எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, November 16, 2015

கடவுளைக் கண்டேன்.....

படம்: இணையத்திலிருந்து....

சில மாதங்களாகக் காணாமல் போயிருந்த தொடர் பதிவு இப்போது பதிவுலகத்தில் மீண்டும் வந்திருக்கிறது – நண்பர் கில்லர்ஜிக்கு வந்த நகச்சுத்தியால்! அவர் ஆரம்பித்து வைக்க, ஒவ்வொரு பதிவரும் தங்களது ஆசைகளை பத்து பத்தாக முத்து முத்தாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  பத்து ஆசைகள் சொல்வது மட்டுமல்லாது, அடுத்த பத்து பதிவர்களையும் எழுத வைக்க வேண்டும் என்ற ஆசையையும் சேர்த்து சொல்லி விட்டார் கில்லர்ஜி!  ஆசையே அலை போலே....  பதிவர்கள் எல்லோருமே அதன் மேலே! 

இந்தப் பதிவினை எழுதுகிற வரை, எனக்குத் தெரிந்து பத்துக்கு மேற்பட்ட பதிவர்கள் எழுதி இருக்கிறார்கள்.  இந்த பத்துக்குப் பத்தில் நண்பர் பரிவை சே. குமார் என்னையும் களத்தில் இறங்கப் பணித்திருக்கிறார். 

படம்: இணையத்திலிருந்து....

இதோ நானும் வந்து விட்டேன். இன்றைக்கு குஜராத் பயணத்தொடரின் அடுத்த பகுதியை வெளியிட நினைத்திருந்தேன்.  அதற்குப் பதிலாக கடவுளைக் கண்டேன் பதிவாக வெளியிடக் கட்டளை வந்துவிட்டது நண்பர் குமாரிடமிருந்து! அதனால் இதோ கடவுளைக் கண்டேன் பதிவு.

கடவுளைக் காணும் போது கேட்க நினைத்த கேள்விகளைச் சொல்வதற்கு முன்னர் ஒரு விஷயத்தினைச் சொல்லி விடுகிறேன்.  கேள்வி கேட்பதற்கும் நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். தெரியாமல் எதையாவது கேட்டு விபரீதமான விளைவு உண்டாக வாய்ப்புண்டு.  அதற்கு ஒரு கதையைச் சொல்லி ஆரம்பிக்கிறேன்.  இந்தக் கதையை நீங்கள் கேட்டிருக்கக் கூடும் – இருந்தாலும் பதிவிற்குச் சம்பந்தமுண்டு என்பதால் இங்கே அக்கதையைச் சொல்லி விட்டே ஆரம்பிக்கலாம்!

ஒரு முறை எறும்புகள் எல்லாம் சேர்ந்து தங்கள் கூட்டத்தை நடத்தின.

அந்தக் கூட்டத்தில், “நாம் ஒன்றாக வரிசையாகச் சென்று கொண்டிருக்கும் போது ஏதாவது ஒரு யானை வந்து நம்மை மிதித்து விடுகிறது. நம் கூட்டத்திலிருக்கும் எறும்புகளில் குறைந்தது ஆயிரம் எறும்புகளாவது இறந்து போய் விடுகின்றன... இதைத் தடுக்க இந்த யானைக்கு நாம் ஒரு முடிவு கட்ட வேண்டும்என்று அனைத்து எறும்புகளும் புகார் தெரிவித்தன.

இதைக் கேட்ட எறும்புகளின் தலைவன், “ஆமாம், யானை மிகப்பெரிய உருவம். யானையிடமிருந்து நம்மைப் பாதுகாக்க, நாம் கடவுளிடம்தான் ஒரு நல்ல வரம் வாங்க வேண்டும்என்றது. 

ஆமாம், நாம் கடவுளிடம் வரம் கேட்பது நல்லதுதான். எறும்பாகிய நாம் கடித்தால் கடிபட்டவர் இறந்து போய் விட வேண்டும் என்று வரம் கேட்க வேண்டும்என்றன.

எறும்புகளின் தலைவன், “கடவுளிடம் வரம் வாங்குவது ஒன்று எளிமையானதில்லை. நம்மில் யாராவது கடவுளிடம் சென்று நமக்கான வரத்தைக் கேட்டு வர வேண்டும். எனக்கு வயதாகி விட்டது. நம்மில் வேறு யாராவது ஒருவரைத் தேர்வு செய்து கடவுளிடம் அனுப்பி வைக்கலாம்.என்றது. 

எறும்புகளும் தலைவனின் பேச்சுக்குக் கட்டுப்பட்டு, கடவுளைச் சந்தித்துத் தங்களுக்கான வரத்தைக் கேட்க ஒருவரைத் தேர்வு செய்தன. 

கடவுளைத் தேர்வு செய்யப்பட்ட எறும்புக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. கடவுளைச் சந்திக்கத் தானே தகுதியானவர் என்று ஆணவம் கொண்டது. ஆனால், அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

சில நாட்களுக்குப் பின்பு தேர்வு செய்யப்பட்ட எறும்பு கடவுளைச் சந்திக்க சென்றது. சில நாட்களுக்குப் பின்பு அந்த எறும்பு கடவுளைச் சென்று சந்தித்தது. தங்கள் எறும்புக் கூட்டத்தின் சார்பில் தங்கள் கோரிக்கையை முன் வைப்பதாகச் சொன்னது.

கடவுளும் அந்த எறும்பிடம் என்ன கோரிக்கை என்று கேட்டார்.

தான் எனும் அகந்தையுடன் வந்திருந்த அந்த எறும்பு கடவுளிடம், “எறும்பாகிய நான் கடித்தால் இறந்து போய் விட வேண்டும்என்று கேட்டது.

கடவுளும், “நீ கேட்ட வரத்தை உனக்குத் தந்தேன்என்றார்.

கடவுளிடம் வரம் வாங்கிய மகிழ்ச்சியில் அந்த எறும்பு, கடவுள் கொடுத்த வரத்தைச் சோதித்துப் பார்க்க விரும்பியது.

கடவுளைக் கடித்தது. கடவுள் தன் கையினால் அந்த எறும்பை அடிக்க அது சாகும் நிலைக்குச் சென்றது.

உடனே அந்த எறும்பு, “கடவுளே, நீங்கள் என்னை ஏமாற்றி விட்டீர்கள், நீங்கள் கொடுத்த வரத்தின்படி கடிபட்டவர் சாகாமல், கடித்த நானே சாகப் போகிறேனே...என்றது.

கடவுள், “எறும்பே, நீ என்ன வரம் கேட்டாய்? எறும்பாகிய நான் கடித்தால் இறந்து போய் விட வேண்டும் என்று கேட்டாய். நீ கடித்தாய், இப்பொழுது நீ சாகப் போகிறாய்என்றார்.

ஆணவப்பட்ட அந்த எறும்பு செத்தது.

இது செவி வழிச் செய்தி மட்டுமே....  உண்மையாக நடந்ததா என்று ஆராய்ச்சி நமக்குத் தேவையில்லை.  கேட்பதற்கும் தெரிந்திருக்க வேண்டும் என்பதைச் சொல்ல மட்டுமே இக்கதையை இங்கே சொல்லி இருக்கிறேன்!  நமக்கோ இப்படிக் கேட்பதற்கெல்லாம் தெரியாது. கோவில்களுக்குச் செல்லும் வழக்கம் இருந்தாலும், பெரிதாய் வேண்டுதல்கள் இருந்ததில்லை. என்னுடைய வேண்டுதல்கள் சில வார்த்தைகள் மட்டும் தான் – “எல்லோருக்கும் நல்லதையே கொடு. எல்லோரையும் நல்லபடியாக வை!”  இதைத் தவிர வேறொன்றுமில்லை.

இப்போது இந்த வார்த்தைகளைத் தாண்டி பத்து ஆசைகளைச் சொல்ல வேண்டிய கட்டாயம். அதனால் எனக்குத் தோன்றிய பத்து வரங்களை அருள கடவுளைக் கேட்கப் போகிறேன். The Count Down Starts…..

10.  பல இடங்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது.  செல்லும் இடங்கள் அனைத்திலும் குட்கா, பீடா, ஜர்தா எனப் பயன்படுத்துகிறார்கள். வாயிலிருந்து உமிழ்ந்து கொண்டே இருக்கிறார்கள். ஊரே சிகப்பு மயம்!  அப்படித் துப்புகிற போது விழும் இடத்தில் தானாகவே ஒரு Spring Board உருவாகி, துப்பியவர் முகத்திலேயே உமிழ்ந்தவை விழும்படிச் செய்ய வேண்டும்.  தொடர்ந்து இப்படி நடந்தால் நகரம் முழுவதும் சிவப்பு மயமாவதைத் தடுக்க முடியும்.

9. பணம் வாங்கிக் கொண்டு வேலை செய்யும் அரசியல்வாதிகள் அதிகாரிகள் ஆகியவர்களிடம் கொடுக்கப்படும் பணம் வேலை முடிந்தவுடன் அவர்களிடமிருந்து மாயமாக மறைந்து விடவேண்டும்.  மறைந்த பணம் வாழ வழியின்றி இருக்கும் ஏழை மக்களிடம் சென்று சேர வேண்டும்.

8. ஊர் முழுவதும் குப்பைகளை அள்ளி அள்ளி வீசிக் கொண்டிருக்கிறோம். என்ன தான் அரசாங்கம் சுத்தம் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டை அள்ளி வீசினாலும், குப்பைக்கூடைகளில் குப்பை போடாது போகும் வழியெல்லாம் குப்பைப் போடுபவர்கள் இங்கே நிறைய பேர்.  குப்பைகளைப் போட்டுவிட்டு அவர்கள் வீடு திரும்புவதற்குள், அந்தக் குப்பைகள் அவரது வீட்டின் முன்னே கிடக்க வேண்டும்!

7. தில்லி போன்ற பெருநகரங்களில் மட்டுமல்லாது எல்லா இடங்களிலும் பெண்களை வன்புணர்வு செய்வது அதிகரித்து வருகிறது. பச்சிளம் குழந்தைகளைக் கூட விட்டுவைப்பதில்லை.  பெண்கள் மட்டுமல்ல, சில ஆண் குழந்தைகளைக் கூட பலவந்தப்படுத்தும் கொடுமை நடந்து கொண்டிருக்கிறது. அப்படிச் செய்ய நினைக்கும் மிருகங்கள் [அவர்கள் மனிதர்கள் என்று சொல்ல முடியவில்லை!] தங்களது உடையைக் கழற்றிய உடனேயே உறுப்பு வெட்டுப்பட வேண்டும்.

6. விளை நிலங்கள் அனைத்தும் வீடுகளாக மாறிக் கொண்டு வருகிறது. ஏரிகள், ஆற்றுப் படுகைகள் என எதையும் விட்டு வைப்பதில்லை. கூட்டுக் குடும்பமாக இருந்தது மறைந்து ஒவ்வொருவரும் தனித்தனி வீடுகள் வேண்டும் என நினைத்து விளைநிலங்களை விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.  நமது நாட்டில் இருக்கும் மக்கள் தொகைக்கு அனைவருக்கும் தனித்தனி வீடுகள் வேண்டுமெனில் வெகு விரைவில் நமது நாட்டில் விவசாயமே மறைந்து போகக்கூடிய அபாயம் இருக்கிறது.  விவசாயம் பெருக வழி செய்ய வேண்டும்.

5. இயற்கைக்கு எதிராய் பல விஷயங்களை மனிதர்கள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.  அப்படிப்பட்ட எண்ணம் முழுவதும் மறைய வேண்டும். மனிதன் தனது ஆதாயத்திற்காக இயற்கை தந்த வரங்களை சீரழித்துக் கொண்டிருக்கிறான். அது தடுக்கப்பட வேண்டும்.

4.  உலகில் உள்ள உயிர்கள் அனைத்திற்கும் வாழ்வதற்கு உரிமையுண்டு. மதம் என்ற பெயராலும், ஜாதி என்ற பெயராலும் ஒருவொருக்கொருவர் அடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.  பல இடங்களில் தீவிரவாதம் தலைவிரித்து ஆடுகிறது. எத்தனை எத்தனை உயிரிழப்புகள். இவையெல்லாம் அடியோடு ஒழிய வேண்டும்.  ஒன்றே குலம் – அது மனிதகுலம் என்ற உணர்வு அனைத்து மனிதர்களுக்கும் வர வேண்டும்.

3.  இன்றைக்கு மனிதர்களிடத்தே பொறாமையும் காழ்ப்புணர்வும் நிறையவே இருக்கிறது. ஒருவர் நன்றாக இருந்துவிட்டால் போதும் – பலருக்குப் பொறுக்காது. அவர் முன்னே பாராட்டினாலும், புறமுதுகில் குத்துபவர்கள் நிறையவே உண்டு.  அப்படி புறமுதுகில் குத்த நினைப்பவர்களைத் திருத்த வேண்டும்.

2.  பல இடங்களில் முதியோர் இல்லங்கள் வந்து விட்டன. அதை வியாபாரமாகவும் செய்வது பெருகிவிட்டது. வசதி இருக்கிறதே என்பதற்காக இப்படி முதியோர்களை தனித்தீவுகளாக ஆக்குவது குறைய வேண்டும். குழந்தைகளைப் பெற்றாலும் இப்படி தனியாக இருக்க வேண்டிய நிர்பந்தம் சிலருக்கு.  பெற்ற குழந்தைகளை குப்பைக்கூடையில் வீசிச் செல்லும் சில அம்மாக்களும் இங்கே உண்டு.  அப்படி வீசப்படும் குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்? அவர்களுக்கு ஏனிந்த நிலை. இப்படி ஒரு நிலை வராமல் இருக்க வேண்டும்.

1.   கடவுளைக் கண்டேன் பதிவு மூலமாகப் பல பதிவர்கள் தங்களது ஆசைகளைச் சொல்லி இருக்கிறார்கள். அனைத்துப் பதிவர்களின் ஆசைகளும் நிறைவேற வேண்டும்! இது தான் முதல் ஆசையும் முடிவான ஆசையும்!


எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல், வேறொன்றறியேன் பராபரமே

ஆஹா....  ஆசை....  பேராசையாக ஆகிவிட்டதா என்பதை கில்லர்ஜியும் என்னை எழுத அழைத்த பரிவை சே. குமாரும், படிக்கப்போகும் நீங்கள் அனைவரும் தான் சொல்ல வேண்டும்!  ஆஹா அடுத்ததா ஒரு விஷயம் இருக்கே! இன்னும் பத்து பேரை இத் தொடர்பதிவினைத் தொடரக் கேட்க வேண்டும்.   பத்து பேரா....  ஏற்கனவே எனக்குத் தெரிந்து பன்னிரண்டு பேர் பத்து பத்து பேராக அழைத்து இருக்கிறார்கள் – அவர்களில் பலர் எனக்குத் தெரிந்தவர்கள்.  அதில் இல்லாதவர்களை அழைப்பது கடினம்.  ஆகையால், இது வரை எழுதாத, எழுத ஆசைப்படும் எவரும் எழுதலாம்!

என்ன நண்பர்களே, இன்றைய பதிவில் கண்ட எனது ஆசைகள், விருப்பங்கள் பற்றிய உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்! 

இன்றைக்கு வெளியிட்டு இருக்க வேண்டிய பஞ்ச் துவாரகா தொடரின் அடுத்த பகுதி நாளை வெளியிடப்படலாம்!

மீண்டும் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி. 

46 comments:

 1. நான் படித்தவைகளில் மிக அருமையான அழகான ஆசைகள் உங்களுடையது என்று சொல்லாம்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 2. //கடவுளைக் கண்டேன் பதிவு மூலமாகப் பல பதிவர்கள் தங்களது ஆசைகளைச் சொல்லி இருக்கிறார்கள். அனைத்துப் பதிவர்களின் ஆசைகளும் நிறைவேற வேண்டும்! இது தான் முதல் ஆசையும் முடிவான ஆசையும்!///

  உங்களின் எல்லா ஆசைகளும் சரி ஆனால் இதுதான் சரி இல்லை காரணம் நீங்கள் என் பதிவை படிக்கவில்லை என நினைக்கிறேன். படித்து இருந்தால் இந்த ஆசை உங்களுக்கு வந்து இருக்காது

  ReplyDelete
  Replies
  1. ஹா.ஹா... உங்கள் பதிவினை இன்னும் படிக்கவில்லை. மதுரைத் தமிழன். மாலை தான் படிக்க முடியும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 3. கடவுளும் நின்று கேட்டு செல்லும்படியாக உங்களது அனைத்து ஆசைகளும் இருக்கிறது. சுயநலமில்லாமல் சமுக நலனை கொண்டது உங்கள் ஆசைகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 4. ஆகா அருமையான ஆசைகள் ஐயா
  நிறைவேறட்டும்
  நன்றி
  தம 1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 5. சிகப்பாக அது பாக்கோ ஜர்தாவோ புகையிலையோ அதையெல்லாம் உள்ளே வயிற்றுக்குள் சென்று விட்டால் நாளடைவில் லீவர் பாதிக்கப்பட்டு ஹெபட்டிடிஸ், சிரஹோசிஸ் முதலிய ஏற்பட்டு அவர் சீக்கிரம் இல்லை நேரடியாக ஆண்டவனை சுவர்க்கத்தில் சந்திக்க வாய்ப்பு அதிகரிக்கிறது.

  ஸோ , கடவுள் எனப்படும் இறைவன் அலையஸ் ஆண்டவன் உடனே செவி சாய்க்கலாம்.

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா.....

   Delete

 6. கடவுளிடம் நீங்கள் வைத்த வேண்டுகோள்கள் அனைத்தும் அருமை. அதுவும் தங்களது முதல ஆசை பலிக்க வேண்டுகிறேன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 7. அனைவரின் ஆசைகளையும் கடவுள் நிறைவேற்றி வைக்கணும். அனைவருக்கும் வாழ்த்துகள். உங்கள் ஆசைகள் அனைத்தும் விரைவில் பலிக்க வேண்டும்! :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 8. அருமையான தேவையான ஆசைகள் அனைத்தும் உண்மையிம் நிறைவேற வேண்டுமென நானும் ஆசைப்படுகின்றேன்....சார்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

   Delete
 9. அருமையான ஆசைகள் மட்டுமல்ல... நிறைவேற முடியும் என்கிற வகையில் ஆசைகள்... பாராட்டுக்கள் தல...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 10. அருமையான நல்ல ஆசைகள்.
  இறைவன் உடனே இந்த ஆசைகளை நிறைவேற்றலாம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 11. குட்டிக்கதை சிறப்பு! ஆசைகள் அனைத்தும் நிறைவேற வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 12. கவுண்ட் டௌன் ஆசைகள் அருமை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   Delete
 13. வணக்கம் ஜி
  10-வது அதிரடி
  09-வது லஞ்சம் ஒழியும்
  08-வது நாடும், வீடும் சுத்தமாகும்
  07-வது பொதுநலம் அருமை
  06-வது உணவுப் பிரட்சினை தீரும்
  05-வது உலக அழிவைத் தடுக்கும்
  04-வது உலகம் சமநிலை பெறும்
  03-வது மனிதம் வளர்க்கப்படும்
  02-வது மீண்டும் கூட்டுக்குடும்பம் நன்று
  01-வது இது உயர்ந்த மனது ஜி

  பதிவுக்கு மிக்க நன்றி என்னையும் குறிப்பிட்டமைக்கு மீண்டும் நன்றி ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 14. அருமையான அழகான ஆசைகள் வெங்கட்ஜி! சொன்னவிதமும் அழகு - அழகான கதையுடன்.

  நாங்களும் கோயிலுக்குச் சென்றாலும் வேண்டுதல் எனும் வட்டத்திற்குள் சிக்குவதில்லை. இவ்வுலகம் நன்றாக சந்தோஷமாக இயங்க வேண்டும் என்ற ரத்தினச் சுருக்கமான ஒன்று.. (எங்கள் பதிவுகள் தான் நீண்ண்ண்ண்டு...ஹஹ)

  எல்லோரது ஆசையையும் கடவுள் நிறைவேற்றினால் நல்லதே...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 15. உங்களது ஏழாம் ஆசையை ஒரு நீதிபதியே ஆமோதித்து இருக்கிறாரே! ஆகவே அதற்கே என் வோட்டு. வாழ்த்துக்கள்! - இராய செல்லப்பா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செல்லப்பா யஞ்யஸ்வாமி ஐயா.

   Delete
 16. சகோதரரின் ஆசைகள் மெய்ப்பட வேண்டும். அதற்கு ஆண்டவன் அருள் புரிய வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   Delete
 17. அருமை. ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 18. “எறும்பாகிய நான் கடித்தால் இறந்து போய் விட வேண்டும்” என்று கேட்டது.

  இப்படித்தான் இன்றைக்கௌ ஆணவத்தில் மனிதர்கள் பலரும் இருக்கின்றோம் ! அருமையான ஆரம்பமும் கதையும்.

  கடவுஈடம் கேட்ட அனைத்தும் பொது நலனிலானவை , முயன்றால் நிறைவேற்றக்கூடியவைகள். நிறைவேறிட அடுத்த தடவை கடவுளை சந்திக்கும் போது வேண்டுகின்றேன். . எல்லா மனிதருள்ளும் இந்த ஓரே குலம் ஒன்றே தேவைகள் எனும் எதிர்பார்ப்பும் அனைவரும் சமமாகணும் எனும் ஏக்கமும் ஒளிந்து கொண்டுதான் உள்ளெது போலும். நம் காலத்தில் இல்லாது எதிர்காலத்திலாவது இவைகள் நிறைவேறுமா ?

  ReplyDelete
  Replies
  1. தங்களது முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.

   Delete
 19. உங்க ஆசைகளையெல்லாம் நிறைவேற்றும் கடவுளைத்தான் நானும் தேடிகிட்டிருக்கேன் :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 20. அருமை... அருமை அண்ணா...
  முதலில் அழைப்பின் பேரில் எழுதியமைக்கு நன்றி...
  எறும்புக் கதை சூப்பர்...
  10...9...8... என கவுண்டவுனில் ஆசைகள்...
  எல்லாமே நல்ல ஆசைகள்... நிறைவேறட்டும்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   உங்கள் அழைப்பிற்கும் நன்றி.

   Delete
 21. சுயநலம் இல்லாத ஆசைகள்.....
  கடவுள் இதைப் படிப்பாரா நாகராஜ் ஜி?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   Delete
 22. இப்படி பொதுநலத்துக்காக வேண்டிக்க நீங்கலாம் இருக்கும் தைரியத்தில்த்தில்தான் நான் எனக்கே எனக்கான ஆசைகளை எழுதினேன்.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் எழுதியதை இன்னும் படிக்கவில்லை. படிக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
 23. நல்ல கட்டுரை அதிலும் எறும்பின் ஆசை கதை நன்றாக இருந்தது. தங்களின் ஆசைகள் நிறைவேற வாழ்த்துக்கள். என்னையும் எழுத சொல்லியிருக்கிறார் குமார் எழுதி கொண்டிருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சரவணன்.

   நீங்களும் தொடர் பதிவு எழுதுங்கள்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....