எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, November 4, 2015

மகன் மட்டும் என்ன ஸ்பெஷல்?


 படம்: இணையத்திலிருந்து...

பலவிதமான விரதங்களை கடைபிடிப்பது நம் நாட்டின் வழக்கம்.  எத்தனை விரதங்கள் என கணக்கே இல்லை எனத் தோன்றும். தமிழகத்தில், சஷ்டி விரதம், கார்த்திகை விரதம், ஏகாதசி விரதம், வரலக்ஷ்மி விரதம், பிரதோஷ விரதம், சோம வார விரதம், சந்தானலக்ஷ்மி விரதம் என நிறையவே விரதங்கள் பற்றி கேள்விப்பட்டதுண்டு.  அஹோய் விரதம் என்ற ஒன்றை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? வடக்கில், குறிப்பாக ஹரியானா, பஞ்சாப், உத்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் அஹோய் விரதம் என்ற ஒரு விரதம் இருக்கிறார்கள்.

பெண்கள் தான் இந்த விரதம் இருக்கிறார்கள் – யாருக்காக, எதற்காக என்று பார்த்தால், தன்னுடைய மகன்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவாம்! கூடவே சந்தான பாக்கியம் இல்லாதவர்களும் இந்த விரதம் அனுஷ்டிக்கிறார்கள்.

அது என்ன அஹோய் விரதம்? அஹோய் என்பது யார் அல்லது என்ன? அதற்குப் பின்னேயும் ஏதும் கதை உண்டா? என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லி விடுகிறேன்....

எப்போது இந்த விரதம்?

தீபாவளிக்கு எட்டு நாட்கள் முன்பு, கர்வா சௌத் எனப்படும் விரதம் [இது பற்றி பிறிதொரு சமயத்தில் எழுதுகிறேன்] கொண்டாடிய நான்காம் நாள், கார்த்திகை [இந்த ஊர் கார்த்திகை, தமிழில் ஐப்பசி] மாதம் கிருஷ்ண பக்ஷ அஷ்டமியில் இந்த விரதம் கொண்டாடுகிறார்கள்.

அஹோய் விரதம் – கதை

படம்: இணையத்திலிருந்து...

முன்னொரு காலத்தில் அடர்ந்த காட்டின் அருகே இருந்த ஒரு கிராமத்தில் அன்பும், பாசமும் உருவான பெண்மணி வாழ்ந்து வந்தார். அவருக்கு ஏழு மகன்கள். கார்த்திக் மாதத்தில், தீபாவளிக்கு சில நாட்கள் முன்பு, தனது வீட்டினை சரி செய்து அழகுபடுத்த நினைத்தார். தீபாவளிக்கு முன்னதாகவே இந்த வேலைகளை முடிக்க நினைத்த அவர், ஒரு நாள் காட்டிற்குள் சென்று வீடை சரி செய்யத் தேவையான மண் எடுத்து வரச் சென்றார். மண்வெட்டியால் அப்படி மண்ணை கொத்தி எடுக்கும் போது தவறுதலாக ஒரு சிங்கத்தின் குட்டியை வெட்டி விட, அச் சிங்கக் குட்டி இறந்து விட்டது. தெரியாமல் இப்படி நடந்துவிட்டதே என்று மனவருத்தம் கொண்டார் அந்த பெண்மணி.

இது நடந்த ஒரு வருடத்திற்குள் அப்பெண்மணியின் ஏழு மகன்களும் ஒவ்வொருவராக காணாமல் போனார்கள்.  காட்டு விலங்குகள் அவர்களை கொன்றிருக்கும் என கிராமத்தினர் சொல்ல, அந்தப் பெண்மணிக்கு ஒரு சந்தேகம் – தவறுதலாக தான் கொன்ன சிங்கக் குட்டிக்கும், தனது மகன்கள் காணாமல் போனதற்கும் ஏதோ தொடர்பு இருக்குமோ என்று நினைத்தார். அதை கிராமத்தில் உள்ள மூத்த பெண்மணிகளிடமும் சொன்னார்.

அதில் ஒரு மூத்த பெண்மணி, தெரியாமல் பாவம் செய்து விட்டாலும், அதற்கு பரிகாரமாக அஹோய் பகவதி என அழைக்கப்படும் பெண் தெய்வத்தினை துதிக்கச் சொன்னார்.  அஹோய் பகவதி, பார்வதி தேவியின் ஒரு அவதாரம் என்றும், குழந்தைகளைக் காக்கும் தெய்வம் எனவும் சொல்லி, அவளை நினைத்து கடுமையான விரதம் இருக்கச் சொன்னார்.  விரதத்தின் போது விடிகாலையில் எழுந்து குளித்து, அஹோய் மாதாவைத் துதிதது நாள் முழுவதும் உணவோ, தண்ணீரோ சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும்.  மாலையில் அஹோய் தேவிக்கு பூஜை செய்து, வானில் நக்ஷத்திரங்களைப் பார்த்த பிறகு தான் விரதத்தினை முடிக்க வேண்டும்.

படம்: இணையத்திலிருந்து...

அந்தப் பெண்மணியும் அஷ்டமி தினத்தன்று சுவற்றில் அந்த சிங்கக்குட்டியின் முகம் வரைந்து அஹோய் தேவியினை நோக்கி கடும் விரதம் இருக்க, அஹோய் தேவியும் அப்பெண்மணியின் முன் பிரசன்னமானாள். தெரியாமல் தான் சிங்கத்தின் குட்டியைக் கொன்றுவிட்டதைச் சொல்லி, தன்னை மன்னிக்க வேண்ட, அஹோய் மாதா, அவளது ஏழு மகன்களும் நீடுழி வாழ்வார்கள் என வரம் கொடுத்து மறைந்தாராம். இது நடந்து சில நாட்களில் பெண்மணியின் ஏழு மகன்களும் வீடு திரும்பினார்களாம்.

இந்த நிகழ்வுக்குப் பிறகு அஹோய் விரதம் கொண்டாடப்பட்டு வருகிறது. மகன்களின் நலனுக்கு மட்டும் தான் விரதமா? மகள் என்ன பாவம் செய்தாள்? அவள் நலனுக்கும் விரதம் கூடாதா என எனக்குத் தோன்றியது.  மகன்கள் மட்டும் என்ன ஸ்பெஷல்?  வட இந்திய நண்பரைக் கேட்க, முன்பெல்லாம் மகனுக்காக மட்டுமே விரதம் இருந்தாலும், இப்போதெல்லாம், மகனுக்கு மட்டும் என்ற பேதம் குறைந்து தங்களது குழந்தைகளின் நலனுக்காகவும், அவர்களுக்கு எந்த வித தீங்கும் ஏற்படக்கூடாது என்றும் விரதம் இருக்க ஆரம்பித்து விட்டதாகச் சொன்னார். 

படம்: இணையத்திலிருந்து...

சுவற்றில் அஹோய் மாதா, சிங்கக்குட்டி உருவம் போன்றவற்றை வரைந்து கொள்ள இப்போதெல்லாம் யாருக்கும் தெரிவதில்லை என்பதால், இதற்கென்றே ஒரு அச்சிடப்பட்ட நாட்காட்டி வர ஆரம்பித்து விட்டது. நாட்காட்டியின் கீழே குடும்பத்தினர் அனைவருடைய பெயரையும் எழுதி அவர்கள் அனைவரையும் காக்க வேண்டி, வீட்டிலுள்ள பெண்கள் இந்த அஹோய் மாதா விரதம் அனுஷ்டிக்கிறார்கள். 

விரதம் என்றால் பூஜைகளும் உண்டு. பூஜை என்றால் பிரசாதமும் உண்டே! மாலை வேளை பூஜையின் போது பூரி, ஹல்வா [கேசரி] என செய்து அவற்றை மூத்தவர்களுக்குக் கொடுக்கிறார்கள்.  விரதம் முடித்தபின்னர் அவற்றையே உண்கிறார்கள்.  வடக்கில் எந்த பூஜை என்றாலும் சுலபமாக பூரி மற்றும் ஹல்வா தான்! கடுகு எண்ணை வாசனையோடு பூரியும் கறுப்பு கொண்டைக்கடலையும் கேசரியும் [அதைத் தான் இவர்கள் ஹல்வா என்கிறார்கள்!] செய்து விடுகிறார்கள்.

இந்த வருடம் இந்த அஹோய் அஷ்டமி நேற்று கொண்டாடப்பட்டது. நேற்றே எழுத நினைத்திருந்தாலும், இன்று தான் எழுத முடிந்தது.  நேற்று மாலை எதிர் வீட்டிலிருந்து கடுகு எண்ணையில் பொரித்த பூரியும் ஹல்வாவும் வந்தது!  இந்த பதிவினைப் படிக்கும் உங்களுக்கும் கடுகு எண்ணை வாசனை வரலாம்! சாப்பிட்ட கையோடு தட்டச்சு செய்தேனே! :)

இந்த விரதம் நம் ஊரில் உள்ளவர்களுக்குப் புதியதாக இருக்கலாம் என்பதால் இங்கே பகிர்ந்து கொண்டேன். மற்றபடி எனக்கும் விரதங்களுக்கும் ரொம்ப தூரம்!  எல்லா நாளும் மூன்று வேளையும் சாப்பிட்டே ஆக வேண்டும்!

இன்றைய பதிவினை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்...

நாளை வேறொரு பதிவுடன் உங்களைச் சந்திக்கும் வரை...

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி. 

54 comments:

 1. வித்தியாசமான விரதமாக உள்ளது. அனைத்தும் நம்பிகையே. வழக்கம்போல புதிய செய்தியைத் தந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 2. ஒவ்வொரு வித நம்பிக்கை.. பூஜை.. பொதுவாய் யாவரும் நலம் என்பதே குறிக்கோள். வாழ்க வளமுடன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 3. இதுவரை அறிந்திராத
  விரதமும் கதையும்
  படங்களுடன் பகிர்ந்த விதம்
  முழுமையாக விரதம் குறித்து
  அறிந்து கொள்ளமுடிந்தது
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 4. யார் வீட்டுப் பூஜைக்கும் கூப்பிடலையா? போயிருந்தால் பிரசாதம் கிடைத்திருக்குமே? வெறும் வாசனையோட பண்டிகை போய் விட்டதே !

  ReplyDelete
  Replies
  1. //நேற்று மாலை எதிர் வீட்டிலிருந்து கடுகு எண்ணையில் பொரித்த பூரியும் ஹல்வாவும் வந்தது!// என்று எழுதி இருக்கிறேனே.... யார் வீட்டுக்கும் போகாமல், எதிர் வீட்டிலிருந்து வீடு தேடி உணவு வந்து விட்டது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 5. விரதம் குறித்த விவரம் அறிந்தேன். நின்றி!
  த ம 4

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

   Delete
 6. நம்பிக்கையும் ஆராதனைகளும் பலவிதங்கள்..

  அழகான படங்களுடன் புதிய செய்திகள்.. வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ...

   Delete
 7. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 8. இந்த விரதம் பற்றி இன்று தான் தெரிகிறது அண்ணா.. நானும் என் வாழ்க்கையில் விரதம் என்று இருந்ததில்லை.. எனக்கும் அது ரொம்ப..... வே தூரம். இனி ஒரு நாள் மகளுக்காக நானும் விரதம் இருக்கட்ரை பண்றேன்...
  பி.கு: கடுகு எண்ணெய் வாசனை இங்க வரைக்கும் வருது அண்ணா...

  ReplyDelete
  Replies
  1. அட உங்க ஊர் வரைக்கும் கடுகு எண்ணை வாசம் வந்துவிட்டதா? :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபிநயா...

   Delete
 9. அறிந்து கொண்டேன். அந்த ஏழு மகன்களும் எங்கே சென்றிருந்தனர் என்று சொல்லவில்லையாமா?!!

  ReplyDelete
  Replies
  1. அவர்கள் எங்கே சென்றார்கள் என்பதைச் சொல்லாமல் இருந்ததற்கும் ஏதாவது காரணம் இருக்கலாம்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
  2. இன்னமுமா சொல்லவில்லை?!!!!

   Delete
  3. ஹாஹா....

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 10. இதுவரை அறியாத புதிய செய்தி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 11. புதிய தகவல். இதுவரை அறிந்திராத தகவல். வட இந்தியர்கள் தீபாவளி சமயத்தில் விரதம் இருப்பது தெரியும். லக்ஷ்மி பூஜை செய்வார்கள் குறிப்பாக குஜராத் மக்கள் செய்வார்கள் என்று சொல்லிக் கேட்டதுண்டு.

  மிக்க நன்றி வெங்கட்ஜி.

  ReplyDelete
  Replies
  1. லக்ஷ்மி பூஜை வட இந்தியர்களும் செய்வார்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 12. முற்றிலும் வித்தியாசமான ஒரு விரதம்.
  கணவருக்காக அவர் ஆயுள் அபிவிருத்திக்காக விரதம் இருக்கின்றோமே
  இப்படிப் பிள்ளைகளின் நல வாழ்விற்காய் அவர்களுக்காக அனுஷ்டிக்கும் விரதம்
  உண்மையில் சிறப்பே!

  என்னவொன்று 2 நாட்களுக்கு முன்னராக இப்பதிவைத் தந்திருந்தால்
  நானும் விரதத்தினை மேற்கொண்டிருப்பேன்.
  இருப்பினும் அவர்கள் நலனுக்காக என்றென்றும் வேண்டிக்கொள்வோம்.

  நல்ல பதிவு! பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோதரரே!

  ReplyDelete
  Replies
  1. அடுத்த வருடம் இருந்தால் ஆச்சு.... அடுத்த வருடம் அஹோய் அஷ்டமி - அக்டோபர் 22!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

   Delete
 13. ஒன்றை கவனித்தீர்களா விரதம் இருப்பது எல்லாம் பெண்களே கர்வா சௌத் பற்றி என் சிறுகதை ஒன்றில் கூறி இருக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. அப்படியில்லை. நவராத்திரி சமயத்திலும், மஹாளய பக்ஷத்திலும் [இங்கே ஷ்ராத் என்று சொல்கிறார்கள்] பெரும்பாலான வட இந்திய ஆண்களும் விரதம் இருக்கிறார்கள்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
  2. பிரதமர் மோதி அமெரிக்கா சென்றபோது விரதம் இருந்தாரே! மறந்துவிட்டதா? குஜராத், ராஜஸ்தானில் ஆண்களும் விரதம் இருப்பார்கள்.

   Delete
  3. மேலே சொன்னது போல பல வட இந்திய ஆண்கள் விரதம் இருக்கிறார்கள்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   Delete
 14. அறியாத தகவல்! விரத விவரமும் படங்களும் சிறப்பு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 15. இதுவரை கேள்விப்படாத விரதம்.. முந்தைய நாட்களில் பெண்கள் ஆண்களைச் சார்ந்தே வாழவேண்டிய நிலை இருந்ததால் ஆண்களை மையமாக வைத்து விரதங்களை மேற்கொள்ளவேண்டிய நிலை. இப்போது ஆண் பெண் குழந்தைகள் பேதம் குறைந்துவருவதால் பொதுவாக தங்கள் குழந்தைகள் நலனை முன்னிறுத்துதல் அவசியமாகிறது. விரதம் பற்றியும் சுவாரசியமான கதை பற்றியும் சுவையான பிரசாதம் பற்றியும் அறியத் தந்தமைக்கு நன்றி வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

   Delete
 16. #கேசரியும் [அதைத் தான் இவர்கள் ஹல்வா என்கிறார்கள்!] #
  நல்லாவே அல்வா கொடுக்கிறார்கள் :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 17. தகவல் புதுமை ஜி பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 18. வித்தியாசமான விரதம் ஐயா
  நன்றி
  தம+1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 19. நான் விரதங்கள் தேவையில்லை என்ற விரதத்திலிருப்பவன்.....உங்கள் பதிவுகளை தவறவிடக்கூடாது என்றும் விரதமிருக்க வேண்டும்போலிருக்கிறது....தெரியாத விசயங்கள் நிறைய...சொல்லுங்கள்,,,,

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நான் ஒன்று சொல்வேன்.

   Delete
 20. //மற்றபடி எனக்கும் விரதங்களுக்கும் ரொம்ப தூரம்! எல்லா நாளும் மூன்று வேளையும் சாப்பிட்டே ஆக வேண்டும்!// நான் உங்களை மாதிரி அல்ல. ஆமாம். எனக்கு நாலு வேளயும் சாப்பிட்டே ஆகவேண்டும்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 21. அஹோய் விரதம் கேள்விப்பட்டு இருக்கிறேன். ராஜஸ்தானில் இருக்கையில் பார்க்கவும் பார்த்திருக்கேன்! ஏழு பையர்களையும் அம்மாச்சிங்கம் பிடித்து ஒளிச்சு வைத்திருந்ததோ? ஹிஹிஹி, இந்த விரதம் குறித்த மேலதிகத் தகவல்களை இங்கே காணலாம்! :) http://aalosanai.blogspot.com/2013/10/ahoi-ashtami-vrath-pooja-26102013.html#comment-form// இரு பகுதிகளாக இருக்கும். :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 22. வித்தியாசமான விரதமாக இருக்கிறது...
  அறிந்து கொண்டோம் அண்ணா.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 23. இதுவரை அறிந்திராத புதிய தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 24. ஆஹா.... அஹோய் எனக்குப் புதுசா இருக்கே!!!!!

  இப்பத் தெரிஞ்சது! நன்றீஸ்!

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கும் புதிதாய் ஒரு விஷயம் சொன்னதில் மகிழ்ச்சி.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 25. உறங்கும் சிங்கத்தை யாரோ உசுப்பிவிட்டாப்போல இருக்கே :-)

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா... எனது பின் பக்கமாக நடப்பது நல்லதா பதிவில் இந்தப் பதிவினையும் குறிப்பிட்டதால் வந்த கருத்துரை டீச்சர். அந்தப் பதிவு நீங்க படிக்கலையோ....

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....