலும், கேட்டு ரசிக்க முடியும்.  ஹிந்தி மொழி தெரிந்திருந்தால் இன்னும் அதிகமாய் ரசிக்க முடியும்!

இன்றைக்கு பகிர்ந்து கொண்டிருக்கும் படங்களையும் பாடல்களையும் ரசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.  மீண்டும் நாளை வேறு ஒரு பதிவுடன் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி. 

சனி, 28 நவம்பர், 2015

நடுத் தெருவில் ஒரு ஃபோட்டோ ஷூட்!



சாலைக்காட்சிகள் என்ற தலைப்புடன் சில பதிவுகள் எழுதி இருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்! இத்தலைப்பில் பதிவுகள் எழுதி சில நாட்கள் ஆகிவிட்டன. கடைசியாக எழுதியது - ஓஹோ ஹோ கிக்கு ஏறுதே! எனும் பதிவு தான். இந்த இடைவெளியில் எத்தனையோ காட்சிகளைப் பார்த்திருந்தாலும், பகிர நினைத்தாலும் எழுதும் சந்தர்ப்பம் அமையவில்லை.  இப்போது சில காட்சிகளைத் தொகுத்து உங்களுடன் பகிர்ந்து கொளும் வாய்ப்பு!

காட்சி-1:

நேற்று இரவு அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியபோது மணி 08.30. உள்ளே நுழைந்து முதல் வேலையாக சமையல் – சிம்லா மிர்ச் சாதம் தான் மெனு! செய்து, சுடச்சுட சாப்பிட்டு ஒரு நடை நடக்க, கீழே இறங்கினேன். வீட்டின் அருகே ஒரு கல்யாணம் – [B]பராத் எனும் மாப்பிள்ளை ஊர்வலம் அப்போது தான் புறப்பட்டு போயிருந்தது. பின்னால் சிலர் வாகனங்களில் செல்ல தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

இங்கே ஒரு விஷயமும் சொல்லி ஆக வேண்டும் – தில்லியில் குளிர் ஆரம்பித்து விட்டது. கடும் குளிராக இருந்தாலும், திருமணத்திற்கு வரும் அனைத்து பெண்களும் ஜிகு ஜிகு ஜிகினா உடைகள் அணிந்து சால்வையை பெயருக்கு தொங்க விட்டுக் கொண்டு வருவார்கள் – ஆண்கள் கோட்-சூட்-பூட் என இருக்க, இப்பெண்களுக்கு குளிரே தெரியாது போலும். கூடவே ஆண் பெண் வித்தியாசம் இல்லாது நாத்த மருந்தை [Scent] நன்றாக அடித்துக் கொண்டிருப்பார்கள் – 10 மீட்டர் தொலைவு வரை அந்த வாசம் வரும்!  ஜனவரி மாதம் வரை தினம் தினமும் கல்யாணம் தான்! எனக்கு கூட இரண்டு கல்யாண விழாவிற்கு அழைப்பிதழ் வந்திருக்கு – ராத்திரி ஒன்பது மணிக்கு [b]பராத்! போனா, வீடு திரும்ப இரவு பன்னிரெண்டு அல்லது ஒரு மணி ஆகலாம்.... போகணுமா வேண்டாமான்னு யோசனை!

படம்: இணையத்திலிருந்து.....

அந்தக் குடும்பத்தினருக்கு வருவோம்! – கும்மிருட்டான ஒரு இடத்தில் நின்று கொண்டிருந்தார்கள். வாகனத்திற்கு அருகில், மாறி மாறி நிற்க, ஒருவர் மட்டும் விதம் விதமாய் அவருடைய அலைபேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். வெளிச்சமே இல்லாது, Flash-உம் இல்லாது புகைப்படம் எடுக்க, அந்தப் புகைப்படம் எப்படி வந்திருக்கும் என்பது அவருக்கே வெளிச்சம்! புகைப்படம் எடுத்துக் கொண்டவர்கள் அனைவரும் செய்த இன்னுமொரு விஷயம் – இருந்த ஒரே ஒரு கறுப்பு Cooling Glass-ஐ ஒவ்வொருவாக அணிந்து கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டது தான்! கும்மிருட்டில் கூலிங் கிளாஸ்!

காட்சி-2:

தில்லியின் ஒரு முக்கியமான சாலைச் சந்திப்பு. அதன் அருகே மூன்று காவலர்கள் – ஒருவர் அதிகாரி. அதிகாரி காவலாளிகளிடம் சொல்லிக் கொண்டிருந்ததை சாலையைக் கடக்க நின்று கொண்டிருந்த நான் கேட்க நேர்ந்தது.

ஏதோ ஒரு கொலை, இரண்டு கொலை நடந்தா உடனேயே அதை பெரிய விஷயமா எல்லா டிவிலயும், பேப்பர்லயும் போட்டு நம்மளை கிழி கிழின்னு கிழிச்சுடறானுங்க! வெளிநாட்டுல இப்படியெல்லாம் நடக்காதுன்னு ஒரு உதாரணம் வேற சொல்றாங்க!  ஏய்யா, நம்ம தில்லியோட மக்கள் தொகையை விட அந்த நாட்டோட மக்கள் தொகை குறைவு. அப்படி இருக்கற நாட்டுல நடக்கலன்னு சொன்னா எப்படி....  இங்கே இருக்கற மக்கள் தொகைக்கு இப்படி சில நிகழ்வுகள் நடக்கறது சாதாரணமான விஷயம்! இதைப் போய் பெரிசா பேசறாங்க!  அப்படியே ஒண்ணு ரெண்டு கொலையோ, கற்பழிப்போ நடந்தா இருக்கற கொஞ்சம் காவலர்களை வைத்துக் கொண்டு எப்படி தடுக்கறது?...  நாறப் பொழப்பா இருக்கு!

அவர் சொல்றதுலயும் கொஞ்சம் நியாயம் இருக்கு! காவல் துறையில் நிறைய பேர் அரசியல்வாதிகளோட பாதுகாப்புக்கு போயிட்டா, மீதி இருக்க கோடானு கோடி மக்களுக்கு எப்படி பாதுகாப்பு தர முடியும்! :(

காட்சி-3:



இப்போதெல்லாம் சாலைகளில் நிறைய பேர் தனியாக பேசிக்கொண்டு வருவதைப் பார்க்க முடியும்.  கொஞ்சம் நெருங்கி வரும்போது காதில் ஒரு ஒயர் மாட்டி இருக்கும் – பாக்கெட்டில் அலைபேசி இருக்கும் – அலைபேசி அழைப்பில் இருக்கும் யாருடனோ பேசிக் கொண்டிருப்பார்கள்!  ஒயர் இல்லாவிடில் காதில் நீலப்பல் [Blue Tooth] மாட்டி இருக்கும்! தனியே பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து “பாவம் யார் பெத்த புள்ளையோ, பிராந்து பிடிச்சுடுச்சுன்னுநினைக்கத் தோணும்...... 

இரண்டு நாள் முன்னாடி, சாலையில் நடந்து கொண்டிருந்தேன். எதிரே ஒரு பெரியவர் – ஃப்ரென்ச் தாடி, கோட்-சூட்-பூட் என டிப்-டாப்-ஆக தனியாக நடந்து வந்து கொண்டிருந்தார்.  சற்று தொலைவில் பார்க்கும்போதே பேசிக்கொண்டு வருவது தெரிந்தது. கைகளை ஆட்டி ஆட்டி பேசுவதைப் பார்த்தபோது சரி அலைபேசியில் தான் பேசுகிறார் போல என நினைத்தேன்.  அருகில் வந்தபோது தான் தெரிந்தது காதில் ஒயரோ, நீலப்பல்லோ இல்லை!  பாவம் தனக்குத் தானே பேசிக்கொண்டு வருகிறார்!  என்ன பிரச்சனையோ!

நேற்று மீண்டும் அந்த பெரியவரைப் பார்த்தேன்.  இன்றைக்கும் தனியே பேசிக்கொண்டு நடக்கிறார்!  வீட்டில் இவருடன் பேச ஆளில்லை போலும்! இல்லையெனில் மனைவி பேசிக்கொண்டே இருக்க, இவர் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டிய சூழலோ!  அவருக்கே வெளிச்சம்!

என்ன நண்பர்களே, இன்றைய பதிவினை ரசித்தீர்களா?  சாலைக்காட்சிகள் அவ்வப்போது தொடரும்!

நாளை வேறு ஒரு பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

புதன், 25 நவம்பர், 2015

பெய்யென பெய்யும் மழை....

மனச்சுரங்கத்திலிருந்து....



தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையும் அதன் மூலம் ஏற்பட்ட சங்கடங்களும் பழைய நினைவுகளை மீட்டெடுத்தது. நெய்வேலி நகர் திட்டமிட்டு அமைக்கப்பட்ட நகரம் என்பதால் சிறந்த வடிகால் வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. எத்தனை மழை பெய்தாலும், மழை நின்ற சில மணி நேரங்களில் அத்தனை தண்ணீரும் வடிந்து விடும்.  ஒவ்வொரு சாலையின் ஓரங்களிலும் வாய்க்கால்கள், அவை சென்று சேரும் சற்றே பெரிய வாய்க்கால், அந்த வாய்க்கால் சென்று செரும் அதைவிட பெரிய வாய்க்கால் என மழைத்தண்ணீர் முழுவதும் வடிந்து ஊரின் ஓரத்தில் இருந்த பெரிய நீர்நிலைக்குச் [சுரங்கத்திலிருந்து எடுக்கப்படும் நீர் சேமிக்கும் இடத்திற்கு] சென்று சேர்ந்து விடும்.



நான் அங்கே இருந்த 20 வருடங்களில் எத்தனையோ முறை கனத்த மழையும், புயலுடன் கூடிய மழையும் பெய்திருக்கிறது.  என்றாலும் ஒரு முறை கூட வீட்டிற்குள் தண்ணீர் வந்து பார்த்ததில்லை. வாய்க்கால்களில் மட்டும் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும். சில சமயங்களில் சற்றே அதிகமாக இருந்தாலும், வீட்டினுள் தண்ணீர் வந்ததில்லை. ஆனால் இந்த முறை சற்று அதிகமாகவே மழை பெய்து வீட்டிற்குள் தண்ணீர் வந்துவிட்டதாக அங்கிருக்கும் நண்பர்கள் சொன்னதன் மூலமும், அவர்கள் அனுப்பிய படங்கள் மூலமும் தெரிந்து கொண்டேன்.



மழை நின்ற உடனேயே எங்கள் வேலையே ஓடும் தண்ணீரை வேடிக்கை பார்ப்பது தான். வீட்டு வாசலில் நின்று கொண்டு காய்வாலில் சுழித்து ஓடும் தண்ணீரைப் பார்ப்பது பிடித்தமான விஷயம்.  கூடவே நோட்டுப் புத்தகங்களிலிருந்தோ, அல்லது வேண்டாத காகிதங்களிலோ காகிதக் கப்பல் செய்து அத்தண்ணீரில் விட்டு மிதப்பதைப் பார்த்து ரசிப்பதோ எங்கள் பொழுதுபோக்குகளில் ஒன்று. சுழன்று செல்லும் தண்ணீரில் சில நிமிடங்களுக்குள் அந்தக்கப்பல் கவிழ்ந்து விடும் என்றாலும் தொடர்ந்து கப்பல்கள் விட்டுக்கொண்டே இருப்போம்.

எங்களுக்கெல்லாம் காகிதக் கப்பல் செய்து தராத அப்பா, இன்றைக்கு தனது பேரன்களுக்கும் பேத்திகளுக்கும் காகிதக் கப்பல் செய்து தருகிறார் – மழை இல்லாத போது கூட!

மழையில் நனைவதற்காகவே வெளியே சென்று வந்ததும் உண்டு. பள்ளியிலிருந்து வீடு வரும் போது, மழையில் நனைந்தபடியே வருவேன் – மழையில் நனைவது பிடிக்கும் என்பதால்! மழையில் நனைஞ்சு வந்திருக்கியே, கொஞ்சம் நேரம் நின்னு மழை விட்டதும் வரக்கூடாதாடா, கடங்காராஎன்று பாசத்தோடு திட்டியபடியே தனது புடவைத் தலைப்பால் தலை துவட்டி விடுவார் அம்மா....  அம்மாக்கள் இப்படித்தான்....  படித்த கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது!

நானும் மழையும்
அம்மாவும் நானும்

மழை வரும்போல
குடை எடுத்துட்டு போடா
இது அம்மாவின் குரல்...

ஒவ்வொரு முறையும்
வீட்டை விட்டு வெளியேறும் போதும்
அம்மாவின் குரல்
உள்ளிருந்து ஒலிக்கும்

மழையில் நனையத்தான்
வெளியே செல்கிறேன் என்பதனை
அம்மா அறிவாள் இருந்தும்
அவள் குரல்தான்
அன்பு

நனைந்து பின்
வீடு சேரும்போது

நான்தான் அப்பவே
சொன்னேனே
இந்த வார்த்தைகளோடு
புடவை தலைப்பில்
தலை துவட்டிவிடும்போது
இன்னும் அதிகமாகிறது
வாழ்வதற்கான ஆசைகள்

மழையில் நனைந்தபடி சைக்கிளில் பல இடங்களுக்கும் சென்று இருக்கிறேன். ஒரு கையில் குடை பிடித்தபடி, மற்றொரு கையில் மட்டும் பிடித்துக் கொண்டோ, அல்லது அதையும் விட்டு, கொட்டும் மழையில் சைக்கிள் செலுத்தி இருக்கிறேன். அப்போதெல்லாம் ஒன்றும் நடந்ததில்லை. ஒரு முறை தவிர! அப்பாவுக்கு கடிதம் எழுதுவது ரொம்பவும் பிடித்த விஷயம். யாருக்காவது கடிதம் எழுதிக்கொண்டே இருப்பார்.  தினமும் ஒரு கடிதமாவது எழுதாவிட்டால் அவருக்கு அந்த நாள் முடியாது.  அதுமட்டுமல்ல, எழுதிய உடனேயே அதை தபால் பெட்டியில் சேர்த்துவிட்டு தான் மறு வேலை!



அவரே சென்று தபால் பெட்டியில் சேர்த்துவிட்டு வருவார் என்றாலும், அந்த மழை நாளில் எனை அழைத்து தபால் பெட்டியில் சேர்த்து வரச் சொன்னார். கனமழை பெய்து கொண்டிருந்தது.  வீட்டின் வெகு அருகிலே இருக்கும் சேலம் ஸ்டோர் பக்கத்தில் தான் தபால் பெட்டி. நடந்தால் இரண்டு மூன்று நிமிடங்களில் சென்றுவிடலாம் என்றாலும் சைக்கிளில் தான் செல்வேன். ஒரு கையில் குடை பிடித்து சென்று கொண்டிருந்தபோது அடித்த காற்றில் குடை அலைக்கழித்து கண்களை மறைக்க, எதிரே வந்த ஏதோவொரு வண்டியில் முட்டிக் கொண்டேன்! தவறு அவருடையதோ, என்னுடையதோ தெரியாத நிலை.

குடைக் கம்பி உடைந்து போனது மட்டுமல்லாது, எனது வலது மோதிரவிரலில் நன்கு கிழித்தும் விட்டது போலும்..... கட்டியிருந்த நாலு முழ வேட்டி முழுவதும் ரத்தம். மழையில் நனைந்து கொண்டிருந்தாலும், ரத்தம் நிற்காது கொட்டிக் கொண்டிருக்க, அப்படியே வீட்டுக்கு வந்தேன். ரத்தம் நிற்கவில்லை என்பதால் நெய்வேலியின் மருத்துவமனைக்குச் சென்றால், ஆழமாக வெட்டுப்பட்டிருப்பதால் தையல் போட வேண்டும் என்று சொல்லி Local Anesthesia  மட்டும் கொடுத்து நான்கு தையல் போட்டார்கள்.... ஒவ்வொரு முறை தையல் போடும் போதும் வலித்தது! இன்றைக்கும் அந்த விரலில் தையலின் அடையாளம் உண்டு!

மழையில் நனைவது பிடிக்கும், மழை பற்றிய கவிதைகள் படிப்பது பிடிக்கும், என மழை பற்றிய நினைவுகள் இருந்தாலும், சமீபத்திய மழையில் மக்கள் படும் அவதிகளை நினைக்கும்போது மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது. இயற்கை நமக்கு நன்மைகள் செய்தாலும், ஏரிகளையும், குளங்களையும், அதற்கு மழை நீரைக் கொண்டு சேர்க்கும் வாய்க்கால்களையும் ஆக்கிரமித்து வீடுகளையும், அலுவலங்களையும் கட்டி, ஊர் முழுவதும் குப்பையாக்கி, இப்போது தொடர்ந்து பெய்யும் மழையை வெறுக்கிறோம். 
மழை வேண்டி கழுதைகளுக்கு கல்யாணம் செய்து வைப்பார்கள் நம் கிராமங்களில். அப்படி கல்யாணம் செய்து வைக்கப்பட்ட கழுதைகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்களாம்.....  மழை பெய்தது போதும், நிறுத்த வேண்டும் என்பதால் அக்கழுதைகளைத் தேடிக் கண்டுபிடித்து விவாகரத்து செய்து வைக்க வேண்டுமென்று! [முகப்புத்தகத்தில் வேடிக்கையாக இப்படி எழுதி இருந்தார் மூவார் முத்து [ஆரண்யநிவாஸ் ஆர். ராமமூர்த்தி].

இனிமேலாவது விளைநிலங்களையும் ஆற்றுப்படுகைகளையும் வீடுகளாகக் கட்டுவதைத் தவிர்ப்போமா..... தவிர்த்தால் நல்லது. தவறெல்லாம் நம் மீதும், அரசாங்கத்தின் மீதும் இருக்கையில், மழையையும், இயற்கையையும் பழித்து என்ன பயன்!

மழையினால் பாதிக்கப்பட்ட தமிழக மக்கள் அனைவருக்கும் விரைவில் பிரச்சனைகள் விலகட்டும்....

நாளை வேறு பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

டிஸ்கி: படங்கள் நெய்வேலியிலிருந்து....  பகிர்ந்து கொண்ட கல்லூரித் தோழிக்கு நன்றி.


செவ்வாய், 24 நவம்பர், 2015

சாப்பிட வாங்க: டேகுவா

படம்: இணையத்திலிருந்து...

டேகுவா – பெயரைப் பார்த்தவுடன் ஏதோ சைனீஸ் உணவு வகை போல என நினைக்க வேண்டாம் நண்பர்களே.... இதுவும் ஒரு இந்திய உணவு வகை தான்.

சென்ற வாரத்தில் பீஹார் மாநிலத்தவர்களின் முக்கிய பண்டிகையான ச்சட் பூஜா சமயத்தில் செய்யப்படும் ஒரு ஸ்பெஷல் உணவு வகையான லிட்டி [ch]சோக்கா பற்றிய குறிப்புகளைப் பார்த்தோம். இந்த வாரமும் அதே சமயத்தில் அவர்கள் செய்யும் ஒரு இனிப்பு வகையைத் தான் பார்க்கப் போகிறோம். அந்த இனிப்பிற்கு டேகுவா [Thekua] என்று பெயர்.   லிட்டி [ch]சோக்கா போல இதைச் செய்வது கடினமான விஷயம் அல்ல! சுலபமாகச் செய்து விடலாம்.

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு [300 கிராம்], வெல்லம் [150 கிராம்], துருவிய தேங்காய் [50 கிராம்], நெய் [2 ஸ்பூன்], ஏலக்காய் [5] மற்றும் பொரிப்பதற்கு எண்ணெய்.

எப்படிச் செய்யணும் மாமு:


படம்: இணையத்திலிருந்து.....

ஒரு கப் தண்ணீல் வெல்லம் சேர்த்து அதைச் சூடாக்கவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டிக்கொள்ளவும். சூடாக இருக்கும் அதில் ஏலக்காய் [தோல் நீக்கியது] பொடி செய்து போடவும். அதன் மேல் இரண்டு ஸ்பூன் நெய் சேர்க்கவும். கரைசல் சூடாக இருப்பதால் நெய் சுலபமாகக் கரைந்து விடும். கரைசலை கொஞ்சம் ஆறவிடவும். 

கோதுமை மாவில் துருவிய தேங்காயைச் சேர்க்கவும். கொஞ்சம் கொஞ்சமாக வெல்லக் கரைசலைச் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.  சப்பாத்திக்கு மாவு பிசைவது போலவே தான். அதிகமான வெல்லக் கரைசல் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கவும். மிதமான தீயில் வைத்துவிட்டு, கொஞ்சம் கொஞ்சமாக மாவு எடுத்துக் கொண்டு கொஞ்சம் தட்டையாக தட்டிக் கொள்ளவும். பீஹார் மாநிலத்தில் இதற்கு சாஞ்சா எனும் மர அச்சு கிடைக்கிறது. மாவு உருண்டையை சாஞ்சாவில் அமுக்கி எடுத்தால் ஒரு வித design/pattern அதில் கிடைக்கிறது. இது இல்லாவிட்டால், எதாவது ஒரு பிளாஸ்டிக் மூடி வைத்தும் அழுத்தி, செய்து கொள்ளலாம்!

சாஞ்சா எனும் மர அச்சு - படம் இணையத்திலிருந்து....

இதைச் செய்து முடிப்பதற்குள் எண்ணெயும் மிதமான சூடாகி இருக்கும். செய்து வைத்த டேகுவா-க்களை ஒவ்வொன்றாக எண்ணையில் பொரிக்க வேண்டும்.  பொன்னிறமாக ஆகும் வரை பொரித்து எடுத்து ஒரு தட்டில் வைத்து சூடாறியதும், சாப்பிடலாம்! ஒரு மாதம் வரை இந்த டேகுவா கெட்டுப் போகாது.

இந்த செய்முறை மட்டும் போதாது, காணொளியாகவும் பார்க்கணும்னு நினைக்கிறவங்க இணையத்தில் Thekua Recipe என்று தேடிப்பார்த்து தெரிந்து கொள்ளலாம்!

அலுவலகத்தில் நான்கு-ஐந்து பீஹார் மாநிலத்தவர்கள் உண்டு. அதனால் ச்சட் பூஜா சமயத்தில், வாரம் முழுவதும் யார் வீட்டிலிருந்தாவது இந்த டேகுவா கொண்டு வந்துவிடுவார்கள் என்பதால் வருடா வருடம் இதைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.  கொஞ்சம் கடிப்பதற்கு கஷ்டமாக இருக்கும் என்பதையும் இங்கே சொல்லி விடுகிறேன் – பல் ஆட்டம் இருந்தால் பார்த்து பொறுமையாக சாப்பிடுவது நல்லது!

மேலே கூறியது தவிர மாவுடன் முந்திரிப்பருப்பு, பாதாம் அல்லது பிஸ்தா போன்ற பருப்புகளையும் சிறிய துண்டுகளாக்கி சேர்த்தும் செய்து கொள்வது உங்கள் விருப்பம். இவை எதுவும் சேர்க்காத டேகுவா கூட நன்றாகவே இருக்கும்!

நாளை வேறு ஒரு பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி. 

திங்கள், 23 நவம்பர், 2015

கேசரியா ஜி! மற்றும் ஷாம்லா ஜி!


பஞ்ச் துவாரகா - பயணக் கட்டுரை பகுதி 24

முந்தைய பகுதிகள் – 1 2 3 4 5 6 7 8 9 10 11  12 13 14 15 16 17 18 19 20 21 22 23

பயணத்தின் போது வழியில் மலை மேல் தெரிந்த கோட்டை.....

நாத்துவாராவிலிருந்து புறப்பட்டு, தொடர்ந்து அஹமதாபாத் நகரை நோக்கி பயணித்தோம். அந்த வழியில் இருப்பது ஷாம்லாஜி என அழைக்கப்படும் ஒரு விஷ்ணு கோவில். ஷாம்லாஜியில் கோவில் கொண்டிருக்கும் சதுர்புஜ விஷ்ணுவின் தரிசனம் பார்த்த பிறகு அஹமதாபாத் செல்வதாகத் திட்டம். வழியிலேயே கேசரியா ஜி என்ற கோவிலும் உண்டு. கேசரியா ஜி கோவில் பற்றி முதலில் பார்க்கலாம்....

கேசரியாஜி கோவில் - படம் இணையத்திலிருந்து...

உதைப்பூர் நகரிலிருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கேசரியாஜி ஒரு ஜெயின் வழிபாட்டுத் தலம். ரிஷப்தியோ என அழைக்கப்படும் தீர்த்தங்கரரின் மிகப்பெரிய சிலை இங்கே இருக்கிறது. முதலாம் தீர்த்தங்கருக்கு அமைக்கப்பட்ட கோவில் எனவும் சொல்கிறார்கள். இங்குள்ள மக்கள் நிறைய கேசர், அதாவது குங்குமப்பூ கொண்டு வந்து சமர்ப்பணம் செய்கிறார்கள். அதனை ரிஷப்தியோ சிலையில் பூசிப் பூசி சிவப்பு வண்ணம் வர, இங்குள்ள சிலைக்கும், ஊருக்கும், கேசரியாஜி என்ற பெயரே வந்துவிட்டது!

கேசரியாஜி - படம் இணையத்திலிருந்து...

அழகிய வேலைப்பாடுகள் கொண்ட சிற்பங்களும் உண்டு.  கோவிலில் இருக்கும் முக்கியச் சிலையான ரிஷப்தியோ [ரிஷப் தேவ்] சுமார் 3 ½ அடி உயரம்.  பத்மாசனத்தில் அமர்ந்திருந்த நிலையில் இருக்கும் இச்சிலை கருப்புக் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.  அழகிய வேலைப்பாடுகள் பலவும் கொண்ட இவ்விடத்திற்குச் சென்று தரிசனம் செய்யலாம் என்பதால் இங்கே குறிப்புகள் தந்திருக்கிறேன்.  நாங்கள் நேராக ஷாம்லிஜி சென்று விட்டோம்.

ஷாம்லாஜி கோவில்

ஷாம்லிஜி கோவில்: பதினைந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோவில் மேஷ்வோ நதிக்கருகில் அமைந்துள்ள மிகவும் பழமையான கோவில். கோவிலின் அருகில் பல இடிபாடுகள், அங்கே பழங்காலத்தின் இன்னும் பல சுற்றுக் கோவில்களும் இருந்திருப்பதைக் காண்பிக்கிறது.  சுற்றுக் கோவில்கள் பலவும் அழிந்து விட்டாலும், ஷாம்லிஜி கோவில் மட்டும் இன்னும் சிறப்பாகவே இருக்கிறது. அவ்வப்போது பராமரிப்பும் செய்து வருகிறார்கள் என்பதால் காப்பாற்றப்பட்டிருக்கிறது.

ஷாம்லாஜி கோவில் - மற்றுமொரு கோணத்தில்...

கோவிலின் வெளியே இருக்கும் அலங்கார நுழைவு வாயில், கோவில், என எல்லா இடங்களிலும் இருக்கும் சிற்பங்கள் மனதைக் கவர்கின்றன.  கோவிலின் சுவர்களில் நிறைய இடங்களில் யானைகளின்சிற்பங்கள் உண்டு. அதைத் தவிர மற்ற சிற்பங்களும், கற்களில் செதுக்கப்பட்ட தோரணங்களும் பூக்களும் உண்டு.  ஒவ்வொன்றையும் பொறுமையாக பார்த்து ரசிக்கலாம். கோவிலின் பின்னே ஷ்யாம் சரோவர் என்ற ஏரியும், மலைகளும் இருப்பதால் இயற்கை அழகையும் நீங்கள் ரசிக்க முடியும்.


 ஷாம்லாஜி கோவில் சுற்றுச் சுவர் சிற்பங்கள்

கோவிலில் குடி கொண்டிருப்பது விஷ்ணுவின் த்ரிவிக்ரம ரூபம். நாங்கள் கோவிலின் உள்ளே நுழைந்த சமயம் மதிய வேளை நடக்கும் உச்சிகால பூஜை முடிந்து கோவில் மூடப்படும் சமயம். உள்ளே நுழையும் போதே கோவில் மூடப்போகிறது, விரைந்து உள்ளே வர வேண்டும் என அழைப்பு. விரைந்து உள்ளே சென்று ஷாம்லாஜியின் முன்னே வசதியாக நின்று எப்போதும் போல ஒரு ஹாய்சொல்லி, எல்லோருக்கும் நல்லதே நடக்க வேண்டுதல்.  சிறிது நேரம் வரை அங்கே நின்றபடியே மனதை ஒருநிலைப்படுத்தி தியானம்.  சில நிமிடங்கள் கழித்து வெளியே வந்தோம்.


ஷாம்லாஜி கோவில் சுற்றுச் சுவர் சிற்பங்கள்

கோவிலின் சுற்றுச் சுவர்களில் எத்தனை சிற்பங்கள், யானைகள் பதித்த தோரணங்கள், என ஒவ்வொன்றும் பழங்கால சிற்பக்கலையின் சிறப்பை பறைசாற்றுகின்றன. ஒவ்வொன்றையும் ரசித்து ரசித்து செதுக்கியிருப்பார்கள் போலும்! அவர்களது கைவண்ணம் நூற்றாண்டுகளைக் கடந்து இன்னமும் பொலிவுடன் இருப்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியும், அவற்றை தொடர்ந்து பராமரிக்க வேண்டுமே என்ற கவலையும் ஒரு சேர வருகிறது.

ஷாம்லாஜி கோவில் சுற்றுச் சுவர் சிற்பங்கள்

சில சிற்பங்களை படம் எடுத்துக் கொண்டு எங்கள் வாகனம் நிறுத்தி இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம்.  காலையில் நாத்துவாராவில் வாங்கி வைத்திருந்த குடிநீர் அனைத்தும் தீர்ந்திருக்க, கோவில் வாசலிலிருந்து கொஞ்சம் தண்ணீர் வாங்கிக் கொண்டோம்.  வழியில் வேண்டியிருக்குமே!  மதியம் ஆகிவிட்டாலும் பசி இல்லை...  மேலும் ஷாம்லாஜி கோவில் அருகே நல்ல உணவகங்களும் இல்லை என்பதால் நெடுஞ்சாலையில் எங்காவது நிறுத்தி உணவு சாப்பிடலாம் என முடிவு செய்தோம். 

ஷாம்லாஜி கோவில் சுற்றுச் சுவர் சிற்பங்கள்

ஷாம்லாஜி கோவில் சிற்பங்களை மனதில் நினைத்தபடியே எங்கள் பயணம் தொடர்ந்தது. வழியெங்கும் காட்சிகளைப் பார்த்தபடியே முன் இருக்கையில் அமர்ந்து வருவது எனக்குப் பிடித்தமான ஒன்று.  சாலைகளில் வாகனங்களுக்குள் நடக்கும் போட்டி – ஓட்டுனர்கள் நடத்தும் போட்டி நடந்தபடியே இருக்கிறது. எங்கள் ஓட்டுனர் [ch]சிராக்-உம் வாகனத்தினை நல்ல வேகத்தில் செலுத்திக் கொண்டு வந்தார். சாலையில் செல்லும் மற்ற வாகனங்களின் பின்னே எழுதி இருக்கும் வாசகங்களையும் கடந்து செல்லும் ஊர்களின் பெயர்களையும் படித்துக் கொண்டே வருவது நேரம் கடத்த உதவியாக இருக்கும்! அப்படிப் பார்த்த ஒரு ஊரின் பெயர் அட போட்றா! வித்தியாசமான பெயர் தான்!

வாகனங்களுக்குள் போட்டி....

சற்று தூரம்/நேரம் பயணித்த பிறகு வயிறு “தினமும் என்னைக் கவனிஎன்று லாரிகளின் பேட்டரியில் எழுதி இருப்பதைப் போல, தன்னைக் கவனிக்கச் சொல்லி கூப்பாடு போட, ஓட்டுனர் [ch]சிராக்-இடம் நல்ல உணவகமாகப் பார்த்து வண்டியை நிறுத்தச் சொன்னோம்.  அவர் நிறுத்திய உணவகம் எது?, அங்கே என்ன சாப்பிட்டோம், அங்கே பார்த்த காட்சிகள் என அனைத்தும் அடுத்த பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்! சரியா!

நாளை வேறொரு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.